மாபெரும் பேரரசுகள் இருந்த காலத்தில்கூட, அந்தப் பேரரசுகளின் விஞ்சும் புகழை மிஞ்சும் சிலர் அதே காலத்திலேயே தோன்றி வாழ்ந்திருப்பதை வரலாறெங்கும் பார்க்கலாம். உலகை வெல்லத் துணிந்த அலெக்சாண்டரை எதிர்த்து நின்று வென்ற ஒரு புருசோத்தமன், பேரரசன் இராச இராசன் காலத்தில் அவனை ஒட்டிய புகழோடு வாழ்ந்திருந்த வந்தியத் தேவன் என்று பல எடுத்துக்காட்டுகள் இவ்வாறு உண்டு. அவ்வாறு ஒரு எடுத்துக்காட்டாய் விளங்கிய வீரப் பெண்மணியே இந்தக் கட்டுரையை அலங்கரிக்கிறார்.
முலாயப் பேரரசு இந்தியத் துணைக்கண்டத்தில் பெருகிப் பரந்திருந்த காலத்தில், அப்பேரரசின் மாபெரும் அரசர்களில் ஒருவராக விளங்கிய அக்பரின் ஆட்சிக்காலத்தில், அவரை எதிர்ந்து வீரத்துடன் போர்புரிந்து வரலாற்றில் நிலைபெற்றிருக்கிறார் ஓர் அரசி. அவர்தான் இராணி துர்காவதி. கோண்டு அரசப் பிரதேசத்தின் அரசியாக விளங்கிய சந்தேலர் அரசகுலத்தைச் சேர்ந்தவர் இராணி துர்காவதி. இந்த அரசகுலத்தவர்கள்தான் கஜுரேகாவில் அமைந்திருக்கும் கோயில்களைக் கட்டியவர்கள். சோமநாதபுரத்தின் மீது பதினேழு முறை படையெடுத்த முகம்மது கஜினியைப் பலமுறை எதிர்த்து நின்று வென்றவர்களும் இவர்களே. எனவே இந்த சந்தேலர் குலம் வீரம் விளைந்த குலம் என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.
பிறப்பும் இளமைப்பருவமும்
துர்க்காட்டமி எனப்படுகின்ற துர்கா தேவியைத் தொழும் விழாவை அனுசரிக்கும் வழமை வடவர் தேசத்தில் உண்டு. இந்தத் துர்காட்டமி கொண்டாட்டங்களுக்கு இடையில், அக்டோபர் 5ஆம் நாள் 1524இல் பிறந்தவர் இந்த அரசி. இறைத்தெய்வமான துர்க்கா தேவியின் விழாக் காலத்தில் பிறந்ததால், பெற்றோர்கள் அவருக்கு துர்காவதி என்ற இறைவியின் பெயரையே வைத்தனர். இன்றைய உத்தரப் பிரதேசத்தின் கோண்டு பிரதேசத்தைச் சேர்ந்த, அக்காலத்தின் தகர்க்க முடியாத கோட்டை என்று அழைக்கப்பட்ட கலிஞ்சர் கோட்டையின் மகோபா பகுதியை ஆண்டு கொண்டிருந்த அரசர் சலபாகன் என்பவரின் அரசப் பகுதி இது.
சந்தேலாவுக்குப் பதினெட்டு வயதானபோது கோண்டுப் பிரதேசத்தைச் சேர்ந்த இன்னொரு கர்க கடங்கா என்னும் அரசகுலத்தின் சங்ராம் சா’வின் மகனான தள்பத் சிங் என்பவருக்கு மணமுடிக்கப் பட்டார் இராணி துர்காவதி. இந்தக் கர்க கடங்கா என்ற அரசப் பிரதேசம் 1400களில் நேர்ந்த தைமூரின் படையெடுப்புக்குப் பிறகு உருவாகி சிறிது சிறிதாக வளர்ந்தது. அது சங்ராம் சாவின் காலத்தில் 52 கோட்டைகள் அடங்கிய பெரும் பிரதேசமாக விளங்கியது. இன்றைய மத்தியப் பிரதேசத்தின் மண்ட்லா, சபல்பூர், நர்சிங்பூர், கொசலாபாத், போபால், சாகர் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது அந்த அரசு.
பொறுப்புக்கு வந்த கதை
துர்காவதியின் கணவரான கர்க கடங்காவின் அரசர் தள்பத் சா, 1548இல் மறைந்தார். இதையடுத்து தனது மகனான பிர்நாராயணுக்குப் பட்டம் கட்டிய அரசி துர்காவதி, அவரது பிரதியாகவும், நாட்டின் அரசியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆதர் கயச்தா, மன் பிரம்மன் எனும் இரண்டு அருமையான அமைச்சர்கள் ஆலோசனைக்கு வாய்த்திருந்தார்கள்.
அரசி துர்காவதியின் ஆட்சி வெகு சிறப்பான ஆட்சிகளில் ஒன்றாக வரலாற்றில் வரையறுக்கப்படுகிறது. அதற்குச் சான்றாக ஒன்றைக் குறிப்பிடலாம். அவரது மக்கள் அரசுக்கு வரியாகத் தங்கக் காசுகளையும் யானைகளையும் அளித்தனராம். இந்தக் குறிப்பின் பின்புலத்தை ஆராய்ந்தால், இராணி துர்காதேவியின் அரசாட்சியில் மக்கள் எத்துணை வளமோடு சிறப்பாக வாழ்ந்தார்கள் என்பது விளங்கும். அதோடு அந்தப் பிரதேசத்தில் மொத்தமிருந்த 23,000 கிராமங்களில் சுமார் 12,000 கிராமங்களைத் தன்னுடைய நேரடி மேற்பார்வையில் வைத்திருந்ததாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.
அதோடு இராணி தல், செரி தல், அதார் தல் என்று அழைக்கப்பட்ட மூன்று நீர்நிலைகளை ஏற்படுத்தியிருக்கிறார் இராணி துர்காவதி. கிழக்கு மேற்காக சுமார் 300 மைல்களும், தெற்கு வடக்காகச் சுமார் 160 மைல்களும் அடங்கிய பெரும் பிரதேசமாக இருந்தது துர்காவதியின் ஆட்சிப் பிரதேசம். தனது படையையும் தானே நடத்திச் செல்லும் வழமையும் இராணி துர்காவதிக்கு இருந்திருக்கிறது. அவரது படையில் 20,000 குதிரைகளும், 1000 போர் யானைகளும் எண்ணற்ற காலாட்படை வீரர்களும் இருந்திருந்ததாகப் பலர் குறிக்கின்றனர்.
தனது அரசப் பிரதேசத்தை வரையறுத்து, நாடு முழுவதும் சுற்றுப் பயணம் சென்று தனது அரச பிரதேசத்தை நன்னிலையில் வைத்திருந்தார் துர்காவதி. அவரது பிரதேசத்தைச் செம்மையாக வைத்திருந்த துர்காவதியின் வட எல்லை, முகலாயப் பேரரசின் எல்லையைத் தொட நேர்ந்தது. அப்போது முகலாயப் பேரரசராக விளங்கிக் கொண்டிருந்தவர் மகா அக்பர். தனது ஆட்சிப் பகுதியை விரிவாக்கும் எண்ணம் அக்பருக்கும் இருந்தது.
1562ஆம் ஆண்டு துர்காவதியின் கர்க்கடங்காவுக்கு அருகில் இருந்த பிரதேசமான மாள்வா’வை ஆண்ட பச் பகதூர் என்ற அரசரைத் தோற்கடித்து அந்தப் பகுதியைத் தனது அரசாட்சிக்குள் சேர்ந்தார் அக்பர். இராணி துர்காவதியின் அரசுக்கும் ஆபத்து அருகில் வந்தது.
வலிய வந்த பேரரசின் போர்
எவ்விதத் தூண்டுதல்களும் இன்றி முகலாயப் பேரரசராக விளங்கிய அக்பர், தனது தளபதி ஆசுப்கானையும், தனது பிரதேச ஆளுனரான கரமணிக்பூரையும் தலைமையாகக்கொண்டு ஒரு படையை கர்ககடங்காவைக் கைப்பற்ற அனுப்பி வைத்தார். அக்பரின் தளபதிகள்10,000 குதிரைப் படை, காலாட்படையினரோடு சென்று கர்ககடங்காவின் டாமோ பகுதியைக் கைப்பற்றினர். அப்போது கர்க கடங்காவின் அரசப் போர்ப்படை பல இடங்களில் பிரிந்து நிறுத்தப்பட்டு காவல் பணிகளிலும், பரிபாலனப் பணிகளிலும் ஈடுபடுத்தப் பட்டிருந்தது. இதனால் முகலாயப் படையெடுப்பை இராணி எதிர்பார்த்திருக்கவில்லை. அதற்கு அணியமாகவும் இருந்திருக்கவில்லை. இராணியின் அமைச்சராக இருந்த ஆதர் அந்த நேரத்தில் படையெடுப்பை எதிர்த்து எதுவும் செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
ஆனால் சூழல் சரியில்லாதபோதும், அவமானப்பட்டு வாழ்வதைக் காட்டிலும் எதிர்த்துப் போர் புரிதலையே தேர்ந்தெடுத்தார் துர்காவதி. வெறும் 500 போர்வீரர்கள் மட்டுமே அப்போது இராணியுடன் இருந்தார்கள். மலைகளையும் அடர்ந்த காடுகளையும் கடந்து, செல்லும் வழியில் படைகளைச் சேர்த்துக் கொண்டே நர்கி என்ற கிராமத்துக்குத் தன்படையை நடத்திக் கொண்டு வந்தார் துர்காவதி.
விளைந்தது வீரம்
நர்கி கிராமம் இரண்டு பக்கங்களிலும் நர்மதை, கவுர் ஆகிய ஆறுகளால் பாதுகாக்கப்பட்டது. மற்ற இரண்டு புறங்களில் பெரும் மலையும் அடர்ந்த காடும் நிரம்பியது அப்பகுதி. அந்த இடத்தை அடைந்தவர்கள் எளிதில் வெளியேறி விட இயலாது. எதிரிக்கு வலை விரித்து விட்டுத் தனது போர்வீரர்களை ஒன்று சேர்த்துக் கொண்டு காத்துக் கொண்டிருந்தார் துர்கா தேவி.
முகலாயத் தளபதியான ஆசப்கானுக்கு முதலில் துர்காதேவியின் இருப்பிடத்தைக் கண்டறிவது சுலபமாக இருக்கவில்லை. கடைசியில் நர்கி பகுதியில் அரசியும் படையும் தங்கியிருப்பதை அறிந்து அங்கு தனது படைகளை நடத்திக் கொண்டு வந்தான் ஆசப்கான். தனது போர்த்தளபதிகளை அழைத்த இராணி துர்காதேவி விரைவில் முகலாயர்கள் படை தர்கி பகுதிக்குள் நுழைவதை எதிர்ப்பார்க்கலாம் என்றும், இப்போதும் போரில் இருந்து விலகிக் கொள்ள நினைக்கும் வீரர்கள் விலகிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தார். அப்போது 5000 போர்வீரர்களைக் கொண்டிருந்த அந்தப் படையிலிருந்து ஒருவரும் பின்வாங்கவோ, விலகிச் செல்லவோ அணியமாக இல்லை. இராணியின் வீரம் அத்தகைய விளைவை அப்படையினருக்கு அளித்திருந்தது.
வரலாறானது வாழ்வு
மறுநாள் தர்கி கிராமத்துக்குள் கடக்க வேண்டிய கணவாய் வழியாக ஆசப்கானின் படை நுழைந்தது. அந்தக் கணவாய் வழியைக் காக்கும் முயற்சியில் இராணியின் தளபதிகளில் ஒருவரான அர்சுன் தாசு பாய் வீரமரணம் அடைந்தார். படைக்குத் தானே தலைமை ஏற்ற இராணி, எதிரிப்படைகளைக் கணவாய்க்குள் முழுதாக நுழைய அனுமதிக்கும் படி தனது படைக்குக் கட்டளையிட்டார். எதிரிகளின் படையை உள்ளே நுழையவிட்ட இராணி, பின்னர் அனைத்துத் திசைகளில் இருந்தும் முகலாயப் படையைத் தாக்கினார். தாக்குதல் தொடங்கிய சிறிது நேரத்துக்குள் முகலாயப் படைவீரர்கள் 300 பேர் கொல்லப்பட்டனர். மீதமிருந்தவர்கள் சிதறி ஓடினர். அன்றைய போர் இராணிக்கு வெற்றியுடன் முடிந்தது. வரலாற்றில் அக்பரின் படையை இராணி தோற்றோடச் செய்தது பதிவாகியது.
மாலை தனது தளபதிகளை அழைத்த இராணி, தொடர்ந்து முகலாயப் படைகளைத் தாக்கி அழிக்கவேண்டும் என்று ஆலோசனை கூறினார். ஏனெனில் மறுநாள் முகலாயர்களுக்கு மேலும் உதவிகள் வரலாம் என்று அவர் சிந்தித்தார். ஆனால் அவரது ஆலோசனையைப் படைத் தலைவர்கள் ஏற்கவில்லை. விளைவு, இராணி கூறியதே பின்னால் நடந்தது.
மறுநாள் ஜூன் 24, 1564ஆம் ஆண்டு ஆசப்கான் பீரங்கிப்படை, காலாட்படையுடன் கணவாய்க்குள் நுழைந்தனர். இராணி தனது புகழ்பெற்ற யானையான சர்மன் மீது அமர்ந்து போர்க்களம் நுழைந்தார். அன்றைய போர் தொடங்கிய சிறிது நேரத்தில் போரில் படுகாயம் அடைந்த அவரது இன்னொரு தளபதியான பிர் நாராயண், போர்க்களத்தை விட்டு நீங்க வேண்டி வந்தது. படையின் முன்னணிக்குத் தானே தலைமையேற்று வந்த இராணி மீது சகல தாக்குதலையும் ஆசப்கான் தொடுத்தான். ஓர் அம்பு இராணியின் கழுத்திலும் இன்னொன்று கண்ணுக்குப் பின்புறம் தலையிலும் தைத்தநிலையில் இராணி மயங்கத் தொடங்கினார்.
தனது யானைப் பாகனிடம், அவனது கட்டாரியைக் கொண்டு தன்னைக் கொன்றுவிடும்படி இராணி ஆணையிட்டார். ஆனால் அதைச் செய்ய இராணியின் யானைப்பாகன் முன்வரவில்லை. மாறாக அவன் இராணியின் யானையைப் போர்க்களத்தை விட்டு நீங்கிப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்தான். எப்படியும் முகலாயர்கள் தன்னைப் பிடித்து விடுவார்கள் என்பதை உணர்ந்து கொண்ட இராணி, தனது குத்துவாளால் தனது மார்பைப் பிளந்து கொண்டு வீரமரணத்தைக் கைக் கொண்டார்.
அக்காலத்திய முகலாயர்களுடனான போர்களில் வடபுலத்து இராணிகள் தோற்றால் அவர்களைக் கைது செய்து அழைத்துச்சென்று துன்புறுத்தும் வழமை ஆங்காங்கு இருந்தது. ஆதலால் போருக்குள் நுழையும் இராணிகள் வெற்றி அல்லது வீரமரணம் என்ற கொள்கையுடனேயே நுழைந்தார்கள். அந்த வீரத்தின் வரலாற்றுச்சாட்சியாக துர்காவதியின் வாழ்வும் அமைந்தது. மாபெரும் முகலாயச் சக்கரவர்த்தியான அக்பரின் படைகளைத் தோற்கடித்த பெருமையோடு அந்த வீரமங்கை வரலாற்றில் நிறைகிறார்.
(தொடரும்)