குலத்தின் விளக்கு
போர்ச்சுகீசியர்கள் அவரை மராட்டியத்தின் இராணி என்ற புகழ்மொழியுடன்தான் பதிவு செய்கிறார்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. மராட்டியத்தைப் பற்றிப் பேசினால் ஒரு பெயரைத் தவிர்த்துவிட்டுப் பேசவே இயலாதல்லவா? வரலாற்றில் மட்டுமல்ல, இன்றும்கூட மகாராட்டிரத்துக்குச் சென்றோமென்றால் திரும்பிய இடமெல்லாம் ஒரு பெயர் இருக்கும். அது சத்ரபதி சிவாஜியின் பெயர்.
இந்த இராணியும் அந்தக் குடும்பத்தில் இருந்த வந்தவர்தான் என்று அறிந்தால் வியப்படைவோமா இல்லையா? அவர்தான் தாராபாய் போன்சுலே. அவர் சத்ரபதிக்கு மருமகள் உறவு முறை கொண்டவர். தனது அரசைக் காத்து நின்றதினால் உள்ளால் நகரின் அபக்கா சௌதா எப்படி வரலாற்றில் நின்றாரோ, அதைப் போலவே மராட்டியத்தைப் பொறுத்தவரை வரலாற்றில் நின்றவர், நிற்கின்றவர் தாராபாய்.
பிறப்பும் இளமையும்
1675இல் பிறந்தவர் தாராபாய். தாராபாயின் தந்தை சத்ரபதியின் புகழ்பெற்ற தளகர்த்தரான கம்பீர் ராவ் மொகைட். அவர்தான் சத்ரபதியின் தலைமைத் தளபதி. சர் சேனாபதி என்பார்கள் மராத்திய மொழியில். புலிக்குட்டிக்குத் தாக்கக் கற்றுக்கொடுக்க வேண்டுமா என்பதுபோல இளமையிலேயே வாட்போர், விற்போர், குதிரையேற்றம், போர்த்தாக்குதல் முறைகள், அரசதந்திரம் என்ற அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார் தாராபாய். முகலாயர்கள் உச்சத்தில் இருந்த 1674இல்தான் சத்ரபதி மராட்டியத்தின் அரசராக முடிசூட்டிக் கொண்டார்.
1680இல் சத்ரபதி காலமானதைத் தொடர்ந்து அவரது மகனான சாம்பாஜியும், முதல் மனைவியான சாய்பாயும் அரசைப் பத்தாண்டுகள் நடத்திச்சென்றார்கள். 16 ஆண்டுகள் வெற்றிகரமாக நடந்த மராட்டிய அரசு, 15000 போர்வீரர்கள் கொண்ட முகலாயப் படை படையெடுத்து வந்தபோது 1689இல் குழப்பத்தில் வீழ்ந்தது. இராய்கட் கோட்டை வீழ்த்தப்பட்டு, சாம்பாஜி சிறைவைக்கப்பட்டு இறந்தார். அவரது மனைவியும் மகனும் முகலாயர்களால் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
சத்ரபதியின் இரண்டாவது மகனான இராசாராம், இராய்கட் கோட்டையிலிருந்து தப்பித்து தமிழ்நாட்டின் செஞ்சிக் கோட்டைக்கு வந்து சேர்ந்தார். பின்னர் சதாராவில் தனது அரசவையை நிறுவிய அவரது மனைவிதான் தாராபாய். தனது அரசை நிறுவிய ஓர் ஆண்டுக்குள் இராசாராம் மூச்சுப்பை நோயால் இறந்தார்.
அவரது இறப்புக்குப் பின்னர் ஒரு மாதம் கழித்து, அவரது மகனான, அப்போது நான்கு வயது மட்டுமே நடந்துகொண்டிருந்த இரண்டாவது சிவாஜி பட்டத்துக்கு வந்தார். அவரது அரசப் பிரதிநிதியாக தாராபாய் பொறுப்பேற்றுக்கொண்டார். தாமும், தனது அரசும், தனது மகனும் எத்தகைய அபாயத்தில் இருக்கிறார்கள் என்பது தாராபாய்க்கு நன்கு புரிந்திருந்தது. எனவே அரசுப் பொறுப்போடு படைத்தளபதி பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டு படைத்தலைவராகவும் அணியமானார் தாராபாய்.
முகலாயர்களின் எதிர்பார்ப்பும் விளைவும்
அரசத் தலைமை இல்லாத மராட்டியப் பிரதேசங்களை எளிதாகக் கைக்கொண்டுவிடலாம் என்று நினைத்த முகலாய அரசர் ஔரங்கசீப், இம்முறை தானே தலைமையேற்று படைகளை நடத்திக்கொண்டு மராட்டியத்திற்கு வந்தார். முகலாயர்களின் எண்ணம் அப்பகுதியை எளிதாக வென்று விடலாம் என்பதாக இருந்தது.
அப்போது இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருந்த தாராபாயை எளிதாகச் சிறைப்பிடித்து அரசைக் கைப்பற்றலாம் என்று நினைத்து வந்த முகலாயப் படைகளுக்கு வியப்பு காத்திருந்தது. முகலாயர்கள் காலத்து அரசவைப் புலவரும் கவிஞருமான பீம்சென், தனது குறிப்புகளில் இராணி தாராபாய் முகலாய அரசுக்குத் தந்த ஏமாற்றத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். மராட்டியப் பகுதியில் இருந்த மற்ற அரசர்களோடு நல்ல நட்புறவைப் பேணி வந்த தாராபாயைக் கேட்காமல் அந்தப் பகுதி அரசர்கள் எவரும் எந்த முடிவையும் எடுக்க அணியமாக இல்லை. இதனால் அவர்கள் துணைகொண்டு ஔரங்கசீப்பின் படைகளை வலுவாக எதிர்த்துக் களமாடினார் தாராபாய்.
எதிரணியின் படைத்தளபதிகளுக்குக் கையூட்டும் பணமும் கொடுத்துத் தனது பக்கத்துக்கு இழுப்பதும், தான் விரும்பிய வண்ணம் அவர்களைச் செயல்பட வைப்பதும் ஒளரங்கசீபுக்கு வழக்கம். ஔரங்கசீப்பின் இந்தத் தந்திரத்தை அவருக்கு எதிராகவே திருப்பிச் செயல்படுத்திக் காட்டினார் தாராபாய். முகலாயர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளின் தளபதிகளுக்குக் கையூட்டோ, பணமோ கொடுத்து, அந்தப் பகுதிகளின் வரிவசூல் செய்யும் கருவூல உரிமையைத் தான் நியமித்த அதிகாரிகளைக் கொண்டு செயல்படுத்தி, தனது அரசின் வருமானத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தார் தாராபாய். பின்னாட்களில் இதனைத் தெரிந்து கொண்ட ஔரங்கசீப் மிகுந்து அதிர்ச்சிக்குள்ளானார்.

சரிவில் இருந்து சக்திக்கு
தனது கணவரான இராசாராமின் மறைவுக்குப் பின்னர் குழப்பமும் அச்சமும் நிலவிய மராட்டிய அரசை தாராபாயின் சாகசகங்கள் அடுத்த 60 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத சக்தியாக மாற்றின. 1761இல் தாராபாய் காலமாகும் வரை ஏற்றம் பெற்றுவந்த மராட்டிய அரசு, தென் கன்னடப் பகுதி, மேற்குக் கடற்கரை நகர்களான பர்கான்பூர், சூரத் வரை பெருகி நிலைபெற்றிருந்தது. மராட்டிய அரசை இத்தனை வலுவாக நிறுவியதில் தாராபாயின் பங்கு குறிப்பிடத்தக்கது.
