Skip to content
Home » இஸ்ரேல் #7 – யோம் கிப்பூர் போர்

இஸ்ரேல் #7 – யோம் கிப்பூர் போர்

யோம் கிப்பூர் போர்

யோம் கிப்பூர் என்பது யூதர்களின் முக்கிய பண்டிகை. நீண்ட விரதங்களைப் பல நாட்களுக்கு அனுசரித்து பண்டிகை நாளில் காலை முதல் மாலை வரை வழிபாட்டிலும், தியானித்தலிலும் செலவிடுவர். அப்படியொரு நாளில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவது என்பது எகிப்து அன்வர் சதாத்தின் திட்டம். சதாத், நாசருக்குப் பிறகு அதிபர் ஆனவர். எகிப்து அரசரைப் பதவியை விட்டு நீக்கும் புரட்சியில் பங்கேற்றவர். யோம் கிப்பூர் போருக்காக இன்றும் நினைவு கொள்ளப்படுபவர். இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்ட முதல் அராபியத் தலைவர். இதன் காரணமாகவே சுட்டுக்கொல்லப்பட்டார்.

இத்திட்டத்துக்குத் தனது சக அரபு நாடுகளையும் இணைத்துக்கொண்டார் சதாத். முன் எப்போதும் இல்லாத வகையில் சவூதி அரேபியா உட்படப் பல நாடுகள் சதாத்தின் முயற்சிக்கு ஆதரவளித்தன. அரபு நாடுகளுடனான செல்வாக்கைப் பெருக்கும் பொருட்டு சோவியத் ஒன்றியம் எகிப்துக்கும், சிரியாவுக்கும் இராணுவ உதவிகளைச் செய்தது. உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டன. இஸ்ரேல் அமெரிக்க சார்பாக இருந்ததால் சோவியத் ஆதரவை அரபு நாடுகள் நாடத்துவங்கின. இப்போக்கை அமெரிக்காவும், இங்கிலாந்தும் விரும்பவில்லை. இராணுவ உதவிகளைப் பொறுத்தவரை ஃபிரெஞ்சு, இங்கிலாந்து விமானங்கள் உட்பட பலவிதமான தளவாடங்களை எகிப்து, ஜோர்டன் மற்றும் சிரியா பயன்படுத்திக்கொண்டன. இச்சூழ்நிலையில் மோஷே தயான் முன்னாள் இராணுவ தளபதி பி.பி.சிக்கு அளித்த பேட்டியில் இஸ்ரேல் 1967-ல் நடந்த போரில் கைப்பற்றிய பகுதிகளைத் தொடர்ந்து தக்க வைத்திருக்கும் என்றும் மேற்கு கரையில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் விரும்பினால் வேறு இடங்களுக்கு இடம் பெயரலாம் என்றும் சொன்னார். இதே மோஷே தயான் இஸ்ரேலுக்காகப் பல போர்க்களங்களைக் கண்டவர். பின்னாளில் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்தார். ஜனதா கட்சி ஆண்ட போது இரகசியமாக இந்தியா வந்தார். அது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இது ஏற்கனவே எரிச்சலில் இருந்த அராபிய நாடுகளை மேலும் கோபம் கொள்ளச் செய்தது. அன்வர் சதாத் இச்சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஏற்கனவே இருந்த நேசங்களுடன் லிபியாவின் கடாஃபியும் சதாத்துக்கு ஆதரவளித்தார். லிபியா ஃபிரான்ஸிடமிருந்து நவீன போர் விமானங்களை வாங்கியிருந்தது. நேரடியாகப் போர்க்களத்துக்கு வராவிட்டாலும் லிபியா தளவாடங்களை அளித்தது. இந்தச் சூழ்நிலையில் சோவியத் படைகளை எகிப்திலிருந்து வெளியேற்றினார் சதாத். இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவுவது போல சோவியத் எகிப்துக்கு உதவவில்லை என்பது அவரது குற்றச்சாட்டு. அமெரிக்கா இந்த நேரத்தில் பேண்டம் விமானங்களை இஸ்ரேலுக்கு அளித்தது. வலுவான இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் என்று நம்பினார் அமெரிக்க அதிபர் நிக்சன்.

அன்வர் சதாத் போட்ட திட்டத்தின்படி, யோம் கிப்பூர் அனுசரிப்புத் தினமான 6 அக்டோபர் 1973 அன்று எகிப்து, சிரியப் படைகள் முறையே சினாய் மற்றும் மேற்குக் கரைப்பகுதிகளை தாக்கின. இத்தாக்குதலுக்கு முன்பே இஸ்ரேலுக்கு இராணுவ உளவுப்படையின் தகவல் போய்ச் சேர்ந்திருந்தது. மோஷே தயான் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் கோல்டா மேயரிடம் தகவல் தெரிவித்து உடனே தாயகம் திரும்பும்படிக் கூறினார். இஸ்ரேலின் விடுதலை பிரகடனக் கூட்டத்தில் பங்கேற்ற இரு பெண்மணிகளில் ஒருவரான கோல்டா மேயர் உலகின் இரண்டாம் பெண் பிரதமர். யோம் கிப்பூர் போரின் இழப்புகளுக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகினார்.

திடீரென்று நிகழ்ந்த தாக்குதலை முதலில் எதிர்கொள்வது இஸ்ரேலுக்குக் கடினமாக இருந்தது. ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்தன. நோன்பு அனுசரிப்புக்குச் சென்றிருந்த படை அணியினர் உடனே திரும்ப அழைக்கப்பட்டனர். இம்முறையும் இஸ்ரேல் தான் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றிக்கொண்டது. அது மட்டுமின்றி இஸ்ரேலின் இராணுவ வலிமை மீண்டும் நிரூபிக்கப்பட்டது. போர்க்கால சமயத்தில் புனித ரமலான் மாத நோன்பும் அனுசரிக்கப்பட்டு வந்தது. அன்வர் சதாத் இதையும் கருத்தில் கொண்டிருந்தாலும், எதிர்பாராத தாக்குதல் அதுவும் அனைத்து நவீன இராணுவத் தளவாடங்களுடன் நிகழ்ந்த தாக்குதலால் இஸ்ரேல் முழுமையாக வீழும் என நினைத்தார். ஆனால் அது நிகழாதது மட்டுமல்ல, இஸ்ரேலை விரட்ட முடியவில்லை எனும் கோபத்தை நிரந்தரமாக அராபியர்கள் மத்தியில் நிலைக்க வைத்தார்.

போரின் முடிவில் அதிருப்தி அடைந்த அராஃபத்தின் விடுதலை இயக்கம் இனி அராபிய ஆட்சியாளர்களை நம்பிப் பயனில்லை என்று முடிவெடுத்து கொரில்லா தாக்குதலை அதிகரிக்கத் திட்டமிடத் துவங்கியது. இப்போரின் முடிவில் இஸ்ரேல் நிரந்தர வெற்றியை அடைய முடியவில்லை. மாறாக புதிய வடிவிலானப் போர் ஒன்றைத் தொடர்ச்சியாக எதிர்கொள்ளத் துவங்கியது. ஐ.நாவும் தனது பங்குக்குப் புதிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அத்தீர்மானம் 338 ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 242 தீர்மானத்தை சரிவர நிறைவேற்றவே வலியுறுத்தியது. அப்பிரதேசத்தில் நிரந்தர அமைதியை அமெரிக்கா உட்பட அனைத்து வல்லரசு நாடுகளும் வலியுறுத்தின. ஆனால் தொடர்ந்து அமைதியின்மையைக் கொண்டிருக்கும்படியான நெருக்கடி துவங்கியது.

எகிப்து அதிபர் அன்வர் சதாத் இஸ்ரேலுடன் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டார். அமெரிக்க அதிபர் கார்ட்டரின் அரசு சாத்தியமில்லாதது என நினைக்கப்பட்ட ஒன்றை நிறைவேற்றியது. இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டிலிருந்த சினாய் பிரதேசத்தை எகிப்திடம் மீண்டும் அளித்தது. இன்றுவரை அந்த உடன்படிக்கையில் பெரிய மாறுதல் ஏதுமில்லை. இடையில் எகிப்தில் அரபு வசந்தம் ஏற்பட்ட காலத்தில் இஸ்லாமிய கட்சியின் மோர்சி அதிபரானபோது உடன்படிக்கையை நீக்குவது போலவும், பாலஸ்தீனத்தை விடுவிக்க முயல்வதாகவும் அறிவிப்புகள் வந்தன. எகிப்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு மோர்சி அரசை இராணுவம் நீக்கியது. மோர்சியின் கட்சி முஸ்லீம் பிரதர் ஹூட் எனப்படும் இக்வான் – ஏ- முஸ்லிம்மின் எனும் இயக்கத்தின் அங்கமாகும். எகிப்து மன்னரை பதவி நீக்கம் செய்ய உதவிய இந்த இயக்கம் எகிப்தை மதச்சார்பற்ற அரசு என இராணுவ ஆட்சியர் அரசமைப்புச் சட்டத்தில் எழுதியதை எதிர்த்து வருகிறது. அரபு நாடுகள் பலவற்றில் நிகழ்ந்த அரபு வசந்தம் எழுச்சியில் முக்கியப் பங்காற்றி மக்களின் செல்வாக்கையும் ஏற்படுத்திகொண்டது. அதிபர் அன்வர் சதாத்தின் கொலைக்கு காரணமானது. இந்த இயக்கத்திலிருந்த மற்றொரு பிரபலம் அல்-ஜவாஹிரி, அல்-கொய்தாவின் முன்னாள் தலைவர்.

பெரும் அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு இப்போதைய அதிபர் சிசி பதவிக்கு வந்தார். இந்தியாவின் 2023 குடியரசுத் தின விழாவில் தலைமை விருந்தினராக சிசி கலந்து கொண்டார். எகிப்து இராணுவத்தின் படையினரும் இராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்டது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

0

பாலஸ்தீன விடுதலை இயக்கம் பொதுவாக பாலஸ்தீன மக்களின் குரலைப் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தும் அமைப்பாக ஐ.நாவினால் அங்கீகரிக்கப்பட்டது. ஆயினும் அந்த இயக்கமும் சரி, அதன் போட்டி இயக்கங்களும் சரி தொடர்ச்சியாக பல தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டன. அன்றாடம் நிகழ்ந்த வெடிகுண்டுத் தாக்குதல்கள் தவிர பல விமானக் கடத்தல் சம்பவங்களிலும் அவர்களது இயக்கம் தொடர்பு கொண்டிருந்தது. பாலஸ்தீன மக்களின் நியாயமான அரசியல் அங்கீகாரத்தை இந்தியா உட்பட பல உலக நாடுகள் ஒப்புக்கொண்டாலும் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல வல்லரசு நாடுகள் இஸ்ரேலுக்கே முன்னுரிமைத் தந்தனர். இதற்கு முக்கிய காரணம் யூத மக்களின் உலகளவிலான வலைப்பின்னலும் அவர்கள் பல நாடுகளில் அரசியல், வர்த்தகக் குடும்பங்களுடன் நெருங்கியத் தொடர்பில் இருந்ததுமேயாகும்.

1970 ஆம் ஆண்டுகளில் துவங்கிய கொரில்லாப் போர்முறை இன்றுவரைத் தொடர்கிறது. இடையில் அவ்வப்போது அமைதி உடன்படிக்கைகளும் செய்து கொள்ளப்பட்டன. முக்கியமாக விமானக் கடத்தல்களில் பாலஸ்தீன இயக்கங்கள் தீவிரமாக இயங்கின. அப்படியொரு சம்பவமும் அதனை இஸ்ரேல் எதிர்கொண்டவிதமும் குறிப்பிடத்தக்கது. ஏர் ஃபிரான்ஸ் விமானம் ஒன்று உகாண்டா நாட்டின் எண்டபே விமான நிலையத்துக்குக் கடத்தப்பட்டது. அந்த விமானத்தில் ஏராளமான இஸ்ரேல் நாட்டுப் பயணிகள் இருந்தனர். அவர்களது முக்கிய கோரிக்கை பலவேறு நாடுகளில் சிறையிலுள்ள தங்களது சகாக்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே. உகாண்டாவை ஆண்டு வந்த இடி அமீன் அரசும் தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பது போல் நடந்து கொண்டது. இதையடுத்து இஸ்ரேலிலிருந்து ஒரு அதிரடிப்படை எண்டபே விமான நிலையத்துக்குள் புகுந்து தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்திப் பயணிகளை மீட்டது. இச்சம்பவம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. இந்த அதிரடிப்படைக்கு பின்னாளில் இஸ்ரேல் பிரதமரான பெஞ்சமின் நேதான்யாஹூவின் அண்ணன் யோனாதன் நேதன்யாஹூ தலைமையேற்றிருந்தார். ஆனால் அம்முயற்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நடவடிக்கை ஒரு வாரத்தில் திட்டமிடப்பட்டு, 90 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டது. சுமார் 4000 கிலோ மீட்டர் தூரத்தை இஸ்ரேலிய விமானங்கள் பறந்து சென்று பயணிகளை மீட்டு வந்தது. இம்முயற்சிக்கு கென்யாவும் உதவியது. நடவடிக்கையின் போது சோவியத் ஒன்றியம் உகாண்டாவுக்கு அளித்த மிக் விமானங்கள் சுமார் 30 அழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதே போல மியூனிச் ஒலிம்பிக்ஸின் போது இரு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டு 9 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். பின்னர் விடுவிக்கும் முயற்சியில் அனைவரும் கொல்லப்பட்டனர். ஜெர்மன் அரசு சரிவர பிணைக்கைதிகளை விடுவிக்கும் முயற்சியைச் செய்யவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாத் பாலஸ்தீன தீவிரவாதிகளைத் தேடித்தேடி கொன்றது தனிக்கதை. இதுவும் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் 1977-ல் நடந்த தேர்தலில் லிக்குட் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. கூடவே ஏராளமான யூதக் குடியிருப்புகளை 1967-ல் நடந்த போரில் கைப்பற்றியப் பகுதிகளில் ஏற்படுத்தத் துவங்கியது. இது போன்ற குடியேற்றங்களே இன்று வரை இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலின் முக்கியக் காரணியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்தன. லெபனானிலிருந்து பாலஸ்தீன விடுதலை இயக்கம் தொடர்த் தாக்குதல்களை நடத்தியதால் இஸ்ரேல், லெபனானின் மீது படையெடுத்தது. அங்கிருந்து வெளியேறிய பாலஸ்தீன இயக்கம் டூனிஸ் நகரில் இருந்து இயங்கத் துவங்கியது. ஆயினும் தாக்குதல்கள் தொடர்ந்தன. கடுப்பான இஸ்ரேல் டூனிஸ் இயக்க அலுவலகங்கள் மீது குண்டு வீசி தாக்குதல் தொடுத்தது. இதனையொட்டி 1987-ல் முதல் இண்டிஃபாடா (கிளர்ச்சி) துவங்கப்பட்டது. இக்கிளர்ச்சியில் தினசரி இஸ்ரேலிய படைகளின் மீது கல்வீசித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இஸ்ரேலிய குடிமக்கள் மீது தாக்குதல்கள் நிகழ்ந்தன. காசா முனையில் இத்தாக்குதல்களை 1987-ல் துவங்கப்பட்ட ஹமாஸ் இயக்கம் முன்னெடுத்தது. இச்சமயத்தில் 1991-ல் ஈராக் அதிபர் சதாம் ஹூசன் குவைத் நாட்டின் மீது படையெடுத்தார். யாசர் அராஃபத் இந்தப் படையெடுப்பை ஆதரித்தார். சவூதி உட்பட பல அராபிய நாடுகள் அமெரிக்கச் சார்புடன் இந்தப் படையெடுப்பைக் கண்டித்தனர். எனவே பாலஸ்தீன இயக்கம் தனது செல்வாக்கை இழந்தது. பல அரபு நாடுகளிலிருந்து அந்த இயக்கம் வெளியேற்றப்பட்டது.

புதிய சூழலைப் பயன்படுத்தி அமெரிக்கா, ரஷ்யாவுடன் இணைந்து (சோவியத் ஒன்றியம் வீழ்ந்து விட்டது) 1991-ல் மாட்ரிட் நகரில் அமைதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இதில் சிரியா, லெபனான் மற்றும் ஜோர்டனுடன் யாசர் அராஃபத் இயக்கம் சாராத பாலஸ்தீனப் பிரமுகர்களும் இணைந்தனர். பின்னர் 1993, செப்டம்பர் 9 ஆம் நாள் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத் அன்றைய இஸ்ரேலிய பிரதமர் யிட்சாக் ரபினுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் இஸ்ரேலை அங்கீகரிப்பதாகவும், தனது இயக்கம் வன்முறைப்பாதையைக் கைவிடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதையொட்டி ஓஸ்லோ நகரில் அமைதி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் முயற்சியின் பேரில் இந்த அமைதி உடன்படிக்கை ஏற்பட்டது.

பாலஸ்தீன விடுதலை இயக்கம் போராட்டப்பாதையைக் கைவிட்டாலும் ஹமாஸும் ஈரானின் ஹிஸ்புல்லாவும் தீவிரவாதத்தைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தன. இஸ்ரேல், காசா பகுதியையும், மேற்குக் கரைப்பகுதியையும் பாலஸ்தீன நிர்வாகத்திடம் அளித்தாலும் இஸ்ரேலிய மக்கள் மீதான தாக்குதலை அவை நிறுத்தவில்லை. இந்தத் தனி நிர்வாகப் பகுதியின் தலைவராக யாசர் அராஃபத் தேர்வு செய்யப்பட்டார். ஆயினும் ஹமாஸ், காசா பகுதியின் நிர்வாகத்தைக் கைப்பற்றியது. இது ஹமாஸுக்கும், பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்குமான போட்டியாக மாறியது. மீண்டும் 2002-லிருந்து 2006 வரையில் தற்கொலைப்படைத் தாக்குதல்கள் நிகழ்ந்தன. இதனிடையே 2003-ல் இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷரோன் காசாவிலிருந்து இராணுவத்தை விலகிக்கொண்டார். பின்னாளில் காசாவிலிருந்து ராக்கெட் தாக்குதல்கள் நடத்துவதற்கு வழி வகுத்தது இந்நடவடிக்கை.

ஹமாஸ், இஸ்ரேலியப் படை வீரர் ஒருவரைப் பிணைக்கைதியாகப் பிடித்து வைத்துக் கொண்டு தனது சகாக்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்யச் சொன்னது; அவ்வாறே செய்யவும்பட்டது. ஒரு இஸ்ரேலிய வீரருக்காக 1000-கும் மேற்பட்ட பாலஸ்தீனக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஒருபுறம் ஹமாஸ் என்றால் இன்னொருபுறம் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா 2006 முதல் இஸ்ரேல் மீது லெபனானின் நிலத்தினைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல், லெபனான் மீது படை எடுத்து தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. பின்னர் ஓரளவு தாக்குதல்கள் கட்டுப்பட்டன.

பாலஸ்தீன சுயாட்சிப் பகுதி துவங்கப்பட்ட பிறகு காசா மற்றும் மேற்குக் கரையிலிருந்து தாக்குதல்கள் குறைந்தன. பாலஸ்தீன உடன்படிக்கைக்குப் பிறகு இஸ்ரேல் பிரதமர் யிட்சாக் ரபீன் சுட்டுக்கொல்லப்பட்டார். பாலஸ்தீனர்களுக்கு சலுகைக்காட்டுவதாக யூத வெறியர் ஒருவர் கருதியதால் அவர் கொல்லப்பட்டார். அதற்கு முன்னர் அராஃபத்துக்கும் ரபீனுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் பதவிக்கு வந்த எஹூட் பராக் மேலும் சில தளர்வுகளை பாலஸ்தீனப் பகுதிகளுக்கு வழங்குவதாகத் தெரிவித்தார். ஏனோ இதை அராஃபத் நிராகரித்தார். பராக்கின் வாக்குறுதிபடி சுமார் 75% பாலஸ்தீன நிலப்பகுதிகள் பாலஸ்தீனர் வசம் வழங்கப்படும். அயல்நாடுகளிலுள்ள பாலஸ்தீனர்களுக்கு இழப்பீடும் கொடுக்கப்படும். அராஃபத் இவற்றை நிராகரித்ததோடு பதிலுக்கு அவர் தரப்பிலான கோரிக்கைகள் எதையும் முன் வைக்கவில்லை. இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து அளித்த இந்த வாய்ப்பை அராஃபத் ஏற்றிருந்தால் ஓரளவுக்கேனும் சமரசம் ஏற்பட்டிருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். பின்னர் நிகழ்ந்த பல மோதல்களுக்கும் இன்று இஸ்ரேல் காட்டும் கடுமைக்கும் தேவை இருந்திருக்காது.

பாலஸ்தீனத்தில் நடந்த தேர்தலில் ஹமாஸ் வென்றாலும் இஸ்ரேலை ஹமாஸ் அங்கீகரிக்காதலால் சுயாட்சிக்கான வாய்ப்பும் பறிபோனது. அராஃபத்துக்குப் பிறகு பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கும், பாலஸ்தீன நிர்வாகத்துக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்ற முகம்மது அப்பாஸ் 2011-ல் ஐ.நா அவையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதில் 1967-க்கு முந்தைய பகுதிகள் தரப்படவேண்டும்; ஜெர்சலேமைத் தலைநகராகக் கொண்ட பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கைகள் விடப்பட்டிருந்தன. நினைவுப்படுத்திக்கொள்ளுங்கள், இதைத்தான் 1947 ஐ.நா தீர்மானமும் முன்வைத்திருந்தது. அப்போது அதைப் பாலஸ்தீனர்கள் உட்பட பல அராபிய நாடுகள் ஏற்கவில்லை. அப்பாஸின் தீர்மானம் இதுவரை என்னவானது என்பது தெரியவில்லை.

பின்னர் 2012-ல் ஐ.நா அவையில் பாலஸ்தீனம் உறுப்பினர் அல்லாத நாடு எனும் தகுதியைக் கோரித் தீர்மானம் கொண்டு வந்தது. இதை ஐ.நா பொதுச் சபை ஏற்றது. ஆனாலும் இதுவரை பாலஸ்தீனம் எனும் நாடு காகிதத்திலேயே இருக்கிறது. இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்காத எந்தவொரு தீர்வையும் இஸ்ரேல் ஏற்காது. அராபிய நாடுகள் பாலஸ்தீனர்கள் குறித்துக் கவலைப்படுவதை நிறுத்திவிட்டன. ஈரான் அப்பிரதேசத்தில் ஒரு வஸ்தாது எனும் நிலையை உருவாக்க நினைக்கிற நிலையில் சவூதி, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட பல ஈரான் எதிர்ப்பு நாடுகள் இஸ்ரேலுடன் 2010-க்குப் பிறகு தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டுவிட்டன.

ஈரான், சிரியா, ஈராக், லிபியா மற்றும் லெபனான் ஆகியவை ரஷ்யாவின் நண்பர்களாக இஸ்ரேலின் பெருகி வரும் செல்வாக்கை எதிர்க்க முனைந்துள்ளன. இந்நாடுகளின் பலம் எண்ணெய்ப் பொருளாதாரம்.

உலகம் முழுதும் எண்ணெய்க்கு மாற்று எரிசக்தி பயன்பாட்டுக்கு வரும்போது இவற்றின் பொருளாதார பலமும் குறையும். எனவே இந்நாடுகளை நம்பி மேலும் போரினை நடத்தாமல் ஹமாஸும், பாலஸ்தீன விடுதலை இயக்கமும், பாலஸ்தீன மக்களும் நல்லதொரு, கௌரவமான தீர்வை எட்டுவதே அப்பிரதேசத்தின் நலன்களுக்குப் பொருத்தமானது. இரண்டு நாடுகள் எனும் தீர்வே நீண்ட கால அமைதிக்கு உதவும் என்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

(தொடரும்)

பகிர:
ரமேஷ் கிருஷ்ணன் பாபு

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர், படைப்பாளர். 2000ஆம் ஆண்டு முதல் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் பணியாற்றியவர். 'செப்.11: வரலாறும், பின்னணியும்', 'கூடங்குளம்: வரமா? சாபமா?' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *