Skip to content
Home » இந்திய மக்களாகிய நாம் #11 – துணைக் கண்டத்தில் இருநாட்டுக் கொள்கையை முன்மொழிந்தவர்கள்!

இந்திய மக்களாகிய நாம் #11 – துணைக் கண்டத்தில் இருநாட்டுக் கொள்கையை முன்மொழிந்தவர்கள்!

இந்திய மக்களாகிய நாம்

இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் கட்டாய இஸ்லாமிய மதமாற்றம் நிகழவில்லை என்பதைச் சென்ற பகுதியில் பார்த்தோம். இஸ்லாம், கிறிஸ்தவம் முதலான மதங்களுக்கு மாறியவர்களை மீண்டும் ஹிந்து மதத்துக்குக் கொண்டு வரும் ஹிந்து மதமாற்றமே ‘ஆரிய சமாஜ்’ போன்ற சீர்திருத்த இயக்கங்களால் நிகழ்த்தப்பட்டது. ஹிந்து – இஸ்லாம் பிரிவைக் கூர்மையாக்கிய ஆரிய சமாஜின் நடவடிக்கைகளைப் பார்ப்பதற்கு முன்னர், இந்தியாவில் ஹிந்துத் தேசியம் வளர்த்தெடுக்கப்படுவதற்கு அடித்தளமிட்ட ஹிந்துச் சீர்திருத்த இயக்கங்கள் குறித்துக் காண்பது அவசியம். அப்போதுதான் ஆரிய சமாஜின் நடவடிக்கைகளை நாம் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

இந்தியத் தேசிய உணர்ச்சி எழுவதற்கு முக்கியமான அடித்தளம் அமைத்துக் கொடுத்தவை ஹிந்துச் சீர்திருத்த இயக்கங்கள். இதிலிருந்துதான் ஹிந்து மதமும் இந்தியத் தேசியமும், 19ஆம் நூற்றாண்டில் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டமைக்கப்பட்டன. முந்தைய பகுதிகளில் சொன்னதுபோல, ஒரு மதம் என்பது அதனைப் பின்பற்றுபவர்கள் அனைவருக்கும் பொதுவான கடமைகளையும் நீதிகளையும் விதித்திருக்கும். ஆனால் ஹிந்து மதம் அவ்வாறாக இல்லை. வர்ணாசிரமக் கட்டமைப்பின்படி ‘ஜாதிக்கு ஒரு நீதி’ என்ற கட்டமைப்பாகவே இருக்கிறதே ஒழிய, மதம் என்பதற்கான வரையறைக்குள் அது என்றுமே அடங்கியதில்லை.

இப்படியான பிரச்னைகளைக் களைய, ஹிந்துச் சமூகத்தில் சீர்திருத்த இயக்கங்களைப் பலர் தோற்றுவித்தனர். மதம் என்ற வரையறைக்குள் ‘ஹிந்து’ மதம் வந்ததற்குக் காரணம், இந்த ‘ஹிந்து’ சமூகச் சீர்திருத்த இயக்கங்களே. இவற்றில் முதன்மையானவர் ராஜா ராம் மோகன் ராய். கிறிஸ்தவ மதத்தைப் பற்றி நன்கு படித்து அறிந்துகொண்ட இவர், கிறிஸ்தவ மதத்தை மாதிரியாகக் கொண்டு அதைப் போன்றதொரு அமைப்பில் ஹிந்து மதத்தைக் கொண்டு வருவதற்குப் பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள முனைப்பு கொண்டார்.

