தென்னிந்திய வரலாற்றிலும், தமிழக வரலாற்றிலும், சைவ சமய வரலாற்றிலும் இந்த இராணிக்குப் பெரும் பெயர் உண்டு. அவர் வாழ்ந்த காலம் ஏழாம் நூற்றாண்டு. தமிழகத்தில் சோழர்கள் எழுச்சி ஏற்படுவதற்கு முற்பட்ட காலம். முற்காலப் பாண்டிய அரசர்களில் ஒரு பாண்டிய அரசரின் அரசி இவர்.
ஆட்சிக் காலத்தில் அவர் எடுத்த முடிவுகளால் தமிழக வரலாற்றிலும், சைவ சமய வரலாற்றிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. அதோடு சைவ சமயத்தின் சமயப் பெரியார்களாகக் கருதப்படுகின்ற அறுபத்து மூன்று நாயன்மார்களிலும் இந்தப் பெண்மணிக்கு ஓர் இடம் கிடைத்தது. அந்த அறுபத்து மூவரில் இடம் பெற்ற பெருமையுடைய மூன்றே பெண்களில் இவரும் ஒருவர்.
கூன்பாண்டியன் என்ற அழைப்புப் பெயர் கொண்ட, நின்றசீர் நெடுமாற பாண்டியன் என்ற சிறப்புப் பெயர் கொண்ட, அரிகேசரி மாறவர்ம பாண்டியன் என்ற பாண்டிய அரசனின் அரசத் துணைவியும், சைவ சமய முக்கிய அடியாராகவும் விளங்கிய மங்கையர்க்கரசி தேவியார்தான் அவர்.
மங்கையர்க்கரசி பிறந்தது சோழக் குலத்தில். மணம் செய்து சென்றது பாண்டியக் குலம். அதுவும் போரில் தனது தந்தையை வென்ற பாண்டிய மன்னனைத் திருமணம் செய்து கொண்டவர். புகுந்த வீட்டில் நாட்டின் மன்னனும் கணவனும் தலைவனுமாகியவன் கைக்கொண்ட மாறான சமயக்கொள்கையும், அதன் தீவிரத்தன்மையும் தன்னையும் மக்களையும் வருத்தியபோதும் அதுகுறித்து மயங்கி நிற்காமல், அதிலிருந்து மீளும் வழியைப் பற்றிச் சிந்தித்தவர். தமிழகத்தின் பக்தி இலக்கியக் காலம் தோன்றி நிலைபெற அவரும் ஒரு காரணம். தனது கணவன் கூன் முதுகாலும் நோயாலும் தவித்த காலங்களில், அரச நிர்வாகத்தையும் நாட்டையும் நெறியாகக் கையாண்டவர்.
தமிழக வரலாற்றில் ஓர் அரசியாகப் பெண்ணின் பெயரை முதலில் வரலாற்றில் ஏற்றுவித்தவர் என்றும் சொல்லலாம். மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை என்று சம்பந்தரால் புகழப்பட்டவர்.
பிறப்பு இளமை திருமணம்
மங்கயையர்க்கரசியாரின் இளமைப் பெயர் மானி என்பதே. பழையாறையைச் சேர்ந்த சோழ அரசர் குலம் அப்போது உச்சநிலையை அடைந்திருக்கவில்லை. இளவரசி மானியின் தந்தை மணிமுடிச்சோழன். அப்போது மதுரையை ஆண்டுகொண்டிருந்தவன், பாண்டிய அரசன் அரிகேசரி பராங்குசன் என்ற பாண்டிய மன்னன். இவன் செழிசன் சேந்தன் என்ற அரசனின் மகன். அரிகேசரி பாண்டியனின் அரசாட்சிக்காலம் கி.பி 640 முதல் கி.பி. 670 வரை. அவனுக்கும் சோழ அரசன் மணிமுடிச்சோழனுக்கும் போர் மூண்டது. போரில் சோழ அரசன் தோற்றான்.
தோற்ற அரசர்கள் பெரும்பாலும் பரிகாரமாகத் தனது மகளை மணம் செய்வித்து போரை உறவாக மாற்றிக் கொள்வது அக்கால அரச மரபாக இருந்தது. அரிகேசரி பராங்குசனும், சோழ இளவரசி மானியைத் திருமணம் செய்துகொண்டு பாண்டிய நாடான மதுரைக்குத் திரும்பினான். நின்றசீர் நெடுமாறன் மங்கையர்க்கரசியை மணந்து கொண்டு மதுரைக்கு வந்தான். திருமணப் பரிசாகவும், தனது மகளுக்கும் மருமகனுக்கும் துணையாவும் இருக்க வேண்டித் தனது அமைச்சர்களின் ஒருவரான குலச்சிறையையும் மதுரைக்கு மணமக்களோடு அனுப்பி வைத்தான் மணிமுடிச் சோழன். இந்தக் காலத்தில் அரசன் அரிகேசரிப் பராங்குசன் சமண சமயத்தைத் தழுவிப் பின்பற்றிக் கொண்டிருந்தான். அதனால் அவனது குருமார்களாகவும் ஆலோசகர்களாவும் சமண முனிவர்கள் குழுவே நிரம்பியிருந்தது.
மதுரையின் சமயநிலை
அரசி மங்கையர்க்கரசியோ சைவ சமயத்தைச் சார்ந்தவர். சிவனை வணங்குபவர். ஆனால் அரசன் சமண சமயத்தவன். அரசனைப் பின்பற்றிக் குடிகள் பலரும் சமண சமயத்தைப் பின்பற்றக் கட்டாயம் நிலவியது. மதுரையில் சமண குருமார்கள் வைத்ததே சட்டமாக இருந்தது. அரசன் சமணத்தில் ஆழ்ந்து, சைவ சமயத்தவர், திருநீறணிந்தவர் எவரும் எதிரில்கூட வரக்கூடாது என்ற ஆணையிட்டிருந்தான்.
இதனால் மதுரையின் புகழ்பெற்ற கோயிலான மீனாட்சி அம்மன் ஆலயம் வருவோர் போவோர் இன்றிப் பொலிவிழந்தது. மக்களில் சைவசமயத்தைக் கொண்டொழுகும் பலரும் அஞ்சி இருக்க வேண்டி வந்தது. அரசி மங்கையர்க்கரசியே நெற்றியில் திருநீறணிவதற்குப் பதிலாகத் தனது நெஞ்சில் திருநீறணிந்து கொள்வதை வழக்கமாக்கியிருந்தார். அரசி சைவ சமயத்தைப் பின்பற்றுவதை அரசன் தடுக்கவில்லையாயினும், சைவ சமயத்தவர் எதிரில் வருவதோ, சைவ சமயத்தைப் பற்றிப் பேசுவதோ தீட்டு என்ற அளவில் (கண்டுமுட்டு, கேட்டுமுட்டு) என்று அரசாட்சி நடத்தி வந்தான் அரிகேசரி பராங்குசன். சைவ சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடும், பக்தியும் கொண்டிருந்த அரசி மங்கையர்க்கரசி இந்த நிலை கண்டு மிக வருந்தினார். இதனை எவ்வாறு சரி செய்வது என்றும் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
சமயக்குரவர்களின் எழுச்சி
இந்த நேரத்தில்தான் தமிழ்நாட்டின் பக்தி இயக்கத்தின் தொடக்கக் காலம் முகிழத் தொடங்கியது. தொண்டைநாட்டில் தோன்றிய திருநாவுக்கரசர், தொடக்கத்தில் பல்லவ அரசர்களால் மிகவும் துயருற்று, பின்னர் சைவ சமயப் பெரியாராகி, மிகவும் புகழ்பெறத் தொடங்கியிருந்தார். சோழநாட்டில் பிறந்த ஆளுடையபிள்ளை என்ற திருஞானசம்பந்தரான இளம்பிள்ளை, மிகவும் புகழ்பெற்ற சைவ சமய அடியாராகத் தொடங்கியிருந்தார். அவரது சமய அற்புதங்கள் சென்றவிடங்கள் எல்லாம் பேசுப்பொருளாயின.
