Skip to content
Home » இந்திய மக்களாகிய நாம் #9 – இந்தியாவில் ‘ஹிந்து’ மதம்

இந்திய மக்களாகிய நாம் #9 – இந்தியாவில் ‘ஹிந்து’ மதம்

இந்திய மக்களாகிய நாம்

இந்தியா என்பது ஒரு நாடு அல்ல; அது ஒரு துணைக்கண்டம் என்று சர் ஜான் ஸ்ட்ரேச்சிக் கூறியிருந்ததைச் சென்ற பகுதியில் கண்டோம். அதேபோல் பேராசிரியர் சர் ஜான் ராபர்ட் சீலி, இந்தியாவை ஐரோப்பா போன்றதொரு புவியியல் குறியீடு மட்டுமே என்று கூறியிருந்ததையும் பார்த்தோம்.

அதற்குச் சீலி முன்வைக்கும் முக்கியமான காரணம், தற்போதைய இந்தியா, பிரிட்டிஷ் வருகைக்கு முன்னர் ஒரே ஆட்சியின்கீழ் இருந்ததே கிடையாது என்பதே. ஏறக்குறைய ஒட்டுமொத்த இந்தியத் துணைக்கண்டமும் அசோகர் காலத்திலும் அவுரங்கசீப் காலத்திலும் ஒரே ஆட்சியின்கீழ் இருந்ததுண்டு. ஆனால் அப்போதும் தற்போதைய தமிழ்நாடு அவ்விரு ஆட்சிகளின்கீழ் இருந்ததில்லை.

இந்தியத் துணைக்கண்டத்தில் பல்வேறு கலாசாரங்கள், மொழிகளைக் கொண்டு வாழ்ந்து வந்த பல்வேறு தரப்பட்ட மக்கள், துணைக் கண்டத்தில் பிற பகுதிகளில் வாழும் மக்களைப் பிற நாட்டினர் என்றே கருதினர். ‘ஆங்கிலேயர்களை எவ்வாறு வெளிநாட்டினராக ஹிந்துஸ்தானியர்கள் பார்த்தனரோ, அவ்வாறே பெங்காலிகளையும் வெளிநாட்டினர்போல கருதினர்’ எனக் கல்கத்தா முதல் பம்பாய் வரை தான் மேற்கொண்ட பயண அனுபவத்தை நூலாக எழுதிய ரெஜினால்டு பிஷப் என்ற கிறிஸ்துவ பாதிரியார் கூறுகிறார்.

‘1850க்கு முன் இந்திய நிலப்பரப்பில் பெங்காலிகள், ஹிந்துஸ்தானிகள், மராட்டியர்கள், சீக்கியர்கள் இருந்தனர், ஆனால் அவர்கள் யாரும் இந்தியர்கள் அல்லர்’ என்கிறார் இந்திய வரலாற்றாய்வாளர் ஆர்.சி.மஜூம்தார். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் இந்தியத் தேசிய உணர்வு கட்டமைக்கப்பட்டது என்றும் அவர் கூறுகிறார். (இதுகுறித்து விரிவாகப் பின்னர் காண்போம்)

அடுத்ததாக, பொதுமொழி என்பது தேசியத்தின் மிக முக்கியமான கூறுகளில் ஒன்று. பிரிட்டிஷாருக்கு ஆங்கிலம் போன்று, ஃபிரான்ஸ் நாட்டுக்கு ஃபிரெஞ்சு மொழி போன்று; ஒரு நாட்டு மக்கள் எனப்படுபவர்கள் ஒரே மொழியினால் பிணைக்கப்பட்டிருப்பர். இந்தியாவில் மக்களுக்கு இடையே அப்படிப்பட்ட பொதுமொழி பிணைப்பு என்று ஏதும் இல்லை.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், வட இந்தியாவின் மொழிகளான பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி ஆகியவை இந்தோ – ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் இந்தோ- ஈரானியப் பிரிவைச் சேர்ந்தவை. ஐரோப்பிய மொழியான ஃபிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ் ஆகியவை இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் ரோமானியப் பிரிவைச் சேர்ந்தவை.