பலமுறை முயன்றும் மராட்டிய அரசையோ, தாராபாயையோ வெல்ல முடியாத ஔரங்கசீப், வயதான நிலையில் 1707இல் மறைந்தார். இதையடுத்து முகலாயர்கள் தாங்கள் சிறைப்பிடித்து வைத்திருந்த சாம்பாஜியின் மகன் சாகுவை விடுவித்து மராட்டியப் பகுதிக்கு அனுப்பினர். இதுவும் நல்லெண்ணத்தில் இல்லை. அவர்களது எதிர்பார்ப்பு மராட்டிய அரசுக்கு இரண்டு வாரிசுகளை உருவாக்கிக் கலகத்தை ஏற்படுத்துவது. இதற்கு ஏற்றாற்போல் சாகுவை அவர்கள் தூண்டிவிட்டு இருந்தனர்.
சாகுவும் மராட்டியத்திற்குச் சென்று அரச உரிமையைக் கோரினார். ஆனால் தாராபாய் அவரது கோரிக்கைக்கு மசியவில்லை. முகலாயர்கள் சாகுவின் பின்னணியில் இருப்பது அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. இதனால் சாகுவுக்கு உரிமை தர தாராபாய் மறுத்தார். இதையே சாக்காக வைத்துக்கொண்டு சாகு தாராபாயின் அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தார். முகலாயர்கள் அவரை ஆதரித்துப் படைகளைக் கொடுத்து அனுப்பினர். அப்போது பேஷ்வா என்ற தளகர்த்தராக இருந்த பாலாசி விசுவநாதனின் கூர்மதியினாலும், முகலாயர்கள் பின்னிருந்து அளித்த உதவியினாலும் சாகுவால் வெற்றிபெற்று மராட்டிய அரசை 1708இல் கைப்பற்ற முடிந்தது
வென்று நின்ற அரச தந்திரம்
எளிதில் விட்டுக்கொடுக்காத தாராபாய், போட்டி அரசு ஒன்றை கோல்காபூரில் நிறுவினார். ஆனால் அரசர் இராசாராமின் இரண்டாவது மனைவியான இராச பாயைத் தனது பக்கத்துக்குக் கொண்டு வந்த சாகு, கோல்காபூர் அரசின் மீதும் படையெடுத்தார். இராச பாயின் மகனான இரண்டாவது சாம்பாஜியை அப்பகுதியின் அரசனாக்கி ஒன்றுபட்ட மராட்டியத்தைத் தனது கைப்பிடிக்குள் வைத்துக்கொள்வது சாகுவின் எதிர்பார்ப்பாக இருந்தது. தனது எண்ணத்தில் வெற்றியடைந்த சாகு இரண்டாவது சாம்பாஜியை கோல்காபூரில் அரசராக நியமித்துவிட்டு, தாராபாயையும் அவரது மகனான இரண்டாவது சிவாஜியையும் சிறைப்பிடித்தார். இதனால் தாராபாய் பதினாறு வருடங்களைச் சிறையில் கழிக்க நேரிட்டது.
ஆனால் அரசனாகப் பதவியேற்ற இரண்டாவது சாம்பாஜிக்கும் சாகுவுக்கும் இடையில் உரசல் ஏற்படத் தொடங்கியது. இதனால் மீண்டும் தாராபாயிடம் ஆதரவு கோரவேண்டிய நிர்ப்பந்தத்தில் தள்ளப்பட்ட சாகு, அவரைச் சிறையிலிருந்து விடுவித்து, சதாராவின் அரண்மனையில் வீட்டுக் காவலில் வைத்து, அவரது ஆதரவைக் கோரினார். அப்போதைக்கு அமைதியாக இருந்த தாராபாய், தனது 73ஆவது வயதில் அரண்மனையிலிருந்து வெளிப்பட்டார். அப்போது சாகுவிற்கும் உடல்நிலையில் குறைபாடு எற்பட்டு ஆரோக்கியம் குன்றியிருந்தது.
இதனால் சாகு வேறு வழியில்லாமல் அதுவரை மறைத்து வைத்திருந்த தனது மகன்வழிப் பேரனான இரண்டாவது இராசராமை மராத்திய வாரிசாக அறிவித்தார். இதன்பின் 1749இல் காலமானார். இராணி தாராபாயின் உதவியுடன் இரண்டாவது இராசராம் மராத்திய அரசரானார்.
இறுதி வரை இருந்த அரசாட்சி
இரண்டாவது இராசாராம் அரசராக இருந்தாலும் சதாராவில் தாராபாயின் அரசவை ஒன்றும் இணையாக இயங்கிக் கொண்டிருந்தது. தளபதி நானாசாகிப்போடு இணைந்து இரண்டாவது இராசாராம் தாராபாய்க்கு நெருக்கடி கொடுத்தபோதும் அவரை ஒன்றும் செய்து விட முடியவில்லை. 1752இல் நானாசாகிப்பின் அதிகாரத்தை ஒத்துக் கொள்வதற்கு ஈடாக, இராணி தாராபாயின் இணை அரசாங்கத்தையும் அவர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
இதன் 1761இல் தனது 86வது வயது வரை அரசுரிமையில் இருந்த தாராபாய், மூன்றாவது பானிப்பட்டுப் போரில் முகலாய அகமது சா படையெடுத்து வந்து மராட்டியப் படைகளை முற்றாக அழிக்கும் வரை இணையில்லாத அரசியாகத் திகழ்ந்தார். 1701இல் அரசைத் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்ட தாராபாயின் அரசும் அதிகாரமும் இடைப்பட்ட காலங்களில் சிறிது தடுமாறினாலும், 60 ஆண்டுகள் நீடித்தது. இதற்குக் காரணம் தாராபாயின் துணிச்சல், அரசாட்சி, போர்த்திறம், அரசதந்திரம் போன்றவைதான் என இன்றும் வரலாறு சொல்கிறது.
வரலாற்றாசிரியர்கள் இராணி தாராபாயின் இத்தகைய தீரத்தை வலுவாகப் பதிவு செய்கிறார்கள். போர்ச்சுகீசிய வராற்றாசிரியரான இரிச்சர்டு ஈட்டன் (Richard Eaton), முகலாய அரசவையின் அரசவைக் குறிப்பாளராக இருந்த கஃபி கானின் குறிப்புகளில் இருந்து இந்தக் கட்டுரையின் பல செய்திகளைத் தனது ‘எ சோசியல் ஹிஸ்டரி ஆஃப் டெக்கான்’ என்ற நூலில் பதிவு செய்கிறார்.
சுனாகத் சர்க்கார் என்ற வங்காள வரலாற்றாளர் இராணி தாராபாயின் நிர்வாகக் கூர்மதியும், அஞ்சாத நெஞ்சுரமும்தான் 1701இல் இருந்து 1707 வரையிலான குழப்பம் மிகுந்த ஆறு ஆண்டுகளில் மராட்டிய அரசைக் காத்து நின்றன என்று பதிவு செய்கிறார்.
‘தீரம் திகழ்ந்து பரவக் கூடியது. ஒரு தீரமிக்கவன் ஒரு நிலையை எடுத்துத் துணிந்து நிற்கும்போது, அவனைச் சுற்றிலும் உள்ள ஆயிரம் பேர்களின் நெஞ்சுரம் அதிகரிக்கிறது’ என்று இராணி தாராபாய் எப்போதும் குறிப்பிடுவார். மராட்டியத்தின் தன்னிகரற்ற அரசியாக சத்ரபதிக்குப் பின்னர் புகழ் பெற்று விளங்கியவரும், மராட்டிய அரசை நெடுங்காலம் நிலைநிறுத்தியவரும் இராணி தாராபாய்தான் என்று அறுதியிட்டுக் கூறலாம். அவரது வரலாறும் அறியப்பட வேண்டிய ஒன்றாகும்.
(தொடரும்)
படம்: Tarabai in battle by Marathi painter M. V. Dhurandhar, 1927