1937வரை ஜின்னா தேசியவாதியாகவே இருந்தார். பாலகங்காதர திலகருக்கு ஆதரவாக அவர் வழக்குகளில் வாதாடியதும், அதனால் தேசபக்தர்கள் ஜின்னாவுக்கு மண்டபம் கட்டியதெல்லாம் வரலாறு. 1940வரை பாகிஸ்தான் என்பது அவரின் கனவாக இருந்ததில்லை. அவ்வளவு ஏன், 1930களிலும் வலிமைமிக்க ஒன்றிய அரசை அமைப்பதில் காங்கிரஸுக்கு நெருக்கமான பார்வையையே கொண்டிருந்தவர் ஜின்னா. கிலாபத் இயக்கத்துக்கு காந்தி ஆதரவளித்தபொழுது, அதனை எதிர்த்து அரசியலில் மதத்தைக் கலக்க வேண்டாம் என்றவர் ஜின்னா.
இஸ்லாமியர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் இடையிலான ஒற்றுமைப் பாலமாகத் திகழ்ந்தார். காங்கிரஸையும் இஸ்லாமியர்களின் கோரிக்கைகளையும் சமரசத்துக்குக் கொண்டுவரக் கடும் முயற்சிகள் எடுத்தார். ஆனால், ஜின்னாவின் 14 அம்சக் கோரிக்கை காங்கிரஸால் மிக அலட்சியமாக நிராகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1937ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின், கூட்டு அமைச்சரவைக்காக முஸ்லிம் லீக்கைக் காங்கிரஸ் பலிகேட்டபொழுது நிலைமை முற்றிலும் வேறாக, வேகமாக மாறியது.
அதன்பின்னர் ஜின்னாவுக்கும் நேருவுக்கும் இடையே நடந்த உரையாடல் இந்தப் பிரச்சனையை இன்னும் மோசமாக்கிவிட்டது. ஜின்னாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஹெக்டர் போலிதோ பதிவு செய்துள்ள உரையாடல் முக்கியமானவை.
1938ஆம் ஆண்டு பிப்ரவரி 25 அன்று நேரு ஜின்னாவுக்கு எழுதிய கடிதம்: ‘பிரச்னையின் அடிப்படைக்கூறுகள் என்னவென்று இதுவரை எனக்குத் தெரியவில்லை என்பதை இங்கு நான் சொல்லியாக வேண்டும். அதனால்தான் இதனை விளக்குமாறு உங்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் அந்த வகையில் எனக்கு எந்த உதவியும் இதுவரை கிடைக்கவில்லை…’
ஆறு நாட்கள் கழித்து ஜின்னா அதற்குப் பதில் அளித்தார்: ‘உங்களின் அறியாமையைக் கண்டு எனக்கு வியப்பாக இருக்கிறது. 1925 முதல் 1935 வரை நாட்டின் மிக உயரிய தலைவர்கள் கையாண்டபொழுதும் இப்பிரச்னைக்கு எந்தவொரு தீர்வும் கிட்டவில்லை. அதைப்பற்றி நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பிரச்னையில் தன்னிறைவு அடையாமல், சற்றுச் சிரத்தை எடுத்தீர்களானால் பிரச்னையின் முக்கியமான புள்ளிகள் எவையென அறிவது உங்களுக்கு அத்தனைக் கடினமானதாக இருக்காது. ஏனெனில், மிகச் சமீபமாகக்கூட அவை பத்திரிகைகளிலும் பொதுமேடைகளிலும், தொடர்ச்சியாகப் பதிவு செய்யப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன’ என்றார்.
ஏப்ரல் 6 காங்கிரஸின் பேரில் நேரு எழுதிய கடிதம்: ‘நிச்சயமாக, முஸ்லிம் லீக் மிக முக்கியமான வகுப்புவாத அமைப்பு. அப்படியாகவே நாங்கள் அதை அணுகுகிறோம். ஆனால், இதுபோன்று எங்கள் அறிவு வரம்புக்கு உட்பட்டுள்ள அனைத்து அமைப்புகளையும், தனிநபர்களையும் நாங்கள் சமாளிக்க வேண்டியுள்ளது. பெரும் கவனம் பெறும் அமைப்புகளே மிக முக்கியமான அமைப்புகள் ஆகின்றன. ஆனால், அவை வெளியிலிருந்து வரும் அங்கீகாரத்தைப் பொறுத்தது அல்ல. அந்தந்த அமைப்புகளின் உள்ளார்ந்த பலத்தைப் பொறுத்த விஷயம். மிகவும் சிறிய இயக்கங்கள் ஆயினும் அவை புதிதானவையாக இருந்தாலும் அவற்றையும் நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டி இருக்கிறது.’
மீண்டும் ஆறு நாட்கள் கழித்து ஜின்னா நேருவுக்கு பதில் எழுதினார். ‘என்னுடைய கடிதத்தை நீங்கள் துல்லியமாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே எனக்குப் புரிகிறது…. உங்கள் மொழியிலும் தோரணையிலும் வெளிப்படுகின்ற ஆணவமும் பிடிவாத மனநிலையும், காங்கிரஸ்தான் இறையாண்மை மிக்க சக்தி என்ற எண்ணத்தை வெளிக்காட்டுகிறது. காங்கிரஸ், முஸ்லிம் லீக்கைச் சரிசமமாகப் பாவித்து ஹிந்து – முஸ்லிம் பிரச்னையைத் தீர்க்கத் தயாராகாதவரை, நாம் அவரவர்களின் உள்ளார்ந்த பலத்தை நம்பியே இருக்க வேண்டியதுதான். உங்கள் மனநிலையைப் பார்த்தவரையில், இதற்குமேல் உங்களுக்கு நிலைமையைப் புரியவைக்க என்னால் இயலாது…’
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் காங்கிரஸ் ஒன்று மட்டுமே பிரதிநிதி என்ற மனநிலை மட்டுமல்ல, அது தன்மையில் ஹிந்து அமைப்பாகவே இருந்தது. முன்னர் பார்த்ததுபோல, பசுப் பாதுகாப்பு இயக்கத்தில் உள்ளவர்களும் ஹிந்து மகாசபையில் இருந்தவர்களுமே காங்கிரஸில் முக்கியப் பதவிகளை வகித்தனர். காங்கிரஸ் எப்படிப்பட்ட ஹிந்து அமைப்பாக இருந்தது என்பதை டாக்டர் அம்பேத்கர் கூறுகிறார். அவர் கூறியன:
‘காங்கிரஸ் ஓர் ஹிந்து அமைப்பில்லை என்று கூறுவதில் வாதிடுவதில் பயனில்லை. அர்த்தமில்லை. தனது இயைவில், உருவாக்கத்தில், உள்ளடக்கத்தில் ஹிந்துவாக உள்ள ஓர் அமைப்பு ஹிந்துவின் மனத்தையே பிரதிபலிக்கும். ஹிந்துவின் சர்வ விருப்பங்களையே, அபிப்பிராயங்களையே ஆதரித்து நிற்கும்.
அவ்வாறு பார்க்கும்பொழுது காங்கிரஸுக்கும் ஹிந்து மகாசபைக்கும் இடையே உள்ள ஒரே ஒரு வேறுபாடு பிந்தியது, தனது சொற்களில் முரட்டுத்தனமாகவும், செயல்களில் காட்டுமிராண்டித்தனமாகவும் நடந்துகொள்கிறது. காங்கிரஸோ இந்த விஷயத்தில் சற்றுப் பண்பட்ட முறையிலும் சூழ்ச்சித் திறத்துடனும் நடந்துகொள்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம்.’
நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல், 1937ஆம் ஆண்டின் முடிவில்கூட ஜின்னா இருதேசக் கொள்கையைப் பேசவில்லை. 1938ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சிந்து மாகாண முஸ்லிம் லீக் மாநாட்டில்தான் ஜின்னா, ‘இந்தியத் துணைக்கண்டத்தில் ஹிந்துக்களுக்கென்று ஒரு தனிக்கூட்டாட்சி நாடு, முஸ்லிம் மக்களுக்கென்று தனிக்கூட்டாட்சி நாடு என இரு கூட்டாட்சி நாடுகள் உருவாக வேண்டும்’ என்று முழக்கமிட்டார். ஆனால், இப்போதுகூட அவர் பாகிஸ்தான் என்ற சொல்லைக் குறிப்பிடவில்லை.
ஆனால், 1937ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த ஹிந்து மகாசபைக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் சாவர்க்கர் இருதேசக் கொள்கையை முன்வைத்துப் பேசினார். ‘ஒத்திசைவுடன் கூடிய ஒரே தேசம் என்று இந்தியாவை இன்று நாம் கருதிவிடமுடியாது. அதற்கு மாற்றாக ஹிந்து, முஸ்லிம் என்று பிரதானமான இரு தேசங்கள் உள்ளன’ என்றார்.
ஜின்னாவின் இருதேசக் கொள்கையும், சாவர்க்கரின் இருதேசக் கொள்கையும் எங்கே வேறுபடுகிறது என்பதை அம்பேத்கர் குறிப்பிடுகிறார். ஹிந்துக்களுக்கு ஒரு நாடு, இஸ்லாமியர்களுக்கு வேறொரு நாடு அவரவர்கள் அந்தந்த நாட்டில் வாழவேண்டும் என்பது ஜின்னாவின் கருத்தாக இருந்தது என்று குறிப்பிடும் அம்பேத்கர், சாவர்க்கரின் இருதேசக் கொள்கை என்பது, ‘ஒரே நாட்டில் ஹிந்துக்கள் முஸ்லிம்களை ஆட்சி செய்பவர்களாக இருக்கவேண்டும்’ என்ற வகையில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற ராஜேந்திர பிரசாத் தன்னுடைய ‘India Divided’ எனும் நூலில் சாவர்க்கரின் கொள்கை குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘நிலப்பரப்பு சார்ந்து இரு தேசமாக இந்தியா புரியவேண்டும் என்பது சாவர்க்கர் எண்ணம் அல்ல. மாறாக ஒட்டுமொத்த இந்தியாவும் ஹிந்துக்களின் புனித நாடு என்று கூறுபவர், ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரே அரசாங்கத்தின்கீழ் இருக்கவேண்டும், அதில் ஹிந்துக்கள் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கவேண்டும் என்றும் முஸ்லிம்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக கீழ்ப்படிந்த நிலையில் இருக்கவேண்டும். அதாவது, ஹிந்துக்கள் ஆளும் வர்க்கமாகவும், முஸ்லிம்கள் ஆளப்படும் வர்க்கமாகவும் இருக்கவேண்டும் என்பதே சாவர்க்கர் எண்ணம்’ என்கிறார்.
1935ஆம் ஆண்டுச் சட்டப்படி, சிறுபான்மையினர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்பொருட்டு, இந்தியாவின் தலைமை ஆளுநருக்குச் சிறப்பு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. அவற்றைத் தலைமை ஆளுநர் பயன்படுத்தமாட்டார் என்ற உறுதிமொழியை வாங்கிய பின்னரே தான் வெற்றிபெற்ற 8 மாகாணங்களிலும் ஆட்சிப்பொறுப்பேற்றது காங்கிரஸ்.
காங்கிரஸ் ஆளும் மாகாணச் சட்டசபை தொடங்கும்முன் இஸ்லாமிய வெறுப்புப் பாடலான ‘வந்தே மாதரம்’ ஒலிபரப்பப்பட்டது. பல்வேறு வகையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான ஆட்சியை நடத்தியதாகவே ஜின்னா கருதினார். காங்கிரஸை ஆட்சியிலிருந்து வெளியேற்றவேண்டும் என ஜின்னா கேட்டுக்கொண்டார்.
1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் துவங்கியது. 1940 ஜூலையில் புனாவில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக்கமிட்டி மீண்டும் பிரிட்டிஷின் போர் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கத் தயார் என்றும், ஆனால் போர் முடிந்தபிறகு இந்தியாவிற்குச் சுதந்திரம் அளிப்பதாக அறிவிக்கப்படவேண்டும் என்றும், மத்தியில் ஒரு பொறுப்பாட்சி அமைக்கப்படவேண்டும் என்ற நிபந்தனைகளையும் வைத்தனர். இதைப் பிரிட்டிஷ் அரசு ஏற்க மறுத்தது. இதை எதிர்த்து 8 மாகாணங்களிலும் காங்கிரஸ் தன் அமைச்சரவைகளைக் கலைத்தது.
அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக முஸ்லிம் லீக்கின் சம்மதம் இன்றி தலைமை ஆளுநர் எந்த உடன்பாட்டையும் மேற்கொள்ளக்கூடாது என்ற கூறிய ஜின்னா, பிரிட்டிஷாரின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு முற்றிலும் ஒத்துழைப்பு கொடுப்பதாக உறுதியளித்தார்.
காங்கிரஸ் ஆட்சி முடிவு வந்ததையடுத்து ஜின்னா அதனைக் கொண்டாடும் விதமாக, 1940ஆம் ஆண்டு டிசம்பர் 22 அன்று விமோசனத் தினமாகக் கொண்டாடினார். காங்கிரஸுக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக அந்தக் கொண்டாட்டத்தில் இஸ்லாமியர்கள் மட்டும் கலந்துகொள்ளவில்லை, பார்சிகள், கிறிஸ்தவர்கள், பட்டியலினத்தவர்கள், காங்கிரஸை எதிர்த்த ஹிந்துக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
1940ஆம் ஆண்டு மார்ச் மாதம் லாகூரில் நடந்த முஸ்லிம் லீக் மாநாட்டில், இஸ்லாமியர்களுக்கு வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைக் கொண்ட தனிநாடு மட்டுமே தீர்வு என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போதிலிருந்துதான் பாகிஸ்தான் மட்டுமே தீர்வு என்று முழுமூச்சாக இறங்கினார் ஜின்னா. 1928ஆம் ஆண்டு, கல்கத்தாவில் நடந்த அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் ஜின்னா பேசியபோது, இஸ்லாமியர்களுக்குச் சார்பாகப் பேச எந்த அருகதையும் இல்லாதவர் என்று பேசப்பட்டவர், 1940இல் பாகிஸ்தான் தீர்மானம் கொண்டுவந்தார்.
காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் என இரு கட்சிகளின் ஒத்துழைப்பும் போர் நடவடிக்கைகளுக்கு மிகவும் தேவைப்பட்டது. இவர்களின் ஆதரவை அரசியல் சீர்திருத்தங்கள் மூலமே பெற முடியும் என்பதை உணர்ந்து வைத்திருந்த பிரிட்டிஷார், காங்கிரஸின் கோரிக்கைகளை மதிக்கும் விதத்தில் சில முடிவுகளை மேற்கொண்டது. அதன் விளைவாகத் தலைமை ஆளுநர் பிரபு லின்லித்கோ ஆகஸ்டு 8, 1940 அன்று ஒரு வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளில்,
i) தலைமை ஆளுநரின் நிர்வாக அவை விரிவாக்கப்படும்.
ii) போருக்கான ஆலோசனைக் குழு அமைக்கப்படும்.
iii) போர் முடிவுற்றதும் அரசியல் அமைப்பு அவை அமைக்கப்படும்.
iv) இதற்கிடையில் அரசியல் அமைப்பு அவை தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டால் அதனை வரவேற்கும்.
v) பாதுகாப்பு, வெளிநாட்டுடன் ஒப்பந்தம் நீங்கலாக, இந்தியர்களின் அரசியல், சமுதாய, பொருளாதார உரிமைகளை இங்கிலாந்து அங்கீகரிக்கிறது.
vi) சிறுபான்மையினரின் ஒப்புதலின்றி எந்த அரசியலமைப்புச் சட்டமும் இயற்றப்படாது.
என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதான் ‘ஆகஸ்டு வேண்டுகோள்’ என்று அழைக்கப்படுகிறது.
ஆனால், காங்கிரஸும் முஸ்லிம் லீக்கும் இதனை ஏற்கவில்லை. தலைமை ஆளுநரின் அவையில் சரிசமமான அளவில் இஸ்லாமியர்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை என்பதாலும், பாகிஸ்தான் பிரிவினையை இத்திட்டம் ஏற்கவில்லை என்பதாலும் முஸ்லிம் லீக் நிராகரித்தது.
இரண்டாம் உலகப்போர் தீவிரம் அடைந்துகொண்டிருந்த காலக்கட்டம், ஜப்பான் அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தை (Pearl Harbour) தாக்கியது. அதனைத்தொடர்ந்து, சிங்கப்பூர், மலேசியா, பர்மா ஆகியவற்றை வென்றெடுத்த ஜப்பான், சீனாவின் ஷாங்காய், சியாம் நகரங்களையும் தன்வசமாக்கியது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து இந்தியாவை விடுதலை செய்ய ஜப்பான் விரும்புவதாக, ஜப்பான் வானொலி தினமும் பிரச்சாரம் செய்தது.
இந்தியாவை ஜப்பான் நெருங்கிக்கொண்டிருந்தது. இதனால், இந்தியாவில் உள்ள அரசியல் சூழ்நிலையைச் சரிபடுத்துவது இன்றியமையாத நிலைமையாகப் பிரிட்டிஷ் கருதியது. கிரிப்ஸ் பிரபு தன் குழுவினருடன் 22.03.1942 அன்று டெல்லி வந்து சேர்ந்தார். 23.03.1942 அன்று அந்தமான் தீவுகளை ஜப்பான் கைப்பற்றியது.
இந்தியாவின் அரசியல் நிலைமையைச் சரிசெய்ய கிரிப்ஸ் முன்வைத்த திட்டம்:
i) இந்தியச் சுதேசச் சமஸ்தானங்களும், மாகாணங்களும் கூடிய இந்திய ஒன்றிய அரசு அமைக்கப்படும். இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததும் இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் தேர்தல் நடைபெறும்.
ii) அரசியல் நிர்ணயச் சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். சுதேச அரசுகளும், இந்திய மாநிலங்களின் பிரதிநிதிகளும் அதில் கலந்துகொள்ளலாம்.
iii) தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தந்த மாநிலத்தின் மொத்த உறுப்பினர்கள் 1/10 பகுதியினரைத் தேர்வுசெய்து அரசியல் நிர்ணயக் குழுவிற்கு அனுப்பலாம். சுதேசச் சமஸ்தானங்களிலிருந்து வரும் உறுப்பினர்களை அந்தச் சமஸ்தான மன்னர்கள் நியமிப்பர்.
iv) இந்தியக் கூட்டாட்சியில் இணைய விரும்பாத மாநிலங்கள், புதிய அரசியல் அமைப்பைத் தயாரித்து அதனை ஏற்று நடைமுறைப்படுத்தலாம். இந்திய அரசியல் நிர்ணயக்குழு, பிரிட்டனுடன் உடன்பாட்டினைச் செய்து கொள்ளலாம்.
v) புதிய அரசியல் அமைப்பை ஏற்கத் தயாராக இல்லாத பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்த எந்த ஒரு மாநிலமும், தனது இப்போதைய அரசியல் சட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ள உரிமை அளிக்கப்படும்.
vi) போர் முடியும்வரையிலும், அரசியல் அமைப்பை ஏற்படுத்தும் வரையிலும், இந்தியாவின் பாதுகாப்பைப் பிரிட்டன் அரசு ஏற்கும். பிரிட்டனின் மேலாண்மைக்கு உட்பட்ட சுய உரிமை பெற்ற நாடுகளில் இந்தியா உறுப்பு நாடாகும். (காமன்வெல்த் நாடு)
‘திவாலாகவிருக்கும் வங்கிக்குக் கொடுக்கப்பட்ட பின்தேதியிட்ட காசோலை’ என்று கிரிப்ஸ் திட்டத்தை வர்ணித்தார் காந்தி.
கிரிப்ஸ் திட்டத்தை நிராகரித்து காங்கிரஸ் காரியக் கமிட்டி நிறைவேற்றிய தீர்மானம் பின்வருமாறு:
‘ஒரு மாநிலம் இந்தியக் கூட்டாட்சியில் சேராமலிருக்கலாம் என்ற கிரிப்ஸ் திட்டத்தின் புதுமையான கொள்கையை நாம் முன்கூட்டியே ஏற்பது, இந்திய ஐக்கியம் என்ற தத்துவத்தைக் கடுமையாகத் தாக்குவது போலாகும். ஆகவே, அது வேற்றுமையை வளர்க்கும் சாதனமாகிவிடும்.
மாநிலங்களில் பல தொல்லைகளைத் தோற்றுவித்து வளரச் செய்துவிடும்… ஆயினும் நாம் வெளிப்படையாகக் கூறியுள்ள (காங்கிரஸின்) திட்டவட்டமான கருத்துக்களுக்கு எதிராக எந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்களையும் அவர்களது விருப்பத்திற்கு மாறாக இந்தியக் கூட்டாட்சியில் இருந்தே தீர வேண்டும் என்று வற்புறுத்துவதைக் காங்கிரஸ் கமிட்டியால் நினைத்துப் பார்க்கக் கூட இயலாது.
இக்கொள்கையை ஏற்றுக்கொள்ளும்பொழுதே இந்தியாவின் உறுப்புகளான மாநிலங்கள் பொதுவான கூட்டுறவுத் தன்மையுள்ள தேசிய வாழ்வை வளர்ப்பதற்கு உதவக்கூடிய பல சூழ்நிலைகளைத் தோற்றுவிப்பதற்குரிய எல்லா முயற்சிகளும் செய்யப்பட வேண்டும்.
இந்தக் கொள்கையை ஒப்புக்கொண்டால் ஒரு பகுதிக்குள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் பிறரை (முஸ்லிம்களை) வற்புறுத்தி, புதிய பிரச்சனைகளை உண்டாக்கக் கூடிய வகையில் எந்த மாறுதல்களையும் செய்யக்கூடாது என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். மத்திய அரசின் வரம்பிற்கு உட்பட்ட, சக்திவாய்ந்த தேசிய அரசாங்கத்தின் தேவைகளுக்கு முரணில்லாத வகையில் இயன்ற அளவு முழுச் சுயாட்சியை ஒவ்வொரு மாநிலமும் பெற வேண்டும்.
கிரிப்ஸ் தயாரித்துள்ள திட்டம், கூட்டாட்சி தொடங்கும்போதே பிரிவினையையும் அதற்கான முயற்சிகளையும் ஊக்குவிப்பதாக இருக்கிறது. அதிகபட்ச ஒத்துழைப்பும் நல்லெண்ணமும் மிகுதியாகத் தேவைப்படும் இத்தருணத்தில் (பல புதிய) தகராறுகளை இத்திட்டம் உருவாக்குகிறது… இப்போதைய (ஆங்கிலேயரின்கீழ் இயங்கும்) இந்தியச் சர்க்காரும் அதன் மாகாணப் பிரிவுகளும் (போர் ஒத்துழைப்பிற்குப் பிறகு) தகுதியற்றவை.
இந்திய மக்கள் தமது நம்பிக்கைக்குப் பாத்திரமான பிரதிநிதிகள் மூலம்தான் இந்தப் பளுவைச் (போர் பளுவை) சிறப்பாக வகிக்கக் கூடியவர்கள். ஆனால் அப்படி நிலவ வேண்டுமாயின். இப்பொழுதே சுதந்திரம் கிடைக்க வேண்டும். எனவே கிரிப்ஸ் திட்டத்தைக் காரியக் கமிட்டியால் ஏற்க முடியவில்லை.’
மேற்சொன்ன தீர்மானத்தை உற்று நோக்குதல் அவசியம். இந்தியக் கூட்டாட்சியில் ஒரு மாநிலத்தை அதன் விருப்பத்திற்கு மாறாகச் சேர்ந்தே தீரவேண்டும் என்று நிர்ப்பந்திக்க மாட்டோம் எனக் கூறும் அதே தீர்மானத்தில், விருப்பமில்லாத மாநிலங்கள் இந்தியக் கூட்டாட்சியில் சேராமலிருக்கலாம் என்று கிரிப்ஸ் திட்டம் சொல்வதால் பிரிவினையை ஊக்குவிக்கிறது என்று கூறி கிரிப்ஸ் திட்டத்தைக் காங்கிரஸ் நிராகரித்திருப்பது பெரும் முரண்பாடாக உள்ளது என்பதை ஆய்வறிஞர் எஸ்.வி.ராஜதுரை தன்னுடைய பெரியார்: ஆகஸ்ட் 15 நூலில் குறிப்பிடுகிறார்.
ஒருவேளை காங்கிரஸ் கட்சி கிரிப்ஸ் திட்டத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இந்திய மாநிலங்கள் யாவும் முழுத்தன்னாட்சி பெற்ற உறுப்புகளாகி இருக்கும் என்றும், முஸ்லிம்கள் அதிகமுள்ள மாநிலங்களும் தன்னாட்சியை அடைந்து, அவை அனைத்தும் ஒற்றிணைந்து, உண்மையான அனைத்திந்தியக் கூட்டாட்சி அமைப்புக்குள் செயல்பட்டிருக்கும் என்பது அரசியல் வல்லுனர்களான ஜான் கோட்மேன் மற்றும் பாம்வெல் ஆகியோரின் கருத்து என்பதாக கு.ச.ஆனந்தன் தன்னுடைய நூலில் எழுதுகிறார்.
மாநிலங்கள் பிரிந்து செல்லும் உரிமையை கிரிப்ஸ் திட்டம் கொடுத்தபோதிலும் வெளிப்படையாகப் பாகிஸ்தான் உருவாக்கத்துக்கு ஆதரவாக கிரிப்ஸ் திட்டம் இல்லாமையால் அதனை முஸ்லிம் லீக்கும் ஆதரிக்கவில்லை.
i) இந்தியா இரண்டாகப் பிளக்கப்பட்டு பாகிஸ்தான் என்ற தனிச் சுதந்திர நாடு உருவாக்கப்பட வேண்டும்.
ii) பாகிஸ்தானின் அரசியலமைப்பைக் கட்டமைக்க தனியொரு அரசியலமைப்புச் சட்ட அவை வேண்டும். எனவே, இரு அரசியலமைப்புச் சபைகள் உருவாக்கப்பட வேண்டும்.
முடிவில் கிரிப்ஸ் திட்டம் தோல்வியுற்றது. பின்னர், காங்கிரஸ் தலைவரான புலாபாய் தேசாய், காங்கிரஸ் – லீக் கொண்ட கூட்டணி அரசை அமைக்க, முஸ்லிம் லீக்கின் செயலாளரான லியாகத் அலிகான் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மத்தியச் சட்டப்பேரவையில், இரண்டு கட்சிகளும் சமமான அளவில் நபர்களை நியமிப்பார்கள் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதுவே தேசாய் – லியாகத் அலி ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது.
1937இல் முஸ்லிம் லீக்குடன் கூட்டு அமைச்சரவையை உருவாக்கத் தவறியதால், அதனால் ஏற்பட்ட சேதாரத்தை ஈடுகட்டவே கூட்டு அமைச்சரவைக்கு தேசாய் – லியாகத் அலி ஒப்பந்தம் அடிகோலியது. ஆனால், இதனைக் காங்கிரஸ் ஏற்க மறுத்துவிட்டது.
தேசியத் தாராளவாத கூட்டமைப்பு என்ற கட்சியின் தலைவர் சர். தேஜ் பகதூர் சாப்ரு, ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பெரும் முயற்சிகள் எடுத்தார். காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளைச் சாராத நபர்களைக்கொண்ட குழு ஒன்றினை அமைத்தார். அதுவே ‘சாப்ரு குழு’ என்று அழைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கை:
i) பாகிஸ்தான் உருவாக்கத்தை இக்குழு ஏற்கவில்லை.
ii) அரசியலமைப்புச் சட்ட உருவாக்க அவையில், ஹிந்துக்களும் (பட்டியல் இனத்தவர் நீங்கலாக) இஸ்லாமியர்களும் சரிசமமான அளவில் இருக்கவேண்டும்.
iii) மத்தியச் சட்டப்பேரவைக்கான தேர்தல் தனிவாக்காளர் தொகுதிமுறையினால் அல்லாமல், ஒன்றுபட்ட வாக்காளர் தொகுதிகளாகவே நடைபெறும்.
பாகிஸ்தான் உருவாக்கத்தை ஏற்காததால் இந்த அறிக்கையை முஸ்லிம் லீக் நிராகரித்தது. மற்றொரு பக்கம், சமநிலைக் கொள்கை சாதி ஹிந்துக்களுக்கு ஏற்புடையதாக இல்லாததால் அவர்கள் இந்த அறிக்கையை நிராகரித்தனர் என்கிறார் சட்ட அறிஞர் சீர்வை. (சமநிலைக் கொள்கை என்பது என்னவெனில், பெரும்பான்மை, சிறுபான்மை என்ற வேறுபாடு இல்லாமல் இரு மதத்தினருக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்குவது.)
காங்கிரஸுக்கும் முஸ்லிம் லீக்குக்கும் இடையே ஒரு சமரசத்தைக் கொண்டுவர விரும்பிய தலைமை ஆளுநர் வேவல் பிரபு ஒரு திட்டத்தை முன்வைத்தார். அதன்படி,
i) தலைமை ஆளுநரின் நிர்வாக அவை விரிவுபடுத்தப்படும்.
ii) மேலும், அந்த நிர்வாக அவையில் தலைமை ஆளுநர் மற்றும் தலைமைத் தளபதி நீங்கலாக, மற்றவர்கள் அனைவரும் இந்தியர்களாக இருப்பார்கள்.
iii) அந்த அவையில் சாதி ஹிந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் சமமான அளவில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும்.
iv) அந்த அவை தற்காலிக அரசாகச் செயல்படும். அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்படும் வரையில் இந்த அரசு நீடிக்கும்.
என்பவை இத்திட்டத்தின் அடிப்படைகளாக இருந்தன.
இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்க சிம்லா மாநாட்டைக் கூட்டினார் வேவல் பிரபு. அனைத்துக்கட்சித் தலைவர்களும் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டனர். ஆனால், சிம்லா மாநாட்டில் எவ்விதச் சமரசமும் எட்டப்படவில்லை.
இவ்வாறாக, ஒன்றுபட்ட இந்தியாவுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் வீண் ஆகின. சாப்ரு குழு அறிக்கை, தேசாய் – லியாகத் ஒப்பந்தம், சிம்லா மாநாடு என எதுவுமே பிரிந்து செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட பாகிஸ்தானைத் திரும்ப அழைத்துவரவில்லை.
கடைசியாக, பிரிட்டிஷின் மந்திரிசபைத் தூதுக்குழுவை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. இக்குழு சர். ஸ்டஃபோர்டு கிரிப்ஸ், ஏ.வி.அலெக்ஸ்சாண்டர் மற்றும் பெதிக் லாரன்ஸ் பிரபு ஆகியோரைக் கொண்டிருந்தது. இக்குழுவும் ஒன்றுபட்ட இந்தியாவுக்கான திட்டத்தைத்தான் முன்வைத்தது. பாகிஸ்தான் உருவாவதை இக்குழுவும் ஏற்கவில்லை. காங்கிரஸ் தலைவர் ஆசாத் கொடுத்த திட்டத்தைப் பிரிட்டீஷ் மந்திரிசபைத் தூதுக்குழு ஏற்றுக்கொண்டது. அதன் அடிப்படையிலேயே மந்திரிசபைத் தூதுக்குழு தனது பரிந்துரைகளைக் கொடுத்தது.
இந்தியாவின் அரசியலமைப்புகான அடிப்படைக்கூறுகளாக இருக்கவேண்டியவை என மந்திரிசபைத் தூதுக்குழு கூறியவை:
i) பிரிட்டிஷ் இந்திய மாகாணங்களும், சமஸ்தானங்களும் அடங்கிய ஓர் இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட வேண்டும். வெளிநாட்டுக் கொள்கை (Foreign Policy), பாதுகாப்பு (Defence), தகவல்தொடர்புகள் (Communications) ஆகிய அதிகாரங்கள் மற்றும் இவற்றைப் பார்த்துக்கொள்ளத் தேவைப்படும் வருவாயை ஈட்டும் அதிகாரத்தை மட்டுமே ஒன்றிய அரசு பெற்றிருக்கும்.
ii) ஒன்றிய அரசுக்கு அளிக்கப்பட்ட மேற்சொன்ன மூன்று அதிகாரங்களைத் தவிர மற்ற அதிகாரங்கள் முழுவதும் மாகாணங்களே வைத்துக்கொள்ளும். எஞ்சிய அதிகாரங்களும் மாகாணங்களுக்கே தரப்பட வேண்டும்.
iii) பிரிட்டிஷ் இந்திய மாகாணங்கள் மற்றும் சமஸ்தானங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கொண்ட நாடாளுமன்றத்தையும், நிர்வாகத்தையும் இந்திய ஒன்றியம் கொண்டிருக்கவேண்டும்.
iv) மதம் சம்பந்தமான சட்டம் கொண்டுவரப்பட்டால் இரு மதத்தைச் சார்ந்த உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் வந்திருந்து, பெரும்பான்மையினர் அதற்காக வாக்களிக்க வேண்டும்.
v) ஒன்றுக்கு மேற்பட்ட சில மாகாணங்கள் சேர்ந்து மாகாணக் குழுக்களை உருவாக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு மாகாணக்குழுவும் ஒரு கூட்டாட்சி அரசை அமைக்க வேண்டும். ஒவ்வொரு மாகாணக் குழுவும், அந்தந்த மாகாணக்குழுவுக்கு உரிய பொது அதிகாரங்களையும் அதன் உறுப்புகளான மாகாணங்களுக்குரிய அதிகாரங்களையும், தாமே நிர்ணயித்துக்கொண்டு மாகாணக்குழுச் சட்டசபை மற்றும் நிர்வாகத்துறையையும் அமைத்துக் கொள்ளவேண்டும்.
vi) இப்படித் தனித்தனியாக அமைக்கப்பட்ட மாகாணக் குழுக்கூட்டாட்சிகள் அனைத்தும் இணைந்து, கூட்டாட்சிகளின் நெகிழ்வான ஒரு இந்தியக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதுதான் இந்திய ஒன்றிய அரசு.
vii) அதன்பின்னர், ஒவ்வொரு பத்தாண்டுக் கால இடைவெளியிலும் மாகாணங்கள் தங்களது அரசியலமைப்பை மறுபரிசீலனை செய்ய விரும்பினால், தனது சட்டமன்றத்தின் மூலமாக அவ்வகைத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, அமல்படுத்தலாம். அந்தத் தீர்மானத்தை அமலாக்குவதற்கு உகந்த வகையில் இந்தியக் கூட்டாட்சி அமைப்பிலும், மாகாணக்குழு அரசியலமைப்பிலும் தேவையான சட்ட வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.
அடுத்ததாக, மேற்சொன்னதுபோல மந்திரிசபைத் தூதுக்குழு இந்தியாவை மூன்று மண்டலங்களாகப் பிரித்தன.
‘A’ பிரிவில் மெட்ராஸ், பாம்பே, ஐக்கிய மாகாணம், மத்திய மாகாணம், பீஹார், ஓரிசா ஆகிய ஆறு மாகாணங்கள் இணைந்து, ஒரு மாகாணக்குழுவை அமைப்பர். ஹிந்துக்கள் அதிகமாக உள்ள மாகாணக்குழுவாக இது அமைந்தது.
‘B’ பிரிவில் பஞ்சாப், வடமேற்கு எல்லைப்புற மாகாணம், சிந்து ஆகிய மூன்று மாகாணங்கள் இணைந்து, ஒரு மாகாணக்குழுவை அமைப்பர். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள மாகாணக்குழுவாக இது அமைந்தது.
‘C’ பிரிவில் அசாம், பெங்கால் ஆகிய இரண்டு மாகாணமும் தனி மாகாணக்குழுவை அமைக்கும். இதுவும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணக்குழுவாக அமைந்தது.
இந்த மூன்று மாகாணக்குழுக்கள் இணைந்து நெகிழ்வான இந்திய கூட்டாட்சியை அமைக்கும். எனவே, மாகாண அரசு, மாகாணக்குழு அரசு மற்றும் மாகாணக்குழுக்களின் கூட்டாட்சி அரசு (இந்திய ஒன்றிய அரசு) என மூன்று அடுக்கு கூட்டாட்சியாக இந்தியாவை வடிவமைத்தது பிரிட்டிஷின் மந்திரிசபைத் தூதுக்குழு.
இருப்பினும், பிரிட்டிஷின் மந்திரிசபைத் தூதுக்குழு பலவீனமான, வலிமை குன்றிய ஒன்றிய அரசைப் படைத்திட விரும்பவில்லை. வெளிநாட்டுக் கொள்கை, தகவல்தொடர்பு, பாதுகாப்பு மற்றும் இவற்றுக்கான நிதி ஆதாரங்கள் என 65 இனங்கள் (Subjects) குறித்துச் சட்டமியற்றும் அதிகாரம் கொண்டதாக ஒன்றிய அரசு அமையவிருந்தது என்பதைத் தெளிவுபடுத்துகிறது அரசியலமைப்பு அவையால் உருவாக்கப்பட்ட மத்திய அதிகாரங்கள் குழு அளித்த அறிக்கை.
பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்கத்துக்கு மந்திரிசபைத் தூதுக்குழு மறுப்பு தெரிவித்துவிட்டதால், இத்திட்டத்திற்கு ஜின்னாவும் முஸ்லிம் லீக்கும் ஒருமனதாக சம்மதித்தது. எந்தத் தீர்வும் எட்டப்படாமலிருப்பதால், குறைந்தபட்ச சமரசமாகச் சுதந்திரமான மாகாணக் குழுக்கள் உடைய இத்திட்டம் இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் என்று மந்திரிசபைத் தூதுக்குழுத் திட்டத்துக்குச் சம்மதிப்பதாக ஜின்னா கூறினார்.
இத்திட்டத்தின்மீது சில விமர்சனங்களை வைத்திருந்தபோதிலும் காங்கிரஸும் இத்திட்டத்திற்கு ஒப்புக்கொண்டது. ஒருவழியாக, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை தவிர்க்கப்பட்டு ஒன்றுபட்ட இந்தியா சாத்தியமாகும் வழிகள் பிறந்தன.
ஆனால், 1946ஆம் ஆண்டு ஜூலை 10 அன்று, ஜவகர்லால் நேரு கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு, வழிவகுத்துக் கொடுத்த ஒன்றுபட்ட இந்தியாவுக்கான வழிகளை அடைத்துவிட்டது.
மாகாணக்குழுக்களே முதலில் அமையாது என்று கூறியவர், ‘அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையில் கலந்துகொள்ள மட்டுமே காங்கிரஸ் சம்மதித்துள்ளது. தனக்குச் சிறந்ததென்று தோன்றும்வகையில் மந்திரிசபைத் தூதுக்குழு திட்டத்தை எவ்வாறு வேண்டுமானாலும் மாற்றியமைக்கும் சுதந்திரத்தைக் காங்கிரஸ் பெற்றிருக்கிறது’ என்றார்.
ஜின்னாவுக்கு பேரிடியாக இறங்கியது இச்செய்தி. முஸ்லிம் லீக் மன்றத்தைக் கூட்டுமாறு லியாகத் அலிகானிடம் கூறிய ஜின்னா, பின்வரும் முடிவுக்கான அறிக்கையை வெளியிட்டார்.
காங்கிரஸ், மந்திரிசபைத் தூதுக்குழுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டதாலும், அந்தத் திட்டம்தான் இந்தியாவின் எதிர்கால அரசியலமைப்பின் அடிப்படையாக அமையப்போகிறது என்ற உத்தரவாதம் கிடைத்ததாலும்தான் டெல்லியில் தூதுக்குழுவின் திட்டத்தை முஸ்லிம் லீக் ஏற்றுக்கொண்டது. இப்போது காங்கிரஸ் தலைவர், அரசியலமைப்புக் குழுவில் அதன் பெரும்பான்மை வாயிலாக அத்திட்டத்தை மாற்றமுடியும் என்று கூறுவதால், பெரும்பான்மையினர் தயவில் சிறுபான்மையினர் வைக்கப்படுவார்கள் என்ற நிலை ஏற்படும் என ஜின்னா நினைத்தார்.
நிலைமையைச் சரிசெய்வதற்காகக் காங்கிரஸ் கமிட்டி கூடியது. மந்திரிசபைத் தூதுக்குழுவின் திட்டத்தை அப்படியே ஏற்பதாக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், ஜின்னா எதையும் இனி நம்பாத நிலைக்குச் சென்றார். பிரிட்டிஷ் அதிகாரத்தை மாற்றாத நேரத்திலேயே இப்படி மாற்றி மாற்றிப் பேசும் காங்கிரஸ், பிரிட்டிஷ் சென்ற பிறகு அரசியலமைப்புச் சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றியமைக்கும் என்று நினைத்த ஜின்னா, மந்திரிசபைத் தூதுக்குழுத் திட்டத்தைக் காங்கிரஸ் நிராகரித்துள்ளது என்பதையே இது (நேருவின் பேட்டி) காட்டுவதாகக் கூறினார்.
இருப்பினும், இந்திய – பாகிஸ்தான் பிரிவினையைத் தவிர்க்கும் கடைசி முயற்சியாக ஜின்னா, பிரிட்டிஷ் பிரதமர் அட்லீக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘முற்றிலும் தனிப்பட்ட, ரகசியமான கடிதம்’ என்று எழுதியிருந்த ஜின்னா, இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்: ‘இஸ்லாமியர்கள் இரத்தம் சிந்தவேண்டிய அவசியத்தைப் பிரிட்டீஷ் அரசாங்கம் தவிர்த்துவிடும் என்று இன்னமும் நான் நம்புகிறேன். ஆனால், இஸ்லாமியர்களைப் பலிகொடுத்து காங்கிரஸிடம் நீங்கள் சரணடைவீர்களானால் நாங்கள் இரத்தம் சிந்துவதைத் தவிர்த்து வேறு வழியில்லை.’
ஆனால், பிரிட்டீஷ் பிரதமர் அட்லீயிடமிருந்து சரியான பதில் எதுவும் ஜின்னாவுக்கு வந்து சேரவில்லை. மேற்கண்ட சம்பவத்தால் ஒன்றுபட்ட இந்தியா என்ற ஏற்பாட்டில் இருந்து பின்வாங்கியது முஸ்லிம் லீக். இனி சுதந்திரப் பாகிஸ்தான் மட்டுமே ஒரே தீர்வு என்ற முடிவு, ஜூலை 27ஆம் தேதி நடந்த முஸ்லிம் லீக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 16 அன்று பாகிஸ்தான் பெறுவதற்காக நேரடி நடவடிக்கையில் முஸ்லிம் லீக் இறங்கப்போவதாக அறிவித்தார் ஜின்னா. நேரடி நடவடிக்கையை நடத்தும் அளவுக்கு முஸ்லிம் லீக் சக்தி பெற்ற அமைப்பல்ல என நேரு ஒருமுறை கூறியிருந்தார். நாட்டில் கலவரங்கள் மூண்டன.
வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்த துரதிர்ஷ்டவசமான நிகழ்ச்சி இதுவென நேருவின் பேட்டியை ஆசாத் குறிப்பிடுகிறார். 1937ஆம் ஆண்டுத் தேர்தல் நேரத்தில் செய்ததைவிட 1946ஆம் ஆண்டு மிகப்பெரிய தீங்கை ஜவாஹர்லால் நேரு இழைத்துவிட்டதாக ஆசாத் தனது நூலில் எழுதியுள்ளார்.
இந்நிலையில், 1946ஆம் ஆண்டு ஜூலை மாதம், அரசியலமைப்புச்சட்ட நிர்ணயச் சபைக்கு நடந்த தேர்தலில், 205 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. 78 முஸ்லிம் இடங்களில் 73 இடங்களை முஸ்லிம் லீக் வென்றிருந்தது. ஹிந்துக்களிடையே காங்கிரஸ் எப்படியான செல்வாக்கு செலுத்தியதோ அதே மாதிரியான செல்வாக்கை இஸ்லாமியர்களிடையே பெற்றிருந்தது முஸ்லிம் லீக். அரசியலமைப்புச்சட்ட நிர்ணயச் சபையில் கலந்துகொள்ள முஸ்லிம் லீக்குக்கு அழைப்பு விடுத்துவிட்டு அரசியலமைப்பை இயற்றும் பணியில் மூழ்கியது காங்கிரஸ்.
1946ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபை முதல்முறையாகக் கூடியது. ஆனால், முஸ்லிம் லீக் கலந்துகொள்ளவில்லை. இந்தியாவின் அரசியலமைப்பை மந்திரிசபைத் தூதுக்குழுத் திட்டத்தின் அடிப்படையிலேயே எழுத அமர்ந்தது அரசியலமைப்புச் சட்ட நிர்ணயசபை.
1947ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி, இந்தியத் துணைக்கண்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகள் உருவாகும் என்றும் இரு நாடுகளுக்கும் தனித்தனி அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபைகள், இருவேறு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் என்றும் பிரிட்டிஷ் இந்தியாவின் தலைமை ஆளுநர் மவுண்ட்பேட்டன் கூறினார்.
காங்கிரஸ் காரியக் கமிட்டி 1947 ஜூன் மாதம் பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவாகத் தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தில், ‘முஸ்லிம் லீக் மந்திரிசபைத் தூதுக்குழுத் திட்டத்தை ஏற்க மறுத்ததாலும், அரசியலமைப்பு அவையில் பங்கு கொள்ள மறுத்ததாலும், மக்களின் விருப்பத்திற்கெதிராக எந்தப் பகுதியையும் இந்தியாவில் இணைக்கக்கூடாது என்பது காங்கிரஸின் கொள்கையாக இருப்பதாலும் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி ஜூன் 3ஆம் தேதி திட்டத்தை ஏற்கிறது. ஜூன் 3ஆம் தேதி திட்டம் இந்தியாவில் சில பாகங்கள் பிரிந்திட அனுமதியளிக்கிறது. இது வருந்தத்தக்கது என்றாலும் இன்றைய சூழ்நிலையில் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி இந்தத் திட்டத்தை ஒத்துக்கொள்கிறது’ என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது.
அதன்பின்னர், மந்திரிசபைத் தூதுக்குழுத் திட்டத்தை ஓரங்கட்டிவிட்டு, காங்கிரஸ், வலிமைவாய்ந்த ஒன்றிய அரசு கொண்ட கூட்டாட்சியை நிறுவுவதற்கான வேலையில் ஈடுபட்டது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை இரு நாடுகளை மட்டும் உருவாக்கிவிட்டுச் செல்லவில்லை. மாநிலங்களின் தன்னாட்சி அதிகாரங்கள் மறைந்ததும் அங்கேதான்!
(தொடரும்…)
______________
மேற்கோள் நூல்கள்
1. H M Seervai, Partition of India – Legend and Reality, Universal Law Publishing and Co Ltd (2nd ed.2021)
2. B.Shiva Rao, The Framing of India’s Constitution Vol.1, Indian Institute of Public Administration (1st ed. 1966)
3. Durga Das Basu, Introduction to the Constitution of India (9th ed.1982)
4. Ayesha Jalal, The Sole Spokesman: Jinnah, The Muslim League and the Demand for Pakistan, Cambridge University Press (1994)
5. Michael Brecher, Nehru : A Political Biography, Oxford University Press (1959)
6. R.C.Majumdar, History of the Freedom Movement in India Vol.3, Firma K.L.Mukhopadhyay (2nd Revised ed.1971)
7. Maulana Abul Kalam Azad, India Wins Freedom: The Complete Version, Orient Blackswan (1st ed.1988)
8. Rajendra Prasad, India Divided, Hind Kitabs Publishers Bombay (Reprint ed. May 1946)
9. Hector Bolitho, Jinnah : Creator of Pakistan, London : John Murray (1st ed.1954)
10. எஸ்.வி.ராஜதுரை, பெரியார்: ஆகஸ்ட் 15, விடியல் பதிப்பகம் (3rd ed. 2012)
11. மு.நீலகண்டன், டாக்டர் அம்பேத்கரும் இந்திய அரசியல் சட்ட வரலாறும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (5th ed. 2022)
12. ஆலடி அருணா, இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும், விகடன் பிரசுரம் (டிசம்பர் 2017)
13. ப.திருமாவேலன், காந்தியார் சாந்தியடைய, மாற்று வெளியீட்டகம் (டிசம்பர் 2017)
14. கு.ச.ஆனந்தன், மலர்க மாநில சுயாட்சி, தங்கம் பதிப்பகம் (2nd ed.2017)
15. டி.ஞானய்யா, இந்தியா: வரலாறும் அரசியலும், விடியல் பதிப்பகம் (2014)
உதவிய ஆராய்ச்சிக்கட்டுரைகள்
1. Ayesha Jalal & Anil Seal, Alternative to Partition: Muslim Politics between the Wars, Modern Asian Studies, Vol.15, No.3, Power, Profit and Politics: Essays on Imperialism, Nationalism and Change in Twentieth-Century India (1981), pp. 415 – 454