Skip to content
Home » இந்திய அரசிகள் # 16 – இராணி நாயகிதேவி (ஆட்சியாண்டு 1175 -1178)

இந்திய அரசிகள் # 16 – இராணி நாயகிதேவி (ஆட்சியாண்டு 1175 -1178)

Rani Naiki Devi

இந்தியப் பகுதிகளில் சுல்தானிய ஆட்சியை நிறுவியது முகம்மது கோரி. அதனை நிலைகொள்ள வைத்தது குத்புதீன் ஐபக். கோரியின் படையெடுப்புகளின் நோக்கம் கொள்ளையாகவே இருந்தது.

1192ஆம் ஆண்டு நடைபெற்ற போரில்தான் முகம்மது கோரி டெல்லியைக் கைப்பற்றினார். அதற்கு முந்தைய காலத்தில் 1178இலிருந்து 1192 வரை, பலமுறை இந்தப் படையெடுப்பு இங்குமங்குமாக நடைபெற்றது. 1175இல் முல்தான், 1178இல் பஞ்சாப், 1180இல் பெசாவர், 1185இல் சியால்கோட், 1192இல் டெல்லி என்று பல இடங்களில் தாக்குதல், கொள்ளை, ஒரு சிறு படையை அங்கு நிறுத்திவிட்டு மீண்டும் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பிவிடுதல் என்கிற முறையிலேயே கோரியின் போர்கள் இருந்தன.

முகம்மது கோரியின் இந்தக் கொள்ளை வழக்கம் அவருக்கு முன்னர் இந்தியப் பகுதியைப் பலமுறை கொள்ளையடித்த முகம்மது கஜினியின் வழக்கத்தை ஒட்டியது. ஆனால் கோரியின் எண்ணத்துக்குப் பலத்த அடி ஒரு முறை விழுந்தது. கோரியின் படை குறுக்கிலும் நெடுக்கிலுமாகப் பிளக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டது. அதனைச் செய்து காட்டியவர் ஒரு பெண். குஜராத்தை ஆண்டு கொண்டிருந்த அந்தப் பெண் ஒரு வரலாற்று நாயகி. அவரது பெயரும் நாயகிதான்.

வாங்கிய அடியில் தனது வாழ்க்கை முழுவதிலும் குஜராத் நோக்கிவரக் கோரி அஞ்சியிருக்க வேண்டும். கோரியின் வாழ்நாள் வரை, அவரது அடிமைகள் டெல்லியைக் கைப்பற்றி ஆண்டபோதும் குஜராத்தில் கோரி திரும்ப நுழையவில்லை. கோரியை அவ்வாறு மிரளச் செய்த, குஜராத்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த சாளுக்கியக் குலத்தைச் சேர்ந்த அரசி நாயகிதான் இந்தக் கட்டுரையின் நாயகி.

தோற்றம் இளமை

நாயகி தேவியின் இளமைப் பருவம் குறித்த உறுதியான தகவல்கள் இல்லையெனினும், மேருதுங்கர் எழுதிய பிரபந்தசிந்தாமணி என்னும் வரலாற்று நூலின்படி நாயகி தேவி, ஒரு பரமார்தி குல அரசரின் மகள். கடம்பம் என்ற நாட்டை ஆண்டுகொண்டிருந்த மகாமண்டலேசுவரர் பரமார்த்திதேவர் அவரது தந்தை. இளவயதிலேயே குதிரை ஏற்றம், ஆயுதங்களைக் கையாளும் போர்த்திறம், விற்போர்த்திறம் என்று பல திறன்களைக் கற்றுக்கொண்டு அவற்றில் கூர்மையான திறம் பெற்றிருந்தார்.

இந்நாளைய குஜராத், அந்நாளைய சாளுக்கிய தேசத்தின் அரசராக இருந்த சோலன்கி குலத்தைச் சார்ந்த அசயபாலர் என்னும் அரசருக்கு மணப்பெண்ணானார் நாயகி தேவி. அரசுரிமைக்கு வந்த நான்கு ஆண்டுகளில் அசயபாலர் காலமாகிவிட்டார். இதற்குப்பின் அவரது இரண்டு வயது மகன் முளராசர் சாளுக்கியத் தேசத்தின் அரசரானார். ஆட்சிப் பொறுப்பு அரசியாக நாயகிதேவி பொறுப்பேற்றார்.

கோரியை வென்ற நாயகிதேவி

இந்த நேரத்தில் முகம்மது கோரி சிந்து நதியைக் கடந்து முல்தான், உச் பகுதிகளைப் படையெடுத்துக் கொள்ளையிட்டு வென்றிருந்தார். இரண்டாண்டுகள் கழித்து தார்பாலைவனத்தைக் கடந்து சோலங்கி குலத்துச் சாளுக்கிய அரசின் பகுதிக்குள் படையெடுத்து நுழைந்தார்.

இந்நாளைய ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மௌண்ட் அபு என்ற பகுதி அந்நாளில் கயதாரா என்று அழைக்கப்பட்டது. அந்த இடத்தில் நடந்த போரில் குஜராத்திய இராசபுத்திர அரசரான முளராசாவுக்கும், முகம்மது கோரிக்கும் நடைபெற்ற போரில் கோரி, வகையும் தொகையுமாகத் தோற்கடிக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டார். அந்தப் போரில் தனது படைகள் அனைத்தையும் இழந்த கோரி, சில வீரர்களோடு உயிர்தப்பினால் போதும் என்று பின்வாங்கி ஓடினார்.

ஜான்சி இராணி இலக்குமி பாயிபோலவே நாயகி தேவியும் தனது சின்னஞ்சிறு பாலகனைப் போர் உடையில் சுமந்துகொண்டு போர் செய்ததாகக் கர்ணபரம்பரைக் கதைகள் இன்றுவரை நாயகிதேவியின் புகழ்பாடுகின்றன.

வரலாற்று ஆசிரியர் அசோக் குமார் மசூம்தார் எழுதிய நூலில் அந்நாளைய சாளுக்கிய அரசரான இரண்டாம் பீமாவோடு நடந்த போரில் முகமது கோரி தீர்க்கமாகத் தோற்கடிக்கப்பட்ட வரலாற்றைப் பதிவு செய்கிறார். இரண்டாம் பீமாஅரசன்தான் முளராசா என்று ஒட்டியும் வெட்டியும் பல தகவல்கள் உள்ளன. எவ்வாறிருப்பினும், 1178 காலகட்டத்தில் அசயபாலரின் மனைவியான நாயகி தேவியே குஜராத்தின் சாளுக்கிய அரசத் தலைமையில் இருந்தார் என்பதையும், கோரியைச் சாளுக்கிய இராசபுத்திர அரசு போரில் தோற்கடித்தது என்பதையும் மறுக்கவியலாது.

என்ன நடந்தது போரில்?

முல்தானையும், உச் (இன்றைய பாகித்தானின் கிழக்குப் பஞ்சாப் பகுதி) பகுதியையும் வெற்றி கொண்ட நிலையில், தார் பாலைவனத்தைக் கடப்பது இயலாது என்று நினைத்து சிறிது காலம் எடுத்துக்கொண்டார் கோரி. இரண்டாண்டுகளில் அப்பகுதியின் அரசியல் நிலையை அலசியதில், சாளுக்கிய அரசகுலத்தில் அரசன் இல்லாத நிலை தெரியவந்தது. மேலும் இளவரசன் சிறுவயதினர் என்றும், அரசின் தலைமையில் ஒரு பெண்தான் இருந்தார் என்பதையும் இணைத்துச் சிந்தித்த கோரி, தனது படையின் எண்ணிக்கையும் அதிக அளவில் தம்மிடம் குதிரைப்படையும், ஆயுத பலமும் இருந்ததைக் கருதி இந்தப் போர் வெகு இலகுவாக முடிந்து விடும் என்று எண்ணினார்.

கோரியின் படைகள் சாளுக்கியத்தின் தலைநகர் அனில்வாராவை நோக்கி முன்னேறிச் சென்றன. நாயகி தேவி சாளுக்கியத் தேசத்தைச் சுற்றியிருந்த அரசர்களிடம் உதவி கோரியிருந்தார். சொல்லிக் கொள்ளும்படியான உதவிகள் ஏதும் வந்து சேர்ந்திராத நிலையில் கயராயா அல்லது கடரகடா என்று அழைக்கப்பட்ட இன்றைய மௌண்ட் அபுவை ஒட்டிய இடத்தைப் போர்க்களமாகத் தேர்ந்தெடுத்தார் நாயகி தேவி.

அந்த மலைப்பாங்கான இடம் கோரியின் படைகளின் தாக்குதல் வேகத்தைக் குறைக்கும் என்று அனுமானித்திருந்தார் நாயகி தேவி. எனினும் போர் தொடங்குவதற்கு முன்னர் சாளுக்கியத்தின் படைகள் சிறிது ஊசலாட்டத்துடனேயே இருந்தன.

கோரியின் படையானது தேர்ந்தெடுத்த கூலிப்படை. போர்திறம் மிக்க சமவெளி நாடோடி வீரர்களைக் கொண்ட படை. மத்திய ஆசியாவின் தேர்ந்தெடுத்த குதிரைகள் நிறைந்த அந்தப் படை தாக்குதல் வலிமை நிறைந்தது. அதோடு சுல்தானிய மதம் சார்ந்த வெறிக்கூட்டு, கொள்ளைவேட்கை இவற்றால் மேலும் உத்வேகம் கொண்டிருந்தது அந்தப் படை. அவர்களது நோக்கம் இயன்றவரை கொள்ளை, இஸ்லாமியர் அல்லாத அரசுகளை அழித்துத் துடைத்தொழித்தல், பிறகு அங்கு தனது துணைப்படைகளைத் தனது தேர்ந்த படைத்தலைவர்கள், அடிமைகள் தலைமையில் நிறுவுவது என்பதாக இருந்தது.

போர் தொடங்குவதற்கு முன்னர் அரசி நாயகி தேவிக்கு ஒரு தூதனை அனுப்பினான் கோரி. இராணி தம்மிடம் சரணடைந்துவிட்டால், தாம் சாளுக்கிய அரசைத் தாக்கப்போவதில்லை என்றும், இராணி தம்மிடம் சரணடையலாம் என்றும் தூதன் மூலம் அறிவித்திருந்தான் கோரி. தனது முழுப் போர் உடையில், தனது சிறு புதல்வனையும் சுமந்துகொண்டு கோரியின் படைமுகாம் நோக்கித் தனியாகப் போனார் நாயகி தேவி.

தனது பேச்சைக் கேட்டுத் தன்னிடம் சரணடைய இராணி வருகிறாள் என்றெண்ணி அசட்டையாக இருந்தான் கோரி. ஆனால் பின்னணியில் வேறொரு திசையில் முழு ஆயுதங்கள் அணிந்த இராசபுத்திர யானைப்படை, அந்தக் கணவாயின் இன்னொரு வழியாக வரிசையாக அரண் போல் நுழைந்தது. அந்த வரிசையான யானைப்படையைக் கண்ட கோரியின் படை திகைத்தது. இராணி நாயகி தேவியின் கையசைப்பில் இயங்கிய யானைப்படை கோரியின் படையை ஊடறுத்துத் தாக்கியது.

அச்சமும் திகைப்பும் ஒன்று சேர கோரியின் படை கலகலத்தது. கூடவே அடித்துப் பெய்த மழையில் படை நசநசத்தது. யானைப்படையோ மேலும் மேலும் என்று அலைந்து கோரியின் படையை அழித்தொழித்தது.

தனது மகனையும் சுமந்து கொண்டு, தன் வழியில் தென்பட்ட ஒவ்வொரு கோரி வீரனையும் கொன்றொழித்தார் நாயகிதேவி. இராணியின் போர்வேகத்தையும் உத்வேகத்தையும் கண்ட இராசபுத்திர சாளுக்கியப் படை, இன்னும் வேகம் பெற்று, வெறி கொண்டு தாக்கியது. கோரியின் படை சிதறடிக்கப்பட்டது. ஒன்றிரண்டு மெய்க்காப்பாளர்களோடு தனது உயிரைக் காத்துக்கொள்ளக் கோரி ஓடி மறைய வேண்டியிருந்தது.

இந்திய வரலாறு மாறியிருக்கக்கூடும்…

சிறிது சிரத்தையெடுத்துச் சாளுக்கிய அரசியான நாயகி தேவி கோரியை விரட்டிச் சென்று கொன்றிருந்தால், இந்திய வரலாறு வேறு விதமாக மாறியிருக்கக் கூடும். வாங்கிய அடியும் வலியும் நிரந்தரமாக மனதில் தங்கிப்போக, குஜராத்தின் மீது படையெடுக்கும் விருப்பத்தையே பின்னர் எப்போதும் கொண்டிருக்கவில்லை முகம்மது கோரி. பின்னர் வட இந்தியாவுக்குள் நுழைய கைபர் போலன் கணவாய் வழியைக் கைக்கொண்டார் கோரி. தார்பாலைவனம் – குஜராத் வழியைக் கோரி சிந்திக்கவே இல்லை.

தான் மிக மிக அற்பமாக எண்ணியிருந்த ஒரு பெண்ணின் கையில் பெற்ற தோல்வி முகம்மது கோரியின் தற்பெருமையின் மீது ஏற்பட்ட மிகப்பெரிய அடியாக இருந்தது. கயராயாவில் நடைபெற்ற போரில் இராணி நாயகி தேவி கோரியை எதிர்த்து நேரடியாகச் சண்டையில் ஈடுபட்டார் என்றும், அவரது நீண்டவாள் ஏற்படுத்திய காயங்களின் தாக்கத்தைப் பார்க்கக்கூட நேரம் இல்லாத நிலையில் உயிர் தப்பிக்கப் பின்வாங்கி ஓடிய கோரி, மால்வாவுக்கு ஓடிய பின்னர்தான் தனது காயங்களின் நிலையை நிதானித்துப் பார்த்தார் என்றும், வட இந்திய நாட்டார் வழிப் பாடல்கள் அந்த நிகழ்வைச் சித்தரிக்கின்றன.

ஆனால் கோரியின் காலத்துக்குப் பிறகு, பின்னாட்களில் சுல்தானிய ஆட்சியின் கீழ் குஜராத்தியைப் பகுதிகளும் சேர்ந்தன என்பது ஒரு முரண். இந்திய வரலாற்றையே மாற்றியிருக்கக்கூடிய திறனைப் பெற்றிருந்த பெண்ணரசியான நாயகி தேவி, சுல்தானிய முகம்மதிய கோரியையே வென்று, நடுங்கச்செய்து ஓட வைத்த இராணி என்ற புகழ்ப்பெயரைப் பெற்று வரலாற்றில் நிலைக்கிறார்.

(தொடரும்)

பகிர:
முருகுதமிழ் அறிவன்

முருகுதமிழ் அறிவன்

முருகுதமிழ் அறிவன் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புதுப்பட்டியில் பிறந்தவர்; தகுதியால் பட்டயக் கணக்கரான இவர் மென்பொருள் புலத்தில் நிதித்துறை ஆலோசகராக சிங்கப்பூரில் பணி செய்கிறார். தமிழ்மொழி, இலக்கியம், எழுத்து இவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட இவர், இணையம் மற்றும் இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். இவரது இரு நூல்கள் வெளி வந்துள்ளன. தொடர்புக்கு asnarivu@gmail.com.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *