Skip to content
Home » இந்திய அரசிகள் # 21 – இராணி மரியம் உஸ்ஸமானி (எ) ஜோதாபாய் (1542-1623)

இந்திய அரசிகள் # 21 – இராணி மரியம் உஸ்ஸமானி (எ) ஜோதாபாய் (1542-1623)

இந்தப் பெண் புகழ்வாய்ந்த முகலாயப் பேரரசர்களில் ஒருவரது அரசி. அதுவும் முகலாயப் பெண் அல்லாத ராஜபுதனத்து அரசக் குலத்தில் பிறந்து, முகலாயப் பேரரசரை மணம் செய்துகொண்டவர். மட்டுமல்லாது, அரசரது பிரியத்துக்கு உகந்த இராணியும் அவரே.

முகலாய அரசாட்சி வரலாறு முழுதும் எடுத்துக் கொண்டாலும் மிக நீண்ட காலம் அரசியாக இருந்த ஓர் இந்து அரசி இவர்தான். 43 நெடிய ஆண்டுகளுக்கு அரசியாக இருந்தார். அதோடு முகலாயப் பேரரசர்களில் மிகுந்த சமய நல்லிணக்கம் உடையவர்களாகத் தனது கணவரையும், மகனையும் மாற்றிய ஓர் அரசி இவர்.

முகலாய அரசின் மூன்றாவது பேரரசரான அக்பர் விரும்பி மணந்துகொண்ட ராஜபுதனத்து அரசியான ஜோதாபாய்தான் அவர். இந்தத் திருமணம் அக்பரது அரசியல் உத்திகளில் ஒன்று என்பாரும் உண்டு. ஆனால் முகலாய ஆட்சிக்காலம் முழுதும் மற்ற அரசர்களோடும், அரசுகளோடும் இயன்ற அளவுக்கு நல்லிணக்கம், நல்லெண்ணத்தோடு அரசை நடத்திச் சென்றவர் அக்பர். அந்த உத்தியின் பகுதியாகவே அவர் ஜோதாபாயை மணந்திருக்கவேண்டும். அக்பருக்குப் பல மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவரது பிரியத்துக்கு உகந்த அரசியாக ஜோதாபாய் இருந்தார் என்பது வரலாறு நெடுகிலும் பதிவு செய்யப்படுகிறது. அக்பர், ஜோதாபாய் இருவரும் ஒருவருக்கொருவர் இனிய நேசத்தையும், மரியாதையும், மதிப்பையும் மதிப்பையும் கொண்டிருந்தார்கள் என்பதும் பல சம்பவங்களால் தெரிகிறது.

பிறப்பு இளமை திருமணம்

இன்றைக்கு ஜெய்பூர் என்று அழைக்கப்படுகிற அன்றைய அம்பெர் பகுதியின் அரசராக இருந்தவர் இராஜா பர்மால். ராஜபுதனத்து அரசராகிய அவரது மகள்தான் ஜோதாபாய். பிறக்கும்போது அவருக்கு வைக்கப்பட்ட பெயர் ஹிரா கன்வாரி (Hira Kanwari). ராஜபுதனத்து கச்வாகு அரசக் குலத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள். குமரியாக மலர்ந்த ஜோதா, மிகுந்த அழகியாகவும், நுண்மையான அறிவுடையவராகவும் இருந்தார். ஓர் அரசியல் சூழலில் அக்பரும் அவரைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். அந்தத் திருமணத்தின் மூலம் ராஜபுதனத்திற்கும் முகலாய அரசுகளுக்கும் நெடுங்காலம் இருந்த பகைவிலகி நல்லெண்ணம் ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்படும் சூழல் இருந்ததால் இந்தத் திருமணத்தை ஒப்புக்கொண்டார் இராஜா பர்மால்.

அழகை விரும்பித் திருமணம் செய்தாலும், அழகை விஞ்சும் அறிவும், அரசாங்க விஷயங்களில் அக்பருக்குத் தேவைப்படும் சரியான ஆலோசனைகளைச் சொல்ல வல்லவராகவும் இருந்தார் ஜோதா. தன்னை எளிமையாகவும், அணுகத் தக்கவராகவும் வைத்துக்கொண்ட அவர், அரசு அதிகாரவட்டத்தில் மிகவும் விரும்பப்பட்டவராகவும் இருந்தார். அக்பருக்குப் பின் முகலாயப் பேரரசராக விளங்கிய ஜஹாங்கீர், ஜோதாவின் மூத்த மகன். தாஜ்மகாலைக் கட்டிய ஷாஜகான் அரசி ஜோதாவின் பெயரன். அதிகாரப்பூர்வமாக அவருக்கு மரியம் உஸ்ஸமானி என்ற பெயர் (இனிமையும் இரக்கமும் கொண்ட இனிய அரசி என்பது இந்தப் பெயரின் பொருள்) அவரது மூத்த மகனைப் பெற்றெடுத்தபோது அவருக்கு அக்பரால் சூட்டப்பட்டது. ஷாகி பேகம் (Shahi Begam) என்ற பெயராலும் அவர் அழைக்கப்பட்டார்.

திருமணச் சூழல்

அரசர் பர்மாலுக்கும் மேவாரில் இருந்த அக்பரது தயாதியான மிர்சா செரீப் என்பவருக்கும் இடையே மோதல் இருந்தது. அந்த மோதலின் விவரங்கள் முகலாயப் பேரரசர் அக்பரது அவைக்குப் போனபோது, பர்மால் தனது மகளை அக்பருக்கு மணமுடித்து வைத்தால் மோதல் முடிந்து சமரசமாகப் போகலாம் என்ற சூழல் உருவானது. இதனால் அரசர் பர்மால் தனது மூத்த மகளான ஹிராவை அக்பருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

இந்த மோதல் விவகாரங்கள் நடந்து கொண்டிருந்தபோது அக்பர் அஜ்மீருக்கு வழிபாட்டுக்காகச் சென்றிருந்தார். அந்த வழிபாடு முடிந்து ஆக்ராவுக்குத் திரும்பும் நேரத்தில் ராஜஸ்தானில் உள்ள சம்பார் படை முகாமில்தான் இந்தத் திருமணம் நடைபெற்றது. பொதுவாக மணப்பெண்ணின் இடத்தில்தான் திருமணம் நடக்கும். ஆனால் இது ஓர் அரசியல் ஏற்பாட்டின்படி நடந்த திருமணமாதலால் படைமுகாமில் 1562ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் நாள் நடந்தது. அக்பரின் அரசவையில் இருந்த அபுல் பசல் எழுதிய குறிப்புகளின்படி, அக்பருக்கு அஜ்மீர் தர்காவில் கிடைத்த சில தெய்வ சூசகத்தின்படியே அக்பர் இந்தத் திருமணத்தை விரும்பினார் என்று சொல்லப்படுகிறது. இந்தத் திருமணத்தின் மூலம் அம்பெர் வட்டாரத்தில் அரசர் பர்மாலுக்குப் பெரும் பயன் ஏற்பட்டது என்று குறிப்பிட்டுச் சொல்லத் தேவையில்லை.

மனம் கவர்ந்த மனைவி

அரசியல் சூழலால் இந்தத் திருமணம் நடந்தாலும் ராஜபுதனத்து இளவரசியான ஹிரா, அக்பரின் மனைவியாக மிகப் பொறுப்பாக நடந்து கொண்டார். அவர்களுக்கு 1569இல் இளவரசன் சலீமும், பின்னர் மற்ற குழந்தைகளும் பிறந்தார்கள். மரியம் என்ற பெயர் சூட்டப்பட்ட தனது ராஜபுதனத்து மனைவியை அக்பர் முதல் நிலை இராணியாக உயர்த்தினார். எப்போதும் அவரை மதிப்புடனும் காதலுடனும் நடத்தினார். இதற்கு இளவரசி ஹிரா நடந்துகொண்ட முறையும், திருமணத்தைச் சிறப்பாக நடத்தியது, தனது மகனின் தலைமையில் ஒரு சிறிய படையை மணமக்களின் பாதுகாப்பு, சேவகத்துக்காக அரசர் பர்மால் அனுப்பியது, சிறந்த செல்வங்களைத் திருமணப் பரிசுகளாக அனுப்பியது என்ற அனைத்துமே காரணமாக இருக்கலாம். ஜே.எல்.மேத்தா என்ற வரலாற்றாசிரியர் கூற்றுப்படி பேரரசர் அக்பரின் வாழ்வுமுறையிலும் அவர் ஹிராவைத் திருமணம் செய்துகொண்ட பிறகு சிறந்த மாறுதல்கள் ஏற்பட்டன. அரச விவகாரங்களில்கூட தனக்கு வேண்டியது என்று எண்ணாமல், அக்பரது மேன்மையை முன்னிறுத்தி ஆலோசனைகள் வழங்கினார் ஹிரா. அரண்மனையில் மிகக் கூர்மதியும், இயல்பான அன்புடனும் அரசி நடந்துகொண்டது அக்பருக்கு மிகுந்த மன மகிழ்ச்சியையும், தனது மனைவி மீதான மிகுந்த மதிப்பையும் ஏற்படுத்தியது. எனவே பொதுவாக முகம்மதிய மணங்களில் நடக்கும் மதமாற்ற நடவடிக்கைகள்கூட அரசி மரியம் விவகாரத்தில் நடக்கவில்லை.

அரசி மரியத்துக்காகவே கோட்டைக்குள் ஒரு சிறிய கோயிலும்கூடக் கட்டப்பட்டது. தினமும் தனது வழிபாட்டுக்காக அரசி அங்கே செல்வது வழக்கமாக இருந்தது. ஜோதாபாயின் இடத்தில் வேறொரு பெண் இருந்திருந்தால், அக்பருக்குப் பின்னாட்களில் வரலாற்றில் கிடைத்த சிறந்த நற்பெயர் கிடைத்திருக்குமா என்பது ஐயத்திற்குரியது. அந்த அளவுக்கு ஜோதாபாயை வரலாற்றாசிரியர்கள் மதிக்கிறார்கள்.

மதநல்லிணக்கத்துடன் நடந்துகொண்டது, எப்போதுமே தாடி வைத்துக் கொள்ளாதிருந்தது, தனது மனைவிகளாக இருந்த இந்துப் பெண்கள் மாட்டிறைச்சி உண்பதைத் தவிர்ப்பதை அறிந்தும் அதனை அனுமதித்தது ஆகியவற்றை அக்பர் செய்தார். அரசி ஜோதாபாய் தினமும் மாலை தனது வழிபாட்டு நேரத்தில் மணி ஒலிக்கும்போது அரசவையில் அனைவரையும் எழுந்து நின்று மரியாதை செய்யச் சொன்னது போன்ற விஷயங்களால் ஓர் அரசராக அக்பரது பெயரும் வரலாற்றில் மேன்மை பெற்றது.

திருமணம் தந்த திருப்பங்கள்

இந்தத் திருமணம் உண்மையிலேயே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கக்கூடும். இந்தத் திருமணத்தின் விளைவாக அடுத்த நான்கு தலைமுறைக்குச் சிறந்த முகலாயப் பேரரசர்கள் கிடைத்தும், மாபெரும் வீரர்கள் டெல்லி முகம்மதிய அரசின் படைத் தலைவர்களாக, நிர்வாகிகளாக அமைந்ததும், முகம்மதியப் பேரரசுக்கே ஒரு பெரும் மாற்றத்தைத் தந்தது என்றும் குறிப்பிடுகிறார் பேனி பிரசாத் என்ற வரலாற்றாசிரியர்.

இவர் ஜகாங்கீரின் வரலாற்றை எழுதியவர்களில் முக்கியமானவர். இந்தத் திருமணம் முடிந்த உடனேயே 5000 குதிரைப் படை வீரர்கள் நிரம்பிய படைக்குத் தலைவராக அரசர் பர்மால் நியமிக்கப்பட்டார். ஜோதாபாயின் சகோதரர்கள் டெல்லி முகம்மதியப் படைகளில் தலைவர்களாக அமர்த்தப்பட்டார்கள். ராஜபுதனத்து வீரமும், மதியூகமும் டெல்லி முகம்மதிய அரசுக்கு மேலும் அனுகூலத்தை வழங்கிய அதே நேரத்தில், ராஜபுதனத்திலும் ஒரு பேரரசின் இணக்கம் நன்மாறுதல்களைக் கொண்டுவந்தது. பர்மாலின் மகன்கள் பகவான்தாஸ், இராஜா மான்சிங் போன்றவர்களும் பின்னாட்களில் இதே படைத்தலைவர் பொறுப்பை அடைந்தார்கள். அதிலும் மான்சிங் 7000 வீரர்கள் நிரம்பிய படைக்குத் தலைமைப் பொறுப்பை அடைந்தான். அதுவே முகலாயப் படைப்பிரிவில் படைத்தலைவர்களுக்குள் உயர்ந்த பதவியாகக் கருதப்பட்டது. ராஜபுதனத்து தலைவர்களின் பொறுப்பில் மொத்தமாக ஏறத்தாழ முகலாயப் படையின் 50,000 குதிரைப் படை வீரர்கள் இருந்தார்கள்.

அக்பரும் தனது மனைவியின் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறையையும் அன்பையும் இயன்றபோதெல்லாம் காட்டி, அவர்களை மரியாதையுடன் நடத்தத் தவறவில்லை. அரசி ஜோதாபாயின் சகோதரியின் நிச்சயிக்கப்பட்ட கணவன் போரில் இறந்து போனபோது, தானே முன்னின்று வேறொரு ராஜபுதனத்து இளவரசனை அப்பெண்ணுக்கு மணம் செய்வித்தார். அதோடு மட்டுமல்லாமல், மணவிழாவிலும் பெண்வீட்டுப் பொறுப்பாளியாகக் கலந்துகொண்டு திருமணத்தை நடத்திவைத்தார். இதை நோக்கினால் அக்பர் தனது மனைவியை எத்தனை மதித்தார் என்பது தெரியவரும்.

அந்த அன்பின் விளைவே இராணிக்காக வழிபடக் கோயில் அமைக்கும் அளவுக்கு இருந்தது. அது மட்டுமல்லாமல் சிலநேரம் அரசி செய்யும் பூஜைகளில் அக்பர் கலந்துகொள்ளக்கூட செய்வார் என்ற குறிப்புகள் கிடைக்கின்றன. அரசி அழுத்தமான ராஜபுதனத்து உடையலங்காரமும், அழகான ஆபரணங்களுடனும் அரசவையில்ல தோன்றுவார் என்று அவரது தோற்றக் குறிப்புகள் வரலாற்றில் இடம்பெறுகின்றன. அரசி ஜோதாபாயின் கல்லறைகூட இறப்பிற்குப் பிறகு அக்பரின் கல்லறைக்கு அருகிலேயே அமைக்கப்பட்டது என்ற விவரமும் அவர்களுக்கிடையே இருந்த அன்பின் அளவைக் குறிப்பது.

வாரிசுகளும் பெயர்க்குழப்பமும்

முகலாயர்களின் சரியான வரலாறு கிடைக்காத வரை மரியம் என்ற பெயரின் காரணமாக அக்பரின் விருப்பத்திற்குரிய மனைவி ஒரு கிறிஸ்தவப் பெண்ணாக இருக்கக்கூடும் என்று முதலில் நினைத்தார்கள். பின்னரே மரியம் என்ற பெயர் இஸ்லாமில் மிக உயர்ந்த நிலையில் வைக்கப்பட்ட பெண்ணுக்குரிய பெயர் என்பது அறியப்பட்டது. ஜோதா என்ற பெயரும், ஜோத்பூரின் இளவரசி என்ற தவறான எண்ணத்தின் அடிப்படையில் ஏற்பட்டது. எனினும் அப்பெயர் பரவி நிலைத்துவிட்டதால் அப்பெயராலேயே பெரும்பாலும் அரசி மரியம் அறியப்படுகிறார்.

அரசி மரியத்துக்கும் அக்பருக்கும் 1564ஆம் ஆண்டு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்தன. எனினும் அவை இரண்டுமே மூன்று மாதங்களுக்குள் இறந்துபோனதால் மனவேதனைப்பட்ட அக்பரை, பதேபூர் சிக்ரியில் இருந்த ஒரு சுஃபி ஞானி இருவருக்கும் நெடுங்காலம் வாழ்ந்து நிறையும் ஆண்மகவு உண்டு என்று வாழ்த்தி அனுப்பினார்.

1569ஆம் ஆண்டு அரசி மரியத்துக்கு ஆண்மகவாக சலீம் பிறந்தபோது மகிழ்ந்துபோன அக்பர், ஒரு லட்சம் பொன்நாணயங்கள் இருந்த ஆபரணத்தைத் தன் மனைவிக்குப் பரிசாக அளித்ததாக ஒரு குறிப்பு கிடைக்கிறது. சலீமின் பிற்கால அரசப் பெயரே ஜஹாங்கீர்.

அரசக் குடும்பமும், சமூகத்தில் நிகழ்த்திய மாற்றங்களும்

அரசி மரியமுக்கும் அக்பருக்கும் திருமணம் நடந்தது 1562இல். அக்பர் இறந்தது 1605இல். ஏறத்தாழ 40 ஆண்டுகள் அரசி மரியத்தின் ஆளுமை அக்பரிடத்திலும், முகலாய அரசிலும், அரசக் குடும்பத்திலும், பெருமளவு சமூகத்திலும்கூட எதிரொலித்தது. ஏற்கெனவே பார்த்தபடி அக்பரின் நடையுடை பாவனைகள் உட்பட பல கொள்கை மாற்றங்களில்கூட அரசியின் ஆளுமை இடம்பெற்றது. அரசி மரியத்தின் மகனான பேரரசன் ஜகாங்கீரின் இருபதாவது மனைவி நூர்ஜகான். ஜகாங்கீரின் முதல் மனைவியான ஷா பேகத்தின் மகன் குராசு மிர்சா. அக்பர் உயிரோடு இருந்தபோதே குராசிக்குப் பேரரசனாகும் தகுதிகளும் திறமைகளும் இருப்பதாக அவனைக் கவனமுடன் வளர்த்தார்.

ஐகாங்கீர் பேரரசனாகப் பதவியேற்ற பிறகு நூர்ஜகானுக்கு அதிகாரத்திலும், அரச பட்டத்திலும் ஆர்வம் இருந்தது. எனவே குராசுவையும் அக்பரின் வேறு சில மகள்களையும் நீக்கிவிட நூர்ஜகான் திட்டம் தீட்டியதாகத் தெரிகிறது. அவர்கள் மீது நூர்ஜகான் பொய்க் குற்றங்களை அரசவையில் சுமத்தினாள். ஆனால் அரசி மரியம் வலுவாக அவர்கள் பக்கம் நின்றதால் நூர்ஜகானின் முயற்சிகள் எடுபடவில்லை என்று நூர்ஜகானின் வரலாற்றை எழுதிய பின்ட்லி எல்லிசன் தனது நூலில் பதிவு செய்கிறார்.

1616ஆம் ஆண்டு அரசி மரியம் தனது மகனும் பேரரசனுமான ஜகாங்கீருக்கு இது தொடர்பாக எழுதிய ஒரு கடிதம், மிக வலுவான வாக்கியங்கள் கொண்டிருந்ததாகப் பதிவு செய்யப்படுகிறது. மணிமுடியைப் பெற அரசக் குடும்ப வாரிசுகளுக்குள், வழக்குகள் என்ற பெயரில் நடைபெற இருந்த கொலைகளைத் தடுக்க அரசி மரியத்தின் இருப்பு ஓரளவு உதவி செய்தது என்று சொல்லலாம்.

தனது காலத்தில் கலைகள், கல்வி போன்றவை சாதாரண மக்களுக்குக் கிடைக்க அரசி மரியம் முயற்சிகள் எடுத்தார். கலைநயம் மிக்க கட்டடங்கள், மசூதிகள் அவரால் முன்னெடுக்கப்பட்டுக் கட்டப்பட்டன. இன்றைய பாகிஸ்தான் நாட்டின் இலாகூரில் உள்ள புகழ்பெற்ற பேகம் சாகி மசூதி அரசி மரியத்தின் முன்னெடுப்பினால் கட்டப்பட்டது. முகலாயக் கட்டடக் கலையின் புகழ்பெற்ற சான்றாக இது இன்றும் விளங்குகிறது. அக்பர் இறந்தபோது அவரது கல்லறை இருந்த இடத்தைச் சுற்றிலும் மிகப்பெரிய, அழகான ஒரு தோட்டத்தை அரசி மரியம் அமைத்தார். பின்னாட்களில் அவர் காலமானபோது அவரும் அந்தத் தோட்டத்தில், அக்பருக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார்.

வணிகத்திலும் அரசி

பின்ட்லேயின் கூற்றுப்படி அரசி மரியம், வெளிநாட்டு வணிகத்திலும், வெளிநாட்டுப் போக்குவரத்திலும் மிகுந்த ஆர்வம் செலுத்தியதாகத் தெரிகிறது. முகலாயப் பேரரசின் மக்களுக்கு இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவுக்குச் செல்லப் பயணக் கப்பல்களை இயக்கியிருக்கிறார். ஒரு ராஜபுதனப் பெண்ணாகப் பிறந்து, தனது ராஜபுதனத்து வழக்கங்களைப் பேரரசர் அக்பருக்கு மனைவியான பின்னும்கூடக் கடைபிடித்த அரசி மரியம், வணிக வாய்ப்புகளை எத்தனை கவனமுடன் அணுகினார் என்பதற்கு இது சான்று. அதோடு மிளகு, பட்டு, மற்ற வாசனைப் பொருட்கள் போன்றவற்றை அந்நாளைய முகலாய இந்தியத் தேசத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கு விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களையும் அரசி மரியம் நடத்தியிருக்கிறார்.

அரசி மரியத்தின் திறமைகளின் மீது நம்பிக்கை வைத்து அக்பர் வணிகத்துக்குத் தேவையான முதலீட்டைச் செய்ததாகவும், வணிகம் தொடர்பான ஆலோசனைகளில் மரியத்தோடு நீண்ட நேரங்களை அவர் செலவிட்டதாகவும் பதிவுகள் உள்ளன. தனது மனைவியின் வணிகத் திறமைகளில் அக்பருக்குப் பெருமையும், மரியாதையும் இருந்திருக்கிறது. அக்பரது வேறு எந்த இராணியும் இத்தகைய வணிக முயற்சிகளில் ஈடுபட்டதாகச் சான்றுகள் எங்கும் பதிவு செய்யப்படவில்லை. தனது வணிகக் கப்பல்கள் வந்து செல்லும் துறைமுக நகரங்களையும், துறைமுக வசதிகளையும், தானே நேரடியாகச் சென்று கண்காணிக்கும் அளவுக்கு வணிகத்தில் அவருக்கு ஈடுபாடும் திறமையும் கவனமும் இருந்தது. மிகுந்த புகழ்பெற்ற பெரும் கப்பல்களை (ராகிமி, கான்-சி-சவாய்) அவர் கட்டிமுடித்து வணிகத்திலும் பயணத்திலும் ஈடுபடுத்தினார்.

அக்காலத்தில் இண்டிகோ என்ற ஊதா நிறமிப் பொருள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. எழுதுமை உட்படப் பல பொருள்களைத் தயாரிக்க இந்த நிறமி பயன்பட்டது. ஆக்ராவுக்கு அருகில் ஓர் இடத்தில் தயாரிக்கப்பட்ட இந்த நிறமிப் பொருளை வெளிநாடுகளுக்கு அரசி மரியம் ஏற்றுமதி வணிகம் செய்துவந்தார். ஒருமுறை அரசி மரியம் இந்தப் பொருளைப் பெரிய அளவில் வாங்கத் தயாரிப்பாளருடன் பேசி ஒப்பந்தத்தை முடிவு செய்தபின், அப்போதுதான் இந்தியப் பகுதியில் முளைவிடத் தொடங்கியிருந்த கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதியான வில்லியம் மின்ச் என்ற அதிகாரி, அரசி பேசிய தொகையைவிட அதிகத் தொகை கொடுத்து அந்த இண்டிகோ நிறமிப் பொருளை வாங்க முயன்றான்.

அரசியின் கவனத்துக்குச் சென்ற இந்த விஷயம் அரசியின் கடும் கோபத்தின் காரணமாகப் பேரரசன் ஜகாங்கீரின் கவனத்துக்குப்போனது. விளைவு கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரி அரசவைக்கு அழைக்கப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டான். அவனும் அவனது மனைவியும் இங்கிலாந்து திரும்புவதற்கே பெரும்பாடுபட வேண்டியிருந்தது. அதோடு ஏமன் நகரைச் சேர்ந்த மோச்சா என்ற துறைமுக வணிக நகரில், அரசி மரியத்தின் கப்பல் வருகை தரும் நாட்களில், கிழக்கிந்தியக் கம்பெனியின் ஐரோப்பிய வணிகர்கள் அனைவரும் வணிகத்தில் ஈடுபடக்கூடாது என்ற அறிவிக்கப்படாத தடை இருந்தது. இந்த அளவுக்கு அரசி மரியத்தின் வணிகச் செல்வாக்கு இருந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் வணிக முயற்சிகளை இந்தியாவில் தாமதப்படுத்தியதின் மூலம் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் நிலைபெறுவது ஒத்திப் போடப்பட்டதற்கு அரசி மரியமும் ஒரு மறைமுகக் காரணம் எனலாம்.

நிறைவு

முதலில் பிறந்து இறந்த இரட்டைக் குழந்தைகளுக்குப் பிறகு அக்பருக்கும், அரசி மரியத்துக்கும் சலீம் தவிர அவர்களுக்கு வேறு குழந்தைகள் இருந்ததாகத் தெரியவில்லை. அரசி மரியத்தின் கொடிவழியான சலீம் என்ற ஜஹாங்கீரே பின்னாளில் முகலாயப் பேரரசராகத் தொடர்ந்தார். ஆனால் அக்பரின் வேறு அரசிகளுக்குப் பிறந்த இரு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை அரசி மரியம் ஏற்றதாகத் தெரிகிறது. ஏறத்தாழ 40 ஆண்டுகள் பேரரசியாக இருந்தவர் அரசி மரியம். 1616இலிருந்தே அரசி மரியத்துக்கு உடல்நலக் குறைபாடுகள் இருந்ததைப் பற்றி பேரரசர் ஜஹாங்கீர் தனது சுயசரிதையில் பல இடங்களில் குறிப்பிடுகிறார். அவருக்குத் தனது தாயின் மீது மிகுந்த மரியாதையும், அக்கறையும், மதிப்பும் இருந்ததை அவரது சுயசரிதை முழுவதையும் படிக்கும்போது தெரிகிறது.

முகலாயப் பேரரசர்களில் மிகப் பெரிய சுயசரிதையை எழுதி விட்டுச் சென்றவர்கள் பாபரும் ஜகாங்கீரும் மட்டும்தான். மூப்பின் காரணமான உடல்நலக் குறைபாடுகளால் அரசி மரியம் 1623ஆம் ஆண்டு மே மாதம் இறந்தார். முகலாயப் பேரரசியாக அரசர் அக்பரின் மனம் கவர்ந்தவர், ஜஹாங்கீரின் மதிப்பிலும் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்தவர் மரியம். நீண்ட நெடுங்காலம் தனது அரசி அதிகாரத்தில் நிறைந்திருந்த மரியம், தன் மதிப்பு, தனது அரசக் குடும்பத்தின் மதிப்பு, தனது பிறந்த குலத்தின் மதிப்பு, தனது கணவனின் அரசாட்சியின் மதிப்பு என்ற அனைத்தையும் மேன்மைப்படுத்திய நோக்கிலும் முக்கியத்துவம் பெற்ற அரசியாக வரலாற்றில் நிலைபெறுகிறார்.

0

பகிர:
முருகுதமிழ் அறிவன்

முருகுதமிழ் அறிவன்

முருகுதமிழ் அறிவன் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி புதுப்பட்டியில் பிறந்தவர்; தகுதியால் பட்டயக் கணக்கரான இவர் மென்பொருள் புலத்தில் நிதித்துறை ஆலோசகராக சிங்கப்பூரில் பணி செய்கிறார். தமிழ்மொழி, இலக்கியம், எழுத்து இவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட இவர், இணையம் மற்றும் இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார். இவரது இரு நூல்கள் வெளி வந்துள்ளன. தொடர்புக்கு asnarivu@gmail.com.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *