Skip to content
Home » இஸ்ரேல் #22 – அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்பு – 3

இஸ்ரேல் #22 – அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்பு – 3

இஸ்ரேல்

இஸ்ரேலியக் கட்சிகளில் பல கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்பட்டாலும், யூத மதத்தின் செல்வாக்கை மறுத்தோ அதன் சியோனிய அடிப்படையை மாற்றி அமைக்கவோ பெரும்பாலும் விரும்புவதில்லை. ஆனால் அப்படிப்பட்ட கட்சிகள் இல்லாமல் இல்லை. பொதுவுடமைக் கட்சிகளும், மதச்சார்பற்ற கட்சிகளும் உண்டு. எனினும், அவையும் பிற சிறிய கட்சிகள் போல குறிப்பிட்டளவு செல்வாக்குடனேயே செயல்பட்டு வருகின்றன. ஆகையால், வலதுசாரித் தன்மை என்பது சிறிதளவே வேறுபட்டதாகவுள்ளது. இப்படியான போக்கை உணர்த்தும் கட்சிகள் அவ்வப்போது ஆட்சியமைக்கும் பெரிய கட்சியைத் தனது ஆதரவு எனும் ஆயுதத்தால் அழுத்தம் கொடுத்து தங்களுடைய குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்கின்றன. சிறிய கட்சிகள் எனக் கருதப்படுகின்ற கட்சிகளில் சில ஆளுங்கட்சியாகவும் சமீப காலங்களில் ஆட்சி செய்துள்ளன.

கடந்த 2021 ஜூன் முதல் 2022 வரை யாமீனா மற்றும் யேஷ் அடிட் எனும் இரு கட்சிகளின் சார்பாக முறையே நஃப்தாலி பென்னட் மற்றும் யேர் லபிட் எனும் இரு பிரதமர்கள் ஆட்சி செய்தனர். தொழிலாளர் கட்சியோ  லிக்குட்டோ இல்லாத கூட்டணி ஆட்சிகளாக அந்த ஆட்சி இருந்தது. கதிமா கட்சியைத் தவிர்த்து வேறு கட்சிகளின் சார்பில் பிரதமர்களாகி இருந்தது அப்போது மட்டுமே. ஆனாலும் மீண்டும் தேர்தல் நடந்து லிக்குட்டின் நேதன்யாஹூ மீண்டும் பிரதமராகியுள்ளார்.

சிறிய கட்சிகளில் குறிப்பிடத்தக்க கட்சிகளாகக் கருதப்படுபவை யேஷ் அடிட், ஷாஸ், யாமினா, ப்ளூ அண்ட் ஒயிட் (இஸ்ரேலின் கொடி நிறங்களைக் குறிக்கிறது), யுனைடெட் டோரா ஜூடாயிசம், இஸ்ரேல் பெய்டென்யூ, மெரெட்ஸ், ராஹ்ம் (அராபிய கட்சி), ஜாயிண்ட் லிஸ்ட், நியூ ஹோப் மற்றும் ரிலிஜியஸ் சியோனிஸ்ட் ஆகியன.

யேஷ் அடிட்: முன்னாள் பிரதமரான யேர் லெபிட்டினால் 2012-ல் நிறுவப்பட்ட இக்கட்சி நடுவாந்திர-மதச்சார்ப்பற்ற கொள்கைகளை முன் வைத்தது. லெபிட் முன்னாள் தொலைக்காட்சி இதழியலர். இக்கட்சி பழமைவாத இஸ்ரேலியர்களான ஹரேடி யூதர்களும் மதம் குறித்துக் கற்பதால் கட்டாய ராணுவச் சேவையிலிருந்து விலக்கப்பட்டிருப்பதை மாற்றியமைக்க வலியுறுத்தியது. அதேபோல கல்வி, வீட்டு வசதி ஆகியவற்றிலும் மேம்பாட்டுக்குக் குரல் கொடுத்தது. ராணுவச் சேவை விவகாரத்தில் பரந்துபட்ட கருத்தொற்றுமை சமூகத்தில் இருந்ததால் இக்கட்சிக்குச் செல்வாக்கு கிடைத்தது. இஸ்ரேலில் யூதர்கள் மத்தியில் பலப் பிரிவுகள் இருக்கும் நிலையில் ஒவ்வொரு பிரிவுக்குமான கோரிக்கைகள் தனித்தனியாக வெளிப்பட்டு அரசியல் கட்சிகளின் செல்வாக்காக வெளிப்படுகிறது.

ஷாஸ்: ஏற்கனவே சொன்னதுபோல இஸ்ரேலிய அரசியலில் செல்வாக்கு மிக்க அஷ்கேநாசி பிரிவினரின் ஆதிக்கத்தைக் குறைக்க ஸெபார்டிக் மற்றும் மிஸ்ராகி பிரிவினரின் ஆதரவு பெற்ற கட்சி. இஸ்ரேலிய மத அடிப்படையிலான கட்சிகளில் பெரியது எனவும் கூறப்படுகிறது. தற்போதைய ஆளும் கூட்டணியிலும் இடம் பெற்றுள்ளது. தொழிலாளர், லிக்குட் கட்சியின் கூட்டணி ஆட்சிகளில் பலமுறை இடம் பெற்றுள்ள கட்சி. இக்கட்சியை யூத மதகுருவான (ராபி) ஓவாடியா யோசஃப் என்பவர் 1984-ல் நிறுவினார். இஸ்ரேலிய – பாலஸ்தீனப் பிரச்னையில் நெகிழ்வான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தது. இருப்பினும் பொதுவாக யோசஃப் இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்னை தீர்க்கப்பட வேண்டியது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

யாமினா: முன்னாள் இஸ்ரேலிய நாப்ஃதாலி பென்னட்டின் கட்சி, மத அடிப்படையிலான பல கட்சிகள் மற்றும் வலதுசாரிக் கட்சிகளின் கூட்டணி. இக்கட்சி பாலஸ்தீனத்தை எதிர்க்கிறது. இஸ்ரேலின் இறையாண்மை மேற்குக் கரை வரையில் நீடித்திருப்பதை வலியுறுத்துகிறது. எனவே இதைத் தீவிரமான தேசியவாதக் கட்சி எனக் கருதுகி்றார்கள்.

ப்ளூ அண்ட் ஒயிட்: முன்னாள் ராணுவத் தளபதி பென்னி காண்ட்ஸ்சினால் துவங்கப்பட்ட நடுவாந்திர நிலைப்பாட்டைக் கொண்ட கட்சி. கடந்த 2019-ல் தேர்தல் நேரத்தில் உருவாக்கப்பட்டு லிக்குட் கூட்டணியில் இடம்பெற்ற இக்கட்சிக்கு 35 இடங்கள் கிடைத்தன. அடுத்த இரு தேர்தல்களிலும் நன்கு செயல்பட்ட இக்கட்சி பின்னர் பிளவைச் சந்தித்தது. தற்போது வெறும் 8 உறுப்பினர்களே இக்கட்சிக்கு உள்ளனர். பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளுக்குப் பின் இக்கட்சி இன்று எதிர்க்கட்சியாகவுள்ளது.

யுனைடெட் டோரா ஜூடாயிசம்: இஸ்ரேலிய மத குருமார்களின் ஒன்றிணைவு என இக்கட்சியைக் கூறலாம். அஷ்கேனாசி மற்றும் ஹரேடி பிரிவு யூத குருமார்கள் தங்களின் மரபான நிலைப்பாடுகளைத் தொடர்ந்து பேண ஏற்படுத்திக் கொண்ட கூட்டணி. அவர்களைப் பொறுத்தவரை கட்டாய ராணுவச் சேவையிலிருந்து விலக்கு, யூத மத குருமார்களின் மத ஆதிக்கம் ஆகியன தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்பதே. இக்கட்சியின் முக்கிய அம்சம் இது ஒரு சியோனிச கூட்டணி அல்ல என்பதுதான். இக்கட்சி 1992-ல் துவங்கப்பட்டது. சில காலம் பிளவுபட்டிருந்து பின்னர் 2019-ல் மீண்டும் ஒன்றிணைந்தது.

இஸ்ரேலி பெய்டென்யூ: ரஷ்யாவிலிருந்து புலம் பெயர்ந்த யூதர்களின் நலன்களைக் காக்கத் துவங்கப்பட்டது. பொதுவாக மதச்சார்பற்ற தன்மையுடன் இருக்கும் இக்கட்சி பாலஸ்தீன விஷயத்தில் வலதுசாரிகளின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறது. தனது ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்தவே இவ்வாறு செய்கிறது. இக்கட்சி பாலஸ்தீனர்களுடன் நிலப்பரிமாற்றம் செய்து கொள்வதை முன்வைக்கிறது. இதனால் இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீன மக்கள் தங்களது நிலத்தை இழந்து பாலஸ்தீனத்துக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

இவற்றைத் தவிர குறிப்பிடத்தக்க அரசியல் கட்சிகளாக ரிலிஜியஸ் சியோனிஸ்ட்கள், ஜாயிண்ட் லிஸ்ட், நியூ ஹோப், மெரெட்ஸ் மற்றும் ராஹ்ம் ஆகியன உள்ளன. இதில் ரிலிஜியஸ் சியோனிஸ்ட்கள் ஆகப் பெரும் பழமைவாதக் கட்சியாகும். பாலஸ்தீனர்களுக்கு நிலத்தை விட்டுக்கொடுப்பதை எதிர்ப்பதோடு, அதன் தலைவர் ஸ்மோட்ரிச் ஓர்ப்பால் ஈர்ப்பாளர்களுக்கு எதிராகவும், இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனர்களின் குடியுரிமையைப் பறிக்கவும் வலியுறுத்துகிறார்.

ஜாயிண்ட் லிஸ்ட் கட்சி பாலஸ்தீனர்களுடன் அமைதி உடன்படிக்கை செய்வதை ஆதரிக்கிறது. இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனர்களுக்கு சம உரிமை அளிப்பதை வலியுறுத்துகிறது. பாலஸ்தீன நாடு அமைவதை ஆதரிக்கிறது. இக்கட்சி பல பாலஸ்தீன அராபிய கட்சிகளின் இணைவு ஆகும்.

நியூ ஹோப் கட்சி நெதன்யாஹூ எதிர்ப்பாளர்களால் உருவாக்கப்பட்டது. இதைத்தவிர இது மற்றொரு லிக்குட் கட்சிதான்.

மெரட்ஸ் என்பது பல்வேறு இடதுசாரி கட்சிகளின் சங்கமம். அவர்கள் ஐநாவின் இரு நாடுகள் ஏற்பாட்டை ஆதரிக்கின்றனர். பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறித் தனி நாட்டை உருவாக்க வழிவகுக்க வேண்டும் என்கின்றனர்.

ராஹ்ம் எனும் கட்சி அராபிய இணைவான ஜாயிண்ட் லிஸ்டிலிருந்து விலகி உருவானது. விடுதலைப் பெற்ற பாலஸ்தீனத்தை ஆதரித்தாலும் இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீனர்களின் அன்றாடப் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கும் கட்சியாக இக்கட்சி விளங்குகிறது.

இதுவரையில் காணப்பட்ட அரசியல் கட்சிகளின் நிலைப்பாடானது இன்னமும் இஸ்ரேல் தனது முழுமையான நோக்கமான யூதர்களுக்கான தனித் தேசம் எனும் இலக்கை அடையவில்லை எனக் காட்டுகிறது. பழைய பைபிளில் இடம் பெற்ற முழுமையான இஸ்ரேலானது தற்போதைய கோலன்ஹைட்ஸ், மேற்குக் கரை மற்றும் காசா உள்ளிட்ட நிலப்பரப்பையும் உள்ளடக்கியதே. மேலும் இஸ்ரேல் முன்னேறிய நாடாகக் காணப்பட்டாலும் சமூக அளவில் மத அடிப்படையிலான பண்பாட்டை அழுத்தமாகப் பின்பற்றும் சமூகமாக இறுகியிருப்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

பாலஸ்தீனப் பிரச்னை சுமூகமாகத் தீர்க்கப்பட்டாலும் இஸ்ரேல் எந்தளவுக்கு முற்போக்கான, நவீன சமூகமாக உருவாகும் என்பதை உறுதியாகக் கூறமுடியாத நிலையுள்ளது. அரசியல் கட்சிகளும் இப்போக்கைப் பிரதிபலிக்கும் படியாகவே நடந்து கொள்கின்றன. ஒன்றுபட்ட பைபிள் நிலப்பரப்பைக் கொண்ட இஸ்ரேல் கிடைத்தாலும் பாலஸ்தீனர்களுக்கு தனி நாட்டை எங்கே ஏற்படுத்திக் கொடுப்பது எனும் கேள்வியும் எழும். அதற்கு இஸ்ரேலிய அரசியல் கட்சிகளிடம் பதில் இருக்காது. அராபிய நாடுகளிடமும் பதில் இருக்காது. ஆகையால் எதிர்கால அரசியலில் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது என்பதும் கொள்கையை எப்படி வகுப்பது என்பதும் இப்போதைக்குக் கற்பனைக்கு அப்பாலான விஷயமாகவே இருக்கிறது.

(தொடரும்)

பகிர:
ரமேஷ் கிருஷ்ணன் பாபு

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர், படைப்பாளர். 2000ஆம் ஆண்டு முதல் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் பணியாற்றியவர். 'செப்.11: வரலாறும், பின்னணியும்', 'கூடங்குளம்: வரமா? சாபமா?' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *