Skip to content
Home » இந்திய மக்களாகிய நாம் #18 – ‘கூட்டாட்சி அம்சங்கள் கொண்ட ஒற்றையாட்சி நாடு’

இந்திய மக்களாகிய நாம் #18 – ‘கூட்டாட்சி அம்சங்கள் கொண்ட ஒற்றையாட்சி நாடு’

இந்திய மக்களாகிய நாம்

1947ஆம் ஆண்டு, ஜூன் 3ஆம் தேதி மவுண்ட்பேட்டன் அறிவித்த திட்டம் வெளியாகும் வரையில், ஒன்றிய அரசுக்குக் குறைந்த அதிகாரங்கள் கொண்ட கூட்டாட்சியை நிறுவுவதற்கான வேலையைத்தான் அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச்சபை செய்துவந்தது. மந்திரிசபைத் தூதுக்குழுத் திட்டத்தின்படி அரசியலமைப்பை உருவாக்கப் பல்வேறு குழுக்களையும் அது அமைத்தது.

மந்திரிசபைத் தூதுக்குழுத் திட்டத்தின்படி, ஒன்றிய அரசு மட்டுமல்ல, மாகாண அரசுகளும், மாகாணக்குழுக்களும் தனித்தனியே தங்களது அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிக்கொள்ளலாம்.

இதன்படி, ஒன்றிய அரசின் அரசியலமைப்புச் சட்டம் எவ்வகையில் அமையவேண்டும் என்பதற்கான அடிப்படைகளைப் பற்றி முடிவெடுக்க ‘ஒன்றிய அரசியலமைப்புக் குழு’ உருவாக்கப்பட்டது. ஒன்றியத்துக்கு வழங்கவிருக்கும் அதிகாரங்கள் என்னென்ன என்பதை ஆராய ‘ஒன்றிய அதிகாரங்கள்’ என்று மற்றொரு குழுவும், மாகாணம் மற்றும் மாகாணக்குழு ஆகியவற்றுக்கான அரசியலமைப்புச் சட்ட மாதிரி எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்து ஆராய ‘மாகாண அரசியலமைப்புக் குழு’ என்றொன்றும் உருவாக்கப்பட்டன.

மேற்சொன்ன ‘ஒன்றிய அதிகாரங்கள்’ குழுவினர் தனது, முதல் அறிக்கையை ஏப்ரல் 17, 1947 அன்று அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையின் தலைவர் இராஜேந்திர பிரசாத் அவர்களிடம் அளித்தனர். இந்த அறிக்கை ஏப்ரல் 28, 1947 அன்று அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையிலும் சமர்பிக்கப்பட்டது. அந்த அறிக்கைகூட, குறைந்த அதிகாரங்கள் கொண்ட ஒன்றிய அரசுதான் அமையவேண்டும் என்று கூறியிருந்தது.

மந்திரிசபைத் தூதுக்குழுத் திட்டத்தின் அடிப்படைகளுக்கேற்ப பாதுகாப்பு, தகவல்தொடர்பு, வெளியுறவுக்கொள்கை மற்றும் இவற்றுக்கான நிதி ஆதாரங்களைத் திரட்டும் அதிகாரம் ஆகியவை மட்டுமே ஒன்றிய அரசுக்கு கொடுக்கப்படவேண்டும் என்றும், அவைபோக ஏனைய அனைத்து அதிகாரங்களும் மாகாணங்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறியிருந்தது.

ஆனால், பிரிவினை உறுதியான பிறகு, ‘ஒன்றிய அதிகாரங்கள்’ குழு அளித்த அறிக்கை, குறைந்த அதிகாரங்கள் கொண்ட ஒன்றிய அரசுடன் கூடிய கூட்டாட்சியை அமைப்பதிலிருந்து அதற்கு நேரெதிரான வலிமை மிகுந்த ஒன்றிய அரசுடன் கூடிய கூட்டாட்சியை அமைக்க முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்தது.

ஜூன் 30, 1947 முதல் ஜூலை 3, 1947 வரையிலான காலத்தில் ‘ஒன்றிய அதிகாரங்கள்’ குழு மற்றும் ஒன்றிய அரசியலமைப்புக் குழு ஆகிய இரண்டு குழுக்களும் கூடி எடுத்த முடிவுகளை, தனது இரண்டாம் அறிக்கையாக ஜூலை 5, 1947 அன்று அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையின் தலைவர் இராஜேந்திர பிரசாத் அவர்களிடம் அளித்தனர். ஒன்றிய அதிகாரங்கள் குழுவின் தலைவர் ஜவகர்லால் நேரு, சபைத்தலைவர் இராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு எழுதியதாக ஆரம்பிக்கும் அறிக்கையை இங்கே பார்ப்பது அவசியம். ஏனெனில், ஊசற்குண்டு மறுமுனைக்கு நகர்த்தப்பட்ட நிகழ்வுக்கான அத்தாட்சி நேருவின் இந்த அறிக்கையே!

‘ஏப்ரல் 28, 1947 அன்று, எங்களின் முதல் அறிக்கையை எங்கள் குழுவின் சார்பாக உயர்திரு. சர். என். கோபாலசாமி ஐயங்கார், அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபைக்கு அளித்தார். அரசியல் சூழ்நிலைகளில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள், (இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை) குழுவின் பரிந்துரைகளைப் பாதிக்கக்கூடியனவாக உள்ளதென்பதால், மேற்கொண்டு கூடுதல் அறிக்கையைப் பின்னர் வேறொரு தேதியில் சமர்பிப்பதாக அனுமதி கேட்கப்பட்டிருந்தது. சபையும் அனுமதி அளித்திருந்தது.

அப்போதிலிருந்து முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. நாட்டின் ஒரு பகுதியினர் பிரிந்து தனியொரு நாட்டை அமைக்கின்றனர். எனவே, மே 16 (1946) அறிக்கையில் முன்வைத்திருந்த திட்டத்தின்படி (மந்திரிசபைத் தூதுக்குழுத் திட்டம்) வேலைசெய்து வந்த இக்குழு, பல்வேறு அடிப்படையான விஷயங்களில், இனி அத்திட்டத்திற்குக் கட்டுப்படாது. குறிப்பாக, ஒன்றிய அரசுக்கு ஒதுக்கப்படவேண்டிய அதிகாரங்கள் குறித்து விதிக்கப்பட்டிருந்த வரம்புக்குகளுக்கு நாங்கள் இனி கட்டுப்பட வேண்டியதில்லை.

இவ்விவகாரத்தில் எவ்விதச் சிரமங்களும் இன்றி இம்முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். மந்திரிசபைத் தூதுக்குழுத் திட்டத்தில் சொல்லப்பட்டதுபோல ஒன்றிய அரசின் அதிகாரங்கள்மீது விதிக்கப்பட்ட கடுமையான வரம்புகளை அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபை ஏற்றுக்கொண்டதற்கு முக்கிய காரணம், முஸ்லிம் லீக்கைத் (சபையில்) தக்கவைப்பதற்காகவே. ஆனால் தற்போது பிரிவினை உறுதியாகிவிட்டதால், அமைதிக்கு நிலைநாட்ட முடியாத, பொதுப் பிரச்னைகளில் ஒருங்கிணைந்து ஒத்துழைக்க இயலாத, உலக அரங்கில் நாட்டுக்காகத் துணிவுடன் பேசமுடியாத, வலிமை குறைந்த ஒன்றிய அரசினைப் படைப்பது நாட்டின் நலனுக்குத் தீங்கு விளைவிப்பதாக அமையும் என்று ஒருமனதாகக் கருதுகிறோம்.

அதே நேரம், பல முக்கியமான அதிகாரங்கள் மாநிலங்களிடம் மட்டுமே இருக்கவேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஒற்றையாட்சி நாட்டுக்கான அடிப்படைகளைக் கொண்டு நம் நாட்டுக்கு அரசியலமைப்புச் சட்டம் எழுதுவதென்பது அரசியல்ரீதியிலும், நிர்வாகரீதியிலும் பிற்போக்குத்தனமான நடவடிக்கையாகவே இருக்கும்.

எனவே அதன்படி நாங்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். ஒன்றிய அரசியலமைப்புக் குழுவும் அதே முடிவுக்கு வந்தடைந்துள்ளது.

அது என்னவெனில், நம் அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பு ‘வலிமைவாய்ந்த ஒன்றிய அரசுகொண்ட கூட்டாட்சி’யாக இருக்கவேண்டும்.

‘ஒன்றிய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையே அதிகாரப் பகிர்வைப் பொறுத்தவரை, 1935ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தில் இருப்பதுபோலவே, ஒன்றியப் பட்டியல், மாநிலப் பட்டியல் மற்றும் பொதுப் பட்டியல் என மூன்று விரிவான பட்டியல்களை நாம் அமைக்கவேண்டும்… மேலும், எஞ்சிய அதிகாரங்கள் யாவும் ஒன்றிய அரசிடம் இருக்கவேண்டும் என்றும் நாங்கள் நினைக்கிறோம்…’ என்கிறது நேரு தலைமை வகித்த ‘ஒன்றிய அதிகாரங்கள்’ குழுவின் இரண்டாவது அறிக்கை.

ஆகஸ்ட் 20,1947 அன்று, இந்த அறிக்கை அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையில் அளிக்கப்பட்டது. அதன் மீது விவாதத்தைத் தொடங்கியவர், ஒன்றிய அதிகாரங்கள் குழுவின் உறுப்பினர் சர். என். கோபாலசாமி ஐயங்கார், அறிக்கை குறித்துப் பேசிய அவர், ‘…அமைச்சரவைத் தூதுக் குழுத் திட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டதால், நாமே நமக்கிட்டுக் கொண்ட விலங்கினை இப்போது (இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு) உடைத்துவிட்டோம். எந்தளவுக்கு முடியுமோ முடிந்த அளவுக்கு ஒன்றிய அரசை வலுவானதாக ஆக்கக் குழு முடிவு செய்துள்ளது. இதுபோக, மாநிலங்களுக்கு அளிக்கப்படும் பல வகையான அதிகாரங்களில் அவை விரும்பும் விதத்தில் சுதந்திரமாகச் செயல்படலாம்’ என்றார்.

எனவே, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் உடனடி விளைவாக அமைந்தது இதுதான். ‘வலிமைகுன்றிய ஒன்றிய அரசுகொண்ட கூட்டாட்சி’ என்ற இடத்திலிருந்து ‘வலிமைமிகுந்த ஒன்றிய அரசுகொண்ட கூட்டாட்சி’யாக இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் வகுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இப்படி உடனடியாக மறுமுனைக்கு ஊசற்குண்டு நகர முக்கிய காரணம், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையில் இல்லாமல் போனதுதான். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளின் அரசியலமைப்புச் சட்டம் உருவானபோது, மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என்று ஒரு சாராரும், மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என இன்னொரு சாராரும் விவாதித்தனர் எனச் சட்டவல்லுநர் கிரான்வில் ஆஸ்டின் கூறுகிறார். அதன் விளைவாக இரு சாராருக்கும் இடையிலான சமரச ஏற்பாடாக அந்நாடுகளின் அரசியலமைப்புச் சட்டம் அமைந்தது.

மாநிலங்களுக்கு அதிகப்படியான அதிகாரமும் தன்னாட்சி தன்மையும் வேண்டும் என்று இடைவிடாது கேட்டு போராடி வந்தவர்கள் இஸ்லாமியர்கள். ஏனெனில், இஸ்லாமிய மக்கள்தொகை சில மாகாணங்களில் மட்டுமே பெரும்பான்மையாக இருந்தது. எனவே, பெரும்பான்மை ஹிந்துக்களின் ஒடுக்குதலுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு மாகாணத்துக்கு அதிக அதிகாரம் இருப்பது அவசியம் என்று அவர்கள் நம்பினர். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையால், முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையில் கலந்துகொள்ளவில்லை. எனவே, ஒரு பக்க ஆட்டமாக மாறியது அரசியலமைப்பு உருவாக்கம்.

மாநிலங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று கேட்பவர்கள் யாரும் இல்லாத காரணத்தால், வலிமைமிகுந்த ஒன்றிய அரசுகொண்ட கூட்டாட்சியாக இந்தியாவை அமைத்தது அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபை. மாநிலங்களின் அதிகாரங்கள் வெட்டப்பட்டதற்கு அப்போதும் சில எதிர்ப்புகள் வந்தன. ஆனால், அவை கூச்சலில் கரைந்த கூக்குரல்கள் ஆகின. ஏனெனில், முஸ்லீம் லீக் சபையில் இருந்து விலகும்முன் 69 சதவிகிதமாக இருந்த காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை, முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் விலகியதும் 82 சதவிகிதமானது.

இதனால்தான் ‘ஒரே கட்சி உள்ள நாட்டில், ஒரே கட்சியினர் நிறைந்த சபையாக அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபை இருந்தது. அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபைதான் காங்கிரஸ்,
காங்கிரஸ்தான் இந்தியா’ என்கிற நிலையும் இருந்தது.

காங்கிரஸ்தான் அரசாங்கத்தை இயக்கும் கட்சயும்கூட’ என்கிறார் கிரான்வில் ஆஸ்டின்.

அரசியலமைப்புச் சட்டம் எழுதப்படுவதற்கு ஆலோசகராக பி.என்.ராவ் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையின் உறுப்பினர் அல்ல. ஆனால், இவர்தான் அரசியலமைப்புச் சட்டம் எழுதப்படுவதற்கு அடித்தளம் இட்டவர். ஏற்கெனவே அரசியலமைப்புச் சட்டம் இயற்றிய பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டுச் சட்ட வல்லுநர்களைச் சந்தித்தார்.

உலகில் உள்ள அரசியலமைப்புச் சட்டங்களில் இருந்த சிறந்த கூறுகளை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்ப்பதில் பெரும்பங்காற்றினார். 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்தியாவின் முதல் அரசியலமைப்புச் சட்ட வரைவு எழுதும் வேலையில் இறங்கினார் பி.என்.ராவ். இவருக்கு உதவியாக இருந்தவர்கள், எஸ்.என்.முகர்ஜீ மற்றும் அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையின் துணை செயலாளர் ஆகியோர்.

ஏற்கனெவே சொன்னதுபோல, அரசியலமைப்புச் சட்டத்தை எழுதுவதற்கு உதவிபுரிய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒன்றிய அதிகாரங்கள் குழு, ஒன்றிய மற்றும் மாகாண அரசியலமைப்புக்குழு ஆகியவற்றோடு அடிப்படை உரிமைகள் குறித்தான ஆலோசனைக்குழு மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்தான ஆலோசனைக்குழு ஆகியவையும் அமைக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட குழுக்கள் தங்கள் அறிக்கையைச் சபையில் அளித்தனர்.

இந்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டுதான் சுதந்திர இந்தியாவின் முதல் அரசியலமைப்புச் சட்ட வரைவைத் தயார் செய்தார் பி.என்.ராவ். இதற்கிடையில் ஆகஸ்ட் 29,1947 அன்று டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் வரைவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. பி.என்.ராவ் தயார் செய்த அரசியலமைப்புச் சட்ட வரைவு, 1947ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அம்பேத்கர் தலைமையிலான வரைவுக்குழுவிடம் அளிக்கப்பட்டது. ராவ் அவர்கள் அளித்த வரைவில் 240 சரத்துகள், 13 அட்டவணைகள் இருந்தன.

அக்டோபர் 27,1947 முதல் பிப்ரவரி 13,1948 வரை தினமும் கூடிய வரைவுக்குழு, ராவ் அளித்த வரைவுச் சட்டத்திலுள்ள சரத்துகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. அதன் விளைவாக வரைவுக்குழு, புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவு ஒன்றைத் தயார் செய்து முடித்தது. பிப்ரவரி 21,1948 அன்று அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையின் தலைவர் இராஜேந்திர பிரசாத் அவர்களிடம் அளிக்கப்பட்டது.

அதனோடு வரைவுக்குழுவின் தலைவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், இராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் அதிகாரப்பகிர்வு குறித்து அவர் எழுதியதை இங்கே கவனித்தல் அவசியம்.

‘ஒன்றியத்துக்கும் மாகாணங்களுக்கும் இடையேயான அதிகாரப்பகிர்வு குறித்தான சரத்துகளில் நாங்கள் பெரியளவில் எவ்வித மாற்றங்களையும் செய்யவில்லை. ஒன்றிய அதிகாரங்கள் குழு பரிந்துரைத்தவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளோம்’ என்று கூறியுள்ளார்.

ராவ் அவர்களின் வரைவும் சரி, அம்பேத்கர் தலைமையிலான வரைவுக்குழுவின் வரைவும் சரி, அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபை நியமித்த குழுக்களின் அறிக்கைகளை அடிப்படையாகக்கொண்டதே! இந்தக் குழுக்கள் காங்கிரஸால் அமைக்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

‘அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையில் இப்படிப்பட்ட முடிவுகளை எடுப்பது மற்றும் அரசியலமைப்பை எழுதுவதற்காகக் காங்கிரஸ் தேர்ந்தெடுக்கும் நபர்களை மட்டுமே கொண்ட கமிட்டிகளை அமைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையை வெறும் குறுங்குழுவாக காங்கிரஸ் மாற்றிவிட்டது…’ என கொள்கை நோக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, முஸ்லிம் லீக் கூறியவை இங்கே நினைவில்கொள்ள வேண்டியவை.

பிப்ரவரி 21, 1948 அன்று இராஜேந்திர பிரசாத் அவர்களிடம் அளிக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்ட வரைவு, பிப்ரவரி 26, 1948 அன்று நாட்டு மக்கள் அனைவரின் பார்வைக்காகவும் வெளியிடப்பட்டது. அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் வரைவின் நகல் அளிக்கப்பட்டது. உறுப்பினர்களுக்கு அரசியலமைப்புச் சட்ட வரைவின் மேல் ஏதேனும் விமர்சனமோ அல்லது ஆலோசனைகளோ இருந்தால் அவற்றை மார்ச் 22, 1948க்கு முன் வழங்கவேண்டுமென அறிவிக்கப்பட்டது. மாகாணச் சட்டமன்றங்கள், மாகாண அரசுகள், இந்தியா அரசின் அமைச்சரவை, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் ஆகியவற்றுக்கும் வரைவின் நகல் அனுப்பப்பட்டு கருத்துகளைக் கேட்டனர்.

மார்ச் 22 வரை வந்தடைந்த கருத்துகளையும் ஆலோசனைகளையும் பரிசீலனை செய்வதற்காக மார்ச் 23,24,27 ஆகிய தேதிகளில் கூடியது வரைவுக்குழு. அவற்றை ஆய்ந்து பெரும்பாலான கருத்துகள் பற்றிய குறிப்புகளைத் தயார் செய்தார் பி.என். ராவ். அதன்பிறகு, ஒன்றிய அதிகாரங்கள் குழு, ஒன்றிய அரசியலமைப்புக் குழு மற்றும் மாகாண அரசியலமைப்புக் குழு ஆகிய குழுக்களில் பங்குவகித்த பெரும்பாலான உறுப்பினர்கள் அடங்கிய சிறப்புக்குழு ஒன்றை நியமித்தார் அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையின் தலைவர் இராஜேந்திர பிரசாத்.

ஏப்ரல் 10 மற்றும் 11, 1948 ஆகிய தேதிகளில் கூடிய சிறப்புக்குழு மேலும் சில பரிந்துரைகளை வழங்கியது. அதனைத்தொடர்ந்து, மாகாணச் சட்டமன்றங்கள், மாகாண அரசுகள், இந்தியா அரசின் அமைச்சரவை மற்றும் பிற அரசு நிறுவனங்கள், அரச சாரா நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடமும் கருத்துக்கேட்பு நீட்டிக்கப்பட்டது.

அக்டோபர் 18,19 மற்றும் 20,1948 ஆகிய தேதிகளில் மீண்டும் கூடிய வரைவுக்குழு அதுவரை வந்துசேர்ந்த கருத்துகளையும் விமர்சனங்களையும் மீண்டும் பரிசீலனை செய்தது. அத்தோடு சிறப்புக்குழு பரிந்துரைத்தவற்றையும் ஆய்வுக்குட்படுத்தியது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு எந்தெந்தச் சரத்துகளில் திருத்தம் கோரப்பட்டுள்ளதோ அச்சரத்துகளின் கீழே கோரப்பட்டுள்ள திருத்தங்களையும் சேர்த்து அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவு மறுபதிப்பு செயப்பட்டது.

அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையின் விவாதத்துக்கு வரைவுக்குழு வைக்கப்படும்போது உறுப்பினர்கள் விவாதம் செய்ய ஏதுவாக இருக்கவேண்டுமென்ற காரணத்தால், இந்த மறுபதிப்பு செய்யப்பட்ட வரைவின் நகல் சபையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்டது.

கடைசியாக நவம்பர் 4, 1948 அன்று வரைவுக்குழுவால் இறுதி செய்யப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவு, அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையின் முன்பு வரைவுக்குழுவின் தலைவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு அன்றே விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடந்த அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையின் விவாதங்கள் மிக முக்கியமானவை. ஏனெனில் ஏற்கனவே சொன்னதுபோல, ‘வலிமைமிகுந்த ஒன்றிய அரசு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது’ என்று சில குரல்கள் சபையில் பேசின. அக்குரல்களின் எண்ணிக்கை குறைவு என்ற போதிலும் மிகத்தெளிவாகவே அவை ஒலித்தன.

அரசியலமைப்புச் சட்ட வரைவில், ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான அதிகாரப்பகிர்வு குறித்தான சரத்துகள் எவ்வாறு மாநிலங்களை வஞ்சிப்பதாக அமையும் எனச் சிலர் பேசினர். இவற்றைப் படிப்பது கூட்டாட்சி தத்துவத்திலிருந்து இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்தளவு விலகியுள்ளது என்பதைக் காட்டிவிடும்.

ஆனால் அவற்றைப் படிக்கும் முன்னர் இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ன மாதிரியான அரசாங்க அமைப்பை முன்வைத்தது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தைச் சபையில் விவாதத்துக்குக் கொண்டு வந்தபோது அவர் ஆற்றிய உரையின் வாயிலாகவே இந்தியாவின் அரசாங்க அமைப்பை அறிந்துகொள்ளலாம்.

அரசியலமைப்புச் சட்டம் படிக்கும் மாணவர் ஒருவரின் கையில் அரசியலமைப்புச் சட்டம் ஒன்றின் நகலைக் கொடுத்தால், அவர் நிச்சயமாக இரண்டு கேள்விகள் கேட்பார். முதலாவதாக, அரசியலமைப்புச் சட்டத்தில் அரசாங்கத்தின் வடிவம் என்னவாக அமையும்? இரண்டாவதாக, அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பு என்ன? ஒவ்வொரு அரசியலமைப்பும் கையாள வேண்டிய இரண்டு முக்கியமான கேள்விகள் இவை. முதல் கேள்வியுடன் தொடங்குகிறேன்.

இந்திய ஒன்றியத்தின் தலைவராக, வரைவு அரசியலமைப்பில் அமர்த்தப்பட்டிருக்கும் நிர்வாகி, ‘ஒன்றியத்தின் குடியரசுத் தலைவர்’ என்று அழைக்கப்படுவார். இந்த நிர்வாகியின் பெயர் அமெரிக்கக் குடியரசுத் தலைவரை நினைவுபடுத்துவதாக இருக்கும்.

ஆனால், இங்கே பெயர்களில் இருக்கும் ஒற்றுமையைத் தாண்டி அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள அரசாங்க வடிவத்திற்கும், நம் வரைவு அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் முன்மொழியப்பட்ட அரசாங்க வடிவத்திற்கும் இடையே வேறெந்த மாதிரியான பொதுவான அம்சங்களும் இல்லை. அமெரிக்க அரசாங்கத்தின் வடிவம் குடியரசுத் தலைவர் முறை அரசாங்கம் என்று அழைக்கப்படுகிறது. நம் அரசியலமைப்புச் சட்ட வரைவு முன்மொழிவது நாடாளுமன்ற முறை அரசாங்கம். இரண்டும் அடிப்படையில் வெவ்வேறானவை.

அமெரிக்காவின் குடியரசுத்தலைவர் முறையின் கீழ், நாட்டு நிர்வாகத்தின் முதன்மைத் தலைவராக குடியரசுத்தலைவர் இருப்பார். நாட்டின் மொத்த நிர்வாகமும் அவர் வசமே இருக்கும். நம் அரசியலமைப்புச் சட்ட வரைவில், குடியரசுத்தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள இடமென்பது ஆங்கிலேய அரசியலமைப்பில் மன்னருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தை ஒத்தது. அவர் அரசின் தலைவர், ஆனால் நிர்வாகத்தின் தலைவர் அல்ல. அவர் தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர், ஆனால் தேசத்தை ஆள்பவரல்ல. அவர் தேசத்தின் அடையாளம். நிர்வாகத்தில் அவரது இடமென்பது நாட்டின் முடிவுகளை வெளியிட்டு தெரியப்படுத்தும் முத்திரையின் மேலுள்ள அலங்காரச் சாதனம் போன்றது.

அமெரிக்க அரசியலமைப்பில், குடியரசுத் தலைவரின்கீழ் பல்வேறு துறைகளுக்கு பொறுப்பேற்றுக்கொண்ட செயலாளர்கள் இருப்பர். அதுபோல, இந்திய ஒன்றியக் குடியரசுத் தலைவரின்கீழ் பல்வேறு நிர்வாகத் துறைகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர்கள் இருப்பர். இங்கே மீண்டும் இரண்டுக்கும் இடையே ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது.

அமெரிக்க குடியரசுத்தலைவர் தனக்கு கீழ் உள்ள செயலாளர்களின் ஆலோசனைகளின்படியே செயல்பட வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால், இந்திய ஒன்றியத்தின் குடியரசுத் தலைவர் என்பவர் பொதுவாக அமைச்சர்களின் ஆலோசனைக்குக் கட்டுப்பட்டவர். அமைச்சர்களின் ஆலோசனைக்கு எதிராகவோ குடியரசுத் தலைவரால் எதுவும் செய்யமுடியாது, அதேபோல் அமைச்சர்களின் ஆலோசனையின்றியும் குடியரசுத் தலைவரால் எதுவும் செய்யமுடியாது. அமெரிக்கக் குடியரசுத்தலைவர் தனக்கு கீழ் உள்ள செயலாளர்களை எந்நேரமும் பதவி நீக்கம் செய்ய அதிகாரம் படைத்தவர். ஆனால், இந்திய ஒன்றியத்தின் அமைச்சர் ஒருவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கும்போது, அவரைப் பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் இந்திய ஒன்றியத்தின் குடியரசுத் தலைவருக்குக் கிடையாது.

அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் முறையானது நிர்வாகத்துறையையும் சட்டமியற்றும் துறையையும் முற்றிலுமாகப் பிரித்துவைக்கும் கோட்பாட்டின் அடிப்படையிலானது, அதனால் (நிர்வாகிகளான) குடியரசுத் தலைவரும் அவரின் செயலாளர்களும், (சட்டமியற்றும் பணியான) நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கமுடியாது. ஆனால், நம் அரசியலமைப்புச் சட்ட வரைவு இந்தக் கோட்பாட்டை அங்கீகரிக்கவில்லை. இந்திய ஒன்றியத்தின் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அமைச்சர்களாக முடியும்.

மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருப்பதைப் போன்று, நாடாளுமன்றத்தில் அமரவும், விவாதங்களில் பங்கேற்கவும், அதன் நடவடிக்கைகள் மீது வாக்களிக்கவும் அமைச்சர்களுக்கும் உரிமை உண்டு. இரண்டு விதமான அரசாங்கங்களும் நிச்சயமாக ஜனநாயகமானவைதான். இரண்டுக்கும் இடையில் ஒன்றைத் தேர்வு செய்வது எளிதன்று.

ஒரு ஜனநாயக நிர்வாகம் இரு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவேண்டும்.

i) நிலைத்த தன்மைகொண்ட நிர்வாகமாக இருத்தல் வேண்டும்.

ii) பொறுப்புடைய நிர்வாகமாக இருத்தல் வேண்டும்.

ஆனால் இவ்விரண்டையும் சம அளவில் உறுதிசெய்யக்கூடிய ஒரு முறையை இதுவரை வகுக்க இயலவில்லை.

நிலைத்த தன்மைகொண்ட முறையை நாம் தேர்ந்தெடுத்தால் அது குறைந்த அளவில் பொறுப்பை ஏற்கும் நிர்வாகமாக இருக்கும். இல்லையெனில், அதிகளவில் பொறுப்பை ஏற்கும் நிர்வாக முறையை தேர்ந்தெடுத்தால் அதன் நிலைத்த தன்மை குறைவானதாக இருக்கும். அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்தின் முறை அதிகளவில் நிலைத்த தன்மையைத் தருகிறது, ஆனால் குறைவான பொறுப்புடைய முறையாகவே இருக்கிறது. மறுபக்கம், பிரிட்டிஷ் முறை என்பது அதிகளவில் பொறுப்புடைய முறையாக இருந்தாலும், நிலைத்த தன்மையென்பது குறைவாகவே உள்ளது.

அமெரிக்காவின் நிர்வாகத்துறை என்பது நாடாளுமன்றத்தை சாராத ஒன்று, ஏனெனில் அதன் நிர்வாகத்துறை நிலைத்திருக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு அவசியம் இல்லை. ஆனால் பிரிட்டிஷ் முறை நாடாளுமன்றத்தைச் சார்ந்திருக்கும் நிர்வாகத்தைக்கொண்டது, ஏனெனில் அதன் நிர்வாகம் நிலைத்திருக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு அவசியம்.

நாடாளுமன்றத்தைச் சாராத நிர்வாகமாக அமெரிக்கா இருப்பதால், அமெரிக்க நாடாளுமன்றத்தால் அதன் நிர்வாகத்துறையைப் பதவி நீக்கம் செய்யமுடியாது. ஆனால், மறுபுறம் நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையினரின் ஆதரவை இழக்கும்பட்சத்தில் நாடாளுமன்ற அரசாங்கம் பதவி விலக வேண்டும். பொறுப்பு என்ற கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும்போது, நாடாளுமன்றத்தைச் சாராத நிர்வாகத்தைவிட நாடாளுமன்றத்தைச் சார்ந்திருக்கும் நிர்வாக முறை கூடுதல் பொறுப்புடைய நிர்வாகமாக உள்ளது… எனவே, அரசியலமைப்புச் சட்ட வரைவு நாடாளுமன்ற முறை நிர்வாகத்தைப் பரிந்துரைப்பதன் மூலம், அதிக நிலைத்த தன்மையைக் காட்டிலும் அதிகளவு பொறுப்பேற்கும் தன்மையைத் தேர்ந்தெடுக்கிறது.

இதுவரை அரசாங்க முறை குறித்து விளக்கினேன். இப்போது அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பு குறித்து விளக்க இருக்கிறேன்.

இரண்டு விதமான அரசியலமைப்புக் கட்டமைப்புகள் மட்டுமே வரலாற்றில் பிரதானமானவை. ஒன்று ஒற்றையாட்சி முறை மற்றொன்று கூட்டாட்சி முறை.

ஒற்றையாட்சி முறையின் இரு அடிப்படையான அம்சங்கள்:

i) மத்திய அரசின் மேலாதிக்கம்
ii) இறைமை கொண்ட பிற அரசுகள் ஏதும் இருக்காது.

அதற்கு அப்படியே மாறாக, கூட்டாட்சி அரசியலமைப்பின் அம்சங்களாவன:

i) மத்திய அரசு மற்றும் பிற அரசுகள் (மாநில அரசுகள்) ஆகியவை ஒரே நேரத்தில் இயங்கி வரும்.
ii) மத்திய அரசும், மாநில அரசுகளும் அவற்றிற்கு உட்பட்ட அதிகாரங்களில் இறைமை பெற்று விளங்குவது.

வேறு சொற்களில் சொல்வதானால், இரு அரசுகளை (மத்திய அரசு, மாநில அரசுகள்) நிறுவுதல். நம் வரைவு அரசியலமைப்புச் சட்டமானது, இரு அரசுகளை நிறுவுவதால் கூட்டாட்சி அரசாகிறது. முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் இரு அரசுகள் என்பன:

i) மத்தியில் ஒன்றிய அரசு
ii) ஒவ்வொரு மாநில எல்லைகளுக்கும் ஒரு மாநில அரசு.

இரண்டு அரசுகளும் அதற்கு அரசியலமைப்பால் கொடுக்கப்பட்ட அதிகாரங்களில் இறைமை பெற்றவையாக விளங்கும். இந்த இரட்டை அரசாங்க அமைப்பு என்பது அமெரிக்க அரசியலமைப்பை ஒத்ததாக இருக்கிறது. அமெரிக்க அரசியலமைப்பும் இரு அரசுகளைக் கொண்டது, ஒன்று மத்திய அரசு (Federal Government), மற்றொன்று பிற மாநில அரசுகள். அதேபோல், நம் வரைவு அரசியலமைப்பு, ஒன்றிய அரசு (Union Government) மற்றும் மாநில அரசுகளைக் கொண்டுள்ளது. அமெரிக்க அரசியலமைப்பில், மத்திய அரசு என்பது வெறும் மாநிலங்களின் கூட்டமைப்பு அல்ல, அதேபோல் மாநிலங்கள் என்பன மத்திய அரசின் முகவர்களோ, வெறும் நிர்வாக உறுப்புகளோ அல்ல.

இந்திய அரசியலமைப்பு என முன்மொழியப்பட்டிருக்கும் வரைவு அரசியலமைப்பும் வெறும் மாநிலங்களின் கூட்டமைப்பு அல்ல. அதேபோல் மாநிலங்கள் என்பன ஒன்றிய அரசின் முகர்வர்களோ, வெறும் நிர்வாக உறுப்புகளோ அல்ல. இத்துடன் இந்திய அரசியலமைப்புக்கும் அமெரிக்க அரசியலமைப்புக்கும் இருக்கும் ஒற்றுமைகள் நிறைவுறுகின்றன. இவ்விரண்டுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமைகளைக் காட்டிலும் இவற்றை வேறுபடுத்திக் காட்டும் வெளிப்படையான வித்தியாசங்கள்தான் மிகவும் அடிப்படையானவை.

அமெரிக்கக் கூட்டாட்சிக்கும் இந்தியக் கூட்டாட்சிக்கும் முக்கியமாக இரு வித்தியாசங்கள் உள்ளன.

முதலாவது வித்தியாசம், அமெரிக்காவில் இரு அரசு முறையோடு இரண்டு குடியுரிமை வழங்கப்படும் முறை உள்ளது. அமெரிக்காவில் அமெரிக்கக் குடியுரிமை உண்டு. அங்குள்ள மாநிலத்துக்கும் குடியுரிமை உண்டு… ஆனால் முன்மொழியப்பட்டிருக்கும் இந்திய அரசியலமைப்பில் இரு அரசு முறையுடையது என்றாலும் ஒரே ஒரு குடியுரிமை மட்டுமே. அது இந்தியக் குடியுரிமை மட்டுமே. மாநிலக் குடியுரிமை என்று ஏதும் இல்லை. குடியுரிமையைப் பொறுத்தவரை, எந்த மாநிலத்தில் வசிப்பவராக இருந்தாலும் அனைத்து இந்தியர்களுக்கும் அதே உரிமைகள்தான்.

இரண்டவாது வித்தியாசம், அமெரிக்காவில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் அரசியலமைப்புகள் தளர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளன… (அமெரிக்காவில் மத்திய அரசின் ஒர் அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே இல்லை. அமெரிக்க மாநிலங்கள் தங்கள் மாநிலத்துக்கெனத் தனித்தனி அரசியலமைப்புச் சட்டம் இயற்றிக்கொள்ளலாம். ஆனால், மத்திய அரசு அதன் அரசியலமைப்பு மூலம் தரும் உரிமையை மாநில அரசின் அரசியலமைப்பு பறித்துக்கொள்ள முடியாது.)

ஆனால், முன்மொழிப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பில் அப்படி இல்லை. மாநில அரசுகள் தங்களுக்கென தனி அரசியலமைப்பை உருவாக்கிக்கொள்ள இயலாது. ஒன்றியத்துக்கும் மாநிலங்களுக்கும் ஒரே அரசியலமைப்புச் சட்டம்தான். அதற்குள்ளாக தான் இரண்டும் செயல்பட வேண்டும். அதைத்தாண்டி இரண்டும் செயல்பட முடியாது.

அமெரிக்க அரசியலமைப்புக்கும் முன்மொழியப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்புக்குமான வித்தியாசங்களைப் பார்த்தோம். இப்போது, முன்மொழியப்பட்டிருக்கும் இந்தியக் கூட்டாட்சியின் வேறொரு சிறப்பு அம்சத்தைக் காணலாம். இவ்வம்சம் இந்தியக் கூட்டாட்சியை அனைத்துக் கூட்டாட்சிகளில் இருந்தும் வேறுபடுத்திக் காட்டும் ஒன்று.

அமெரிக்கா உட்பட அனைத்துக் கூட்டாட்சிகளும், அதன் தன்மையில் மிகவும் கெட்டியான கூட்டாட்சியாக உள்ளது. எந்தச் சூழ்நிலையிலும், அதன் கட்டமைப்பை மாற்ற முடியாது. என்றுமே, ஒற்றையாட்சி தன்மைகொண்டதாக ஆகாது. ஆனால் நம் வரைவு அரசியலமைப்பு, நேரம், சூழ்நிலை, மற்றும் தேவை ஆகியவற்றுக்கேற்ப ஒற்றையாட்சி கொண்டதாகவும் இருக்கும், கூட்டாட்சியாகவும் இருக்கும்.

சாதாரண நேரங்களில், கூட்டாட்சியாகச் செயல்படும்விதம் நம் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் போர் நேரங்களில் ஒற்றையாட்சி முறையில் செயல்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சரத்து 275ன் கீழ் குடியரசுத் தலைவர் ஒரு ஆணை பிறப்பித்தால், மொத்த காட்சியும் மாறி அரசு ஒற்றையாட்சியாக மாறிவிடும். (வரைவு அரசியலமைப்பில் இருந்த சரத்து 275, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சரத்து 352ஆக உள்ளது.)

ஒன்றிய அரசு அத்தகைய ஆணையின்கீழ் தேவைப்பட்டால்,

i) மாநிலங்கள் மட்டும் சட்டம் இயற்றலாம் என்று இருக்கிற, மாநிலப் பட்டியலில் உள்ள விவகாரங்கள் குறித்துச் சட்டம் இயற்றும் அதிகாரத்தை ஒன்றிய அரசு, அதாவது நாடாளுமன்றம் பெறலாம்.

ii) மாநில அரசு தன் நிர்வாகத்தை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்ற கட்டளைகளைப் பிறப்பிக்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசு பெறலாம்.

iii) மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட காரியங்களைக்கூட ஒன்றிய அரசின் அதிகாரிகளைக் கொண்டு நிறைவேற்றும் வகையில், ஒன்றிய அரசு, அதாவது நாடாளுமன்றம் சட்டம் இயற்றிக்கொள்ளலாம்.

iv) நிதி குறித்த அரசியலமைப்புச் சரத்துகளைத் தற்காலிகமாக ரத்து செய்யும் அதிகாரம்.

(அதாவது, மாநிலங்களின் நிதி ஆதாரம் முழுவதும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும். – ஆசிரியர் குறிப்பு)

இப்படியாகத் தன்னை ஒற்றையாட்சியாக மாற்றிக்கொள்ளும் அம்சம் எந்தவொரு கூட்டாட்சிக்கும் கிடையாது…’ என்பதாகத் தன்னுடைய நீண்ட உரையில் குறிப்பிட்டிருப்பார் டாக்டர் அம்பேத்கர்.

அவரின் உரையில் கவனிக்கவேண்டிய விஷயங்கள்:

i) இந்தியாவில் குடியரசுத் தலைவர் என்பவர் இந்திய ஒன்றியத்தின் தலைவராக இருப்பினும், அவர் ஒன்றிய நிர்வாகத்தின் அலங்காரத் தலைவர் மட்டுமே. ஒன்றிய அரசாங்கத்தின் அமைச்சரவை சொல்லும் ஆலோசனையை அப்படியே நிறைவேற்றுவதுதான் குடியரசுத் தலைவர் செய்யும் வேலை.

ii) உலகத்தில் எந்தக் கூட்டாட்சி நாட்டின் அரசியலமைப்பிலும் இல்லாத சிறப்பம்சம், ஒற்றையாட்சியாக நாட்டை மாற்றிவிடக்கூடிய வல்லமை இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உண்டு. குடியரசுத் தலைவர் சரத்து 352ன்கீழ் ஒர் ஆணையைப் பிறப்பிக்கும்பட்சத்தில் கூட்டாட்சி நாடாக உள்ள இந்தியாவை ஒற்றையாட்சி நாடாக மாற்றிவிடலாம்.

மேற்சொன்ன இரு விஷயங்களையும் இணைத்துப் பார்க்கும்போது, நிர்வாகத்தின் உண்மையான தலைவராக இருப்பவர் அமைச்சரவையின் தலைவரான இந்தியா நாட்டின் பிரதமர்தான். எனவே, இந்தியப் பிரதமர்தான் இந்திய ஒன்றிய நிர்வாகத்தின் உண்மையான தலைவர். எனவே, ஒற்றையாட்சி நாடாக இந்தியாவை மாற்றும் அதிகாரத்தை ஒன்றிய அரசிடம், அதாவது இந்தியப் பிரதமரிடம் ஒப்படைக்கிறது சரத்து 352.

முதலில், சரத்து 352ன் கீழ் இப்படியான ஒரு அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு ஏன் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று பார்ப்பது அவசியம். நெருக்கடி நிலை ஏற்படும்போது பயன்படுத்தவே இத்தகைய அதிகாரம்.

நெருக்கடி நிலை என்றால், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அல்லது இந்தியாவின் ஒரு பகுதியின் பாதுகாப்பிற்கு: போர், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, உள்நாட்டுக் கலவரம் ஆகிய மூன்று காரணங்களினால் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால், டாக்டர்.அம்பேத்கரின் உரையில் கூறப்பட்டுள்ளது போன்ற 4 வகையான அதிகாரங்களை, ஒரே ஒரு ஆணையைக் குடியரசுத் தலைவர் பிறப்பிப்பதன்மூலம், ஒன்றிய அரசு பெறமுடியும். அதன்மூலமாக ஒரு மாநிலம் அல்லது அனைத்து மாநிலங்களையும்கூட தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் ஒன்றிய அரசு கொண்டுவரலாம்.

நெருக்கடியான நேரத்தில் பயன்படுத்துவதற்கு தானே இத்தகைய அதிகாரம், அதில் என்ன தவறு? என்று கேட்டால், அதில் ஒரு பிரச்னை உள்ளது. இந்த நெருக்கடி நிலை என்பது உண்மையில் நிலவுகிறதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் முழுக்க முழுக்க குடியரசுத் தலைவரிடமே உள்ளது.

போர் அல்லது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு அல்லது உள்நாட்டுக் குழப்பம் ஆகிய காரணங்களில் ஏதேனும் ஒரு காரணத்தால் இந்தியாவின் பாதுகாப்போ அல்லது இந்தியாவின் ஒரு பகுதியின் பாதுகாப்போ ‘கடுமையான நெருக்கடி மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது’ என்று குடியரசுத் தலைவர் தான் ‘திருப்தி அடைந்தால்’ போதுமானது. அவர் நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறதென அறிவிப்பு செய்து, இந்தியா முழுவதையும் ஒற்றையாட்சி நாடாக மாற்றிவிடலாம்.

நன்றாக கவனிக்கவும், மேற்சொன்ன மூன்று காரணங்களில் ஒன்று நடந்துவிட்ட பின்னரே நெருக்கடி நிலையை அறிவிக்க வேண்டும் என்றல்ல. அவை இந்தியாவையோ அதன் ஒரு பகுதியையோ அச்சுறுத்துவதாக நிலைமை இருந்தாலே போதுமானது. குடியரசுத் தலைவர் தான் ‘திருப்தி அடைந்தால்’ மட்டுமே போதுமானது.

குடியரசுத் தலைவர் என்பவர் அமைச்சரவையின் ஆலோசனையின்படி நடக்கவேண்டியவர். ஆகையால், இந்த அதிகாரம் இந்தியப் பிரதமரிடமே உள்ளது எனக்கூறலாம்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, இந்த சரத்து 352-ஐ முறை தவறி பயன்படுத்தி, இந்தியாவில் அவசர நிலைப் பிரகடனத்தை அறிவித்தார். நாட்டின் ஜனநாயகத்தைச் சீர்குலைத்த கரும்புள்ளி அது. ராஜ் நாராயண் என்பவர் இந்திரா காந்திக்கு எதிராக தொடுத்த வழக்கில், இந்திரா காந்தி தேர்தலில் ரேபரேலி தொகுதியில் பெற்ற வெற்றி செல்லாது எனத் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. இந்திரா காந்தியைப் பிரதமர் பதவியிலிருந்து விலகக்கோரி ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அப்போது இந்த நிலைமையை சரத்து 352ன் கீழ் ‘உள்நாட்டுக் குழப்பம்’ என்று முத்திரையிட்டு, நாட்டில் நெருக்கடி நிலை எனப் பிரகடனம் செய்தார்.

நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டால் சரத்து 359ன் கீழ் அனைத்து இந்திய மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளும் பறிக்கப்படும். இவ்வாறாக, மனித உரிமைகள், பத்திரிகைச் சுதந்திரம் என அனைத்தும் குழித் தோண்டிப் புதைக்கப்பட்டன. நாட்டின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் தேடித்தேடி கைது செய்யப்பட்டனர். பல்வேறு மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. நெருக்கடி நிலையின் கொடூர நிழல் மாநிலத்தின் மீது விழாமல் பார்த்துக்கொண்டது அப்போதைய தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு. அப்போது நெருக்கடி நிலை சட்டத்துக்கு ஏதுவாக கடுமையான வரையறை கொண்ட ஆட்சியைச் செயல்படுத்தாததால் தமிழ்நாட்டில் திமுக அரசு கலைக்கப்பட்டது.

1975ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று தொடங்கிய இந்த நெருக்கடி நிலை 1977ஆம் ஆண்டு மார்ச் 21 வரை நீடித்தது. அக்காலத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசவேண்டுமெனில் அதுவே ஒரு தனி நூலாகிவிடும். வரலாற்றின் கரும்பக்கம் நெருக்கடி நிலைக் காலம். அதுநாள் வரையில், நெருக்கடி நிலைப் பிரகடனம் கொண்டுவருவது மிகவும் எளிது. இதன் பின்னரே அரசியலமைப்புச் சட்டத்தில், நெருக்கடி நிலை சரத்தில் பல்வேறு பாதுகாப்புகள் சேர்க்கப்பட்டன.

இவற்றால் நெருக்கடி நிலையை அறிவிப்பது முடியாத காரியமாகிவிடாது. ஆனால், முன்புபோல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அறிவித்துவிட முடியாது. அதேபோல், இனி நெருக்கடி நிலை அறிவிக்கப்படும்போது சரத்து 359ன் கீழ் அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டாலும், சரத்து 20 (குற்றவாளிகளுக்கான அடிப்படை மனித உரிமை பாதுகாப்புகள்) மற்றும் சரத்து 21 (மக்களின் உயிருக்கும் உடல்சார் உரிமைக்குமான பாதுகாப்பு) ஆகியவை பறிக்கப்படாது என்று உச்சநீதிமன்றம் நிலைநாட்டியது.

இப்படிப்பட்ட பாதுகாப்புகள் பின்னர் வழங்கப்பட்டாலும், அதற்குமுன் நெருக்கடி நிலையின்போது நாட்டு மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட பெரும் அநீதியைச் சரிசெய்ய முடியாத ஒன்றே. இத்தகைய அலவங்கள் வரக்கூடும் என்பதை அப்போதே அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையில் சிலர் எச்சரித்தனர்.

இதேபோன்று சரத்து 356ம் கவனிக்க வேண்டிய ஒன்று. இதன்மூலம், மாநிலத்தில் சட்டநிர்வாகம் அரசியலமைப்பின்படி நடக்கவில்லை என்றுகூறி மாநில அரசாங்கத்தைக் கலைத்துவிடும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு, ‘மாநில அரசின் சட்ட நிர்வாகம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடக்கவில்லை, அதனை மீறுகிறது’ என்று ஒரு அறிக்கை கொடுக்கும்பட்சத்தில் இப்படியான ஒரு உத்தரவை குடியரசுத்தலைவர் பிறப்பிக்கலாம் அல்லது அப்படி ஓர் அறிக்கை இல்லாதபட்சத்திலும் குடியரசுத்தலைவர் தான் அவ்வாறு உணர்ந்தாலே மாநில ஆட்சியைக் கலைத்துவிடலாம்.

இந்தச் சரத்து 356 குறித்த விவாதம் அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையில் எழுந்தபோது, ஹெச்.வி.காமத் இவ்வாறு கூறினார்: ‘நான் இந்த நடவடிக்கைக்கு உடந்தையாக இருக்கமாட்டேன். இந்த அரசியல் சட்டத்தில் திட்டமிட்டிருக்கக்கூடிய குறைந்த மாநிலச் சுயாட்சியையும் முற்றிலும் செயலிழக்க வைக்கக்கூடிய மோசம் நிறைந்த நடவடிக்கை இது. இந்த மோசத்தை, மதிகேட்டினை, இந்த நடவடிக்கையில் உள்ள ‘கிரிமினல்’ தன்மையை உணர்ந்து கொள்வதற்கு உண்டான ஞானத்தை இந்தச் சபைக்கு வழங்க வேண்டுமென்று நான் ஆண்டவனைப் வேண்டிக்கொள்கிறேன்.’

இவ்வாறு காட்டமாக விமர்சிக்கப்பட வேண்டிய அவசியம் ஏன் என்பதைப் பார்ப்போம். ஏற்கெனவே, சரத்து 352ன்கீழ் இந்தியாவின் ஒரு பகுதியின் பாதுகாப்புக்கு, ‘போர்’ அல்லது ‘வெளிநாட்டு ஆக்கிரமிப்பு’ அல்லது ‘உள்நாட்டுக் கலவரம்’ ஆகியவற்றால் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அந்தப் பகுதியின் ஆட்சியைக் கலைத்துவிட்டு மொத்தமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ளலாம். அப்படியிருக்க மாநில அரசைக் கலைப்பதற்கென்றே தனியாகச் சரத்து 356 ஏன் வழங்கப்பட்டுள்ளது? இந்தக் கேள்வியிலிருந்து நாம் சரத்து 356ஐ அணுகவேண்டியது அவசியம்.

சரத்து 352ன்கீழ் ஒரு மாநில அரசைக் கலைக்கவேண்டுமெனில், போர் அல்லது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு அல்லது உள்நாட்டுக் கலவரம் ஆகிய ஏதோ ஒரு காரணத்தால் அம்மாநிலத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், சரத்து 356ன்கீழ் ஒரு மாநில அரசைக் கலைப்பதற்கு மேற்சொன்ன காரணங்கள் எதுவும் வேண்டாம்.

நாட்டின் குடியரசுத் தலைவர், ‘மாநில அரசின் சட்ட நிர்வாகம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடக்கவில்லை, அதனை மீறுகிறது’ என்று ஒரு அறிக்கையை அந்த மாநிலத்தின் ஆளுநர் அவர்களிடமிருந்து பெறும்பொழுது குடியரசுத் தலைவர் அந்த மாநில அரசைக் கலைக்கலாம்!

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில், அப்படி எந்தவொரு அறிக்கையும் ஆளுநரிடமிருந்து பெறப்படாத பட்சத்திலும் (Otherwise), ‘மாநில அரசின் சட்ட நிர்வாகம் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடக்கவில்லை, அதனை மீறுகிறது’ என்று குடியரசுத் தலைவர் தாமாகவே திருப்தி அடைந்தாலே போதும், ஒரு மாநில அரசைக் குடியரசுத் தலைவர் கலைத்துவிடலாம்.

எச்.வி.காமத் இதுகுறித்து கடுங்கோபமாகப் பேசினார், ‘இந்தச் சரத்து 356 முழுவதுமே மாநில அரசை நம்பாமல் செய்யப்பட்ட சூழ்ச்சி என்றால், அதற்குள்ளே இன்னொரு சூழ்ச்சியும் இருப்பதைக் கவனிக்க வேண்டும்.

‘Otherwise என்கிற இந்தச் சொல் விஷமத்தனமான சொல். இது ஒரு பேய்த்தனமான சொல். இந்தப் பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று நான் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். இன்றைய தினம் ஆண்டவன் தலையிடாவிட்டால், வெகு சீக்கிரத்தில் நிலைகள் மோசமடைந்து, இன்று இருப்பதைவிட நமது விழிகள் நன்கு திறந்திருக்கும்போது, ஆண்டவன் தலையிடுவான் என்றே நான் நிச்சயம் நம்புகிறேன்…

ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகிறவர்தாம் என்று முன்பே முடிவு செய்துவிட்டோம். அப்படி இருக்கும்போது, குடியரசுத் தலைவர் தம்மால் நியமனம் செய்யப்படுகிறவர்கள் மீது நம்பிக்கை வைக்கக்கூடாதா? அவர் தம்மால் நியமனம் செய்யப்படுகிறவர்கள் மீது நம்பிக்கை வைக்க முடியாவிட்டால் நாம் இந்த அரசாங்கத்தையும், அவையையும் மூடிவிட்டு வீட்டிற்குப் போய்விடுவது நல்லது’ அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையில் ஒலிக்கப்பட்ட இக்குரல்கள் தீர்க்கதரிசனமாகின.

ஒருவேளை ஏதாவதொரு மாநில ஆட்சியைக் கலைக்க அம்மாநில ஆளுநரின் ஒத்துழைப்பு ஒன்றிய அரசுக்கு கிடைக்காமல்போகும் சூழ்நிலை ஏற்பட்டால், குடியரசுத் தலைவர் தாமே தன்னிச்சையாக ஆட்சியைக் கலைக்கவே ‘otherwise’ என்ற சொல் சேர்க்கப்பட்டது. குடியரசுத் தலைவர் தானாக ஒரு முடிவு எடுக்கமுடியாது, ஒன்றிய அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில்தான் அவர் ஒரு முடிவைச் செயல்படுத்த முடியும் என்பதை இங்கே நினைவில் கொள்ளவேண்டும். எனவே, ஒன்றிய அரசு நினைத்தால், அதாவது இந்தியப் பிரதமர் நினைத்தால், ஒரு மாநிலத்தின் ஆட்சியைச் சரத்து 356 மூலம் கலைத்துவிட முடியும். பிரதமருடைய பரிவின் பேரில்தான் ஒரு மாநில அரசு ஆட்சி செய்ய முடியும் என்பது கூட்டாட்சி தத்துவத்துக்கே ஏற்பட்ட பேரவலம்.

1991ஆம் ஆண்டு, அன்றைய தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதி அவர்களின் தலைமையிலான திமுக அரசைக் கலைப்பதற்கு, அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மறுத்துவிட்டார். அப்போது சரத்து 356ல் உள்ள ‘otherwise’ எனும் சொல் கொடுத்த அதிகாரத்தின்படி, குடியரசுத் தலைவரே அன்றைய தமிழ்நாட்டு அரசைக் கலைத்தார். இதுபோன்று பலமுறை வெவ்வேறு மாநில அரசுகள், சரத்து 356 மூலம் கலைக்கப்பட்டு மாநிலங்களின் இறைமை பந்தாடப்பட்டுள்ளது.

இதுபோன்று மாநிலங்களின் உரிமைகளை அசட்டையாகப் பறிக்கும் கட்டமைப்பு வேறு எந்த அரசியலமைப்பிலும் இல்லை.

(1994ஆம் ஆண்டு தீர்ப்பு கொடுக்கப்பட்ட ‘எஸ்.ஆர்.பொம்மை versus இந்திய ஒன்றியம்’ என்ற வழக்கில் சரத்து 356ஐ ஒன்றிய அரசு முறைதவறி பயன்படுத்தாமல் இருக்க சில பாதுகாப்புகள் இடப்பட்டன. அதன்பின்னர் சரத்து 356ஐ ஒன்றிய அரசால் இஷ்டத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலை இருந்துவருகிறது.)

போர் நேரங்களில்கூட அமெரிக்காவில் குடியரசுத் தலைவரோ அல்லது அந்நாட்டு நாடாளுமன்றமோ மாநிலங்களின் இறைமைமீது கைவைக்க முடியாது. உள்நாட்டுக் குழப்பங்கள் அல்லது கலவரங்கள் ஏற்படும் இடங்களில் நிலைமையைச் சீர்செய்ய, மத்திய அரசு இடும் சட்டங்களை அங்கே செயல்படுத்த வைப்பதற்காகத் தங்களுடைய காவல்துறையை அங்கே அனுப்பி வைக்கும்.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை அந்நாட்டின் மத்திய அரசு போரை நடத்துவதற்குத் தேவையான அதிகாரங்களை மட்டுமே பயன்படுத்த முடியுமே தவிர, மாநிலங்களின் அதிகாரங்களைத் தன்வசப்படுத்த முடியாது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளின் மாநிலங்களிலும் ஏதேனும் உள்நாட்டுக் கலவரங்கள் ஏற்பட்டால் அந்த மாநில அரசின் அழைக்கும்பட்சத்தில் மட்டுமே அதில் மத்திய அரசு மூக்கை நுழைக்க முடியும்.

‘சாதாரண நேரங்களில் கூட்டாட்சி நாடாக இந்தியா இருக்கும், போர் நேரங்களில் இந்தியா ஒற்றையாட்சி நாடாக இருக்கும்’ என்று இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவம் குறித்து அம்பேத்கர் பேசியதை இங்கே எடுத்துக்கொள்வோம்.

நெருக்கடி நிலையில் அம்பேத்கர் குறிப்பிட்டதுபோல ஒற்றையாட்சியாக இந்தியா மாறும்வண்ணம் அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. நெருக்கடி நிலை குறித்தான விஷயங்களைப் போதுமான அளவு நாம் பார்த்தாகிவிட்டது.

சரி, இப்போது சாதாரண நேரங்களிலாவது இந்தியா கூட்டாட்சி நாடாக இருக்கிறதா? என்பதையும் பார்க்கலாம். எது சாதாரண நேரம்? எது போர் நேரம் என்று முடிவெடுக்கும் அதிகாரமும் ஒன்றிய அரசின் கையிலேயேதான் உள்ளது. இருப்பினும், ஒன்றிய அரசின் பரிவில் மாநில அரசு ஆட்சி செய்யும்போதாவது, அதாவது சாதாரண நேரத்திலாவது கூட்டாட்சி சிதைவற்று இருக்கிறதா? என்று பார்ப்போம்.

அம்பேத்கர் தன் உரையில் சொல்லியிருப்பதுபோல, கூட்டாட்சி அரசு என்றால்:

i) ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாநில அரசு மற்றும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரு ஒன்றிய அரசு என்பதாக, ஒரு குடிமகன் ஒரே நேரத்தில் மாநில அரசு, ஒன்றிய அரசு இரு விதமான அரசுகளின்கீழ் வாழ்பவன் ஆகிறான்.

ii) கூட்டாட்சி அரசியலமைப்பில் இருக்கும் மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் அதற்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங்களைப் பொறுத்தவரையில், யாருடைய ஆதிக்கத்துக்கும் ஆட்படாமல் சுதந்திரமாகச் செயல்படும்.

உண்மையில் இந்தியா எனும் நாடு கூட்டாட்சி என்ற வரையறைக்குள் வருகிறதா? அதன் தன்மையில் கூட்டாட்சி நாடாக இருக்கிறதா? மாநில அரசுகள் யாருடைய ஆதிக்கத்துக்கு உட்படாமல் சுதந்திரமாகச் செயல்படும் நிலை இருக்கிறதா? என்றால் நிச்சயம் இல்லை.

வரைவு அரசியலமைப்புச் சட்டம் முன்மொழிந்த கூட்டாட்சி அமைப்பில், முக்கியமான விஷயம், ஒருபுறம், ஒன்றிய அரசுக்கு அதிக அதிகாரங்களைக் கொடுத்துவிட்டு, மறுபுறம், மாநிலங்களின் அதிகாரங்கள் வெட்டப்பட்டது. இவ்வாறாக ‘வலிமைமிகுந்த ஒன்றிய அரசு கொண்ட கூட்டாட்சி’யாக இந்தியாவை அமைத்த வரைவு அரசியலமைப்பு, மாநிலத்தை வலுவிழக்கச் செய்தது. இந்தத் தன்மை என்பது ‘கூட்டாட்சி தத்துவத்தையே அழித்துவிடுகிறது’ என்று அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையில் ஓங்கி ஒலித்தன சில குரல்கள்.

ஒரிசாவின் லோக்நாத் மிஷ்ரா இவ்வாறு பேசினார்:

‘கொள்கைநோக்கத் தீர்மானம் என்ன? கொள்கைநோக்கத் தீர்மானத்தில் சொல்லப்பட்ட கூட்டாட்சி அரசியலமைப்பு என்பது எஞ்சிய அதிகாரங்கள் மாநிலங்களிடம் கொடுக்கப்படும் என்றது. கூடுதலாகவோ குறைவாகவோ இல்லாமல், மாநிலங்களை முறையாக ஒருங்கிணைக்கும் ஓர் அமைப்புக்குள் கொண்டுவர என்னென்ன அதிகாரம் மத்திய அரசுக்குத் தேவைப்படுமோ, அவை மட்டுமே மத்திய அரசுக்கு வழங்கப்படும் எனப்பட்டது.

ஆனால், இந்த வரைவு அரசியலமைப்புக்கு நாம் என்ன பெயர் வைத்து அழைத்தாலும், அது கூட்டாட்சி என்பதை விட உறுதியான ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கான ஒரு அடித்தளத்தையே இடுகிறது. ஒற்றையாட்சி என்று சொல்வதன் மூலம் நான் குறிப்பிடுவது மாநிலங்களுக்குக் கொடுப்பதைவிட அதிகமான அதிகாரங்களை, கள்ளத்தனமாக மத்திய அரசுக்குக் கொடுத்தருப்பதைதான்…

இந்த அரசியலமைப்பு தனி மனிதனுக்கு எதுவும் தரவில்லை, குடும்பங்களுக்கு எதுவும் தரவில்லை, கிராமங்களுக்கு எதுவும் தரவில்லை, மாவட்டங்களுக்கு எதுவும் தரவில்லை, மாநிலங்களுக்கும் எதுவும் தரவில்லை. அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசுக்குத் தரப்பட்டுள்ளது…

வலிமையான மத்திய அரசு வேண்டும் என்கிறோமே, எதற்காக?… வலிமையாக யாருக்கு எதிராக? பாகிஸ்தானுக்கு எதிராகவா? ரஷ்யாவுக்கு எதிராகவா? அல்லது இந்திய மக்களுக்கு எதிராகவா?’

உறுப்பினர் மெஹபூப் அலி பெய்க் சாஹிப் பகதூர் அவர்களின் கருத்தும் இங்கே கவனிக்கவேண்டியது.

‘வரைவு அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பு என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லை. மத்திய அரசு வலுவானதாக இருக்கவேண்டும் என்றும், மத்திய அரசு மிகவும் வலுவானதாக அமைக்கப்படாவிடில், மத்திய அரசின் வலிமைக்கு மாநிலங்கள் தடையாக இருக்கும் என்றும் பலர் நினைக்கின்றனர். ஆனால் அது தவறான பார்வை. மாநிலங்களுக்கு முழுச் சுயாட்சி அளிக்கப்பட்டால், மத்திய அரசு வலுவற்றதாகிவிடாது. ஆனால் நம் அரசியலமைப்பில் உள்ள கட்டமைப்பு, மாநிலங்களை வெறும் ஊதிப்பெரிதாக்கப்பட்ட மாவட்ட வாரியங்கள்போல ஆக்கிவிடும்.

சரத்து 275-ஐ பாருங்கள், நெருக்கடி நிலை வந்தால் மத்திய அரசு அனைத்து அதிகாரங்களையும் உறிஞ்சிக்கொள்கிறது. சரத்து 226,227 மற்றும் 229 ஆகியவற்றைப் பாருங்கள். மாநிலப் பட்டியலில் உள்ள அனைத்து விவகாரங்கள் குறித்தும் மத்திய அரசு சட்டமியற்ற அச்சரத்துகள் வழிவகை செய்கின்றன.

அதுமட்டுமின்றி ஒன்றியப் பட்டியலும், பொதுப்பட்டியலும் மிக நீண்டதாக இருப்பதையும் பார்க்க முடிகிறது. கூட்டாட்சி அமைப்பைப் புறந்தள்ளிவிட்டு ஒற்றையாட்சியாக மாற்ற நினைக்கும் மத்திய அரசின் கைகளில், அதனை எளிதாகச் செய்வதற்கான வழி இருப்பதாக இவை காட்டுகின்றன. எனவே, இம்மாதிரியான அரசாங்கம் சர்வாதிகாரமாக மாறுவதற்கான அபாயம் உள்ளது. நம் வரைவு அரசியலமைப்பில் இத்தகைய அபாயம் பொதிந்துள்ளது.’

வரைவு அரசியலமைப்பில் சரத்து 275 என்பது தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தில் சரத்து 352ஆக உள்ளது. அதுகுறித்து மிக விரிவாகவே பார்த்துவிட்டோம். அடுத்து வரைவு அரசியலமைப்பில் சரத்து 226, 227, 229 என்று அவர் குறிப்பிடுபவை தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தில் முறையே சரத்து 249, 250, 252 ஆக உள்ளது.

இந்தச் சரத்துகள் என்ன சொல்கின்றன என்று பார்ப்பதற்கு முன்னர், ஒன்றியப் பட்டியல், மாநிலப் பட்டியல் மற்றும் பொதுப்பட்டியல் ஆகியவை குறித்து இங்கே பார்க்கலாம். எந்தெந்த விவகாரங்கள் குறித்துச் சட்டம் இயற்ற ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் அதிகாரம் படைத்தவை என்பதைத் தெளிவாகப் பட்டியல் இட்டுச் சொல்வதே இம்மூன்று பட்டியல்களும். இவை அரசியலமைப்புச் சட்டத்தின் 7ஆவது அட்டவணையில் உள்ளன.

எந்தெந்த விவகாரங்கள் குறித்து ஒன்றிய அரசுக்கு மட்டும் சட்டமியற்ற அதிகாரம் உள்ளதோ, அந்த விவகாரங்களைத் தொகுத்து வைத்திருப்பதே ஒன்றியப் பட்டியல்.

எந்தெந்த விவகாரங்கள் குறித்து மாநில அரசுகளுக்கு மட்டும் சட்டமியற்ற அதிகாரம் உள்ளதோ, அந்த விவகாரங்களைத் தொகுத்து வைத்திருப்பதே மாநிலப் பட்டியல்.

பொதுப்பட்டியல் என்பது சற்று வித்தியாசமானது. இந்தப் பட்டியலில் தொகுக்கப்பட்டுள்ள விவகாரங்கள் குறித்து ஒன்றிய அரசும் சட்டம் இயற்றலாம், மாநில அரசும் சட்டம் இயற்றலாம். இந்த மூன்று பட்டியல்களில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் தவிர, ஏதேனும் விவகாரங்கள் விடுபட்டு இருப்பின் அவை ‘எஞ்சிய அதிகாரங்கள்’ எனப்படும். இவையும் சரத்து 248ன் படி ஒன்றிய அரசின் வசமே இருக்கும்.

இதில், மாநில அரசின் அதிகாரம் எங்கே மட்டுப்படுத்தப்படுகிறது என்று பார்ப்போம். ஒன்றியப் பட்டியலில் உள்ள விவகாரங்கள் குறித்துச் சட்டமியற்றும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு மட்டுமே உள்ளது. எக்காரணம் கொண்டும் இதில் உள்ள விவகாரங்கள் குறித்து ஒன்றிய அரசு தவிர வேறெந்த அரசுகளும் சட்டமியற்ற முடியாது.

ஆனால், மாநிலப் பட்டியல் என்பது அப்படியன்று. பொதுவாக மாநில அரசுகள்தான் மாநிலப் பட்டியலில் உள்ள விவகாரங்கள் குறித்து சட்டம் இயற்றும். ஆனால், மாநிலப் பட்டியலில் ஊடுருவும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு, அதாவது நாடாளுமன்றத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம்தான் இத்தகைய அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்கியிருக்கிறது.

நாட்டின் நலனுக்காக மாநிலப் பட்டியலில் உள்ள ஒரு விவகாரம் குறித்து ஒன்றிய அரசு சட்டம் இயற்றலாம். மாநிலங்கள் அவையில் (ராஜ்ய சபா) உள்ள ஒட்டுமொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் வந்திருந்து வாக்களிப்பதன் மூலம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால், மாநிலப் பட்டியலில் உள்ள எந்தவொரு விவகாரம் குறித்தும் ஒன்றிய அரசு சட்டம் இயற்றலாம்.

அவை ஒட்டுமொத்த நாட்டுக்குமே பொருந்துபவையாக இருக்கலாம் அல்லது நாட்டின் ஒரு பகுதிக்கு மட்டும் பொருந்துவதாக அமையலாம். இப்படியாக நிறைவேற்றப்படும் தீர்மானம் ஒரு வருடத்துக்கு செல்லுபடியாகும். பிறகு வேண்டுமென்றால் ஒரு வருடம் முடிந்தபின் மீண்டும் மீண்டும் அத்தீர்மானத்தைப் புதுப்பித்துக்கொள்ளலாம்.

(நாடாளுமன்றத்தில் இரு அவைகள் உண்டு – ஒன்று மக்களவை, மற்றொன்று மாநிலங்களவை. மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கும் நபர்கள் மக்களவை உறுப்பினர்கள். மறுபுறம், மாநிலங்களவைக்கு நேரடியாக உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது கிடையாது.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப இத்தனை மாநிலங்களவை உறுப்பினர்கள் என்று ஒதுக்கிவிடுவார்கள். எடுத்துக்காட்டுக்கு உத்தரபிரதேசத்துக்கு 31 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே உத்தரபிரதேசத்தின் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து அந்த 31 மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பர்)

மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தால் தானே மாநிலப் பட்டியலில் கைவைக்க முடியும். அப்போது மாநிலங்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது தானே? என்று கேட்டால் அதுதான் இல்லை. அமெரிக்கா போன்று நம் மாநிலங்களவையில் சம பிரதிநிதித்துவம் கிடையாது. அமெரிக்காவில் எத்தகைய சிறிய மாநிலமானாலும் சரி, பெரிய மாநிலமானாலும் சரி மாநிலங்களவைக்கு ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இரண்டு உறுப்பினர்கள் அனுப்பப்படுவார்கள்.

ஆனால், இந்தியாவில் அப்படி அல்ல. மக்கள்தொகையின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை வேறுபடும். எனவே, இங்கிருக்கும் பிரச்னை என்னவென்றால், ஒன்றிய அரசில் ஆட்சியில் இருக்கும் அதே கட்சி அல்லது அவர்களின் கூட்டணி கட்சியினர் அதிக மாநிலங்களவை உறுப்பினர்கள் வைத்துள்ள மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும்பட்சத்தில், அவர்களின் வாக்குகளால் சரத்து 249 மூலம் ஒன்றிய அரசால் எளிதாக மாநிலப் பட்டியலில் ஊடுருவ முடியும். தேசியக் கட்சிகளே பெரும்பாலான மாநிலங்களிலும் ஆட்சி அமைக்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே.

குடியரசுத்தலைவரால் நெருக்கடி நிலைப்பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளபோது சரத்து 250 மூலம் மாநிலப் பட்டியலில் உள்ள எந்த விவகாரங்களின்மீதும் சட்டமியற்றும் அதிகாரத்தை ஒன்றிய அரசு பெறும். இதுகுறித்து ஏற்கனவே பார்த்தாகிவிட்டது.

சரத்து 252 ஒன்றிய அரசு இவ்வாறாக மாநிலப் பட்டியலுக்குள் ஊடுருவலாம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலச் சட்டமன்றங்கள் மாநிலப் பட்டியலில் உள்ள ஒரு குறிப்பிட்ட விவகாரம் பற்றி நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம் என்று தீர்மானம் நிறைவேற்றினால், மாநிலப் பட்டியலில் உள்ள அந்தக் குறிப்பிட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம். எந்தெந்த மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியதோ, அந்த மாநிலங்களில் மட்டும் அச்சட்டம் அமலுக்கு வரும்.

இதுபோக, வெளிநாடுகளுடன் ஒன்றிய அரசு செய்துகொள்கிற ஒப்பந்தத்தை நிறைவேற்றும் பொருட்டும் ஒன்றிய அரசு மாநிலப்பட்டியலில் உள்ள விவகாரம் குறித்துச் சட்டமியற்றலாம் எனச் சரத்து 253 கூறுகிறது.

மாநிலப்பட்டியலில் ஒன்றிய அரசு எவ்வாறெல்லாம் ஊடுருவலாம் என்று பார்த்தோம். இப்போது பொதுப்பட்டியலும் எப்படி முழுக்க முழுக்க ஒன்றிய அரசுப் பட்டியலாக உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

ஏற்கெனவே சொன்னதுபோல, பொதுப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் குறித்து ஒன்றிய அரசு, மாநில அரசு இரண்டுமே சட்டமியற்றலாம். ஆனால், சரத்து 254(1)ன்படி ஒரே விவகாரம் குறித்து ஒன்றிய அரசும் மாநில அரசும் சட்டமியற்றினால் மாநில அரசு இயற்றிய சட்டம் அடிப்பட்டுப்போகும், ஒன்றிய அரசு இயற்றும் சட்டமே நிலைக்கும்.

ஆனால் இதில் மாநிலங்களுக்கு ஒரு சிறிய பாதுகாப்பு உண்டு. சரத்து 254(2)ன்படி, ஒரே விவகாரம் குறித்து மாநில அரசும் ஒன்றிய அரசும் சட்டம் இயற்றியிருக்கும்பொழுது, மாநில அரசு தான் சட்டம் இயற்றிய உடனே குடியரசுத்தலைவரின் கையெழுத்தைப் பெற்றுவிட்டால், மாநில அரசின் சட்டம் அடிப்பட்டுப்போகாது. ஆனால், இங்கே மறுபடியும் நினைவில் கொள்ளவேண்டியது என்னவென்றால், குடியரசுத்தலைவர் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில்தான் இயங்குபவரே.

இப்படிக் கையெழுத்து வாங்கினால் மட்டும் மாநில அரசின் சட்டம் உறுதியாக நின்று விடாது. மாநில அரசின் சட்டத்தை ரத்து செய்யும்வகையில் ஒன்றிய அரசு மீண்டும் ஒரு சட்டம் நிறைவேற்றினால், முன்னதாகக் குடியரசுத் தலைவரிடம் கையெழுத்து வாங்கியிருந்தாலும் மாநில அரசின் சட்டம் வீழ்ந்துவிடும்.

இங்கேதான், நீட் தேர்வுக்கு எதிரான சட்டத்தைத் தமிழ்நாடு கொண்டுவருவதில் சிக்கல் உள்ளது. ஏனெனில், 1976இல் ‘கல்வி’ மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. எனவே, கல்வி குறித்து ஒன்றிய அரசு இயற்றும் சட்டமே செல்லும். எனவேதான் நீட் தேர்வுக்கு எதிரான சட்டம் நடைமுறைக்கு வரவேண்டுமெனில் குடியரசுத் தலைவரின் கையெழுத்து அவசியமாகிறது.

இவ்வாறாகப் பொதுப்பட்டியலும் ஒன்றிய அரசின் பட்டியலாகவே இருந்து வருகிறது.

சரி, பொதுப்பட்டியலில் ஒன்றிய அரசின் ஆதிக்கம், மாநிலப் பட்டியலில் ஒன்றிய அரசின் ஊடுருவல், இவை அல்லாமல் சட்டமியற்றுவதில் ஏதேனும் பிரச்னை உள்ளதா? என்றால், உண்டு.

மாநிலப் பட்டியலில் உள்ள விவகாரங்கள் குறித்து மாநில அரசு சட்டமியற்றினால், ஆளுநரின் கையெழுத்தைப் பெற்றால்தான் அது சட்டமாகும். மாநில ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசு, மாநில அரசைக் கண்காணிக்க நியமிக்கும் அதிகாரி. மசோதாவில் கையெழுத்திடுவது குறித்து ஆளுநருக்கு 4 விதமான அதிகாரங்கள் உண்டு.

i) மசோதாவில் கையெழுத்து இடுவது. மசோதா சட்டமாகிவிடும்.

ii) மசோதாவில் கையெழுத்து போட மறுப்பது. மசோதா சட்டமாகாது.

iii) அது நிதி பற்றிய மசோதாவாக இல்லாமல் வேறு மசோதாவாக இருக்கும்பட்சத்தில், ஆளுநர் கையெழுத்துப் போட மறுத்ததும் அந்த மசோதா திரும்பவும் மாநில சட்டமன்றத்திற்குப் போகும். அங்கே திருத்தத்துடனோ, திருத்தம் இல்லாமலோ மறுபடியும் நிறைவேற்றப்பட்டால், ஆளுநர் அதில் கையெழுத்துப் போட மறுக்க முடியாது.

எனவே கட்டாயமாக ஆளுநருடைய கையெழுத்தைப் பெற்று அந்த மசோதா சட்டமாக ஆகிவிடுகிறது. இந்த அதிகாரங்கள் காரணமாக மாநில சட்டமன்றம் நிறைவேற்றுகிற ஒரு மசோதாவை ஆளுநர் கொஞ்ச நாட்களுக்குத் தடுத்து நிறுத்தி வைக்க முடியும்.

iv) குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிடலாம். பின்னர் அதில் குடியரசுத் தலைவர் கையெழுத்து இட்டால்தான் அம்மசோதா சட்டமாகும். ஆனால், குடியரசுத் தலைவர் நிச்சயமாகக் கையெழுத்திட வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.

v) இப்படி மேற்சொன்ன எதுவும் செய்யாமல் ஒரு மசோதாவைக் கையெழுத்துப் போடாமல் காலவரையின்றிக் கிடப்பில் போட்டுவிடலாம்.

எனவே இங்கும், மாநிலப் பட்டியலில் உள்ள விவகாரம் குறித்து மாநில அரசு சட்டம் ஒன்றை நிறைவேற்றவும், ஒன்றிய அரசின் தயவு அவசியமாகிறது.

இவ்வாறாக, இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சி தத்துவம் பெரும் சிதைவுக்கு உள்ளாகியிருக்கிறது. இதுகுறித்து அசோக் சந்தா தன்னுடைய நூலில் இப்படிக் கூறுகிறார், ‘மத்திய அரசுக்கு மாநில அரசுகள் கீழ்ப்பட்டவை என்கிற தத்துவம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுவதிலும் இழையோடிக்கொண்டிருக்கிறது.’

இதனோடு கவனிக்க வேண்டிய மிகமுக்கியமான ஒரு விஷயம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் சரத்து.

‘இந்தியா என்கிற பாரத், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்.’ – ‘India, that is Bharat, shall be a Union of States.’

இங்கே கூட்டாட்சி என்ற சொல் ஏன் பயன்படுத்தவில்லை என்பது குறித்து அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையில் பெரும் விவாதம் எழுந்தது. ஏனெனில் பி.என்.ராவ் வடிவமைத்த முதல் வரைவு அரசியலமைப்பில், இந்தியாவை கூட்டாட்சி என்று குறிக்கும் சொல்லாக ‘Federation’ என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டிருந்தது.

கூட்டாட்சி என்ற சொல்லுக்கு பதிலாக ஒன்றியம் என்ற சொல் ஏன் பயன்படுத்தப்பட்டது என்று டாக்டர்.அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்ட நிர்ணயச் சபையில் விளக்கினார்.

‘வேண்டுமென்றேதான் ‘ஒன்றியம்’ (Union) என்கிற சொல்லைச் சேர்த்திருக்கிறோம். கனடாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் ‘ஒன்றியம்’ (Union) என்கிற சொல் சேர்க்கப்பட்டது ஏன் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ‘வரைவுக்குழு’ ஏன் அதைச் சேர்த்தது என்பதை என்னால் சொல்ல முடியும். இந்தியா ஒரு கூட்டாட்சியாக இருந்தபோதிலும் அது மாநிலங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் விளைவு அன்று. அதனால் எந்த மாநிலத்திற்கும் பிரிந்துபோகும் உரிமை கிடையாது என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இந்தக் கூட்டாட்சி ஒரு ‘ஒன்றியம்’ (Union). ஏனென்றால் இது அழிக்க முடியாதது.

அமெரிக்கர்கள் ஓர் உள்நாட்டுப் போர் நடத்தி மாநிலங்களுக்குப் பிரிந்து போகும் உரிமை இல்லை என்பதையும், கூட்டாட்சி அழிக்க முடியாதது என்பதையும் நிலைநாட்ட வேண்டியிருந்தது. இதை யூகத்திற்கும் தர்க்கத்திற்கும் விடாமல் எடுத்த எடுப்பிலேயே ‘வரைவுக்குழு’ தெளிவுபடுத்தி விடுவது நல்லது என்று நினைத்தது.’

ஒன்றியம் என்ற சொல்லை நீக்கிவிட்டு கூட்டாட்சி (Federation) என்று சொல்லைச் சேர்க்கவேண்டும் என்று திருத்தம் கொண்டுவந்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

‘நமது அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ஒற்றையாட்சி அம்சங்களைக் கோடிட்டுக் காட்டுவதற்குத்தான் ‘ஒன்றியம்’ என்கிற சொல் பயன்படுத்தப்பட்டதென்றும், ‘கூட்டாட்சி’ என்கிற சொல் அரசியல் நிர்ணயச் சபையில் வன்மையாகவும், வெற்றிகரமாகவும் எதிர்க்கப்பட்டது’ என்றும் கே.வி. ராவ் தன்னுடைய நூலில் கூறுகிறார்.

‘இந்திய ஒன்றியம் அழிக்கமுடியாதது’ என்று அம்பேத்கர் கூறியதைப் பார்தோம். ஆனால் மாநிலங்கள் அப்படி அல்ல. இந்திய அரசியலமைப்பின் சரத்து 3, ஒன்றிய அரசுக்குக் கொடுத்திருக்கும் அதிகாரமானது, ஒரு மாநிலத்துக்கு அந்த மாநிலமே சொந்தம் அல்ல எனும் நிலையை உருவாக்கியுள்ளது.

சரத்து 3ன்படி, நாடாளுமன்றம் ஒரு சாதாரண சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம்,

i) ஒரு மாநிலத்தைப் பிளந்து இரண்டு வெவ்வேறு மாநிலங்கள் ஆக்கலாம்.

ii) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களிடமிருந்து கொஞ்சம் பகுதிகளைப் பிரித்து புதிய மாநிலத்தை உருவாக்கலாம்.

iii) ஒரு மாநிலத்தின் பகுதியை வேறொரு மாநிலத்துடன் இணைத்துவிடலாம்.

iv) ஒரு மாநிலத்தின் பரப்பளவை விரிவாக்கலாம் அல்லது குறைக்கலாம்

v) எந்தவொரு மாநிலத்தின் எல்லையையும் மாற்றியமைக்கலாம்.

vi) எந்தவொரு மாநிலத்தின் பெயரையும் மாற்றலாம்.

இதுகுறித்தான மசோதா குடியரசுத் தலைவரால் சம்மந்தப்பட்ட மாநிலச் சட்டமன்றங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு கருத்து கேட்கப்படும். ஆனால், அந்தக் கருத்து என்னவாக இருப்பினும் அதனைப் பின்பற்றவேண்டிய அவசியம் இல்லை. ஒன்றிய அரசு இஷ்டம்போல் தான் நினைத்ததைச் செய்யலாம். வேறெந்த கூட்டாட்சி நாட்டிலும் இப்படிப்பட்ட அவலம் இருக்கவில்லை.

இதுகுறித்து அசோக் சந்தா இவ்வாறு கூறுகிறார்: ‘இந்தியாவில் ஒன்றியம்தான் அழிக்க இயலாதது. ஆனால் மாநிலங்களை முடியும். ஒன்றிய அரசுக்கு சமமானதாக மாநில அரசுகளை அரசியலமைப்புச் சட்டம் அமைக்கவில்லை’.

இதனால்தான், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை, ஒற்றையாட்சி முறை எனும் இனத்திற்கும் கூட்டாட்சி முறை எனும் இனத்திற்கும் பிறந்த ஈரினக் கலப்பு அரசியலமைப்புச் சட்டங்கள் என்ற வகையில் சேர்த்தார், ‘பாட்ரிக் கார்டன் வாக்கர்.

கே.சி.வியர் என்ற சட்ட வல்லுநர் இந்தியாவை ‘கூட்டாட்சித் அம்சங்கள் கொண்ட ஒற்றையாட்சி நாடு’ என்பார்.

இந்தியாவில் மாநிலங்கள் என்றுமே ஒன்றிய அரசின் பரிவின் பேரில்தான் இயங்கமுடியும். அதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பொதித்து வைக்கப்பட்டுள்ள கூட்டாட்சித் தத்துவம்.

(தொடரும்…)

 

______________

மேற்கோள் நூல்கள்
Constituent Assembly of India Debates (Proceedings) Vol 1, 04/11/1948
Constituent Assembly of India Debates (Proceedings) Vol 1, 05/11/1948
Constituent Assembly of India Debates (Proceedings) Vol 1, 06/11/1948
Constituent Assembly of India Debates (Proceedings) Vol 1, 08/11/1948
B.Shiva Rao, The Framing of India’s Constitution Vol.1, Indian Institute of Public Administration (1st ed. 1966)
B.Shiva Rao, The Framing of India’s Constitution Vol.2, Indian Institute of Public Administration (1st ed. 1966)
B.Shiva Rao, The Framing of India’s Constitution Vol.3, Indian Institute of Public Administration (1st ed. 1966)
B.Shiva Rao, The Framing of India’s Constitution Vol.4, Indian Institute of Public Administration (1st ed. 1966)
B.Shiva Rao, The Framing of India’s Constitution : A Study, Indian Institute of Public Administration (1st ed. 1968)
K.Santhanam, Union – States Relations in India, Indian Institute of Public Administration : New Delhi (1st ed. Reprinted. 1963)
முரசொலி மாறன், மாநில சுயாட்சி, சூரியன் பதிப்பகம் (3rd ed.2017)
ஆழி செந்தில்நாதன், 1974 : மாநில சுயாட்சி, அழி பதிப்பகம் (டிசம்பர் 2021)
ஆலடி அருணா, இந்திய அரசியலமைப்பும் கூட்டாட்சியும், விகடன் பிரசுரம் (டிசம்பர் 2017)
கு.ச.ஆனந்தன், மலர்க மாநில சுயாட்சி, தங்கம் பதிப்பகம் (2nd ed.2017)
Ashok Chanda, Federalism in India : A Study of Union – States Relations, George Allen & Unwin (London : 1965)

பகிர:
வாஞ்சிநாதன் சித்ரா

வாஞ்சிநாதன் சித்ரா

எஸ்.ஆர்.எம். சட்டக்கல்லூரியில் இளங்கலைச் சட்டம் படித்து வருகிறார். விகடன் குழுமத்தில் மாணவ நிருபராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். You Turn எனும் உண்மை கண்டறியும் ஊடகத்தில் (Fact Checking Website) பங்களிப்பாளராக உள்ளார். அரசியல், வரலாறு, சட்டம் ஆகியவை இவருக்குப் பிடித்த துறைகள். தொடர்புக்கு : rvanchi999@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *