அவர் பிறந்தது ஒரு எளிய குடும்பத்தில். முகமதியர்களில் சையத் என்று சொல்லக்கூடிய ஒரு குலத்தில் பிறந்தவர் அவர். அவரது குலம் முகம்மது நபியின் வழிவழியான வாரிசு என்று நம்பப்படுகிறது. அவரது குடும்பம் மிக ஏழ்மையான குடும்பம்.
முகம்மதி காணும் என்பது அந்தப் பெண்குழந்தைக்கு வைக்கப்பட்ட பிறவிப் பெயர். வளர்ந்து பதினான்கு வயதானபோது, இணையற்ற பேரழகியாகவும், இனிமையான குணங்கள் நிரம்பியவராகவும் விளங்கிய அந்தப் பெண்ணைக் கொண்டுபோக நாட்டின் அரசனே வந்தார். ஆவாத் பிரதேசத்தின் நவாபாக அக்காலத்தில் விளங்கிய வாசித் அலி சா, முகம்மதியைத் திருமணம் செய்துகொண்டார்.
அவருக்குத் திருமணத்தின்போது விளம்பப்பட்ட பெயர், இப்திகார் உந்நிசா. பெண்குலத்துக்கே பெருமை என்பது அந்தப் பெயருக்கான பொருள். அவரது வாழ்வும் இந்தியப் பெண் குலத்திற்கான பெருமைகளில் ஒன்றாக அமைந்தது ஓர் இனிய, விநோதமான பொருத்தம். இந்திய விடுதலைப் போர்களின் முன்னணிப் பெயர்களில் ஒன்றாகப் பின்னால் அவரது பெயர் விளங்கப்போகிறது என்பதைப் பதினான்கு வயதில் அந்தப் பெண் அறிந்திருப்பாரா என்பது ஐயமே. தம்பதியருக்குப் பிறந்த ஆண்குழந்தையின் பெயர் பிர்ஜிசு குவெடர். இவை நடந்தது 1840களில்.
நாடு நீங்கிய நவாப்
1850களில் பிரித்தானிய அரசு நவாப் வாசித் அலியை அரசப் பொறுப்பிலிருந்த விலகி மாவட்டத்தை விட்டு வெளியேறச் சொன்னது. காரணம், அப்போது கனன்று கொண்டிருந்த விடுதலை இயக்கத்தினரோடு நவாப்புக்குத் தொடர்பு இருந்தது என்கிற ஐயம். நவாபை நீக்கிவிட்டுப் பிரதேசத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைத்தது பிரித்தானிய அரசு. எனவே கல்கத்தா நகரத்துக்கு நாடு கடத்தினார்கள் அவரை. ஆனால் பேகம் தனது கணவரைப் பிரித்தானிய அரசை எதிர்த்து நிற்கச் சொன்னார். ஆட்சியை இழந்தாலும் சரி, எதிர்த்து நின்று இழப்போம் என்பது பேகத்தின் விருப்பம்.
ஆனால் நவாபுக்கு நப்பாசை. இந்தியப் பிரதேசத்தை விட்டு வெளியேறி இங்கிலாந்துக்குச் சென்று மேல்மட்டத்தில் முறையீடு செய்து தனது ஆட்சியைத் திரும்பப் பெற்று விடலாம் என்ற நப்பாசை. ஆட்சியின் மீது இருந்த ஆசை, அவரை கம்பெனி அரசு சொன்னதைக் கேட்டு நடக்கச் சொன்னது. ஆனால் கல்கத்தாவில் சிறைவைக்கப்பட்டார் அவர். பின்னர் தப்பித்து சண்டையில் இறங்க முற்பட்ட அவர் கொல்லப்பட்டது பின்கதை. இப்போது ஆவாத்தில் நவாப் நீங்கிய நிலையில் நமது கதையைத் தொடர்வோம்.
அரசியான பேகம்
அது ஜூலை 5, 1857. லக்னோவில் ஆவாத் பிரதேசத்தில் வட்டாரத்தின் நவாப் இல்லை. பதினான்கு வயது நிரம்பியிருந்த தனது மகனை அரசனாக முடிசூட்டினார் பேகம். அவனுக்காகப் பொறுப்பு அரசியாக நிர்வாகத்தில் அமர்ந்தார். அந்நாளைய வழக்கத்தை மீறிய செயலாக, டெல்லியில் இருந்த பேரரசரான பகதூர் சாவுக்குத் தனது மகன் பிரிஜிசு பெயரில் ஒரு கடிதத்தை அனுப்பினார். அக்கடிதத்தில், தனது பிரதேசத்தில் இருந்த பரங்கியர் பலரை ஒழித்துவிட்டதாகவும், மிஞ்சிய சிலரையும் விரைவில் துடைத்து விடுவதாகத் தெரிவித்த பேகம், ஆவாத் பிரதேசத்தைத் தனி அரசாக அங்கீகரிக்கவும், பேரரசின் ஆதரவைக் கோரியும் வேண்டுகோள் வைத்தார். அக்கடிதத்தை அங்கீகரித்த பேரரசர் பகதூர் சா, நாணயம் அச்சடிக்கும் உரிமையோடு, தனி அரசாக ஆவாத் பிரதேசத்தை அங்கீகரித்துப் பதில் கடிதம் அனுப்பியதோடு, வெள்ளியில் அடிக்கப்பட்ட அரச உரிமைப் பட்டயத்தையும் அனுப்பி வைத்தார். ஆவாத் பகுதியில் சுமார் ஒன்றரை இலக்கம் எண்ணிக்கை கொண்ட சிப்பாய்கள் தங்கியிருந்தனர்.
தலைமைத்துவம்
சிப்பாய்க் கலகம் அரும்பத் தொடங்கியிருந்த விடுதலைப் போராட்டக் காலத்தில் நானா சாகிப், தாந்தியாதோபே, மௌல்வி அகமத்துல்லா, கன்வர் சிங், பிரோசு சா போன்ற முதல் விடுதலைப் போர்த் தளபதிகளைத் தனது பகுதியில் இணைத்து, லக்னோவில் போராட்டத்தின் முனைப்பைக் கூர்மைப்படுத்தினார் பேகம். பிரித்தானியப் படை லக்னோ பகுதியில் இருந்த அவர்களது குடிமைப் பகுதியின் தொடர்பை முற்றாக இழந்தனர்.
சிப்பாய்க்கலகம் என்று பிரித்தானியர் அழைத்த முதல் விடுதலைப் போர் தொடங்கி கான்பூர் பலத்த முற்றுகைக்கும் சேதத்துக்கும் உள்ளானபோது பிரித்தானியப் படை திணறியது. அரசி பேகத்திடம் ஆசாத் பகுதியை ஆண்டுகொள்ளும்படிச் சமாதான தூதனுப்பிப் பார்த்தார்கள் பிரித்தானியர்கள். ஒன்றரை இலக்கம் அளவில் இந்தியத் துருப்புகள் தங்கியிருந்த அந்தப் பகுதியைப் பிடிக்க இயலாத பிரித்தானியப் படை அச்சப்பட்டது. ஆனால் எவ்விதச் சமாதானத்துக்கும் ஒத்துக்கொள்ளாத அரசி பேகம், முழு இந்தியாவின் விடுதலைதான் தங்களது இலக்கு என்று சொல்லி பிரித்தானியப் படையுடன் எவ்வித உடன்படிக்கைக்கும் மறுத்து விட்டார்.
ஏறத்தாழ ஒரு வருடம் ஏதும் செய்ய இயலாமல் கையைப் பிசைந்தது பிரித்தானிய அரசு நிர்வாகம். லக்னோ பகுதியின் கட்டுப்பாடு அரசி பேகம் தலைமையில் விடுதலைப் போராட்டத் தளபதிகளின் பொறுப்பில்தான் இருந்தது. எனினும் கான்பூர், லக்னோ பகுதிகளில் ஏற்பட்டிருந்த அந்த ஒற்றுமையும் உடன்பாடும் நாட்டின் மற்ற பகுதிகளில் விரைவாக ஏற்படாததாலும், மற்ற பிரதேச அரசுகள் விடுதலைப் போராட்டத்தில் ஒரே நேரத்தில் இறங்கும் ஒற்றுமை ஏற்படாததாலும், பிரித்தானிய அரசு விழித்துக்கொண்டது. அந்தப் போராட்டத்தைப் பகுதிப் பகுதியாக அடக்கும் நோக்கத்தில் இறங்கிய பிரித்தானியப் படை, கட்டுக்கடங்காத கொடூரத்துடன் கலகக்காரர்களை அடக்கியும், கொன்று குவித்தும், கான்பூரிலிருந்து ஒவ்வொரு பகுதியாகத் திரும்பப் பிடிக்கத் தொடங்கியது.
தலைவணங்காத வீரம்
பிரித்தானியப் படையுடன் முசாபாத் என்ற இடத்தில் நடந்த போரில் 9000 வீரர்கள் அடங்கிய படையை அரசி பேகம் தானே முன்னடத்திப் போர் புரிந்தார். கெய்சர்பாக்கில் இருந்த அவருடைய அரண்மனையை அவருடைய விசுவாசிகளாக இருந்து, பின்னர் பணத்துக்காகத் துரோகியாக மாறிய 5000 வீரர்கள் அழித்தொழிக்கத் திரண்டு வந்தபோது, சிறிதும் அஞ்சாமல் பீரங்கிகளை அவர்களை நோக்கித் தானே திருப்பி வெடிக்க வைத்துச் சிதறடித்தார்.
முதல் விடுதலைப்போரையும் அதனை ஒட்டி எழுந்த எழுச்சியையும் சிப்பாய்களின் கலகம் என்று அழைத்து அதனை அடக்கப் புறப்பட்ட பிரித்தானியத் தலைமைப் படை மிகவும் கொடூரமாகவும், இரக்கமின்றியும் நடந்துகொண்டது. மியான்மரின் அக்காலப் பெயரான இரங்கூனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலைப்படையையும் கலகத்தை அடக்க அழைத்தது பிரித்தானிய கம்பெனி. பெரும்படை திரட்டப்பட்டு, கொலின் கேம்பல் தலைமையில் லக்னோ பகுதியையும் ஆவாத்தையும் பிடிக்க அனுப்பி வைக்கப்பட்டது.
ஒவ்வொரு பகுதியாகத் திரும்பப் பிடித்துக்கொண்டு வந்த பிரித்தானியப் படைகளிடம் கடைசியாக வீழ்ந்தது அரசி பேகத்தின் படைதான். மார்ச் 18, 1858இல் கடும் போருக்குப் பிறகு லக்னோ வீழ்ந்தது. உடாதேவி போன்ற தளபதிப் பெண்களின் வீர வரலாற்றைக் களத்தில் நிகழ்வித்த அந்தப் போரில் பின்வாங்கினாலும், அரசி பேகமும், இளவரசன் பிரிஜிசும் நேபாளத்துக்குத் தப்பிச் சென்றனர்.
பிரித்தானிய அரசு கெடும் நோக்கத்துடன் அரசி பேகத்திடம் லக்னோ நகரின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் ஆண்டு கொள்ளலாம் என்றும், உதவித்தொகையாக இளவரசனுக்குப் பதினைந்து இலக்கம் ரூபாயும், அரசி பேகத்துக்கு ஐந்து இலக்கம் ரூபாயும் வழங்கும் என்றும், திரும்ப லக்னோவுக்கு வந்து தங்கிக்கொள்ளும் உடன்படிக்கைக்கு ஒத்துழைக்குமாறும் பேரம் பேசியது. ஆனால் லக்னோ உள்ளிட்ட முழு இந்தியாவுக்கும் தாங்களே உரிமையானவர்கள் என்றும், எவ்வித உடன்படிக்கையின் மூலமும் பிரித்தானிய கம்பெனி அரசு அதற்கு உரிமை கொண்டாட இயலாது என்றும், பிரித்தானிய கம்பெனி அடிமையாகத் தனது நாட்டின் பகுதியான லக்னோவுக்குத் திரும்ப மாட்டேன் என்றும் கூறி அதற்கு மறுத்து விட்டார் அரசி பேகம்.
ஹோவர்ட் ரஸ்ஸல் என்பவர் தன்னுடைய மை இண்டியன் ம்யூட்டினி டயரி என்ற நூலில் ‘அந்தப் பெண் அரசி பேகத்திற்குச் சிறந்த திறமையும் சக்தியும் இருந்தது. தன்னுடைய மகனுக்கு ஆதரவாக ஆவாத் பகுதியின் தலைவர்கள், சமீந்தார்கள் அனைவரையும் அவரால் திரட்ட முடிந்தது. அரசி பேகம் எங்கள் மீது தீராப் போர் என்று சூளுரைத்திருந்தார். நாடு பிடிக்கும் ஆசையில் கொடுத்த வாக்கை மீறியது, அவர் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு உறுதிமொழிகளை மீறியது, நன்றியில்லாமலும், இக்கட்டான நேரத்தில் அவரை மேலும் சீண்டியது என்று அவருடைய கோபத்துக்குப் பல காரணங்கள் இருக்கலாம்’ எனச் சொல்கிறார்.
களத்தில் திறம்
முதல் விடுதலைப் போராட்டம் டெல்லி, கான்பூர், லக்னோ பகுதிகளில்தான் அடர்த்தியாக நடந்தது. மற்ற பகுதிகளுக்குப் பரவி பெரிதாகப் பரவ விடாமல் பிரித்தானிய கம்பெனி சமாளித்தது. அந்த விடுதலைப் போரின் தந்திரியாகவும், மூளைகளில் முக்கியமானவராகவும் செயல்பட்டவர் அரசி பேகம்.
போர்க்களங்களில் தானே நேரடியாக ஈடுபட்டவர். முக்கியத் தளபதிகளான நானா சாகிப், மௌல்வி போன்றவர்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்தியவர். சுமார் ஓராண்டு காலம் அந்த விடுதலைப் போரைத் தனது பகுதியில் நீட்டித்து, வென்ற பகுதிகளைக் கைக்கொண்டிருந்தார் பேகம். 1858 மார்ச் வரை தாக்குப் பிடித்த லக்னோ பகுதியின் பல இடங்களில் இந்தப் போராட்டம் ஆங்காங்கே வெடித்துக் கொண்டிருந்தது. அந்தப் போராட்டங்களின் கண்களாக இருந்தவர்கள் துல்கர்களும், சமீந்தார்களும். அவர்கள் அனைவரும் அரசி பேகத்தின் நண்பர்கள் என்பதற்கு வரலாற்றில் பல ஆதாரங்கள் இருக்கின்றன. அரசி பேகத்தின் வல்லமையும், பிராந்தியத்தில் அவருடைய ஆளுமையும் தோழமையும் தலைமைத்துவமும் அந்த அளவு இருந்தன.
மிகப் பெரும் படையுடன் கண்டவர்களையெல்லாம் கொன்று தீர்த்துக்கொண்டு வந்த பிரித்தானியர்களால் ஏற்படும் மாபெரும் அழிவைத் தடுக்க நேபாளத்துக்குத் தப்பிச் சென்றார்.
பல விதங்களில் தன்னிடம் பேரம் பேசிய பிரித்தானியக் கம்பெனி அரசிடம் பணியாமல் நேபாளத்திலேயே தங்கியிருந்த அரசி பேகம் 1879ஆம் ஆண்டு இயற்கையாக மறைந்தார்.
இந்திய அரசு 1984ஆம் ஆண்டு அரசி பேகம் நினைவாக ஓர் அஞ்சல்தலையை வெளியிட்டது. லக்னோவின் பழைய விக்டோரியா பூங்காவிற்கு அருகில் அரசி பேகத்தின் நினைவாக 1962இல் ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டது. முதல் இந்திய விடுதலைப் போரின் முகமாக அரசி பேகம் இன்றும் நினைவு கூரப்பட வேண்டியவர்.
(தொடரும்)