மதுரையில் கூன்பாண்டியன், மங்கையர்க்கரசியார் திருமணம் நடந்த காலத்தில் அவர் வேதாரண்யம் என்ற திருமறைக்காட்டில் பயணம் செய்து தங்கியிருந்தார். அங்கு அவரைச் சந்திக்க திருநாவுக்கரசரும் வந்திருந்தார். மதுரையில் மன்னனின் போக்கைக் கண்டு துயருற்றிருந்த மங்கையர்க்கரசியார், அமைச்சர் குலச்சிறையாரிடம் ஆலோசித்துத் தூதுவர்களைத் திருஞானசம்பந்தரிடம் அனுப்பினார். சம்பந்தர் தூதுவர்களிடம் கவலையற்று இருக்குமாறும், தாம் மதுரைக்கு வந்து அரசிக்கும் சைவ சமயத்திற்கும் ஏற்பட்டிருக்கும் இடரைப் போக்குவதாகவும் வாக்களித்தார்.
அமணர்களின் மந்திர, தந்திரப் போக்குகளை அறிந்திருந்த திருநாவுக்கரசர், சம்பந்தர் சிறுபிள்ளையாயிருந்ததால் அவர் தனியாக மதுரைக்குச் சென்றால் உயிர் அபாயம் நேருமென்று கவலைப்பட்டு எச்சரித்தார். சம்பந்தர் நாவுக்கரசருக்கு நற்சொற்கள் சொல்லி அமைதிப் படுத்திவிட்டு மதுரைக்குப் பயணமானார்.
தீவைப்பும், விளங்கிய வெப்பும்
சம்பந்தர் மதுரைக்குப் பயணமாகி வந்திருக்கிறார் என்ற செய்தியைச் சபையில் கேட்ட அரசன், அதை ‘கேட்டுமுட்டு’ என்று தன்னுடைய சமண குருமார்களிடம் கூறினான். சம்பந்தர் ஒரு மடத்தில் அப்போது தங்கியிருந்தார். அரசனது மனப்போக்கை அறிந்திருந்த சமண குருமார்கள், சம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு இரவோடு இரவாகத் தீ வைத்தனர். சம்பந்தரைக் கொன்றுவிட வேண்டும் என்பதே அவர்கள் நோக்கமாக இருந்தது.
சம்பந்தரின் சிவசீலத்தையும் ஆற்றலையும் அறிந்திருந்த அமணர்கள், சம்பந்தர் மன்னனைச் சந்தித்துவிடக் கூடாது என்பதற்காக இதனைச் செய்யத் துணிந்தனர். தான் தங்கியிருந்த மடமானது தீப்பற்றி எரிவதைக் கண்ட சம்பந்தர், ‘செய்யவே திரு ஆலவாய்’ எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார். அந்தப் பாடலின் முடிவினில் ஈற்றடி, ‘பையவே சென்று பாண்டியற்காகவே’ என்று முடியுமாறு இருந்தது.
மாளிகையில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயானது, அவிந்து, வெப்பு நோயாக மாறி, அரசன் அரிகேசரிப் பாண்டியனைப் போய் பற்றியது. அரசனது உடல் வெப்பத்தால் பற்றி எரிச்சலுற்றது. அலறித் துடித்த அரசன், தனது குருமார்களையும் மருத்துவர்களையும் அழைத்து, தனக்கு ஏற்பட்டிருக்கும் வெப்ப நோயைக் குணப்படுத்துமாறு பணித்தான்.
மந்திரமானது நீறு
மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் அரசனது வெப்பு நோயைக் குணப்படுத்தவோ, தணிக்கவோ இயலவில்லை. அரசனது நிலையைக் கண்டு வருந்திய அரசி மங்கையர்க்கரசி, திருஞானசம்பந்தப் பெருமானைச் சென்று அழைத்து வர அரசனிடம் அனுமதி கேட்டார். சம்பந்தர் பெயரைக் கேட்டவுடன் வழமையாகக் கேட்டுமுட்டு’ சொல்லும் அரசனுக்கு, இம்முறை வெப்புநோய் சிறிது தணிந்ததுபோல் இருக்க, அரசியிடம் சம்பந்தரைச் சென்று அழைத்துவருமாறு கேட்டுக் கொண்டான்.
அரசியும் அமைச்சர் குலச்சிறையாரும் சென்று சம்பந்தரை உரிய மரியாதை கொடுத்து அழைத்து வந்தார்கள். அரசன் தன்னையும் அறியாமல் சம்பந்தரைத் தனது படுக்கைக்கருகே இருந்த பொன்னாசனத்தில் அமருமாறு வேண்டினான். இதனைக் கண்டு அமணக் குருமார்கள் மறுப்புக் கூறினார்கள். அதனைக் கண்ட அரசன், எனது நோயைக் குணப்படுத்தும் வல்லமை உங்களிடம் இல்லை, எனவே சிறிது அமைதியாக இருங்கள் என்ற அவர்களை அடக்கி வைத்தான். சம்பந்தரிடம் தனது நோயைத் தீர்த்தருளுமாறு வேண்டினான். அவ்வாறு கேட்டதற்கும் அமணர்கள் மறுப்புத் தெரிவிக்க, அரசனது ஒரு பாதி உடலை சம்பந்தர் பரிசோதிக்கவும், மறுபாதி உடலை அமணர்கள் பரிசோதிக்கவும் ஏற்பாடானது.
சம்பந்தப் பெருமான் ‘மந்திரமாவது நீறு’ என்ற பதிகத்தைப் பாடி அரசனது பாதி உடலில் திருநீற்றைப் பூசியருள, அந்தப் பக்கத்தில் அரசனது வெப்பு நோய் அடங்கியது. ஒருபக்கம் அடங்கிய வெப்பு நோய், அமணர்கள் பரிசோதித்துக் கொண்டிருந்த மறுபாதியில் மேலும் வீறுகொண்டு எழுந்தது. அமணர்கள் கையைப் பிசைந்து தவிக்க, அரசன் தனது நோயை முற்றிலும் தீர்த்து உதவுமாறு சம்பந்தரிடம் வேண்டினான். அதற்கு அமணர்கள் மறுத்தபோது சம்பந்தருடன் வாதில் ஈடுபட்டு அவரை வென்று கொள்ளுமாறு சொன்னான். சம்பந்தர் அரசனது உடல் முழுதும் திருநீறை இட்டுப் பதிகம் பாட, அரசனது வெப்பு நோய் நீங்கியதோடு, அவனது கூன்முதுகும் நேரானது.
அனலும் புனலும்
நோய் நீங்கிய அரசன் தான் சைவ சமயத்தைத் தழுவப் போவதாக அறிவித்து, சம்பந்தரைப் பணிந்தான். அதற்கு மறுப்புத் தெரிவித்த அமணக் குருமார்கள், தங்களை வாதில் வென்று காட்டினால் சம்பந்தர் கூற்றுப் படி மன்னன் நடந்துகொள்ளலாம் என்று கூறினர். அவ்வாறு வெல்ல இயலாவிடில் தாம் சொற்படியே மன்னன் கேட்கவேண்டும் என்றனர். அதனைக் கேட்ட மன்னன், அமணரை நோக்கி, ‘என்ன வாது உமக்கினிது?’ என்று கேட்டு, வாதில் அமணர்கள் வென்றால் அவர் சொற்கேட்பதாகவும், அவர்கள் தோற்றால் அவர்கள் கழுவேற அணியமாக இருக்கவேண்டும் என்றும் சொல்ல, அமணர் ஒப்பினர்.
அனல் வாதம் முதலில் நடந்தது. சமணர்கள் தங்கள் கோட்பாட்டு ஏடுகளை வளர்ந்த யாக நெருப்பில் இட, அது எரிந்து சாம்பலானது. சம்பந்தர் தனது திருமுறையில் இருந்த திருநள்ளாற்றுப் பதிகத்தில் அமைந்த போகமார்ந்த பூமுலையாள் என்று தொடங்கும் பதிகத்தில் இருக்கும் தளிரின வளரொளி என்ற பாடல் உள்ள ஏட்டை எடுத்தார். அதனை சுடராக எரிந்த யாக குண்டத்தின் நெருப்பி்ல் இட, அந்த ஏடு பச்சை ஏடாக மாறி ஒளிர்ந்தது.
தோற்ற அமணர்கள் புனல் வாதம் என்னும் நீரில் தமது உண்மைகளை எழுதிய ஏட்டை இடும் வாதத்திற்கு அழைத்தனர். இந்நேரத்தில் வாதில் வென்றால், தோற்றால் என்ன கடன் என்று அமைச்சர் கேட்க, தாம் தோற்றால் அனைவரும் கழுவேறுவோம். வென்றால் மன்னர் சமண ஒழுக்கத்தை வழுவாது தொடர வேண்டும் என்று அமணர் கூறினர். மன்னனும் ஒப்பினான். எனவே கடலில் சென்று கலக்கும் வையை ஆற்றின் கரைக்கு அனைவரும் சென்றனர். பாண்டியன் ஆணையிட, அமணர் தமது உண்மையாகிய ‘அத்தி நாத்தி’ (அஸ்தி நாஸ்தி) என்ற ஏட்டை வையை ஆற்றில் இட, அது ஆற்றோடு கடல் நோக்கி அடித்துக் கொண்டுபோனது.
சம்பந்தர் ‘வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்’ என்ற பாடல் ஏட்டை விட, அது ஆற்று நீரை எதிர்த்துக் கொண்டு படகு போலச் சென்றது. அதனைத் தொடர்ந்து வையை ஆற்றங்கரையோரமாக அமைச்சர் குலச்சிறையார் குதிரையில் சென்றார். சம்பந்தரின் ஏடு மதுரை அடுத்துள்ள சோழவந்தான் ஊருக்கருகில் உள்ள ஓர் இடத்தில் கரைஒதுங்கியது. அந்த இடம் திருவேடகம் (திரு ஏடகம்) என்று வழங்கப்படுகிறது. எல்லா வாதங்களிலும் தோற்றதால் அரசனிடம் ஒப்புக்கொண்டபடி அனைத்து அமணர்களும் கழுவேறி மாண்டனர்.
திரும்பிய சமநிலை
அரசன் சைவ சமயத்திற்குத் திரும்பினான். அரசி மங்கையர்க்கரசியின் முயற்சியையும் நுண்ணறிவையும் போற்றிக் கொண்டாடினான். இருவரும் மதுரையில் இணைந்து நல்லாட்சி தந்தனர். நின்றசீர் நெடுமாறன், குலச்சிறை, மங்கையர்க்கரசி ஆகிய மூன்று பேருமே அறுபத்துமூன்று நாயன்மார்கள் வரிசையில் வைக்கப்பட்டார்கள். பாண்டியனின் மதுரையில் நின்று நிலைத்த சைவ சமயம் பின்னர் சோழர்கள் காலத்தில் வேரூன்றி வளர்ந்து, பக்தி இலக்கியக் காலமான பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை நீடித்து நிலைத்தது.
மேலும் ஞானசம்பந்தர் தனது திருமுறைப் பாடல்கள் மொத்தத்திலும் மனிதர்களின் பெயர்களைச் சுட்டி எழுதியது அநேகமாக முற்றிலும் இல்லை. அதற்கு விதிவிலக்காக மங்கயைர்க்கரசியைச் சொல்லலாம். ‘மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை’ என்று அவர் சுட்டி எழுதியது அரசி மங்கையர்க்கரசியைத்தான். இவ்வாறு தமிழகத்தின் வரலாற்றில் ஐந்து நூற்றாண்டு காலத்துக்குத் தொடரப்போகின்ற சைவ சமயநிலையையும், சமய சமநிலையையும், அமைதியையும் உருவாக்கியதில் அரசி மங்கையர்க்கரசிக்குப் பெரும் பங்கு உண்டு. அதனால்தான் இயற்பெயர் மானியிலிருந்து அவர் பெண்களுக்கெல்லாம் சிறந்த அரசி என்ற பொருள் படுகின்ற ‘மங்கையர்க்கரசி’ ஆனார்.
தமிழகத்தின் வரலாற்றில் ஒரு அரசியின் பெயர் நிர்வாகத்திலும் வரலாற்றிலும் இடம்பெற்றது முதன்முதலில் அவருக்காகத்தான்.
அந்த வகையில் இந்தத் தொடரின் ஒரு பகுதியையும், தொடரையும் நிறைவு செய்கிறார் அரசி மங்கையர்க்கரசி.
(முற்றும்)