Skip to content
Home » இந்திய அரசிகள் # 20 – இராணி ஹன்சா பாய் (1383 – 1421)

இந்திய அரசிகள் # 20 – இராணி ஹன்சா பாய் (1383 – 1421)

இராணி ஹன்சா பாயின் கதை மகாபாரதத்தில் வரும் சந்தனு அரசனின் மனைவியாக இருந்த சத்தியவதியின் கதையை ஒத்தது. வியக்கவைக்கும் ஒற்றுமை இருவரது வாழ்க்கைக்கும் உண்டு. மேவாரின் இராஜபுத்திர அரசக் குடும்பத்தில் மணப்பெண்ணாக வாழ்க்கைப்பட்டு, ‘பாட்டி அரசி’ என்ற சிறந்த மரியாதையுடன் வாழ்வாங்கு வாழ்ந்து, இரண்டு அரசக் குலங்களுக்கிடையில் இருந்த உரசல்களை நீக்கி, அவை இரண்டையும் சுமுகமாக இருக்க வைத்த சாதனைக்குச் சொந்தக்காரர் இவர். ஹன்சா பாய் பிறந்தது இரத்தோர் என்ற அரசக் குலத்தில். வாழ்க்கைப்பட்டது மேவாரின் புகழ்பெற்ற சிசோடிய அரசக் குலத்தில்.

பிறப்பு, இளமை, திருமணம்

ஹன்சா பாயின் இயற்பெயர் ஹன்சா குமாரி. இன்றைய ஜோத்பூருக்கு அருகில் மண்டோர் என்ற ஊரில் இருந்தது இரத்தோர் அரசக் குலம். அதன் அரசராக இருந்தவர் சுண்டா இரத்தோர். அவரது மனைவி இராணி சுராம் சங்காலி. அவர்கள் இருவருக்கும் மகளாகப் பிறந்தவர் ஹன்சா குமாரி. அரசருக்கு சுராம் தவிர சோனா மோகில் என்ற இன்னொரு மனைவியும் இருந்தார்.

அரசருக்கு மனைவி சோனா மீது மிகுந்த காதல் இருந்தது. எனவே தனது மூத்த மனைவியின் மூலமாகப் பிறந்த மகன் ரன்மலுக்குப் பட்டம் அளிப்பதற்குப் பதிலாக சோனா மோகிலின் மகன் கன்காவுக்கே பட்டம் என்று அறிவித்தார். சிறுமி ஹன்சாவுக்கு அரச சூத்திரங்களின் முதல்படி இந்த விவகாரத்தோடுதான் அறிமுகமாயிருக்க வேண்டும்.

சிறுமி ஹன்சா பெரியவளானபோது அவரது அண்ணன் ரன்மல், ஹன்சாவை அப்போது மேவாரின் அரசராக இருந்த மகாராணா லக்காசிங்கின் மூத்த மகன் சுண்டா சிசோடியாவுக்கு மணமுடிக்க விரும்பினார். அதற்காகத் தேங்காய்களை மங்கலப் பொருட்களுடன் ஒரு தூதுக்குழு மூலம் அனுப்பினார். மேவாரின் அரச சபைக்குச் சென்ற குழு, விவரத்தைச் சொன்னது. அவர்கள் வந்தபோது இளவரசன் சுண்டா சிசோடியா அரசவையில் இல்லை. அங்கிருந்த அரசன் லக்காசிங், அந்த மணக்கேட்பைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தனது மகன் சுண்டா திரும்பி அரசவைக்கு வரும் வரை காத்திருக்குமாறும் சொன்னார். ஆனால் திரும்பி வந்த இளவரசன் சுண்டா, தனது தந்தை மறுத்துவிட்டபோது தானும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று சொல்லிவிட்டார். அவரது வாதம் சரியல்ல என்று அரசர் லக்காசிங் எவ்வளவோ சொல்லியும் மனதை மாற்ற இயலவில்லை.

மண்டோரின் செல்வாக்கு மிகுந்த இரத்தோர் அரசக் குலத்தைப் பகைத்துக்கொள்ள விரும்பாத அரசர் லக்காசிங், இரத்தோர் குலம் விரும்பினால் ஹன்சா பாயைத் தானே மணமுடித்துக் கொள்வதாகச் சொன்னார். ஆனால் ரன்மல் இதற்குத் தயக்கம் காட்டினார்.

மேவாரின் பின்னாள் அரசராக இருக்கப்போகிறவருக்கே தன் சகோதரியை மணம் முடித்துத் தர விரும்புவதாக லக்கா சிங்கிடம் சொன்னார். அதற்கு லக்காசிங், தனக்கும் ஹன்சா பாயுக்கும் பிறக்கும் குழந்தையே மேவாரின் அடுத்த அரசராக வருவான் என்று வாக்குகொடுத்தார். இதற்குத் தற்போதைய இளவரசன் சுண்டாவும் சம்மதிப்பான் என உறுதியளித்தார். இதையடுத்து அரசர் லக்கா சி்ங்கிற்கு மனைவியானார் ஹன்சா பாய். 1407ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது. இருவருக்கும் பிறந்த ஆண் குழந்தைக்கு மோக்கல் என்று பெயரிட்டார்கள். அந்தக் குழந்தையே பின்னாளின் மேவாரின் சித்திரதுர்க்கத்தின் அரசனாகும் என்று அறிவிக்கப்பட்டது.

அரசர்களை உருவாக்கிய அரசி

மோக்கல்தான் அடுத்த அரசன் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் தனது மகனை அரசனாக்குவதற்கு உரிய அனைத்துக் கலைகளையும் கற்பித்து வளர்த்தார் ஹன்சா பாய். பொதுவாகக் கற்றுத்தரப்படும் போர்ப் பயிற்சி, குதிரையேற்றம் போன்றவற்றோடு மனம் சார்ந்த, அரசத் தந்திரம் சார்ந்த விஷயங்களையும், சமயப் பழக்க வழக்கங்களையும் கற்றுக்கொடுத்து வளர்த்தார் ஹன்சா பாய்.

1421ஆம் ஆண்டு அரசர் லக்காசிங் போரில் மரணமடையவே இளஞ்சிறுவனான மோக்கல் மேவாரின் அரசனானான். அவன் சிறுவன் என்பதால் லக்காசிங்கின் மூத்த மகனான சுண்டாசிங் அரச நிர்வாகத்தில் உதவுவதற்கு முன்வந்தார். அரச சபையினரும், சமய குருமார்களும்கூட அதனை ஆதரித்த நிலையில், அவனது உதவி தங்களுக்குத் தேவையில்லை என்றும், சுண்டாசிங் சுற்றி வளைத்து அரசனாக முயற்சிக்கிறான் என்றும் நிந்தனை செய்தார் ஹன்சா பாய்.

இதனால் மனம் நொந்த சுண்டாசிங், மேவாரை விட்டு நீங்கி மால்வாவின் தலைநகராக இருந்த மாண்டுவில் தங்கிவிட்டான். பிறகு அவன் மேவாருக்குத் திரும்பவே இல்லை. பொறுப்பு அரசியாகப் பதவியேற்றுக் கொண்ட ஹன்சா பாய், தனக்கு உதவியாகத் தனது சகோதரன் ரன்மலை அழைத்துக் கொண்டார். ரன்மலும் தனது சகோதரிக்கும், சகோதரி மகனுக்கும் உண்மையாகப் பேருதவிகள் செய்து, அரசன் மோக்கல் வளர்ந்து பெரியவனாகும் வரை அக்கம்பக்கம் இருந்த பகைகளைப் போரிட்டு ஒழித்தான்.

தனது தாய், தாய்மாமன் இருவராலும் உருவாக்கப்பட்ட மோக்கல், மேவாரின் சிறந்த போர்த்திறம் மிக்க அரசர்களில் ஒருவனாக விளங்கியதில் வியப்பில்லை. படுகொலை செய்யப்பட்ட 1433க்குள் நாக்பூர், குஜராத் போன்ற அண்டைய நாடுகளின் பகைகளை ஒழித்த மோக்கல், டெல்லி சுல்தானியப் படையெடுப்பையும் வென்று வாகை சூடினான். அதன்பின் மோக்கல் தனது தந்தை கட்ட விரும்பிய அனைத்து அரண்மனைகளையும் கட்டுமானங்களையும் கட்டுவதில் ஆர்வம் காட்டினான்.

ஹன்சா பாய் தனது மகன் மோக்கலுக்கு நல்ல பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துவைத்தார். அவர்களுக்குப் பிறந்த மகன்தான் இராணா கும்பா. இராணா மோக்கல், ஒரு மகாராணாவாகத் தனது போர்த்திறம், ஆட்சியின் திறமையால் உருவாகிக்கொண்டிருந்தான்.

மண்டோரில் மாறிய காட்சிகள்

ஹன்சா பாயின் தந்தை 1423இல் போரில் மரணமடைந்தார். முன்னரே ஏற்பட்ட ஏற்பாட்டின்படி சோனாவின் மகன் கன்கா அரசனானான். ஆனால் 1428இல் கன்காவும் மரணமடைய, சிறிது காலம் அவனது சகோதரன் பதவியில் இருந்தான். பிறகு அவனும் மரணமடைய, தனக்கு வாய்ப்பு வருவதைக் கண்ட ரன்மல், மேவாரின் படையை மண்டோருக்கு நடத்திவந்து அப்பகுதியின் புதிய அரசனாகப் பதவியேற்றுக் கொண்டான்.

ஏற்கெனவே மேவாரில் ரன்மோலின் ஆதிக்கம் அதிகமாக இருந்த நிலையில், இப்போது மன்வாரின் அரசனாகவும் ரன்மல் மாறிவிட்டதால் அரசி ஹன்சா பாய்க்கும், அவர்களது இரத்தோர் குலத்தின் ஆதிக்கத்திற்கும் எதிரான மனநிலை மேவாரில் பெருகியது. ரன்மல் திறமையாக ஆட்சி செய்தபோதும், நிர்வாகத்தில் பல ஒழுங்குகளைக் கொண்டுவந்தபோதும் இந்த எதிர்ப்பு மாறவில்லை.

0

உயர்ந்து வரும் இரத்தோர் குலத்தின் தாக்கத்தை விரும்பாத அரசர் லக்காசிங்கின் தயாதிகளான இருவர், 1433ஆம் ஆண்டு அரசன் மோக்கலைப் படுகொலை செய்தனர். தனது 24 வயதில் மோக்கல் கொல்லப்பட்டான். இறந்திருக்காவிட்டால் மிகப்பெரும் அரசனாக வந்திருக்க வாய்ப்பிருந்தவன் மோக்கல். ஆனால் சதியால் கொல்லப்பட்டான். அரசனைக் கொன்றுவிட்டார்களே தவிர, மேவாருக்குள் இருந்தால் வேட்டையாடப்படுவோம் என்று சுவடில்லாமல் ஓடினர் லக்காசிங்கின் தயாதிகள்.

இப்போது அரசி ஹன்சா பாய்க்கு மீண்டும் ஓர் அரசனை உருவாக்க வேண்டிய வேலை வந்தது. இம்முறை பெயரன் இராணா கும்பாவை அரசனாக்கத் திட்டமிட்டார். இம்முறையும் உதவிக்குத் தனது சகோதரன் ரன்மலை அழைத்தார். தனது மகன்கள் 24 பேருடன் வந்தான் ரன்மல்.

இராண கும்பா வளரும் வரை ரன்மல் நிர்வாகப் பொறுப்பையும், ஹன்சாபாய் பொறுப்பு அரசியாகவும் பதவி வகித்தார்கள். இம்முறை பாட்டி அரசி. சிறுவனாக இருந்த இராண கும்பா வளர்ந்து அரசனானான். அதற்குள் மோக்கலைக் கொன்று விட்டு அண்டைய நாடான குஜராத், மால்வாவில் ஒளிந்திருந்தார்கள் லக்காசிங்கின் தயாதிகள். இதையடுத்து அந்த நாடுகளைப் படையெடுத்து அழித்தான் ரன்மல்.

பல சதிகாரர்கள் கண்டறியப்பட்டு கொல்லப்பட்டார்கள். மோக்கலைக் கொன்ற லக்காசிங்கின் தயாதியான சாச்சா என்ற நபரையும், அவனது மகளையும் கைப்பற்றிய ரன்மல், சாச்சாவைச் சிறையில் அடைத்து விட்டு, அவனது மகளைத் தனது மனைவியாக அரண்மனையில் வைத்தான். மேலும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 500 பெண்களைக் கைப்பற்றிய ரன்மல், அவர்கள் அனைவரையும் தனக்கு வேண்டியவர்களுக்குப் பரிசாக அளித்தான்.

ரன்மல்லின் முடிவு

இவ்வாறு 500 பெண்களைக் கையாண்டதை அரசி ஹன்சா பாயால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மோக்கலின் இன்னொரு சகோதரனான ராகவ்தேவ் என்ற இளவரசனும் ரன்மல் பெண்களைக் கையாளும் விதத்தை விமர்சித்தான். அவனைப் பாராட்டி அவனுக்கு அரசவையில் சிறப்பு உடை அணிவித்துப் போற்றுவதாக அழைப்பு விடுத்த ரன்மல், அரசவைக்கு வந்த ராகவ்தேவுக்குச் சிறப்பாகத் தைக்கப்பட்ட அந்த அரச உடையை அணிவித்துப் பாராட்டுவதுபோல நடித்தான். ஆனால் அந்த உடை கைகளை எளிதில் பயன்படுத்த இயலாத வண்ணம் தைக்கப்பட்டிருந்தது. அந்த உடையை அணிவித்த கையோடு, தனது வாளால் ராகவ்தேவை வெட்டிக் கொலை செய்தான் ரன்மல்.

இந்தப் பாதகமான செயலை அப்போது இளைஞனாகவும் அரசனாகவும் மாறியிருந்த இராணா கும்பாவால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அரசி ஹன்சா பாயும் பெரும் சீற்றத்துக்கு உள்ளானார். எத்தகைய உதவிகள் செய்திருந்தாலும் தனது சகோதரன் செய்கையை அவராலும் ஆதரிக்க இயலவில்லை. இத்தகைய நிலையில் குடித்து மயங்கியிருந்த நிலையில் மாமா ரன்மலைக் கொன்றான் அரசன் இராணா கும்பா.

இந்தக் கொலையையும் ஹன்சா பாயின் அறிவுறுத்தலின்படியே அவன் நிகழ்த்தியிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் எண்ணுகிறார்கள். அந்த நிலையிலும் ரன்மலின் மகன் ஜோதாவை மண்டோருக்குத் தப்பித்துச் செல்ல ஹன்சா பாயும், கும்பாவும் அனுமதித்தனர்.

இறுதி

தான் புகுந்த மேவார் அரசக் குலத்தில் ஏற்பட்ட பல குழப்பங்களுக்கிடையில், ஆதரவு இல்லாத நிலையிலும் மேவாரின் சிறந்த அரசர்கள் இருவரைத் தனது மகனாகவும் பெயரனாகவும் பெற்றவர் அரசி ஹன்சா பாய். அவரது இறப்பு எப்போது நடந்திருக்கலாம் என்பதற்கு உறுதியான தகவல்கள் இல்லை. ஆனால் அவரது சகோதரன் ரன்மல் கொல்லப்பட்டபோது ஏற்கெனவே அவர் இறந்து போயிருக்கலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

மிகுந்த திறமை வாய்ந்தவராகவும், பெருமளவு மதிக்கப்பட்டவராகவும் இருந்த பாட்டி அரசி, தன் சகோதரன் ரன்மல்லை கொல்ல விரும்பியிருக்க மாட்டார் என்பதால் இந்த கருத்து ஏற்பட்டிருக்கக் கூடும். ஆனால் சித்திரதுர்க்கத்தின் இராணா பரம்பரையின் மிகச் சிறந்த இரண்டு அரசர்களைத் தானே முன்னின்று உருவாக்கிய வகையிலும், அவர்கள் வளர்ந்து வரும் காலம்வரை ஆட்சிப் பொறுப்பைத் திறம்படக் கையாண்ட வகையிலும், தீர்க்கமான அறிவினை வெளிப்படுத்திய வகையிலும் ஹன்சா பாய் வரலாற்றில் நிலைபெறும் ஒரு மாபெரும் அரசியாக விளங்குகிறார்.

0

பகிர:
முருகுதமிழ் அறிவன்

முருகுதமிழ் அறிவன்

முருகுதமிழ் அறிவன் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புதுப்பட்டியில் பிறந்தவர்; தகுதியால் பட்டயக் கணக்கரான இவர் மென்பொருள் புலத்தில் நிதித்துறை ஆலோசகராக சிங்கப்பூரில் பணி செய்கிறார். தமிழ்மொழி, இலக்கியம், எழுத்து இவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட இவர், இணையம் மற்றும் இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். இவரது இரு நூல்கள் வெளி வந்துள்ளன. தொடர்புக்கு asnarivu@gmail.com.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *