19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுந்த பல்வேறு சீர்திருத்த இயக்கங்கள் ‘ஹிந்து’ மதத்தைக் கட்டமைத்து, அந்நூற்றாண்டின் பிற்பகுதியில் ஹிந்து தேசியத்துக்கு வழிவகுத்தது. அதனைத் தொடர்ந்து, 1870களில் எழுந்த ஆரிய சமாஜின் பசு பாதுகாப்பு இயக்கம் ஹிந்து-இஸ்லாமியர் பிரிவைக் கூர்மையாக்கியது. பஞ்சாப், வங்காளம் ஆகிய இரு மாகாணங்களிலும் பசுவை முன்வைத்து எழுந்த மோதல்கள், கலவரங்கள் பசுவைக் கொல்பவர்களைக் கொன்றன. பல்வேறு ஹிந்து சீர்திருத்த இயக்கங்களை ஒன்றிணைத்த பசு பாதுகாப்பு இயக்கத்தின் நீட்சி, ஈரெதிர் துருவங்களாக ஹிந்துக்களையும் இஸ்லாமியர்களையும் நிறுத்தியது.
இதனைத் தொடர்ந்து 1905இல் நடந்த வங்கப் பிரிவினை மற்றும் அதனை ஒட்டிய நிகழ்வுகளும்தான், இந்தியத் துணைக்கண்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் என இரு நாடுகள் உருவாகும் சூழலுக்கு அச்சாணியாக அமைந்தன.
வரலாற்றில், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து சென்றதற்கு ஜின்னாவின் அரசியல் தவறுகள்தான் காரணம் என்று ஒருசாராரும், நேரு மற்றும் காந்தியின் அரசியல் தவறுகள்தான் காரணம் என்று மற்றொரு சாராரும் பேசிவருகின்றனர். ஆனால், இவர்கள் யாவரும் தீவிர அரசியலுக்குள் நுழைவதற்குமுன்பே இந்தியத் துணைக்கண்டத்தில் மதரீதியாக இரு நாடுகள் உருவாகுவதற்குத் தூபம் போடப்பட்டுவிட்டது.
ஹிந்து மதத்தில் சீர்திருத்தங்களை மேற்கொண்ட இயக்கங்கள், ஹிந்து பெருமையையும் ஹிந்து மதத்தையும் மீட்டெடுத்தன. அதனுடனே உருவான தேசிய உணர்ச்சி என்பது இஸ்லாமியர்களை விலக்கி வைத்த தேசியமாக உருப்பெற்றது. ‘நாம்’ என்ற சொல்லைச் சொல்லி தேசியம் ஆரம்பித்த அத்தனை வாக்கியங்களிலும் ‘நாம்’ எனப்படுவது ‘ஹிந்து’ மக்களை மட்டுமே குறித்தது.
அதேபோல தேசியம் பேசியவர்கள் பிரிட்டிஷாரையும் இஸ்லாமியர்களையும் ‘அவர்கள்’ என்று சொல்லி அந்நியப்படுத்தினார்கள். பிரிட்டிஷ் அரசை மட்டுமல்ல இஸ்லாமியர்களையும் ஹிந்து தேசியம் எதிரியாகக் கருதியது.
1905ஆம் ஆண்டு நடந்த வங்கப் பிரிவினை பற்றிப் பார்த்தோமானால், இந்திய தேசியம் அதன் உண்மைத்தன்மையில் எவ்வாறு ஹிந்து தேசியமாக இருந்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வங்காளம், இந்தியாவின் மிகப்பெரும் மாகாணமாக வளர்ந்திருந்தது. இதற்குக் காரணம், 18ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் நடைபெற்ற புக்சார், பிளாசி, போன்ற பல்வேறு போர்களில் கிழக்கிந்திய கம்பெனி வெற்றி கண்டது. அவற்றின்மூலம் அவர்கள் வென்றெடுத்த பகுதிகள் வங்காள மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. இவ்வாறாக, 1826இல் வங்காளம் என்பது வடமேற்கே டெல்லியைத் தாண்டியும் கிழக்கே அசாம் பள்ளத்தாக்கு வரையிலும் விரிந்திருந்தது.
இந்த ஒட்டுமொத்தப் பகுதியும் அதாவது, வங்காள மாகாணம் முழுவதுமாக இந்தியாவின் தலைமை ஆளுநரின் (Governor – General of India) நேரடிக் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். இந்தியாவின் தலைமை ஆளுநர்தான் வங்காள மாகாணத்துக்கும் தலைமை ஆளுநர். பல்வேறு பகுதிகள் வங்காள மாகாணத்துடன் இணைந்ததால், ஆட்சி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டன.
1836இல் இன்றைய உத்திரப் பிரதேசம், டெல்லி முதலியன ‘வடமேற்கு மாகாணம்’ என வகைப்படுத்தப்பட்டு அதற்கென்று தனியே துணைநிலை ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் பிரிட்டிஷ் இந்தியாவுடன் பஞ்சாப் இணைந்தபோதும் வங்காள மாகாணத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது பஞ்சாப். 1859ஆம் ஆண்டில்தான் பஞ்சாப் மாகாணத்துக்குத் தனியே துணைநிலை ஆளுநர் நியமிக்கப்பட்டார்.
இவ்வாறாக இந்த மாகாணங்கள் வங்காள மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டு துணைநிலை ஆளுநர்கள் வசம் சென்றன. இவ்வாறாக, வங்காள மாகாணத்திலிருந்த பல பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக அதன் நேரடிக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டது.
தற்போதைய வடகிழக்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஒருசேர அமைந்ததே அன்றைய அசாம் மாகாணம். 1826ஆம் ஆண்டு தொடங்கி 1839ஆம் ஆண்டுவரை, இந்தியத்துணைக்கண்டத்தின் பல வடகிழக்குப் பகுதிகள் அசாமுடன் இணைக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவில் அசாம் இணைக்கப்பட்ட போதும் அது வங்காள மாகாணத்தின் ஒரு பகுதியாகவே இணைக்கப்பட்டது.
பின்னர், 1874ஆம் ஆண்டில்தான் அது தனி மாகாணமாக்கப்பட்டு அதற்குத் தனியே ஒரு தலைமை ஆளுநரை பிரிட்டிஷ் இந்திய அரசு நியமித்தது. 1826ஆம் ஆண்டு முதல் 1862ஆம் ஆண்டுவரையிலும் பர்மாவின் (இன்றைய மியான்மர்) பெரும்பகுதி வங்காள மாகாணத்தின் ஒரு பகுதியாகவே இருந்துவந்தது. அதன் பின்னர்தான், ‘பர்மா’ பிரிட்டிஷ் இந்தியாவின் தனி மாகாணமாக்கப்பட்டது.
1866ஆம் ஆண்டு வங்காள மாகாண ஆட்சியின்கீழ் இருந்த ஒரிசா பகுதியில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக ஈராண்டு காலகட்டத்துக்குள் கிட்டத்தட்ட 40 முதல் 50 லட்சம் பேர் மாண்டனர். இதுகுறித்து விசாரிக்க முன்னாள் பாம்பே மாகாணத் தலைமை ஆளுநர் சர் பார்ட்ல் ஃபிரெர் அவர்களை பிரிட்டிஷ் இந்திய அரசு நியமித்தது. ‘வங்காள மாகாண ஆட்சி எவ்வளவு சிக்குண்டு திறனற்று இருக்கிறது என ஒரிசா பஞ்சத்தின் விளைவுகள் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது’ என அவர் கூறியதாக 1867ஆம் ஆண்டு டிசம்பர் மாத அரசுக் குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
1854 முதல் 1900 வரையிலான காலகட்டத்தில், வங்காள மாகாணத்தின் பரப்பளவு முன்பு இருந்ததைவிட எட்டில் ஒரு பகுதியாகக் குறைக்கப்பட்டது. இருப்பினும், அதன் மக்கள் தொகை 4 கோடியிலிருந்து 8 கோடி ஆனது. அதாவது 19ஆம் நூற்றாண்டின் முடிவில் ஒட்டுமொத்தப் பிரிட்டிஷ் இந்தியாவின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதி மக்கள்தொகை கொண்ட மாகாணமாக வங்காளம் விளங்கியது. வங்காள மாகாணம் மேன்மேலும் பிரிக்கப்பட்டாக வேண்டிய சூழலில் இருந்தது.
ஆட்சி செய்வதற்குப் பெரும் பளுவாக வங்காளம் மாறிக்கொண்டிருந்தமையால், நிர்வாக ரீதியாகச் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை பல ஆண்டுகளாகவே இருந்து வந்தது. வங்காள ஆளுநருக்கு உதவியாக நிர்வாக சபை ஒன்றை அளிக்கலாம் என்ற பேச்சு எழுந்தபோதெல்லாம் பிரிட்டிஷ் இந்திய மத்திய அரசு அதற்கு முட்டுக்கட்டை போட்டது. எவ்வகையிலும் மாகாணங்களின் அதிகாரம் பரவலாக்கப்படுவதையோ, பகிர்ந்தளிக்கப்படுவதையோ பிரிட்டிஷ் விரும்பவில்லை.
எனவே, வங்காள மாகாணத்தின் சிட்டகாங் (இன்றைய பங்களாதேஷின் முக்கிய நகரம்) மற்றும் தெற்கு லுஷை மலைப்பகுதிகளை (இன்றைய மிசோரம், மணிப்பூர் மாநிலம்) அசாம் மாகாணத்துக்கு மாற்றிவிடுவது நிர்வாகப் பளுவைக் குறைத்துவிடும் எனப் பிரிட்டிஷ் அதிகாரிகள் நினைத்தனர். 1892ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற விவாதங்கள் எழத்தொடங்கின.
1896ஆம் ஆண்டு, இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்குமாறு வங்காளம் மற்றும் அசாம் மாகாண அரசுகளைக் கேட்டது பிரிட்டிஷ். தெற்கு லுஷை மலைப்பகுதிகளை அசாமுக்கு மாற்றுவதில் யாரும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் சிட்டகாங் பகுதி அசாமுடன் இணைவதற்குப் பெரும் எதிர்ப்புகள் வந்தன.
ஏனென்றால், வங்காள மாகாணத்துடன் ஒப்பிடுகையில் அசாம் மாகாணத்தின் நிர்வாகம் மிகவும் பின்னடைவில் இருந்தது. அதன்பொருட்டு, அசாம் மாகாணத்தின் தலைமை ஆணையராக இருந்த சர் ஹென்றி காட்டன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், அவருக்கு முன்னதாக அசாம் தலைமை ஆணையராக இருந்த சர் வில்லியம் வார்ட், சிட்டகாங், டாக்கா, மைமன்சிங் ஆகிய பகுதிகளை அசாமுடன் சேர்க்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
மறுபக்கம் ‘வங்காள மாகாணத்தின் வளர்ச்சியடைந்த சிட்டகாங் பகுதியைப் பின்தங்கிய அசாம் மாகாணத்துடன் இணைப்பது எவ்வகையிலும் பிரிட்டிஷ் இந்திய நிர்வாக அமைப்புக்கு உதவாது’ என்று சர் ஜேம்ஸ் வெஸ்ட்லேண்ட் தெரிவித்திருந்தார். இவர் வங்காள மாகாணத்தின் பல மாவட்டங்களில் பணியாற்றியிருந்தார், மேலும் அசாம் மாகாணத்தின் தலைமை ஆணையராகவும் சிறிது காலம் பணியாற்றியவர்.
இதுபோன்ற பல்வேறு தரப்பிலிருந்து வந்த எதிர்ப்புகளால், 1897ஆம் ஆண்டு தெற்கு லுஷை மலைப்பகுதிகளை மட்டும் அசாமுடன் இணைக்கலாம் என்ற முடிவுக்கு பிரிட்டிஷ் இந்திய அரசு வந்தது. அசாமுக்கும் வங்காளத்துக்குமான ரயில் வழித்தட இணைப்பு முடிந்த பிறகு சிட்டகாங் பகுதியை அசாமுக்கு மாற்றுவது குறித்துப் பரிசீலிக்கலாம் என அந்த யோசனை தள்ளிவைக்கப்பட்டது.
1898இல் தெற்கு லுஷை பகுதி அசாமுடன் இணைக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு வங்காளப் பிரிவினை குறித்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டது.
இந்தியாவின் தலைமை ஆளுநராக கர்சன் பொறுப்பேற்ற பிறகுதான் இவ்விவகாரம் மீண்டும் கையிலெடுக்கப்பட்டது. கர்சன் கையில் எடுத்தார் என்று சொல்வதை விட அவர் கையில் திடீரென்று வந்து விழுந்தது என்று சொல்லலாம்.
மத்திய மாகாணத்தின் தலைமை ஆணையராக இருந்த சர் ஆண்ட்ரூ ஃப்ரேசர், தலைமைச் செயலகத்துக்கு 1901ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு கடிதம் எழுதுகிறார். அவருடைய ஆட்சியின்கீழ் உள்ள ‘சம்பல்பூர்’ என்ற பகுதியின் நீதிமன்ற மொழியாக ஹிந்தி இருந்தது. ஹிந்திக்குப் பதிலாக ஒரியா மொழியை நீதிமன்ற மொழியாக ஆக்கிவிடலாம் என்று அவர் பரிந்துரைத்தார்.
இதுகுறித்து ஃப்ரேசர் மேலும் சில பரிந்துரைகளை எழுதியிருந்தார். ஒரியா, சம்பல்பூரின் நீதிமன்ற மொழியாகத் தொடரவேண்டுமெனில் அதனை ஒரிசாவுடன் இணைத்துவிடலாம் என்றும் கூறியிருந்தார். ஒரிசா, வங்காள மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ளவேண்டும். சம்பல்பூரை ஒரிசாவுடன் இணைக்க இரு வழிகள் உள்ளன. ஒன்று, சம்பல்பூரை வங்காள மாகாணத்துடன் இணைத்துவிடுவது, மற்றொன்று, ஒட்டுமொத்த ஒரிசா பகுதியையும் மத்திய மாகாணத்துடன் இணைத்துவிடுவது.
இந்தக் கடிதத்தில் உள்ள பரிந்துரைகள் தலைமைச் செயலகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தலைமைச் செயலகத்தின் பல்வேறு துறைகளும் இந்த ஃப்ரேசரின் பரிந்துரையின்மீது பல முன்மொழிவுகளை முன்வைத்தன. அடுத்த 14 மாதங்களில், அந்த முன்மொழிவுகள் வளர்ந்து வங்காள மாகாணத்தின் பாதியை மறுசீரமைக்கும் திட்டமாக உருவானது. இப்படியான மிகப்பெரும் திட்டமாக இது உருவான பின்னர்தான் அந்தக் கடிதம் பிரிட்டிஷ் இந்தியாவின் தலைமை ஆளுநர் கர்சன் கையில், 1902ஆம் ஆண்டு மே மாதம், அன்று வந்து விழுந்துள்ளது.
இதற்கு ஒரு மாதம் முன்பு, 1902ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கர்சன் பிரிட்டிஷ் இந்தியாவின் தலைமைச் செயலாளர் ஜார்ஜ் ஹாமில்டன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். பெரார் பகுதியை மத்திய மாகாணத்துடன் இணைப்பது குறித்தான கடிதம் அது. அக்கடிதத்தில் கர்சன் இந்தியாவின் மாகாண எல்லைகள் மறுசீரமைக்கப்படவேண்டும் என்ற தன் எண்ணத்தைப் பதிவு செய்திருந்தார். ‘ஒரு தனிமனிதன் ஆட்சி செய்ய இயலாத அளவுக்கு, சந்தேகத்திற்கிடமின்றிப் வங்காள மாகாணம் மிகப்பெரியதாக உள்ளது.’ என்று அதில் எழுதியிருந்தார் கர்சன்.
இந்தியாவின் தலைமைச் செயலாளருக்கு கர்சன் கடிதம் எழுதிய சில நாட்களில், அவரிடம் ஒரு கோப்பு வந்து சேர்கிறது. அதுதான் ஃப்ரேசரின் பரிந்துரையின்மேல் உருவான வங்காள மாகாணத்தின் மறுசீரமைப்புக் குறித்தான திட்டக்கோப்பு.
இந்தியாவின் மிக முக்கியமான மாகாணத்தைப் பிளந்து, இந்தியாவின் வரைபடத்தையே முற்றிலும் மாற்றவிருக்கும் ஒரு திட்டம் குறித்து 14 மாதங்களாகத் தலைமைச் செயலகத்தில் நடந்த கடிதப் போக்குவரத்துப் பற்றி எதுவும் தன் கவனத்துக்கு வராமல் இருந்ததால் பெருங்கோபத்திற்கு ஆளானார் கர்சன்.
அப்போது தலைமைச் செயலகத்தின் அதிகாரிகளுக்கு அவர் ஒரு கடிதம் எழுதியதாக லோவத் ஃப்ரேசர் தன்னுடைய, ‘India under Curzon and After’ எனும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கடிதத்தின் சுருக்கம் பின்வருமாறு:
‘அரசாங்கத் தலைமை என்று எதுவும் இருப்பதாக உங்களுக்குத் தோன்றவில்லையா? நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பதை அரசாங்கத் தலைமைக்குத் தெரியப்படுத்தத்தான் செயலாளர்கள் இருக்கிறார்கள்.
அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதிக்கின்ற, மாகாணங்களைத் துண்டாடுகின்ற இதுபோன்ற மிகமுக்கியமான பிரச்னைகளின் கோப்புகள், ஓராண்டுக்கு மேலாக விவாதத்திலிருந்தும் தலைமை ஆளுநரின் கவனத்துக்கு வராமலேயே இருந்தது என்று வெளியே சொன்னால் அது நம்பக்கூடியதாக இருக்குமா? இதுபோன்ற விவகாரங்களில் ஆர்வம் காட்டவில்லையெனில் நான் தலைமை ஆளுநராக இருக்கவே தகுதியற்றவனாகி விடுவேன். தலைமைச் செயலகத்தில் என்னைத்தவிர, அத்தனை துறைகளிலும் வங்கப் பிரிவினை விவகாரம் விவாதிக்கப்பட்டிருக்கிறது. நிதியைக் கையாளுகிற உறுப்பினர்கள்கூட கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.’
சர். சார்லஸ் ரிவஸ் என்பவர் தலைமை ஆளுநரின் நிர்வாக சபையில் ஒரு உறுப்பினராக இருந்தவர். அவர் ஃப்ரேசரின் கடிதத்தின் மேல் எழுதிய முன்மொழிவில், ‘வங்காளத்தில் இருந்து ஒரிசாவை மத்திய மாகாணத்துக்கு மாற்றும் எண்ணத்தைக் கைவிடவேண்டும். தலைமை ஆணையர் மூலம் ஆட்சி செய்யப்படும் தனி மாகாணமாக ஒரிசாவை மாற்றும் யோசனையும் வரவேற்கத்தக்கது அல்ல’ என்று பதிவு செய்துள்ளார்.
தன் கவனத்துக்கே வராமல், இவை போன்று தீர்க்கமாக எடுக்கப்பட்ட முடிவுகள்தான் கர்சனை மேலும் கோபமாக்கியுள்ளது. இதனால் தான், அக்கடிதத்தில் இப்படி ஒரு வரியையும் எழுதியுள்ளார், ‘அனைத்து விவாதங்களும் முடிந்தபின்னர் கடைசியாக, வெறும் கையெழுத்துக்காக இந்த விவகாரம் என்னிடம் வந்துசேர்ந்துள்ளது’.
இந்தக்கடிதம் எழுதப்படுவதற்கு ஓராண்டுக்கு முன்புதான் பஞ்சாப் மாகாணத்தைப் பிரித்து வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தை உருவாக்கியிருந்தது பிரிட்டிஷ் இந்திய அரசு. வங்காளம், அசாம், மத்திய மாகாணம், மெட்ராஸ் ஆகிய மாகாணங்களின் எல்லைகள் புதுப்பிக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட வேண்டியது அவசியம் என்ற முடிவுக்கு கர்சன் வருகிறார். மாகாணங்கள் திறனற்றுப் போவதால், ‘வருங்காலத்துக்காக மாகாண எல்லைகளை நான் சீரமைக்கப்போகிறேன்’ என்றார் கர்சன்.
கர்சன் இவ்விவகாரத்தை கையில் எடுத்த பின்னர், 1903ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியின் தொடக்க காலத்தில் வங்கப் பிரிவினைக்கு ஒப்புதல் கொடுக்கிறார். வங்காள மாகாணத்தின் சிட்டகாங், டாக்கா, மைமன்சிங், டிப்பெரா மலைகள் ஆகிய பகுதிகள் அசாமுடன் இணைத்துவிடவும், சோட்டா நாக்பூர் பகுதி மத்திய மாகாணங்களுடன் இணைத்து முடிவெடுக்கப்பட்டது. மெட்ராஸ் மற்றும் மத்திய மாகாணங்களிலிருந்து ஒரியா பேசும் மக்கள் வாழும் பகுதிகளைப் வங்காளத்துக்கு மாற்றுவதென்றும் முடிவானது.
பிரிட்டிஷ் இந்தியாவின் அரசிதழில் இந்த வங்கப் பிரிவினைத்திட்டம் 1903ஆம் ஆண்டு டிசம்பர் 12 அன்று வெளியிடப்பட்டது. இதுதான் முதன்முதலில் முன்மொழிந்த வங்கப் பிரிவினைத்திட்டம். இத்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் 1.1 கோடி மக்கள் தொகையை நிர்வகிக்கும் பாரம் வங்காளத்திடமிருந்து இறக்கிவைக்கப்பட்டிருக்கும்.
கிழக்கு வங்காளத்தின் பெரும்பாலான நிலபுலன்களைச் சொந்தம் கொண்டாடிக்கொண்டிருந்த ஹிந்து தலைவர்கள் அனைவரும் கல்கத்தா மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குடியேறியிருந்தனர். எனவே, அவர்களுக்குக் கல்கத்தாவில் இருந்து நாம் பிரிக்கப்பட்டுவிடுவோம் என்ற அச்சம் எழுந்தது. மேலும், அசாம் போன்ற பின் தங்கிய மாகாணத்துடன் இணைக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை.
துணைநிலை ஆளுநருடன் கூடிய ஒரு சட்டசபையின் மூலமாகப் வங்காள மாகாணம் ஆட்சி செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. மறுபுறம் அசாம் தலைமை ஆணையரால் ஆட்சி செய்யப்பட்டுக் கொண்டிருந்தது, அங்குச் சட்டசபை கிடையாது. சட்டசபை மூலம் நமக்குக் கிடைக்கும் அரசியல் பிரதிநிதித்துவம் அசாம் மாகாணத்துடன் இணைந்தால் நமக்குக் கிடைக்காமல் ஆகிவிடும் என்பதால் கிழக்கு வங்காளத்தில் வாழ்ந்த இஸ்லாமியர்களும் ஆரம்பத்தில் வங்கப் பிரிவினைத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்கிறார் வரலாற்றாய்வாளர் எம்.ஆர்.ஏ.பெய்க்.
மேலும், இதன்மூலம் அரசாங்கம் தங்களை அசாமியர்களாக மாற்றிவிட முயற்சிக்கிறார்கள் என்றும் கிழக்கு வங்காள இஸ்லாமியர்கள் அஞ்சினர் என வரலாற்றாய்வாளர் அனில்பரன் ரே சொல்கிறார்.
இந்திய தேசியம் வளர்ந்துகொண்டிருந்த நேரம் அது. வங்கப் பிரிவினைத் திட்டம் வங்காள தேசத்தைத் துண்டாடுகின்ற செயல் என்றும் இதன்மூலம் இஸ்லாமிய மக்களை ஹிந்து மக்களுக்கு எதிராகத் திருப்பி, வங்காள தேசத்தைப் பிரிட்டிஷ் பிரித்து ஆள நினைக்கிறது எனப் போராட்டங்கள் எழுந்தன. இந்திய தேசியத்தின் முற்றுமுழுதான வடிவத்தை நிர்ணயித்தவை இந்த நிகழ்வுகள்தான் என்று கூறலாம்.
கர்சன் செல்லும் இடமெல்லாம், ‘எங்களைப் பிரித்துவிடாதீர்கள்’, ‘வங்காளியர்கள்களை அசாமியர்களாக மாற்றிவிடாதீர்கள்’ என்ற பதாகைகள் மூலம் மக்கள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துக்கொண்டிருந்தனர்.
கர்சன் மக்களின் நாடித்துடிப்பை அறிய டாக்கா, மைமன்சிங், சிட்டாகாங் பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கிருந்த ஹிந்து மற்றும் இஸ்லாமிய மக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார்.
‘அசாமின் மக்கள் தொகை 60 லட்சம் அதில் பாதி, அதாவது 30 லட்சம் மக்கள் ஏற்கெனவே வங்காளியர்கள்தான். இப்போது மேலும் 1.1 கோடி வங்காளியர்கள்களை அசாமுடன் இணைப்பதால் ‘கிழக்கு வங்காளம் மற்றும் அசாம்’ மாகாணத்தில் வங்காளியர்கள்களின் எண்ணிக்கை 1.4 கோடியாகிவிடும். கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடி வங்காளியர்கள்களை 15 லட்சத்துக்கும் குறைவாக உள்ள அசாமியர்கள் தங்கள் ஆதிக்கத்துக்கு உட்படுத்தி விடுவார்கள் என்று சொல்வது மிகுந்த வேடிக்கையாக இருக்கிறது.
வங்காளியர்கள்களால் ஆதிக்கத்துக்கு உள்ளாக்கப்படுவோம் என அசாமியர்கள் கூறினால்கூட அந்தப் பயத்துக்குப் பின்னாலிருக்கும் தர்க்கத்தை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால், வங்காளியர்கள் தாங்கள் பிரித்தாளப்படுவோம் என ஏன் அஞ்சுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இவை முற்றிலும் என் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.’ என்றார் கர்சன்.
மேலும், ‘வங்காளியர்கள் எங்கும் இடமாற்றத்திற்கு உள்ளாகப் போவதில்லை, அவர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கேயேதான் இருக்கப்போகிறார்கள். முன்னர் ஒரே ஒரு மாகாணத்தில் அதிகளவில் இருந்த வங்காளியர்கள் இனிமேல் இரண்டு மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தப்போகிறார்கள். வங்காள தேசத்துக்கு இரண்டாவதாக ஒரு கிளையை உருவாக்கிக் கொடுக்க இருக்கிறோம்.’ என்றார் கர்சன்.
இந்தச் சுற்றுப்பயணத்துக்குப் பிறகு வங்கப் பிரிவினைத்திட்டம் மாற்றப்பட வேண்டும் என்ற முடிவுக்கு கர்சன் வருகிறார். வங்காளத்தில் இருந்து அசாமுக்கு மாற்றப்படும் பகுதிகளை அதிகரித்து, தனியே ஒரு துணைநிலை ஆளுநரையும் ஒரு சட்டசபையையும் கொடுத்துவிடும் அளவுக்கு, ‘கிழக்கு வங்காளம் மற்றும் அசாம்’ மாகாணத்தை இன்னும் மிகப்பெரியதாக மாற்ற எண்ணினார். இதன்மூலம் பல்வேறு தரப்புகளில் இருந்து வரும் எதிர்ப்புகளைக் கொஞ்சம் மட்டுப்படுத்த முடியும் என்று நம்பினார்.
1905ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் தேதி, புதிய வங்கப் பிரிவினைத் திட்டம் பொதுவெளியில் அறிவிக்கப்பட்டது.
i) 1,06,540 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட புதிய மாகாணமாக ‘கிழக்கு வங்காளம் மற்றும் அசாம்’ உருவாக இருந்தது. டாக்கா இதன் தலைநகரம். மொத்த மக்கள்தொகை 3.1 கோடி, அதில் 1.8 கோடி இஸ்லாமிய மக்கள், 1.2 கோடி ஹிந்துக்கள். தனியே அவர்களுக்கென்று ஒரு துணைநிலை ஆளுநரும் ஒரு சட்டசபையும் வழங்கப்பட்டது.
ii) மீதமிருந்த வங்காளம், 1,41,580 சதுர மைல்கள் கொண்ட மாகாணமாகச் சுருக்கப்பட்டது. அதன் மக்கள்தொகை 5.1 கோடி. அதில் 4.2 கோடி ஹிந்து மக்கள் மற்றும் 90 லட்சம் இஸ்லாமியர்கள்.
ஆனால், இவை எதுவும் எதிர்ப்புகளைச் சமாளிக்கப் போதுமானதாக இல்லை. போராட்டங்கள் தொடர்ந்தன. இன்னும் வீரியமடைந்தன. அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துகொண்டிருந்த விடுதலைப் போராட்டங்களை, ஒருசீரான பாதையில் தேசிய இயக்கமாக வெகுண்டெழ வைத்தது இந்த வங்கப் பிரிவினைதான்.
‘வங்கப் பிரிவினைக்குப் பின்பு இருப்பது அரசியல் காரணங்கள் மட்டுமே, நிர்வாகக் காரணங்களுக்காக வங்காளத்தைப் பிரிப்பதாகச் சொல்வதெல்லாம் பூசி முழுகும் வேலை’ என்பதே தேசியவாதிகளின் கருத்தாக இருந்தது. இந்தியர்களின் பொருள்களைத்தான் இந்தியர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற சுதேசி இயக்கத்தின்மூலம் பிரிட்டிஷ் பொருள்கள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டது.
வங்காளம் பிரிக்கப்பட்ட நாள் 1905ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி. தேசிய இயக்கத்தால் துக்க நாளாக அறிவிக்கப்பட்டது. பல்வேறு விதமாகப் போராட்டங்களைத் தேசிய இயக்கம் முன்னெடுத்தது.
i) கங்கை வரை ஊர்வலம் சென்று புனித நீராடி, அங்கு வந்து செல்லும் மக்கள் கையில் ராக்கி கட்டுவது.
ii) வங்காளம் பிரிக்கமுடியாத ஒன்றியம் என்பதை நினைவுபடுத்த ஒரு மண்டபம் கட்டப்படவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டிருந்தது. அதற்கு அடிக்கல் நாட்டும் விழா. (இந்த மண்டபம் கட்டத் தேவைப்படும் பொருள்கள் பெரும்பாலும் சுதேசி பொருள்களாக இல்லாததனால், இம்மண்டபம் கட்டும் திட்டம் கைவிடப்பட்டது).
iii) மாலை, தேசிய நிதி உருவாக்கத்துக்காக ஊர்வலம் சென்று மக்களிடமிருந்து நிதி திரட்டுவது.
வங்கப் பிரிவினைக்கு எதிரான தேசிய இயக்கத்துக்கு சுரேந்திரநாத் பேனர்ஜி தலைமை தாங்கினார்.
உண்மையில், வங்கப் பிரிவினைத் திட்டத்திற்குப் பின்னணியில் ஏதாவது அரசியல் காரணங்கள் இருந்தனவா? என்று கேட்டால், அதுவும் ஒரு காரணமாக இருந்தது என்பதே சரியான பதிலாக இருக்கமுடியும்.
வங்காளத்தின் துணைநிலை ஆளுநர் ஃப்ரேசர், கர்சனுக்கு எழுதிய கடிதத்தில் டாக்கா மற்றும் மைமன்சிங் பகுதிகள் ஏன் வங்காளத்தில் இருந்து பிரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்: ‘அவை (டாக்கா, மைமன்சிங் பகுதிகள்) வங்காளியர்கள் இயக்கத்தின் அடிவேராக இருக்கிறது. தேசத்துரோகத்தன்மை எதுவும் இல்லையென்றாலும் ஒட்டுமொத்த வங்காள நிர்வாகத்தின் போக்கை ஆதிக்கம் செய்யக்கூடியதாக இருக்கிறது’.
1903ஆம் ஆண்டு ஜூன் மாதம், அருண்டெல் என்ற கர்சனின் நிர்வாக சபை உறுப்பினர், ஃப்ரேசரின் இந்த யோசனைக்கு ஒப்புதல் தருவதாகக் கூறுகிறார்,
‘சிட்டகாங் பகுதி அசாமுக்கு மாற்றப்படுவது அசாம் மாகாணத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. டாக்கா, மைமன்சிங் ஆகிய பகுதிகளைப் பொறுத்தவரை அது அசாமுக்கு மாற்றப்படுவதற்கும் வளர்ச்சி குறித்த காரணங்களுக்கும் எவ்வித நேரடித்தொடர்பும் இல்லை.
ஆனால், டாக்காவும் மைமன்சிங்கும் அசாமுக்கு ஏன் மாற்றப்படவேண்டும் என்பதற்கான அரசியல் காரணங்கள் என்னை ஈர்க்கின்றன. பெரார் ஏன் மத்திய மாகாணத்துடன் இணைக்கவேண்டும் என்பதை இந்தக் காரணங்கள் விளக்குகிறது. அதேநேரம், இதனால்தான் அரசியல்ரீதியாக ஒரியா மக்கள் ஒன்றிணைவதை நான் விரும்பவில்லை’ என்கிறார்.
இந்தியாவின் தலைமை ஆளுநர் கர்சனும், ஃப்ரேசரின் வாதங்களை ஒப்புக்கொண்டார். முக்கியமாக, பலரும் நினைப்பது போல் ஹிந்துக்களையும் இஸ்லாமியர்களையும் பிரிப்பது இதன்பின் இருந்த அரசியல் நோக்கம் கிடையாது என்கிறார் வரலாற்றாய்வாளர் ஜான் மெக்லேன். கிழக்கு வங்காள ஹிந்துக்களை மேற்கு வங்காளத்திடமிருந்து பிரிப்பதும், கல்கத்தாவின் அரசியல் சூழல், கிழக்கு வங்காள ஹிந்துக்களை ஈர்த்துவிடாமல் இருக்கவேண்டும் என்பதே வங்கப் பிரிவினைக்குப் பின்னே இருந்த அரசியல் காரணம்.
ஏனென்றால், 1903ஆம் ஆண்டு முதன்முதலில் முன்மொழியப்பட்ட வங்கப் பிரிவினைத் திட்டத்தைப் பிரிட்டிஷ் இந்திய அரசு நிறைவேற்றியிருந்தால், ‘கிழக்கு வங்காளம் மற்றும் அசாம்’ என்ற புதிய மாகாணம் இஸ்லாமியர்களை மிகையாகக் கொண்ட மாகாணமாகியிருக்காது. பெருமளவிலான ஹிந்து மற்றும் இஸ்லாமிய மக்கள் தொகை கல்கத்தா ஆட்சியின்கீழ் தான் இருந்திருப்பார்கள் என்கிறார் ஜான் மெக்லேன்.
மேலும், இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், வங்காளம் பிரிக்கப்படுவதற்குப் பின் இருப்பது அரசியல் நோக்கம் மட்டுமே அல்ல என்பதுதான். அதாவது, வங்கப் பிரிவினையைப் பொறுத்தவரை, அரசியல் காரணங்களை விட நிர்வாகரீதியான, பொருளாதாரரீதியான காரணங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. இது ஆங்கிலேய அதிகாரிகளின் வங்கப் பிரிவினை குறித்த பொது உரையாடல், தனிப்பட்ட உரையாடல் எல்லாவற்றிலிருந்தும் தெளிவாகத் தெரிவதாக வரலாற்றாய்வாளர் ஜான் மெக்லேன் குறிப்பிடுகிறார்.
கிழக்கு வங்காளம் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்குப் பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு முன் இருந்த நிர்வாக ரீதியான பொருளாதார ரீதியான காரணங்களைப் பார்ப்போம்:
i) வங்காளத்தின் மக்கள்தொகை 8 கோடியாக இருந்தது. அதன் பரப்பளவு 1,89,000 சதுர மைல்கள். அதற்கடுத்து அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமாக இருந்தது இன்றைய உ.பி, 4.8 கோடி. அதற்கடுத்து மெட்ராஸ் மாகாணம் 4.2 கோடி மக்கள்தொகை. கிட்டத்தட்ட இரு மாகாணங்களின் மக்கள்தொகையைச் சேர்த்ததுதான் வங்காள மாகாணத்தின் மக்கள்தொகை.
ii) கிழக்கு வங்காளத்தின் முக்கிய நகரமான டாக்கா கல்கத்தாவிலிருந்து 250 மைல்களுக்கு அப்பால் இருந்தது. ஆங்கிலேய அதிகாரிகளின் கால்தடம் கிழக்கு வங்காளத்தில் அவ்வளவாகப் பதியவில்லை என்கிறார் லோவத் ஃப்ரேசர். கங்கை நதிக்கு அப்பால் இருந்த பகுதிகள் மிகவும் வளமானவையாக இருந்தன. வறட்சிக்காலத்தில்கூட நதிகள் 2 மைல்கள் அகலம் கொண்டவையாக ஓடின. பெருவெள்ளம் ஏற்பட்டால் மட்டுமே அங்குப் பஞ்சம் தலைகாட்டும். இருப்பினும், வங்காள நிர்வாகத்திலிருந்து தொடர்பே இல்லாது தனித்து விடப்பட்டிருந்தது.
iii) பெரும்பாலும் அந்த நிலத்துக்குச் சொந்தமான ஹிந்துக்கள் கல்கத்தாவைச் சுற்றிக் குடியேறி இருந்தனர். அதாவது, தங்கள் நிலத்துக்குச் செல்லாத நிலக்கிழார்களாக இருந்தனர். நிலம் உழுபவர்களை, செல்லா நிலக்கிழார்களின் முகவர்கள் பெரும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்கள்.
iv) பாம்பே அரசாங்கத்தை எடுத்துக்கொண்டோமானால், கவர்னர் , தலைமைச் செயலகம், சட்டசபை, பல்வேறு ஆங்கிலேய ராணுவ அதிகாரிகள் யாவரும் ஒன்று சேர்ந்து ஆட்சி செய்த பாம்பே மாகாணத்தின் மக்கள்தொகை 190 லட்சம். பரப்பளவு 1,22,984 சதுர மைல்கள்.
ஆனால், 6000 சதுர மைல்களில் 40 லட்சம் மக்களை உள்ளடக்கிய பகுதியாக இருந்த மைமன்சிங், வெறும் ஒரே ஓர் ஆங்கில அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதே அளவு மக்கள்தொகை கொண்ட ஒரிசா பகுதிக்குத் தனியே ஓர் ஆணையர் மற்றும் மூன்று கலெக்டர்கள் உட்பட சரியான விகிதத்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
v) பொதுவாகவே கிழக்கு வங்காளத்தில் மிகவும் சொற்பமான அதிகாரிகளே நியமிக்கப்பட்டிருந்தனர். மேற்சொன்ன மக்கள் அடர்த்தியால் கிழக்கு வங்காளத்தில் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக்கொண்டே போனது.
vi) கிழக்கு வங்காளத்தில் மற்ற இடங்களைப் போல ரயில் வசதி அதிகம் கிடையாது. வணிகப் போக்குவரத்து மொத்தமாகவே நீர்வழிப் போக்குவரத்தை நம்பியே இருந்தது. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் வருடத்துக்குத் தோராயமாக 4.2 கோடி பிரிட்டிஷ் பவுண்ட் அளவுக்கான வணிகம் நீர்வழிப்போக்குவரத்து மூலம் நடந்தது.
மழைக்காலத்தில் 24,000 மைல்களுக்கு இந்த நீர்வழிப்போக்குவரத்து நீண்டிருந்தது; மற்ற காலங்களில் 14,000 மைல்கள். கிட்டத்தட்ட இந்த வேலைகளில் 2.5 லட்சம் மக்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்களுக்குப் போதுமான காவல்துறைப் பாதுகாப்பு இருக்கவில்லை. ஒட்டுமொத்தக் காவல்துறையும் கல்கத்தா நிர்வாகத்தைச் சுற்றியே இருந்தன.
vii) ‘சணல் சார்ந்த வணிகம் கொழிக்கும் இடமாக இருந்தது கிழக்கு வங்காளம். அவ்வணிகம் வளர வளரப் பல குற்றங்களும் வளர்ந்தது. நாட்டுப் படகுகளில் கொண்டு செல்லப்பட்ட சரக்குகளுக்குக் காப்பீடு செய்யப்பட்டவையாக இருக்கும். காப்பீடு மோசடிக் குற்றங்கள் அதிகரித்தன. பயணிகள் மற்றும் வணிகப் படகுகள் ஆகியவற்றைக் கொள்ளையர்கள் குற்றங்களுக்காகப் பயன்படுத்தினர். உப்பு , ரப்பர், போதைப் பொருள்கள் கடத்தப்பட்டன’ என வங்காள மாகாணத்தின் நதிகளில் நடந்த வணிகம், கொள்ளை ஆகியவற்றைப் பற்றி அறிக்கை எழுதிய பிராம்லி கூறுகிறார்.
viii) மெக்காவுக்குப் புனிதப் பயணம் செல்லும் இஸ்லாமியர்களைக் கொன்று அவர்களிடமிருந்த விலையுயர்ந்த பொருள்கள் பறிக்கப்பட்டன. 150க்கும் மேற்பட்ட புனித யாத்திரைப் பயணம் மேற்கொண்ட இஸ்லாமியர்கள் காணாமல் போனதாகப் பிராம்லி எழுதுகிறார்.
ix) வங்காளத்தின் தலைமைச் செயலகத்துக்கு வரும் கடிதங்களின் எண்ணிக்கை 1892ஆம் ஆண்டு 1,16,634 ஆக இருந்தது. 1902 ஆம் ஆண்டு, அது 1,53,012 ஆக உயர்ந்தது.
x) அசாமின் தேயிலைத் தொழில், நிலக்கரி மற்றும் எண்ணெய் வளங்களைச் சார்ந்த தொழில்களுக்கு சிட்டகாங் துறைமுகம் அத்தியாவசியமாக இருந்தது. அசாம் வங்காள ரயில் இணைப்புகள் முடிவுறும் நிலையில் இருந்ததால், சிட்டகாங் பகுதியை அசாமுக்கு மாற்றுவதன்மூலம் அசாமின் வளர்ச்சிக்கு அது உதவும்.
xi) மேலும், அசாமின் குடிமைப் பணிகளுக்கு வங்காளத்தில் இருந்து ஆட்களைக் கடன் வாங்க வேண்டியிருந்தது. அதனால் அசாமுக்கென்று தனி குடிமைப்பணி அமைப்பை உருவாக்கிவிட்டால் நிர்வாகத்தில் ஆள் பற்றாக்குறையைச் சரிசெய்துவிடலாம் என்று எண்ணினர். ஏற்கெனவே, கிழக்கு வங்காளத்திலும் ஆட்சி செய்யப் போதுமான அளவுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கவில்லை.
அதனால், வங்காளத்தில் இருந்து அசாமுக்கு மாற்றப்படும் நிலப்பகுதிகளை அதிகரித்து, பெரிய மாகாணமாக உருவாக்கிவிட்டால் அம்மாகாணத்துக்கென தனி குடிமைப்பணி அமைப்பை உருவாக்குவதோடு, துணைநிலை ஆளுநர் மற்றும் ஒரு சட்டசபையையும் கொடுத்துவிடலாம் என எண்ணினர்.
எனவே, நிர்வாகரீதியான பொருளாதாரரீதியான பல காரணங்கள் வங்கப் பிரிவினையை இன்றியமையாததாக்கி விட்டன. அரசியல் காரணங்கள் என்பனவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட முடிவு இதுவல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.
வங்கப் பிரிவினையால் ஏற்படவிருந்த அரசியல்ரீதியான லாபங்களைக் கூடுதலாகக் கிடைக்கும் உபரி லாபம் போன்றே பிரிட்டிஷார் எண்ணினர். இன்னும் புரியும்படிச் சொல்வதானால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல, வங்கப் பிரிவினை மூலம் ஏற்பட்ட அரசியல் ரீதியான லாபங்கள் இலவச இணைப்பாக வந்தவையே.
1903ஆம் ஆண்டு வங்கப் பிரிவினைத் திட்டத்தின் முதல் முன்மொழிவு வெளிவந்ததும் அதற்கு எதிரான போராட்டங்கள் எழுந்த பின்னர்தான், அதன்மூலம் கிடைக்கவிருக்கும் அரசியல் லாபங்கள் குறித்த முழு சித்திரம் பிரிட்டிஷாருக்குக் கிடைத்ததாக ஜான் மெக்லேன் குறிப்பிடுகிறார்.
எனவே, வங்கப் பிரிவினைக்கான மிக முக்கியக் காரணங்களாக இருப்பன, நிர்வாகரீதியான மற்றும் பொருளாதாரரீதியான காரணங்கள்தான் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. அதேபோல், வங்காள மாகாணம் பிரிக்கப்பட வேண்டியது இன்றியமையாததாக இருந்திருக்கிறது என்பதும் தெரிகிறது. வங்கப் பிரிவினைக்கு எதிரான இயக்கம் இஸ்லாமியர்களை எப்படி அணுகியது, போராட்டத்தின் தன்மை எப்படி இருந்தது என்பனவற்றை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
(தொடரும்…)
படம்: ‘Vandalism’, a cartoon from the Hindi Punch, 1906
______________
மேற்கோள் நூல்கள்
1. R.C.Majumdar, History of the Freedom Movement in India Vol.1, Firma K.L.Mukhopadhyay (2nd Revised ed.1971)
2. Sumit Sarkar, The Swadeshi Movement in Bengal 1903 – 1908, People’s Publishing House (1st ed. Nov 1973)
3. The Earl of Ronaldshay, The Life of Lord Curzon, London : Benn (1918)
4. Mushirul Hasan, Nationalism and Communal politics in India, 1885-1930, New Delhi Manohar Publications (1st ed. 1991)
5. Lovat Fraser, India Under Curzon and After , London: Heinemann (1911)
6. Nirad Chaudhuri, The Autobiography of An Unknown Indian (London : Macmillan 1951)
7. Mohammed Kasim Uddin Molla, The New Province of Eastern Bengal and Assam 1905 – 1911, Proquest LLC (1st ed. 2018)
8. Sir Valentine Chirol, Indian Unrest, London : Macmillan, (1st ed. 1910)
உதவிய ஆராய்ச்சிக்கட்டுரைகள்
1. J. M. Broomfield, THE PARTITION OF BENGAL: A Problem in British Administration, 1830-1912, Proceedings of the Indian History Congress , 1960, Vol. 23, Part – II (1960), pp.13-24
2. P. C. Chakravarti, GENESIS OF THE PARTITION OF BENGAL (1905), Proceedings of the Indian History Congress , 1958, Vol. 21 (1958), pp. 549-553
3. Anil Baran Ray, Communal Attitudes to British Policy: The Case of the Partition of Bengal 1905, Social Scientist, Vol. 6, No. 5 (Dec., 1977), pp. 34-46
4. M. R. A. Baig, THE PARTITION OF BENGAL AND ITS AFTERMATH, The Indian Journal of Political Science, Vol. 30, No. 2 (April—June 1969), pp. 103-129
5. John McLane, The Decision to Partition Bengal, The Indian Economic and Social History Review, Vol.2, Issue 3, July 1965, pp. 221 – 237