இஸ்ரேலின் தேர்தல்கள் செலவு பிடித்தவை எனப்படுகிறது. ஒரு வாக்காளருக்கு செலவழிக்கப்படும் தொகை உலகிலேயே அதிகமாக இருப்பது இஸ்ரேலில்தான் என்று பரவலாகக் கருதப்படுகிறது. இஸ்ரேலின் வாக்காளர்களின் எண்ணிக்கைக் குறைவு என்றாலும் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என அரசியல் கட்சிகள் கருதுவதால் தேர்தலில் செலவிடப்படும் தொகையும் இயல்பாகவே அதிகம் இருக்கும். தேர்தல் நடைபெறாத காலங்களில் அரசியல் கட்சிகளுக்கு செலவு என்பது அலுவலகப் பராமரிப்பு, ஊழியர்களுக்கான சம்பளம் போன்ற நிர்வாகச் செலவுகள் மட்டுமே. தேர்தல் நடைபெறும் போது வாக்காளர்களை அழைத்து வருதல், ஊழியர்களுக்கான உணவு மற்றும் பணிக்கால ஊதியம் ஆகியன முக்கியமானவை. பரப்புரைச் செலவுகளில் 25 முதல் 33 விழுக்காடு உள்ளதாகத் தெரிகிறது.
கட்சி உறுப்பினர்களே செலவுகளுக்கு அதிகம் நிதியளிப்பவர்களாக உள்ளனர் என்பது பொதுவான கருத்து. ஒரு காலகட்டம் வரையில் அரசியல் சார்பு என்பது பொறுப்பேற்கும் ஒன்றாக இருந்தது. ஏறக்குறைய 20% வரையிலான வாக்காளர்கள் கட்சிச் சார்புடன் இருந்தனர் என்று கூறப்படுகிறது. பின்னர் வந்த காலங்களில் மக்களுக்கு நேரடி அரசியலில் ஆர்வம் குறைந்தது. இதனால் நிதியும் குறைந்தது. அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நிதியைப் பெறுவது தடை செய்யப்பட்ட ஒன்று. ஆனால் உள்கட்சித் தேர்தல்களுக்காக வெளிநாட்டு நிதியைத் தனிப்பட்ட வேட்பாளர்கள் பெறுவது அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, அரசியல் கட்சிகளுக்கு 18+ வயதுடைய இஸ்ரேலிய குடிமக்கள் எவ்விதமான சர்ச்சைகளுக்கும் இடமின்றி வெளிப்படையாக இஸ்ரேலிய நாணயத்தில் 50,000 வரை வழங்கலாம். அரசியல் கட்சிகளுக்குப் பொது நிதியளிக்கும் வசதியும் உண்டு. இந்த வசதி 1969 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன் முக்கியத்துவம் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இப்படி இருந்தாலும் நிதிக் கட்டுப்பாடுகளும் தடைகளும் உண்டு. இவை அரசியல் கட்சிகளுக்கே அதிகம் பொருந்துகின்றன. பாலஸ்தீன குடியேற்றப் பகுதிகளில் இஸ்ரேலிய குடியுரிமை பெற்றவர்களும் வாக்களிக்கலாம். எனவே சிறிது சிறிதாக இஸ்ரேலியப் பரப்பு அரசியல்ரீதியிலும் விரிவடைகிறது.
விடுதலை அடைந்த நாளிலிருந்து இஸ்ரேலின் அரசியல் களம் பலவிதமான அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டதாகவே இருந்துள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டது போன்று நான்கு முக்கியப் பிரச்னைகளை ஒட்டியே அரசியல் நிலைப்பாடுகள் அமைகின்றன.
- பாலஸ்தீனம்
- மதம் மற்றும் மதத்தின் முக்கியத்துவம்
- அரசில் மதம் எந்தளவு செல்வாக்குடன் இருக்கலாம்
- சமூகப் பொருளியல் பிரச்சினைகள்
இஸ்ரேலில் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்டக் கட்சிகள் தோன்றி மறைந்துள்ளன. பெரும்பாலானக் கட்சிகள் மேற்கூறிய நான்கு வகையான பிரச்னைகளினால் உருவாகி பின்னர் மறைந்தவை. அவ்வப்போது நிகழும் சம்பவங்களின் விளைவாக அவை உருவாகி பின்னர் தேர்தல் வரைச் சென்று ஏதேனும் ஒரு பெரிய கட்சியின் நிலைப்பாட்டினால் பின்னடைவைச் சந்தித்து மறைகின்றன. எடுத்துக்காட்டாக, பாலஸ்தீனப் பிரச்னையில் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் வெற்றி/தோல்விகளைப் பொறுத்து ஒரு கருத்து வேறுபாடு எழுந்து கட்சிகள் பிரிகின்றன எனக் கொள்வோம். தேர்தலில் ஒரு பிரிவுக்கு வெற்றி கிடைத்தால் மற்றொரு பிரிவு தனது இருப்பையே இழக்கிறது. இஸ்ரேலில் தொடர்ச்சியாக அரசியல் கட்சிகளின் பிரிவு/இணைப்பு இவ்வாறான திசையில் தடம் மாறாமல் செல்கிறது. வலது, இடது, தொழிலாளர், மதவாத, மிதவாதக் கட்சிகள் என அனைத்துக் கட்சிகளும் இவ்வாறு பிரிவுகளையும் இணைப்புகளையும் கண்டுள்ளன.
தொழிலாளர் கட்சி: விடுதலைக்கு முன்பிருந்து யூதர்களின் மத்தியில் செயல்பட்டுக்கொண்டிருந்த பல இயக்கங்களின் தொகுப்பாக மாபாய் கட்சி உருவெடுத்தது. மாபாய் கட்சியே அதிகளவில் பிரதமர்களை இஸ்ரேலுக்கு வழங்கியது. இஸ்ரேல் மதச்சார்ப்பற்ற சமத்துவ நாடாக நடத்தப்படுவதற்கு மாபாயே காரணம். இருபதாம் நூற்றாண்டின் முதல் 30 வருடங்களுக்குள் தொழிலாளர் அமைப்புகளை யூத மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் நிறுவினர். யூதர்களைப் பாதுகாக்கும் இரு இராணுவ அமைப்புகளான ஹாஷோமர் மற்றும் ஹகன்னா உருவாக்கப்பட்டன.
பின்னர் 1930-களில் டேவிட் பென் குரியன் அதன் அறிவிக்கப்படாத தலைவரானார். மாபாய் உலக சமத்துவ மற்றும் தொழிலாளர் அமைப்பிலும் உறுப்பினராக இருந்தது. பல அரசியல் கட்சிகள் உலக யூத மக்களின் முன்னால் இருந்தாலும் விடுதலையை பெற்றுக்கொடுத்தக் கட்சி என்ற பெயர் மாபாய் கட்சிக்கே கிடைத்தது. முதல் தேர்தலில் ஏறக்குறைய 36% வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைத்தது. பென் குரியனுக்குப் பின்னர் தலைமைப் பொறுப்பை மோஷே ஷரேட், லெவி எஷ்கோல் ஆகியோர் ஏற்றனர். மாபாய்யின் முதல் ஆட்சிக் காலத்தில்தான் கட்டாயக் கல்விச் சட்டம் கொண்டு வரப்பட்டது. பல்வேறு சமூக நலத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. பென் குரியன் பல்வேறு கட்சிகளின் ஆதரவுடனே ஆட்சியமைத்தார். அதில் அரேபிய இஸ்லாமியர்களின் கட்சிகளும் அடங்கும். ஏனெனில் அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 61 இடங்களை மாபாய்யினால் பெற இயலவில்லை. பின்னர் 1968-ல் தொழிலாளர் கட்சி என்றொரு புதிய அரசியல் கட்சியில் மாபாய்யும் இணைந்தது.
லிக்குட் கட்சி
இஸ்ரேலின் வலதுசாரி அடையாளமும் தற்போதைய ஆளும்கட்சியுமான லிக்குட்டின் தோற்றமே இஸ்ரேலிய அரசியலில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. யோம் கிப்பூர் போருக்குப் பிறகு இஸ்ரேல் தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொள்ளவேண்டும்; மேலும் வலிமையுடனும், பன்னாட்டு அளவில் ஆழமான நட்புறவையும், வர்த்தக உறவுகளையும் கைக்கொள்ள வேண்டும்; வெறும் இராணுவ ரீதியிலான பரிமாற்றங்களை மட்டும் மேற்கொண்டால் போதாது என்றே அவர்கள் நினைத்தனர். மினேசம் பெகின் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஏரியல் ஷரோன் ஆகியோரால் 1973-ல் துவங்கப்பட்டு எதிர்பாராத விதமாக 1977 ஆண்டுத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது.
பெகினின் வரலாறு யூத பாதுகாப்பு இராணுவமான இர்குன்னை தோற்றுவித்ததில் துவங்குகிறது. அந்த இராணுவம் பிரிட்டிஷ் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதால் பிரிட்டிஷ் அரசால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார் பெகின். விடுதலைக்குப் பிறகு ஹெரூட் எனும் அரசியல் கட்சியைத் தோற்றுவித்த பெகின் முதல் தேர்தலில் துவங்கி அடுத்து வந்த எட்டுத் தேர்தல்களில் நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1977-ல் பிரதமரான அவர் மீண்டும் எதிர்பாராத வகையில் எகிப்துடன் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டார். இச்செயலைப் பாராட்ட எகிப்து அதிபர் அன்வர் சதாத்துக்கும் பெகினுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவருடைய காலத்தில் லெபனான் படை எடுப்பு, ஈராக்கின் அணு மின் நிலையத்தின் மீதான தாக்குதல் என வேறுவிதமான போர்முனைகள் துவங்கப்பட்டன.
லெபனான் கிறிஸ்துவ வலதுசாரி தீவிரவாதக் குழுவொன்று லெபனான் இஸ்லாமியர்கள் மற்றும் பாலஸ்தீனர்களைக் கொன்றது. இதனால் இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாகத் தனிமைக்கு உள்ளானது. லிக்குட்டின் தாராளவாதக் கொள்கைகளால் விலைவாசி கட்டுக்குள் அடங்காமல் போனது. இப்படி பல்வேறு பிரச்னைகளால் பெகின் பதவியைத் துறந்தார். தனது சகாவான யிட்ஷாக் ஷெமிரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தார்.
பெகினின் பதவிக்காலம் முதல் தற்போதுவரை அவ்வப்போதான இடைவெளிகள் தவிர்த்து லிக்குட் கட்சியே இஸ்ரேலை ஆட்சி செய்து வருகிறது. ஷரோன், நேதன்யாஹூ மற்றும் ஷமீர் ஆகியோர் லிக்குட் சார்பில் பிரதமராக இருந்துள்ளனர். ஷரோன் கட்சியுடனான கருத்து வேறுபாட்டால் கதிமா எனும் புதிய கட்சியைத் தோற்றுவித்து அதன் சார்பாகவும் பிரதமராக இருந்தார். இஸ்ரேலின் அதிவேக வளர்ச்சிக்கு லிக்குட்டின் பங்களிப்பு மிக முக்கியமானது. போர், அமைதி என இருபுறமும் செயல்பாடுகளை வகுத்தும், தாராளவாதக் கொள்கைகளினால் முதலில் தவித்தாலும் பின்னர் தவறுகளைக் களைந்து வெற்றி கண்டனர், லிக்குட் கட்சியினர்.
(தொடரும்)