Skip to content
Home » இந்திய மக்களாகிய நாம் #14 – வெறுப்பை உமிழ்ந்த ‘வந்தே மாதரம்’

இந்திய மக்களாகிய நாம் #14 – வெறுப்பை உமிழ்ந்த ‘வந்தே மாதரம்’

இந்திய மக்களாகிய நாம்

வங்கப் பிரிவினைக்கான மிக முக்கியக் காரணங்களாக இருந்தவை நிர்வாகரீதியான மற்றும் பொருளாதாரரீதியான காரணங்களே என்பதைச் சென்ற பகுதியில் விரிவாகப் பார்த்தோம். பிரிட்டிஷ், வடக்கில் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்த பகுதிகள் அனைத்தையும் பெங்கால் மாகாணத்துடனே இணைத்து வந்திருந்தது என்பதையும் பார்த்திருந்தோம். கூடிக்கொண்டே சென்ற அதன் அதிகமான பரப்பளவின் காரணமாக, 1874ஆம் ஆண்டு வரை 19ஆம் நூற்றாண்டின் வரலாறு நெடுக வங்காள மாகாணம் பிரிக்கப்பட்டுக் கொண்டேதான் இருந்திருக்கிறது.

ஆனால், அப்போதெல்லாம் அந்தப் பிரிவினை சார்ந்து பிரச்னைகள் ஏதும் வந்ததில்லை. அதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று, 1880க்குப் பிறகுதான் ஹிந்துச் சீர்திருத்த இயக்கங்களால், ஹிந்து – இஸ்லாமியர் பிரிவு ஏற்பட ஆரம்பித்தது. மற்றொன்று, 1880க்குப் பிறகுதான் ஹிந்து தேசியமாக இந்தியத் தேசியமும் கட்டமைக்கப்பட்டது. வங்கப் பிரிவினைத் திட்டத்துக்கு எதிராகப் பேசிய தேசியவாதிகள், ‘இது வங்காளத் தேசத்தைப் பிரிக்கும் செயல்’ என்றும், ‘ஹிந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களைத் திருப்பிவிடும் வேலை’ என்றும் பிரசாரம் எழுப்பி போராட்டம் செய்தனர்.

1905ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி வெளிவந்த ‘அம்ரிதா பசார் பத்திரிகா’ எனும் பத்திரிகையின், ஆசிரியர் குறிப்பில், ‘முகமதியர்கள் சக ஹிந்து மக்களை நம்பியே இருந்தனர். அனைத்து விஷயங்களுக்கும் சக ஹிந்துக்களின் உதவியையும் ஆலோசனையையும் சார்ந்தே இஸ்லாமியர்கள் இருந்தனர். ஆனால் இப்போது நடக்கும் வங்காளப் பிரிவினை நிலப்பகுதிகளைப் பிரிக்கவில்லை ஹிந்துக்களையும் இஸ்லாமியர்களையும் பிரிக்கிறது. நிலக்கிழார்களையும், குடியிருப்பவர்களையும் பிரிக்கிறது’ என எழுதப்பட்டிருந்தது.

வங்காள மாகாணத்தின் துணைநிலை ஆளுநராக இருந்த சர் ஆண்ட்ரூ ஃப்ரேசர், மேற்சொன்ன மாதிரியான பிரச்சாரங்களுக்குக் கொடுத்த பதில் இதோ:

‘ஹிந்துக்களையும் இஸ்லாமியர்களையும் ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தி அவர்களைப் பிரிக்கும் தீய எண்ணத்துடன் மட்டுமே வங்காளப் பிரிவினைத் திட்டத்தை இந்தியாவின் தலைமை ஆளுநரும் அவரின் ஆலோசகர்களும் தீட்டியிருக்கிறார்கள் என்று யாராவது சொன்னால், அவர்கள் விவரம் அறியாதவர்கள் ஆவர். வங்காளப் பிரிவினைத் திட்டத்தின் முதல் முன்மொழிவை நாங்கள் வெளியிடும்போது அது வங்காளித் தேசத்தில் இப்பேர்ப்பட்ட பதற்றத்தை உருவாக்கும் என யாரும் நினைக்கவில்லை.

ஏனெனில், 1874ஆம் ஆண்டு 30 லட்சம் வங்காளிகள் அசாமுடன் சேர்க்கப்பட்டபோது எவ்வித எதிர்ப்பும் எழவில்லையே. வங்காளப் பிரிவினைத் திட்டத்தால், பழைய வங்காளத்தில் 4.2 கோடி ஹிந்துக்களுடன் வாழ இருக்கும் 90 லட்சம் இஸ்லாமியர்கள்தான் எங்களிடம் குறைபட்டுக்கொள்ள வேண்டியவர்கள். ஆனால், அவர்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. ஏனென்றால், இதில் பாதிப்பு ஹிந்துக்களுக்கு மட்டுமே’ என்றார்.

மேலும் ஃப்ரேசர், ‘சரோடா சரண் மிட்டர்’ என்ற கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியிடம் பேசியபோது, ‘ஹிந்துக்கள் இன்னும் ஒரு நூற்றாண்டுக்குக் கிழக்கு பெங்காலை ஆதிக்கம் செய்வார்கள்’ என்று கூறியதாகப் பதிவு செய்திருக்கிறார். பெங்கால் பிரிவினையின் இறுதித் திட்டத்தின்படி, கிழக்கு வங்காளம் அசாமுடன் இணைந்ததில் அங்கு இஸ்லாமியர்களின் மக்கள்தொகை ஹிந்துக்களைக் காட்டிலும் அதிகமானது. இதனால்தான் ஹிந்துக்களுக்கு பதற்றம் எனச் சுட்டுகிறார் ஃப்ரேசர்.

இங்கேதான் வங்கப் பிரிவினையின் முதல் முன்மொழிவை வெளியிட்டபின், கர்சன் சென்ற சுற்றுப்பயணத்தில் அவர் சொன்னவற்றைக் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. ஏற்கெனவே அசாமில் 30 லட்சம் பெங்காலிகள் இருந்த நிலையில், மேலும் 1.1 கோடிப் பெங்காலிகள் அசாமுடன் இணைக்கப்படுவதால் 15 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் அசாமியர்கள் தாங்கள் ஆதிக்கத்துக்கு உள்ளாக்கப்படுவோமோ என்று அச்சப்பட்டால் அதில் நியாயம் உண்டு. வங்காளிகள் தாங்கள் ஆதிக்கத்துக்கு உள்ளாக்கப்படுவோமோ என்று பயப்படுவது தன் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என கர்சன் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்தோம்.

வங்காளம் மற்றும் ‘கிழக்கு வங்காளம் & அசாம்’ ஆகிய இரண்டு மாகாணங்களிலும் வங்காளிகள் பெரும்பான்மை ஆக்கப்படுவது எப்படி வங்காளி தேசத்தைப் பிரிப்பதாக ஆகும்?

இங்கேதான் தேசிய இயக்கத்தின் தன்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டும். வங்காள மாகாணம் பிரிக்கப்படுவதன் காரணமாக வங்காள இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கிழக்கு வங்காளத்தில் அதிகமாகிவிடும் என்பதே ‘தேசிய’ இயக்கத்தின் பதற்றம். அதுவும், வங்காளப் பிரிவினையின் இறுதித்திட்டத்தின்படி 3.1 கோடி மக்கள்தொகை கொண்ட மாகாணமாக ‘கிழக்கு வங்காளம் & அசாம்’ உருவானது.

1.8 கோடி இஸ்லாமியர்களும், 1.2 கோடி ஹிந்துக்களும் அதில் அடக்கம். இந்த மாகாணத்தில் பெரும்பான்மையானோர் வங்காளிகளாக இருந்தபோதிலும், இது வங்காளித் தேசத்தைப் பிரிக்கும் திட்டம் எனத் தேசியவாதிகள் வெகுண்டெழக் காரணம் என்னவெனில், வங்காள இஸ்லாமியர்களைத் தேசியவாதிகள் தங்களுடைய வங்காளித் தேசியத்தில் சேர்த்ததே இல்லை.

இஸ்லாமிய வங்காளிகளைத் தேசியவாதிகள் (வங்காள ஹிந்துக்கள்) வங்காளித் தேசத்தின் அங்கமாகக் கருதியிருந்தால், வங்கப் பிரிவினையினால் அவர்களுக்குள் எந்தவொரு அச்சமும் எழுந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தியத் தேசியத்தை முழுமையாக வடித்தது வங்கப் பிரிவினைக்கு எதிராக எழுந்த தேசிய இயக்கம்தான்.

எனவே, இந்தியத் தேசியம் அதன் உருவாக்கத்திலேயே இஸ்லாமியர்களை விலக்கிவைத்துவிட்டு ஹிந்துத் தேசியமாகவே ஹிந்துக்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது இங்கே தெளிவாகிறது.

மேலும், வங்கப் பிரிவினைக்கு எதிராக ஹிந்துத்தலைவர் சுரேந்திரநாத் பேனர்ஜி தலைமையிலான ஹிந்து வங்காளிகள் முன்னெடுத்த தேசிய இயக்கத்தில் முக்கியமானது சுதேசி இயக்கம். இந்தச் சுதேசி இயக்கம் குறித்து அதில் கலந்துகொண்ட ‘நிரத் சௌத்ரி’ என்பவர் அவருடைய ‘The Autobiography of an Unknown Indian’ எனும் நூலில் எழுதியுள்ளார்.

‘சர் வேலன்டைன் கைரோல் என்பவரையும் அவருடைய புத்தகமான ‘Indian Unrest’ என்ற நூலையும் வெறுக்கவேண்டும் என்பதே எங்களுக்குச் சொல்லித்தரப்பட்டது. ஆனால், இப்போது அவரின் நூலைப் படிக்கையில், சுதேசி இயக்கம் குறித்தான அவரின் ஒப்பீடு மிகவும் சரியாகவே இருப்பதாக உணர்கிறேன். சுதேசி இயக்கம் குறித்தான என்னுடைய நினைவுகளும் அவருடைய மதிப்பீடுகளை ஒத்துப்போகின்றன. சுதேசி இயக்கம் என்பது அதன் தன்மையில் முற்றிலும் ஒரு ஹிந்து அடையாளத்தை மீட்டெடுக்கும் இயக்கமாகவே இருந்தது என்ற அவரின் மதிப்பீடு முற்றிலும் சரியே. முந்தைய நூற்றாண்டின் (19ஆம் நூற்றாண்டின்) கடைசி 25 வருடங்களில் நடந்த, ஹிந்து அடையாள மீட்டெடுப்புதான், 1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினைக்கு எதிராக எழுந்த பிரிவினை எதிர்ப்பு இயக்கத்துக்கும் அதனைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களுக்கும் எரிபொருளாக இருந்து அதை முடுக்கிவிட்டது’ என்று நிரத் சௌத்ரி பதிவு செய்திருக்கிறார்.

‘இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றைப் படிக்கையில் 1907ஆம் ஆண்டில், கோகலே போன்றோரைக் கொண்ட மிதவாதிகள், பாலகங்காதர திலகர் போன்றோரைக் கொண்ட தீவிரவாதிகள் எனக் காங்கிரஸ் இரு பிரிவாகப் பிரிந்ததாகப் படித்திருப்போம். உண்மையில், தாராளவாதத் தேசியம் (மிதவாதிகள்) மற்றும் ஹிந்துத் தேசியம் (தீவிரவாதிகள்) என்பதே அந்த இரு பிரிவினரின் பிரச்னையாக இருந்தது’ என்றும் நிரத் சௌத்ரி எழுதுகிறார்.

கணேச சதுர்த்தியை மிகப்பெரிய விழாவாக முன்னெடுத்த பாலகங்காதர திலகர், அதன்மூலம் மக்களிடையே தேசிய உணர்ச்சியைத் தட்டியெழுப்பினார். மராட்டியத்தில் திலகர் கட்டமைத்த தேசியம் ஹிந்து மதத்தினால் கட்டப்பட்ட ஒன்று. இது இந்தியா முழுக்கப் பரவ ஆரம்பித்தது. குறிப்பாக இவை வங்கப் பிரிவினை இயக்கத்தில் எதிரொலிக்க ஆரம்பித்தது. ‘‘ஹர ஹர மஹாதேவ்’ போன்ற கோஷங்களைப் போராட்டங்களுக்கு இடையே அவ்வப்போது நாங்கள் எழுப்பினோம்’ என நிரத் சௌத்ரி குறிப்பிடுகிறார்.

மேலும், மிக முக்கியமான திருவிழா ஒன்றை திலகர் கையிலெடுத்தார். அதுதான் சிவாஜி திருவிழா. பண்டைய மராட்டிய ஹிந்துப் பெருமையை மீட்டெடுக்கும் விதமாகவும், முகலாய அரசரை வென்றெடுத்த பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும் இந்த விழா நடத்தப்பட்டது. இவையும் அதன் இயல்பிலேயே இஸ்லாமிய வெறுப்பு நிகழ்வாகவே நடத்தப்பட்டது.

முதலில் மராட்டியப் பகுதிகளில் ஆரம்பித்த இந்த விழா, பின்னர் வங்காள மாகாணத்திலும் பரவ ஆரம்பித்தது. திலகரும் அதில் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார். சுதேசி இயக்கங்கள் ஒருபுறம் இருக்க, இவை போன்ற இஸ்லாமிய வெறுப்பு நிகழ்ச்சிகளும் ஹிந்துக்களால் நடத்தப்பட்டுக்கொண்டே இருந்தது. இவையும் ஹிந்து இஸ்லாமியர் பிரிவை மேலும் விரிவாக்கியது.

வங்காளத்தில் வளர்ந்த தேசியம் குறித்து வரலாற்றாய்வாளர் சுமித் சர்கார் எழுதியவற்றை இங்கே பார்ப்பது வங்காளித் தேசியத்தின் தன்மையை விளக்கும்:

‘பத்ரலோக் வங்காளிகளிடையே எழுந்த தேசியமானது பண்டைய ஹிந்துப் பெருமையை நாடி நிற்க ஆரம்பித்தது. (பிராமணர், வைத்யா, காயஸ்தா ஆகிய முப்பெரும் முன்னேறிய ஜாதிகளைச் சேர்ந்த மக்களில் கல்வியறிவும் பொருளாதாரப் பலமும் இருப்பவர்களை, பொதுவாக, ‘பத்ரலோக்’ என்று அழைப்பர். மேற்சொன்ன மூன்று ஜாதிகளுள் ஏழையாக, கல்வியறிவற்றவராக இருப்பவர்களை ‘பத்ரலோக்’ எனக் கருதமாட்டார்கள்.)

ராஜ்புத் மற்றும் மராட்டியர்கள், இஸ்லாமிய (முகலாய) ஆட்சிக்கு எதிராகக் கொண்டிருந்த எதிர்ப்பையும் அவர்களின் வீரத்தையும் ஹிந்துக்களின் பண்டையப் பெருமையாகப் பார்த்தனர். இந்த ஹிந்துக்களின் பண்டையப் பெருமையை மீட்டெடுப்பதே, வங்காளித் தேசியத்தின் எரிபொருளாக அமைந்தது. ஹிந்து என்ற வார்த்தையும் தேசியம் என்ற வார்த்தையும் ஒரே பொருளைக் குறிக்கும் இருவேறு சொல்லாகவே பயன்பட்டது’ என்கிறார் சுமித் சர்கார்.

ராஜ்நாராயண் போஸ் மற்றும் ‘தேசிய மித்ரா’ எனப்படும் நபகோபால் மித்ரா ஆகியோர்தான் இந்தியத் துணைக்கண்டத்தில் இருநாட்டுக் கொள்கையை முதலில் முன்மொழிந்தவர்கள் என முன்னர் பார்த்திருந்தோம். ஹிந்து மேளா என்ற திருவிழாவைத் தொடங்கிய முக்கியமான நபரான நபகோபால் மித்ரா 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெங்காலிகளின் நிலை குறித்து எழுதிய கடிதத்தில், ‘இந்தக் கடிதம் முழுக்க ‘வங்காளிகள்’ என்று நான் குறிப்பிட்டிருப்பது, ஹிந்து வங்காளிகளை மட்டுமே குறிக்கும்’ எனக் குறிப்பிடுகிறார். தேசியம், ஹிந்து என்ற இரு சொல்லும் ஒரே பொருளைக் குறிப்பதாக இருந்தது என சுமித் சர்கார் சொல்வது இங்கே பொருந்திப் போகிறது.

பத்ரலோக் வங்காளிகள் இஸ்லாமியர்களை எம்மாதிரியான பார்வையில் அணுகினர் என்பதை நிரத் சௌத்ரி தன்னுடைய நூலில் எழுதியிருக்கிறார், ‘சமுதாயத்தில் இஸ்லாமியர்களை முற்றிலும் அலட்சியப் போக்கிலேயே நடத்தினோம். மிக உயரிய சமூக அந்தஸ்தும் பொருளாதார வசதியும் கொண்ட இஸ்லாமியர்கள் மட்டுமே எங்களுடன் நட்பில் இருந்தனர். மற்ற இஸ்லாமியர்களை, கீழ்சாதி ஹிந்துக்களைப் போலவே நடத்தினோம், வேறு வார்த்தைகளில் சொல்வதானால், எங்கள் ஆடுமாடுகள்போல அவர்களை நடத்தினோம்.’

இஸ்லாமியர்களின் நிலை மொத்தத்தில் மிக மோசமாகவே இருந்தது. வேலன்டைன் கைரோல் கூறுவதுபோல், வங்கப் பிரிவினையால் இஸ்லாமியர்களுக்கு லாபம்தானே தவிர எந்த இழப்புமல்ல. பெங்கால் பிரிவினையால் இஸ்லாமியர்களுக்கு என்ன மாதிரியான நன்மை ஏற்பட்டது என்பதைப் பார்ப்போம்.

வங்காள மாகாணத்தில் 1901ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒவ்வொரு 10,000 இஸ்லாமியர்களிலும் வெறும் 22 பேர் மட்டுமே ஆங்கிலம் அறிந்திருந்தனர். மறுபுறம் ஹிந்துக்களின் எண்ணிக்கை 114ஆக இருந்தது. அரசாங்க உயர் பதவிகளில் இருந்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை வெறும் 41 மட்டுமே. ஆனால், அவர்களைவிட இரு மடங்கு மக்கள்தொகை குறைவாக இருந்த ஹிந்துக்களின் எண்ணிக்கை 1235ஆக இருந்தது. வங்கப் பிரிவினைக்குப் பிறகு, கிழக்கு வங்காளத்தில் ஒட்டுமொத்த அரசாங்கப் பதவிகளில், ஆறில் ஒரு பங்கு பதவிகளில் மட்டுமே இஸ்லாமியர்கள் இருந்தனர். ஆனால், அங்கு மூன்றில் இரண்டு பங்கு இஸ்லாமியர்கள் வாழ்ந்து வந்தனர்.

இதைவிடக் கிழக்கு வங்காளத்தின் காவல்துறையில் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் இன்னும் மோசம்.

மொத்தம் இருந்த பதவிகளில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை:

ஆய்வாளர்கள் – 4 / 54
துணை ஆய்வாளர்கள் – 60 / 484
தலைமைக் காவலர்கள் – 45 / 450
காவலர்கள் – 1027/ 4594

அதிகாரங்களில் ஹிந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இருந்த இத்தகைய மாபெரும் இடைவெளியே அவர்களை வங்கப் பிரிவினைத் திட்டத்திற்கு ஆதரவாக இருக்கச் செய்தது. இஸ்லாமியப் பெரும்பான்மை கொண்ட மாகாணம் அமைந்தால் அதிகாரத்தில் அதிகப் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தது.

உண்மையில், கிழக்கு வங்காளம் உருவான பின் இஸ்லாமியர்களின் நிலை என்பது கணிசமான ஏற்றம் கண்டிருந்தது. 1911ஆம் ஆண்டின் புள்ளி விவரம் இதனை உறுதிப்படுத்துகிறது. 1901ஆம் ஆண்டின் நிலவரப்படி, கிழக்கு வங்காளத்தில் 1235 உயர் பதவிகளில் எட்டில் ஒரு பங்கு மட்டுமே இஸ்லாமியர்கள் வசம் இருந்தன. ஆனால், 1911ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒட்டுமொத்த 2,305 அரசாங்கப் பதவிகளில் ஐந்தில் ஒரு பங்கு இஸ்லாமியர்கள் வசம் இருந்தன. அரசாங்கப் பதவிகளில் இதுபோன்று அதிகப் பிரதிநிதித்துவம் கிட்டும் எனக் கணித்திருந்த இஸ்லாமியர்கள் பெங்கால் பிரிவினையின் இறுதித்திட்டத்தை ஆதரிக்கவே செய்தனர்.

வங்கப் பிரிவினையின் இறுதித் திட்டத்தைதான் இஸ்லாமியர்கள் ஆதரித்தனரே தவிர, முதலில் 1903ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட முதல் முன்மொழிவுக்கு இஸ்லாமியர்களின் ஆதரவு ஏதும் இருக்கவில்லை. அப்போதிலிருந்தே வங்கப் பிரிவினைக்கு எதிராகப் போராட்டங்கள் தொடங்கி அவை ஒரு வடிவமெடுத்துக் கொண்டிருந்தன.

ஆனால், தொடக்கத்தில் மிகச்சிறிய அளவில் இஸ்லாமியர்கள் வங்காளப் பிரிவினைப் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர். பின்னர் போராட்டம் வளரவளர இஸ்லாமியர்களின் பங்கேற்பு எதுவும் இல்லாமல் போனது. இதற்குக் காரணம் ஏற்கெனவே சொல்லப்பட்டதுபோல், வங்கப் பிரிவினைக்கு எதிரான போராட்டம் என்பதின் ஊடாக வளர்ந்த தேசியம் இஸ்லாமியர்களை விலக்கி வைத்திருந்தது. விலக்கி வைத்திருந்தது என்பதைவிட, இந்தியத் தேசியம் என்ற பெயரில் வளர்ந்த, ஹிந்துக்களின் தேசியம் இஸ்லாமியர்களை எதிரியாகக் கொண்டிருந்தது.

ஹிந்துப் பெருமையை மீட்டெடுத்து வளர்க்கப்பட்ட தேசியம் என்பது முன்னர் சுமித் சர்கார் சொன்னதுபோல், ராஜ்புட் மற்றும் மராட்டியர்களின் முகலாய எதிர்ப்பில் தஞ்சமடைந்தது. அதாவது, முகலாயர்களை (இஸ்லாமியர்களை) அந்நியர்களாகவும், அவர்களை எதிர்த்த ராஜ்புட் மற்றும் மராட்டியர்களை (ஹிந்துக்களை) நம்மவர்களாகவும் பாவித்தே இந்தியத் தேசியம் உருபெற்றது.

ஹிந்துப் பெருமையை மீட்டெடுக்க எழுதப்பட்ட தேசப்பற்று இலக்கியங்கள் யாவும் இஸ்லாமியர்களுக்கு எதிராகவே இருந்தன என்கிறார் சுமித் சர்கார். இதைக் குறிப்பிடுகையில், இஸ்லாமியர்கள் ‘Whipping-Boys’ஆக இருந்துள்ளனர் என்று சுமித் சர்கார் எழுதியிருக்கிறார். அதாவது, எதற்கெடுத்தாலும் என்ன ஆனாலும் ஒரே ஒருவரைக் குறிவைத்து அவர்மேல் பழி சுமத்தினால் அவரைத்தான் ‘Whipping-Boy’ என்பர். தேசியப்பற்று வளர்த்த இலக்கியங்கள் இஸ்லாமிய வெறுப்பு கொண்டதாகவே இருந்தது.

இதற்கு மிகப்பெரும் எடுத்துக்காட்டு, இந்தியாவின் தேசியப் பாடலாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ‘வந்தே மாதரம்’. பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்கிற வங்காளப் பிராமணர் எழுதிய ‘ஆனந்தமத்’ என்ற நாவலில் இடம்பெற்ற பாடல்தான் ‘வந்தே மாதரம்’.

இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையிலான மோதல்களை மையமாகக் கொண்ட நாவல்தான் ஆனந்தமத். இதில் சத்யானந்த் என்ற பிராமணனின் தலைமையில் இஸ்லாமியக் கிராமங்கள், குடியிருப்புகள் மீது தாக்கி, நெருப்பு வைத்து அழிக்கின்றனர். முஸ்லிம்களை இந்துக்களாகவும் மதமாற்றம் செய்கின்றனர். ‘கொல்லுங்கள், முஸ்லிம் பேய்களைக் கொல்லுங்கள்’ என்று முழங்குகின்றனர். ‘சகோதரர்களே! அவர்களுடைய மசூதிகளை இடித்துவிட்டு இராமபிரானுக்கு கோயில் கட்டும் நாள் என்று வருமோ?’ என்று ஒருவருக்கொருவர் கூக்குரலிடுகின்றனர்.

தங்களது ஒவ்வொரு வெற்றிக்குப் பின்பும், ‘வந்தே மாதரம்’ என்று தாயை வணங்குகின்றனர். சிலர் கடைகளைச் சூறையாடுகின்றனர். சிலர் முஸ்லிம் பெண்களைப் பிடித்துக் கொள்கின்றனர். அனைவருமே வந்தே மாதரம் பாடுகின்றனர். 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு, 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரப் படுகொலைகள் என இன்று வரை வந்தே மாதரம் முழங்கப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட ‘வந்தே மாதரம்’ எனப்படும் இஸ்லாமிய வெறுப்புப் பாடலை இஸ்லாமிய மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? என மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் டி.ஞானய்யா தன்னுடைய ‘இந்தியா: வரலாறும் அரசியலும்’ எனும் நூலில் கேள்வியெழுப்புகிறார். ஆனால் அந்தப் பாடல்தான் இன்றுவரை நம் இந்தியத் தேசத்தின் பெருமிதத்தை எடுத்துரைக்கும் பாடலாக உள்ளது. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களை இந்தியர்கள் என்று நிரூபிக்க இந்தப் பாடலை ஏற்றுக்கொள்ளவேண்டியதாக உள்ளது.

சுரேந்திரநாத் பேனர்ஜி தலைமையில், வங்கப் பிரிவினைக்கு எதிராக எழுந்த எதிர்ப்பு இயக்கம்தான் தேசிய உணர்ச்சியைக் கட்டமைத்ததில் முன்னணிப் பங்காற்றியது எனப் பல்வேறு வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த இயக்கத்தைத் தட்டியெழுப்பிய பாடல்தான், இஸ்லாமிய வெறுப்புப் பாடலான ‘வந்தே மாதரம்’. பிரிவினைக்கு எதிரான இயக்கத்தின் உயிர்நாடியாக ஆனது அந்தப் பாடல். நாட்டுப்பற்றைப் பரப்ப வங்காளிகளைத் தட்டியெழுப்ப அப்பாடல் பாடப்பட்டது.

இப்படியான சூழ்நிலையில், வங்காள இஸ்லாமியர்கள் தங்களை அப்போராட்டத்தில் இணைத்துக்கொள்ளாதது ஏன் என்பது யாவரும் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றே. அந்த இயக்கம் அதன் கட்டமைப்பிலேயே இஸ்லாமியர்களை விலக்கிவைத்த இயக்கமாகவே உருவெடுத்தது. அதேபோல அவ்வியக்கத்தின் பிந்தைய விளைவாக, கெட்டிப்படுத்தப்பட்ட இந்தியத் தேசியமும் அதன் இயல்பிலேயே இஸ்லாமியர்களை விலக்கிவைத்த தேசியமாகவே உருவெடுத்தது.

காங்கிரஸ் தன்னளவில் ஒரு ஹிந்து இயக்கமாகத் தன்னை அறிவித்துக் கொள்ளவில்லையென்றாலும், பசுப் பாதுகாப்பு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸில் முக்கியப் பொறுப்பில் இருந்தனர் என்பதை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இதுபோன்ற பல விஷயங்கள் காங்கிரஸை ஒரு ஹிந்து இயக்கமாகவே மாற்றிவிட்டிருந்தது.

வங்கப் பிரிவினைக்கு எதிரான இயக்கம் மற்றும் போராட்டம் ஆகியன எவ்வகையில் ஹிந்துக்களின் அணித்திரட்சியாக மட்டுமே இருந்தது என்பதையும் பார்த்தோம். ஹிந்துக்களின் அணித்திரட்சி சாதாரணமாக நடந்துவிடவில்லை. பிரிட்டிஷாரை மட்டுமல்ல, இஸ்லாமியர்களையும் ஹிந்துத் தேசியம் அந்நியர்களாகவே பார்த்தது. இப்படியாக முற்றிலுமாக இஸ்லாமியர்கள் விலக்கி வைக்கப்பட்டதால், அரசியல் அரங்கில் தனித்து விடப்படுவோமோ என்கிற பயம் அவர்களைச் சூழ்ந்துகொண்டது.

சில ஆண்டுகளாகவே, அரசியல்ரீதியாகத் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள நினைத்த இஸ்லாமியர்கள், அவர்களுக்கென அனைத்திந்திய அளவில் ஒரு கட்சியைத் தொடங்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். டாக்காவின் நவாப் தலைமையில், 1906ஆம் ஆண்டில் அனைத்திந்திய முஸ்லிம் லீக் என்ற கட்சி தொடங்கப்பட்டது.

அரசியல்ரீதியாகத் தனித்த ஒரு பிரதிநிதித்துவம் இல்லாவிடில், ஹிந்துப் பெரும்பான்மையால் தாம் ஒடுக்கப்படுவோம் என்று இஸ்லாமியர்கள் நினைத்தனர். அரசியலில் தங்களுடைய தலையெழுத்து இஸ்லாமியர் அல்லாத மக்களால் நிர்ணயிக்கப்படும் நிலைமை இருக்கக்கூடாது என்ற நிலைக்கு வந்தடைந்தனர். எனவேதான், இஸ்லாமியர்கள் தங்களுக்குத் தனி வாக்காளர் தொகுதிமுறை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

அதாவது, ஒரு தொகுதியில் தேர்தல் நடந்தால், இஸ்லாமிய மக்கள் மட்டுமே வாக்களித்து தங்களுக்கான இஸ்லாமியப் பிரதிநிதி ஒருவரைத் தேர்ந்தெடுப்பர். இஸ்லாமியப் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதில் மற்ற இஸ்லாமியரல்லாத மக்கள் வாக்களிக்க முடியாது. இதனால் தங்கள் உரிமைகள் இந்துப் பெரும்பான்மை மக்களால் பலியாகாமல் பெருமளவு தடுக்கலாம் என்று அவர்கள் நம்பினர்.

ஆனால், வங்கப் பிரிவினை இயக்கத்துக்குப் பின்னர் மென்மேலும் கெட்டிப்படுத்தப்பட்ட ஹிந்துக்களின் அணித்திரட்சி, ஒன்றுபட்ட இந்தியாவுக்கான சாத்தியத்தை அப்போதே அழித்துவிட்டிருந்தது என்பதை இஸ்லாமியர்கள் உணரவில்லை.

அரசியல் இயக்கத்தில் ஏற்பட்ட ஹிந்துக்களின் அணித்திரட்சி இஸ்லாமியர்களைத் தனித்தொரு தேசமாகவே பல ஆண்டுகளாகக் கருதி வந்தது. ஒன்றுபட்ட இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் சில பாதுகாப்புகளே அவர்களது கோரிக்கையாக இருந்தன. ஆனால், ஹிந்துப் பெரும்பான்மை அதற்கு இறங்கி வரவே இல்லை.

வங்கப் பிரிவினையை எதிர்த்து எழுந்த போராட்டங்களும் அதனூடாக கட்டமைக்கப்பட்ட ஹிந்துத் தேசியமும்தான் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு இட்டுச்சென்றது. அதன் விளைவு பாகிஸ்தான் மட்டுமல்ல! இந்திய மாநிலங்கள் வலுவிழந்ததும்தான்.

(தொடரும்…)

 

______________

மேற்கோள் நூல்கள்
1. டி.ஞானய்யா, இந்தியா: வரலாறும் அரசியலும், விடியல் (2014)
2. R.C.Majumdar, History of the Freedom Movement in India Vol.1, Firma K.L.Mukhopadhyay (2nd Revised ed.1971)
3. Sumit Sarkar, The Swadeshi Movement in Bengal 1903 – 1908, People’s Publishing House (1st ed. Nov 1973)
4. The Earl of Ronaldshay, The Life of Lord Curzon, London : Benn (1918)
5. Mushirul Hasan, Nationalism and Communal politics in India, 1885-1930, New Delhi Manohar Publications (1st ed. 1991)
6. Lovat Fraser, India Under Curzon and After , London: Heinemann (1911)
7. Nirad Chaudhuri, The Autobiography of An Unknown Indian (London : Macmillan 1951)
8. Mohammed Kasim Uddin Molla, The New Province of Eastern Bengal and Assam 1905 – 1911, Proquest LLC (1st ed. 2018)
9. Sir Valentine Chirol, Indian Unrest, London : Macmillan, (1st ed. 1910)

உதவிய ஆராய்ச்சிக்கட்டுரைகள்
1. J. M. Broomfield, The Partition Of Bengal: A Problem in British Administration, 1830-1912, Proceedings of the Indian History Congress , 1960, Vol. 23, Part – II (1960), pp.13-24
2. P. C. Chakravarti, Genesis Of The Partition Of Bengal (1905), Proceedings of the Indian History Congress , 1958, Vol. 21 (1958), pp. 549-553
3. Anil Baran Ray, Communal Attitudes to British Policy: The Case of the Partition of Bengal 1905, Social Scientist, Vol. 6, No. 5 (Dec., 1977), pp. 34-46
4. M. R. A. Baig, The Partition Of Bengal And Its Aftermath, The Indian Journal of Political Science, Vol. 30, No. 2 (April—June 1969), pp. 103-129
5. John McLane, The Decision to Partition Bengal, The Indian Economic and Social History Review, Vol.2, Issue 3, July 1965, pp. 221 – 237

பகிர:
வாஞ்சிநாதன் சித்ரா

வாஞ்சிநாதன் சித்ரா

எஸ்.ஆர்.எம். சட்டக்கல்லூரியில் இளங்கலைச் சட்டம் படித்து வருகிறார். விகடன் குழுமத்தில் மாணவ நிருபராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். You Turn எனும் உண்மை கண்டறியும் ஊடகத்தில் (Fact Checking Website) பங்களிப்பாளராக உள்ளார். அரசியல், வரலாறு, சட்டம் ஆகியவை இவருக்குப் பிடித்த துறைகள். தொடர்புக்கு : rvanchi999@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *