அவரது பெயர் இணைந்தது பாடல்களுடன். அதுவும் இந்தியச் சனாதனக் கடவுள்களில் ஒருவராகிய கண்ணன் என்ற கடவுற் தத்துவத்துடன் இணைந்த பாடல்கள். மீராவின் பாடல்கள் (Meera Bajan) என்ற பெயரில் இசைக்கப்படும் அவரது பல பாடல்கள் மனச் சலனங்களை நீக்க வல்லவை. பக்தியில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவர் கடவுள் கண்ணனுடன் இணைந்தவர், கண்ணனின் மீரா.
ஆனால் அவர் மேவாரின் அரசி என்பதும், அரசக் குலத்தினிடையே நடந்த பல சூதுவாதுகளில் அவருக்கும் பெரும் இடர்கள் ஏற்படுத்தப்பட்டன என்பதும், அவற்றிலிருந்து எவ்வாறோ அவர் மாயமந்திரம்போல் மீண்டிருந்தார் என்பதும் வியப்பூட்டும் செய்திகள்.
கண்ணனின் மீதான பக்தி அல்லது ஈடுபாடு அதிகப்பட அதிகப்பட அவர் தன்னை மானுட வாழ்க்கையிலிருந்து வெகுதூரம் விலக்கி, கண்ணனின் நகராக நம்பப்படும் துவாரகைக்குச் சென்றுவிட்டார். பக்தி சார்ந்த பொருண்மையிலும், பக்த மீரா என்ற வகையிலும் அவரைப் பற்றிய பொதுவான உருவகத்தில் அவர் இராஜபுத்திரக் குலத்தைச் சேர்ந்த மேவாரின் ஒரு அரசி என்பது பலருக்கும் நினைவில்லாத ஒன்று. அவரது வரலாற்றையும் இந்திய அரசிகளின் வரலாறுகளோடு இணைத்துத் தெரிந்துகொள்வது தேவையானதே.
பிறப்பு, இளமை
மீராபாய் ராஜபுத்திர அரசக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். இன்றைய ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பேவர் மாவட்டத்தில் வாழ்ந்திருந்த இரத்தோர் என்ற இராஜபுத்திர அரசகுலம்தான் அது. பேவர் மாவட்டத்தின் அன்றைய பெயர் குட்கி. அவரது தந்தை இரத்தன் சிங். பிறந்த இடம் மெர்த்தா. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாகுவர் மாவட்டத்தில் இன்று மெர்த்தா உள்ளது. (இன்றும் அங்கு மீராபாயின் நினைவாக ஓர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது). சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ள மீராபாய் சிறப்பு வெளியீட்டு நூல், மீராபாயின் பிறந்த ஆண்டு 1498ஆக இருக்கலாம் என்று தெரிவிக்கிறது.
இளவயதில் எல்லா அரசக் குலக் குழந்தைகளுக்கும் நடக்கும் ஏற்பாடுபோல, பாடல், இசை, அரசத் தந்திரக் கல்வி என்ற அனைத்தும் சிறுமி மீராபாய்க்கும் கற்பிக்கப்பட்டது. இருந்தாலும் சிறுமியை அதிகம் ஈர்த்துக் கட்டிப்போட்டது இசையே. கூடவே அரண்மனைக்கு வந்திருந்த சாது ஒருவர் சிறுமிக்குப் பரிசாக அளித்த கண்ணன் என்ற இறைவன் கிருஷ்ணனின் படமும் சிறுமியின் மனதில் பதிந்துபோனது. எண்ணத்தில் இசையும் கண்ணனும், வயது வளர வளரக் கூடவே வளர்ந்தார்கள்.
சிலகாலமே நீடித்திருந்த திருமணம்
1516ஆம் ஆண்டு மேவாரின் மன்னராக இருந்த புகழ்பெற்ற இராணா சங்காவின் மூத்த மகனான போஜராஜனுக்கு மீராபாய் மணமுடிக்கப்பட்டார். அந்தக் காலம்தான் டெல்லிச் சுல்தானிய ஆட்சி முடிவுக்கு வந்து முகம்மதிய ஆட்சி நிறுவப்பட்ட காலம். 1518 முதல் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு வட்டாரத்தில் அடிக்கடிப் போர் நடந்துகொண்டிருந்த நேரம். 1526இல் டெல்லி முகம்மதிய ஆட்சி பாபரால் வலுவாக நிறுவப்பட்டுவிட்டதை நாம் அறிவோம்.
பாபரின் முயற்சிகள் 1510இல் இருந்தே தொடங்குகின்றன. பாபருக்கு டெல்லியைக் கைப்பற்றி ஆட்சியமைக்கும் ஆவல் உள்ளதை அறிந்து கொண்டிருந்த இராஜபுத்திர அரசர்கள் ஒன்றுகூடி ஒரு முகம்மதிய அரசு டெல்லியில் உருவாவதைத் தடுத்துவிடலாம் என்று முயற்சி செய்துகொண்டிருந்த நேரம். டெல்லிச் சுல்தானிய லோதி குலத்து ஆட்சி கலைந்து, குலைந்து, முகம்மதிய ஆட்சி தொடங்கப் போகின்ற நேரம். இத்தகைய வரலாற்றின் ஒரு சந்தியில்தான் மீராபாயின் திருமண வாழ்க்கை தொடங்கியது.
மீராபாய்க்கு இருந்த கிருஷ்ணப் பிரேமை புகுந்த வீட்டில் ஒரு புதிய விஷயமானது. மேவாரைச் சேர்ந்த சித்தூர் அரசக் குலத்தைச் சிசோடியா என்று அழைப்பார்கள். அவர்களது வழிபடு தெய்வம் துர்கா தேவி. எனவே மீராபாயின் கிருஷ்ணப் பிரேமை புகுந்த வீட்டுப் பெருமக்கள் சிலருக்கு முகச்சுழிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அரசன் போஜராஜன் நல்ல அன்பும் புரிந்துணர்வும் கொண்ட கணவனாக இருந்ததாகவே தெரிகிறது.
தனது மனைவி கண்ணன் கோயிலைத் தேடிச் சென்று வழிபடும் இடரைக் குறைக்க, சித்தூரின் கோட்டைக்குள்ளேயே ஒரு சிறிய கிருஷ்ணன் கோயிலை அமைக்கிறான் போஜராஜன். ஏனெனில் கிருஷ்ணப் பிரேமையில் மீராபாய் பாடுவார், இசைப்பார், ஆடுவார்.. இத்தகைய போக்கு மற்றவர்கள் பார்வையில் சங்கடத்தை ஏற்படுத்துவதால், கோட்டைக்குள்ளேயே அமைந்த கண்ணன் கோயில் இந்த இடர்களைக் குறைக்கும் என்ற எண்ணம். அத்தனை அன்புடன் அணுகிய போஜராஜனுக்கும் மீராபாய்க்கும் திருமணவாழ்வு நீடிக்கவில்லை.
மீராபாய்க்குத் திருமண வாழ்வில் தொடக்கத்திலேயே நாட்டமிருக்கவில்லை. திருமணத்திற்கு அவரைக் கட்டாயப்படுத்தியே சம்மதிக்க வைத்தார்கள் என்றே வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். திருமணமான இரண்டே ஆண்டுகளில் 1518இல் நடந்த டெல்லிச் சுல்தானிய, முகம்மதிய அரசுகளுடனான போர்களில் மேவாரைச் சுற்றியிருந்த இராஜபுத்திர அரசுகளின் கூட்டமைப்பு மேவாரின் இராணா சங்கா தலைமையில் ஈடுபட்டிருந்தது. 1518இல் கன்வாவில் பாபரோடு நடந்த போரில் தோற்ற பின்னர் மீராபாயின் தந்தை, மாமனார் இருவரும் சில நாட்களில் காலமானார்கள். கணவரான போஜராஜன் அந்தப் போரில் படுகாயத்துகுட்பட்டார். அந்தக் காயங்கள் ஏற்படுத்திய உடல்நலக் குறைவினால் 1521இல் மீராபாயின் கணவர் போஜராஜனும் காலமானார்.
திசைமாறிய வாழ்வு
இராணா சங்காவின் மறைவு, கணவர் போஜராஜனின் மறைவுக்குப் பிறகு மேவாரின் மன்னராக தயாதி விக்கிரமசிங் மன்னரானார். ஆனால் மீராபாயின் இருப்பு மேவாரின் அரசக் குலத்துக்கு, ஒரு போட்டி அரசுரிமை என்று தோன்றியதோ என்னவோ, மீராபாயைக் கொன்றுவிட அவரது மாமனார், மேவாரின் மன்னர் விக்கிரமசிங்கிடம் இருந்து பல முயற்சிகள் நடந்ததாகச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அந்தக் கொலை முயற்சிகளிலிருந்து மீராபாய் வியக்கத்தக்க வண்ணம் உயிர் தப்பித்ததாகவும் அச்சம்பவங்கள் விவரிக்கின்றன. இதனால் மீராபாயிடம் மனிதர்களை மீறிய ஓர் அருட்சக்தி இருக்கின்றது என்ற எண்ணம் பரவலாக எழுந்தது.
இயல்பிலேயே சிறுவயதில் ஏற்பட்ட இசை ஈடுபாட்டின் காரணமாகத் தினசரி பலமணி நேரங்களை அவர் கண்ணன் கோவிலிலும், நாடெங்கிலும் இருந்து வரும் சாதுக்களைச் சந்தித்து அளவளாவுவதிலும், இசைப்பாடல்களை இசைப்பதிலும் மீராபாய் செலவிட இது அவரது புகுந்த வீட்டினருக்கு எரிச்சலூட்டுகிறது. மேவாரின் அரசகுலத்துப் பெண், அதுவும் விதவையான ஓர் இராஜபுத்திரப் பெண் செய்யக்கூடாத, அரசக் குலத்துக்கு ஆகாத வழமையாக இது பார்க்கப்படுகிறது.
கொன்று விடத் தீர்மானித்தாலும், ஒரு பெண்ணை நேரடியாகக் கொன்று விட்டால் நிந்தனை வரும் என்பதால் ஒரு பூக்குடலைக்குள் கொடிய விஷமுள்ள பாம்பை வைத்து மீராபாயிடம் அவரது மாமனார் வீட்டு மனிதர்கள் அனுப்பியதாகவும், மீராபாய் அந்தப் பூக்குடலைக்குள் கையை விட்டு எடுத்தபோது உள்ளிருந்து புத்தம் புதிய அன்றலர்ந்த மலர்களால் தொடுக்கப்பட்ட மலர்மாலை மட்டுமே மீராபாயின் கைகளில் தவழ்ந்து வந்தது என்றும், பாம்பு மறைந்து போனது என்றும் ஒரு நிகழ்வு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதேபோல மீராபாய்க்குக் கொடிய விஷம் அருந்திய பானத்தைக் கொடுத்துப் பருக வைத்ததாகவும், அந்த விஷபானம் மீராபாயை எதுவுமே செய்யவில்லை என்றும் இன்னொரு சம்பவம். சம்பவங்கள் எப்படி இருந்திருப்பினும், மீராபாயின் இருப்பை நீக்க மேவாரின் அரச குலம் முயன்றிருக்கிறது. இன்னொரு சம்பவத்தில் அரசர் விக்கிரமசிங்கின் முன்னிலையிலேயே நதிக்குள் மூழ்கிப் போய்விட மீராபாய் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், நதியின் பெருவேகத்துக்குள் அனுப்பப்பட்ட மீராபாய் ஓடம்போல மிதந்து சென்று கரைசேர்ந்ததாகவும் கதை உண்டு.
மேற்கண்ட இரண்டு சம்பவங்களும் மீராபாயின் இசைப் பாடல்களின் வழியே விவரிக்கப்படுபவை. அவரே தன்மேல் ஏவப்பட்ட கொலை முயற்சிகளை இவ்வாறு ஆவணப்படுத்தியிருக்கிறார் என்றும் கொள்ளலாம். இவ்வாறு எண்ணற்ற சம்பவங்கள் நடக்க, மீராபாய் மேலும் மேலும் மனிதவாழ்விலிருந்து விலகுகிறார். மானிடவர்க்கென்று பேச்சுப்படின் வாழகில்லேன் கண்டாய் என்ற ஆண்டாளின் நாச்சியார் திருமொழிக் கூற்று மீராபாய்க்கும் பொருந்திப்போகிறது.
இன்னொரு கர்ணப் பரம்பரைக் கதையில் டெல்லி முகம்மதியப் பேரரசின் மூன்றாவது அரசரான மகா அக்பர், தனது அரசவைக்கவி தான்சேனுடன் வந்து மீராபாயைச் சந்தித்ததாகவும், அவருக்கு ஒரு முத்துமாலையைப் பரிசளித்ததாகவும் பதிவு இருக்கிறது. ஆனால் இதை உறுதிப்படுத்தும் வரலாற்று நிகழ்வுகள் இல்லாததோடு, அக்பரின் காலத்தோடு, மீராபாயின் காலத்தை ஒப்பு நோக்க இதில் ஐயம் ஏற்படுகிறது.
அமரத்துவம் அடைந்தது வாழ்வு
மேவாரில் வாழும் வாழ்வு மேலும் மேலும் சிக்கலாக, அங்கிருந்து புறப்பட்ட மீராபாய் தாய் வீட்டு ஊரான மெர்த்தாவுக்கு வருகிறார். ஆனால் அங்கும் அவரை அத்தனை சிலாக்கியமாக யாரும் வரவேற்று ஆதரவளிக்கவில்லை. எனவே நாடெங்கும் உள்ள கண்ணன் கோயில்களை நோக்கியே அவரது பயணம் தொடர்கிறது. பல இடங்களுக்குப் பயணம் செய்துவிட்டு, இறுதியாக கண்ணனின் நகராக நம்பப்படுகின்ற துவாரகைக்கு வந்து அங்குள்ள பிருந்தாவனத்தில் தங்குகிறார் மீராபாய்.
மேவாரில் அரசராக விக்கிரமசிங்கிற்குப் பிறகு வந்தவர் உதயசிங். பின்னாட்களில் இவரே ரோசாவின் நகரம் என்று அழைக்கப்படுகின்ற உதய்ப்பூரை நிர்மாணித்தவர். உதயசிங்கின் வாரிசுகளில் ஒருவராகத்தான் பின்னாட்களில் மகாராணாவாக அறியப்பட்ட இராணா பிரதாப் சிங் பிறந்தார். உதயசிங் சிறிது நல்மணம் கொண்டிருக்க வேண்டும். அவர் மீராபாய் சிசோடிய இராஜபுத்திர அரசக் குலத்தால் நடத்தப்பட்ட விதம் குறித்து சிறிது மனத்தாங்கலடைந்து, மீராபாயைத் திரும்ப மேவாருக்கு வரவழைத்து நன்முறையில் தங்கவைக்க நினைக்கிறார்.
இந்த நோக்கத்துடன் பிராமணர்கள் குழு ஒன்றை அனுப்பி மீராபாயிடம் மீ்ண்டும் மேவாருக்கு வந்து தங்கும்படி வேண்டிக் கொண்டதாகத் தெரிகிறது. மீராபாயும் அவர்களோடு வர ஒப்புதல் தெரிவித்திருக்கிறார். ஆனால் அன்றைய நாளை பிருந்தாவனத்தில் இருக்கும் கிருஷ்ணன் கோயிலில் கழித்த பிறகு மறுநாள் காலை புறப்பட்டுச் செல்லலாம் என்று மீராபாய் கூறியதாகவும் பதிவு செய்கிறார்கள். கோயிலுக்குள் சென்று இரவு தங்குகிறார் மீராபாய்.
உண்மையில் என்ன நடந்தது என்பது சரியாகத் தெரியாவிட்டாலும், மறுநாள் கோயிலைத் திறந்து பார்த்தபோது மீராபாய் அங்கு இருக்கவில்லை. மேவாரிலிருந்து வந்த பிராமணர்கள் குழு திகைக்க, பிருந்தாவனத்து உள்ளூர் மக்கள், மீராபாய் இறைவன் கண்ணனுடன் கலந்துவிட்டதாக உறுதியாக நம்பத் தொடங்குகிறார்கள். அது வதந்தியாகி, செய்தியாகி, ஒருவாறான வரலாறாகவும் பதிவு செய்யப்பட்டுவிட்டது.
திரும்ப மேவாருக்கு அவர்களோடு செல்ல உள்ளூர விரும்பாத மீராபாய், இரவோடிரவாக எங்காவது புறப்பட்டுச் சென்று, தனது எஞ்சிய காலத்தை இறைத்தலங்களுக்கான பயணங்களில் கழித்திருக்கலாம் என்ற பார்வையும் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் பெரும்பான்மையினரின் நம்பிக்கையின்படி மீரா, தனது கண்ணனிடம் சென்று சேர்ந்து விட்டதாகவே சொல்லப்படுகிறது!
இசைப் பங்களிப்பும் பிறவும்
இரத்தோர் குடும்பப்பெண்ணாக சிசோடிய அரசக் குலத்துக்கு மனைவியாகப்போன ஒரு பெண் அடைந்த எண்ணற்ற துயர்களால், மீராபாய்க்குப் பின்னர் எந்த ஓர் இரத்தோர் குலப் பெண்ணும், சிசோடிய அரசகுலத்துக்கு மணம் செய்துகொண்டு போகவில்லை என்ற ஒரு குறிப்பையும் சிலர் பதிவு செய்கிறார்கள். சமூக அளவில் நடந்த இன்னொரு புரட்சியாகச் சொல்லப்படுவது, மீராபாய் தனது குருவாக வரித்துக்கொண்ட இரவிதாசரைப் பற்றி. மீராபாய் ஓர் அரசி. இரவிதாசரோ ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. இதிலும் வழமையல்லாத ஒரு புரட்சியைக் கைக்கொண்டார் மீராபாய்!
மீராபாயின் கவிதைகள் பெண்ணிய நோக்கில் கண்ணனின் மீதான பக்தியையும், பிரேமையையும் வெளிப்படுத்தியவை. அவரது கவிதைகளில் கண்ணனின் மீதான, ஒரு தாயாக மகனின் மீதேற்படும் அன்பும், ஒரு தோழியாகத் தோழனின் மீது ஏற்படும் நட்பும், ஒரு காதலியாக, காதலனின் மீது ஏற்படும் பிரேமையும், காதலும் வெளிப்படுகின்றன.
தமிழில் பாரதியாரின் கண்ணன் பாடல்களைப் படித்தவர்களுக்கு இந்தப் போக்கு பிடிபடும். மீராபாயின் பாடல்கள் அளவில்லாத உருக்கத்தையும், தினவாழ்வின் ரசனைகளையும், நல்ல இசை ஒருமையுடன் அமைந்த சொற்களில் தருபவை. எனவே அந்தப் பாடல்கள் மீராவின் கீதங்கள் என்ற குறிச்சொல்லோடு மிகுந்த புகழ்பெற்றவை.
பக்தியும் இசையும் கலந்து நெக்குருக வைக்கும் அவரது பாடல்கள் இன்றளவும் மிகவும் விரும்பி நாடெங்கும் பாடப்படுபவை. அவரது பாடல்களை அடியொற்றி, அதேமுறையில் வேறு பலரும் அம்மாதிரிப் பாடல்களை எழுதினார்கள் என்பதும் இதில் நோக்கத்தக்கது. எண்ணற்ற பாடல்களை மீராபாய் எழுதியிருந்தாலும் தொகுக்கப்பட்டு இன்று கிடைத்திருப்பவை ஏறத்தாழ ஆயிரம் பாடல்கள் மட்டும்தான். ஆனால் நாடெங்கும் அவை எத்தனையோ அன்புடனும் பக்தியுடனும் ஈடுபாட்டுடனும் இசைக்கப்படுகின்றன.
தென்னாட்டில் ஓர் ஆண்டாளைப்போல, வடநாட்டில் கடவுளின் மீது மையல் கொண்ட ஒரு காதற் பெண்ணாக, புத்திளமையான இசைப்புடனும், இறைக்காதலுடனும் இன்றும் பலர் மனங்களில் நிலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் பக்த மீராபாய்.
(தொடரும்)