Skip to content
Home » இஸ்ரேல் #29 – ராணுவம், உளவுத் தொழில்நுட்பங்கள்

இஸ்ரேல் #29 – ராணுவம், உளவுத் தொழில்நுட்பங்கள்

இஸ்ரேல்

இஸ்ரேலின் பாதுகாப்பு நிலையற்று இருந்த சமயத்தில் ராணுவத்தை வளர்த்தெடுப்பதோடு அதனை மேம்படுத்துவம் முடிவு செய்தனர். தனது ராணுவத் தளவாடத் தேவைகளுக்கு அமெரிக்கா, ஃபிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளிடம் அண்டி நிற்பது ஒருபுறம் இருந்தாலும், தற்சார்பு தேவை என்பதையும் உணர்ந்தே இருந்தனர். இதன் விளைவாகப் புதிய கருவிகளைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்தனர்.

ஏனெனில், வல்லரசு நாடுகள் எப்போதும் தங்களுடைய தேவையை ஒட்டியே நிலைப்பாடுகளை எடுப்பார்கள் என்பதால் தற்சார்பு தேவைப்பட்டது. எடுத்துக்காட்டாக, ஃபிரான்ஸ் மிக அவசியமான நேரத்தில் இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதித்தது. அது 1967 ஆம் ஆண்டுப் போருக்கு முன்னால். அந்தப் போர்தான் இஸ்ரேலின் தலைவிதியை நிர்ணயித்தது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க இயலாது. அப்படியொரு நேரத்தில் ஆயுத ஏற்றுமதிக்குத் தடை என்பது எப்படியொரு விளைவினைக் கொடுத்திருக்கும்? என்றாலும் போர் துவங்கி மூன்று மணி நேரத்தில் எதிரி நாடுகளின் விமானப்படையைத் தகர்த்தது இஸ்ரேல். அழிக்கப்பட்ட விமானங்களில் ஃபிரான்ஸ் விமானங்களும் அடங்கும். அழித்த விமானங்களும் ஃபிரான்ஸ் தயாரிப்புகள்தான், என்றாலும் ஒருவேளை எதிரி நாடுகள் முதலில் விமானப்படைத் தாக்குதலை நடத்தியிருந்தால்? எகிப்து உட்பட அனைவரும் தரை வழித் தாக்குதலையே எதிர்பார்த்திருந்தனர். இதுவே இஸ்ரேலின் வேலையை எளிதாக்கியது. ஆகையால் ஆயுதங்களுக்கோ உளவு வேலைகளுக்கோ பிறரை நம்பாமல் தற்சார்புடன் செயல்பட வேண்டிய தேவையை இஸ்ரேல் உணர்ந்தது. மீண்டும் யோம் கிப்பூர் போரின்போதும் அமெரிக்க ஆயுதங்களைச் சார்ந்து செயல்பட வேண்டியிருந்தது இஸ்ரேலுக்கு எரிச்சலைத் தந்தது.

சரி, இஸ்ரேல் ஆயுதங்களையே தயாரித்தது இல்லையா? தயாரித்தனர். இன்னும் சொல்லப்போனால் 1930-களிலேயே ஆயுதங்கள் தயாரிப்பதை இஸ்ரேலின் தனியார் ராணுவங்கள் துவங்கிவிட்டன. குறிப்பாக 1948 ஆம் ஆண்டுப் போரில் இஸ்ரேல் முழு ராணுவம்போல அனைத்து வகையான ஆயுதங்களையும் கொண்டிருந்தது! இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவில் இரண்டாம் உலகப் போருக்காக உருவாக்கப்பட்டவை. அன்றிலிருந்து தனது ஆயுதத் தேவைக்காக, புதிய போர்க்கருவிகளை உருவாக்கி வருகிறது இஸ்ரேல். ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் வடிவமைத்த ஊஸி மென் ரக சப் மெஷின் கன் வகைத் துப்பாக்கி பேர்பெற்றவையாக இருந்தன. அவை ஏற்றுமதியும் செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து 1970 ஆம் ஆண்டுகளின் மத்தியில் ரெஷெஃப் ஏவுகணைப் படகு, கிஃபிர் போர் விமானங்கள், காப்ரியல் ஏவுகணை மற்றும் மெர்க்காவா டாங்கிகள் ஆகியன உருவாக்கப்பட்டன. இதில் கிஃபிர் போன் விமானத்தின் வடிவமைப்பு ஃபிரான்ஸின் மிராஜ் 5 விமானத்தின் வடிவமைப்பைப் போலிருந்தது. அந்த வடிவமைப்பு திருடப்பட்டது என்பது பின்னர் தெரிய வந்தது. ஆனால் அதில் இயங்கக்கூடிய பல பாகங்கள் இஸ்ரேலில் உருவாக்கப்பட்டவை. தனது அந்நியச் செலாவணியை சேமிக்கும் நோக்கிலும், தற்சார்பு எனும் கொள்கையாலும் இஸ்ரேல் போர்த் தளவாடங்களை உள்நாட்டிலேயே உருவாக்கத் தீர்மானித்தது.

இத்தீர்மானம் மின்னணுத் துறையின் வளர்ச்சிக்கும் வித்திட்டது. இதனால் பல குடிமக்கள் பயன்படுத்தும் பொருட்கள் உருவாக்கப்படுவதிலும், அவற்றை இறக்குமதி செய்யத் தேவையற்றச் சூழ்நிலையைத் தவிர்ப்பதிலும் கொண்டு நிறுத்தியது. பின்னர் 1980-களில் ஏற்பட்ட மாறுதல்களால் பாதுகாப்புத் துறைக்கான முக்கியத்துவம் குறைந்தது. இதற்கு எகிப்துடன் ஏற்பட்ட அமைதியும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்நிலையிலும் புதிய கண்டுபிடிப்புகள் நிற்கவில்லை. ஆளில்லா விமானங்களை இஸ்ரேல் அறிமுகப்படுத்தியது. இன்று டிரோன்கள் உலகின் மிக முக்கிய போர் மற்றும் உளவு ஆயுதமாகியுள்ளது. இப்படியாக சமகால உலகத்தின் ஆயுதத் தேவைகளுக்கு ஓர் உற்பத்திக்கூடமாக இஸ்ரேல் உருவாகியுள்ளது. இஸ்ரேலின் ராணுவம் ஆயுத ஆய்வுகளின் பின்னால் இருக்கிறது. உலகளவில் ஆயுத ஆய்வு மற்றும் பிற ஆய்வுகள் அதனை உலகளவில் 5 ஆவது இடத்தில் நிறுத்தியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் உயர் தொழில்நுட்பங்களை ஆயுதங்களோடு நிறுத்தாமல் சைபர் தொழில் நுட்பங்களிலும்கூட ஈடுபடுத்துகிறது. ஏற்கெனவே கூறியதுபோல இஸ்ரேலின் புத்தாக்கத் தொழில் முனைவு எனும் இலக்கினால் உலகின் மிக முக்கிய ஆய்வுக்கேந்திரமாக இஸ்ரேல் இருக்கிறது. இதன் அடிப்படை ராணுவம் என்றாலும் மருத்துவம், விவசாயம் உட்படப் பல தொழில்களிலும் இதன் தாக்கத்தை உணர முடியும்.

இஸ்ரேலின் கட்டாய ராணுவச் சேவையில் இளம் வீரர்களுக்கு ஆயுதப் பயிற்சியுடன் மின்னணுப் பயிற்சியும் கற்பிக்கப்படும். குறிப்பாக உயர் மட்ட சைபர் பாதுகாப்புப் பிரிவான 8200-ல் 18 உடைய இளம் திறமைமிக்க வீரர்களைத் தேர்வு செய்து அவர்களிடம் கடினமான, சிக்கலான திட்டங்களை அளிப்பார்கள். அத்துடன் கவனத்துடன் செயல்பட்டு நிறைவேற்றும் பொறுப்பையும், அதனைச் சாதிக்கத் தேவையான சுதந்திரத்தையும் அளிப்பார்கள். பின்னாட்களில் பல ராணுவ அதிகாரிகள் சைபர் தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்களாகி பல நிறுவனங்களை உருவாக்கினார்கள். இஸ்ரேலின் உயர் நிலை நிறுவனங்கள் பல இப்படித்தான் உருவாயின என்று சுட்டுகிறார்கள். அம்மாதிரி உருவான சில நிறுவனங்கள்: கிவன் இமேஜிங், செக் பாயிண்ட், சைசென்ஸ், ஐ சி க்யூ, மெடாகாஃபே போன்றவை.

உலகின் 40% சைபர் பாதுகாப்பு விற்பனை இஸ்ரேலில் இருந்து நிகழ்கிறது என்கிறார்கள். தற்போது பிரபலமாகிவரும் செயற்கை நுண்ணறிவு இஸ்ரேலின் அடுத்த இலக்காகியிருக்கிறது. இதிலும் புதிய கண்டுபிடிப்புகளை இஸ்ரேல் நிறுவனங்கள் உருவாக்கலாம்.

சமீபகாலமாக உளவுச் செயலிகளும் கூட இஸ்ரேல் மூலம் உலக உளவுத்துறைகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டன. குறிப்பாக பெகாசுஸ் உளவுச் செயலியைக் குறிப்பிடலாம். இஸ்ரேலிய அரசு நிறுவனமான என் எஸ் ஓ குரூப்பின் உருவாக்கமான பெகாசுஸ் இந்திய நாடாளுமன்றத்தை பல நாட்கள் முடக்கியது. பெகாசுஸ் உங்களது மொபைல் ஃபோனில் அமைதியாக குடியிருந்து உங்களை உளவு பார்க்கும் என்றால் உங்களுக்கு அதிர்ச்சியாகாதா? ஆனால், இன்றைய பாதுகாப்புச் சிக்கல்கள் நிறைந்த உலகில் பெகாசுஸ் போன்ற உளவுச் செயலிகள் கடுமையாகத் தேவைப்படுவதாகவே நிபுணர்களால் சுட்டப்படுகிறது.

பெகாசுஸ்சின் மீதான ஆட்சேபங்களில் முதன்மையானது அரசமைப்புச் சட்டங்களால் உறுதிபடுத்தப்பட்டுள்ள தனி மனித உரிமையை மீறுவதுதான். யாரை உளவுப் பார்ப்பது என்பதை யார் தீர்மானிப்பது என்பதிலும் அதிகாரப் படிநிலைகள் இருக்கும். சரி அதிகாரிகள் பொறுப்பானவர்கள் என்றாலும் கூட எவருக்கேனும் தனிப்பட்ட பாதிப்புகள் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது? இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூவின் மீதும் கண்டனங்கள் எழுந்தன. இஸ்ரேலில் பல முன்னணி அரசியல்வாதிகள், இதழியலாளர்கள் மீது பெகாசுஸ் செயலி ஏவப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும் இந்தியா உட்பட பல நாடுகள் பெகாசுஸ்சைப் பயன்படுத்தி முக்கிய நபர்களை உளவுப் பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

(தொடரும்)

பகிர:
ரமேஷ் கிருஷ்ணன் பாபு

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர், படைப்பாளர். 2000ஆம் ஆண்டு முதல் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் பணியாற்றியவர். 'செப்.11: வரலாறும், பின்னணியும்', 'கூடங்குளம்: வரமா? சாபமா?' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts