Skip to content
Home » இஸ்ரேல் #11 – மதரீதியிலான துன்புறுத்தல்கள்

இஸ்ரேல் #11 – மதரீதியிலான துன்புறுத்தல்கள்

மதரீதியிலான துன்புறுத்தல்கள்

மதரீதியிலான துன்புறுத்தல்களை ஏற்கனவே தோற்றம் பகுதியில் பார்த்தோம். குறிப்பாக வரி விதிப்பு, கோயில் இடிப்பு போன்ற பெரும் துன்பங்களை யூதச் சமூகம் எதிர்கொண்டது; நாடு விட்டு இடம் பெயர்ந்துச் செல்லும் நிலைக்கும் ஆளாயினர். எனினும் இவற்றின் பின்னணியையும் தெரிந்துகொள்வது அதன் முழுமையான பரிமாணத்தைக் கொடுக்கலாம்.

கி.மு 63 ஆம் ஆண்டில் ரோமானியர்கள் ஜூடாய் பகுதியைக் கைப்பற்றினர். அப்பகுதியில் ரோமானியர்கள் எதிர்கொண்ட பிரச்னை என்பது யூதர்கள் ரோமானியக் கடவுளர்களை வணங்க மறுத்ததே. ரோமானியர்களும் இப்போக்கினை ஏற்றனர். அதற்கொரு அரசியல் காரணம் இருந்தது. முன்பொரு சமயம் தளபதி ஜூலியஸ் சீசருக்கு ஒரு போரில் வெற்றி பெற யூதர்கள் உதவியிருந்தனர். இதனால் யூதர்களுக்கு மதச் சுதந்திரம் வழங்கப்பட்டது. அவர்கள் தங்களது மத வழிபாடுகளை நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். எனினும் சந்தேகக்கண் கொண்டே யூதர்களை நோட்டமிட்டனர்.

இந்நிலையில் கி.மு 66-ல் மன்னராக நீரோ இருந்தபோது ஜூடாய் பகுதியின் ஆளுநர் சரிவர சிந்திக்காது ஜெருசலேம் கோயிலில் இருந்த பெரும் செல்வத்தைக் கைப்பற்றிக்கொண்டார். இவ்வாறு செய்தது மக்கள் அரசருக்கு வரி செலுத்த வேண்டிய தொகைக்கு ஈடானது என்றார். இச்செய்கையின் மூலம் கலவரம் மூண்டது. கடுமையாக அடக்கவும்பட்டது. அப்போதுதான் ஸ்லெட்ஸ் எனும் யூதப்படை உருவாக்கப்பட்டு ஆங்காங்கே ரோமானியர்களின் மீதும், ராணுவத்தின் மீதும் தாக்குதல்களை நடத்தினர். மன்னர் நீரோ பெரும்படை ஒன்றை அனுப்பி கிளர்ச்சியை ஒடுக்கினார். கி.பி 68 வாக்கில் ரோமானியர்களின் கை ஓங்கியது. அமைதி நிலைநாட்டப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜெருசலேம் கோயிலும் தகர்க்கப்பட்டது. பின்னர் மஸாடா எனும் கோட்டை வீழும் வரை ஸெலெட்டுக்களின் போராட்டம் தொடர்ந்தது.

தொடர்ச்சியான கலவரங்கள் ஏற்படாமல் இருக்க ரோமானியர்கள், யூதர்களை நாட்டின் பல பகுதிகளுக்கு இடம் பெயர்த்தனர். ஆயினும் மீண்டும் கலவரங்கள் கி.பி.115-116-களில் மத்திய கிழக்கில் எழுந்தன. இந்நிலையில் இடிக்கப்பட்ட கோயிலின் இடத்தில் ஜூபிடர் கடவுளுக்கு (குரு அல்லது வியாழன் கிரகத்தைக் குறிக்கும் கடவுளுக்கு) ஒரு கோயில் எழுப்பப்படும் என்று பேரரசர் ஹெட்ரியான் அறிவித்தவுடன் ஒரு கலவரம் எழுந்தது. கலவரம் அடக்கப்பட்டதும், மீண்டும் இடப்பெயர்ந்தார்கள் யூதர்கள். என்றாலும் கூட யூத மதத்தின் வழிபாட்டு உரிமைகள் பறிக்கப்படவில்லை.

அதன் பின்னர் கிறிஸ்துவைக் கொன்றவர்கள் எனும் பெயரில் யூதர்கள் ஐரோப்பா முழுதும் மத்திய காலங்களில் ஒடுக்கப்பட்டனர். கட்டாய மதமாற்றம் செய்தல், வெளியேற்றுதல் உட்பட பலவாறான ஒடுக்குமுறைகள் தொடர்ந்தன. சிலுவைப் போர்கள் காலத்திலும் யூதர்களே அதிகம் பாதிப்படைந்தனர். பின்னர் பதினான்காம் நூற்றாண்டில் ஏற்பட்ட பூபோனிக் ப்ளேக்கினால் 75-200 மில்லியன் மக்கள் இறந்தனர். இதற்கு யூதர்களே காரணம் என்று கூறப்பட்டது. கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி இஸ்லாமும்கூட துவக்கம் முதலே யூதர்களை ஐயத்துடன் நோக்கியது. நபிகள் மெதினாவுக்கு வந்தபோது யூதர்களும் அவரை வரவேற்றனர். ஆனால் பின்னர் யூதர்கள் பாகன் தரப்பாரிடம் ரகசியமாக கூட்டு வைத்துக்கொண்டு நபிகளைக் கொல்ல முடிவெடுத்ததாகக் கூறப்பட்ட வதந்தியால் யூதர்கள் மீதான தாக்குதல்களும் கொலைகளும் விரட்டியடிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தேறின.

ரஷ்யாவின் ஜார் மன்னர்கள் காலத்திலும் யூதர்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாயினர். ஐரோப்பாவில் நிகழ்ந்த பல்வேறு கொடுமைகளுக்குப் பிறகு போலந்து போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த யூதர்கள் அங்கெல்லாம் ரஷ்யாவின் ஆட்சி நடந்துகொண்டிருந்ததைத் தங்களுக்கு சாதகம் என்றே நினைத்தனர். ஆனால் நிகழ்ந்ததோ வேறு. குறிப்பாக மூன்றாம் அலெக்ஸாண்டர் காலத்திலிருந்து 1917-ல் நிகழ்ந்த பொதுவுடமைப் புரட்சி வரையிலும் யூதர்கள் ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு என்று தனியே சட்டங்களும் இருந்தன. ஏராளமான கலவரங்களில் யூதர்களைக் கொல்வதே நோக்கமாக இருந்துள்ளது. மேலும் இதற்கு ரஷ்ய அரசின் மறைமுக ஆதரவும் இருந்ததாகக் கூறப்பட்டது. இதனால் யூதர்கள் தங்களை பிற சமூகத்தின் பிரிவுகளோடு இணைத்துக்கொள்ள தாரளவாத, சமத்துவக் கொள்கைகளை பின்பற்றினர்.

பின்னர் ஏற்பட்ட சோவியத் ஒன்றிய அரசின் கட்டுப்பாடுகளால் பல யூதர்கள் தங்களை “சோஷலிஸ்ட்கள்” என்று அழைத்துக் கொள்ளத் துவங்கினராம்! புரட்சிகர ரஷ்யாவில் பழைய ஆட்சியாளர்களின் பார்வையில் விசுவாசமற்றவர்கள்; புரட்சிகர அரசோ அவர்களைத் தேவையற்ற, காலாவதியான சமூகமாகப் பார்க்கத் துவங்கினர். இதனால் தங்கள் அடையாளம் என்ன என்பதில் யூதர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. 1950-களில் சோவியத் ஒன்றியத்தில் யூதர்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து பரவலாகப் பேசப்பட்டது. சோவியத் புரட்சியால் போலந்து போன்ற நாடுகளுக்கு ஜார் ஆட்சியில் இருந்து விடுதலை கிடைத்தது. இதனால் அவற்றில் சிறிது காலம் நிம்மதியாக இருந்தனர். ஆனால் அதுவும் ஹிட்லரின் நாஜிக் கட்சி மூலம் தகர்ந்துப் போகத் துவங்கியது.

ஹிட்லருக்கு முன் ஏராளமான யூத ஒடுக்குமுறைகள் இருந்தன என்றாலும் அந்த ஒடுக்குமுறையை ஒரு இயக்கமாக, திட்டமிட்ட, மூர்க்கமான தொழில் ரீதியிலான அணுகுமுறைகளுடன் ஹிட்லரால் செய்யப்பட்டது. துவக்கத்திலிருந்தே யூதர்களால்தான் ஜெர்மனி முன்னேற முடியவில்லை என்பதை நிறுவும் நோக்கத்துடனேயே பரப்புரைகள் கட்டமைக்கப்பட்டன. ஹிட்லர் தனது பதவியை உறுதி செய்துகொண்டப் பிறகு இது மேலும் வலுப்பட்டது. போதாக்குறைக்கு வெளி ஆதரவும் கிடைத்தது. இரண்டாம் உலகப் போர் ஒருபுறம் போர் நடந்து கொண்டிருந்தாலும் இன்னொரு புறம் தீவிரமாக யூதப் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. ஹிட்லரின் ரகசியப் போலிஸும், எஸ் எஸ் பிரிவினரும் பிற நாஜித் தலைவர்களுக்குத் தெரியாமலே ஏராளமான முகாம்களில் யூதர்களை அடைத்து வைத்துக் கொன்றனர். விஷவாயுக்களாலும், துப்பாக்கியால் சுட்டும் யூதர்களை கும்பல் கும்பலாகக் கொன்றனர். இது தவிர நேரடியாக விமானத் தாக்குதல்கள் உட்பட பலவாறாகவும் யூதர்களைக் குறிவைத்துக் கொன்றனர்.

படை எடுத்து கைப்பற்றிய நாடுகளில் வசித்து வந்த யூதர்களையும் கூட்டம் கூட்டமாக அடைத்து வைத்துக் கொன்றனர். சுமார் அறுபது லட்சம் யூதர்கள் 1939- 1945 வரையில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஐரோப்பாவின் பல இடங்களிலிருந்து யூதர்களை ரயில்கள் மூலம் போலந்துக்கு அழைத்து வந்து முகாம்களில் அடைத்தனர். இம்முகாம்கள் கைப்பற்றப்பட்ட பகுதியில் இருந்ததால் ஜெர்மனியில் வசிப்போருக்கு இது பற்றி அறியும் வாய்ப்பின்றி போனது. மனித வரலாற்றில் யூதப் படுகொலைகளைப் போல கொடூரமான, திட்டமிட்ட படுகொலைகள் நிகழ்ந்ததில்லை. இன்றும் எத்தனையோ நாடுகளில் ஒடுக்குமுறை சண்டைகள், கலவரங்கள் நிகழ்கின்றன. அவற்றை உலகம் முழுதும் உடனடியாகவே அறிகிறோம். ஆனால் என்ன நடக்கிறது என்பதே தெரியாமலே அறுபது லட்சம் பேரைக் கொல்ல முடியும் என்பது மனித கற்பனைக்கு அப்பாற்பட்டது.

ஹிட்லரைப் பொறுத்தவரையில் முதலாம் உலகப் போரில் ஜெர்மன் தோற்றதற்கு காரணங்களில் முதன்மையானவர்கள் யூதர்கள். கூடவே, சோஷியல் டெமாக்ரேட்டுகள், கம்யூனிஸ்ட்கள் எனப் பலரும் அடங்குவர். இதில் ஹிட்லருக்கு யூதர்கள் மேல் பகைமை உணர்ச்சி ஏற்படக் காரணமாக இரு சிந்தனையாளர்களும் இருந்தனர். இருவரும் அரசியல்வாதிகள் வேறு. ஷோனரெர், லூகர் என அந்த இருவரும் ஜெர்மன் தேசியவாதிகள். ஹோனரெர் ஆஸ்திரியோ-ஹங்கேரியப் பேரரசின் ஜெர்மன் மொழி பேசும் பகுதிகள் ஜெர்மனியுடன் இணையவேண்டும் என்று வாதிட்டார். மேலும் யூதர்களுக்கு முழுக் குடியுரிமை வழங்கக்கூடாது எனவும் கூறினார். வியென்னாவின் மேயராக இருந்த லூகர் சமூகச் சீர்திருத்தங்கள் மற்றும் ஆண்டி-செமிடிசம் இரண்டும் எப்படி நன்மைகளைத் தரும் என்று கோடிட்டுக்காட்டியவர் என ஹிட்லர் தனது மெயின் காம்ஃப் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

லூகரை எக்காலத்திலும் சிறந்த ஜெர்மன் மேயர் எனவும் புகழ்ந்துள்ளார். ஹிட்லர் வியென்னாவில் ஓவியராக வாழ்ந்து வந்தவர். பின்னாளில் ஜெர்மன் அதிபரான பிறகு லூகரின் பல்வேறு யோசனைகளை நடைமுறைக்கு கொண்டு வந்தார்.

ஹிட்லரைப் பொறுத்தவரை முதலாளித்துவம், கம்யூனிசம் இரண்டுமே யூதர்களின் சதிக் கோட்பாடுகள். இரண்டுமே யூதர்களால் உருவாக்கப்பட்டது. தங்களைப் பாதுகாத்துக்கொள்ள யூதர்கள் எதையும் செய்வார்கள் என ஹிட்லர் கருதினார். இப்படியொரு சிந்தனை ஐரோப்பா முழுதும் பலகாலமாகவே நிலவி வந்தது. ஹிட்லர் அதை பெரிதுபடுத்தினார் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் பல பொதுவுடமை சிந்தனையாளர்கள், கார்ல் மார்க்ஸ் உட்பட, யூதர்களாக இருந்தனர். யூதர்களின் மூலதனம் உலகம் தழுவியது என்பது அறியப்பட்டிருந்தாலும் எந்தவொரு பொருளாதாரத்தையும் அசைக்க வல்லது அல்ல. இதை ஜெர்மனியிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

ஜெர்மனியில் வசித்த யூதர்கள் மொத்த மக்கள் தொகையில் 1% கூடக் கிடையாது. அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களைப் புறக்கணிப்பு செய்ய 1933 ஆம் ஆண்டு முதலே நாஜிக்கட்சி அறைகூவல் விடுத்து செயலிலும் அதைச் செய்து காட்டியது. யூதர்கள் ஜெர்மனியின் வளர்ச்சிக்கு இடையூறானவர்கள் என்ற ஹிட்லரின் வாதத்தை ஜெர்மன் சமூகம் ஏறக்குறைய நம்பியது. ஹிட்லரின் பேச்சும் பிரச்சார பலமுமே அதற்கு காரணம். ஹிட்லரின் இன வெறுப்பும், அதன் கிறிஸ்துவ பின்னணியும் – பல நூற்றாண்டுகளாக உருப்பெற்ற கருத்து – மத ரீதியாக யூதர்கள் சந்தித்து வந்த கொடுமைகள் முழுமையாக அரசியல் நோக்கமுடையதாக மாறியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தனித் தேசம் அமைக்க வேண்டியத் தேவையை மத வெறுப்பு உருவாக்கவில்லை. மாறாக அது அரசியல் தழுவியதாக மாற்றப்பட்டதால் அரசியல் ரீதியிலானதாக மாறியது.

இன்றைய தலைமுறையினர் இடையே யூதப் படுகொலைகள் குறித்த அறியாமையுள்ளது என்கின்றது பல ஆய்வுகள். குறிப்பாக, ஐரோப்பிய, அமெரிக்கத் தலைமுறையினர் இடையே யூதப்படுகொலைகள் குறித்த அறியாமை அதிகம் என்கிறது. இதில் ஜெர்மனியும் அடங்கும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகும் கூட போலந்து, ஹங்கேரி போன்ற நாடுகளில் யூதர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்தன. இதனால் ஒரு காலத்தில் லட்சக்கணக்கில் இந்நாடுகளில் வாழ்ந்து வந்த யூதர்கள் ஆயிரக்கணக்கில் சுருங்கினர். சோவியத் ஒன்றியத்திடம் இருந்து யூதர்கள்மீதான மாற்றுப்பார்வைகள் அதன் கூட்டணி நாடுகளிலும் எதிரொலித்திருக்கலாம். இதை விட யூதப் படுகொலைகளே நடக்கவில்லை என்று வாதிடும் நிபுணர்களும் இன்றுவரை இருக்கிறார்கள்.

இன்றைய சூழலில் இஸ்லாமிய நாடுகள் அதிலும் குறிப்பாக மத்தியக் கிழக்கில் இஸ்ரேலுக்கு எதிரான மன நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் சீனாவும், ரஷ்யாவும் தங்களின் நலன்களுக்காக ஈரானையும், சவூதியையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவதால் இஸ்ரேல் இஸ்லாமிய நாடுகளுடன் மேலும் நெருங்குவது மேலும் கடினமாகலாம். ஈரானும், சவூதியும் இஸ்ரேலை ஏற்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. ஆனாலும் இஸ்ரேலிய தொழில்நுட்பம் சவூதிக்கு பல விதங்களில் தேவைப்படுவதால் முற்றிலும் இஸ்ரேலை ஒதுக்க முடியாது. மேலும் இஸ்ரேல் உலகளவில் தனது முக்கியத்துவத்தை உணர்த்தி வருவதால் இஸ்லாமிய நாடுகள் மட்டும் இஸ்ரேலை ஒதுக்க முயல்வது என்பது இன்னொரு வெறுப்பு அரசியலுக்கே வித்திடும்.

மத்தியக் கிழக்கில் இன்று நிலவும் அரசியல் குழப்பங்கள் இஸ்ரேலுக்கு சாதகமாகவே உள்ளது. மத்தியக் கிழக்கில் மக்கள் ஆட்சிக்கான முனைப்பு ஏற்படுமா என்பது ஐயமாகவே உள்ளது. அப்படி ஏற்பட்டால் அதுவும் இஸ்ரேலுக்கே சாதகமாக முடியும். ஏனெனில் ஆட்சியாளர்களிடம் இருக்கும் அரசியல் கருத்தியல் சார்புகள் சாமான்ய மக்களிடையேயும் இருக்கும் என்பதற்கில்லை. நிலைத்த வளர்ச்சி தேவை என்றால் அமைதி தேவை. இதை போர்கள் அற்றச் சூழலே கொடுக்கும் என்பதால் மக்களாட்சியில் அதற்கே முன்னுரிமை இருக்கும். ஆகையால் இஸ்ரேல் தொடர்ச்சியான ஒதுக்குதலை எதிர்கொள்ளத் தேவையிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய மாற்றங்களே யூத மக்களுக்கும் வருங்காலத் தலைமுறைகளுக்கும் தேவையாகவுள்ளது.

(தொடரும்)

பகிர:
ரமேஷ் கிருஷ்ணன் பாபு

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர், படைப்பாளர். 2000ஆம் ஆண்டு முதல் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் பணியாற்றியவர். 'செப்.11: வரலாறும், பின்னணியும்', 'கூடங்குளம்: வரமா? சாபமா?' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *