இஸ்ரேல் விடுதலையடைந்தவுடன் அதன் முன் நின்ற பிரச்சினை பொருளாதார முன்னேற்றம் என்பதையும் எப்படி அரசுக் கொள்கைகளினால் அவற்றைக் கடந்தனர் என்பதையும் அறிந்தோம். இஸ்ரேலின் முன்னேற்றத்திற்கு மிகப் பக்கபலமாக இருந்தது விவசாய வளர்ச்சி. உணவிற்காக யாரிடமும் கையேந்தும் நிலையில் இஸ்ரேல் இருக்கவில்லை என்பது நல்வாய்ப்பாக அமைந்தது. விவசாய வளர்ச்சிக்கு நில அமைப்பும், தொழில்நுட்ப முன்னேற்றமும் அடித்தளமாய் விளங்கின. இஸ்ரேலில் நல்வாய்ப்பாக வளமான நிலப்பகுதிகள் அதன் கடற்கரையை ஒட்டியப் பகுதிகளில் அமைந்துள்ளன. இஸ்ரேலில் நான்கு வகையான நிலப்பகுதிகள் உள்ளன. மத்தியத் திரைக்கடல் பகுதியை ஒட்டிய கடற்கரைப் பிரதேசம், வடக்கு மற்றும் மத்திய மலைப் பகுதிகள், கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்குப் பகுதிகள், நெகேவ் பாலைவனம் ஆகியவை நிலப்பகுதிகளாக உள்ளன.
இவற்றுடன் சில நீரோடைகள் கொண்ட பகுதிகளும் உள்ளன. மழையை நம்பியே மொத்த இஸ்ரேலும் உள்ளது. வான் பொய்த்தால் விவசாயம் பொய்க்கும் நிலை. ஆனால் விவசாயத்திற்கும் சரி, மக்களுக்கும் சரி அன்றாடம் தேவையான நீரை வழங்கும் நிலைக்கு இஸ்ரேல் வந்துவிட்டது. அதன் தொழில்நுட்ப வளர்ச்சி, குறிப்பாக நீராதாரங்களைப் பயன்படுத்தும் ஆற்றல் பல நாடுகளில், இந்தியா உட்பட, நடைமுறையில் உள்ளது. இஸ்ரேல் தனது தொழில்நுட்ப முன்னேற்றத்தை வணிக ரீதியிலும் ராஜதந்திர ரீதியிலும் பயன்படுத்துகிறது.
விவசாயம் விரிவடைய தண்ணீர் தேவை. மழையை நம்பியுள்ள பகுதிகளில் எப்படி நீரின்றி நிலைத்த/வளங்குன்றா வளர்ச்சியைப் பெறுவது? மேலும் விவசாயத்தை யார் செய்வது? இன்று விவசாயம் செய்யும் மக்கள் தொகை ஒரு விழுக்காட்டிற்கும் குறைவு. ஆனால் விடுதலை அடைந்தபோது உணவுத் தேவைக்காகவும், பிற தொழில்கள் குறைவாக இருந்ததாலும் கிராமப்புறங்களிலும், தொலைதூரப் பாலைவனப் பகுதிகளிலும் குடியேறிய மக்கள் விவசாயத்தைத்தான் நம்பியிருந்தனர். இவர்களுக்காக நீர்ப்பாசன திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தொழில்நுட்பமும் கை கொடுத்தது. இன்று உலகளவில் பயன்படும் சொட்டு நீர்ப்பாசனம் 1950களில் மழையை நம்பியிருந்த பகுதிகளில், நீராதாரம் குறைந்த பகுதிகளில் அறிமுகமாகி புரட்சியை ஏற்படுத்தியது.
இஸ்ரேலுக்கு தொழில்நுட்ப அறிவு புதிதல்ல என்று சொல்கிறார்கள். பண்டைய காலங்களில் இதே பகுதிகளில் விவசாயம் நடந்துள்ளதும், விவசாயிகள் தங்களுக்கேற்ற மரபுத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதையும் ஆவணப்படுத்தியுள்ளனர் பென் குரியன் பல்கலைக்கழகத்தினர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாலைவனப் பகுதிகளில் கூரை அமைத்து ஒவ்வொரு சொட்டு நீரையும் வீணாக்காமல் பயிர் செய்துள்ளனர் அன்றைய நபாடியன் எனும் விவசாயக் குடியினர். சொட்டு நீர்ப்பாசனம் பிறந்தது ஓர் விபத்தாகும். சிம்சா பிளாஸ் என்பவர் தனது நீர்ப்பாசன ஆய்வில் ஒரேயொரு செடி மட்டும் வளர்வதைக் கண்டு அதற்கு மட்டும் எப்படி நீர் செல்கிறது என்று ஆராய்ந்த போதுதான் நீர் சொட்டு சொட்டாக கசிந்து வேருக்கு நேரடியாகச் செல்வது தெரிய வந்தது. பின்னர் நெகிழிக்குழாய்களைப் பயன்படுத்தி சொட்டு நீர்ப்பாசனமாக அறிமுகம் ஆகியது. இஸ்ரேலின் கூட்டுறவு விவசாய சங்கமான கிப்புட்ஸ் ஹாட்செரிமுடன் இணைந்து நெடாஃபிம் எனும் நிறுவனத்தை துவங்கினார் பிளாஸ்.
சொட்டு நீர்ப்பாசனம் வருவதற்கு முன்பாகவே இஸ்ரேல் முழுவதும் பெரிய குழாய்கள் மூலம் நீர் கொண்டு செல்லப்படும் வலைப்பின்னல் முறை ஏற்படுத்தப்பட்டது. இஸ்ரேலின் நீராதார முறைகளே அதன் இருப்பைத் தக்க வைக்க உதவின என்றால் மிகையில்லை. மக்களுக்கான குடிநீர், இதர நீர்த் தேவைகள், விவசாயம் போன்றவற்றிற்கான நீர் கடல் நீரை சுத்திகரிப்பது, கழிவு நீர் மறுசுழற்சி போன்றவற்றின் மூலம் நிறைவேற்றப்படுகிறது. ஏறக்குறைய கழிவு நீர் மறுசுழற்சி 100% நடைமுறையில் உள்ள நாடு உலகளவில் இஸ்ரேல் மட்டுமே. அமெரிக்காவில் கூட 90% கழிவு நீர் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.
முன்னரே குறிப்பிட்டப்படி கிப்புட்சிம் எனும் அமைப்பு உள்ளூர் சாகுபடி தொடர்பான விவகாரங்களைக் கண்டு வந்தது. மோஷேவிம் எனும் அமைப்பு ஏற்றுமதி தொடர்பான விவகாரங்களைக் கையாள்கிறது. இரண்டு அமைப்புகளால் இஸ்ரேலிய விவசாய வளர்ச்சி மிக அதிகமாக வளர்ந்துள்ளது. ஒரேயொரு முறை, எண்பதுகளைத் தவிர விவசாய வளர்ச்சி சோடை போனதேயில்லை. நீராதாரமும், இதர தொழில்நுட்பங்களும் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டதால் இன்று உலகளவில் இஸ்ரேலிய விவசாயம் எடுத்துக்காட்டு மிக்கதாகவுள்ளது.
இஸ்ரேலில் 50% நிலப்பகுதி பாலைவனம். அங்கு நிரந்தரமாக மாறி வரும் தட்பவெப்பமும் நிலவுகிறது. ஏறக்குறைய 20% நிலப்பகுதிகள் மட்டுமே பயிர் செய்ய ஏற்றவை. எனவே அதற்கேற்றபடி திட்டமிட வேண்டும். இந்தக் கட்டுப்பாடே அதற்கான விடியலாக வாய்த்தது எனலாம். இஸ்ரேல் முதலில் நீராதாரங்களைப் பெருக்கியது; நீராதாரங்களைப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களைக் கண்டறிந்தது. சொட்டு நீர்ப்பாசனம், ஸ்பிரிங்களர்ஸ் எனப்படும் நீர்த்தெளிப்பான்கள் போன்றவை அவற்றில் அடங்கும். நம் நாட்டில் இவற்றை பெருமளவில் பயன்படுத்துகிறோம். குறிப்பாக 1992ஆம் ஆண்டு பொருளாதாரச் சீர்திருத்தங்கள், இஸ்ரேலுடன் தூதரகத் தொடர்புகளை ஏற்படுத்தியப் பிறகு வெள்ளம் போல சொட்டுநீர்ப்பாசனம் நாடு முழுவதும் பரவியது. இன்று ஓரளவுக்கேனும் விவசாயத்திற்கு நீராதாரங்கள் கிடைக்கின்றன என்பதற்கு சொட்டு நீர்ப்பாசனமே காரணம் என்றால் மிகையில்லை.
இன்று உலகம் சந்திக்கும் முக்கியப் பிரச்சினை உணவு தானியங்களில் காணப்படும் நச்சுத்தன்மை. இதை எப்படி இஸ்ரேல் எதிர்கொண்டது என்பதும் ஆர்வத்தைக் கொடுக்கும். நச்சுத்தன்மை நிலத்தின் வளத்தையும் பாதிக்கும் என்பதை உணர்ந்த தொழில்நுட்பவியலர் பசுமை உரங்களை முன்னெடுக்கத் துவங்கினர். ஆனாலும் போதுமான அளவில் அவற்றைத் திரட்டுவது சாத்தியமாகவில்லை. எனவே உயிரி-ராசாயன உரங்கள்மீது கவனம் செலுத்தினர்; அதில் வெற்றியும் பெற்றனர். மேலும் உயிரியல் தொழில்நுட்பம் மூலம் பூச்சிக்கொல்லிகளை உருவாக்கினர். மற்றொரு அறிமுகம் ரோபோடிக்ஸ் ஆகும். இவற்றின்மூலம் பயிர் சாகுபடியில் வளமான அறுவடையை நிகழ்த்த முடிகிறது. குறிப்பாக காய்கறிகள், கனிகள், பூக்கள் போன்றவற்றை பசுமைக் குடில்களிலும், திறந்தவெளிகளிலும் சாகுபடி செய்வதில் ரோபோடிக்குகள் பெரிதளவில் உதவுகின்றன.
விவசாயத்தில் காணப்படும் கடும் தொழிலாளர் பற்றாக்குறையும் இயந்திரங்களைப் பயன்படுத்தக் காரணம். இஸ்ரேல் பெருமளவில் காய், கனி, மலர்கள் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளது. இவற்றின் விலை குறைவாக இருக்க வேண்டுமென்றால் இயந்திரமயமாக்கல் செய்ய வேண்டும். எனவே, ரோபோடிக்குகள் பரவலாக உள்ளன. இயந்திரமயமாக்கலின் கீழ் டிரோன்கள், செயற்கைக்கோள் தொடர்பு, வான் கண்காணிப்பு போன்றவையும் சாகுபடியில் பயன்படுத்தப்படுகின்றன.
இஸ்ரேலின் அராவா பள்ளத்தாக்கு பழங்களின் விளைச்சலுக்குப் பெயர் பெற்றவை. பெரும்பாலும் பழ வகைகள் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதியாகின்றன. நெகேவ் பாலைவனத்தில் நீராதாரக் கட்டுப்பாடுகள் உள்ளதால் எந்தமாதிரியான பயிர்களை வளர்ப்பது என்பதில் ஐயப்பாடுகள் இருந்தன. விவசாயி ஒருவர் மழைப்பிரதேசத்தில் மட்டும் வளரும் ஆலிவ் மரங்களை கடல் நீரைக்கொண்டு பயிர் செய்துள்ளாராம். நிலத்தடியில் இருக்கும் உப்பு நீர் ஊற்றுகளிலிருந்து கிடைக்கும் நீரைக்கொண்டு இதைச் சாதித்துள்ளாராம். இப்படி ஒவ்வொருவரின் தனிப்பட்ட முயற்சியால்தான் இஸ்ரேலிய விவசாயம் முன்னணியில் உள்ளது. பாலைவன விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதத்தில் யூத தேசிய நிதியானது ஆயிரக்கணக்கான ஏக்கர் பாலை நிலங்களைப் பண்படுத்த நிதியுதவி செய்கிறது.
தனது விவசாயப் பரிசோதனைகளை வறுமையில் வாடும் ஏராளமான ஆப்பிரிக்க நாடுகளுக்கும்கூட இஸ்ரேல் கற்றுக்கொடுக்கிறது. எகிப்து போன்ற நாடுகள் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்வதில் போட்டியிடும் எனத் தெரிந்தும் அந்நாட்டு விவசாயிகளுக்கு தங்களின் தொழில்நுட்ப வளங்களை இஸ்ரேல் கொடுத்துள்ளது.
விடுதலை அடைந்த சமயத்தில் விவசாயப் பரப்பு 1,65,000 ஏக்கர்கள் ஆகும். இன்று அந்தப் பரப்பு 4,35,000 ஏக்கர்களாக உயர்ந்துள்ளது. அன்று 400 என்ற எண்ணிக்கையில் இருந்த விவசாய சமூகங்கள் இன்று 900ஆக (இதில் 136 அராபிய கிராமங்களும் அடங்கும்) உயர்ந்துள்ளன. உணவு உற்பத்தி 16 மடங்கு அதிகரித்துள்ளது. இது மக்கள் தொகையின் அதிகரிப்பைவிட மூன்று மடங்கு அதிகமாகும். இஸ்ரேலின் விவசாயப் பன்முகத்தன்மைக்கு அதன் இயற்கை அமைப்பே ஒரு காரணமாகும். அது மட்டுமின்றி சமீப காலங்களில் உலகின் பிற பகுதிகளில் இருந்தும் வறட்சியைத் தாங்கி வளரும் பயிர் வகைகளை இஸ்ரேல் அறிமுகப்படுத்தி வருகிறது.
பாலைவனப் பகுதியில் இவற்றை வளர வைப்பது குறித்து பல ஆராய்ச்சிகளை இஸ்ரேலிய விவசாயத்துறை அமைச்சகம் செய்து வருகிறது. தனது அனுபவங்களை உலகளவில் பகிர்ந்து கொள்வதில் இஸ்ரேல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 1958ஆம் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான விவசாயப் பயிற்சியாளர்களை உலகம் முழுதும் அனுப்பி வைத்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கானவர்கள் இஸ்ரேலிய நிபுணர்களின் அனுபவங்களை அவரவர் நாடுகளிலேயே பெறுகின்றனர். தங்கள் நாட்டிலும் ஆண்டுதோறும் 80 நாடுகளிலிருந்து 1,400 பங்கேற்பாளர்களை வரவழைத்து பயிற்சியளிக்கிறது.
தங்களை இஸ்ரேல் ஒடுக்குவதாக கூறும் பாலஸ்தீன தன்னாட்சிப் பகுதிகளில் இருந்தும் விவசாயப் பொருட்களை இஸ்ரேல் இறக்குமதி செய்கிறது. விலை மலிவான இப்பொருட்கள் இஸ்ரேல் விவசாயிகளுக்குப் போட்டியாக உள்ளன என்பதில் ஐயமில்லை. பன்னாட்டு வணிக கட்டுப்பாடுகளால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை இஸ்ரேல் இறக்குமதி செய்கிறது. இஸ்ரேல் அதிகமாக மீன், மீன் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கிறது. இருப்பினும் புதிய தொழில் நுட்பங்களைக் கொண்டு தற்சார்பை நோக்கி மீன் உற்பத்தி செல்கிறது. பால் உற்பத்தி, கோழிப்பண்ணை, டர்கிப் பறவைகள் வளர்ப்பு இறைச்சி ஏற்றுமதியும் முன்னணியிலுள்ள பிற விவசாயப் பிரிவுகள் ஆகும்.
(தொடரும்)
இஸ்ரேலின் விவசாய வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டுகளாக கீழே சில சுட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.