ஒரு நாட்டின் அரசியல் நடப்புதான் அந்த நாட்டுமக்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கிறது. அரசியல் செம்மையாக நடைபெற ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பு தேவை. அதுதான் அரசியலமைப்புச் சட்டமாக எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. நம் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் அரசியலின் தலையெழுத்தையே தீர்மானிப்பதுதான் அரசியலமைப்புச் சட்டம்.
‘அரசியலமைப்புச் சட்டம்’ என்ற சொல்லை நாம் அடிக்கடி ஊடகங்களின் வாயிலாகக் கேட்டிருப்போம். இந்தச் சொல் முதலில் எப்படி வந்தது என்பதைப் பார்ப்போம். ‘Constitution’ என்றால் ‘அமைப்பு’ என்று பொருள். நாட்டின் அரசியல் நடைமுறையில் எப்படி இருக்க வேண்டும், எந்த அமைப்பில் இருக்க வேண்டும் என்று கூறுவதால் ‘Constitution’ என்ற சொல்லுடன் ‘Political’ என்ற சொல் இணைந்து ‘Constitutional’ என்றாகி ‘அரசியலமைப்பு’ என்று பொருள் ஆகிறது.
பொதுவாக, அரசியலமைப்புச் சட்டம் என்பது அரசாங்கத்தின் அதிகாரங்கள் என்னென்ன, மக்களின் உரிமைகள் என்னென்ன என்பதை எழுதிவைத்திருக்கும் சட்டப் பத்திரம்.
அரசியலமைப்புச் சட்டம் என்பது ஒரு நாட்டின், அந்த நிலத்தின், மிக அடிப்படையான சட்டம். ஒரு நாட்டில் ஓர் அரசாங்கம் இருக்கிறதென்றால் அது, சட்டமன்றம், சட்டச் செயலாக்கத்துறை, நீதித்துறை ஆகிய மூன்று வெவ்வேறு உறுப்புகளால் இயங்குகிறது. இதில் சட்டமன்றத்தின் வேலை சட்டங்களை இயற்றுவது. சட்டச் செயலாக்கத்துறையின் வேலை சட்டங்களைச் செயல்படுத்துவது. நீதித்துறையின் வேலை சட்டத்தையும் சட்டத்தின் பொருளையும் ஆராய்ந்து நீதி வழங்குவது.
இந்த மூன்று உறுப்புகளின் அமைப்பு, அதிகாரம், என்னென்ன என்பதுடன் அந்த மூன்று உறுப்புகளுக்கு இடையே என்னென்ன மாதிரியான உறவு இருக்கவேண்டும், அவற்றுடன் மக்களுக்கான உறவும் தொடர்பும் எப்படி இருக்கவேண்டும் என்பதை அரசியலமைப்புச் சட்டம் நிலைநாட்டுகிறது. இவை ஒரு மனிதனுக்கு கை, கால்,கண் போன்றன.
ஏதேனும் ஒன்றில் பிரச்சனை என்றாலும் அன்றாட வாழ்க்கையில் மனிதனுக்கு எப்படி கடினமாக இருக்குமோ, அப்படித்தான் சட்டமன்றம், சட்ட செயலாக்கத்துறை, நீதித்துறை ஆகியவற்றில் ஒன்று ஒழுங்காக செயல்படவில்லை என்றாலும் அரசியல் நடப்பில் பிரச்னைகள் வரும். அவை மக்கள் வாழ்க்கையில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
சட்டத்தை உருவாக்குவதில் பிரச்னைகள் இருக்கக்கூடாது என்பது எவ்வளவு முக்கியமோ, அதைச் செயலுக்குக் கொண்டுவருவதிலும் பிரச்னைகள் வந்துவிடக்கூடாது. இவற்றில் பிரச்னைகள் வரும்போது நீதி வழங்குதலிலும் எந்தப் பிரச்னைகளும் வந்துவிடக்கூடாது. ஏனெனில் இவை செம்மையாக நடக்காவிட்டால் குடிமக்கள் பாதிப்படைவர். எனவே ஒன்றிய அரசு, மாநில அரசு, பஞ்சாயத்துகள் ஆகியவை மக்களை எப்படி ஆளவேண்டும் என்பதைத் தெளிவுற அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கிறது.
ஒரு நாட்டின் குடிமக்களாக நாம் இருக்கிறபட்சத்தில், பல்வேறு சட்டங்கள் நம் நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, இந்திய குடிமக்கள் அனைவரும் வாகனங்களைப் பயன்படுத்துகிறோம் என்றால் நம் விருப்பம்போல் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த முடியாதல்லவா? ஏனெனில் மோட்டார் வாகனச்சட்டம் 1988ல் உள்ள சட்டவிதிகளுக்கு உட்பட்டு மட்டுமே நம்மால் வாகனங்களை பயன்படுத்த முடியும்.
இப்படி ஒரு நாட்டில் குடிமக்களாகிய நாம் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் சட்டத்துக்கு உட்பட்டு மட்டுமே இருக்க வேண்டும். சட்டம் என்பது நம்மைக் கட்டுப்படுத்த மட்டும்தானா என்றால், இல்லை என்பதுதான் பதில். சட்டங்கள் நம்மை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவது ஒரு பக்கமென்றால், மறுபக்கம் சட்டங்கள் நமக்கான உரிமைகளையும் உறுதிச் செய்கின்றன.
ஒரு நாட்டின் குடிமக்களாக நாம் இருக்கையில், நமக்கான உரிமைகளை அரசு உறுதிசெய்ய வேண்டும். அதேபோல் நாம் செய்யவேண்டிய கடமைகளும் இருக்கும். இந்த உரிமைகள் என்னென்ன? இந்த கடமைகள் என்னென்ன? எவ்வெவற்றை எப்படிச் செய்ய வேண்டும்? எவை தண்டனைக்குரிய குற்றங்கள்? அவற்றுக்கான தண்டனைகள் என்னென்ன? நடைமுறைகள் எப்படி இருக்க வேண்டும்? அரசு கடைபிடிக்க வேண்டிய நடைமுறை என்ன? குடிமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறை என்ன? இப்படி நாம் வாழும் நிலத்தில் பல்வேறு தளங்களில் நாம் செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் ஏதாவது ஒரு சட்டம் ஒழுங்குமுறைப்படுத்தும். இவை சாதாரண சட்டங்கள்.
எடுத்துக்காட்டாக, இந்திய தண்டனைச் சட்டம், 1860. எவையெவை குற்றங்கள், அந்தக் குற்றங்களுக்கு என்னென்ன தண்டனைகள் என்று சொல்வதே இந்திய தண்டனைச் சட்டம்.
அடுத்ததாக, இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872. ஒப்பந்தங்கள் என்றால் என்ன? எப்படி ஒப்பந்தம் போடுவது? ஒப்பந்தம் போடப்பட்டால் அந்த இரு தரப்பினரின் உரிமைகள், கடமைகள் என்னென்ன? ஆகியவற்றைச் சொல்வதே இந்திய ஒப்பந்தச் சட்டம்.
‘இப்படித்தான் இருக்க வேண்டும்’, ‘இப்படிச் செய்யக்கூடாது’ என்று சட்டங்கள் நமக்கு ஒரு வரையறையை விதிக்கின்றன. இப்படி வரையறையை விதிக்கும் சட்டங்களுக்கு ஒரு கட்டுப்பாடு, ஒரு வரையறை இருக்க வேண்டுமல்லவா? அப்படி எதுவும் இல்லாமல் போனால் மிகப்பெரும் பிரச்சனைகள் வர நேரிடும்.
அப்படி என்ன பிரச்சனை வந்துவிடும் என்பதைப் பார்ப்போம்.
எடுத்துகாட்டாக, 1988ஆம் ஆண்டு அமலுக்கு வந்த மோட்டார் வாகனச் சட்டத்தை இங்கே வைத்துக்கொள்வோம். இந்தியா முழுக்க இந்தச் சட்டத்தை குடிமக்கள் அனைவரும் கடைபிடிக்கவேண்டும். நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அது இந்தியா முழுமைக்கும் அமலாகும். நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டங்களை இயற்றுவது யார்?
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சட்டங்களை இயற்றுகிறார்கள். இவர்களுக்கு அந்தச் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை வழங்குவது யாரென்றால், குடிமக்களாகிய நாம்தான். வாக்கு அளித்து அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக்குவதன் மூலம் அவர்களுக்கு இந்த அதிகாரத்தை நாம் வழங்குகிறோம். நாம்தானே வாக்களித்து அவர்களுக்குச் சட்டம் இயற்றும் அதிகாரத்தைக் கொடுக்கிறோம், அவர்கள் இயற்றும் சட்டத்தில் அப்படி என்ன மாபெரும் பிரச்சனை வந்துவிடும்?
மேற்குறிப்பிட்ட மோட்டார் வாகனச் சட்டத்துக்கு வருவோம். தற்போது அமலில் உள்ள மோட்டார் வாகனச் சட்டத்தின் மீது ஆட்சியில் உள்ள அரசாங்கம் அதிருப்தி கொள்கிறது என்று வைத்துக்கொள்வோம். புதிதாக ஒரு மோட்டார் வாகனச் சட்டத்தைக் கொண்டு வருகிறது. அதில் பெண்கள் வாகனம் ஓட்டக்கூடாது, ஓட்டினால் 1000 ரூபாய் அபராதம் என்று சொன்னால் என்ன ஆவது?
ஆகவே, இயற்றப்படும் சட்டங்களுக்கு ஒரு கடிவாளம் தேவைதானே? இல்லையெனில் சட்டங்கள் இஷ்டத்துக்கு எழுதப்படும் நிலை வந்துவிடும் இல்லையா? நாட்டில் உள்ள, வரப்போகிற அனைத்துச் சட்டங்களுக்கும் போடப்பட்ட கடிவாளம்தான் அரசியலமைப்புச் சட்டம்.
மேற்சொன்னது போல பாகுபாடு காட்டக்கூடிய ஒரு சட்டத்தைக் கொண்டு வரமுடியாது. ஏனென்றால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 15இன் படி, இனரீதியாகவோ, மதரீதியாகவோ, பாலினரீதியாகவோ பாகுபாடு உடைய சட்டத்தை அரசால் கொண்டு வரமுடியாது.
இப்படியாக அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணாக ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அந்தச்சட்டம் செல்லாது. நாடாளுமன்றமோ, மாநிலச் சட்டமன்றமோ இயற்றுகிற ஒரு சட்டமானது அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஏற்கனவே சொன்னதுபோல, அரசியலமைப்பில் மக்களுக்கு கொடுத்திருக்கும் உரிமையை எந்தச் சாதாரணச் சட்டங்களும் பறிக்கக்கூடாது. அப்படி அரசியலமைப்புச் சட்டத்தை ஒரு சட்டம் மீறினால் அது செல்லாமல் ஆகிவிடும். சரி, ஒரு சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தை மீறுகிறதா? இல்லையா? என்பதை யார் முடிவு செய்வது?
சட்டத்தை இயற்றுபவர்களிடமோ, சட்டத்தைச் செயலாக்கத்திற்குக் கொண்டு வருபவர்களிடமோ இந்தப் பொறுப்பை ஒப்படைக்க முடியாது. அவற்றைச் செய்வதற்குத்தான் நீதிமன்றங்கள் இருக்கின்றன.
சாதாரணச் சட்டம் ஒன்று அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு இருக்கிறதா? இல்லை, அதனை மீறுகிறதா என்பதை சட்ட அறிவியல் சொல்லும் கோட்பாடுகள் மூலம் ஆராய்ந்து, அணுகி நீதியை நிலைநாட்டுவதே நீதிமன்றங்களின் வேலை. நீதிமன்றங்கள்தான் அரசியலமைப்பைக் காக்கின்றன. அரசியலமைப்பில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதை மீறினால் நீதிமன்றம் குறுக்கே வந்து அதைக்காப்பாற்றும்.
அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டவற்றை எப்போதுமே மாற்ற இயலாதா? நிச்சயமாக இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரலாம். மாற்றங்களின்றி ஆரம்பத்தில் இருந்ததுபோலவே கடைசிவரை எதுவொன்று இருந்தாலும் அது பழமையானதாகவும் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்றாக மாறிவிடும். சட்டமும் அதேமாதிரிதான். மக்களின் பழக்கவழக்கங்கள், அரசியல் சூழ்நிலைகள் மாறமாற, சட்டங்களும் மாறுதல் அவசியம். இல்லையெனில் அவை நடைமுறைக்கு ஒத்துவராத பழையப் பஞ்சாங்கமாகிவிடும்.
அப்படி மாற்றங்கள் கொண்டு வருவது எளிதான வேலை அல்ல. அதற்கென்று நடைமுறைகள் உள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டுமெனில், மாநிலங்களவை, மக்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடவேண்டும். இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கினர் பங்குபெற்று, அவர்களில் மூன்றில் இரு பங்கினர் வாக்களித்தால் மட்டுமே அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர இயலும். அரசியலமைப்புச் சட்டத்தின் பெரும்பாலான பிரிவுகளை இந்த வழிமுறை மூலம் திருத்தி எழுதலாம். ஒரு சிலப் பிரிவுகளை திருத்தி எழுத, பெரும்பாலான மாநிலச் சட்டமன்றங்களின் ஒப்புதலும் தேவைப்படும்.
அரசியலமைப்புச் சட்டத்தை இன்னும் தெளிவாக விளங்கிக்கொள்ள விரிவான எடுத்துக்காட்டு ஒன்றை அடுத்த பகுதியில் காணலாம்.
(தொடரும்)
______________
மேற்கோள் நூல்கள்
1. H.M. SEERVAI, CONSTITUTIONAL LAW OF INDIA (4th ed.2021)
2. M.P.JAIN, INDIAN CONSTITUTIONAL LAW (8th ed.2018)
3. V.N.SHUKLA, CONSTITUTION OF INDIA (14th ed.2022)
4. முரசொலி மாறன், மாநில சுயாட்சி (3rd ed.2017)