நமக்கு இராசபுத்திர வீரன் இராணா சங்காவைப் பற்றித் தெரியுமல்லவா? தமிழகத்தில்கூட வரலாற்றுப் புத்தகங்களில் மேவாரின் இராணா சங்காவைப் படித்திருக்கிறோம். (ஆனால் இன்றைய மேவாரின் பள்ளிக் குழந்தைகள் மாமன்னன் இராசராசன் பற்றியோ, பேரரசன் இராசேந்திரன் பற்றியோ படித்திருப்பார்களா?!). மாகாராணா பிரதாப் சிங்கைப் பற்றியும் படித்திருக்கிறோம். இராணா சங்காவின் மனைவியும், மகாராணா பிரதாப் சிங்கின் பாட்டியுமான பெண்ணரசிதான் இராணி கர்ணாவதி.
மேவாரின் புகழ்பெற்ற மற்ற இராணிகளைப்போல கர்ணாவதியும் புகழ்பெற்றவர். மற்ற இராணிகள் இறந்ததைப்போல கர்ணாவதியும் தீப்பாய்ந்து இறந்தவர்.
கள வரலாறு
பாபர் 1526ஆம் ஆண்டு டெல்லியைக் கைப்பற்றினார். பாபர் முகம்மதியர். பாபருக்கும் முன்னர் டெல்லியை ஆண்டுகொண்டிருந்தது லோடி அரசகுலம். அது சுல்தானிய ஆட்சி. அந்த அரச குலத்தின் அப்போதைய கடைசி அரசன் இப்ராகிம் லோடி. லோடி குலத்துக்குள்ளேயே சகோதரச் சண்டைகள் இருந்தன. பாபர் ஆப்கனின் காபூலில் நிலைகொண்டிருந்தவர். தொடக்கத்தில் அவரது கண் இலாகூரிலும் பஞ்சாபிலும்தான் இருந்தது.
ஆனால் இப்ராகிம் லோடியின் உறவினரான ஆலம்கான் லோடி காபூலுக்குச் சென்று டெல்லிச் சுல்தானிய ஆட்சி பலவீனமாக இருப்பதாகவும், இந்தியாவை வெற்றிகொள்ள இதுவே தருணம் என்றும் உசுப்பேற்ற, பாபருக்கு டெல்லியைக் கைப்பற்றும் திட்டம் ஏற்பட்டது. இதெல்லாம் நடந்தது 1521 முதல் 1524 வரை.
ஆலம்கானுடன் சகோதரர்கள் சிக்கந்தர் லோடி, உறவினர் தௌலத்கான் லோடி போன்றோர் இணைந்து பாபரை அழைத்தனர். டெல்லியில் சுல்தானிய ஆட்சி அகற்றப்பட்டபின் அந்நகரைத் தங்களுக்கு பாபர் அளித்துவிட வேண்டும் என்பது ஒப்பந்த ஏற்பாடு. பஞ்சாபின் மத்தியப் பகுதி வரை பாபர் வைத்துக்கொள்ளலாம் என்று பேசி வைத்துக்கொண்டார்கள்.
முதலில் பாபர் சில முகம்மதிய மதகுருக்களை அனுப்பி டெல்லிப் பகுதியின் நிலவரத்தைப் பார்வையிட்டு வரச்செய்தார். அவருக்கு நம்பிக்கை பிறக்கவே படையெடுப்பு நிகழ்ந்தது. பாபர் ஏற்கெனவே 1504, 1518 ஆகிய ஆண்டுகளில் பஞ்சாபின் மீது படையெடுத்து வென்றும், நிலைகொள்ள முடியாமல் திரும்ப காபூலுக்கு மீண்டவர். 1523இல் ஆலம்கான் லோடி குழுவின் தொடர்பு ஏற்பட்டவுடன் என்ன செய்ய வேண்டும் என்ற தீர்மானம் பாபருக்கு வந்துவிட்டது. பிழையற்ற அந்தத் தீர்மானம்தான் டெல்லிச் சுல்தானிய அரசை டெல்லி முகலாய அரசாக மாற்றியது.
படை நடத்திவந்த பாபரிடம் டெல்லியைத் தனக்குத் தந்துவிட வேண்டும் என்று ஆலம்கான் நினைவுபடுத்த, மறுத்து விடுகிறார் பாபர். எனவே பிரிந்துகொண்ட ஆலம்கான், தானே தனியாகப் படையுடன் சென்று டெல்லி இப்ராகிம் லோடியைத் தாக்க நினைத்துத் தோற்றுப்போகிறார். ஆலம்கானுடன் சேர்ந்து பாபருடன் முரண்ட தௌலத்கான் இலாகூரில் போய் நிலைகொள்ள, இலாகூருக்குச் சென்ற பாபர் தௌலத்கானை வென்று இலாகூர், பஞ்சாப் பிரதேசங்களில் அசைக்க முடியாத சக்தியாக வேரூன்றினார். தொடர்ந்த 1526இன் புகழ்பெற்ற முதல் பானிப்பட்டுப் போரில் லோடியின் குலத்தை முடித்து வைத்த பாபர், டெல்லியில் முகம்மதிய ஆட்சியை நிர்மாணித்தார்.
அந்தக் கணத்தில்தான் இராசபுத்திர அரசர்களுக்கும் பாபரை டெல்லியில் வேரூன்ற விட்டுவிடக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. டெல்லியை சுல்தானிய ஆட்சியிடம் இருந்து மீட்க வேண்டும் என்ற எண்ணம் இராசபுத்திரர்களுக்கும், அரியானாவைச் சேர்ந்த யாட்டுகளுக்கும் தொடக்கம் முதலே இருந்தது. காரணத்தை 300 ஆண்டுகால வரலாற்றைப் பார்த்தால் எளிதில் தெரிந்துவிடும்.
நாடு பிடிக்கும் ஆசையோடு, பெண்களுக்காகவும் சுல்தானிய ஆக்கிரமிப்புகள் டெல்லியைச் சுற்றியிருந்த அரசுகளில் நெடுங்காலம் நடந்துகொண்டே இருந்த காரணத்தால், இயல்பான வெறுப்பும் அவநம்பிக்கையும் டெல்லிச் சுல்தானிய ஆட்சியின் மேல் இந்து சமயத்தைப் பின்பற்றும் அரசப் பகுதிகளில் ஏற்பட்டிருந்தது. அதனால் பாபரின் ஆட்சி ஏற்பட்ட உடனேயே அதனைக் கலைத்துவிட வேண்டும் என்ற தீவிரமும் இராசபுத்திர அரசர்களிடம் ஏற்பட்டது. இராணி கர்ணாவதியின் கணவரும் மேவாரின் அப்போதைய இராணாவுமான இராணா சங்கா அந்தக் கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கினார்.
ஏனெனில் லோடியின் டெல்லிச் சுல்தானிய ஆட்சிக் காலத்தில் இராசபுத்திரர்கள் வலுவாகவும், மேவாரின் இராணா சங்கா வலிமை வாய்ந்த அரசராகவும் இருந்தார். பாபர் காபூலிலிருந்து படையெடுத்து வந்திருக்காவிட்டால், சங்காவே டெல்லியைக் கைப்பற்றும் எண்ணம் கொண்டிருந்ததாகவும் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். இன்னும் சில வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி சங்காவுக்கும் பாபருக்கும் லோடியின் டெல்லிச் சுல்தானிய வம்சத்தை வீழ்த்துவதில் பேச்சுவார்த்தைகூட நடந்திருக்கலாம் என்று கருதுகோள் இருக்கிறது.
மேலும் பாபர் தனது முன்னோர் தைமூர்போல் படையெடுப்பு, கொள்ளைக்குப் பின் காபூலுக்குத் திரும்பிவிடக்கூடும் என்ற எண்ணம் வட்டாரத்து அரசர்களிடம் இருந்திருக்கலாம். ஆனால் பாபர் இந்தியப் பகுதியில் ஓர் அரசை நிலைநிறுத்தும் திட்டத்துடன் வலுவாக டெல்லியில் அமர்ந்தார்.
மேவாரின் முயற்சிகள் பற்றிக் கேள்வியுற்ற பாபரிடம் இருந்து ஒரு போர்ப்படை பதிலாக வந்தது. பாயணா என்ற இடத்தில் நடந்த போரில் முகலாயப் படையை இராசபுத்திரர்களின் படை பின்வாங்கச் செய்ததும் நடந்தது. அப்துல் அசீசு என்ற தளபதியின் தலைமையில் வந்த பாபரின் படை தோற்கடிக்கப்பட்டதும் வேறு ஒரு படை மீண்டும் வந்தது. பாயணா என்ற இடத்தில் நடந்த அந்தப் போரில் பாபரின் பீரங்கிகள், போர்க்கருவிகள், தந்திரங்கள் ஒன்றிணைந்து வெற்றிபெற, சங்கா தோற்று மறைந்தார்.
திணிக்கப்பட்ட தலைமையும், மறைவும்
இராணா சங்காவுக்கும் கர்ணாவதிக்கும் இராணா விக்கிரமாதித்தியன், இராணா உதயசிங் என்று இரண்டு புதல்வர்கள் பிறந்தனர். இருவரில் மூத்தவரான இராண விக்கிரமாதித்தியாவே பட்டத்துக்கு வந்தாலும், பொறுப்பு அரசியாக கர்ணாவதி ஆட்சி செய்தார். விக்ரமாதித்யாவுக்கு அப்போது சிறுவயது என்பதாலும், அவர் இயல்பிலேயே பலவீனமானவர் என்பதாலும் இந்த ஏற்பாடு.
டெல்லி சுல்தானியர்களின் தொல்லை ஒருபுறம் என்றால் குஜராத் பகுதிகளை அப்போது ஆண்டுகொண்டிருந்த பகதூர் சா வம்சத்தவர்களுக்கும் இந்து சமய அரசப் பகுதிகள் மீது சச்சரவுகள் தொடர்ந்தன. அவ்வப்போது இவர்களுக்கிடையில் சண்டை நடந்துகொண்டே இருந்தது. ஏற்கனவே பகதூர் சா ஒருமுறை படையெடுத்துச் சென்று சித்தூரைக் கொள்ளையிட்டிருந்தார். எனவே இராணி கர்ணாவதிக்கு பகதூர் சாவின் மீது அச்சம் இருந்தது.
குஜராத்திய பகதூர் சா படையெடுத்து வந்தபோது இராணி கர்ணாவதி இராசபுத்திர சிசோடியாக்களின் (சிசோடியா என்பது இராசபுத்திர அரசகுலத்தின் பெயர்) மானத்தைக் காக்க அனைவரும் ஒன்றுதிரண்டு எதிர்க்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள, தோல்வி பயம் உந்தித் தள்ளினாலும் அனைவரும் ஒன்றுதிரண்டு பகதூர் சாவை எதிர்த்தார்கள். ஆனால் இராசபுத்திர வீரர்கள் இளவரசர்கள் விக்கிரமாதித்யாவும், உதய சிங்கும் பண்ட் என்ற இடத்திலிருந்த கோட்டைக்குத் தப்பிச் சென்றுவிட வேண்டும் என்றும், போரில் தோற்றால் இராசபுத்திரக் குலத்தைக் காக்க அவர்கள் உயிர்தப்புவது அவசியம் என்று சொல்ல, அதற்கு கர்ணாவதி ஒப்புக்கொண்டார்.
தனது நம்பிக்கைக்கு உகந்த பன்னா தாய் என்ற சேடிப்பெண்ணுடன் தன் இரு புதல்வர்களையும் அனுப்பி அவர்களைப் பண்ட்டில் இரகசியமாக இருக்கும்படிச் செய்தார். 1535இல் நடந்த இந்தப் போரில் சித்தூர் வீழ்கிறது. தாம் சிறைப்படுவதைத் தடுக்க அரச குலப் பெண்களோடு தீப்புகுந்து தற்கொலை செய்துகொள்கிறார் கர்ணாவதி.
பகதூர் சா இரண்டாவது முறையாக சித்தூரைக் கொள்ளையடிக்கிறார். ஆனால் பகதூர் சாவாலும் சித்தூரில் நெடுங்காலம் இருந்து அரசாள இயலவில்லை. 1536இல் அவர் குஜராத்துக்குத் திரும்ப, சிசோடியாக்கள் மீண்டும் மேவாரைக் கைப்பற்றுகிறார்கள்.
பின்செய்திகள்
மீண்டும் மேவாரின் அரசனாக விக்ரமாதித்யா அமர்ந்தாலும், அவனுக்கிருந்த குணக் குறைபாடுகள் அவனை அனைவருக்கும் எதிரியாக்கின. ஒருமுறை அரசவையில் மூத்த அமைச்சர் ஒருவரை அவன் தாக்கிவிட, அனைவரும் ஒன்று சேர்ந்து அவனைச் சிறையில் வைக்கிறார்கள். இராணா சங்காவின் ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவன் அரசைக் கைப்பற்ற விக்கிரமாதித்யாவைக் கொல்கிறான்.
உதய்சிங்கையும் கொல்ல முற்பட, பண்ணாதாயின் உதவியால் உதய் சிங் மீண்டும் பண்ட்டுக்குத் தப்பிச் சென்று மறைந்து வாழ்கிறான். உதய் சிங்கைக் காப்பாற்றத் தன்னுடைய சொந்த மகனை உதயசிங் என்று பன்னாதாய் முன்னிறுத்த, அவன் உதய்சிங் என்று நினைத்துக் கொல்லப்பட்டான்.
பண்டியில் மறைந்து வாழ்ந்த உதயசிங், பின்னாட்களில் 18 பெண்களை மணந்து 24 குழந்தைகளுக்குத் தந்தையாகிறான். உதயசிங் ஆட்சியில் நிறுவப்பட்ட நகரம்தான் உதய்பூர். உதய்சிங்கின் முதல் மகன்தான் மேவார் ராணாக்களில் மிகவும் புகழ்பெற்ற ஒருவனான மகாராணா பிரதாப் சிங். மேவாரின் இரண்டு முக்கியமான இராணாக்களோடு தொடர்புடையதாகவும், இக்கட்டான காலகட்டத்தில் மேவாரைக் காத்து நின்ற கடமைக்காகவும் இராணி கர்ணாவதி நினைவுகூரப்படுகிறார்.
(தொடரும்)