அவந்திபாய் லோதி முதல் இந்திய விடுதலைப் போர்க்காலத்து அரசி. அவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இன்றைய தின்டோரி பகுதியின் அரசியாக இருந்தவர். அந்நாட்களில் அவ்வட்டாரத்தின் பெயர் இராம்கார். சிப்பாய்க்கலகம் என்றழைக்கப்பட்ட முதல் இந்திய விடுதலைப்போர்க் காலத்தில் வீறுகொண்டெழுந்து கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகளை எதிர்த்து நின்றவர் அவந்திபாய். வரலாற்றின் பக்கங்களில் பரவலாகப் பதிவு செய்யப்படாவிட்டாலும், வட்டாரத்தின் நாட்டுப்புறக் கதைப்பாடல்களில் இராணி அவந்திபாயின் வீரக்கதை பிரபலமான ஒன்று.
பிறப்பு இளமை
அவந்தி பாய் மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் உள்ள மனகேகடி என்ற ஊரில் 1831ஆம் ஆண்டு ஒரு நிலக்கிழாரின் மகளாகப் பிறந்தார். அவரது தந்தையின் பெயர் சுசுகர் சிங். வட்டாரத்தின் அரசராக இருந்த லோதி குலத்தைச் சேர்ந்த விக்கிரமாதித்ய ராசாவுக்கு மனைவியானார் அவந்தி பாய். அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளின் பெயர்கள் கன்வர் அமன் சிங், கன்வர் செர் சிங் ஆகியவை ஆகும்.
ஆட்சிப் பொறுப்பும் கிளம்பிய எதிர்ப்பும்
1850இல் அவந்திபாய்க்கு 19 வயதிருக்கும்போது அரசர் விக்கிர்மாதித்யாவின் தந்தை இலக்குமண சிங் காலமானார். தந்தைக்குப் பின் அரசரான விக்கிரமாதித்யாவுக்கும் சிறிது நாட்களில் உடல் நோயுற்றது. அரசி அவந்தி பாய் பொறுப்பேற்று அரச கடமைகளைச் செய்யத் தொடங்கினார். அவரது இரண்டு மகன்களும் சிறுவர்கள் என்றும், இராணியே அரச கடமைகளைச் செய்கிறார் என்றும் கேள்வியுற்ற கிழக்கிந்திய கம்பெனிக்கு மூக்கில் வியர்த்தது.
இராம்கார் அரசைக் ‘கண்காணிக்க’ முகமது அப்துல்லா என்பவரை அனுப்பி வைத்தது கிழக்கிந்திய கம்பெனி அரசு. 1848இல் ஆளுநராக இருந்த டல்கவுசி பிரபு வரைந்தளித்த வாரிசுரிமை அரசுகளுக்கான சட்ட விதிகள் அரசியிடம் செப்டம்பர் 13ஆம் நாள் 1851இல் நீட்டப்பட்டன. அந்தச் சட்டத்தின்படி ஆளும் அரசர் இறந்தாலோ, அரச கடமைகளைச் செய்ய இயலாத நிலை ஏற்பட்டாலோ, அவருக்கு இருக்கும் வாரிசுகள் உரிய வயதை அடையாதவர்களாக இருந்தால் கிழக்கிந்திய கம்பெனி அரச நிர்வாகத்தை எடுத்துக்கொள்ளும். அவர்களே இயற்றிக்கொண்ட நாடுபிடிப்பதற்கான சட்டம் இது. சிறிது சிறிதாக அந்த அரசுகள் விழுங்கப்படும்.
அந்த நாட்களில் மக்களின் சராசரி வாழ்நாள் 40 வருடங்களுக்குள் இருந்த காலம். அரசர்கள் கேட்பாடற்ற நுகர்வு, பெண்மோகம் போன்ற பல காரணங்களால் சிறு வயதில் இறந்துபோவது பரவலாக நடந்த ஒன்று. உரிய வயதில் வாரிசுகள் இல்லை என்ற நிலையில் உள்ள அரசுகளை எல்லாம் கபளீகரம் செய்ய ஏற்படுத்தப்பட்டதுதான் இந்த வாரிசு உரிமைச் சட்டம். இந்த அடிப்படையில் பல அரசுகள் கிழக்கிந்திய கம்பெனியால் பிடிக்கப்பட்டன.
பிரித்தானிய கம்பெனி அரசின் இந்த ஆக்கிரமிப்பு முயற்சியைக் கடுமையாக எதிர்த்தார் அரசி அவந்தி பாய். ‘கண்காணிக்க’ அனுப்பப்பட்ட முகமது அப்துல்லாவைத் தனது பகுதியிலிருந்து நாடுகடத்தி, அவரை வெளியேறுமாறு உத்தரவிட்டார். இந்தக் குழறுபடிகளுக்கிடையில் அரசர் காலமானார். அரசி அவந்தி பாய் முழு அரசப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.
அப்போதுதான் 1857, மே மாதத்தில் முதல் விடுதலைப் போர் கிளர்ந்தது. ஒவ்வொரு கிராமமாகக் கலகத்தின் செய்திகள் பரவின. நாடு முழுவதிலும் பிரித்தானிய ஆட்சியை விரட்டி விடும் வேகம் எழுச்சி பெற்றது. அந்த எழுச்சிக்கு, சபல்பூர் வட்டாரத்தின் விடுதலைப் போர் ஒருங்கிணைப்புக்கு, கோண்டவானா பிரதேசத்தின் அரசராக இருந்த சங்கர் சா என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அந்த முயற்சியில் தன்னையும் இணைத்துக் கொண்ட அரசி அவந்திபாய், போராட்டத்துக்காக ஓர் ஒருங்கிணைப்பு மாநாடு நடத்துவதற்காக வட்டாரத்தின் அரசுகளை ஒருங்கிணைத்து அழைப்பு விடுக்கும் பணியை எடுத்துக்கொண்டார். புதியமுறையில் சிந்தித்த அரசி அவந்தி, கண்ணாடி வளையல்கள் நிரம்பிய ஒரு பெட்டியையும், தனது கைப்பட எழுதிய ஒரு கடிதத்தையும் வட்டாரத்தின் அண்டைப்புற அரசர்களுக்கு அனுப்பினார்.
நாட்டின் இறையாண்மையைக் காக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அந்தக் கடிதம், அந்த நோக்கத்துக்காக எடுக்கப்படும் முயற்சிகளுக்குக் கைகொடுத்து இணையும்படி வேண்டிக் கேட்டுக்கொண்டார். அதேசமயத்தில், அவர்களோடு இணைய விருப்பமில்லாதவர்கள் இணைக்கப்பட்ட வளையல் பெட்டியைப் பரிசாகப் பெற்று அணிந்து கொண்டு அரண்மனைக்குள் ஓய்வெடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
இறையாண்மையை வலியுறுத்தி வேண்டிக் கொண்ட அந்தக் கடிதத்தின் கடைசிப் பகுதியில் இணைந்திருந்த கிண்டல் சுறுசுறுப்பாக வேலைசெய்தது. வட்டாரத்தின் ஏறக்குறைய அனைத்து அரசர்களும் முதல் விடுதலைப் போரில் இணைந்தார்கள்.
போரும் வெற்றியும்
ஒருபுறம் மன்னரது மரணம், மறுபுறம் ஆதரவு வேண்டி நிற்கும் இரு பாலகப் பையன்கள். இரண்டுக்கும் இடையில் நாட்டைக் காக்கும் பொறுப்பு. போதாதற்கு பிரித்தானிய அரசின் கழுகுப் பார்வையும், நாட்டைக் கபளீகரம் செய்யும் முயற்சியும். இந்தச் சூழலில் தனக்கும் நாட்டுக்கும் எது பயன்தரும் என்று தீர்மானிப்பதிலும், எதில் உன்னதம் நிரம்பியிருக்கிறது என்று தீர்மானிப்பதிலும், எது வரலாற்றில் தனக்குரிய பங்கை வழங்கும் என்பதை அறிந்து கொள்வதிலும் இராணிக்கு எந்த வித ஐயமும் ஏற்படவில்லை.
தனது பங்குக்கு ஏறக்குறைய 4000 வீரர்கள் இணைந்த தீரமிக்கப் படையைத் திரட்டி பிரித்தானிய அரசை எதிர்த்தார் அரசி அவந்திபாய். மாண்ட்லா பகுதியில் அப்போதைய கம்பெனி அரசின் துணைக் கண்காணிப்பாளராக வாடிங்டன் பிரபு இருந்தார். அவருக்குக் கீழிருந்த படை அரசியின் தீரமிக்கப் படையை எதிர்கொள்ள வேண்டிவந்தது.
அவந்தி பாய் போர்த்தந்திரங்களிலும், படைகளை நடத்துவதிலும், தானே முன்னின்று போரிடுவதிலும் காட்டிய நுணுக்கமும் தீரமும் அவரது படையை முழு உச்சபச்ச சக்தியுடன் போராடத் தீரமளித்தது. அரசியின் உக்கிரமான தாக்குதலில் பிரித்தானியப் படை சின்னாபின்னமானது. மாண்ட்லாவில் இருந்த கம்பெனி அரசின் முகாமை விட்டுவிட்டு அவர்கள் உயிர்தப்பினால் போதும் என்று ஓடவேண்டி வந்தது. அரசியின் படை போரில் வெற்றிக்கொண்டு மீண்டது.