ஹிந்து மதப் பழக்கவழக்கங்கள் வேத உபசாரங்களுக்கே எதிராக உள்ளது என்றார். உருவ வழிபாட்டை எதிர்த்தார். பல கடவுள் வழிபாட்டை உபநிஷதங்கள் ஆதரிக்கவில்லை என்றவர், ஒற்றைக்கடவுள் வழிபாட்டை ஆதரித்தார். 1815ஆம் ஆண்டு ‘ஆத்மிய சபா’ என்னும் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அதன்மூலம், ஹிந்துச் சமூகத்தில் உள்ள தீய பழக்கவழக்கங்கள், மூடநம்பிக்கைகளை எதிர்த்தார். இவற்றுக்கு ஹிந்து அடிப்படைவாதிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர் சொல்லிய கருத்துக்கள் எல்லாம் வேதங்களிலும் உபநிஷதங்களிலும் இருந்ததா என்ற கேள்விக்குள் நாம் போகவேண்டாம். இங்கு முக்கியமானது என்னவென்றால், அதுநாள் வரையில் இருந்த பழக்க வழக்கங்களை முதன்முதலில் எதிர்த்து மாற்றுச் சிந்தனையை நிறுவியவர் ராஜா ராம் மோகன் ராய். இதற்கு முக்கியமான காரணம், மேற்கத்தியக் கலாச்சாரத் தாக்கம் என்கிறார் வரலாற்றாய்வாளர் ஆர்.சி.மஜூம்தார்.

ஹிந்துப் பண்டிதர்களை ஆசிரியர்களாகக் கொண்ட ‘சமஸ்கிருதக் கல்லூரி’ ஒன்றை அமைப்பதற்கு எதிராகப் பெரும் எதிர்ப்புக் குரலை எழுப்பியிருக்கிறார். மாறாக, ஆங்கிலவழிக் கல்வியைப் பெரிதும் ஆதரித்தவர் ராஜாராம். 1817ஆம் ஆண்டு, கல்கத்தாவில் ‘ஹிந்துக் கல்லூரி’யை நிறுவுவதில் ஆங்கிலேயர்களுடன் இணைந்து முக்கிய பங்காற்றினார். ஹிந்து அடிப்படைவாதிகள் இதனையும் எதிர்த்தனர். ஆங்கில – ஐரோப்பியக் கல்வி மூலம் அறிவியல் கல்வியை மக்களிடையே புகுத்த நினைத்தார் ராஜா ராம்மோகன் ராய். ஏனெனில் அதுவே மக்களிடையே உள்ள மூடநம்பிக்கைகளைப் போக்க உதவும் கருவியாக இருக்கும் என்று கருதினார்.

1826ஆம் ஆண்டு, சமஸ்கிருத இலக்கியம், ஹிந்து மதத்தில் ஒற்றைக் கடவுள் வழிப்பாடு ஆகியவை குறித்த கல்வி போதிக்க வேதாந்தக் கல்லூரியை நிறுவினார். ஹிந்துக் கடவுள் கோட்பாடுகளில் சிறந்த மரபுகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதைப் புறந்தள்ளிவிட்டு, புதிய மதம் ஒன்றை நிறுவுவதற்காக, 1828ஆம் ஆண்டு ‘பிரம்ம சமாஜ்’ என்ற இயக்கத்தை நிறுவினார்.

கணவன் இறந்தவுடன், பெண்கள் உடன்கட்டை ஏறும் ‘சதி’ என்னும் வழக்கம் அக்காலத்தில் பெருமளவில் இருந்து வந்தது. 1815 – 1828 காலகட்டத்தில் சுமார் 8,000 பெண்கள் உடன்கட்டை ஏற்றப்பட்டதாக இந்திய வரலாற்றாய்வாளர் சுசோபன் சர்கார் குறிப்பிடுகிறார். ‘சதி’ எனும் மூடநம்பிக்கையைத் தீவிரமாக எதிர்த்தார் ராஜாராம். 1829ஆம் ஆண்டு, இந்தியாவின் கவர்னர் ஜெனரல் பெண்டிங் பிரபு ‘சதி’யைத் தடை செய்ய அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார். இதற்கு ஆதரவாகப் பிரிட்டிஷாருடன் கைகோர்த்தார்.

ஆத்மிய சபாவும், பிரம்ம சமாஜும் ஹிந்துச் சமூகத்தில் முன்னெடுத்த இத்தகைய சீர்திருத்தங்களை எதிர்த்த ஹிந்து அடிப்படைவாதிகள், சனாதன தர்மத்தைக் காக்க ‘தர்ம சபா’ என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தனர். ‘சதி’யை ஒழித்த பெண்டிங் பிரபுவின் அவசரச் சட்டத்தை எதிர்த்து 50,000 கையெழுத்துகளைத் திரட்டியது ‘தர்ம சபா’. ‘சதி’ ஒழிப்பை எதிர்த்து வாதாட இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் விண்ணப்பம் செய்தது தர்ம சபா. சதி ஒழிப்புக்கு ஆதரவாகவும் தர்ம சபாவுக்கு எதிராகவும் ராஜாராம் இங்கிலாந்து சென்று வாதாடினார். 1833இல் ராஜா ராம்மோகன் ராய் இறந்து போன பிறகு, பிரம்ம சமாஜ் துவண்டுவிட்டது.

ராஜா ராம் மோகன் ராயுடைய அனைத்துச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும் உற்றத் துணையாக நின்று தன் ஆதரவைத் தந்தவர் துவாரகாநாத் தாகூர்.

ராஜா ராம் மோகன் ராய், மிரத்-உல்-அக்பர் என்ற பெர்சிய மொழி வார இதழை நடத்தி வந்தார். பிரிட்டிஷ் இந்தியாவின் அப்போதைய தற்காலிகக் கவர்னர் ஜெனரல் ஆடம்ஸ் என்பவர் பத்திரிகைகளுக்குக் கட்டுப்பாடு கொண்டு வந்தார். அதனால் ராஜாராம் நடத்திய வார இதழை நிறுத்த வேண்டியதாயிற்று.

பத்திரிகைகளை வெளியிட அதன் ஆசிரியர்கள் அரசாங்கத்திடமிருந்து உரிமம் பெறுவதைக் கட்டாயம் ஆக்கியது, ஆடம்ஸ் கொண்டு வந்த பத்திரிகைகளுக்கான அவசரச் சட்டம். அப்போது அச்சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் துவாரகாநாத் தாகூரும் ராஜாராமும் வழக்கு ஒன்றைத் தொடுத்தனர்.

பெங்கால் பகுதியில் ஆங்கிலம், பெங்காலி, பெர்சிய மொழிகளில் பல்வேறு நாளிதழ்கள் வெளி வர உறுதுணையாக இருந்தவர் துவாரகாநாத் தாகூர். அதன் மூலம் ராஜராமின் பிரம்ம சமாஜத்தை வெகுமக்களிடம் கொண்டு செல்லப் பெருந்துணையாக இருந்தார். இந்தத் துவாரகாநாத் தாகூரின் மகன் தேபேந்திரநாத் தாகூர்தான் துவண்டுபோன பிரம்ம சமாஜுக்குப் புத்துயிர் அளித்தார். தேபேந்திரநாத் தாகூர், ராஜா ராம் மோகன் ராய் நடத்திய கல்வி நிலையங்களிலேயே பெரிதும் பயின்றவர்.

இவர், பிரம்ம சமாஜத்துக்கு உயிர் அளித்தாலும் பழமைவாதத்தை விரும்பியவராகவே இருந்தார். இவர் 1839இல் ஆரம்பித்த தத்வபோதினி சபா, கிறிஸ்தவ மதத்துக்கு மக்களை மாற்றும் முயற்சிகளைக் கடுமையாக எதிர்த்தது. ராஜாராம்போல் அல்லாமல், கிறிஸ்தவ மதச் சாயல்கள் எதையும் கைக்கொள்ளாமல் ஹிந்து மதத்தை மீட்டெடுக்க விரும்பினார் தேபேந்திரநாத் தாகூர். ராஜாராம் காலத்தில் ஹிந்து அடிப்படைவாதிகளால் எதிர்க்கப்பட்டது பிரம்ம சமாஜ். ஆனால் தேபேந்திரநாத் தாகூர் காலத்தில் வைதீகர்கள் பிரம்ம சமாஜை ஆதரித்தனர்.

தத்வபோதினி சபா, 1840இல் தத்வபோதினிப் பள்ளி ஒன்றைத் தோற்றுவித்தது. பின்னர், 1843இல் தத்வபோதினிப் பத்திரிகா என்ற இதழை உருவாக்கியது. கிறிஸ்துவ மதமாற்றத்தை ஊக்குவிக்கும் அமைப்புகளை எதிர்க்க, 1845இல் தத்வபோதினிச் சபாவின் துணைகொண்டு மதமாற்ற எதிர்ப்பு பிரச்சாரத்தைத் தேபேந்திரநாத் தாகூர் தொடங்கினார். இதன்மூலம் பழமைவாதத் தலைவர்களான ராதாகாந்த் தேப் போன்றவர்களோடு கைகோர்த்தனர். இந்த ராதாகாந்த் தேப் என்பவர்தான் 1830களில் பிரம்ம சமாஜத்தை எதிர்த்த தர்ம சபாவின் தலைவராக இருந்தவர்.

பிரம்ம சமாஜத்தில் இருந்த கேஷப் சந்திர சென், தேபேந்திரநாத் தாகூரின் பழமைவாதத்தை விரும்பவில்லை. அவர் ‘இந்தியப் பிரம்ம சமாஜ்’ என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். பல இளைஞர்கள் இவரைப் பின்தொடர்ந்தார்கள். பிரம்ம சமாஜத்தின் முந்தைய தலைவர்கள் பரப்புரைகளுக்குக் கைகொண்ட மென்மையான முறையைக் கடிந்துகொண்டார். அப்போதிருந்து தேபேந்திரநாத் தாகூரின் அமைப்பு ‘ஆதி பிரம்ம சமாஜ்’ அழைக்கப்பட்டது.

1864இல் பாம்பே, மெட்ராஸ் ஆகிய பகுதிகளில் முறையே பிரார்த்தன சமாஜ், வேத சமாஜ் என்ற பெயரில் முகாம்களைத் தொடங்கிய கேஷப் சந்திர சென், பிரம்ம சமாஜத்தை இந்தியா முழுவதும் பரப்பினார். சமூக மதச் சீர்திருத்த முகாம் ஒன்று அனைத்திந்திய அளவில் நடத்தப்பட்டது இதுவே முதல்முறை. நான்கு ஆண்டுகள் கழித்து இந்த இயக்கத்தை இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கு மாகணங்களுக்கும் கொண்டு சென்றார். 1872ஆம் ஆண்டு கலப்புத் திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டம் அமலுக்கு வர இவரே காரணமாக இருந்தார்.

கேஷப் சந்திர சென், தன்னுடைய வயதுக்கு வராத மகளுக்குத் திருமணம் செய்து வைத்ததால் கோபம் கொண்ட இளைஞர்கள், அவரின் இயக்கத்திலிருந்து விலகி ‘சாதாரண பிரம்ம சமாஜ்’ என்ற இயக்கத்தை நிறுவினார்கள். மிகத் தீவிரமான பிரம்ம இயக்கமாக இயங்கிய இவர்கள், சமயச் சீர்திருத்தம் மட்டுமின்றி, ஜனநாயகக் குடியரசை நிறுவுவதிலும் ஆர்வம் காட்டினர்.

கேஷப் சந்திர சென் கடைசி வரை பிரிட்டிஷார் ஆட்சி நிலவுவதையே விரும்பினார். இதில் அவர்களுக்குள் மாற்றுக் கருத்துகள் இருப்பினும், கேஷப் சந்திரரும் சரி, அவருடைய வழிதோன்றல்களும் சரி, பிரம்மச் சமயச் சீர்திருத்தம் என்று வரும்போது, அவர்களின் போக்கு பெரும்பாலும் கிறிஸ்தவ மதத்தை ஒட்டியே இருந்தன. அவர்கள் பிரம்மச் சமயத்தைப் பரப்பக் கட்டிய ஆலயங்களை வாரலாற்றாய்வாளர்கள் ‘Church’ என்ற ஆங்கிலப் பதம் கொண்டே அழைக்கின்றனர்.

இதில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தவர் ராஜ்நாராயண் போஸ். மேற்கத்தியக் கல்வியின் தாக்கம் இவரிடம் இருந்தாலும், அதுவரை இருந்த சீர்திருத்த இயக்கங்கள்போல் கிறிஸ்தவத்தை நோக்கி அவரின் அரசியல் சாய்ந்திருக்கவில்லை. ஹிந்து மதத்தின் பழைய பெருமைகளை மீட்டெடுப்பதாகவே அவரின் இயக்கச் செயல்பாடு அமைந்தது. பண்டைய உபநிஷதங்கள் தெரிவித்த ஞான உபதேசங்கள் குறித்தும், வேதக் காலத்தின் ஹிந்து மதப் பெருமைகளை மீட்டெடுப்பது குறித்தும் ‘தத்வபோதினி பத்திரிகா’ எனும் இதழில் எழுதினார்.

இது பழமைவாதத் தேபேந்திரநாத் தொடங்கிய பத்திரிகை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அவரின் பழமைவாதத்தை விரும்பாததால்தான் கேஷப் சந்திர சென் புது இயக்கம் கண்டார். 1861இல் தேசியப் பெருமைகளை வளர்த்தெடுக்கும் சங்கத்தை நிறுவினார் ராஜ்நாராயண் போஸ். அதன்மூலம் தேசிய உணர்வை வளர்த்தெடுக்க விரும்பினார். கிறிஸ்துவ இறையியல், ஐரோப்பிய நாகரீகத்தை விடவும் ஹிந்து மதமும் கலாசாரமுமே மேலாண்மை பெற்றது என்று உரையாற்றினார். இவரின் முக்கியமான உரையாக இது கருதப்படுகிறது.

1865இல் ராஜ்நாராயண் போஸ் ஆரம்பித்த ரகசிய அமைப்பான தேசியப் பற்றாளர் சங்கத்தில் ரபீந்திரநாத் தாகூரும் அவரின் அண்ணன் ஜோதிந்திரநாத் தாகூரும் இணைந்தனர். ‘அச்சங்கத்தில் இணைந்ததினாலேயே இந்திய விடுதலையை நோக்கி ஈர்க்கப்பெற்றேன்’ என ரபீந்திரநாத் தாகூர் தன்னுடைய சுயசரிதையில் எழுதியிருக்கிறார்.

ராஜ்நாராயண் போஸ் மிக வெளிப்படையாகவே ஹிந்து மதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசியத்தை வளர்க்க முனைந்தார்.

ராஜ்நாராயண் போஸின் கருத்துகளின் மூலம் ஈர்க்கப்பெற்ற நபகோபால் மித்ரா, அவருடன் இணைந்து ‘ஹிந்து மேளா’ எனப்படும் வருடாந்திர மதக்கொண்டாட்ட திருவிழாவைத் தொடங்கினர். ஹிந்துக்களிடையே தேசிய உணர்வையும் தேசப்பற்றையும் வளர்க்க இந்த ஹிந்து மேளாக்கள் உதவின. பல தேசப்பற்று மிக்க கவிதைகளும் பாடல்களும் எழுவதற்கு ஹிந்து மேளாக்கள் உதவின.

இப்படி ஹிந்து மேளாக்கள் மூலம் ஊக்கம் பெற்றவர், இந்தியாவின் தேசியப் பாடலை இயற்றிய பங்கிம் சந்திர சட்டர்ஜி. (இந்தியாவின் தேசியப்பாடல் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ள ‘வந்தே மாதரம்’ பாடலை இஸ்லாமியர்கள் ஏன் ஏற்பதில்லை என்பதைப் பின்னர் விரிவாகக் காண்போம்)

இந்த ஹிந்து மேளாக்கள் 1867 முதல் 1880 வரையிலான காலகட்டங்களில், சுமார் 14 முறை நடைபெற்றன என வரலாற்றாய்வாளர் ஆர்.சி.மஜூம்தார் எழுதுகிறார். இந்த நபகோபால் மித்ரா என்பவர் தேபேந்திரநாத் தாகூரின் ஆதி பிரம்ம சமாஜ் அமைப்பில் இருந்தவர்.

‘National Paper’ எனும் பெயரில் ஆங்கில வார இதழ் ஒன்றை நபகோபால் மித்ரா தொடங்கினார். அப்போது கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கையினால், அரசாங்கப் பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப்புகள் சேர்க்கப்பட்டன. இவற்றில் உற்சாகமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட நபகோபால் மித்ரா, தேசிய உடற்பயிற்சிப் பள்ளியையும் நிறுவினார். இவர் ‘தேசிய மித்ரா’ என்று அறியப்பட்டதாகப் பிபின் சந்திர பால் எழுதுகிறார்.

கலப்புத் திருமணத்தை ஆதரிக்கும் சட்டம் வருவதற்குக் காரணமாக இருந்தவர் கேஷப் சந்திர சென் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். இந்தச் சட்டத்துக்கு மிகப்பெரிய எதிர்ப்பாக இருந்தவர் நபகோபால் மித்ரா. இதற்கு முக்கிய காரணம், பிராமணர்கள் தலைமை தாங்காமலேயே இந்தக் கலப்புத் திருமணங்கள் நிகழ அச்சட்டம் வழிவகை செய்தது. இதனால், பழைய ஹிந்துச் சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும் என வைதீகர்கள் மட்டுமல்ல, ஆதி பிரம்ம சமாஜ் அமைப்பினரும் கவலை கொண்டனர். ‘இந்தியாவின் தேசிய ஒற்றுமைக்கான அடிப்படை ஹிந்து மதம்தான். ஹிந்து தேசியம் என்பது பெங்காலுக்கானது மட்டுமல்ல’ என்று கூறியவர் நபகோபால் மித்ரா.

பிரம்ம சமாஜ் இயக்கத்துக்கு எதிராக எழுந்த தர்ம சபா, சனாதன தர்மத்தைக் காக்க எழுந்த இயக்கம் என முன்பே கண்டோம். இந்தத் தர்ம சபா, நாளடைவில் பெங்கால், பஞ்சாப், வடமேற்குப் பகுதிகள், மகாராஷ்டிரா, பீகார் என்று அனைத்துப் பகுதிகளிலும் எழுந்தன. இந்தத் தர்ம சபாக்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து 1889ஆம் ஆண்டு ‘பாரத் தர்ம மகாமண்டல்’ என்ற அனைத்திந்திய இயக்கத்தைப் பண்டிதர் தீன தயாள் ஷர்மா தொடங்கினார். 1915இல் மதன்மோகன் மாளவியா தோற்றுவித்த ‘அகில இந்திய ஹிந்து மகாசபா’வின் முன்னோடிதான் இந்த ‘பாரத் தர்ம மகாமண்டல்’. மகாமண்டல் எழுவதற்கு, ‘மகா ஹிந்து சமிதி’ என்ற இலக்கிய அடித்தளத்தை இட்டவர்தான் ராஜ்நாராயண் போஸ். 1948இல் காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்ஸே ஹிந்து மகாசபாவின் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரத் தர்ம மகாமண்டலுக்கு அடித்தளம் இட்டதன்மூலம், இந்தியாவில் ஆரிய நாட்டை நிறுவிடலாம் என ராஜ்நாராயண் போஸ் நம்பியதாக நாகேந்திர குமார் சிங் எழுதுகிறார். இதனால் ராஜ் நாராயண் போஸ், நபகோபால் மித்ரா ஆகிய இருவரையும் ஹிந்துத் தேசியத்தின் தந்தை என்று அழைப்பதோடு மட்டுமல்லாமல் இந்தியத் துணைக்கண்டத்தில் இருநாட்டுக் கொள்கையையும் இவர்களே முன்வைத்தனர் என்கிறார் முனைவர் ஷம்சுல் இஸ்லாம்.

பொதுவாக இஸ்லாமியர்கள்தான் தனிநாடு கேட்டுச் சென்றுவிட்டனர் என்று வரலாறாகச் சொல்லப்படுகிறது. ஆனால், உண்மை என்னவோ மேற்சொன்னதுபோல, இந்தியாவில் தேசியம் வளர்த்தெடுக்கப்படும்போதே ஹிந்துத் தேசியமாக மட்டுமே அது வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

பிரம்ம சமாஜ் இயக்கத்தைத் தொட்டு அதன்வழியில் 1870களில் எழுந்த ஆரிய சமாஜ் இயக்கம், ஹிந்து மதத்தை விட்டு வெளியே சென்றவர்களை மீண்டும் ஹிந்து மதத்துக்கு அழைத்துவரச் ‘சுத்தி’ எனும் இயக்கத்தை நடத்தியது. அதோடு அவர்கள் கண்டறிந்த ‘பசு பாதுகாப்பு இயக்கம்’ மேற்சொன்ன ஹிந்து – இஸ்லாம் பிரிவை மேலும் கூராக்கியது. இவை குறித்து அடுத்தடுத்த பகுதிகளில் காணலாம்.

(தொடரும்…)

 

______________

மேற்கோள் நூல்கள்
1. ப.திருமாவேலன், காந்தியார் சாந்தியடைய, மாற்று வெளியீட்டகம் (டிசம்பர் 2017)
2. Sushoban Sarkar, On the Bengal Renaissance, Papyrus (1st ed. July 1979)
3. Amit Sen, Notes On the Bengal Renaissance, People’s Publishing House Bombay (March 1946)
4. Saumyendranath Sarkar, Raja RamMohun Roy, Sahitya Akademi New Delhi (1st ed.1966)
5. R.C.Majumdar, History of the Freedom Movement in India Vol.1, Firma K.L.Mukhopadhyay (2nd Revised ed.1971)
6. Bipin Chandra Pal, Memories Of My Life And Times, Calcutta Modern Book Agency (1932)
7. Dr. Shamsul-Islam, Muslims Against Partition, Pharos Media & Publishing (2015)

உதவிய ஆராய்ச்சிக்கட்டுரைகள
1. Johannes Voigt, The Growth of Nationalism in 19th Century India, Proceedings of the Indian History Congress, 1961, Vol. 24 (1961), pp. 242-253
2. Hitendra K. Patel, Aspects of the History of Bharat Dharma Mahamandal and Hindu Mobilization, Proceedings of the Indian History Congress , 2009-2010, Vol. 70 (2009-2010), pp.604-613
3. Sheena Pall, Din Dayalu Sharma : The Formative Phase of the Sanatana Dharma Movement in late Nineteenth Century North India, Proceedings of the Indian History Congress , 2002, Vol. 63 (2002), pp. 1012-1020

பகிர:
nv-author-image

வாஞ்சிநாதன் சித்ரா

எஸ்.ஆர்.எம். சட்டக்கல்லூரியில் இளங்கலைச் சட்டம் படித்து வருகிறார். விகடன் குழுமத்தில் மாணவ நிருபராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். You Turn எனும் உண்மை கண்டறியும் ஊடகத்தில் (Fact Checking Website) பங்களிப்பாளராக உள்ளார். அரசியல், வரலாறு, சட்டம் ஆகியவை இவருக்குப் பிடித்த துறைகள். தொடர்புக்கு : rvanchi999@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *