இஸ்ரேலின் தோற்றத்திலிருந்தே அதன் பெரும்பான்மைச் சமூக வெளி எப்படியிருக்கும் எனும் கேள்வி எழுந்தது. ஏனெனில் யூதப் படுகொலைகளுக்குப் பிறகு உலகம் முழுதும் இருந்து யூதர்கள் இஸ்ரேலில் குடி புகுந்தனர். அப்போதைக்கு இஸ்ரேலின் இருப்பைத் தக்கவைக்கத் தேவையான நடவடிக்கையாக அது கருதப்பட்டது. இருபது அல்லது முப்பது ஆண்டுகள் கழித்து வேறொரு தலைமுறை உருவாகியபோது சமூகத்தின் பன்முகத்தன்மை வெளிப்பட்டன. அவர்கள் ஒரே யூத சமூகமல்ல; பல நாடுகளில் இருந்து வந்த மக்கள் தங்களுக்கென்று தனித்ததொரு அடையாளத்தை வைத்துள்ளனர் என்பது உணரப்பட்டது. இதுவே யூத சமூகத்தில் நவீனத்துவத்தின் அறிமுகமாக மாறியது.
இன்றைய யூதச் சமூகம் “தாராளமயப்பட்டதாக” கருதப்படுகிறது. பழமைவாத யூதம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. யூத மதத்தினர் பிற மதத்தினரை மணப்பது சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆயினும் இது சமூகத்தில் பரவலான அங்கீகாரத்தைப் பெறவில்லை. குறிப்பாக, பழமையான யூத மதப் பிரிவினர் இது யூத அடையாளத்தைக் கொன்றுவிடும் என்று அச்சப்படுகின்றனர். திருமணம் மட்டுமின்றி பிற மதச் சடங்குகளிலும் கூட மாற்றங்கள் ஏற்படுவதை பழமைவாத யூதர்கள் விரும்புவதில்லை.
இன்றைய நவீன உலகச் சிந்தனைகளுக்கு யூத இளம் வயதினர் விலக்காக இருக்க இயலாது. பெரும்பாலான யூதர்கள் தாராளவாதிகளாக இருப்பதற்கு இள வயது நபர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதே காரணம். மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை இளைஞர்கள் என்கிறது அண்மையில் கணக்கிடப்பட்ட புள்ளி விவரம். இவர்களது குறைந்தபட்ச வயது 20 என்றும் கூறப்படுகிறது. இதன் தாக்கம் சமூகத்தில் காணப்படுவது யதார்த்தமானது.
இஸ்ரேலின் மக்கள் தொகை சுமார் 1 கோடியை நெருங்குகிறது. அடுத்த இரண்டாண்டுகளில் கோடியை எட்டிவிடும். இதில் 70 லட்சம் பேர் யூதர்கள். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் சுமார் 20 லட்சம். இதரர் பிற நம்பிக்கைகளைச் சார்ந்தவர்கள் என தேசிய மக்கள் தொகைக் கணக்கு அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் ட்ரூஸ் உட்பட பல பிற மதத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். சிறிதளவில் இந்துக்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
யூத பழமைவாத மற்றும் சீர்திருத்த யூத மதப்பிரிவினர் இடையே மோதல்கள் உள்ளன. பழமைவாத யூதம் மட்டுமே அதிகாரபூர்வமான யூத மதமாக இருக்கிறது. அவை விதிக்கும் வழிமுறைகளுக்கு ஏற்ப நடக்கும் சடங்குகளுக்கு மட்டுமே சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைக்கிற சூழலும் உள்ளன. சீர்திருத்தப் பிரிவினர் மேற்கொள்ளும் மதமாற்றச் சடங்குகளுக்கு, குறிப்பாக அந்நிய மண்ணில் நிகழும் போது யூத மதத்துக்குத் திரும்புதல் எனும் வாதத்தின்படி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பல்வேறு மதத்தினரின் மதமாற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
குறிப்பாக, கிறிஸ்துவ மிஷனரி நடவடிக்கைகளுக்குத் தடையில்லை; ஆனால் மதமாற்ற செய்யும் நோக்கத்துடன் நிதியளிப்பது, பிரசுரங்கள் அளிப்பது சட்டவிரோதமாகும். ஒட்டுமொத்த மிஷனரி நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கும் முயற்சிகளும் நிகழ்ந்துள்ளன. முக்கிய சமூக நிகழ்வான திருமணங்களில் வரும் சட்டத் திருத்தம், யூத அரசு/யூத சமூகம் எனும் நிலைப்பாட்டைச் சிதைத்துவிடும் என்று பழமைவாத யூதர்கள் கவலைக்கொள்கின்றனர்.
கடந்த 2010-ல் மதமற்ற தனிநபர்கள் திருமணம் செய்து கொள்ளும் வகையில் அனுமதி வழங்க ஒரு சட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதுவரை அந்தந்த மதங்களின் ஆண்/பெண் இருபாலருக்கும் இடையில் திருமணம் செய்து கொள்ளும் வகையிலேயே சட்டங்கள் இருந்து வந்தன. இப்போது யூதர்களை மண முடிக்கும் தகுதி உடையவர்கள் அல்லது தகுதி அற்றவர்கள் எனும் பிரிவுகளை சிவில் திருமணச்சட்டம் ஏற்படுத்துவதையே பழமைவாதிகள் ஆட்சேபிக்கின்றனர்.
இஸ்ரேலில் கட்டாய ராணுவ சேவை நடைமுறையிலுள்ளது. வயது வந்த ஆண், பெண் என இரு பாலரும் ராணுவத்தில் இணைந்துப் பயிற்சி பெற வேண்டும். இஸ்ரேலை ராணுவச் சமூகம் எனப் பலரும் கேலி செய்ய இதுவே காரணம்.
பழமைவாதிகளில் ஒரு பிரிவினரான ஹரேடிகள் தங்களைத் தீவிரமான பழமைவாதிகளாக கருதிக்கொண்டு ராணுவ சேவையிலிருந்து விலக்கு கேட்கின்றனர். ஏனெனில் அவர்கள் மரபு ரீதியில் யூத மதக் கோட்பாடுகளைக் கற்றுக்கொள்வதால் அந்தப் பிரிவு ஆண்கள் ராணுவத்தில் இணையாமல் இருக்க உரிமை கோருகின்றனர். இப்போது இவ்வாறு விலக்குக் கேட்பவர்கள் சுமார் 10% பேராக உயர்ந்துவிட்டனர். ராணுவத்தில் பணியாற்ற ஒரு பெரியப் பிரிவானது விலக்கு கேட்பது ஆபத்தானது என்று மதச்சார்பற்ற யூதர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேல் தன்னை ராணுவ ரீதியில்தான் பாதுகாத்துக் கொண்டது. இதுதான் அதனை இன்று உலகளவில் தக்கவைத்துள்ளது. இவ்வாறு நாங்கள் ராணுவத்தில் சேர்வதிலிருந்து விலக்கு கொடுக்கும்படி பெரும்பாலோர் கேட்கும்போது ராணுவம் என்னவாகும்? இதுவே கேள்வியின் பின்னுள்ள சாராம்சம்.
வயது வந்த ஆண்களுக்கு முதலில் கடிதம் அனுப்பப்பட்டு நேர்க்காணலுக்கு அழைக்கப்படுவர். ஒரு நாள் முழுதும் நேர்க்காணல் நடத்தப்படும். பின்னர் தேர்வானவர்களைப் பயிற்சிக்கு அனுப்புவர். பெண்களுக்கு சலுகை உண்டு. மத ரீதியிலான பயிற்றுவிப்பில் இருக்கும் பெண்கள் தன்னார்வலர்களாகப் பணியாற்ற தனிப்பிரிவு உண்டு. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு ராணுவப் பணி கட்டாயமில்லை. ஆயினும் தன்னார்வலர்களாக இணைந்து பணியாற்றலாம். ட்ரூஸ் மற்றும் பிறருக்கு ராணுவச் சேவை கட்டாயம்.
தங்களை அமைதிவாதி என்று கருதுவோர் அதனை நிரூபிக்க ஒரு குழு முன் தோன்றி, தேர்வாக வேண்டும். குழு அவரை அமைதிவாதி என்று கருதினால் ராணுவப் பணியிலிருந்து விலக்கு கிடைக்கும். இஸ்ரேல் கட்டாய ராணுவ சேவையைத் தவிர்த்து தன்னார்வலர் அடிப்படையில் பணி செய்ய வாய்ப்பளிக்க சிந்தித்து வருகிறது. இளைஞர்கள் மத்தியில் ராணுவத்தில் சேர ஆர்வமின்மை, சலுகைகள் கேட்போர், ராணுவப் பட்டியலில் இருந்து தவிர்ப்போர் ஆகியோரது எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதால் இப்படியொரு முடிவை எடுத்துள்ளனர்.
ராணுச் சேவை என்பது வயது வந்த அனைவருக்குமானதாக இருப்பினும் இஸ்ரேல் அரசு சுமார் 4% மட்டுமே அதற்காகச் செலவழிக்கிறது. ஆனாலும் மேலை நாடுகளின் பார்வையில் இந்த விழுக்காடு அதிகமானதே. ராணுவ ஆய்வுக்கும் உற்பத்தித் தொழிலுக்கும் ஆகும் செலவு தவிர்க்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ராணுவத் தொழில்நுட்பம் மேம்பட்டது என்பதால் செலவு குறைவு. மேலும் ராணுவ ஏற்றுமதிகள் மூலம் அந்நிய செலாவணி ஈட்டப்படுகிறது.
இஸ்ரேலின் ராணுவமே அதன் இருத்தலுக்கான ஆதாரம். ராணுவம் இல்லாவிட்டால் இஸ்ரேல் நிலைக்காது என்பதால் மக்கள் தொகையில் மூன்றில் ஒருவர் எப்போதும் ராணுவச் சேவைக்கு ஆயத்தமாக இருக்க வேண்டியுள்ளது. அனைத்தையும்விட சமூக நல்லிணக்கத்துக்கு ராணுவம் பங்காற்றுவதாகவும், ட்ரூஸ்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் அரபு இஸ்லாமியர்கள் இஸ்ரேல் ராணுவத்தில் இணைந்துப் பணியாற்றுவது சாத்தியப்பட்டுள்ளது.
இஸ்ரேல் சமூகம் ராணுவத்தின் தாக்கம் இன்றி இயங்காது; தெருக்களில் ராணுவத்தினரின் நடமாட்டம் சாதாரணமானது. பாலஸ்தீன கொரில்லாக்களால் கத்திக்குத்து, ஏவுகணைத் தாக்குதல் எனப் பலவிதங்களில் அன்றாடம் மக்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் அதிகம். பள்ளிகளில் மாணவர்களுக்கு எப்படித் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வது என்பது கற்பிக்கப்படுகிறது. அனைத்து வீடுகளிலும் பதுங்கு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இஸ்ரேல் வசமுள்ள “ஆக்கிரமிக்கப்பட்டுள்ள” பகுதிகளில் நிலைமை மிக மோசம். காசாவில் அன்றாடம் ராணுவ நடவடிக்கைகளில் உண்டு. மேற்குக்கரையிலுள்ள பல நகரங்களில் இஸ்ரேலின் அதிரடி குடியேற்றப்பகுதிகளின் மீது தாக்குதல் எப்போதும் உண்டு. இது கோலன் குன்றுகள் பகுதிக்கும் பொருந்தும். ஆகையால் ராணுவத்தின் சேவை என்ன என்பதை இஸ்ரேலிய சமூகம் நன்கு உணர்ந்துள்ளது. சமூகம் எப்போதும் ஒருவிதமான பதற்றத்துடனேயே இயங்கும் சூழல் நிலவுவதை இஸ்ரேலில் காண முடிகிறது.
செறு பகை இல்லாது இருப்பதே சிறந்த நாடு என்கிறார் வள்ளுவர். சமூகமே ராணுவத் தன்மையுடன் இயங்கும் இஸ்ரேலை என்ன வகையின் கீழ் சேர்ப்பது?
சமூக இயக்கம் என்பது மத, இன வேறுபாடுகளுக்கு அப்பால் இயங்கும் தன்மையுடையது என்பதை பல நாடுகளில் நாம் காண இயலும். இஸ்ரேலும் இதற்கு விதிவிலக்கில்லை. பாலஸ்தீனர்களுக்காகப் பரிந்து பேசும் இஸ்ரேல் குடிமக்களும் உண்டு. ஆனால் அவர்கள் சிறுபான்மையினர். அரசியலில் ஏறக்குறைய அரபு இஸ்லாமியர் ஆதரவின்றி ஆட்சியமைப்பது கடினம் எனும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்ற ஆட்சியில் பென்னட் பிரதமராக நீடிக்க மன்சூர் அப்பாஸ் எனும் அரபு இஸ்லாமியரின் பங்களிப்பு இருந்ததுடன் அவர் அமைச்சராகவும் பதவியேற்றார். இப்போதைய நேதன்யாஹூ அரசு எப்போதையும் விட வலதுசாரி அரசாக இருப்பது நேர்மாறான போக்கு என்றாலும் அரபு இஸ்லாமியர்கள் இஸ்ரேல் சமூகத்தில் ஒன்றிணைந்து வாழ்வதையே விரும்புகின்றனர்.
ஹைஃபா பல்கலைக்கழகத்தின் கருத்துக் கணிப்பில் 68% பேர் (பெரும்பாலும் அரபு இஸ்லாமியர்) இஸ்ரேல் அரசில் அராபியர் பங்கேற்பதை ஆதரிக்கின்றனர் என்று தெரிய வந்தது. இந்தக் கருத்துக் கணிப்பு நிகழ்ந்த போதுதான் பென்னட் அரசும் பதவியில் இருந்தது. இஸ்ரேலுக்குள் வாழும் அராபியரின் மத்தியில் யூதர்களை மத/இன ரீதியில் வேற்றுமைக்குள்ளாக்கும் போக்கினைக் கைவிடும் மன நிலை உருவாகியிருப்பதையே எடுத்துக்காட்டுகிறது. இதே மனநிலை “ஆக்கிரமிக்கப்பட்ட” பகுதிகளான மேற்குக் கரை, காசா மற்றும் கோலன் குன்றுகளிலும் ஏற்பட்டால் இஸ்ரேலிய சமூகம் அமைதி பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது.
இஸ்ரேலிய சமூகம் இன்றும் பழமைவாத யூத மதக் கருத்துகளால் ஆளப்பட்டு வருகிறது. நவீன-பழமைவாத யூதர்கள் – குருமார்கள் ஓரு பாலின விஷயங்களில் கடுமையான எதிர்ப்பைக் காட்டுகின்றனர். அவர்களை “விகாரம்” பிடித்தவர்கள், “மன நலப் பாதிப்புக்குள்ளானவர்கள்” என முத்திரை குத்துகின்றனர். சமீபத்தில் ஜெருசலேத்தில் ஒரு பாலின ஈர்ப்பாளர்கள் பேரணி நடைபெற்றது. அப்போது ஏராளமான பொதுமக்கள் அவர்களுக்கு ஆதரவாக அணி திரண்டனர்.
அது மட்டுமின்றி, பெண் உரிமை மீதான கருத்துகளும் கூட இன்றும் பழமைவாதக் கண்ணோட்டத்துடனேயே உள்ளது. வானொலியில் பெண்களின் குரலை ஒலிபரப்புவதைக்கூட தீவிர பழமைவாத யூதர்கள் எதிர்க்கின்றனர். அரசு உதவி பெறும் வானொலியான கோல் பரமா பெண்கள் பேசுவதை/குரல்களை ஒலிபரப்புவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றி பெற்றுள்ளனர்.
யூதர்களின் முக்கிய வழிப்பாடுத்தலமான ஜெருசலேத்தின் மேற்குச் சுவர் அருகில் பெண்கள் சப்தமாக பைபிளை வாசிப்பதும், பாடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்தும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
பல்வேறு நாடுகளிலிருந்து யூதர்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்தாலும் பன்முகவயப்பட்ட சமூகமாக இஸ்ரேல் பரிணமிக்கவில்லை. இதற்கு முக்கியக் காரணம் பழமைவாதப் பிரிவினர் ஒட்டுமொத்தமாக பழமைவாதம் பேசும் கட்சிகளுக்கு வாக்களிப்பதே என்கின்றனர் இஸ்ரேலை நன்கறிந்த வல்லுநர்கள். அரசியல் அதிகாரம் சமூக சமத்துவம் பேசுவோரிடம் சென்றால்தான் சம உரிமை கிடைக்கும். இதுநாள் வரை பழமைவாதிகளே நாட்டை ஆண்டு பாதுகாத்து வந்திருப்பதால் அரசியல்ரீதியில் சமூகம் வேறு, அரசியல் வேறு என்பது பிரித்துப் பார்க்க இயலாததாக உள்ளது. பழமைவாதிகளின் வெற்றியை வெறும் ஆதிக்க அரசியலாக மட்டும் காண இயலாது. இஸ்ரேலைச் சுற்றியுள்ள அரபு இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் இஸ்ரேலை அங்கீகரித்தால்தான் இஸ்ரேலிய சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் மாற்றங்களை நாம் காண இயலும்.
(தொடரும்)