தோல்வி தந்த அடி பிரித்தானிய அரசை வெறி கொள்ள வைத்தது. ஆனால் எப்போதுமே அடுத்துக் கெடுக்கும் வழிமுறையைக் கடைப்பிடிக்கும் வழமை கொண்ட பிரித்தானிய அரசு, வட்டாரத்தின் இன்னொரு அரசான ரேவா அரசோடு உடன்படிக்கை செய்துகொண்டு அந்தப் படையையும் இணைத்துக் கொண்டு இராம்காருக்கு படையெடுத்தது. இராணி அவந்தி பாயை அழித்தொழிப்பதே நோக்கம்.
வெற்றி அல்லது வீரமரணம்
பெரும்படையுடன் வந்த பிரித்தானியர்களிடம் தாம் சிக்கக் கூடாது என்றும், இராம்கார் மக்கள் துன்பமடையக்கூடாது என்றும் கருதிய இராணி அவந்திபாய், இராம்கார் அரண்மனையை விட்டு நீங்கி தனது நம்பிக்கைக்குக்கந்த வீரர்களோடு அருகிலிருந்த மலைப் பகுதிக்குச் சென்று தங்கினார். இராணியைப் பிடிப்பதுதான் நோக்கம் என்று வந்த கம்பெனிப்படை தேவயற்று இராம்கார் பகுதியைக் கொள்ளையடித்துத் தீவைத்து அழிவுண்டாக்கியது.
எப்படியாவது அரசியைத் தேடிக் கண்டு ஒழிக்க வேண்டும் என்று வெறி கொண்டு மலைப்பகுதிகளுக்குள் புகுந்து தேடியது கம்பெனிப்படை. சளைக்காது கம்பெனிப்படையை கெரில்லா போர் முறையின் மூலம் அழிவுண்டாக்கினார் அவந்திபாய். எனினும் ஒரு கட்டத்தில் நேரடிப் போர் தவிர்க்க இயலாத நிலையில் நாற்புறமும் படை, சொந்த நாட்டு அரசர்களின் துரோகம் போன்றவற்றால் சூழப்பட்ட இராணி அவந்திபாய், தோல்வி உறுதி என்ற நிலையில் மாவீரர்கள் தேர்ந்தெடுக்கும் முறையைத் தேர்ந்தெடுத்தார்.
முப்பது வயதுக்குள் அமரத்துவம்
மார்ச்சு மாதம் 20ஆம் நாள், 1858 ஆம் ஆண்டு, பாலாப்பூர், இராம்கார் பகுதிக்கு இடைப்பட்ட சுகி-தலையா என்ற இடத்தில் நடந்த போரின்போது இராணி அலந்திபாய் தனது வாளை நெஞ்சுக்கு நேராக நிமிர்த்தி, தானே தனது மார்பில் செலுத்திக் கொண்டு வீரமரணத்தைத் தழுவினார். இந்திய வரலாறு தனது பொற்பக்கங்களில் இராணி அவந்திபாயைத் தழுவி ஏந்தி, ஏற்றுக்கொண்டது.
இராம்கார் வட்டாரத்தின் கிராமக் கதைப்பாடல்களின் வழி இராணி அவந்திபாயின் வீரவரலாறு காலம்காலமாக மக்களிடையே படிக்கப்பட்டுக் கடத்தப்படுகிறது. அவரது ஆட்சி முறையில் மக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்த வாழ்வு முறையும், முதல் விடுதலைப் போர் தந்த எழுச்சியும், இராணி கைக்கொண்ட வளையல் கடித முறையும், இராணியை எதிர்த்த வாடிங்கடன் பிரபுவின் படை தோற்றோடிய நிகழ்வும் கதைப்பாடல்கள் வழி மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுகின்றன.
அவந்தி பாயின் கல்லறை இராம்கர் கோட்டைச்சுவரை ஒட்டிய மலையடிவாரத்தில் இன்றும் காணப்படுகிறது. விடுதலை பெற்ற இந்திய அரசு 1988ஆம் ஆண்டும், 2001ஆம் ஆண்டும் இந்திய அஞ்சல் துறை வாயிலாக இராணி அவந்திபாயின் நினைவாக இரண்டு அஞ்சல்தலைகளை வெளியிட்டு அவரது நினைவைப் போற்றியது. 2012இல் தேசியப் பள்ளிப் பாடத்திட்டத்தில் இராணி அவந்தி பாயின் வரலாறு சேர்க்கப்பட்டுள்ளது.
நர்மதை நதியணையின் சபல்பூரின் ஒரு பகுதிக்கு இராணி அவந்தி பாயின் பெயர் சூட்டப்பட்டது. தொடக்கக் கால இந்திய வரலாற்றில் அடையாளப்படுத்தப்படாவிட்டாலும், வட்டாரத்தின் மக்களின் மனங்களிலும், இந்திய முதல் விடுதலைப் போர் வரலாற்றிலும் இராணி அவந்திபாய் வாழ்கிறார்.
(தொடரும்)