Skip to content
Home » இயற்கையின் மரணம் #19 – உருகும் பூமி

இயற்கையின் மரணம் #19 – உருகும் பூமி

உருகும் பூமி

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் இருக்கும் நார்ஃபோக் நகரம், தாய்லாந்து தலைநகரான பாங்காக், இன்னும் பசிபிக் பெருங்கடலில் உள்ள பல தீவுகளில் கடல் மட்டம் உயர்ந்துகொண்டே வருகிறது. பூமியில் இதைப்போலப் பல இடங்கள் நீரில் மூழ்கிக்கொண்டே வருகின்றன. பருவநிலை மாற்றத்தினால் உருகும் பனிப்பாறைகள் இதற்கு ஒரு முக்கிய காரணம். ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் தகர்ந்து, பெரும் நீல நீர்வீழ்ச்சியைப் போலச் சரிந்து, கடலில் கலப்பது இப்பொழுது சர்வ சாதாரணமாகக் காணக்கிடைக்கிறது.

1880ஆம் வருடம் துவங்கி இன்று வரை உலகின் கடல் நீர் மட்டத்தின் அளவு சராசரியாக எட்டு அல்லது ஒன்பது அங்குலங்கள் உயர்ந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். 2022ஆம் ஆண்டு வெளியான ஓர் ஆய்வறிக்கை பூமியின் வெப்பம் 1.5 டிகிரி உயரும் பட்சத்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் இன்றைய அளவை விட ஓர் அடி கூடுதலாக இருக்கும் என்றும் இந்த அளவு 6.5 அடி வரை உயர்வதற்கான சாத்தியக்கூறுகள்கூட உள்ளன என்றும் கூறுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கடல் மட்ட உயர்வின் தாக்கம் சென்னை, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் அதிகமாக இருக்கும் என்றும் ஓர் ஆராய்ச்சி எச்சரிக்கிறது. இவையெல்லாம் நடக்குமா? தெரியவில்லை, ஆனால் கடந்த காலத்தில் நடந்திருக்கிறது. அதுவும், இந்த அறிக்கைகளில் வெளியான அளவை எல்லாம் ஒரேயடியாக மிஞ்சும் வகையில் கடலின் மட்டம் உயர்ந்திருக்கிறது.

பல லட்சம் வருடங்களாக வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்களில் நகங்கள் போல அங்குலம் அங்குலமாக வளர்ந்து நிலப்பரப்பை ஆக்கிரமித்திருந்த பெரும் பனிப்பாறைகள் சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன் ஊர்வதை நிறுத்தி உருகத் தொடங்கின. பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதையில் ஏற்பட்ட மாற்றங்களால் பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் சூரிய வெப்பம் அதிகமானதே இதற்குக் காரணம். வெப்பத்தினால் பனிப்பாறைகள் உருக இதனால் கடலுக்கு வந்து சேரும் நன்னீரின் அளவும் அதிகமானது. இதனால் கடல் நீரின் வெப்ப வேறுபாடுகளால் உந்தப்படும் பல கடல் நீரோட்டங்கள் தடைப்பட்டு பூமியின் மத்தியப் பகுதிகளும், அண்டார்டிக்கா கடல் பகுதிகளும் வெப்பமடைந்து பனிப்பாறைகள் உருகுவதை மேலும் துரிதப்படுத்தின.

பல ஆயிரம் ஆண்டுகள் நடந்தேறிய இந்த நிகழ்வு உலகின் பல பகுதிகளில் கடல் மட்டத்தின் அளவை உயர்த்தியது; சராசரியாக 250 அடி உயர்ந்தது. சென்னையில் மெரினா கடற்கரையில் மணலில் நடந்து கொண்டே காலை நனைக்கும் சிறு அலைகளைக் கண்டு பழகிப்போன நம் மனத்திற்கு இந்தக் கடல் மட்ட உயர்வை அசை போடுவது சற்றுக் கடினம்தான். இருந்தாலும் இப்படி நினைத்துப் பார்க்கலாம். கடந்த பனியுகம் முடியும் காலகட்டத்தில் நம் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் இருந்திருந்தால் அது முழுவதுமாக நீருக்கு அடியில் மூழ்கி அதன் விளக்கிற்கு மேலே நூறு அடி அளவு தண்ணீர் இருந்திருக்கும்.

இத்தகைய கடல் மட்ட உயர்வு பூமியின் பல நிலப் பரப்புகளின் வடிவத்தை மாற்றியது. வட அமெரிக்காவையும் ஆசியாவையும் கோர்த்து இருந்த நிலத்துண்டு தண்ணீரில் மூழ்கியது. இப்பொழுது அது பேரிங் ஸ்ட்ரெயிட் (Bering Strait) என்ற பெயரில் அறியப்படுகிறது. பிரிட்டன் ஐரோப்பாவிலிருந்து பிரிந்து தனித் தீவாகியது.

க்ரீன்லேண்ட், அண்டார்டிக்கா போன்ற பல பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட பனி உள்ளகங்களில் உள்ள சிறு குமிழிகளில் அடைபட்டிருக்கும் வளிகள் இந்த நிகழ்வை நிரூபிக்கின்றன. ஆச்சரியகரமாக, தொல் சமூகங்களின் கதைகளில்கூட பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வு பதிவாகியிருக்கிறது. அக உள்ளகங்களில் பதப்படுத்தப்பட்ட கதைக் குமிழிகள்.

ஆஸ்திரேலியாவின் வரைபடத்தை எடுத்துப் பார்த்தால் அப்பெருங் கண்டத்தைச் சுற்றிச் சிறு புள்ளிகள் போல் பல தீவுகள் தென்படும். 20000 ஆண்டுகளுக்கு முன் இவை யாவும் ஆஸ்திரேலியா கண்டத்தோடு இணைந்திருந்தன. கடல் மட்டத்தின் உயர்வு இவற்றைத் துண்டித்தது. ஏறக்குறைய 60000 ஆண்டுகளுக்கு முன்பே ஆஸ்திரேலியாவிற்கு வந்து சேர்ந்த பூர்வீகக் குடிகள் நிலங்களைக் கடல் கொண்டதற்கு ஒரு சாட்சி. அவர்களின் பல தொன்மையான கதைகளில் நிலம் நீருக்கு அடியில் மறைந்த விவரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அடிலெய்டு நகரத்திற்கு அருகில் கடலில் மிதந்து கொண்டிருக்கும் கங்காரு தீவு தோன்றியதை அங்கு வாழும் பூர்வீகக் குடிகள் இவ்வாறு வர்ணிக்கின்றனர். பெரும் மூதாதையரான குருந்திரியின் (Ngurunderi) இரு மனைவிகள் அவரை விட்டு ஓடி விட்டனர். அவர்களைத் தொடர்ந்து வந்த அவர் (இப்பொழுது உள்ள) கங்காரு தீவை நோக்கி ஒரு மணற் திட்டில் நடந்து கொண்டிருந்த தன் மனைவிகளைக் கண்டார். கோபம் கொண்ட அவர் கடலை எழுப்பி அவர்களை மூழ்கடித்தார். அந்தப் பெண்களும் அவர்களது உடமைகளும் இப்பொழுது உள்ள பேஜஸ் தீவுகள் (Pages) ஆயின. மணற் திட்டை முழுவதையும் மூடிய கடல் இன்றுவரை பின் வாங்கவில்லை என்கின்றனர். கங்காருத் தீவு தனிமைப் பட்டது.

இதேபோலத் தெற்கு ஆஸ்திரேலியா அருகில் இருக்கும் ஃபௌலர்’ஸ் பே (Fowler’s Bay) தோன்றியதும் பல பழைய கதைகளில் வருகிறது. இப்பொழுது கடல் ஆடிக்கொண்டிருக்கும் அந்தப் பகுதி அக்காலத்தில் ஒரு பாலைவனம். முன்பொரு காலத்தில் இந்தப் பாலைவனத்தில் பயணம் மேற்கொண்டார்கள் இரு சகோதரர்கள். மூத்தவனான மல்காருவிடம் (Malgaru) தோல் பையில் நீரும், நெருப்பு மூட்ட உதவும் கூர்முனை கொண்ட அரணிக் கட்டைகளும் இருந்தன. இளையவன் ஜால் (Jaul) தாகத்திற்கு நீர் கேட்டும் மல்காரு மறுத்தான். பல காத தூரம் நடந்த அவர்கள் களைத்துப் போயினர். கொண்டுவந்த நீர் பையையும், அரணிக் கட்டைகளையும் ஒரு பாறை இடுக்கிலே ஒளித்துவிட்டு உணவுக்காக வேட்டை ஆடச் சென்றான் மூத்தவன். ஒளித்து வைத்திருந்ததைக் கண்டெடுத்த ஜால், தாக மிகுதியால் தோல் பையை அரணிக் கட்டையால் துளைக்க உள்ளிருந்த நீர் பொங்கி எழுந்தது. தூரத்தில் இருந்து இதைக் கண்ட மல்காரு ஓடிவந்து நீரை அடைக்க முயன்றான். ஆனால் முடியவில்லை. கொப்பளித்த தண்ணீர் வெள்ளம் போலப் பெருகி அவர்களை மூழ்கடித்துப் பெரும் கடலாக விரிந்தது.

பனி உள்ளகங்களிருந்து எடுக்கப்பட்ட தரவுகள், வாய் வழியாகப் பல நூறு தலைமுறைகள் கடந்து வந்திருக்கும் கதைகள் ஆகியவற்றின் மூலங்கள் வேறாக இருந்தாலும் அவை காண்பிக்கும் காட்சிகள் ஒன்றே. உலகம் தழுவிய ஒரு பெரு நிகழ்வின் கோட்டோவியம். இந்த மாற்றங்கள் பூமியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இதில் மிகவும் முக்கியமானது மனித வரலாற்றில் ஒரு புரட்சி என்று பிரபல அகழ்வாராய்ச்சியாளர் கார்டன் சைல்டு (Gordon Childe) வர்ணித்த விவசாயத்தின் தோற்றம்.

ஆனால், இங்கு எழும் முக்கியக் கேள்வி இதுதான். நவீன மனிதன் பூமியில் வாழ்ந்த கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளில், கலை, மாந்திரீகம், ஆயுதங்கள் என்று பல்வேறு துறைகளில் பெரும் முன்னேற்றங்கள் கண்டாலும், விவசாயத்தை அவன் செய்யத் தொடங்கியது என்னமோ கடந்த 10000 ஆண்டுகளாகத்தான். ஏன் இந்தத் தாமதம்? இந்தக் கேள்விக்குப் பல பதில்கள் உண்டு.

குறைவான ஜனத்தொகை ஒரு காரணம். முன்பு குறிப்பிட்டதுபோலப் பல பருவநிலை சார்ந்த நிகழ்வுகளால் மனித இனத்தின் எண்ணிக்கை மாறுபட்டுக்கொண்டே இருந்தது. டோபா எரிமலை வெடிப்பு போன்ற நிகழ்வுகளால் சட்டென்று வீழ்ச்சியும் கண்டது. உதாரணத்திற்கு, ஐரோப்பாவில் 30,000 ஆண்டுகளுக்கு முன் ஏறக்குறைய 330000 மனிதர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று ஓர் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. ஆனால், 7000 ஆண்டுகளுக்குள் 130000ஆகக் குறைந்தது. இந்தக் குறைவான ஜனத்தொகைக்குத் தேவையான அளவு உணவு வேட்டை மூலமாகவோ அல்லது பல இடங்களில் இருந்து உணவு திரட்டப்பட்டோ கிடைத்திருக்கலாம். ஒரு இடத்தில் உட்கார்ந்து பயிர் செய்து உணவு ஈட்டுவது பயனற்ற, அதே சமயம், கடினமான வேலையாக அக்கால மனிதர்கள் கருதி இருக்கக்கூடும்.

அல்லது விவசாயம் செய்வதற்குத் தேவையான உபகரணங்கள் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறு கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் மட்டுமே தோன்றியது மற்றொரு காரணமாக இருக்கக்கூடும். ஆனால், இக்காரணங்களுக்கெல்லாம் மேலாக, எப்பொழுதும் இல்லாமல் கடந்த பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் விவசாயம் தோன்றியதற்கு ஏதோ ஓர் உலகளாவிய மாற்றம் ஒரு விசையாக இருந்திருக்கக் கூடுமோ?

(தொடரும்)

___________

உசாத்துணை
Rebecca Lindsey, Climate Change: Global Sea Level, NOAA, April 19, 2022
M. Becker and others, Increased exposure of coastal cities to sea-level rise due to internal climate variability, Nature Climate Change, Volume 13, 2023
David Bielllo, What thawed the last ice age?, Scientific American, April 4, 2012
Patrick Nunn and Nicholas J. Reid, Aboriginal Memories of Inundation of the Australian Coast Dating from More than 7000 Years Ago, Australian Geographer 47(1), September 2015
Miikka Tallavaara and others, Human population dynamics in Europe over the Last Glacial Maximum, PNAS, 112(27), July 7, 2015

பகிர:
nv-author-image

ரகு ராமன்

மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இவர் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். வரலாறு, அறிவியல் துறைகளில் ஆர்வம் உடையவர். நீண்ட பயணங்களில் நாட்டம் கொண்டவர். இவருடைய கட்டுரைகளும் சிறுகதைகளும் சொல்வனம் போன்ற இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. தொடர்புக்கு: madhuvanam2013@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *