இன்றைய மத்திய ஆப்கானித்தானத்தில் பிறந்தவர் முகம்மது கோரி. கைபர் கணவாய் வழியாக வந்து இந்தியப் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் வழியைச் செம்மையாக்கியவர் கோரிதான். கோரி நிறுவிய அரசுதான் பின்னர் இந்தியாவில் சுல்தானிய அரசாகப் பரிமளித்தது.
சிந்து நதி என்றழைக்கப்படும் இமாலயத்தின் அடிவார நதியைக் கடந்து அதன் மேற்கிலும் கிழக்கிலும் தனது அரசை நிறுவினார் கோரி. அவரது ஆட்சி ஆப்கன், பஞ்சாப் டெல்லி பிரதேசங்கள் ஆகிய இடங்களில் இருந்தது. 1206ஆம் ஆண்டு ஆப்கனை நோக்கிய பயணத்தில் இருந்துபோது ஒரு மாலைத்தொழுகையில் கோரி படுகொலை செய்யப்பட்டார்.
கோரியின் நம்பிக்கைக்குரிய அடிமையாகவும் தளபதியாகவும் இருந்தவர்தான் குத்புதீன் ஐபக். துருக்கிய வேரைக் கொண்ட அவர், கோரி இந்தியாவில் நுழைந்தவர். கோரியின் படுகொலைக்குப் பிறகு இந்தியப் பகுதியில் அவர் அரசாண்ட பகுதிகள் அனைத்தும் சுல்தானிய ஆட்சிப் பிரதேசமாக மாறியது. ஒருவாறு டெல்லிச் சுல்தானிய அரசை நிறுவியவர் குத்புதீன் ஐபக் என்றும் சொல்லலாம்.
குத்புதீன் ஐபக் சிறுவயதிலேயே ஓர் அடிமையாக விற்கப்பட்டவர். பெர்சியாவைச் சேர்ந்த குவாசி என்பவர், துர்கிசுதானில் பிறந்த குத்புதீன் ஐபக்கை அடிமையாக முதலில் வாங்குகிறார். சிறுவனின் துருதுருப்பும் கற்கும் வேகமும், அவனை வில், வாள் போர்களில் தேர்ச்சி அடைய வைக்கிறது. குவாசியிடமிருந்து மீண்டும் அடிமை வியாபாரத்தில் குத்புதீனை கோரி வாங்குகிறார். கோரியின் நம்பிக்குக்கந்த உள்வட்ட வீரனாக மாறிய குத்புதீன், கோரியின் அனைத்துப் படையெடுப்புகளிலும் அவரது வலது கை ஆளாக விளங்கினான். எனவேதான் கோரி இல்லாதிருக்கும்போது இயல்பாகப் பொறுப்புகளைக் கவனிக்கும் வழமை குத்புதீனுக்கு வந்திருந்தது. கோரி தடாலடியாகப் படுகொலை செய்யப்பட்டபோது குத்புதீன் இயல்பாக டெல்லியின் தலைவனாகச் சுல்தானிய அரசை நிர்மாணித்தார்.
இந்த குத்புதீன் ஐபக்கின் அடிமையாக இருந்தவர் சம்சுதீன் இல்துமிசு. குத்புதீனுக்குப் பிறகு சுல்தானிய அரசின் மன்னனாக இருந்தவர் சம்சுதீன். சம்சுதீன் குத்புதீன் ஐபக்கின் மகளான துர்கான் காதூனை மணந்திருந்தார். இந்த இருவருக்கும் பிறந்தவர்தான் இரசியா. பின்னாளில் இரசியா சுல்தான். தவிர, அவர் சம்சுதீனின் மூத்த முதல் குழந்தை. அவருக்குப் பின்னர் சம்சுதீனுக்குப் பல ஆண் குழந்தைகளும் பிறந்தன. ஆக இரசியா குத்புதீன் ஐபக்கின் பெயர்த்தியும், சம்சுதீனின் மகளும் ஆவார். அரசர்களைச் சுல்தான் என்றும் அரசிகளைச் சுல்தானா என்றும் அழைக்கும் வழமையால் இரசியாவான அவர் இரசியா சுல்தானா ஆனார்.
குத்புதீன் ஐபக் நிறுவிய சுல்தானிய அரசு 1206இல் தொடங்கி 1526இன் லோடி வம்சம் வரை சுமார் முந்நூறு ஆண்டுகள் நீடித்தது. பல்வேறு சுல்தானிய அரசக் குடும்பங்களின் கீழ் அந்தச் சுல்தானிய ஆட்சிப் பொறுப்பு மாறினாலும், அதன் தலைநகராக டெல்லியும் ஆட்சிப் பிரதேசமாக டெல்லியைச் சுற்றியிருந்த பகுதிகளும்தான் இருந்தன. பின்னாளில் கடுமையான முகம்மதிய ஆட்சி முறையும், போர் முறைகளும் சுல்தானிய அரசை ஒரு வலிமை பொருந்திய மத்திய ஆட்சிப்பிரதேசமாக அறிய வைத்தது. அதுவே பின்னாளில் நிலைத்துப்போய் இன்றுவரை ஒன்றிய அரசாக டெல்லியில் நிலை பெற்றுவிட்டது என்று கருதுவதில் பெரும் தவறிருக்கப்போவதில்லை.
பிறப்பும் இளமையும்
1205இல் சம்சுதீனுக்குப் பிறந்த குழந்தைதான் இரசியா. ஓர் அடிமையாக குத்புதீனிடம் வந்து சேர்ந்தாலும், தனது திறமை, ஆளுமை, போர்த்திறம் போன்றவற்றால் குத்புதீன் ஐபக்கை மிகவும் கவர்ந்திருந்தார். எனவேதான் தனது மகளை அவர் மணக்கச் சம்மதித்தார் குத்புதீன் ஐபக்.
பெண்குழந்தையாகப் பிறந்திருந்தாலும், சிறுமி இரசியாவுக்கு வில், வாள் போர்களில் ஈடுபாடும் கற்கும் ஆர்வமும் இருந்தது. அரசியல் தொடர்பான விஷயங்களில் அவருக்குத் தெளிவான கருத்தும் இருந்தது. இரசியா, சம்சுதீனுக்கு முதல் குழந்தை. சம்சுதீனுக்கு இரசியாவுக்குப் பிறகு பல பெண்கள் மூலம் பல குழந்தைகள் பிறந்தன. அவற்றுள் இரண்டு ஆண் குழந்தைகளும் இருந்தனர். சம்சுதீனின் முதல் ஆண் குழந்தை நசுருதீன் முகமத். சம்சுதீனின் இன்னொரு மனைவியான சா துர்கானுக்குப் பிறந்த ஆண் குழந்தை ருக்னுதீன் பிரூசு. சம்சுதீன் தனது முதல் ஆண் குழந்தையான நசுருதீனையே தனக்குப் பின்னரான சுல்தானாக நியமிக்க வேண்டும் என்று எண்ணி அவனை அணியப்படுத்தினார். ஆனால் இடையில் 1229இலேயே நசுருதீன் இறந்துபோனான்.
1231ஆம் ஆண்டு குவாலியரில் ஏற்பட்ட போருக்காகச் சென்றபோது இடைக்கால ஏற்பாடாக இரசியாவைத் தற்காலிகப் பொறுப்பில் விட்டுவிட்டுச் சென்றார் சம்சுதீன். அவர் திரும்பி வரும் வரை இரசியா தனது பொறுப்பை மிகச் சரியாக நிறைவேற்றியதைக் கண்ட சம்சுதீன், இரசியாவையே அடுத்த சுல்தானாக நியமிக்கலாம் என்று தீர்மானித்தார். சிந்தித்துப் பாருங்கள், இன்றுகூட பெண்கள் தலைமைப் பொறுப்புக்கு வந்து விட்டால் அவர்கள் பெண்பால் என்பதாலேயே எத்தனை இடர்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. 900 ஆண்டுகளுக்கு முன்னர் இது எப்படி இருந்திருக்கும்? அதுவும் அக்காலத்தில் பெண்கள் காம வடிகாலுக்கு ஒரு சாதனம் என்ற அளவில் மட்டும் மதிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில்? எதிர்த்துப் போராடுவதைவிடத் தீ வைத்துக்கொண்டு இறந்துபோவதுதான் மானம் என்று அடக்கி வைக்கப்பட்டிருந்த காலத்தில்? அதுவும் இறுக்கமான சுல்தானியச் சமுதாயத்தில்?
பெரும் எதிர்ப்புகள் மதகுருமார்களிடமிருந்து வந்தது. ஆனால் சம்சுதீன் அத்தனையையும் ஒரு சொல்லில் அடக்கினார். ‘இரசியாவுக்கு இருக்கும் திறன் எனது ஆண் குழந்தைகளுக்குக்கூட இல்லை!’. மதகுருமார்களைப் பற்றி நன்கு அறிந்திருந்த சம்சுதீன், அரசவை அமைச்சர்கள், சாசனம் எழுதுபவர்கள் முன்னிலையில் தனக்குப் பின்னர் இரசியாதான் சுல்தானாக இருக்க வேண்டும் என்று முரசறைந்து தெரிவித்துவிட்டார். சம்சுதீன் இத்தனை ஏற்பாடுகள் செய்திருந்தாலும், இரசியாவின் ஆட்சிக்காலம் முழுதும் அவரது பாலினத்தின் காரணமாக ஏற்பட்ட ஒவ்வாமைக்கு எதிரான போராட்டமாகவே இருந்தது விசித்திரம்.
சதிகளும் திருப்பங்களும்
சம்சுதீன் நோய்வாய்பட்டு அதிக நாட்கள் இருக்க மாட்டார் என்ற நிலை வந்தபோது, முகமதிய மதகுருமார்களால் அவரது மனதை மாற்ற முடிந்தது என்று பல வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். ஏன் என்ற உறுதியான காரணம் சரியாகப் பதிவு செய்யப்படாவிட்டாலும், இலாகூரில் வசித்துக் கொண்டிருந்த தனது மகனான ருக்னுதீனைத் தனது கடைசிக் காலத்தில் டெல்லிக்கு அழைத்துக் கொண்டார் சம்சுதீன். எனவே சம்சுதீன் 1236ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி இறந்தபோது டெல்லியில் இருந்த ருக்னுதீனை அடுத்த சுல்தானாக்கினார்கள் மதகுருக்கள்.
ஆனால் ருக்னுதீன் திறமைசாலி அல்ல. அரச நிர்வாகம் ருக்னுதீனின் அம்மாவான சா துர்கானின் கைகளுக்கு முழுதாகப்போனது. தாயும் மகனும் மனம் போனபடி ஆட்சி நடத்தியதோடு, சம்சுதீனின் இன்னொரு புகழ் பெற்ற மகனான குத்புதீனை ஆட்சிக்குப் போட்டியாக வந்து விடுவான் என்று நினைத்துக் கொன்றனர். இது மக்களிடையே அதிருப்தி உருவாகக் காரணமானது. கூடவே துருகிசுதான் பகுதியைச் சேராத, இந்தியப் பகுதியைச் சேர்ந்த அரச அதிகாரிகளும் ஆங்காங்கே கொல்லப்பட்டனர். அதோடு ருக்னுதீன் பஞ்சாபின் பாட்டியாலா நகரை ஒட்டி ஏற்பட்ட ஒரு கலகத்தை அடக்கச் சென்றிருந்தபோது இரசியாவையும் கொன்றுவிடத் திட்டம்போட்டார் சா துர்கான்.
இந்தக் கொலை முயற்சியை நல்லூழாக முன்னரே அறிந்த இரசியா, ஒரு பொதுக்கூட்டம்போல வெள்ளிக்கிழமை பொதுத் தொழுகையை ஏற்பாடு செய்ய, மக்கள் கூட்டம் அம்மியது. அந்த வழிபாட்டுக்கு முன்னர் மக்களிடையே சா துர்கானின் அத்துமீறல்களைப் பற்றி இரசியா பேச, மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்துப் பொங்கியது.
அரண்மனை நோக்கி நகர்ந்த அந்தக் கூட்டம் செய்தது கிட்டத்தட்ட ஒரு மக்கள் புரட்சி. மதகுருமார்கள் நிலைமையைக் கவனித்து இரசியாவின் பின்னர் பெரும்பாலும் திரண்டனர். சா துர்கான் கைது செய்யப்பட்டார். நாட்டின் படையும் இரசியாவை ஆதரித்தது. அனைவரும் திரண்டு இரசியாவை டெல்லிச் சுல்தானியத்தின் முதல் பெண் சுல்தானாவாக ஆக்கினார்கள். ஏறத்தாழ இந்திய அரசப் பகுதிகளில் இருந்த ஐந்நூற்றுச் சொச்ச அரச சமஸ்தானங்களில், முதன் முதலில் ஒரு பெண் அரசியாக இருந்து ஆண்டது பன்னிரண்டாம் நூற்றாண்டின் இரசியாதானா?
ஆம் என்றும், இல்லை என்றும் சொல்லலாம். மதுரையில் அரசாண்ட கூன் பாண்டியன் என்ற நின்றசீர் நெடுமாறனின் காலத்தில் அரசன் நோய்வாய்ப்பட்டுத் துன்பப்பட, அரசப் பொறுப்பை மங்கையர்க்கரசி ஏற்று ஆட்சி நடத்திய குறிப்புகள் உள்ளன. எனினும் முழு அரசப்பொறுப்பில் இந்தியாவின் அரச குலத்தில் இருந்த முதல் சுல்தானியப் பெண்ணரசி இரசியாதான் எனலாம்.
அரியணைக்கு வழி எளிதல்ல
அரசியான இரசியா உண்மையில் நல்ல முறையில் ஆட்சி நடத்தினார். போர்த்திறம், நிர்வாகம் ஆகியவற்றில் அவருக்குத் திறமை இருந்தது. அவருடைய ஆட்சியாண்டின் ஏழாம் மாதத்தில் ருக்னுதீன் டெல்லியை மீண்டும் பிடித்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் தனது ஆதரவாளர்களுடன் வர, இரசியா ஒரு படையை அனுப்பி ருக்நுதீனைத் தோற்கடித்து அவனைச் சிறைப்படுத்தினார். நவம்பர் 19, 1236இல் ருக்னுதீன் கொல்லப்பட்டான். இரசியா மக்களிடம், தான் சரியாக ஆட்சி நடத்தவில்லை என்று கருதினால் மக்கள் தன்னை ஆட்சியிலிருந்து தூக்கி எறியலாம், தான் அதற்கு உடன்படுவதாக அறிவித்தார்.
ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலத்தில் ஆண் உடையையும், போர் உடையும் தரித்தே பொதுஇடங்களிலும் அரசவையிலும் தோன்றினார். ஆனால் தொடக்கம் முதலே துருக்கியிலிருந்து வந்திருந்த மதகுருக்கள், இமாம்கள், இரசியாவின் ஆட்சியை விரும்பவில்லை. காரணத்தை ஊகிப்பது கடினமல்ல, அவர் ஒரு பெண், அவ்வளவுதான். இதனை அறிந்திருந்த இரசியா, இந்தியப் பகுதியைச் சேர்ந்த மதகுருமார்கள், இமாம்கள் குழுவை ஆதரித்து வளர்த்தெடுத்தார். அந்த முயற்சி பகையை மேலும் வளர்த்தது.
அவர்களோடு இரசியாவின் பிரதம அமைச்சராக இருந்த யூனாய்டியும் (Junaidi) இரசியாவின் ஒன்று விட்ட சகோதரர்கள் சிலரும் சேர்ந்துகொள்ள, அனைவரும் இணைந்து கலகக்காரர்கள்போல டெல்லியைப் பிடிக்கச் சுற்றி வளைத்தார்கள். தனக்கு உதவியாக ஆவாத்தின் நவாபைத் துணைக்கழைத்தார் இரசியா. உதவத் தனது படையுடன் கங்கையைக் கடந்து வந்த நவாபை, கலகக் கூட்டமைப்பு வழிமறித்துக் கைதுசெய்து கொன்றது.
துணிந்த இரசியா, டெல்லிக் கோட்டைக்கு வெளியே கலகக்காரர்களைத் தனது படையுடன் சந்தித்து மோதினார். ஆங்காங்கே ஏற்பட்ட கலவரம்போல சிறிது நாட்களுக்கு முடிவில்லாமல் அந்தக் கலகப் போர் நீடித்தது. இதற்கிடையில் கலகக்கூட்டமைப்பைச் சேர்ந்த இருவர் பிரிந்து வந்து இரகசியமாக இரசியாவைச் சந்தித்து அவரோடு சேர்ந்தனர். இதனை அறிந்த இரசியாவின் ஒன்றுவிட்ட சகோதரர்களும், யுனாய்டியும் தப்பி ஓடினர். அவர்களை விரட்டிப் பிடிக்க இரசியா முயன்றார். தனது ஒன்றுவிட்டச் சகோதரர்களைச் சிறைபிடித்த இரசியா, அவர்களுக்கு மரணத் தண்டனை அளித்துக்கொன்றார். யுனாய்டி மட்டும் தப்பியோடி இமாசலத்தின் பகுதிகளுக்குச் சென்று அங்கிருந்த கோட்டை ஒன்றில் தஞ்சம் புகுந்தார். தனது கடைசிக் காலம் வரை அவர் அங்கேயே இருந்து மடிய நேரிட்டது.
ஆட்சியும் மாட்சியும்
ஒருவழியாகச் சிறிது பலமாக ஆட்சியில் அமர்ந்த இரசியா, யுனாய்டியின் உதவியாக இருந்த முகசாபுத்தீன் என்பவரைத் தனது பிரதம அமைச்சராக்கினார். அவருக்குப் புதிய பட்டங்கள் அளித்துக் கௌரவப்படுத்தினார். தனது எதிரிகளாக இருந்து தன்னுடன் சேர்ந்த நண்பர்களுக்குச் சிறு படைத்தலைவர், வரிவசூல் அதிகாரி போன்ற பதவிகளை அளித்தார். அவ்வாறு பதவி அளிக்கப்பட்ட ஒருவர் இல்துமிசு. அவருக்கு இலாகூரின் வரிவசூல் அதிகாரி பதவியை அளித்திருந்தார் இரசியா. இல்துமிசின் அடிமைப் போர்வீரனான அல்துனியா என்பவனுக்கு பஞ்சாபின் சில பகுதிகளுக்கு வரிவசூலிக்கும் அதிகாரத்தைக் கொடுத்திருந்தார்.
தனது தந்தை சம்சுதீனின் காலத்தில் டெல்லி சுல்தானியத்துக்கு உட்பட்ட ஆட்சிப் பகுதியாக இருந்த ரத்னாம்பூர் கோட்டையின் அரசன், தனக்கு சுயஉரிமை இருப்பதாக அறிவிக்க, படையுடன் சென்று அதனை மீட்டார் இரசியா. 1237-38 காலவாக்கில் தொடக்கத்தில் தனது தந்தை பெயரில் நாணயங்களை வெளியிட்ட இரசியா, பின்னர் தனது பெயர், உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டார். இரசியா பள்ளிகள், பொது நூலகங்கள் போன்றவற்றை மக்களுக்கு அமைத்துக் கொடுப்பதில் ஆர்வம் காட்டினார். தன்னைப் பெண்களின் காவல் தூண் என்று பிரகடனப் படுத்திக்கொண்டார். அவரது பெயரில் வெளியிடப்பட்ட நாணயங்கள் அவரை ‘எக்காலத்துக்குமான இராணி’ என்ற வாசகங்களோடு கொண்டாடின.
தொடர்ச்சியாகத் தன்னைப் பலப்படுத்திக் கொண்டே இருந்த இரசியாவை அமீர்களாலும், மதகுருக்களாலும் சகித்துக்கொள்ள இயலவில்லை. அவர்கள் இரசியா பெண் என்பதால் தங்களுக்கு அடங்கி ஆட்சி செய்வார் என்று எதிர்பார்த்தார்கள். அது நடக்காதபோது துருக்கிய மதகுருமார்களும் இல்துமீசும் இணைந்து இரசியாவின் அதிகாரத்தை எதிர்த்தார்கள். அதோடு இரசியாவின் நம்பிக்கைக்கு உகந்த அடிமையும், போர்வீரனுமான யுகூட்டுடன் இரசியாவை இணைத்துப் பேசி களங்கப்படுத்தினார்கள்.
இல்துமீசை அடக்க இலாகூருக்குப் படையெடுத்துச் சென்றார் இரசியா. அவர் டெல்லியில் இல்லாதபோது அல்துனியாவும், மற்ற சில டெல்லி அதிகாரிகளும், உள்ளூர் மதகுருமார்களும் இணைந்து இரசியாவை ஒழிக்க ஒன்று சேர்ந்தார்கள். அவர்களது திட்டத்தை அறியாத இரசியா டெல்லிக்குத் திரும்பியபோது அல்துனியாவின் துரோகத்தைப் புரிந்துகொண்டார். புதிய கலகக்காரர்கள் கூடியிருந்த பஞ்சாபின் தபரகிண்டா பகுதிக்கு அவர்களை அடக்கச் சென்றார் இரசியா. அங்கு செல்லும்போது இரசியாவின் வலதுகரம்போன்ற போர்வீரனான யுகுட் என்பவரை அல்துனியாவின் கட்சி கொன்றது. ஓரிரு நாட்களில் இரசியா சிறைபிடிக்கப்பட்டார்.
சமரசம், விளைவு, மறைவு
டெல்லிக்குக் கொண்டுவரப்பட்ட இரசியாவைத் தொடர்ந்து அல்துனியா தனக்குப் பதவியோ அரசோ வரும் என்று எதிர்பார்த்தான். ஆனால் மதகுருக்கள் இணைந்து இல்துமிசின் ஒரு மகனை 1240இல் சுல்தானாக்கினர். வரிவசூல் செய்யும் அதிகாரி பொறுப்புகளைப் பல மதக்குருமார்கள் அந்தந்தப் பிரதேசங்களுக்கு ஏற்றவாறு பங்கிட்டுக் கொண்டனர். தனக்கு ஏதும் நன்மை கிடைக்காததைக் கண்ட அல்துனியா, இரசியாவைச் சிறை வைத்திருப்பதில் பயனில்லை என்று உணர்ந்தான்.
இரசியாவும் வாய்ப்பைப் பயன்படுத்தி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அல்துனியாவுடன் இணைந்து கொண்டார். 1240இல் செப்டம்பர் வாக்கில் இருவரும் திருமணமும் செய்துகொண்டனர். இருவரும் அரியானாவின் யாட் சமூகத்தினருடனும், சில இராசபுத்திரர்கள், விசுவாசிகளுடனும் இணைந்து, ஒரு படையை உருவாக்கி டெல்லி சுல்தானை எதிர்த்தனர். இல்துமீசின் மகனான சுல்தான் மைசூதீன் பகுராம், அல்துனியா-இரசியா கூட்டணிப்படையை எதிர்த்துப்போரிட்டு அக்டோபர் 14, 1240 அன்று அவர்களைத் தோற்கடித்தான். அவர்களது படை சிதறி ஓட, தப்பி ஓடிய இரசியாவை அப்பகுதியின் யாட் இனப் போர்வீரர்கள் சிலர் சேர்ந்து அக்டோபர் 15, 1240 அன்று கொன்றனர். அவரது அடக்கம் செய்யப்பட்ட இடத்தையோ, சான்றுகளையோ வரலாறு எங்கும் பதிவு செய்யவில்லை. ஆனால் டெல்லிக்கு அருகே பைத்தால் பகுதியில் அவரது மரணம் நடந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர்.
அவரது மொத்த ஆட்சிக்காலம் மூன்று ஆண்டுகள், ஆறு மாதங்கள், ஆறு நாட்கள்தான். தனது ஆட்சிக்காலத்தின் பெரும்பாலான நாட்களைப் போரில், தனது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவே இரசியா செலவழிக்கவேண்டி வந்தது. குத்புதீன் ஐபக்கின் பெயர்த்தியாகப் பிறந்து, இந்திய டெல்லி சுல்தானியாவின் ஒரே பெண்ணரசியாக ஆட்சியில் அமர்ந்த இரசியாவின் வாழ்வு இவ்வாறு நிறைவடைந்தது.
இந்தியாவின் கிட்டத்தட்ட முதலாவதும், சுல்தானியத்தின் முதல் பெண்ணரசியாகவும் வரலாற்றில் நிலைபெற்றார் இரசியா.
(தொடரும்)