அவ்வளவு ஏன், ஆங்கிலமும் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவைதான். மேற்சொன்ன வட இந்திய மொழிகளுக்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும்கூட அடிப்படையில் ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற ஒற்றுமை உள்ளது.

ஆனால், தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்றவை வட இந்திய மொழிகளான ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி போன்றவற்றைவிட மிகவும் வேறுபட்டு இருக்கின்றன. மேற்சொன்ன தென்னிந்திய மொழிகள் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை.

வட இந்தியாவின் இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கும், தென்னிந்தியாவின் திராவிட மொழிக் குடும்பங்களுக்கும் இருக்கும் வித்தியாசம் என்பது எவ்வளவு மலைப்பானது எனில், இப்படியான வித்தியாசங்கள் ஒட்டுமொத்த ஐரோப்பியக் கண்டத்திலுள்ள எந்த மொழிகளுக்கிடையிலுமே இல்லை என்று பேராசிரியர் சீலி கூறுகிறார். எனவேதான், இமயமலை, இந்துக்குஷ் மலைத்தொடருக்குக் கீழே இருக்கும் நிலப்பரப்பைக் குறிக்கும் சொல்லே இந்தியா என்றும், அது ஒரு நாட்டைக் குறிக்கும் சொல் அல்ல என்கிறார்.

ஏனெனில் மேற்சொன்னதுபோல, இந்தியாவின் வட பகுதிக்கும் தென் பகுதிக்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் அபரிமிதமாக உள்ளதாக அவர் சொல்கிறார். சமஸ்கிருதம் பேசும் ஆரியர்களின் பிராமணிய மதம் முதலில் பஞ்சாப், கங்கைப் படுகையைச் சுற்றிப் பரவ ஆரம்பித்தாலும், உடனே தெற்குப் பகுதியில் பரவ ஆரம்பித்துவிடவில்லை.

பின்னர் காலப்போக்கில் பிராமணியம் தெற்கில் பரவியிருந்தாலும், ஆரியர்கள் அல்லாத மொழிக்குடும்பங்களும், இனங்களும் மிகுதியாகத் தென்னிந்தியாவில் உள்ளதாகச் சீலி குறிப்பிடுகிறார். இந்திய வரலாற்றாசியர் இர்ஃபான் ஹபீப் அவர்களும் இதே கருத்தைத் தெரிவிக்கிறார்.

அவரது கருத்தைப் புரிந்துகொள்வதற்கு முன் ‘ஹிந்து’ என்ற சொல்லின் மூலத்தை அறிவது அவசியம். பண்டைய காலப் பெர்சியர்களால் பயன்படுத்தப்பட்ட சொல் ‘ஹிந்து’. இந்தியத் துணைக்கண்டத்தில் வாழ்ந்த பெரும்பகுதி மக்கள், எந்தவொரு மதக் கோட்பாடுகளையும் ஒரே சீராகப் பின்பற்றாமல், பல்வேறு ஜாதிப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக வாழ்ந்து வந்தனர்.

இந்த ஜாதிகள் எனப்படுபவை செங்குத்தாக நிறுத்தப்பட்ட ஏணி ஒன்றின் படிக்கட்டுகளில் மேலிருந்து கீழ்வரை, ஒன்றின்கீழ் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்தது. அந்த ஏணியில் மேலே வைக்கப்பட்டுள்ள ஜாதிகளுக்குச் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து இருந்தது. அதிலிருந்து கீழே வரவர மேலிருக்கும் ஜாதிகளைவிட கீழுள்ள ஜாதிகள் குறைந்த அந்தஸ்து கொண்டவையாக இருந்தன.

இந்த ஏணி போன்ற அமைப்பின் பெயர்தான் வர்ண முறை. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பதாக நான்கு வர்ணங்களாக அந்த அமைப்பு பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வர்ண மக்களுக்கும் வெவ்வேறு நீதி என்பதாக இருந்தது. இப்படியான அமைப்பில் இருந்த மக்கள் ஒத்தத்தன்மையுடைய சீரான மத நம்பிக்கைகளாலோ மதக்கோட்பாடுகளாலோ ஒன்றுபட்டு இருந்ததில்லை.

சிந்து நதிக்கு அப்பால் இந்தியத் துணைக்கண்டத்தில் இத்தகைய சமூக அமைப்பில் இருந்த மக்களைக் குறிக்க பண்டைய பெர்சியர்களால் பயன்படுத்தப்பட்டதே ‘ஹிந்து’ என்ற சொல். காலப்போக்கில் பல்வேறு சூழ்நிலைகளால் அந்த அமைப்பு ஒற்றை மதம் என்ற கட்டமைப்பைப் பெற்றது. ஆனால் உண்மையில் ‘இந்து’ என்பது ஒரு மதம் என்பதானதாக இருந்ததில்லை.

ராம்சந்திர டன்டேக்கர் என்கிற இந்திய வரலாற்று ஆய்வாளர், இதுகுறித்துக் கூறியவற்றைப் பார்ப்போம். ‘ஹிந்துயிஸம் என்பதை ஒரு மதம் என்று சொல்லமுடியாது. ஏனென்றால், மற்ற மதங்களைப்போல,

i) ஹிந்துயிஸத்தின் மையம் கடவுளைச் சார்ந்ததாக இருக்கவில்லை.

ii) ஹிந்துயிஸத்தில் உள்ள கடவுள்களுக்கென்று ஒரு குறிப்பிட்ட தன்மைகள் என ஏதும் வரையறுத்துச் சொல்லப்படவில்லை.

iii ) கடவுளின் தூதர், மதத்தைத் தோற்றுவித்தவர்கள் எனக் குறிப்பிடத்தக்க எவர் ஒருவரையும் ஹிந்துயிஸம் குறிப்பிடுவதில்லை.

iv) எந்த ஒரு குறிப்பிட்ட நூலையும் தனது அதிகாரப்பூர்வ புனித நூலாக ஹிந்துயிஸம் கொண்டிருப்பதில்லை.

v) அனைவரும் கட்டாயம் பின்பற்றவேண்டிய மதக்கோட்பாடுகள் என எவையும் ஹிந்துயிசத்தில் இல்லை.

vi) ஹிந்துக்கள் என்று அழைக்கப்படுபவர்கள் மத்தியில் பொதுவான மதநம்பிக்கை, வழிபாட்டு நம்பிக்கை என்று ஏதும் இருப்பதில்லை’ என்று தனது ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றில் எழுதியுள்ளார். டன்டேக்கர் சமஸ்கிருதத்தில் எம்.ஏ பட்டம் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மதம் எனில் அதில் உள்ள அனைவருக்கும் சீரான மதப்பழக்கவழக்கங்கள் என்பன இருக்கும். எப்பேர்ப்பட்ட சமூக அந்தஸ்தில் இருப்பவர்கள் ஆயினும் மதம் அனைவருக்கும் ஒரே மாதிரியான கடமைகளையும் நீதிகளையும் விதித்திருக்கும். அப்படி ஒன்று ஹிந்து மதத்தில் இல்லை. ஏற்கெனவே சொன்னதுபோல ஒவ்வொரு ஜாதிக்கும் வெவ்வேறு நீதி என்பதே வர்ண அமைப்பு முறை.

பேராசிரியர் சீலி 1883ஆம் ஆண்டில் தன்னுடைய ‘Expansion of England’ என்ற நூலை எழுதியுள்ளார். அவருடைய நூல் முழுவதிலும் ஒரே ஓர் இடத்தில் மட்டுமே ‘ஹிந்து மதம்’ என்ற பதத்தைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால் அதிகப்படியான இடங்களில் பிராமணியம், பிராமணிய மதம் ஆகிய வார்த்தைகளையே அவர் எழுதுகிறார். அப்போதுவரை கூட வர்ண அமைப்பு முறை முழுமையான இந்து மதம் என்பதாகக் கட்டமைக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.

வட இந்தியாவில் உள்ள வர்ண அமைப்பு முறைக்கும் தென் இந்தியாவில் உள்ள வர்ணஅமைப்பு முறைக்கும் மிகப்பெரும் வேறுபாடுகள் உள்ளன. சத்திரியர், வைசியர் ஆகிய வர்ண படிநிலைகள் தெற்கில் கிடையாது. பிராமணருக்கு அடுத்துச் சூத்திரர் வர்ணம் மட்டுமே எனத் தென் இந்தியாவில் உண்டு என இந்திய வரலாற்றாய்வாளர் இர்ஃபான் ஹபீப் தனது இந்திய விவசாயிகள் குறித்த தன் ஆராய்ச்சிக் கட்டுரையில் கூறுகிறார்.

தேசியத்தின் மிகமுக்கியமான கூறாகப் பேராசிரியர் சீலி சொல்வது, மதம். இந்தியாவில் பிராமணியம் முழுவதாகப் பரவியிருந்தாலும் அது மட்டுமே இந்தியாவின் மதமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார். ஏனென்றால் துருக்கிப் பேரரசில் இருப்பதைக் காட்டிலும் அதிகமான இஸ்லாமியர்களும், கணிசமான அளவில் சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களும் இந்தியாவில் இருந்தனர் என்கிறார் அவர்.

இந்தியாவில் உருவாகிய மதமான ‘பௌத்தம்’ கி.மு.2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.7ஆம் நூற்றாண்டு வரை இந்தியத்துணைக்கண்டத்தில் மதமாற்றங்களை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த மதமாக இருந்ததற்கு நிறைய ஆதாரங்கள் இருப்பதாகவும், அம்மதத்தைப் பிராமணியம் தன் ஆதிக்கத்தின் மூலம் செரித்துவிட்டதால், இந்தியா தவிர பல்வேறு ஆசிய நாடுகளிலும் பௌத்தம் பரவியிருக்கிறது என்றும் சீலி கூறுகிறார். அதாவது பௌத்தத்திலிருந்து பலவற்றை உறிஞ்சுக்கொண்டு தனதாக்கிய பிராமணிய மதம், இந்தியாவில் பௌத்தத்தை இல்லாமல் ஆக்கியது.

ஆனால், பிரிட்டிஷ் வருகைக்கு முன்னர் பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு இஸ்லாமிய அரசுகள் இந்தியாவில் வந்தபோதும் அதற்கு எதிராகப் பிராமணியம் திரண்டு எழவில்லை. முகலாயர்கள் வீழ்ச்சியைத் தொடர்ந்து வேகமாக எழுந்த மராட்டியப் பேரரசு, பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பேரரசாக இருந்தபோதும் அது எவ்வகையான தேசியப்பற்றை நோக்கி வளராமல் ஆரம்பம் முதல் கடைசிவரை, அராஜகவாதம் செய்யும் அரசாகவே இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

இவற்றை விரிவாக விளக்குவதற்கு முக்கிய காரணம், இங்கிலாந்து, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் அம்மக்களின் தேசிய உணர்வுக்கான அடிப்படையாகக் கிறிஸ்துவ மதம் இருக்கிறது. ஆனால் ஐரோப்பிய நாடுகள் போல இந்தியத்துணைக்கண்டத்து மக்கள் ஒரே பொதுமதத்தின் கீழ் பிணைக்கப்பட்டிருக்கவில்லை. ஆகவே அதனூடாகவும் தேசிய உணர்வு மக்களுக்கு எழவில்லை.

இதனால்தான் பிரிட்டிஷ் பேரரசால் இந்தியாவை எளிதில் கைப்பற்ற முடிந்தது. இந்தியாவைக் கைப்பற்ற கிழக்கிந்தியக் கம்பெனி நடத்திய போர்களில் ஐந்தில் நான்கு பங்குப் படைவீரர்கள் இந்தியத் துணைக்கண்டத்து மக்களாகவே இருந்தனர். எனவே, பிரிட்டிஷாரின் தனிப்பட்ட வலுவாலோ அவர்களின் ஒப்பற்ற மேன்மை போன்ற எவற்றாலும் இந்தியா கைப்பற்றப்படவில்லை.

பேராசிரியர் ராபர்ட் ஜான் சீலியின் இந்தியா பற்றிய கருத்துகளை அந்தக்காலத்து ஆங்கிலேயரின் வழியில் பார்க்கப்பட்ட வரலாறாகப் புறந்தள்ளிவிட முடியாது. ஏனெனில் இந்தியா ஒரு தேசமாகவோ, இந்தியத் துணைக்கண்டத்து மக்களிடையே தேசிய உணர்வு எவ்வகையிலும் இல்லாததால் மட்டுமே பிரிட்டிஷாரால் இந்தியாவைக் கைப்பற்ற முடிந்தது என்று சொல்லுகிற சீலி, பிரிட்டிஷாரின் மேன்மையினாலும் வலுவாலும் இவை சாத்தியமானது என்ற கூற்றைப் புறந்தள்ளுகிறார்.

1857ஆம் ஆண்டு நடந்த சிப்பாய்க் கலகமும் தேசிய உணர்வினால் எழுந்த ஒன்றாக இருந்திருக்குமானால் அதனைப் பிரிட்டிஷாரால் கட்டுப்படுத்தியிருக்க முடியாது என்கிறார். எனவே, 1857ஆம் ஆண்டுச் சிப்பாய்க் கலகத்தை முதல் இந்திய சுதந்திரப்போர் என்று வரையறுப்பது சரியானதாக இருக்காது. இங்கு, ஆர்.சி.மஜும்தார் இந்தியத் தேசிய உணர்வு 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் கட்டமைக்கப்பட்டது என்று சொன்னதை நினைவில்கொள்ள வேண்டியது அவசியம்.

இந்தியத் தேசிய உணர்வு கட்டமைப்புக்கு அடிப்படையாக ஹிந்து தேசியம் இருந்தது என்பதையும் அவர் குறிப்பிடுகிறார் (விரிவாக இவற்றைப் பின்னர் காண்போம்). பிராமணியம் என்பதின் ஊடாகத் தேசிய உணர்வு வளர்த்தெடுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்றும் சீலி 1883ஆம் ஆண்டிலேயே எழுதியுள்ளார்.

இதன்பின்னர், ஹிந்து மதமும் இந்தியத் தேசியமும் இந்தியத் துணைக்கண்டத்தில் எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பதைப் பார்ப்பதற்கு முன்னர், முகலாயர்களின் சில நூற்றாண்டுகால ஆட்சிக்கு எதிராக மக்கள் வெகுண்டு எழாமல் போனதற்குச் சில முக்கியமான காரணங்கள் உள்ளன. அவற்றைப் பார்க்கவேண்டியது அவசியம்.

முதலில், முகலாயர்கள் இந்தியாவின் நில வருவாய் முறைகளில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. ஏற்கெனவே மக்கள் பின்பற்றி வந்த முறைகளைக் கடைபிடித்தனர். குறிப்பாக வருவாய் அதிகாரிகளாக உயர்ஜாதி ஹிந்துக்களையே அவர்கள் நியமித்தனர்.

இந்தியாவைப் படையெடுத்து வந்து இங்கே குடியேறிய இஸ்லாமியர்கள் மட்டுமே ஆளும்வர்க்கத்தில் பங்குகொண்டனர். அவர்கள் ‘அஷ்ரஃப்’ எனப்படுவர். இவர்களுக்குச் சமூகத்தில் உயரிய மரியாதையும் அந்தஸ்தும் இருந்தது. பிரச்சனைகள் ஏதுமின்றி ஆட்சி செய்யும்பொருட்டு இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்த உயர் அந்தஸ்து கொண்ட சமூகங்களுடன் ‘அஷ்ரஃப்’கள் கூட்டணி வைத்துக்கொண்டனர்.

இந்தியத் துணைக்கண்டத்தில் அப்போது உயர் அந்தஸ்து கொண்டவர்களாக இருந்தவர்கள் வர்ண அடுக்கில் மேலே இருந்த சமூகங்கள் மட்டுமே. அதாவது உயர்ஜாதி இந்துக்கள். வர்ண அடுக்கில் கீழே இருந்த ஒடுக்கப்பட்ட சமூகங்கள் உயர் சாதி இந்துக்களால் அதிக ஒடுக்குமுறைக்கு ஆளானார்கள். சாதிக்கொடுமைகளிலிருந்து விடுதலைபெற, ஒடுக்கப்பட்ட சமூகங்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

இவர்களை ‘அஜ்லஃப்’ என்பர். இஸ்லாமியர்களிலேயே அஷ்ரஃப், அஜ்லஃப் என்பதாக அந்தஸ்துரீதியிலான பிரிவுகள் இருந்தபோதிலும், அவை சாதிரீதியான பிரிவுகள்போல இருந்தவொன்று அல்ல. அஷ்ரஃப்கள், உயர்ஜாதி ஹிந்துக்களுடனான கூட்டணிகொண்டு சலனங்கள் ஏதுமின்றி ஆட்சிசெய்தனர்.

இரண்டாவதாக, கிராம நிர்வாகங்களைப் பொறுத்தவரை முகலாயர்கள் அதனைக் கிராமத்தினரிடமே விட்டுவிட்டனர். கிராமப்புறத்தில் அமைதியை நிலைநாட்டுவதும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதையும் முகலாயர்கள் தங்கள் தலையில் போட்டுக்கொள்ளவில்லை.

ஒவ்வொரு கிராமத்தையும் அந்தந்தக் கிராமங்களைச் சேர்ந்தவர்களே நிர்வாகித்துக்கொண்டனர். அவர்களை ‘சௌக்கிதார்’ என்பார்கள். அவர்கள் அரசு அதிகாரிகள் அல்லர். கிராமங்களை மேற்பார்வையிட ‘ஃபௌஜ்தார்’ என்ற அரசு அதிகாரிகளை ஒவ்வொரு மாவட்டங்கள்தோறும் நியமித்திருந்தாலும் அவர்களுக்கான ஆட்சிப்பகுதி மிகப்பெரும் அளவில் இருந்ததால், சரியான மேற்பார்வைப் பணிகளை அவர்களால் மேற்கொள்ள முடிந்ததில்லை.

ஆனால் வரிவிதிப்பு அதிகாரங்கள் இல்லாததால் கிராமங்கள் முழு தன்னாட்சியில் ஈடுபட்டதாக எடுத்துக்கொள்ளமுடியாது. மாறாக, கிராமங்கள் வரம்புகள் உடைய சுய நிர்வாகத்தை மேற்கொண்டன என்று கருதலாம்.

மூன்றாவதாக, பிற மதங்களைப் பின்பற்றும் மக்களின் நம்பிக்கையில் பெரிதும் தலையிடாமல் முகலாய அரசு பார்த்துக்கொண்டது. காசி (Qazi) எனப்படுபவர் வழக்குகளைத் தீர்த்துவைக்க அரசு நியமிக்கும் தலைமை அதிகாரி. இஸ்லாமியச் சட்டப்படி இந்த வழக்குகள் நடைபெற்றது உண்மைதான்.

ஆனால், பிற மத மக்களின் சம்பிரதாயங்கள், வழக்கங்கள் ஆகியவற்றுக்கு எதிராக எதையும் செய்யக்கூடாது என அடிக்கடி காசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுக்கொண்டே இருந்தது. இஸ்லாமியச் சட்டங்களைக் காட்டிலும் பெரும்பாலும் அந்தந்த உள்ளூர் மக்களின் பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்தே வழக்குகள் தீர்த்துவைக்கப்பட்டன.

நான்காவதாக, முகலாயர்கள் காலத்தில் அவர்கள் ஆட்சிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் சமஸ்கிருத இலக்கியம் செழித்தோங்கி வளர்ந்தது. அதுவே பிராமணியத்தின் நால்வர்ண அமைப்பு இன்னும் இறுகி, கெட்டியாவதற்கு உதவி புரிந்தது. வர்ண அமைப்புக்கு எதிராக தோன்றிய பல இயக்கங்களுக்கு எதிராகத் தன்னை வலுப்படுத்திக்கொள்ள சமஸ்கிருத இலக்கியத்தின் வளர்ச்சி துணைபுரிந்தது.

ஐந்தாவதாக, கட்டாய மதமாற்றங்களை இந்தியத்துணைக்கண்டத்தில் முகலாயர்கள் மேற்கொள்ளவில்லை. மேற்சொன்ன காரணங்களைப் போலவே இந்த விஷயத்திலும் முகலாயர்கள் பொதுமக்களின் வாழ்க்கையில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்த விரும்பியதில்லை.

இதுநாள்வரை முகலாயர்கள் அவர்களின் ஆட்சிக்காலத்தில் கத்திமுனையில் மக்களை இஸ்லாத்துக்கு மதம்மாற்றினார்கள் என்பதே பரவலாக வரலாறாகச் சொல்லப்பட்டு வந்தது. ஆனால், அவற்றுக்கு எந்தவொரு வரலாற்று ஆதாரங்களும் இல்லை என இந்திய, வெளிநாட்டு வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்காக இஸ்லாமிய மதமாற்றமே முகலாயர்கள் காலத்தில் நிகழ்ந்ததில்லை என்றில்லை. கட்டாய மதமாற்றத்தை முகலாய அரசு தன் கொள்கையாகக் கொண்டிருக்கவில்லை என்கின்றன முகலாயர்கள் குறித்த ஆராய்ச்சிகள்.

மதமாற்றத்தைப் பொறுத்தவரை முகலாயர்கள் காலத்தில் நடந்தவை என்ன? அவற்றுக்கும் இந்திய தேசிய உருவாக்கத்துக்கும் என்ன தொடர்பு போன்றவற்றை அடுத்தடுத்து வரும் பகுதிகளில் விரிவாகக் காணலாம்.

(தொடரும்…)

 

______________

மேற்கோள் நூல்கள்
1. John Robert Seeley, The Expansion of England, Macmillan and Co (1st ed.1902)
2. Jadunath Sarkar, Mughal Administration, M.C.Sarkar & Sons Calcutta (1st ed.1920)
3. R.C.Majumdar, History of the Freedom Movement in India Vol.1, Firma K.L.Mukhopadhyay (2nd Revised ed.1971)
4. Timothy Fitzgerald, The Ideology of Religious Studies, Oxford University Press (1st ed.2000)
5. Rev. Reginald Heber, Narrative of A Journey Through The Upper Provinces Of India: From Calcutta to Bombay, John Murray (2nd ed.1828)
6. Richard M. Eaton, The Rise of Islam and the Bengal Frontier, 1204–1760, University of California Press (1st ed.1996)

உதவிய ஆராய்ச்சிக் கட்டுரைகள்
1. Will Sweetman, Hinduism And The History of  Religion: Protestant Presuppositions In The Critique Of The Concept Of Hinduism, Method & Theory in the Study of Religion, Vol. 15, No. 4 (2003), pp. 329-353
2. Irfan Habib, The Peasant in Indian History, Social Scientist, Vol. 11, No. 3, Marx Centenary Number (Mar.1983), pp. 21-64
3. Satish Saberwal, On the Making of Muslims in India Historically, Sociological Bulletin , May-August 2006, Vol. 55, No. 2 (May-August 2006), pp.237-266
4. Nandini Chatterjee, Reflections On Religious Difference And Permissive Inclusion In Mughal Law, Journal of Law and Religion , October 2014, Vol. 29, No. 3, pp.396-415
5. Rosaling O’Hanlon, Caste and its Histories in Colonial India: A reappraisal, Modern Asian Studies, Vol. 51, No. 2, Special Issue: New Directions in Social and Economic History: Essays in Honour of David Washbrook, March 2017, pp. 432-461

பகிர:
வாஞ்சிநாதன் சித்ரா

வாஞ்சிநாதன் சித்ரா

எஸ்.ஆர்.எம். சட்டக்கல்லூரியில் இளங்கலைச் சட்டம் படித்து வருகிறார். விகடன் குழுமத்தில் மாணவ நிருபராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். You Turn எனும் உண்மை கண்டறியும் ஊடகத்தில் (Fact Checking Website) பங்களிப்பாளராக உள்ளார். அரசியல், வரலாறு, சட்டம் ஆகியவை இவருக்குப் பிடித்த துறைகள். தொடர்புக்கு : rvanchi999@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *