Skip to content
Home » இந்திய மக்களாகிய நாம் #12 – ‘பசுவைக் கொல்பவனைக் கொல்’

இந்திய மக்களாகிய நாம் #12 – ‘பசுவைக் கொல்பவனைக் கொல்’

இந்திய மக்களாகிய நாம்

இந்தியத் துணைக்கண்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் என இரு நாடுகள் உருவாவதற்கு இஸ்லாமிய வகுப்புவாதமே காரணம் என்று இன்றுவரை சொல்லப்படுகிறது. ‘பாகிஸ்தானும் இஸ்லாமிய வகுப்புவாதமும்’ போன்ற தலைப்புகளைக் கொண்ட பகுதிகளையும் இன்றைய பாடப் புத்தகங்கள் கொண்டிருக்கின்றன. ஆனால், உண்மையில் இஸ்லாமியர்கள் ஓர் இயக்கமாக எழுவதற்கு முன்னரே, இந்தியத் துணைக்கண்டத்தில் கட்டமைக்கப்பட்ட தேசியமாக ஹிந்துத் தேசியம் இருந்தது.

இதனை முந்தைய பகுதியில் விரிவாகப் பார்த்தோம். அதனைத் தொடர்ந்து ஹிந்துத் தேசியம் எவ்வாறு மேன்மேலும் வளர்ச்சி அடைந்தது, ஹிந்து இஸ்லாமியர் பிரிவு எப்படிக் கூர்மையாக்கப்பட்டது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

ஹிந்துச் சீர்திருத்த இயக்கமாக எழுந்த பிரம்ம சமாஜைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் தத்வபோதினி. இவ்வியக்கம் நடத்திய தத்வபோதினி பத்திரிகாவில், ஹிந்துப் பெருமிதங்களை மீட்டெடுப்பது குறித்துக் கட்டுரைகளை எழுதியவர் ராஜ்நாராயண் போஸ். தேசியப் பெருமைகளை வளர்த்தெடுக்கும் சங்கத்தை ஆரம்பித்த இவர், ‘ஆதி பிரம்ம சமாஜ்’ உறுப்பினர் நபகோபால் மித்ராவுடன் இணைந்து ‘ஹிந்து மேளா’ எனப்படும் மதக் கொண்டாட்டத் திருவிழாக்களை வருடந்தோறும் நடத்தினர்.

ஹிந்து மஹாசபாவின் முன்னோடியான, பாரத் தர்ம மகாமண்டல் எழுவதற்கு ‘மஹா ஹிந்து சமிதி’ என்ற அமைப்பு மூலம் இலக்கிய அடித்தளம் கொடுத்தவரும் ராஜ்நாராயண் போஸேதான். இப்படியாகப் பழைய ஹிந்து மதப்பெருமைகளை மீட்டெடுப்பதே ஹிந்துத் தேசியமாக வளர்த்தெடுக்கப்பட்டது. இவை ஒருபுறம் நிகழ்ந்துகொண்டிருக்கையில் 1870களில் சுவாமி தயானந்தரால் எழுந்த முக்கியமான இயக்கம், ‘ஆரிய சமாஜ்’.

பிரம்ம சமாஜ்போலவே ஹிந்து மதத்தின் பழமைவாதப் போக்கைத் தயானந்தரின் ஆரிய சமாஜ் எதிர்த்தது. தயானந்தர், வர்ணாசிரமம் என்ற இறுகிய கட்டமைப்பை இலகுவாக்கினார். அவர் ஜாதிப் பிரிவுகளை மறுத்தபோதிலும், பிராமணர், சத்திரியர், வைஷ்யர், சூத்திரர் என்ற வர்ணாசிரமப் படிநிலைப் பிரிவுகளை நம்பினார். அதாவது, வர்ணாசிரமத்தை நம்பிய அவர், அதன் உட்பிரிவுகளைத் தகர்த்தெறியும் சீர்திருத்தங்களைச் செய்தார். ஜாதிகளுக்கு இடையே கலப்புத் திருமணங்களை ஊக்குவித்தார், கல்வியின் முக்கியத்துவத்தைப் பரப்பினார். இவற்றோடு பெண்கள், தலித்துகளின் நிலையையும் முன்னேற்ற அதிகப்படியான சீர்திருத்த முயற்சிகளை மேற்கொண்டார்.

ஒருபுறம் சமூகச் சீர்திருத்தங்களைச் செய்த அவர், மறுபுறம் ஆரிய சமாஜ் மூலம் இரண்டு இயங்கங்களை ஆரம்பித்தார். அவை இந்தியத் துணைக்கண்டத்தில் மாபெரும் சமூக,அரசியல் ரீதியான மாற்றங்களைக் கொண்டு வந்தன. அந்த இரு இயக்கங்களின் பெயர்கள்,

i) ஷுத்தி இயக்கம்
ii) பசுப் பாதுகாப்பு இயக்கம்

இவ்விரண்டு இயக்கங்கள்தான், தற்போதைய இந்தியாவைக் கட்டமைத்தவை என்றுகூட சொல்லலாம்.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பஞ்சாப்பில், கிறிஸ்தவ மிஷினரிகளால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வந்தது. அங்கு அப்போது எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள் மூலம் இவை தெரிய வந்தன. அதேபோல இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் 1300 முதல் 1900 வரையான ஆறுநூறு ஆண்டுகாலச் சமூக மாற்றங்கள் அங்கிருந்த மக்களை இஸ்லாம் நோக்கித் தள்ளியது. இதனால் இஸ்லாமியர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்தப் பெருந்திரள் மதமாற்றம் எவ்வகையான கட்டாயத்தின் பெயரிலும் நடந்தவை அல்ல என்பதை ஏற்கெனவே விரிவாகக் கண்டோம்.

ஆனால், சுவாமி தயானந்தர் கிறிஸ்தவத்தையும், இஸ்லாம் மதத்தையும் ஹிந்துச் சமூகத்தின் முன்னணி எதிரிகளாகக் கருதினார். வர்ணாசிரமக் கட்டமைப்புக்கு வெளியே இருந்த தலித் சமூகங்கள் ஹிந்து மதத்தின் கொடுமைகளில் இருந்து விடுபட கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களுக்கு மாறினர். இவ்வாறாக, மதம் மாறிய மக்களை மீண்டும் ஹிந்துச் சமூகத்துக்குள் அழைத்து வரத் தயானந்தர் விரும்பினார். தயானந்தர் எழுதிய ‘சத்யார்த்த பிரகாசம்’ என்னும் நூல் ஆரிய சமாஜ் உறுப்பினர்களுக்கான வேதவாக்காகக் கருதப்பட்டது.

சத்யார்த்த பிரகாசம், அதிகப்படியான இஸ்லாமிய வெறுப்பை உமிழும் பிரச்சாரமாக இருந்ததாக வரலாற்றாய்வாளர் முஷிருல் ஹசன் கூறுகிறார்.

குரான், குரான் சொல்லும் கடவுள், முஸ்லிம்கள் என அனைத்தும் அர்த்தமற்ற மதவெறியையும் அறியாமையையும் கொண்டிருந்ததாகத் தயானந்தர் கருதினார்.

இந்தியத் துணைக்கண்டத்தில் ஹிந்துமதத்தை ஒரு பொது மதமாக உருவாக்குவதன் மூலம் ‘ஆரியவர்த்தா’வை உருவாக்க முடியும் என்று அவர் நம்பினார். ‘ஆரியவர்த்தா’ எனும் ஹிந்து நாட்டின் வரையறையில் தற்போதைய தென் இந்தியாவை அவர் சேர்த்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் மாட்டுக்கறி உண்ணும் பிற மக்கள் அனைவரையும் ‘மிலேச்சர்கள்’ என்று அவர் அழைத்தார். மிலேச்சர்கள் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு வெளிநாட்டுக் காட்டுமிராண்டிகள் எனப் பொருள். மிலேச்சர்களால் மாசுபட்ட ஆரியவர்த்தாவைச் சுத்திகரிக்க வேண்டும் என்பதையே தன்கொள்கையாகக் கொண்டிருந்தார் தயானந்தர்.

வர்ணாசிரமக் கட்டமைப்பைவிட்டு வெளியே சென்றவர்களை, மீண்டும் வர்ணக் கட்டமைப்புக்குள் கொண்டுவருவதற்கு ‘ஷுத்தி’ எனும் இயக்கத்தை அவர் ஆரம்பித்தார். ‘ஷுத்தி’ என்றால் சமஸ்கிருதத்தில் தூய்மைப்படுத்துதல் என்று பொருள். அதாவது ‘ஷுத்தி’ என்பது ஒரு சடங்கு. வேற்று மதத்துக்கு மாறியதால், மிலேச்சர்களாகி அசுத்தமானவர்களைத் தூய்மைப்படுத்தும் சுத்திகரிப்புச் சடங்குதான் இந்த ‘ஷுத்தி’.

இதன் மூலம் கிறிஸ்தவம், இஸ்லாம் என வேறு மதங்களை ஏற்ற பெருவாரியான மக்களை மீண்டும் ஹிந்து மதத்துக்குள் கொண்டு வரும் ஏற்பாட்டைத் தயானந்தர் செய்தார். ஆனாலும் 1890 வரை இந்த ஷுத்தி இயக்கம் பெருந்திரள் ஹிந்து மதமாற்றங்களை நிகழ்த்தியிருக்கவில்லை.

1890க்குப் பிறகு தயானந்தரின் சிஷ்யர் பண்டித லேக் ராம், ஷுத்தி இயக்கத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் சென்றார். நேரடியாகவும் மறைமுகமாகவும் இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினார். காலப்போக்கில், இஸ்லாமிய மதத்தில் இருந்து ஷுத்தி மூலம் ஹிந்து மதத்துக்கு மாறிய நபர்கள் தங்களின் நேர்மையை நிரூபிக்க, பன்றிக்கறி உண்ண நிர்பந்திக்கப்பட்டனர்.

ஹிந்து மதத்தை இலகுவாக்கிய பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்த ஆரிய சமாஜைப் பல்வேறு இயக்கங்கள் எதிர்த்தன. சனாதனத் தர்மத்தைக் கெட்டியாக, கெடுபிடியாகத் தூக்கிப்பிடித்த இந்த இயக்கங்கள் ஹிந்து மதத்தைச் சீர்திருத்துவதைக் கண்டித்தனர். முந்தைய பகுதியில் பார்த்த ‘தர்ம சபா’க்களும் இதில் அடக்கம்.

இப்படியாகத் தர்ம சபா, பாரத் தர்ம மகாமண்டல், ஆரிய சமாஜ் எனப் பல ஹிந்து இயக்கங்கள் எழுந்தன. ஹிந்து மதத்தைச் சீர்திருத்துவது என்று வரும்பொழுது இவை வெவ்வேறு வகையில் மாறுபட்டன. ஆரிய சமாஜ் அதிகப்படியான சீர்திருத்தங்களைச் செய்தது. தர்ம சபா அப்படியே அதற்கு நேரெதிர். இதற்கு இடைப்பட்டத் தன்மை கொண்டிருந்தது மகாமண்டல்.

இவ்வாறாக, ஹிந்து இயக்கங்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டன. ஆனால் இந்த அனைத்து இயக்கங்களும் ஒன்றுபட்ட இடம்தான், தயானந்தரின் ஆரிய சமாஜ் ஆரம்பித்த ‘கோரக்ஷ்னி சபா’ எனப்படும் ‘பசுப் பாதுகாப்பு இயக்கம்’. 1881இல் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் ஹிந்து – இஸ்லாமியர் பிரிவைக் கூர்மையாக்கியது.

தயானந்தர், ‘கோகருணநிதி’ என்று ஒரு சிறுநூலை எழுதி இருந்தார். கோகருணநிதி என்றால் ‘பசுவிடம் காட்டவேண்டிய கடலளவு கருணை’ என்று பொருள். அந்நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரையில் ‘பசுவைக் கொல்பவனைக் கொல்’ என யஜுர் வேதத்தில் உள்ளதாக எழுதப்பட்டிருக்கிறது. அந்நூல் ஒவ்வொரு ஊரிலும் ‘பசுப் பாதுகாப்பு இயக்கம்’ தொடங்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கூறியதுடன், அவ்வமைப்புகள் எம்மாதிரியான கட்டமைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தது. அந்நூல் பசுப் பாதுகாவலர்களுக்கு வேதம் போன்றானது. பசுப் பாதுகாப்பு இயக்கத்தின் நடவடிக்கை வன்முறைமிக்கதாக இருந்தது.

இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகை ‘ஈத்-உல்-அதா’. இந்தப் பண்டிகையின்போது அவர்கள் விலங்கு ஒன்றைப் பலி கொடுக்கவேண்டும். மாட்டுக்கறி விலை குறைந்த ஒன்றாக இருந்ததாலும், மற்ற விலங்குகளைக் காட்டிலும் அதிகளவிலான இறைச்சி மாட்டுக்கறியின் மூலம் கிடைத்ததாலும் இந்தியாவில் ‘ஈத்-உல்-அதா’ பண்டிகையின்போது இஸ்லாமியர்கள் மாடுகளைப் பலி கொடுப்பதே வழக்கமாக இருந்தது. இதனால் இந்தியாவில் அப்பண்டிகை ‘பக்ர்-ஈத்’ என்றே அழைக்கப்பட்டது. ‘பக்ர்’ என்றால் அரேபிய மொழியில் ‘பசு’ என்று பொருள்.

தயானந்தரின் ‘கோரக்ஷ்னி சபா’ ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே, இஸ்லாமியர்கள் பக்ர்-ஈத் பண்டிகையின்போது பசுவைப் பலி கொடுப்பதை எதிர்த்து ‘நம்தாரி’ என்றொரு இயக்கம் உருவாக்கப்பட்டது. இதில் சீக்கியர்களும் ஹிந்துக்களும் உறுப்பினர்களாக இருந்து இஸ்லாமியர்களுக்கு எதிராகப் போராடினர். 1871இல் நம்தாரி இயக்கத் தீவிரவாதிகள் பல இஸ்லாமியக் கசாப்புக் கடைக்காரர்களைக் கொலை செய்தனர். பின்னர் நம்தாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த இயக்கம் ஒடுக்கப்பட்டது. ஆனால் ஆரிய சமாஜின் பசுப் பாதுகாப்பு இயக்கம் ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கமாக வளர்த்தெடுக்கப்பட்டது.

பசுவைக் கடவுளாக வணங்கும் ஹிந்துக்களுக்கும், தங்கள் வழக்கப்படி மாடுகளைப் பலிகொடுத்து மாட்டுக்கறி உண்ணும் இஸ்லாமியர்களுக்கும் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இடையறாத மதக்கலவரங்கள் ஏற்பட ஆரம்பித்தன. இதில் பசுப் பாதுகாப்பு அமைப்பு, மாடுகளைப் பாதுகாக்க ‘கோ சாலைகள்’ எனப்படும் பசுப் பாதுகாப்பு மையங்களை உருவாக்கியது. அவர்கள், பலியிடுவதற்காக விற்கப்படும் மாடுகளை வாங்கி இந்தச் சாலைகளில் வைத்துப் பராமரித்தனர்.

பலியிடுவதற்காக எடுத்துச் செல்லப்படும் மாடுகள் வலுக்கட்டாயமாக இஸ்லாமியர்களிடமிருந்து பிடுங்கப்பட்டன. இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டனர். இஸ்லாமியக் கசாப்புக் கடைக்காரர்கள் கொல்லப்பட்டனர். இவ்வகையிலான தீவிரமான வன்முறையை, பசு பாதுகாவலர்கள் இஸ்லாமியர்கள் மீது மட்டுமல்ல, ஹிந்துக்கள் மீதும் நிகழ்த்தினர். இஸ்லாமியர்களுக்குத் தங்கள் மாட்டை விற்ற ஹிந்துக்கள் தாக்கப்பட்டனர்; அவர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.

கலவரங்கள் தொடர்ந்தபோதிலும், மாட்டைப் பலிகொடுப்பதைப் பிரிட்டிஷ் அரசு அனுமதித்தது. சட்டங்கள் மூலம் சில கடிவாளங்கள் விதிக்கப்பட்டாலும், மாட்டைப் பலிகொடுப்பது தொடர்ந்தது. பெரும் ஆரவாரமான ஊர்வலங்கள், கொண்டாட்டங்கள் என எதுவும் இல்லாமல், நான்கு சுவர்களுக்குள்ளே, ஹிந்துக்களின் கண்களில் படாதவாறு இஸ்லாமியர்கள் மாட்டைப் பலியிடலாம் என்றது சட்டம்.

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 295ன்படி, மதரீதியான புனித அடையாளங்கள் அல்லது புனிதமாகக் கருதப்படும் பொருள்களை அவமதித்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதுகுறித்து 1887இல் அலகாபாத் உயர்நீதிமன்றம் கொடுத்த ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பு, இரு மதங்களுக்கு இடையிலான மோதலை அதிகப்படுத்தியது. அந்தத் தீர்ப்பில் ‘மாடு’ புனிதமான பொருள் அல்ல எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் 1890களில் இஸ்லாமியர்களிடையே மாட்டைப் பலியிடுவது அதிகரித்தது. இதையொட்டி 1893இல் நடந்த மதக்கலவரத்தில் மட்டும், 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

ஏற்கெனவே சொல்லப்பட்டதுபோல, அக்காலகட்டத்தில் பல்வேறு ஹிந்துச் சீர்திருத்த இயக்கங்கள் எழுந்தபோதிலும், அவை வெவ்வேறு திசையில் பயணித்துக்கொண்டிருந்தன. இந்தப் பசுப் பாதுகாப்பு இயக்கம்தான் இவர்கள் அனைவரையும் ‘ஹிந்து’ என்ற ஒரே போர்வைக்குள் அடைத்தது. இஸ்லாமியர்களிடமிருந்து தங்களை முற்றிலும் வேறுபடுத்திக்காட்டும் சின்னமாகப் பசு கட்டமைக்கப்பட்டது. மேலும், அதற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட எந்தச் சீர்திருத்த இயக்கங்களாகினும் அவை நகர்ப்புறங்களில் மட்டுமே பெரும்செல்வாக்கு பெற்றிருந்தன. கிராமப்புறங்களில் அவை பெரிதளவில் ஊடுருவியிருக்கவில்லை.

ஜாதி, வர்க்கம் என அனைத்தையும் கடந்து ஹிந்துக்களை ஒன்றுதிரட்டியது பசுப் பாதுகாப்பு இயக்கம்தான். மதபோதகர்கள் மூலம் பசுப் பாதுகாப்பு இயக்கம் கிராமங்களுக்குள் வலுவாக ஊடுருவியது.

அலகாபாத் பசுப் பாதுகாப்பு சபையின் தலைவர் ‘ஸ்ரீமன் சுவாமி’ கொல்கத்தாவிலிருந்து பாம்பே, பீகார் வழியாக லாகூர் வரை சென்று பசுப் பாதுகாப்பு குறித்து 50க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தினார். இவ்வாறு ஊர் ஊராகச் சென்ற பல்வேறு சாமியார்களால் நகர்ப்புறங்களிலிருந்து கிராமங்களுக்குப் பசுப் பாதுகாப்பு இயக்கம் கடத்தப்பட்டது. பசுப் பாதுகாப்பின் பெயரிலான வன்முறை வட இந்தியா முழுவதும் பரப்பப்பட்டது.

பாரத் தர்ம மகாமண்டலுக்கு நிதியுதவி அளித்த தர்பங்கா மகாராஜா, பசுப் பாதுகாப்பு இயக்கத்துக்கும் தன் உதவிக் கரத்தை நீட்டினார். சனாதனத் தர்மச் சபாக்கள் பசு வதையைத் தடை செய்யக்கோரி போராட்டத்தில் இறங்கினர்.

இந்தப் பசுப் பாதுகாப்பு இயக்கம் எப்போது வேண்டுமானாலும் தனக்கு எதிரான வெகுமக்கள் இயக்கமாகத் திரண்டு எழும் என்பதனைப் பிரிட்டிஷ் அரசு புரிந்து வைத்திருந்தது. ஏனெனில், இஸ்லாமியர்களைக் காட்டிலும் அதிகளவிலான பசுக்களை மாட்டுக்கறிக்காகப் பலியிட்டவர்கள் பிரிட்டிஷ்காரர்கள்தான். 1857 சிப்பாய்க் கலகம் முடிந்து சில பத்தாண்டுகளே ஆகியிருந்தன. அவர்களின் பயத்துக்குத் தூபம் போடுவதுபோல் சில சூழ்நிலைகளும் அமைந்திருந்தன.

பசுப் பாதுகாப்பு இயக்கமும், அகில இந்தியக் காங்கிரஸும் ஒரே காலகட்டத்தில் எழுந்தவை. அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சி, பசுப் பாதுகாப்பைத் தங்களின் அதிகாரப்பூர்வக் கொள்கையாக அறிவிக்கவில்லை. ஆனால் பல காங்கிரஸ்காரர்கள் பசுப் பாதுகாப்பு இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். நாக்பூரில் கோரக்ஷ்னி சபாவும் காங்கிரஸ் கட்சியும் தங்களின் மேடைகளைப் பகிர்ந்துகொண்டனர். பசுவதையைத் தடை செய்வதற்காகக் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் பஞ்சாபில் கையெழுத்து இயக்கத்தையும் நடத்தியுள்ளனர். பசுவதைக்கு எதிரான 1893ஆம் ஆண்டு கலவரத்திலும் பல்வேறு காங்கிரஸ் கட்சிக்காரர்கள் பங்கேற்றார்கள் எனக் அக்கட்சியின் வரலாற்றை எழுதிய ஜான் மெக்லேன் குறிப்பிடுகிறார்.

எனவே பிரிட்டிஷ் அரசு, இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அவசியம் என்று கருதியது. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதும் ஒரு காரணம். மற்றொன்று, எக்காரணம் கொண்டும் பசுப் பாதுகாப்பு இயக்கம் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான இயக்கமாக மாறிவிடக்கூடாது என்பது. அதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

இப்படியாக, இஸ்லாமியர்களுக்கான சில பாதுகாப்புகளைப் பிரிட்டிஷ் உறுதி செய்தது. இதுவே ‘பிரித்தாளும் சூழ்ச்சி’ என்று சொல்லப்படுகிறது. பொதுவாகச் சொல்லப்படுவதுபோல ஹிந்து, இஸ்லாமியர் இரு பிரிவினருக்குமான பிரிவை ஏற்படுத்தியது பிரிட்டிஷ் அல்ல. பசுப் பாதுகாப்பு இயக்கத்தால்தான் ஹிந்து – இஸ்லாமியச் சமூகங்கள் நேரெதிர் பிரிவுகளாகப் பிரிந்து கிடந்தன. இந்த ஒற்றுமையின்மை பிரிட்டிஷ் அரசுக்கு ஒரு கேடயமாகப் பயன்பட்டது.

பிரிட்டிஷ் இந்தியாவின் மத்திய மாகாணத்தில் இருந்த கோரக்ஷ்னி சபாக்களுக்கு மராட்டியப் பிராமண வழக்கறிஞர்கள் ஆதரவளித்திருந்தனர். அங்குக் காங்கிரஸை ஆதரித்தவர்களும் அவர்களே. உத்திரப் பிரதேசத்தில் பல ஜமீன்தார்கள், செல்வம் படைத்த வர்த்தகர்களின் ஆதரவைப் பெற்ற காங்கிரஸ்காரர்கள் பசுவதைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தனர்.

காங்கிரஸ் செயற்குழுவில் மூன்று முறை பங்கேற்ற ராம் சரண் தாஸ், பசுப் பாதுகாப்பு இயக்கத்தில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். மேலும் மதன்மோகன் மாளவியா ஆரம்பித்த அனைத்திந்திய ஹிந்து மகாசபாவின் அனைத்துக் கூட்டங்களிலும் அவர் பங்கேற்றார். ஷுத்தி இயக்கத்தோடு, தேசிய மொழியாக ஹிந்தி இருக்கவேண்டும் எனத் தயானந்தர் விரும்பியதையும் தங்கள் கொள்கையாக ஹிந்து மஹாசபா ஏற்றது.

ஷுத்தி இயக்கம், பசுப் பாதுகாப்பு இயக்கம், தர்ம சபா, ஹிந்து மகாசபா என அனைத்தையும் ஒருங்கிணைத்தவர், ராம்சரண்தாஸின் வழிகாட்டியாக இருந்த மதன்மோகன் மாளவியா. இப்படியாக, முன்னர் சொன்ன அனைத்து ஹிந்துச் சீர்திருத்த இயக்கங்களையும் ஹிந்துக்களாக ஒரே போர்வையில் திரட்டியது மகாசபா. முக்கியமான காங்கிரஸ் தலைவர்களான பாலகங்காதர திலகரும் லாலா லஜ்பதி ராயும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஹிந்துத் தேசியத்தை நுழைத்தனர்.

பசுப் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடர்ந்து மென்மேலும் ஹிந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான விரிசல் வளர்ந்துகொண்ட சென்றது. அடுத்தடுத்து வரும் பகுதிகளில் அவற்றை விரிவாகக் காணலாம்.

(தொடரும்…)

 

______________

மேற்கோள் நூல்கள்
1. R.C.Majumdar, History of the Freedom Movement in India Vol.1, Firma K.L.Mukhopadhyay (2nd Revised ed.1971)
2. J.F.Seunarine, Reconversion to Hinduism through Suddhi, Christian Literature Society (1st ed. 1977)
3. Kenneth W.Jones, Arya Dharm : Hindu consciousness in 19th-century Punjab, University of California (1st ed. 1976)
4. Mushirul Hasan, Nationalism and Communal politics in India, 1885-1930, New Delhi Manohar Publications (1st ed. 1991)
5. David Ludden, Making India : Hindu Religion, Community, and the Politics of Democracy in India, Oxford University Press (2nd ed. 2005)
6. Maharshi Dayanand Saraswati, Gokarunanidhi : Ocean of Mercy for the Cow
7. Rohit De, A People’s Constitution The Everyday Life of Law in the Indian Republic, Princeton University Press (1st ed. 2018)
8. Abhinav Chandrachud, Republic of Religion : The Rise and fall of Colonial Secularism in India, Penguin Random House India (1st ed.2020

உதவிய ஆராய்ச்சிக்கட்டுரைகள
1. Sandria B. Freitag, Sacred Symbol as Mobilizing Ideology: The North Indian Search for a “Hindu” Community, Comparative Studies in Society and History, Vol. 22, No. 4 (Oct., 1980), pp. 597-625.
2. Yoginder Sikand and Manjari Katju, Mass Conversions to Hinduism among Indian Muslims, Economic and Political Weekly, Vol. 29, No. 34 (Aug. 20, 1994), pp. 2214-2219.
3. Ishtiaq Alam, A New Kind Of Politics; Gauraksha And Hindu-Muslim A New Kind Of Politics; Gauraksha And Hindu-Muslim Communalism In Bengal, 1890-1899, CUNY City College.
4. Kenneth W. Jones, Communalism in the Punjab: The Arya Samaj Contribution, The Journal of Asian Studies, Vol. 28, No. 1 (Nov., 1968), pp. 39-54.
5. Anand A. Yang, Sacred Symbol and Sacred Space in Rural India: Community Mobilization in the “Anti-Cow Killing” Riot of 1893, Comparative Studies in Society and History, Vol. 22, No. 4 (Oct., 1980), pp. 576-596.

பகிர:
வாஞ்சிநாதன் சித்ரா

வாஞ்சிநாதன் சித்ரா

எஸ்.ஆர்.எம். சட்டக்கல்லூரியில் இளங்கலைச் சட்டம் படித்து வருகிறார். விகடன் குழுமத்தில் மாணவ நிருபராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். You Turn எனும் உண்மை கண்டறியும் ஊடகத்தில் (Fact Checking Website) பங்களிப்பாளராக உள்ளார். அரசியல், வரலாறு, சட்டம் ஆகியவை இவருக்குப் பிடித்த துறைகள். தொடர்புக்கு : rvanchi999@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *