Skip to content
Home » இஸ்ரேல் #35 – பாலஸ்தீனம்: ஒன்றே தாயகம்; ஒருவரே மக்கள் – 2

இஸ்ரேல் #35 – பாலஸ்தீனம்: ஒன்றே தாயகம்; ஒருவரே மக்கள் – 2

இஸ்ரேல்

நவீன பாலஸ்தீனம் குறித்த அக்கறையுள்ளவர்கள் பாலஸ்தீன அகதி முகாம்களில் இன்றும் அவல நிலையில் வாழும் நிலைக்கு ஆளாகியிருக்கும் மக்களை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லவே விரும்புவர். இன்றைய நிலையில் 58 அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீன அகதிகள் முகாம்களில் ஏறக்குறைய 15 லட்சம் மக்கள் புகலிடம் பெற்றுள்ளனர். இவர்கள் காசா, மேற்குக்கரை, லெபனான் மற்றும் ஜோர்டான் ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். கடந்த 2005-ல் இஸ்ரேல் நீண்ட காலமாக நிலவி வரும் ஒருவருக்கொருவர் மீதான நம்பிக்கையின்மையை நீக்கும் பொருட்டு காசா பகுதியிலிருந்து ராணுவத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

அதைத் தங்களுக்கு சாதகமான நடவடிக்கை எனக் கருதிய பாலஸ்தீன தீவிரவாத இயக்கங்கள் அப்பகுதியைத் தங்களின் முழுக் கட்டுப்பாடுக்ற்குள் கொண்டு வந்தனர். ஹமாஸ் இயக்கம் அப்படி உருவானதுதான். யாசர் அராபத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கம் மட்டுமே ஒற்றை பாலஸ்தீன மக்கள் ஆதரவு பெற்ற இயக்கமாக சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. எனினும் காசா பகுதியில் இஸ்ரேல் எதிர்ப்புப் போரை நீண்ட காலம் நடத்தியது எனும் அடிப்படையில் அப்பகுதியை ஹமாஸ் தன் வசப்படுத்தியுள்ளது.

ஹமாஸ் தேர்தலில் வென்றாலும் சர்வதேச அங்கீகாரம் கிடையாது. காசாவைச் சுற்றி இஸ்ரேல் ராணுவக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும் கடல் வழியே தங்களது நடவடிக்கைகளை ஹமாஸ் இயக்கம் தொடர்ச்சியாக நடத்திக் கொண்டுதான் உள்ளது. இதில் ராக்கெட் தாக்குதல்களும் அடங்கும்.

இந்நிலையில் அகதிகள் முகாம்களிலிருந்து படித்த வர்க்கம் ஒன்று உருவாகி ஜெருசலேத்திலும் இதர நகரங்களிலும் நல்ல வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுவருவது கடந்த 20 ஆண்டுகளாக நிகழ்ந்து வருகிறது. இவர்களில் பலர் இஸ்ரேல் அரசின் நல்ல முயற்சிகளை பாராட்டுகிறார்கள். அதேநேரம் தங்கள் மதத்தின் பழமைவாதிகளின் யூத விரோதப் போக்கினால் தாங்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாவதை உணர்ந்துள்ளனர். பாலஸ்தீன அரசியல் உரிமைகளை யார் பெறுவது என்பதில் அரசியல் தலைமைகளுக்குள் போட்டியிருக்கும்போது, கிடைக்கும் விடுதலையால் மக்களுக்கு எவ்விதமான பலனும் இல்லை என்பதே இளம் பாலஸ்தீனர்களின் கருத்தாக இருக்கிறது.

சமீபத்தில் சவூதி அரேபியா, இஸ்ரேலுடன் தூதரகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது பாலஸ்தீன தீவிரவாத இயக்கங்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் சவூதி உட்பட பல அராபிய (எண்ணெய் ஏற்றுமதி) நாடுகள் தங்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளவே சுதந்திர பாலஸ்தீனம் எனும் நாடகத்தை நடத்தி வந்துள்ளனர் என்று கருதுகின்றனர். பல காலம் முன்பே யாசர் அராபத் இப்படியொரு நிலைப்பாட்டுக்கு வந்திருந்தார். இன்று ஏறக்குறைய அனைத்து அராபிய நாடுகளும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டு தங்கள் நாடுகளை முன்னேற்ற விழைந்துள்ளது. இது, தனி பாலஸ்தீனக் கோரிக்கையை வலியுறுத்திப் போராடி வருவோர்க்கு கடும் ஏமாற்றத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவுதான் காசா பகுதியிலிருந்து இஸ்ரேல் மீதான இப்போதைய தாக்குதல். இதை ஈரான் ஆதரிக்கிறது.

வரலாற்றில் முதல் முறையாக அராபிய நாடுகள், பாலஸ்தீனக் கோரிக்கையை ஏறக்குறைய கைவிட்ட நிலையில் உலகளவில் தனிமைப்பட்டுள்ள ஈரான் ஆதரிப்பது என்பது எதிர் அரசியல். ஆனால் தொடர்ச்சியாக ஈரான் அவ்வாறு செய்வது அதன் இருத்தலுக்கே ஆபத்தாகிவிடும். ஏனெனில் ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யாவும், சீனாவும் நிற்கலாம். ஆனால் இஸ்ரேலுடன் போர் என்றால் இருவரும் பின்வாங்கி விடுவார்கள். ஈரான் தனித்துதான் நிற்கும். ராணுவ ரீதியில் ஈரான் வெல்வது என்பது மிகவும் கடினம். மேலும் அமெரிக்கா கூட்டணி நாடுகள் ஈரானைத் தாக்க இதுதான் சரியான நேரம் என்று கருதி போர்தொடுத்தால் சதாம் ஹூசைனுக்கு என்ன நேர்ந்ததோ அதேதான் ஈரானின் தலைமைக்கும் நேரும்.

ஆகையால், ஹமாஸ் போன்ற தீவிரவாத இயக்கங்களால் விடுதலை மட்டுமல்ல; வளர்ச்சியையும்கூடக் கொண்டு வர இயலாது. அதை விடுத்து அமைதியான முறையில் இஸ்ரேல் கண்டுள்ள வளர்ச்சியைப்போல் தாங்களும் முன்னேற முயற்சி செய்வதே அழிவிலிருந்து காப்பாற்றும். இன்றைய உலகில் போர் வெறுக்கப்படுகிறது என்பதை ஏராளமான எடுத்துக்காட்டுகளுடன் கூறமுடியும். ஆனால் இதை உணராது போர்தான் தீர்வு என நினைக்கும் வல்லரசுகளாயினும் சரி, சிற்றரசுகளாயினும் சரி கடுமையான பின்விளைவுகளையே சந்திக்க நேரிடும்.

ரஷ்யா, உக்ரைனில் போர் தொடுத்து இதுவரை சாதித்தது என்ன? வெறும் அழிவுதான். ஈரானும் அதையேத்தான் சந்திக்கும். வேறொன்றும் உள்ளது. ஈரானின் ஆட்சியாளர் மீது ஈரான் மக்கள் கொண்டுள்ள அதிருப்தி. அதைப் பெண்கள் போராட்டம் மூலம் நன்கு உணர முடிந்தது. மக்கள் கேட்பது கௌரவமான வாழ்க்கை; போர்கள் அல்லவே?

இச்சூழ்நிலையில் சவூதி, ஐக்கிய அமீரகம் போன்ற பணக்கார அரபு நாடுகள் ஏன் இஸ்ரேலுடன் அமைதியாகப் போக விரும்புகிறார்கள்?

ஒரே காரணம், இதுவரை சேர்த்து வைத்த செல்வத்தைப் பாதுகாக்கவும், தங்களது ஆட்சியைப் பாதுகாக்கவுமே.

பெட்ரோல்-டீசல் எரிபொருளை ஏறக்குறைய மேற்கத்திய (அமெரிக்க+ ஐரோப்பா) கைவிடும் நாள் சில வருடங்களில் நிகழும். இந்தியா, சீனா உட்பட ஒரு சில நாடுகளே எரிபொருளைப் பொருளாதார வளர்ச்சிக்கு நம்பியுள்ளன. இரண்டும் உலகின் ஏறக்குறைய 300 கோடி மக்களைக் கொண்டுள்ளன. இவற்றின் பொருளாதார வளர்ச்சி 7-10% வரையில் இருக்கவேண்டுமென்றால் விலைகுறைந்த எரிபொருள் தேவை. அவற்றைக்கொடுக்க வளைகுடா நாடுகளும் ஆயத்தமாகவே உள்ளனர். சமீபத்தில் சீனாவின் பி ஆர் ஐ (Belt and Road Initiative) திட்டத்துக்குப் போட்டியாக இந்தியா மற்றொரு திட்டத்தை ஜி 20 மாநாட்டில் முன்வைத்தது. இதன் பாதையில் ஐக்கிய அரபு நாடு, சவூதி அரேபியா மற்றும் இஸ்ரேல் உள்ளன.

இந்த மூன்று நாடுகளும் வளைகுடாவின் பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையில் உள்ளவை. இவற்றுடன் இந்தியாவும் ஐரோப்பிய நாடுகளும் இணையும் போது வேகமான, அதே சமயம் மலிவான செலவில் எரிபொருள், சரக்குப் போக்குவரத்து மற்றும் நாணயப் பரிமாற்றமும் நிகழும். இது நடக்கவேண்டுமென்றால் சவூதி அரேபியா அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஆழமான தூதரக உறவினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதை பாலஸ்தீன மக்கள் எதிர்க்கின்றனர்.

இஸ்ரேல் அறிவிக்கப்பட்டதிலிருந்து அதனைத் தங்களுடன் நின்று எதிர்த்துவிட்டு இன்று தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இஸ்ரேலுடன் அமைதியாகிப் போகும் ஐக்கிய அரபு, சவூதி அரசுகளை அவர்கள் எதிர்க்கிறார்கள். இந்த எதிர்ப்பின் விளைவுதான் ஈரான் ஆதரவுடன் நடக்கும் போர்.

துவக்க காலத்திலிருந்தே பாலஸ்தீனர்களால் பிற அரபு மக்களுடன் இணைந்து வாழ இயலவில்லை. அகதிகளாகச் சென்றாலும் உள்ளூர் வேலை வாய்ப்புகளில் பாலஸ்தீன மக்களை ஈடுபடுத்துவதை அராபியப் பழங்குடியினர் விரும்பியதில்லை. பல காரணங்கள் இருந்தாலும் பாலஸ்தீனர்கள் முரட்டுத்தனமானவர்கள். ஜோர்டான் மட்டுமே பாலஸ்தீனர்களுக்குக் குடியுரிமை சிறிதளவு வழங்கியது. இஸ்ரேல் துவக்கத்திலிருந்தே பாலஸ்தீனர்களுக்குக் குடியுரிமையை வழங்கியது.

இன்று ஒன்றுபட்ட இஸ்ரேல் வந்தால் மேற்குக்கரை, காசா பகுதிகளைச் சேர்த்தால் யூதர்களைவிட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை அதிகமிருக்கும். இது இஸ்ரேலின் அரசியலை நிச்சயம் மாற்றும். ஆனால் இஸ்ரேலிய அரசியல்வாதிகள் இதை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. ஏற்கெனவே சொன்னது போல அனைத்து இஸ்ரேலிய அரசியல் கட்சிகளும் மதவாதக் கட்சிகள் அல்ல. இஸ்ரேலே ஒரு மதச்சார்ப்பற்ற நாடுதான். பாலஸ்தீனர்களுடன் இணைந்து வாழ்வது யூதர்களுக்கு இன்று ஒரு பிரச்னையாகத் தெரியவில்லை. அவர்களின் பரந்த உலகப் பார்வையே அதன் பின்னணியில் உள்ள காரணம்.

பாலஸ்தீனர்களுக்கும் உலக அனுபவம் இல்லாமல் இல்லை. தங்களின் எதிர்காலம் குறித்து சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டால் ஏராளமான பாலஸ்தீனர்கள், இஸ்ரேலை வாழ்விடமாகத் தேர்வு செய்யும் வாய்ப்பும் உண்டு. பலர் அண்டை நாடுகளில் தஞ்சம் கோரலாம்; குடியுரிமை கோரலாம். இப்படியொரு நிலையில் ஐ.நா என்ன செய்யும் என்பது பெரியதொரு புதிர். அராபிய நாடுகள் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையிலான பாலஸ்தீனர்களுக்குக் குடியுரிமை வழங்கலாம். ஆனால் அது பிரச்னையைத் தீர்க்க உதவாது.

சுதந்திர பாலஸ்தீனம் அமைந்தாலும் அவர்கள் தொடர்ச்சியாக இஸ்ரேலை அழிப்போம் என்று பாகிஸ்தான், தனி நாடு கிடைத்தபின்னும், தான் வாழ்வதைவிட இந்திய எதிர்ப்பில் எப்படி நாட்டம் காட்டி வீழ்ச்சியுற்றுள்ளதோ அதேபோல வீழ்ந்தால் யாருக்கும் பயனில்லை.

ஹமாஸ் போன்ற இயக்கங்கள் உலக இஸ்லாமியவாதமான ‘ஒன்றே தேசம்; ஒருவரே மக்கள்’ எனும் வஹாபிய அடிப்படைவாதச் சிந்தனையை மையமாக வைத்துள்ளவை. அவர்களிடம் இருந்து வளர்ச்சியையோ முன்னேற்றத்தையோ மானுடத்தை உயர்த்தும் சிந்தனைகளையோ எதிர்பார்க்க இயலாது. நிரந்தரப் போர் ஒன்றே தலையாயது. இப்படியான இயக்கங்களிடம் எப்படி நாட்டையும், மக்களையும் ஒப்படைப்பது? எனவே, உலக நாடுகள் பாலஸ்தீனர்களிடம் வெளிப்படையான உரையாடலை நிகழ்த்தி அவர்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்க அனுமதிப்பதே இன்றுள்ள சிக்கல்களைத் தீர்க்க உதவும்.

0

பகிர:
nv-author-image

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

இதழியலாளர், மொழிபெயர்ப்பாளர், படைப்பாளர். 2000ஆம் ஆண்டு முதல் தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் பணியாற்றியவர். 'செப்.11: வரலாறும், பின்னணியும்', 'கூடங்குளம்: வரமா? சாபமா?' உள்ளிட்ட நூல்கள் எழுதியிருக்கிறார்.View Author posts