இன்றைய ஆந்திரப் பிரதேசமும் தெலுங்கானாவும் ஒன்றுபட்டு இருந்த நிலத்தின் பெரும்பகுதியை ஒரு பெண் சுமார் 27 ஆண்டுகாலம் அரசாட்சி செய்திருக்கிறார். அதுவும் அவ்வப்போது ஏற்பட்ட கலகங்கள், போர்கள் இவற்றைச் சமாளித்து நிகரற்ற அதிகாரத்துடன் ஆட்சி செய்திருக்கிறார் என்றால் அது வியப்புக்குரிய செயலல்லவா? தனது பெயரன் வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வரை அவரது அரசாட்சி நீண்டது. வாராங்கல்லில் உள்ள கோட்டையின் மதில்சுவரை உயர்த்திக் கட்டியும், உள்மதிலைப் புதிதாகக் கட்டியும் செப்பனிட்டவர் அவரே. 13ஆம் நூற்றாண்டில் ஆந்திரப் பகுதியை ஆண்ட இராணி ருத்ரமாதேவிதான் அந்த அரசி.
பிறப்பு, இளமை, ஆட்சி
ருத்ரமா தேவியின் தந்தை கணபதி தேவா. இவர் காகாத்திய அரசின் தலைநகர் வாராங்கல்லில் இருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தார். காகாத்திய அரச குலம் கி.பி.1150இல் இருந்து கி.பி.. 1323 வரை அரசாட்சி செய்தது. காகாத்திய அரசின் மிக வலிமையான அரசராக வரலாற்றில் அறியப்படுவர் கணபதி தேவாதான். அவர் மொத்தமாக 63 ஆண்டுகள் அரசாட்சி செய்திருந்தார். அவருக்கு ஆண் மகன் இல்லை. மகள் ருத்ரமாதேவி மட்டும்தான். எனவே 1263 ஆண்டு வாக்கில் தன் மகளையே அரசின் தலைமையாக அறிவித்து விட்டார் கணபதி. ஆயினும் 1269 வரை ருத்ரமாதேவி நேரடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததுபோல் வரலாற்றுச் செய்திகள் இல்லை. கணபதி தேவா தொடக்கக் காலத்தில் ருத்ரமாதேவிக்கு வழிகாட்டியாக அரசை நடத்திக் கொண்டு சென்றார். எனினும் வரலாற்றாசிரியர்கள் ருத்ரமாதேவியின் ஆட்சிக்காலத்தை 1262இல் இருந்தே கணக்கிடுகிறார்கள்.
ருத்ரமாதேவி கருவிலிருந்தபோது அவர் ஆண்குழந்தைதான் என்று சோதிடர்கள் கணித்திருந்ததாகவும், ருத்ரமாதேவி பெண்ணாகப் பிறந்தபோதும் அவருக்கு கணபதி தேவா ருத்ரதேவா என்ற ஆண் பெயரைத்தான் சூட்டியிருந்தார் எனவும் செவிவழிக் கதைகள் உலவுகின்றன. பதினான்கு வயது வருவதற்குள் ருத்ரமாதேவிக்கு கணபதி தேவா போர்தந்திரங்கள், போர்முறைகள், அரச தந்திரங்கள் அனைத்தையும் கற்றுக்கொடுத்திருந்தார். பொதுவாகத் தோன்றும் இடங்களிலும் தனது மகளை ஆண் உடையிலேயே தோற்றமளிக்கச் செய்திருந்தார் கணபதி தேவா. பொதுவாக அரசத் தலைமைகள் ஆண்களாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருந்திருந்த அக்காலத்தில், கணபதி தேவாவின் இவ்விதச் செய்கைகளுக்குக் காரணம் நாம் புரிந்துகொள்ளக்கூடியதே.
திருமணம்
ருத்ரமாதேவிக்குச் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த அரசரான இந்து சேகரரின் மகன் வீரபத்ரர் என்பவரை மணமுடித்தார் கணபதி தேவா. காகாத்திய அரசகுல வரலாற்றில் போரில் தோற்றுப்போன மற்ற அரசர்களோடும், சண்டை ஏற்படாவண்ணம் மேற்கொள்ளப்படும் உடன்படிக்கையாகவும் பல திருமணங்கள் உள்ளன. சாளுக்கியர்களோடு 1240 வாக்கில் ஏற்பட்ட போரின்போது அவர்களை வென்ற கணபதி தேவா உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டார் என்ற குறிப்புகளும் உள்ளன.
முழுமையான ஆட்சிப் பொறுப்பு
கணபதி தேவா 1250களில் நடந்த போரில் பாண்டியர்களிடம் தோற்றார். எனவே அத்தோல்விக்குப் பிறகு முழு ஆட்சிப் பொறுப்பையும் ருத்ரமாதேவியிடம் ஒப்படைத்து விட்டு அரசப் பொறுப்பில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். தேவைப்பட்ட நேரத்தில் வழிகாட்டும் பொறுப்பு மட்டும் அவரிடம் இருந்தது. 1263ஆம் ஆண்டு ருத்ரமாதேவி முழுமையான ஆட்சிப் பொறுப்புக்கு வந்து விட்டார் என்று தெரிகிறது. 1266இல் வெட்டப்பட்ட திரிபுராந்தகம் கல்வெட்டு, 1269ஆம் ஆண்டு வெட்டப்பட்ட டுக்கி கல்வெட்டு போன்றவற்றில் கணபதி தேவாவே அரசராகக் குறிக்கப்பட்டு, ருத்ரமாதேவி அரசப் பொறுப்பில் இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன.
பதினேழாம் நூற்றாண்டு நூலான பிரதாப சரித்திரத்தில் ருத்ரமாதேவி குறித்து குறிப்பிருக்கிறது. அதில் அவரது சகோதரர்களும், கணபதி தேவாவின் இளைய அரசியின் மகன்களுமான அரிகரரும், முகாரிதேவாவும் கலகம் செய்து வாராங்கல்லைக் கைப்பற்றியதாகவும், அங்கிருந்து ருத்ரமாதேவி விரட்டப்பட்டதாகவும் குறிப்பு இருக்கிறது. இதன்பின்னர் ருத்ரமாதேவி தனது ஆதரவாளர்களைச் சேர்த்துக்கொண்டு மறுபோரில் ஈடுபட்டு, தனது ஒன்றுவிட்ட சகோதரர்களை வென்றும் கொன்றும் விட்டு அரசத் தலைமைக்குத் திரும்பியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த நூலின் சம்பவங்களுக்கான வேறு வரலாற்று ஆதாரங்கள் இல்லை.
பொதுவாக 1265 முதல் 1274 வரையான ஆண்டுகளில் நடந்த சம்பவங்களுக்குத் தெளிவான வரலாற்றுச் சுவடுகள் இல்லையாயினும், ருத்ரமாதேவி பெண்ணாக அரசத் தலைமையில் இருந்ததை விரும்பாத அவரது உறவினர்களில் பலர் உட்கலகங்களைச் செய்து கொண்டிருந்தனர் என்ற செய்திகளும் கிடைக்கின்றன.
பிரதாப சரித்திரம் நூல், சில மன்னர்கள் காகதீய இராச்சிய சுதாபன ஆச்சார்ய என்ற பட்டங்களைப் பெற்றிருந்ததாகப் பட்டியலிருக்கிறது. அந்தப் பட்டியல் காலம் 1275லிருந்து 1290க்குள் எழுதப் பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அந்தப் பட்டியலில்,
1. மகா பிரதான கன்னர நாயகா
2. மகா பிரதான கணபதி தேவா மகாராசுலு
3. நிசாங்க மல்லிகார்சுன நாயக
4. அம்பதேவ கயஸ்த குலத்தர்
என்ற வாசகங்கள் உள்ளன. அன்றைய வாராங்கல்லின் பெயர் ஒரகல்லு என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் கடைசியில் உள்ள பெயர் முக்கியத்துவம் வாய்ந்தது. அது என்ன என்று கட்டுரையின் இறுதியில் பார்க்கலாம்.
கணபதி தேவா தன்னுடைய உச்ச சக்தியுடன் விளங்கியபோது அவருடைய அரசின் பகுதிகளாக விளங்கிய ஆந்திரக் கரையோரப் பகுதியை நரசிம்ம பானுதேவா என்ற கஜபதி குலத்தைச் சேர்ந்த அரசர்கள் முற்றுகையிட்டு பிடித்துக் கொண்டதையும், அவரை ருத்ரமா தேவி, பொட்டி நாயக, ப்ரோலி நாயக என்ற இரண்டு தளபதிகள் தலைமையில் படையை அனுப்பி வென்றதையும் திராக்சாரமம் கல்வெட்டுகள் குறிக்கின்றன. திராக்சாரமத்தில் உள்ள பீமேசுவரர் ஆலயத்தில், காரபார்த்தி சுராய ரெட்டி என்ற அரசன் 1278இல் பொறித்து வைத்துள்ள கல்வெட்டில் தான் காகதீய ருத்ரதேவ மகாராசரின் அடியான் என்ற குறிப்பு காணப்படுகிறது. இந்தக் குறிப்புகள் ருத்ராம்ப தேவி வலிமையான காகதீய அரசியாக விளங்கியதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
பாண்டியர்களுடன் ஏற்பட்ட போர்
கணபதி தேவாயின் கடைசிக் காலங்களில் காகதீய அரசின் தெற்குப் பகுதி எல்லைகளாக இருந்த நெல்லூர், கடப்பா பகுதிகளை அவர் ஆண்டதாகத் தெரிகிறது. பாண்டியர்கள் வைத்த சிதம்பரம் கோயில் கல்வெட்டுகளில், பாண்டிய அரசன் விக்கிரமன், ஆண் பெயரில் அரசு புரியும் ஒரு பெண்ணிடம் யுத்தம் செய்ய வேண்டாம் என்று திரும்பி விட்டதாக ஒரு குறிப்பு காணக்கிடைக்கிறது. இது ருத்ராமா தேவியின் மீதான அச்சத்தினாலும் ஏற்பட்டிருக்கலாம். அல்லது, அவரவர் அந்தந்தப் பகுதியை ஆளும் உடன்படிக்கையை இருபுறமும் எடுத்துக் கொண்டு அமைதியடைந்திருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. ஆனால் பாண்டியர் ஆக்கிரமிப்பில் இருந்த சில பகுதிகளை ருத்ரமாதேவியின் படைத் தலைவர்கள் வென்று, அவற்றைக் கோயில்களுக்கு அளித்தனர் என்ற குறிப்புகள் இருப்பதைக் கருதினால், ருத்ரமாதேவியின் படைத்தலைவர்கள் அல்லது சிற்றரசர்களாக இருந்தவர்கள் இந்தப் பகுதிகளை மீண்டும் வெற்றி கொண்டு காகதீய அரசுடன் இணைத்து விட்டார்கள் என்று கருத இடமிருக்கிறது.
சியூனர்கள் என்ற யாதவர்களுடன் ஏற்பட்ட போர்
ருத்ரமாதேவியின் காலத்தில் யாதவ (அல்லது சியூன) அரசராக இருந்த மகாதேவா என்ற அரசர், திலிங்கானாவின் (தெலுங்கானா) அரசத் தலைமைக்கு எதிராக வெற்றிப் பெற்றார். இவர் தாமரைத்தண்டின் தலையில் இருக்கும் தாமரை மொட்டைத் துண்டித்ததுபோல காகதீய அரசியை வெற்றிக்கொண்டதாக மகாதேவரின் பிரதம அமைச்சரும், பல்துறை விற்பன்னருமான கேமாத்ரி என்பவர் எழுதிய விராட காண்ட நூலில் ஒரு குறிப்பு உள்ளது. மேலும் ஒரு பெண்ணைக்கொல்ல விரும்பாது திரும்பிச் சென்று விட்டதாகவும் அந்தக் குறிப்புகள் சொல்கின்றன.
ஆனால் தெலுங்கானாக் கல்வெட்டுகளில் ருத்ரமாதேவி இந்தப் படையெடுப்புகளை முறியடித்ததோடு, யாதவர்களது பிரதேசத்தையும் வென்று தனது ஆட்சிப் பிரதேசத்தில் இணைத்துக் கொண்டதாகக் குறிப்புகள் உள்ளன. பிரதாப சரித்திரத்தில் மகாதேவா, ஒருகல்லா (வாராங்கல்) நகரைப் பதினைந்து நாட்கள் முற்றுகையிட்டதாகவும், ருத்ரமாதேவி, யாதவர்களின் 3 லட்சம் வீரர்களையும், 1 லட்சம் குதிரைப் படைகளையும் அழித்து, யாதவர்களை அவர்களது தலைநகரான தேவகிரிக்கு விரட்டியதாகவும் குறிப்பு உள்ளது. இந்த எண்கள் பெரும் எண்ணிக்கையிலான எண்களாக மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும், ருத்ரமாதேவி யாதவர்களின் படையெடுப்பை முறியடித்து தனது ஆட்சிப் பிரதேசத்தை இழக்காது சக்தியோடு ஆட்சி புரிந்ததைக் குறிக்கிறது.
நிலைத்து மறைந்த விதம்
காகதீய அரசின் தென்பகுதியில் கயஸ்த குலத்தைச் சேர்ந்த அரச குலத்தவர்கள் சிலர் சிற்றசர்களாக இருந்தார்கள். ஜன்னிக தேவா, திரிபுராரி தேவா என இரண்டு கயஸ்த வம்சத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ருத்ரமாதேவியின் காலத்தில் அவருடன் இணக்கமாகத் தோழமையுடன் இருந்தார்கள். அவர்களுடைய இளைய சகோதாரன் அம்ப தேவா என்பவர், 1272இல் கயஸ்த குலத்தின் பொறுப்புக்கு வந்தபோது தொடக்கத்தில் ருத்ரமாதேவிக்கு இணக்கமாக இருந்தார். ஆனால் விரைவில் காகதீய அரசைத் தான் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட, அம்பதேவா ருத்ரமாதேவியுடன் போர் தொடுத்தார். 1290இல் ஏற்படுத்தப்பட்ட திரிபுராந்தகம் கல்வெட்டுகளில் அம்ப தேவா எவ்வாறு ருத்ரமாதேவியின் படையைச் சேர்ந்த 75 நாயகர்களின் தலைகளை வெட்டினார் என்ற குறிப்புகள் கிடைக்கின்றன. அவர்கள் ருத்ரமாதேவியின் முக்கியப் படைத் தலைவர்களாக இருந்திருக்க வேண்டும்.
1289இல் அம்பதேவாவின் படைகளால் ருத்ரமாதேவி போரில் கொல்லப்பட்டார். அந்தக் காலத்தில் ருத்ரமாதேவியின் தலைமைத் தளபதியாக இருந்தவர் மல்லிகார்சுன நாயகா. நல்கொண்டா என்ற இடத்தில் உள்ள சாண்டுபட்லா கல்வெட்டில் ருத்ரமாதேவியும் அவரது பிரதமத் தளபதியாக மல்லிகார்சுன தேவாவும் சிவலோகப் பதவியை அடைந்தார்கள் என்ற குறிப்பு கிடைக்கிறது. இந்தக் கல்வெட்டு மல்லிகார்சுன தேவாவின் மகன் இம்மடி மல்லிகார்ச்சுன தேவாவால் ஏற்படுத்தப்படுகிறது.
வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி இந்த நேரத்தில் ருத்ரமாதேவிக்கு வயது 80ஐ ஒட்டி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவர் படையை நடத்தி இருக்காவிட்டாலும், தனது தளபதி மல்லிகார்சுன தேவாவுக்கு உற்சாகம் தர படையுடன் சென்றிருக்க வேண்டும். ருத்ரமாதேவிக்குப் பின் வந்த காகதிய அரசரான பிரதாபருத்ரா, 1291இல் அம்ப தேவாவை வென்று மீண்டும் காகதிய அரசைத் தொடர்கிறார். ஆனால் அவரே காகதிய அரசின் கடைசி அரசராக இருந்தார் என்று தெரிகிறது. அவர்களுக்குப் பின் விஜயநகர அரசுகள் தோன்றின.
ஆட்சியின் செய்திகள்
வாராங்கல் கோட்டையைச் செப்பனிட்டும் ஒரு புதிய மதிலைக் கட்டி வலுவாக்கி தன் ஆட்சிக் காலத்தில் ருத்ரமாதேவி வைத்திருந்தார். 150 அடி அகல அகழியும் அப்போது வெட்டப்பட்டிருக்கிறது. சுயம்பு தேவா என்று அழைக்கப்பட்ட காகதிய வம்சத்தின் குலதெய்வமான சிவனுக்கு ரங்கமண்டபம் என்ற பெயரில் ஒரு கோயிலை வாராங்கல்லில் ருத்ரமாதேவி கட்டியிருக்கிறார். ருத்ரமாதேவிக்கு மூன்று பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்தனர். ஆண் வாரிசு இல்லாததால், தனது மகளின் மகனான பிரதாப ருத்ராவைத் தனது அரசியல் வாரிசாக நியமித்தார் ருத்ரமாதேவி. ஆந்திர தெலுங்கானா பகுதிகளில் ருத்ரமாதேவி என்ற பெயர் இன்று வரை பேசப்படும் பெயராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது காலம் முழுவதும் தனது அரசைச் சுற்றியிருந்த அரசுகளின் சிறு சிறு கலகங்களை அடக்கி, சுமார் 27 ஆண்டு காலம் அரசியாக நிலைத்தது ருத்ரமாதேவியின் சாதனை. அவர் பெண் என்ற காரணத்தால் மட்டுமே பல எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி இருந்திருக்கலாம் என்று பல வரலாற்றுக் குறிப்புகளின் மூலம் தெரிகிறது. இந்த ஒரு காரணத்தால் மட்டுமே, வலிமையான அரசியாகத் தனது 80 வயது வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த ருத்ரமா தேவி குறிப்பிடத்தக்க அரசியாக நிலைக்கிறார்.
(தொடரும்)