Skip to content
Home » இந்திய அரசிகள் # 12 – உதா தேவி பாசி (30.06.1830- 16.11.1857)

இந்திய அரசிகள் # 12 – உதா தேவி பாசி (30.06.1830- 16.11.1857)

Uda Devi Pasi

முதல் சுதந்திரப் போரான சிப்பாய்க்கலகம் எழுந்த காலத்தில்தான் ஜான்சியின் இராணி மணிகர்ணிகா டம்பே என்ற இலக்குமிபாய் வீறுகொண்டு எழுந்து, பிரித்தானிய ஆதிக்கத்தையும் நாடுபிடிக்கும் செயலையும் எதிர்த்து நின்றார். உண்மையில் இலக்குமிபாய் போன்ற அரசிகள் உயர்மட்டத்தில் அந்தப் போராட்டத்தை எடுத்தார்கள் என்றால், தலித்திய மக்கள் சார்பில் இந்த முதல் விடுதலைப் போரில் தலித்தியச் சமூகத்தை இணைத்துக்கொண்ட ஒரு சாதனைப் பெண்மணி உதா தேவி.

உதா தேவி அவாத்தின் ஆறாவது நவாப்பாக இருந்த வாஜித் அலி சா என்பவருடைய பெண்கள் படையைச் சேர்ந்தவர். அவரது கணவரான மக்கா பாசி நவாப்பினுடைய படையில் இருந்தவர். உதா தேவிதான் இந்திய விடுதலைப்போரில் தலித்தியச் சமூகத்தை முன்னெடுத்துப் போராடிய முதல் போராளிப் பெண்ணாகக் கருதப்படுகிறார்.

பெரும் போராட்டங்கள் வேலு நாச்சியார், இலக்குமி பாய் போன்ற அரசிகளால் முன்னெடுக்கப்பட்டன என்றால், படைத் தலைவர்கள் போன்ற அளவில் செயல்பட்ட உதா தேவி போன்றவர்களின் வீரமும் தீரமும்கூட இந்திய விடுதலை வரலாற்றில் தனியிடம் பெற்றன.

வேலுநாச்சியாரின் படையில் இருந்த குயிலி என்ற தற்கொலைப் போராளியைக் கண்டு அலறி ஓடிய பிரித்தானியப் படையைப்போலவே, உதா தேவியைக் கண்டும் பிரித்தானியப் படை பின்வாங்க நேரிட்டது. பிரித்தானியப் படை எதிர்கொண்ட முதல் புள்ளியடித் துப்பாக்கிப் போராளி உதா தேவி என்றால் அது மிகையில்லை. ஆங்கிலத்தில் ஸ்னைப்பர் என்று அழைக்கப்படும் குறிபார்த்துச் சுடும் வீர சாகசத்தை நிகழ்த்தியவர் உதா தேவி.

தோற்றம், வளர்ப்பு, வாய்ப்பு

உதா தேவி பிறந்தது உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் ஆவாத் என்ற சிறு கிராமத்தில். உதா தேவி மணந்தது ஒரு போர்வீரனை. கிழக்கிந்தியக் கம்பேனி அரசாளத் தொடங்கிய பின்னர் ஏற்பட்ட சிப்பாய்க் கலகம் என்ற முதல் விடுதலைப் போர் வெடித்த 1857 வாக்கில், பிரித்தானிய அரசை அழித்தொழித்து விடுதலை இந்தியா வளர வேண்டும் என்ற எண்ணம் பரவலாக எழுந்தது.

அந்த நோக்கம் கொழுந்து விட்டெரிய, தான் என்ன செய்ய இயலும் என்று சிந்தித்த உதா தேவி, அந்த மாவட்டத்தின் அரசியாக இருந்த பேகம் அர்சத் மகலை அணுகி, தான் பிரித்தானியப் படைக்கு எதிராகப் போராட விரும்புவதாக விருப்பத்தைச் சொன்னார். இதையடுத்து பேகம் அர்சத் மகல், அந்த மாவட்ட அரசின் சார்பாக ஒரு பெண்கள் படையை அமைக்கும்படி உதா தேவிக்கு ஊக்கம் கொடுத்து, அவரையே அந்தப் படையணிக்குத் தலைமை தாங்கச் சொன்னார். போர்க்களத்தில் தனது கணவனான நவாபை இழந்திருந்த பேகம், சிறிதும் கலங்காது அப்போது போராட்டத்தைத் தனது கையில் எடுத்துக்கொண்டிருந்தார்.

1850களில் சல்கரிபாய், மகாபிரிதேவி ஆகிய பகுதிகளில் இருந்த தாழ்த்தப்பட்ட மக்களோடு இணைந்து தனது படையணியைத் திரட்டினார் உதா தேவி. இன்று தலித் வீராங்கனையணி என்று புகழோடு அழைக்கப்படும் அந்த அணி இவ்வாறுதான் உருவானது. அப்போது ஆவாத் பிரதேசத்தின் கடைசி மன்னராக இருந்த நவாப் வாஜித் அலி சாவை, பிரித்தானிய கம்பெனி அரசு மாவட்டத்தை விட்டு வெளியேறச் சொன்னது. பின்னர் ஏற்பட்ட போரில் நவாப் இறக்க, ஆவாதின் ஆட்சிப் பொறுப்பையும் போராட்டத்தையும் பேகம் அர்சத் மகல் ஏற்றார். அவரை அணுகிய உதா தேவி தலித் பெண்கள் படையணிக்குத் தலைமை ஏற்றார்.

பெயர் சொன்ன களம்

சிகந்தர் பாக் என்ற இடத்தில் நடந்த போர்தான் உதா தேவியின் பெயரை வரலாற்றில் பொறித்த போர்.

சிப்பாய்க் கலகம் தொடங்கியபோது டெல்லி, கான்பூர், ஜான்சி, லக்னோ போன்ற இடங்களில்தான் தீவிரமாக எழுந்தது. லக்னோவில் இருந்த பிரித்தானிய ரெசிடென்சி (குடிப்படை) அதிகமான பலமோ, போர்வீரர்கள் துணையோ இல்லாதிருந்தது. கோம்தி நதியின் கரையில் இருந்த அந்த இடத்தைக் கலகக்காரர்களின் படை எந்நேரமும் சூழ்ந்து அழித்தொழித்துவிடலாம் என்று அஞ்சினார் பிரித்தானிய ஆளுநர்.

அதனால் அவர், அங்கு தங்கியிருந்து பிரித்தானிய அதிகாரிகள், பெண்கள், படை அனைத்தையும் காப்பாற்ற கொலின் கேம்பல் என்ற அதிகாரியின் தலைமையில் ஒரு படையை அனுப்பினார். கோமதி நதியின் அக்கரையில் இருந்த சிகந்தர்பாக்கின் அரண்மனையைக் காப்பாற்றி, அதனைச் சுற்றியிருந்த பிரித்தானியக் குடிப்படையைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அந்தப் பிரித்தானியப் படையணிக்கு அளிக்கப்பட்டிருந்த ஆணை. ஆனால் பிரித்தானியப் படை கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது.

கான்பூரில் பலத்த எதிர்ப்பையும் சேதத்தையும் பெற்ற பிரித்தானியப் படைக்கு உன்மத்தம் ஏறியிருந்தது. எதிர்த்த எவரையும் கொடூரமாக எந்த விதிகளுமின்றிக் கொன்று, தூக்கிலிட்டுக் கொண்டே முன்னேறியது பிரித்தானியப் படை. பெரும் எண்ணிக்கையில் இருந்த பிரித்தானியப்படையின் நோக்கம் சிகந்தர் பாக் அரண்மனையைப் பிடிப்பது.

எதிரில் தென்பட்ட எவரையும், எதனையும் சுட்டு வீழ்த்திக்கொண்டு வந்த பிரித்தானியப் படைக்கு எதிரே, எதிர்த்து நின்ற கலகப்படை வீரர்கள் சட்டென வீழ்வதைக் கண்ட உதா தேவி, தமது படையைத் தற்காப்பு நிலைக்கு மாறுமாறு சொல்லிவிட்டு, அருகிலிருந்த மரத்தில் துப்பாக்கியுடன் ஏறினார். பிறகு அங்கிருந்து பிரிட்டானிய வீரர்களைச் சுடத் தொடங்கினார்.

ஒவ்வொரு தோட்டாவிலும் ஒரு மனிதனின் பெயர் பொறிக்கப்படும் என்றொரு சொலவடை உண்டு. அதை மெய்யாக்கும் விதமாக அன்று உதா தேவியின் துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட ஒவ்வொரு தோட்டாவுக்கும் ஒரு பெயர் கண்டிப்பாகப் பொறிக்கப்பட்டிருந்திருக்க வேண்டும். 32 பிரித்தானியப் படை வீரர்கள் சொற்பமான அரைமணி நேரத்துக்குள் சுடப்பட்டனர். தனது பகுதியில் ஏற்படும் கடும் இழப்பைக் கண்ட ஆங்கிலேயப் படை அதிகாரி அதிர்ந்து போனார்.

இறந்து வீழ்கின்ற பிரித்தானியச் சிப்பாய்களின் காயத்தை ஆராய்ந்த படை அதிகாரி, அந்தக் காயங்கள் அனைத்தும் மேலிருந்து துளைக்கப்பட்ட ஒரு வளைகோட்டுத் தோற்றத்தில் இருந்ததைக் கண்டுகொண்டார். மேலும் அவை ஒரே மாதிரியாக சுடப்பட்டதானால் ஏற்பட்ட காயம் என்பதையும் அறிந்தார். போர்க்களத்தை நன்கு ஆராய்ந்த அந்த அதிகாரி, தூரத்தில் கண்ணுக்குத் தெரிந்த மரத்தில் இருக்கும் குறிபார்த்துச் சுடும் ஒரு விற்பன்னனான போர்வீரன்தான் இந்த இழப்புக்குக் காரணமாக இருக்க வேண்டும் என்று ஊகித்தார். அந்த மரத்தை நோக்கிச் சுடும்படி தனது படையினருக்கு உத்தரவிட்டார். சரமாரியாகக் குண்டுகள் அந்த மரம் நோக்கிப் பாய்ந்தன.

வரலாறான வீரம்

மரத்தை நெருங்கிய பிரித்தானியப் படை, அந்த வீரர் ஒரு பெண் என்பதை இறந்து வீழ்ந்திருந்த துப்பாக்கியேந்திருந்த உதா தேவியின் உடலத்தைப் பார்த்து அறிந்தபோது, உறைந்துபோனது. ஒரு போராளிப் பெண் இத்தனை தீரமும் தீர்க்கமும் கொண்டிருந்ததைக்கண்ட ஆங்கிலேயப் படை அதிகாரி வியப்பின் எல்லைக்குப்போனார்.

வீழ்ந்து கிடந்த உதா தேவியின் உடலைப் பார்வையிட்ட ஆங்கிலப்படை அந்த நிகழ்வைப் பின்வருமாறு பதிவு செய்கிறது. ‘அந்தப் பெண்ணிடம் துப்பாக்கிப் படை வீரர்கள் பயன்படுத்தும் மிகப் பழைய இரண்டு துப்பாக்கிகள் இருந்தன. அவை இரண்டிலும் முழுதும் குண்டுகள் இருந்தன. இடுப்பில் இருந்த துப்பாக்கி இரவைப் பெட்டியில் பாதி அளவிலான துப்பாக்கி இரவைகள் இருந்தன. மிக ஒழுங்கான முறையில் இரவைகள் அடுக்கப்பட்டிருந்த அந்தப் பெட்டியும், அந்தப் பெண்ணும் எங்களைப் பெரு வியப்பில் ஆழ்த்தினார்கள். கிட்டத்தட்ட அந்தப் பெண் சுட்டிருந்த ஒவ்வொரு குண்டிற்கும் ஒரு பிரித்தானிய வீரன் மரித்திருந்தான்’.

முதல் விடுதலைப் போரின் வீர வரலாற்றுக் கதைகளில் உதா தேவியின் வீரவரலாறும் இணைந்தது. சுமார் 2000 வீரர்களைப் பிரித்தானியப் படை அந்தப் போரில் இழக்க நேரிட்டிருந்தது.

இன்றைய லக்னோ நகரின் சிகந்தர் பாக்கின் முனைய வளைவில் வெளிப்புறம், இப்போதும் உதா தேவியின் சிலையைப் பார்க்கலாம். கண்ணில் தீர்க்கமான பார்வையும், வீரம் ததும்பும் முகமும், கையில் துப்பாக்கியும், பார்வைக்கு ஆணா, பெண்ணா என்று சொல்ல முடியாதபடிக்கு இருக்கும், ஆனால் முன்னேறிச் செல்லும் ஒரு வீரனின் துடிப்பை வெளிப்படுத்தும் சிலை இது. அதன் பீடத்தில் இருக்கும் சொற்கள், ‘உதா தேவி பாசி – சிப்பாய்க் கலகக் காலத்தின் வீராங்கனை’ என்று துலங்குவதைப் பார்க்கலாம்.

மேன்மையும் சிறப்புகளும்

ஜான்சி இராணி என்றழைக்கப்பட்ட இலக்குமிபாய் போன்ற உயர்குலத்தைச் சேர்ந்த அரசிகளின் விடுதலைப் போராட்டம் இந்திய விடுதலைப் போருக்கு ஒரு நிறத்தை அளித்தது என்றால், உதா தேவி போன்ற தாழ்த்தப்பட்ட இனத்தவரின் பெண்கள் போராட்ட அணியானது கொடுத்த எதிர்ப்பும், களத்தில் காட்டிய தீரமும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு இன்னொரு நிறப்பிரிகை அழகைக் கொடுத்தது எனலாம். உத்தரப் பிரதேச அரசு 2021ஆம் ஆண்டு தனது பெண்கள் படைப்பிரிவுக்கு வீராங்கனை உதா தேவி அணி என்ற பெயரை அளித்து உதா தேவியைப் பெருமைப்படுத்தியது.

இன்றும் ஒவ்வொரு நவம்பர் 16 அன்றும் மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், பீகார் என்று சுற்றுப்பட்ட அனைத்து மாநிலங்களிலிருந்தும் கிளம்பி வரும் பாசி இனத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் இனத்தின் குலக் கொழுந்தான உதா தேவியின் வீரத்தைச் சிலாகித்து மகிழ்வதற்கென்றே லக்னோ நகரில் சிகந்தர் பாக்கில் குமிகிறார்கள்.

அவர்களில் பலர் தாழ்த்தப்பட்ட இனமான பாசி இனத்தின் இளந்தலைமுறைப் பெண்கள் என்று நாம் அறிந்துகொள்ள வேண்டியதாகும். அதில் வியப்பொன்றும் இருக்கக்கூடாது என்பது இயல்பாயினும், வரலாற்றின் பக்கங்களில் ஒரு ஜான்சி இராணிபோல நினைவு கூரப்படாத உதா தேவி, இன்றும் அங்கு ஒவ்வொரு நவம்பர் 16 அன்று கூடும் பாசி இன மக்களால் நினைவுகூரப்படுகிறார் என்பது சிறப்பு.

(தொடரும்)

பகிர:
முருகுதமிழ் அறிவன்

முருகுதமிழ் அறிவன்

முருகுதமிழ் அறிவன் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புதுப்பட்டியில் பிறந்தவர்; தகுதியால் பட்டயக் கணக்கரான இவர் மென்பொருள் புலத்தில் நிதித்துறை ஆலோசகராக சிங்கப்பூரில் பணி செய்கிறார். தமிழ்மொழி, இலக்கியம், எழுத்து இவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட இவர், இணையம் மற்றும் இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். இவரது இரு நூல்கள் வெளி வந்துள்ளன. தொடர்புக்கு asnarivu@gmail.com.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *