Skip to content
Home » இஸ்ரேல் #33 – நவீன காலத்தில் யூதர்கள்

இஸ்ரேல் #33 – நவீன காலத்தில் யூதர்கள்

இஸ்ரேல்

பதினாறாம் நூற்றாண்டு முதல் உலகத்தில் பல மாறுதல்கள் ஏற்படத்துவங்கின. அதில் முக்கியமானது காலனியாதிக்கம். ஐரோப்பியத்தின் வலிமை மிகுந்த நாடுகள் தங்களது வணிகத்தையும் பொருளாதாரத்தையும் விரிவாக்க வேண்டி உலகம் முழுதும் பயணம் செய்யத் துவங்கினர். கடல் வழிப் பயணம் எளிதானதால், அதற்கான வரைபடங்கள், துறைமுகங்கள், வணிகத்தை ஆதரிக்கும் அரசுகள் ஆகியன கடல் வாணிபம் அதிகரிக்கக் காரணமாகின. வலிமை மிக்க ஆட்டோமான் பேரரசின் முன் போட்டியிட வேண்டுமென்றால் தங்களுக்குப் புதிய சந்தைகள் தேவை என்பதை ஐரோப்பிய நாடுகள் உணர்ந்திருந்தன.

இந்நிலையில் யூதர்கள் தங்களது இருப்பின் நிலை குறித்து சிந்திக்கத் துவங்கினர். பதினெட்டாம் நூற்றாண்டில் தனித் தேசம் ஒன்று இருந்தால்தான் தங்களது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று யூதர்களில் உயர்மட்ட நபர்கள் கருதினர். பல நாடுகளில் செல்வந்தர்களாக இருந்தும் சமூக நோக்கில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளதை அவர்கள் உணர்ந்தனர். எதிகாலத்தில் அறிவியல் வளர்ச்சியாலும், நோய்களின் கட்டுப்பாட்டினால் அதிகரிக்கும் மக்கள் தொகையாலும் அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என்பதைப் பலரும் பேசி வந்த நிலையில் தங்களுக்கான தனித் தேசமொன்றை எழுப்ப வேண்டுமென்று அவர்கள் முடிவெடுத்தனர். எனினும். எப்படி நிறைவேற்றுவது என்பதில் தெளிவில்லை. இந்நிலையில்தான் இரண்டு உலகப் போர்கள் நிகழ்ந்தன. இரண்டாம் போரில் நாஜிக்களால் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து யூதர்களின் தனித் தேச விருப்பம் நிறைவேறியது.

இது நிகழும் முன்னரே யூதர்கள் தங்களை நவீனப் போக்குகளுக்கு ஏற்ப, குறிப்பாக ஐரோப்பியர்கள் எப்படி மதம், சமூகக் கட்டுப்பாடுகள், பொருளாதார மாற்றங்கள், அரசியல் அமைப்பில் மாற்றங்கள் என தொடர்ச்சியாக மாற்றங்களை சந்தித்தபோது தாங்களும் அது போன்ற மாற்றங்களுக்கு உட்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர். இதனால் மத ரீதியிலான மாற்றங்கள், சீர்திருத்தங்கள் நிகழ்ந்தன. இஸ்ரேல் தன்னை மதச்சார்ப்பற்ற நாடாக அறிவித்துள்ளது. இதுகூட உலகம் முழுதும் நிகழ்ந்த மாற்றங்களை ஒட்டியதே.

சமூகப் பண்பாட்டுத் தளத்தில் நிகழ்ந்த முக்கிய மாற்றம்: பெண்கள் முன்னிலைக்கு வந்தது. அது மட்டுமின்றி மூன்றாம் பாலினத்தவருக்கான இடமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகளவில் ஆண்டு தோறும் இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான மூன்றாம் பாலினத்தவர் மாநாட்டுக்காகக் கூடுகின்றனர்.

இஸ்ரேலில் கலைகளும், பிற பண்பாட்டு நடவடிக்கைகளும் நிறைந்துள்ளன. முக்கியமாக ஏராளமான அருங்காட்சியகங்கள் உள்ளன. நடன நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் நிரம்பிய சூழலில் இஸ்ரேல் இயங்குகிறது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே ஓவியக் கலைக் குறித்த பார்வை யூத அரசியல் தலைவர்களுக்கு இருந்தது. ஆகையால் ஓவியக்கலையை இஸ்ரேலில் வளர்த்தெடுக்க அவர்கள் விரும்பினர். பேராசிரியர் போரிஸ் ஷாட்ஸ் என்பவர் 1906-ல் முதல் ஓவியப் பள்ளியைத் துவக்கினார். இந்த நடவடிக்கை 1905 -ல் நிகழ்ந்த சியோனிஸ்ட் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவினை ஒட்டியே நிகழ்ந்தது. பின்னர் 1910-ல் பள்ளியில் 32 துறைகளும், 500 மாணவர்கள் கொண்ட அமைப்பும், உலகம் முழுதும் அதற்கான சந்தையுடன் அமைக்கப்பட்டது. அங்கு சிற்பக்கலையும் இடம் பெற்றது.

மரபுக்கலைகளை ஒட்டிப் புதுவிதமான பொருட்களில் கலைப் பொருட்களை உருவாக்கும் கலைஞர்களும் உருவாயினர். செராமிக்கற்கள், பொன் மற்றும் வெள்ளியில் பொருட்களை செய்யும் கொல்லர்கள், நெசவாளர்கள், காலிகிராஃபி கலைஞர்கள் மற்றும் கண்ணாடி பொருட்கள் செய்பவர்கள் எனப் பல்வேறு கைவினைஞர்களும் இடம் பெற்றனர். இஸ்ரேலியர்கள் கலைஞர்களை ஆதரிக்கும் போக்கினைக் கொண்டவர்கள். உள்ளூர் கலைஞர்களின் படைப்புகளை வாங்கி ஊக்கப்படுத்துவர்.

நவீனக்கலைகளில் தொழில் நுட்பத்தால் உருவானக் கலைகளில் முக்கியமானது புகைப்படக்கலை. அக்கலை உருவான காலம் முதல் யூதக்கலைஞர்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு கிறிஸ்துவ தலங்களை படம் எடுத்துக் கொடுத்து வந்தனர். பின்னர் இஸ்ரேலில் (அப்போதைய பாலஸ்தீனத்தில்) உள்ள நகரங்கள் மற்றும் சிற்றூர்களில் நிகழ்ந்த மாற்றங்களை எவ்விதமான சார்பும் இன்றி நவீன சிந்தனைகளை வெளிக்காட்டும் விதத்தில் புகைப்படங்களை எடுத்தனர். இப்புகைப்படங்கள் யூத தேசிய நிதி போன்றவற்றுக்கும் நிதியளிக்கப் பயன்பட்டன.

இசையைப் பொறுத்தவரை இன்று கூடப் பல திரைப்படங்களில் யூத மரபிசைப் பாடல்கள் இடம் பெறுவதைக் காணலாம். நாட்டுப்புற நடனம் மற்றும் மேற்கத்திய நவீன இசை இரண்டுமே இன்று பிரபலமாக உள்ளன. எழுத்தாளர்கள் சமூகத்தின் குரல்களாகக் கருதப்படுவர். அந்த வகையில் யூத எழுத்தாளர்கள் மட்டுமின்றி பாலஸ்தீன எழுத்தாளர்களுக்கும் கல்விப்புலங்களில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்னரே இரு தரப்பு எழுத்துகள் அரசுக் கல்வி நிலையங்களின் பாடப்புத்தகங்களில் இடம் பெறுகின்றன. இன்றைய தகவல் தொழில்நுட்பப்புரட்சியால் உலகம் முழுதும் உள்ள இசை மற்றும் இதரக் கலைகளின் நிகழ்வுகள் இஸ்ரேலுக்குள் உடனடியாக வந்து சேர்கின்றன. இசையைப் பொறுத்தவரை ஹீப்ரூ மொழிப்பாடல்கள் உள்ளூர் இளைஞர்களின் மன உணர்வுகளைப் பிரதிபலித்தாலும் உலகளவிலான இசை நுட்பங்களை, பாணிகளைக் கொண்டுள்ளன.

இஸ்ரேலில் நம்மூர் அரட்டை நிகழ்ச்சிகளைப்போன்ற டாக்-ஷோக்கள் பிரபலம். இவை முன்னணி நிகழ்ச்சிகளாக உள்ளன. யூதர்களுக்கு இளைத்தவர்கள் இல்லை நாங்கள் எனும்படி பாலஸ்தீன மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தொலைக்காட்சி ஆன்டெனாக்களை உயர்த்தி அண்டை அராபிய நாடுகளைச் சேர்ந்த அராபிய பாப் இசை நிகழ்ச்சிகளை காண்பதில் பேரார்வத்துடன் உள்ளனர்.

திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கூட இஸ்ரேலியர்கள் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர். மௌனப்படங்கள் 1930 களிலேயே உருவாகிவிட்டிருந்தன. விடுதலைக்குப் பிறகு 1949-ல் கேவா பிலிம்ஸ் எனும் நிறுவனம் கைவிடப்பட்ட மரக் கொட்டடி ஒன்றில் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் பல்வேறு தனி நபர்களின் கூட்டு முயற்சியில் உருவானது. பின்னர் 1954-ல் நாடாளுமன்றம் இஸ்ரேலிய திரைப்படங்களை ஊக்கப்படுத்தும் வகையில் சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. அதனை அடுத்து பிரெஞ்சு புதிய அலையின் பாதிப்பினால் இஸ்ரேலில் யதார்த்தவாதத் திரைப்படங்களும் எடுக்கப்பட்டன. இன்றுவரை அதிக முறை அமெரிக்க ஆஸ்கார் விருதுகளில் அதிகம் முறை சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்கள் பிரிவில் இடம் பெற்றவை என்ற சிறப்பை இஸ்ரேலிய திரைப்படங்கள் பெற்றுள்ளன. இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில் பல இஸ்ரேலிய திரைப்படங்கள் பல பன்னாட்டு விருதுகளை பெற்றுள்ளன. இஸ்ரேல் கடந்து அமெரிக்காவிலும் கூட இத்திரைப்படங்களுக்கு பார்வையாளர்கள் உள்ளனர்.

ஆவணப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் குறிப்பாக நெட்ஃபிளிக்ஸ் போன்ற டிஜிட்டல் திரை ஊடகங்கள் மூலம் ஏராளமான பார்வையாளர்களைச் சென்றடைகின்றன. திரைப்பட, தொலை ஊடகக் கல்வி நிறுவனங்களும் ஏராளமாக உள்ளன. இரண்டு பன்னாட்டு திரைப்பட விழாக்கள் இஸ்ரேலில் நிகழ்கின்றன. ஒன்று ஜெருசலேத்திலும் மற்றொன்று ஹாய்ஃபாவிலும் நிகழ்கின்றன. இன்றைய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் 12-16 புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன. ஏறக்குறைய 130 திரையரங்குகளும், 400 திரைகளும், 95,000 இருக்கைகளும் உள்ளன. தொலைக்காட்சி ஊடகம் உள்ளூர் கேபிள், சேட்டிலைட் என இரு வடிவங்களிலும் கிடைக்கின்றன. பொழுதுபோக்கு சேனல்களின் ஒளிபரப்பு தனிச் சேனல்களாகும். இஸ்ரேல் தொலைக்காட்சியின் ஆண்டு வருமானம் $950 மில்லியன்.

இஸ்ரேலில் ஊடகங்கள் வளர்ந்துள்ளன. இருப்பினும், இஸ்ரேலில் பத்திரிகை சுதந்திரம் என்பது கட்டுப்பாடுகளுடன் கூடியது. சில விஷயங்களைப் பிரசுரிப்பது கூடக் கடினம். ஏராளமான ஆட்சேபத்துக்குரிய பதிப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. இன்றைய தேதியில் தனியார் துறையால் நிர்வகிக்கப்படும் இதழ்கள் (அனைத்து வகைகளும் சேர்த்து) 17. தனியாரும் அரசு ஊடகங்களுக்கு இணையாக போட்டியிடும் வாய்ப்பு 1986 முதல் நடைமுறைக்கு வந்தது. இதழியல் சுதந்திரம் குறித்த ஆய்வுகளில் இஸ்ரேல் கடைசி இடத்தில்தான் உள்ளது என்பதுதான் உண்மை. தொலைக்காட்சி, இணைய இதழ்களும் பெரும் பங்கினைக் கொண்டுள்ளன.

நவீனத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான விளையாட்டு இஸ்ரேலில் நன்கு நிலைபெற்றுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் ஜிம்னாஸ்டிக், படகுப் பயணம், ஜூடோ முதலிய விளையாட்டுகளில் பதக்கங்களைப் பெறுவது வழக்கமானது. இஸ்ரேலில் பல விதமான விளையாட்டுகள் இருந்தாலும், டென்னிஸ் மற்றும் கால்பந்து ஆகியவை மிகப் பிரபலமானவையாகவுள்ளன. உலக அரங்கில் இஸ்ரேல் கூடைப்பந்து விளையாட்டில் பல கோப்பைகளையும் பதக்கங்களையும் வென்றுள்ளது.

உலகளவில் கால்பந்து போட்டிகளில் ஐரோப்பாவின் உறுப்பினராகவே இஸ்ரேல் இடம் பெறுகிறது. அரபு நாடுகளின் எதிர்ப்பால் 1974-ல் இஸ்ரேல் ஆசியப் பிரிவிலிருந்து நீக்கப்பட்டது. பல கிளப் போட்டிகளிலும், உலகளவிலான போட்டிகளிலும் இஸ்ரேலின் கால்பந்து வீரர்கள் நினைவுக்கூரப்படுகின்றனர். சோகமான நிகழ்வாக மியூனிச் ஒலிம்பிக்ஸில் 11 இஸ்ரேலிய வீரர்கள் பாலஸ்தீன தீவிரவாதிகளால் கொல்லப்பட்டது வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது.

இன்றைய நவீன உலகின் அனைத்து அம்சங்களிலும் தன்னைப் பொருத்திக்கொண்டுதான் இஸ்ரேல் இயங்கி வருகிறது. இஸ்ரேலிய சமூகம் தன்னை நவீன, சார்பற்ற நடுநிலைக் கோட்பாடுகளுடன் மக்களாட்சி நிகழும் நாடாகவே தன்னை உலகம் அடையாளம் காண வேண்டும் என்று விரும்புகிறது. அதன் பன்முகத் திறமையும் பன்முகத் தன்மையும் இதையே உணர்த்துகின்றன.

(தொடரும்)

பகிர:
ரமேஷ் கிருஷ்ணன் பாபு

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர், படைப்பாளர். 2000ஆம் ஆண்டு முதல் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் பணியாற்றியவர். 'செப்.11: வரலாறும், பின்னணியும்', 'கூடங்குளம்: வரமா? சாபமா?' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts