முன்னொரு காலத்தில் தென்னிந்தியா பனிப்பாறைகளால் மூடப்பட்டிருந்தது என்ற செய்தியை நாம் சந்தேகிக்கக்கூடும். ஆனால், அது உண்மையே. பூமி தோன்றி 450 கோடி ஆண்டுகளில் 5 பனி யுகங்களைக் கண்டிருக்கிறது. முதல் இரண்டு பனி யுகங்கள் சுமார் 250 கோடி ஆண்டுகள் முன்பு நடந்தேறியது. அப்பொழுது கண்டங்கள் பால்ய பருவத்தில் இருந்தன, இப்பொழுது இருக்கும் நிலையிலோ, இடத்திலோ இல்லை. அந்தப் பனி யுகங்களின் தடயங்களை இப்பொழுது இருக்கும் மேற்கு ஆஸ்திரேலியா, மத்திய கனடா பகுதிகள், தெற்கு ஆப்ரிக்கா, வடக்கு ஐரோப்பா என்று பல கண்டங்களில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
250 கோடி ஆண்டுகள் முன்பு பனிப்பாறைகள் நகர்த்திக் கொண்டு வந்த சில பாறைகளை இன்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகாவிற்கு 70 கிலோமீட்டர் கிழக்கே இருக்கும் தால்யா என்ற கிராமத்தின் அருகில் காணலாம். இக் கிராமத்தின் அருகில் இருக்கும் சரிவுகளில் உருண்டையான பழுப்பு நிறப் பாறைகள் பல உள்ளன. இவை சிவப்பு-பழுப்பு மணற்கற்களில் (sandstone) புதைந்திருக்கின்றன. இந்த உருண்டைக் கற்கள் பனிப்பாறைகளால் வெவ்வேறு இடங்களில் இருந்து தூக்கி வரப்பட்டு, பனி உருகியதும் அங்கேயே விடப்பட்டவை. காலத்தின் போக்கில் இவை அமிழ்ந்து இவற்றைச் சுற்றி மற்றப் பாறைகள் உருவாகி விட்டன. இந்தப் புலம் பெயர்ந்த உருண்டையான பாறைகளே பல கோடி ஆண்டுகள் முன் தோன்றிய பனியுகத்தின் எச்சம்.
கடந்த காலப் பனி யுகங்களிலேயே மிகவும் உக்கிரமானது 55 கோடி ஆண்டுகள் முன் பூமியில் அரங்கேறியது. வட துருவத்திலிருந்து தென் துருவம் வரை எல்லா இடங்களிலுமே பனிப்பாறைகள் நிலத்தை இறுக்கின. கடல்கள்கூட உறைந்திருக்கக்கூடும் என்று சில கணிப்புகள் உண்டு. உலகத்தின் சராசரி வெப்பநிலை -50 டிகிரி சென்டிகிரேடு இருந்திருக்கக்கூடும் என்று சில ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஏறக்குறைய இன்றைய செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலை போல! பனிப்பாறைகள் பூமி முழுவதும் பரவி இருந்ததால் ‘பனிப்பந்து பூமி’ (Snowball earth)என்றே இந்தக் காலகட்டத்திற்குப் பெயர் ஏற்பட்டிருக்கிறது.
பூமியில் ஏற்பட்ட இந்த மிகத் தொன்மையான பனி யுகங்கள் பல விதங்களில் உயிர்களின் பரிணாம வளர்ச்சியைச் செதுக்கி இருந்தாலும், மனித வரலாற்றில் பெரும் அங்கம் வகித்தது, ஏறக்குறைய 25 லட்சம் ஆண்டுகள் முன் துவங்கி சுமார் 12000 ஆண்டுகள் முன் முடிவிற்கு வந்த (இது முடிவு இல்லை, இடைவெளி தான் என்பதை பின்பொரு பகுதியில் விளக்குகிறேன்) பிளீத்தொசீன் காலப் பனியுகம் (Pliestocene) தான். இதன் சில்லிட்ட பிடி தளர்ந்ததால் தான் மனிதக்குலம் நாகரீகத்தை நோக்கி நகர இயன்றது.
ஆனால் இது போன்ற ஒரு காலம் பூமியில் உண்டாகி இருந்தது என்பதை இருநூறு ஆண்டுகள் முன்புகூட யாரும் அறிந்ததில்லை. இதன் எச்சங்கள் உலகின் பல பாகங்களில் கண் முன்பே விரிந்திருந்தும்கூட!
வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பல நூறு ஆண்டுகளாகப் பனி யுகத்தின் சாட்சியங்களைப் பலர் கண்டிருக்கிறார்கள். சம பரப்பில் அந்தப் பகுதிக்குச் சம்பந்தமே இல்லாத பெரிய பாறைகள், ராட்சச நகம் கொண்டு கீறியது போல் அடிப்பாறைகளில் ஆழ்ந்த வெட்டுக் குறிகள், பல மைல்கள் தூரத்திற்கு உதிரியாகச் சிறு கற்கள் கொண்ட குவியல்கள் (Moraines) போன்றவை பல தேசங்களில் இன்றும்கூடத் தென்படுகிறது. தொல் சமூகங்கள் இந்த விந்தையான நிலவியல் வெளிப்பாடுகளைத் தங்களின் கலாச்சார வேர்கள் மூலமாகவே தொட்டு, விளக்கின.
அமெரிக்க தொல்குடியான பிளாக்ஃபூட் (Blackfoot) இந்தப் பெரும் பாறைகளின் தோற்றத்தைப் பற்றிக் கூறும் கதை மிகவும் சுவாரஸ்யமானது. நாபியும் (Napi) அவனது நண்பனுமான நரியும் மலைகளில் சுற்றித் திரிந்த போது ஒரு பெரும் பாறையைக் கண்டனர். குளிரில் உறைந்திருக்கும் பாறையைக் கண்ட நாபியின் மனம் கரைந்தது. தன்னுடைய கம்பளி மேலாடையை அதன் மேல் போர்த்தி விட்டு பயணத்தைத் தொடர்ந்தான் நாபி. சிறிது தூரம் சென்ற உடன் வானிலை மாறி பனி பெய்யத் தொடங்கியது. நாபி தனது நண்பன் நரியைப் பாறையிடம் சென்று, கொடுத்த மேலாடையைத் திருப்பித் தருமாறு கேட்கச் சொல்லி அனுப்பினான். சற்று நேரத்தில் திரும்பி வந்த நரி, பாறை மறுத்து விட்டதாகவும், கொடுத்த பொருளைத் திருப்பிக் கேட்பதனால் பாறை பெரும் கோபம் அடைந்திருப்பதாகவும் கூறியது. அப்பொழுது பூமி அதிர்வதை உணர்ந்த நண்பர்கள் மலையில் இருந்த அப் பாறை தங்களை நோக்கிக் கோபத்துடன் உருண்டு வருவதைக் கண்டார்கள். மலையில் இருந்து வேகமாக உருண்டு வரும் பாறையை நிறுத்துமாறு தங்களின் நண்பர்களான பருந்துகளிடம் கெஞ்ச, அவை தங்கள் அலகுகளால் உருண்டு வரும் பாறையைக் கொத்திப் பல பெரும் துண்டுகளாக ஆக்கியது. அதுவே, இந்தப் புல்வெளிப் பரப்பில் தென்படும் பாறைகள் என்று விளக்கினர்.
ஆனால், ஸ்விட்ஸர்லாந்தில் வளர்ந்த லூயிஸ் அகாசிக்கு (Louis Agassiz) இந்தப் பாறைகளும், ஆழ்ந்த வெட்டுக் குறிகளும் வேறொரு கதையைச் சொல்லின. சிறு வயதிலிருந்தே மற்றவரை எளிதாகத் தன் பால் வசியப்படுத்தும் தோற்றமும், குணமும், அறிவுக்கூர்மையும் கொண்டவர் இவர். இதற்கு ஒரு சான்று அவரின் சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம். பதின் வயதில் இவரும், இவர் அண்ணனும் ஸுரிக்கில் இருந்து 150 கி.மீ தூரம் இருந்த இவரின் சொந்த ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு செல்வந்தர் இவர்களைத் தன் வாகனத்தில் ஏற்றிக் கொண்டார். அவர்கள் வீடு வந்து சேரும் முன்னரே அகாசியின் புத்திக்கூர்மையில் சித்தம் மயங்கிய செல்வந்தர் அகாசியின் பெற்றோர்களைச் சந்தித்து சிறுவனின் மொத்தப் படிப்புச் செலவையும் தானே ஏற்றுக்கொள்ள முன் வந்தார். அகாசியின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்து அந்த உதவியை மறுத்து விட்டாலும், அகாசியின் மற்றவர்களைக் கவரும் ஆற்றல் பின்னர் அவர் அறிவியல் பயணத்திற்கு மிகவும் உதவியது. உலகம் கேட்டிராத பல புதுக் கருத்துகளை முன் வைத்த போது அகாசி இந்தத் திறனை மிக நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்.
பன்முகத் தன்மைக் கொண்ட அகாசி தன் நிபுணத்துவத்தை நிலை நிறுத்தியது முற்றிலும் வேறுபட்ட ஒரு துறையில். 1830களில் அவர் பிரேசில் நாட்டின் தொல் படிவ மீன்கள் (fossil fish) பற்றியே பல ஆராய்ச்சிகள் செய்து புகழ் ஈட்டியவர். ஆனால், இந்தப் பாறைகளின் மர்மம் அவரை நிலவியல் துறையை நோக்கி இட்டுச் சென்றது. அந்தக் காலத்தில் ஒரு துறையிலிருந்து விலகி இன்னொரு துறைக்குப் பல அறிவியலாளர்கள் தாவிக் கொண்டே இருந்தனர். இன்று போல அறிவியல் துறைகளைப் பிரிக்கும் சுவர்கள் எழுந்திராத ஒரு காலம் அது. சார்லஸ் டார்வின் ஒரு தலை சிறந்த உயிரியலாளராகத் தற்போது கருதப்பட்டாலும் அவர் ஒரு நிலவியல் ஆய்வாளராகவே தன் அறிவியல் பயணத்தைத் துவங்கினார் என்பது இதற்கு ஒரு தலைசிறந்த உதாரணம்.
ஸ்விஸ் அறிவியல் சங்கத்தின் இளம் தலைவராகத் திகழ்ந்த அகாசி 1837 ஆம் ஆண்டு பிரேசில் தொல் வடிவ மீன்களைப் பற்றிப் பேசப் போகிறார் என்று நினைத்து அங்குத் திரண்டிருந்த ஆய்வாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியை அளித்தார். பல இடங்களில் தென்படும் நிலவியல் சாட்சியங்களைத் திரட்டி அந்தக் கூட்டத்தில் ஒரு மாற்றுப் பார்வையை முன் வைத்தார். அவரின் கருத்துப்படி இப்பொழுது பல ஆயிரம் அடிகள் குத்துயரத்தில் உள்ள பனிப் பாறைகள் முன்பொரு காலத்தில் பூமியின் பல பகுதிகளில் வியாபித்திருந்தது. பனியுகம் என்று இந்தக் காலத்தைக் குறிப்பிட்ட அகாசி, இந்தப் பனிப்பாறைகள் தான் மெதுவாக முன் நகர்ந்து அதில் சிக்குண்ட கற்பாறைகளை நெடும் தூரம் தூக்கிச் சென்றன என்று அனுமானித்தார். நதி வண்டலைச் சுமந்து செல்வதுபோல இந்தப் பனி ஆறு மண், மற்றும் சிறு கற்களைக்கூடப் பல நூறு கிலோமீட்டர்கள் கொண்டு சென்றது என்றும் இந்தப் பனிப்பாறைகள் அடியில் சிக்கிய கற்கள் நிலத்தின் அடிப்பாறையில் உப்புத்தாள் போலத் தேய்த்துக் கீறல்களை உருவாக்கின என்று விளக்கினார்.
தனித்து விடப்பட்ட பாறைகளும் மற்ற நிலவியல் தடயங்களும் ஓடும் நீராலோ அல்லது பூகம்பத்தாலோ உருவானவை என்று எண்ணி இருந்த அறிஞர்கள் இடையே இந்தப் புதுக் கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் அகாசிக்குப் பின் வாங்கிப் பழக்கம் இல்லை. தன் கருத்துக்களைத் தொடர்ந்து பரப்பிக் கொண்டே இருந்தார். அவரின் கவித்துவமான மொழியும் அதற்குப் பெரிதும் உதவியது. கடந்து போன பனியுகத்தை வர்ணிக்கையில்
‘யானைகள், நீர் யானைகள், ஊனுண்ணிகள் என்று இயற்கை வளம் கொழித்த ஐரோப்பாவின் பெரும் காடுகளை, மலைகளை, கடல்களை, ஏரிகளைப் பெரும் பனிப்பாறைகள் மூடின. படைப்பின் பேரிரைச்சல் மறைந்து மரணத்தின் அமைதி குடியேறியது. நீர் ஊற்றுகள் வற்றின. ஓடைகள் நின்று போனது. காலை எழும் கதிரவனை ஊளையிடும் வடக்கு காற்றும், பெரும் பனிப்பாறைகள் விரிசலிடும் சத்தம் மட்டுமே வரவேற்றது’
இத்தகைய முயற்சிகளால் 1860 வாக்கில் பனி யுகம் ஓர் அசல் நிகழ்வு என்ற பொதுக் கருத்து வலுவடைந்தது. ஆனால் இதற்கான காரணங்கள் ஒரு புதிராகவே இருந்தது. வானியல் காரணிகள் என்ற ஒரு சந்தேகம் இருந்தாலும் அதில் தீர்மானமோ தெளிவோ இல்லை. இந்தச் சூழ்நிலையில் தான் பனி யுகங்கள் ஒரு சுழற்சி நிகழ்வு, அது மீண்டும் மீண்டும் நடந்தேறும் ஓர் இயற்கைப் பேரிடர், இந்த நிகழ் காலமே ஓர் இடை பனிக்காலம் என்ற கருத்துக்கள் வலுப் பெறத் தொடங்கின.
(தொடரும்)
___________
உசாத்துணை
Doug Macdougall, Frozen Earth: The Once and Future Story of Ice Ages, University of California Press, 2004.
Pranay Lal, Indica: A Deep Natural History of the Indian Subcontinent, Allen Lane, 2016
Brian Fagan (Eds.), The Complete Ice Age: How Climate Change Shaped The World, Thames and Hudson, 2009