அமெரிக்காவின் கூட்டாட்சி முறையைத்தான் சட்டவல்லுநர்கள் கூட்டாட்சிக்கான இலக்கணமாகக் கொள்கின்றனர். அமெரிக்காவில் கூட்டாட்சி எவ்வாறு அமைந்ததென்று சென்ற பகுதியில் பார்த்தோம். அதற்குநேர்மாறாக, மத்திய அரசு தன்னிடம் உள்ள அதிகாரங்களை, மாநிலங்களுக்குக் கொடுப்பதன்மூலம் ஒரு கூட்டாட்சியை அமைத்தால், அது தலைகீழ் முறையில் அமையும் கூட்டாட்சி என்பதையும் பார்த்தோம். இப்படியாகத் தலைகீழ் முறையில், இந்தியாவில் ஒரு கூட்டாட்சியை உருவாக்கியது பிரிட்டிஷார் கொண்டு வந்த 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டம். இப்படித் தலைகீழ் முறையில் கூட்டாட்சி அமைய வேண்டிய சூழ்நிலை ஏன் ஏற்பட்டது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.
இதற்கு முக்கிய காரணம்,
i ) தற்போதைய இந்திய நாடு, பிரிட்டிஷார் வருகைக்கு முன்னர் ஒற்றை நாடாக இருந்ததில்லை.
ii) இந்தியா என்ற நிலப்பரப்பு இருந்ததே தவிர, அந்நிலப்பரப்பு முழுமையாக ஒரே ஆட்சியாளரின்கீழ் இருந்ததே இல்லை. பல நூறு மன்னராட்சி நாடுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்தன. பல கலாச்சாரங்கள் கொண்ட வெவ்வேறு தேசிய இனங்கள் தற்போதைய இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்து வந்தனர்.
iii) அவர்களுக்குள் ‘இந்தியர்கள் என்ற தேச உணர்வு’ அப்போது இருந்ததில்லை.
ஜேம்ஸ் பிரைஸ் என்கிற ஆங்கிலச் சட்ட வல்லுநர் தேசியத்தை இவ்வாறாக வரையறுக்கிறார்: ‘ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்கள் குழுவுக்குள், ஒரு பொதுவான மொழி, இலக்கியம், கருத்துக்கள், பழக்கவழக்கங்கள், மரபுகள் ஆகியவை இருப்பின் அவை மக்களிடையே ஒரு பொதுவான உளப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்திவிடும். இதே போன்ற பிணைப்பில் ஒன்றாக சேர்ந்திருக்கும் வேறொரு சமுதாய மக்களிடமிருந்து தங்கள் சமுதாயம் மாறுபட்ட தனித்தன்மையைப் பெற்றுள்ளதென உணரக்கூடிய உளப்பூர்வமான பிணைப்பை அந்தச் சமுதாய மக்கள் பெற்றிருந்தால், அந்த ஒற்றுமைப் பிணைப்புணர்வை, ‘தேசிய உணர்வு’ எனலாம்.’
பிரிட்டிஷார் வருகைக்கு முன்னர், அப்படிப்பட்ட பொதுவான தேச உணர்வு தற்போதைய இந்தியாவில் இருந்ததில்லை. ஏனென்றால், அப்போது மட்டுமல்ல இப்போதுவரை இந்தியா பல கலாச்சாரங்களைப் பல பண்பாடுகளைப் பின்பற்றும் மக்கள் வாழும் நிலப்பரப்பாகத்தான் இருந்து வருகிறது. இவர்களுக்குள் பொதுமொழி என்பதாக ஒன்று கிடையாது. அதனால்தான் தற்போதுவரை இந்தியாவுக்கென்று தனித்த தேசியமொழி ஒன்று கிடையாது. ஆங்கிலமும் இந்தியும் அலுவல் மொழிகள் மட்டுமே.
இந்தியாவில் உள்ள வேற்றுமைகள் குறித்து சர் ஜான் ஸ்ட்ரேச்சி எனும் ஆங்கிலேய ஐ.சி.எஸ் அதிகாரி தன்னுடைய ‘India: Its Administration and Progress’ எனும் நூலில் இவ்வாறு எழுதியிருக்கிறார்: ‘இந்திய நாடுகளுக்கிடையிலான வேற்றுமைகளைக் காட்டிலும், ஐரோப்பிய நாடுகளிடம் இருக்கும் வேற்றுமைகள் ஐயமின்றி மிகக்குறைவானதுதான். வங்கம், பஞ்சாப்பை ஒத்திருப்பதைக் காட்டிலும், ஸ்காட்லேண்டு, ஸ்பெயினை ஒத்துள்ளது. மத, இன வேறுபாடுகள் ஐரோப்பாவைப் போலவே இந்தியாவிலும் விரவியுள்ளன. சீக்கியர்களிடமிருந்து தமிழர்கள் மாறுபடும் அளவுக்கு, நாகரிகம் பெற்ற ஐரோப்பியக் கண்டத்திலுள்ள பல நாடுகளின் மக்கள் மாறுபட்டு இருக்கவில்லை. தென் இந்திய மொழிகள், இலண்டனில் எவ்வளவு பொருளற்றவையாய்த் தோன்றுகிறதோ, அதேயளவு லாகூரிலும் பொருளற்றதாய்த் தோற்றமளிக்கின்றன. பாரிஸிலும், ரோமிலும், ஆங்கிலேயன் எப்படி ஓர் வெளிநாட்டவனோ அப்படி பெஷாவரிலும், டெல்லியிலும். கல்கத்தாவைச் சார்ந்த ஒருவன் வெளிநாட்டவனே.’
வரலாற்றாசிரியர் ரொனால்டு சேகல், இந்தியா குறித்த தனது அனுபவங்களோடு சேர்த்து இந்திய நாட்டில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் ‘Crisis of India’ என்ற நூலில் எழுதினார். அதில் தான் எப்படிப்பட்ட இந்தியாவைக் கண்டேன் என்பதை இவ்வாறு எழுதுகிறார்: ‘இன்றைய இந்தியா, மொழிவாரி மாநிலங்களைக் கொண்ட ஓரு கூட்டாட்சி ஒன்றியம். வேறுபட்ட பல மக்கள் குழுக்களையும், பழக்க வழக்கங்களையும், மொழிகளையும் மரபுகளையும், ஒன்றாக இணைத்த ஒரு நாடுதான் இந்தியா. அதற்கு மொழிவாரி மாநிலங்களே சான்று பகிர்கின்றன. இந்திய முனைக்கோடிகளில் அதன் வேறுபாடுகள் மிக ஆழமாய்த் தெரிகின்றன. வட இந்திய விவசாயி, உருவம், அளவு, நிறம், உடை, மொழி, மரபு ஆகியவைகளால் தென்னிந்தியனிடமிருந்து மாறுபடுகிறான்.’
சர்.ஜான் ஸ்ட்ரேச்சி இந்தியா குறித்துக் கூறியதாவது: ‘இந்தியா குறித்து நாம் முதலும் முக்கியமாகவும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியா என்றொரு தேசம் இல்லை. அப்படி ஒரு தேசம் வரலாற்றில் இருந்ததும் இல்லை. இந்திய மக்கள் என்று யாரும் இல்லை. பல்வேறு நாடுகளை உள்ளடக்கிய மாபெரும் நிலப்பரப்பிற்கு, இந்தியா என்ற பெயரை வழங்கியது பிரிட்டிஷ்காரர்கள்.’ மேலும், ‘இந்தியாவை ஆளுகின்ற ஆங்கிலேயர்கள் வெளிநாட்டினர் என்றால், அதற்குமுன் இந்திய நாடுகளை ஆட்சிசெய்த மன்னர்களும் வெளிநாட்டினர்தான்’ என்கிறார்.
தற்போதைய இந்தியா, பிரிட்டிஷார் வருகைக்கு முன்பு ஒரே ஆட்சியாளரின் கீழ் இருந்திருக்கிறதா என்றால் இல்லவே இல்லை. பல தனித்தனி நாடுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் அமைந்திருந்தன. இப்படித் தனித்தனியாக இருந்த நாடுகளைச் சில பேரரசுகள் தங்கள் ஆட்சிப்பகுதியில் இணைத்துக் கொண்டது உண்டு. அத்தகைய சிற்றரசுகள், பேரரசுகளின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு இருந்தன. ஆனால் அவை தனித்தே இயங்கின.
ஆங்கிலத்தில் ‘Suzerainty’ என்றொரு சொல் உண்டு. தன்னளவில் சுதந்திரமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல், அந்நாட்டைத் தமது விசுவாத்துக்குட்பட்ட நாடாக ஓரு பேரரசு வைத்திருப்பதே ‘Suzerainty’ எனப்படும். இப்படியாகப் பேரரசுகள் எனப்பட்டவை, சிற்றரசுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமல் அந்நாட்டின் மீது தனது மேலாண்மையை மட்டுமே செலுத்துவதாக இருந்தன. மௌரியர்கள், கனிஷ்க அரசுகள், குப்தர்கள், ஹர்ஷர்கள் போன்ற அனைத்து பேரரசர்களின் ஆட்சியிலும் சிற்றரசுகள் தன்னளவில் தனித்தே இயங்கின.
மௌரியப் பேரரசர் அசோகர் காலத்தில் (கி.மு. 230) மட்டுமே தற்போதைய இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதிகள் ஒரே ஆட்சியின்கீழ் இருந்தன. சரியாகச் சொல்ல வேண்டுமானால், தற்போதைய தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், வங்கதேசத்துக்கு அப்பால் உள்ள தற்போதைய இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றைத் தவிர மொத்த இந்தியத் துணைக்கண்டமும் அசோகர் ஆட்சியின்கீழ் இருந்தது. அப்போதும் மேற்சொன்னதுபோல சிற்றரசுகள் தன்னாட்சி பெற்றே விளங்கின. அதன்பின்னர் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் காலத்திலும் (கி.பி.1707) தமிழ்நாடு நீங்கலாக இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் ஒரே ஆட்சியின்கீழ் இருந்தது.
அசோகர் காலம் தொட்டு, அதாவது கி.மு.230 முதல் முகலாயர்கள் ஆட்சிக்காலத்தின் தொடக்கமான கி.பி.1500ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் பல நாடுகள் தனித்தே இயங்கி வந்தன. மௌரியர், கனிஷ்க, குப்தர், ஹர்ஷர் பேரரசுகள் இடையிடையே மேலோங்கியபோதும், தனித்தனியாக இருந்த நாடுகளின் தன்னாட்சிக்கும் அவற்றின் தனித்தன்மைக்கும் எவ்வித பாதிப்புகளும் வரவில்லை.
முகலாயர்கள்தான் முதன்முதலில் வலிமையான மைய அரசைக் கட்டமைத்தனர். தங்களின் ஆட்சியின்கீழ் உள்ள பகுதிகளை 12 சுபாக்களாக பிரித்தனர். சுபாக்கள் என்பன மாநிலங்கள் போன்றவை. நிர்வாக வசதிக்காக அவர்கள் ஆட்சி செய்யும் பகுதிகளை 12 பகுதிகளாகப் பிரித்தனர். அதுவே சுபா (Subahs) என அழைக்கப்பட்டது. இவை, இன்று உள்ள இந்திய மாநிலங்கள்போல் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டவை அல்ல. ஒவ்வொரு சுபாவையும் ஆட்சி செய்ய ஒரு சுபேதார் நியமிக்கப்படுவார். சுபேதார் என்றால் ஆளுநர் என்று பொருள். சுபேதார்கள் மூலம் நேரடியாக ஒவ்வொரு சுபாக்களையும் தன் நேரடிக் கட்டுப்பாட்டில் முகலாய அரசு கொண்டுவந்தது.
இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், தனித்து தன்னாட்சியுடன் இயங்கிய பல நாடுகளின் தன்னாட்சி உரிமையைப் பறித்து, தன் நேரடிக் கட்டுப்பாட்டில் முகலாயர்கள் கொண்டு வந்தது உண்மை. ஆனால், கிராம நிர்வாகத்தைப் பொறுத்தவரை, முகலாய அரசு ஏற்கெனவே இருந்த பழைய முறைகளை அப்படியே தக்கவைத்துக்கொண்டது. கிராம நிர்வாகங்களில் முகலாயர்கள் தங்கள் மூக்கை நுழைத்ததில்லை. நேரடியாகப் பேரரசைத் தொல்லை செய்யாதவரையில் பேரரசும் மக்களை எவ்வித தொல்லைகளுக்கும் ஆட்படுத்தவில்லை.
இந்திய துணைக்கண்டத்தில் பாபர் முகலாய அரசைத் தோற்றுவித்த ஆண்டு 1524ஆம் ஆண்டு என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது. ‘ஆனால், அது பாபர் இந்தியாவுக்குள் நுழைந்த ஆண்டு மட்டுமே. 1559ஆம் ஆண்டுவரையிலான அக்பரின் ஆட்சிக்காலத்தில்கூட பஞ்சாப், டெல்லி, ஆக்ரா என இதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமே முகலாயப் பேரரசு வசம் இருந்தன. 1591 முதல் 1594 வரையிலான காலக்கட்டத்தில் பெங்கால், சிந்து , குஜராத் ஆகிய பகுதிகளை அக்பர் தன்வசமாக்கிய போதுதான் முகலாயர்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் தங்கள் பேரரசை நிறுவினார்கள் என்று கணக்கில் கொள்ள முடியும்’ என்கிறார் ஆங்கிலேய வரலாற்றாய்வாளர் சர் ஜான் ராபர்ட் சீலி.
நாம் கவனிக்கவேண்டிய விஷயம் அக்பரும் இந்தியாவின் பேரரசராக இல்லை. ‘பெரும்பாலும் இந்தியாவையும் இந்துஸ்தானத்தையும் பலர் குழப்பிக்கொள்வதுண்டு. அக்பர் ஹிந்துஸ்தானத்தின் பேரரசராக மட்டுமே இருந்தார்’ என்கிறார் ராபர்ட் சீலி.
பண்டைய கிரேக்கர்கள், சிந்துநதிக்கு அப்பால் உள்ள பஞ்சாப் பகுதியையும், கங்கை நதியைச் சுற்றியுள்ள பகுதிகளையும் குறிக்க ‘இந்தியா’ என்ற சொல்லை பயன்படுத்தினர். ஆனால் அவர்கள் அதில் தக்காணப் பகுதியைச் சேர்த்துக்கொள்ளவில்லை. (தக்காணப் பகுதி என்பது நர்மதா நதிக்குக் கீழே, தென்மேற்காக மேற்குத் தொடர்ச்சி மலைகள், தென்கிழக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியவற்றுக்கு இடையேயான முக்கோணப் பகுதி. இதற்கும் கீழே உள்ள பகுதிதான் தற்போதைய தமிழ்நாடு)
ஆகவே, அக்பர் இந்துஸ்தானத்தின் பேரரசராக மட்டுமே இருந்தார். ஏனெனில் இந்தியா என்றால் அது தற்போதைய ஒட்டுமொத்த இந்தியாவையும் குறிக்கும். 1683ஆம் ஆண்டுதான் அவுரங்கசீப், தக்காணப் பகுதியையும் தன்வசமாக்கினார். 1707ஆம் ஆண்டு அவுரங்கசீப் காலமானார். அதனைத் தொடர்ந்து முகலாயர்களின் பேரரசும் சடசடவென சரியத்தொடங்கியது. முகலாயர்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்தது சற்றேறக்குறைய 25 ஆண்டுகள் மட்டுமே. அப்போதும் தற்போதைய தமிழ்நாட்டின் நிலப்பரப்பு முகலாய பேரரசிடம் பலியாகவில்லை.
இவற்றில் இருந்து நமக்குத் தெளிவாகப் புலப்படுகிற விஷயம், அசோகர் காலம் முதற்கொண்டு முகலாயர்கள் வருகைக்கு முன்னர்வரை (கி.மு.268 – கி.பி.1524) இந்தியத் துணைக்கண்டம் அதிக அதிகாரங்கள் கொண்ட ஒரே மத்திய ஆட்சியின்கீழ் இருந்ததில்லை. இந்தியா என்பது பல நாடுகளைக் கொண்ட துணைக் கண்டமாக இருந்துள்ளது. அவ்வப்போது சில பத்து ஆண்டுகள் ஒரு சில பேரரசுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் கால் பதித்தாலும்கூட, அவை இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள பல நூறு நாடுகளின்மீது தனது மேலாண்மையை மட்டுமே செலுத்தியது. அவை ஒருபோதும் இந்தியத் துணைக்கண்டம் முழுவதையும் ஒரே ஒரு மத்திய அரசின் மூலம் ஆட்சி செய்ததில்லை.
எனவேதான் பேராசிரியர் சீலி, ‘இந்தியா என்பது சிந்து நதிக்கு அப்பால் உள்ள புவியியல் நிலப்பரப்பைக் குறிக்கும் சொல். ஐரோப்பா எப்படி ஒரு புவியியல் குறியீடாக இருக்கிறதோ அதேபோல் இந்தியாவும் ஒரு புவியியல் குறியீடு மட்டுமே. அரசியல்ரீதியாக இந்தியா என்ற ஒன்று பிரிட்டிஷ் வருகைக்கு முன்னர் இருந்ததில்லை’ என்கிறார்.
ஆங்கிலேய ஆட்சியின்போதுதான் ஒட்டுமொத்த இந்தியத் துணைகண்டமும் ஒரே மைய ஆட்சியின்கீழ் வந்தது. தலைகீழ் முறையில் இந்தியாவில் கூட்டாட்சி அமைய முக்கியக் காரணம், ஒரே நாடாக இருந்திராத இந்தியாவை ஒரு மைய ஆட்சியின்கீழ் பிடித்து வைத்ததினால்தான். முகலாயர்களுக்குப்பின் வந்த ஆங்கிலேயர்களும் இப்படியான ஒரே மைய ஆட்சியின் மூலம் ஆள்வதையே விரும்பினர். முகலாயர்களின் மைய ஆட்சி என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது, அவர்களுக்கு எதிராக வெகுண்டெழாத விடுதலை இயக்கம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மாபெரும் இயக்கமாக எழ வேண்டியத்தேவை ஏன் ஏற்பட்டது என்பதைக் குறித்து அடுத்தடுத்து வரும் பகுதிகளில் காணலாம்.
(தொடரும்…)
______________
மேற்கோள் நூல்கள்
1. கு.ச.ஆனந்தன், மலர்க மாநில சுயாட்சி, தங்கம் பதிப்பகம் (2nd ed.2017)
2. கு,ச.ஆனந்தன், இந்தியாவில் தேசிய இனங்களும் தமிழ்த் தேசியமும், தங்கம் பதிப்பகம் (Revised ed.2020)
3. Sir John Strachey, India: Its Administration and Progress, Macmillan and Co (3rd ed.1903)
4. Ronald Segal, Crisis of India, Jaico Publishing House Bombay, (1st ed.1968)
5. John Robert Seeley, The Expansion of England, Macmillan and Co (1st ed.1902)
6. Jadunath Sarkar, Mughal Administration, M.C.Sarkar & Sons Calcutta (1st ed.1920)
7. R.C.Majumdar, History of the Freedom Movement in India Vol.1, Firma K.L.Mukhopadhyay (2nd Revised ed.1971)