2006 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள கிழக்கு ஆங்லியா பல்கலைக்கழகம் (University of East Anglia) ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டது. அதில் காணப்பட்ட செய்தி இதுதான்.
‘1960களில் உலகத்தின் பருவநிலை நிலையாக உள்ளதாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்; ‘புவிச் சூடேற்றம்’ என்ற வார்த்தையைக் கூட எவரும் அறிந்திராத ஒரு காலகட்டத்தில்தான் பருவ நிலை ஒரு தீவிரமான ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டிய ஒரு துறை என்று நிலை நிறுத்தியவர் இவர். இந்தத் தீர்க்கதரிசியின் பெருமையைப் போற்றும் விதமாக இந்தப் பல்கலைக்கழகத்தின் பருவ நிலை ஆராய்ச்சி மையத்தின் பெயரை அதன் முதல் இயக்குநரும், நிறுவனருமான ஹுபர்ட் லேம்ப் (Hubert Lamb) மையம் என்று அறிவிப்பதை மிகப் பெருமையாக கருதுகிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தது.
இந்தக் குறிப்பில் எந்த மிகைப்படுத்துதலும் இல்லை. லேம்ப், வரலாற்றுப் பருவநிலை ஆராய்ச்சியைப் பொறுத்த வரை, ஒரு பெரும் ஆளுமையே.
1980களில் இவர் எழுதிய Climate, History and the Modern World என்ற புத்தகத்தின் முதல் சில பக்கங்களிலேயே பருவநிலை பற்றி வரலாற்று ஆசிரியர்களிடையே நிலவும் மெத்தனப் பார்வையை வர்ணித்து அவர்களை ஏறக்குறைய சாடுகிறார். இவருடைய பார்வையில் வரலாற்றாசிரியர்கள் பருவநிலை பெரிதும் மாறாத தன்மை உள்ளது என்ற கொள்கையில் மிகவும் உறுதியாக உள்ளதாகக் கருதினார். இந்த அடித்தளத்தின் மீதுதான் உலக வரலாற்றைக் கட்டியிருக்கின்றனர் என்று கூறிய இவர் ஓர் உதாரணத்தையும் அளித்தார். பிரபல வரலாற்றாசிரியர் சர் லியோனார்டு வூல்லி (இவரை நாம் பின்னர் ஒரு பகுதியில் சந்திப்போம்) மனித குலத்தின் வரலாறு என்று 1960ல் வெளிவந்த புத்தகத்தில் 5000 பொ. யு .மு வில் விவசாயம் ஆசியாவின் பல பாகங்களில் பரவிவிட்டது. விவசாயத்திற்கு உகந்து காணப்பட்ட அப்பொழுதைய பருவநிலைதான் இன்றுவரை நீடிக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதைச் சுட்டிக்காட்டி எழுதிய லேம்ப், ‘வூல்லி போன்றோர்களின் இந்த உறுதி அறிவியல் தரவுகள்மேல் கட்டப்பட்டிருப்பதாக இவர்கள் நம்புகிறார்கள். ஆனால், இந்த அடித்தளம் மிகவும் பலவீனமானது’ என்று எச்சரித்தார். ‘ஏனென்றால் வானிலை நிகழ்வுகளை அளக்கும் கருவிகள் கடந்த 150 வருடங்களாகத்தான் பயன்பாட்டில் உள்ளது. இந்தக் கால அளவில் பருவநிலையில் பெரும் மாற்றங்கள் இல்லாததால், இந்த நிலைபோலவே கடந்த காலங்களிலும் பருவநிலை இருந்திருக்க வேண்டும் என்று அனுமானிப்பது சரியல்ல. ஆகவே இது ஒரு யூகமே’ என்று வாதிட்டார்.
இதை நிரூபிக்கும் விதமாக, 1950ல் இருந்து 1960 வரை லாம்ப், உலகம் முழுதும் சிதறிக் கிடந்த பல புவியில் தரவுகளையும், பல வரலாற்று ஆவணங்களையும் திரட்டி கடந்த 2000 வருடங்களின் பருவநிலை மாற்றங்களை அனுமானித்தார். இவருடைய ஆராய்ச்சியின்படி ஐரோப்பாவின் வானிலை 800 பொ. யு தொடங்கி ஏறக்குறைய 400 ஆண்டுகள் சராசரியைவிடக் கூடுதல் சூடாக இருந்தது. இந்த அதிகப்படியான சூட்டினால் பனிக்கட்டிகள் உருகி வட கடலின் (North Sea) மட்டம் 80 செ. மீ அளவு உயர்ந்தது. இதனால், இந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட கடல் ஏற்றமும் புயல்களினால் உண்டான கடல் நீர் எழுச்சியும் டச்சு மற்றும் ஜெர்மானிய கடல் சார்ந்த நிலப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி சுமார் ஒரு லட்சம் உயிர்களைப் பறித்துச் சென்றதாக இவரின் ஆராய்ச்சி முடிவுகள் காண்பித்தன. மேலும், இந்த வெப்பமான காலகட்டத்திற்கு முற்றிலும் மாறாக 1500களில் துவங்கி 1700வரை ஐரோப்பா கண்டம் மிகவும் குளிர்ந்து காணப்பட்டது என்றார்.
இப்படி ஊசலாடும் பருவநிலை மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் வரலாற்றை எழுதுவது அதைக் குறுக்குவதோடு மட்டுமல்லாமல் நிகழ்வுகளை ஒரு ‘முட்டாள்தனமான’ சித்தரிப்பாக ஆக்கக்கூடும் என்று மிகக் கடுமையாக வாதிட்டிருக்கிறார் லாம்ப்.
கடந்த சில ஆண்டுகளாகப் பண்டைய காலத்துப் பருவநிலை பற்றிய ஆராய்ச்சிகள் பன்மடங்கு முன்னேறி விட்டது. இன்னமும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இன்று ஆராய்ச்சிக்கு உதவும் தரவுகள் பல மூலங்களில் இருந்து சேகரிக்கப்படுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாகப் பரவிக் கிடக்கும் பனிக்கட்டிகளின் ஆழத்திலிருந்து எடுக்கப்படும் உள்ளகம் (ice cores), கடலின் அடியிலிருந்து எடுக்கப்பட்ட வண்டல்கள் (Ocean sediments), மரத்துண்டு வளையங்கள் (tree rings), மகரந்தத் துகள்களின் எண்ணிக்கை மற்றும் அளவு, பலதரப்பட்ட ஆவணங்கள், ஓவியங்கள், நாட்டாரியல் கதைகள் என்று பல நூதன மூலங்களிலிருந்து கடந்த காலத்துப் பருவநிலையின் விவரங்கள் கணிக்கப்படுகின்றன. (இவற்றை விரிவாக மற்றொரு பகுதியில் காணலாம்). ஓர் உதாரணத்திற்கு, பிரெஞ்சு வரலாற்று ஆராய்ச்சியாளர் இமானுவேல் லே ராய் லதுரி (Emmanuel Le Roy Ladurie) ஐரோப்பியக் கண்டத்தின் கடந்த 1000 ஆண்டு காலப் பருவநிலை மாற்றங்களைப் பல ஆவணங்களிலிருந்து திரட்டப்பட்ட திராட்சை பழுக்கும் தேதிகளை வைத்து அனுமானித்திருக்கிறார்!
ஹன்டிங்டன், லாம்ப் போன்றவர்கள் கடந்த காலப் பருவநிலையின் தாக்கத்தை முன் வைத்தாலும், சம காலத்தில் இந்தக் கருத்தை பொதுப் பரப்பில் கொண்டுவந்த பெருமை புவியியல் பேராசிரியரும், புலிட்சர் பரிசு பெற்றவருமான ஜாரெட் டைமண்டையே (Jared Diamond) சாரும். 2005ல் வெளிவந்த தன்னுடைய ‘கோலாப்ஸ்’ (Collapse) என்ற புத்தகத்தில் பருவநிலை மாற்றங்கள் எப்படி ஒரு சமூகத்தின் அந்திமத்தை நிர்ணயிக்கின்றன, எப்படிச் சில சமூகங்கள் இந்தச் சவாலை எதிர்கொண்டன என்பதைப் பற்றி விரிவாக எழுதினார். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்த பல பழைய நாகரீகங்களும், சமூகங்களும் குலைந்த கதைகளை இந்தப் புத்தகத்தில் அடுக்கினார்.

வட அமெரிக்காவில் உள்ள நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் பெரும் பரப்புகளில் கற்களால் பல அடுக்குகள் கொண்ட மிக பிரம்மாண்டமான கட்டமைப்புகளை இன்றுகூடப் பலர் கண்டு ஆச்சர்யப்படுகின்றனர். சாகோ கன்யானில் இருக்கும் இடிபாடுகள், 19ஆம் நூற்றாண்டில் சிகாகோவில் வானளாவியக் கட்டடங்கள் தோன்றும் வரை, வட அமெரிக்காவிலே அதிக விஸ்தீரணமும் உயரமும் கொண்ட கல் கட்டடங்கள் என்ற பெருமையைப் பெற்றிருந்தன. ஆனால் ஏறக்குறைய 1200 பொ. யுவில் இந்த நகரங்கள் முழுவதுமாக கைவிடப்பட்டு வெறிச்சோடின. இங்கு பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த ஆயிரக்கணக்கான புப்லோ (Pueblo) இந்தியர்கள் சுவடே இல்லாமல் மறைந்தனர். இதைப்போல பல நூறாண்டுகள் யுகடன் தீபகற்பதிலும் (Yucatan Peninsula), இன்றைய குவாட்டமாலா, பெலிஸ் போன்ற தென் அமெரிக்க நாடுகளை உள்ளடக்கிய மாயன் நாகரீகம் பொ. யு 900களில் குலைந்தது. இதைப்போல பல உதாரணங்கள்.
இந்தக் குலைதலுக்கான ஐந்து காரணிகளை நம் முன் நிறுத்துகிறார் டைமண்ட். இதில் இரண்டை நாம் ஏற்கெனவே குறிப்பிட்டு விட்டோம்; அண்டையர்களின் பகைமையும், ஆதரவும் – இவை பரவலாக ஏற்கப்பட்டிருக்கின்றன. மற்ற மூன்று காரணிகளுமே புதியது; மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் சேதம், பருவநிலை மாற்றங்கள் மற்றும் இந்தச் சவால்களைச் சந்திக்கச் சமூகத்தில் இருக்கும் திறன். இந்த மூன்று காரணங்களுமே விவாதப் பொருளாகியிருக்கின்றன.
இந்தப் புத்தகம் வெளியான சில வருடங்களிலேயே வரலாற்றாசிரியர்களும், மானுடவியலாளர்களும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஒன்று வெளியானது. ‘Questioning Collapse’ என்கின்ற இந்தத் தொகுப்பு பல எதிர் கருத்துகளை முன் வைத்தது. பிரதானமாக, சமூகங்கள் பல்வேறு காரணங்களால் கலையக்கூடுமே தவிர அவை அழிவது இல்லை, உருமாறி அவை தொடர்கின்றன என்பது இவர்களின் வாதம். மேலும், ஒரு சமூகம் தேய்ந்து போவதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றில் சூழலியல் அல்லது பருவநிலை காரணிகளை பிரதானப்படுத்துவது சிக்கலான நிகழ்வுகளை எளிமைப்படுத்துதல் ஆகும் என்று வாதிட்டார்கள்.
ஆனால், இந்தக் கருத்துகளை டைமண்ட் ஏற்றுக்கொள்வதாக இல்லை. எந்த ஒரு சமூகத்தில் பலர் மாண்டுபோய் அல்லது சுவடே இல்லாமல் மறைந்துபோய், எழுதும் கலை தேய்ந்து, அரசாங்கக் கட்டமைப்புகள் உடைந்து, கலை அழிந்து போகிறதோ அதை ‘மீண்டெழுதல்’ என்று மறுவரையறை செய்வது அபத்தம் என்றார். வீழ்ச்சியிலிருந்து தப்பித்தவர்கள் அந்தச் சமூகத்தை ஏதோ ஓர் உருவத்தில் மீட்டெடுத்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அந்த முதல் வீழ்ச்சி ஆராய்ச்சிக்குரியதே என்றார் டைமண்ட். தற்போது நடந்தேறும் சூழலியல் மற்றும் பருவநிலை நெருக்கடியைச் சுட்டிக்காட்டி, நாம் வரலாற்றில் வீழ்ச்சியடைந்த சமூகங்களில் இருந்து பாடம் கற்கவில்லை என்றால், நம் பேரக் குழந்தைகள் இந்தச் சமூகம் உடைவதைக் கண்கூடாகக் காண்பார்கள் என்று எச்சரித்து, அவர்கள் அந்த வீழ்ச்சியைத் தாண்டி நிச்சயமாக மீள்வார்கள் என்ற மிகையான நன்னம்பிக்கை எனக்கு ஆறுதல் அளிக்கவில்லை என்று கவலையுடன் பகிர்ந்திருக்கிறார்.
எது எப்படி இருந்தாலும், டைமண்ட் எழுதிய ‘Collapse’ என்ற புத்தகத்தின் வெற்றியும், வரவேற்பும் பருவநிலை மற்றும் சூழலியல் மாற்றங்கள் சமூகங்களை வெகுவாகப் பாதிக்கின்றன என்ற மையக் கருத்தை பொதுத் தளங்களில் பரவலாக்கியது.
(தொடரும்)
___________
உசாத்துணை
Hubert H. Lamb, Climate, History and the Modern World, Routledge, 1995
Emmanuel Le Roy Ladurie, Times of Feast, Times of Famine: A History of Climate Since the Year 1000, Farrar Straus & Giroux, 1988.
Jared Diamond, Collapse: How Societies Choose to Fail or Succeed, Penguin Books, 2005
Patricia A. McAnany, Norman Yoffee (Eds.), Questioning Collapse: Human Resilience, Ecological Vulnerability, and the Aftermath of Empire, Cambridge University Press, 2009.
Jared Diamond, Two Views of Collapse, Nature, 17th February 2010.