19ஆம் நூற்றாண்டு என்பது சிந்தனை மேதைகள் பிறப்பின் பொற்காலமாகும். அந்தக் காலகட்டத்தில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தோன்றிய அறிவொளி இயக்கங்கள், அவற்றின் நெடிய வரலாற்றை மாற்றியமைக்கும் பணியைத் தொடங்கின. மக்களாட்சிக் கருத்தாக்கங்களும் அறிவியல் சிந்தனைகளும் பல்கிப் பெருகி, பொதுமக்களுக்கு மத்தியில் மிக நீண்டகாலமாகப் புரையோடியிருந்த மூட நம்பிக்கைகளின் அஸ்திவாரத்தை அசைத்துப் பார்த்தன. அறிவுப் பார்வைக்குப் புதியதொரு கண்ணோட்டம் வழங்கப்பட்டது.
பிரெஞ்சு பேரரசில் ஏற்பட்ட புரட்சியின் தாக்கம் ஐரோப்பா மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் எதிரொலித்தது. அப்புரட்சியின் வெளிப்பாடான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற தாரக மந்திரம், காலனி ஆதிக்கத்தில் மூழ்கிக் கிடந்த நாடுகளில் புதிய சிந்தனைகளைத் தூண்டின. ஜெர்மனியில் உதித்த புதிய தத்துவங்களும், ரஷ்யாவில் முன்னெடுக்கப்பட்ட பண்ணையடிமை ஒழிப்பு, விவசாயப் பெருங்குடியினரின் விடுதலை ஆகியவற்றுடன் அங்கு தோன்றிய புரட்சிகரமான சிந்தனைகளும், மரபார்ந்த வழிமுறைகளை மீள் உருவாக்கம் செய்ய முனைத்தன.
மேலை நாடுகளில் உருவான புதிய சிந்தனைகளால், அவற்றின் கட்டுப்பாட்டில் இருந்த ஆசிய, ஆப்பிரிக்க காலனி நாடுகளின் சிந்தனைகளில் முற்போக்குத் தன்மை புகுத்தப்பட்டது. அச்சமயம் வைதீக நெறிகளையும், வர்ணக் கோட்பாடுகளையும் பின்பற்றி வந்த நமது பாரத சமுதாயத்தின் சிந்தனைகளிலும், இப்புரட்சிக் கருத்தாக்கங்கள் மாற்றங்களை ஏற்படுத்தின.
உதாரணமாகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக நடைமுறையாக, காலங்காலமாக பெண்களுக்கு நேர்ந்துகொண்டிருந்த சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை, சமூக சீர்திருத்த விடிவெள்ளியான ராஜா ராம் மோகன் ராய் முடிவுக்குக் கொண்டுவந்தார். இத்தகைய சீர்திருத்தங்கள் ஏற்பட்ட காலத்தில், தமிழக மக்களின் வாழ்வியல் முறை முற்போக்கு வடிவத்தைப் பெற்றது.
பிரிட்டிஷ் காலனி ஆட்சியின்போது ஆங்கிலேயர்களின் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்தால், பிராமணர்களும் இதர உயர் வகுப்பினரும் அவர்களுடன் நெருங்கிப் பழகுவதற்குத் தயக்கம் காட்டினார்கள். இதன் காரணமாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டும் ஒதுக்கப்பட்டும் இருந்த சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலேயர்களுக்கு உதவியாளர்களாகப் பணியாற்றினார்கள். இவர்கள் பெரும்பாலும் `பட்லர்’ என்று அழைக்கப்பட்டனர்.
பாரம்பரியமாகச் செய்து வந்த குலத்தொழிலை அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுக்கும் வழக்கத்தைக்கொண்டிருந்த சில குலத்தவர்கள், இத்தகைய ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்தனர். அந்த வகையில் சோதிடம், சித்த மருத்துவம், கணிதவியல் போன்றவை தலைமுறை தலைமுறையாகக் கற்றுக்கொடுக்கப்பட்டு வந்தன.
இவ்வாறு குலத்தொழிலைப் பின்பற்றி வந்த ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரே கந்தப்பனார். இவரது பூர்வீகம் கோயம்புத்தூரில் உள்ள அரசம்பாளையம் என்று சில குறிப்புகளில் கூறப்பட்டாலும், சென்னை மயிலாப்பூரில் இவர் வசித்து வந்தற்கான குறிப்புகளே அதிகமாகக் கிடைத்துள்ளன.
கல்வியிலும் சித்த மருத்துவத்திலும் சிறந்து விளங்கிய கந்தப்பனார் ஆங்கிலேய அதிகாரி ஜார்ஜ் ஹாரிங்டனுக்குப் பிடித்த பட்லராக இருந்ததில் வியப்பில்லை. தமிழில் நன்கு கற்றுத் தேர்ந்த பண்டிதராக கந்தப்பனார் விளங்கினார். இவர் சுவடிகளைத் தந்து உதவியால்தான் அப்போது தமிழ் மொழி தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பிரான்சிஸ் எல்லீஸ், 1831ஆம் ஆண்டில் திருக்குறள் நூலை அச்சில் பதிப்பித்து வெளியிட்டார்.
ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் பல்வேறு சீரிய பணிகளில் ஈடுபட்ட கந்தப்பனாரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய குறிப்புகள் அதிகம் கிடைக்கவில்லை. இவருக்குக் கந்தசாமி என்ற பெயரில் ஒரு மகன் இருந்ததற்கான குறிப்பு மட்டும் கிடைத்துள்ளது. குலத்தொழிலான சித்த மருத்துவத்தையும் சோதிடத்தையும் தன் மகனுக்கு கந்தப்பனார் முறைப்படி கற்பித்தார்.
ஒழுக்கமும் சிறந்த கல்விப்புலமும் இருந்தபோதிலும் அன்றைய காலகட்டத்தில் எதனால் சமுதாய ஏற்றத்தாழ்வு முறை பொதுமக்கள் மீது திணிக்கப்பட்டது என்பது விவாதத்திற்குரிய விஷயமாகும்.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் வழியாக இந்தியா முழுவதும் பல்வேறு மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டன. தாமஸ் மன்றோவிற்குப் பிறகு ஆளுநர் பொறுப்புக்கு வந்த ஸ்டீபன் லூஷிங்டன் காலத்தில் அன்றைய சென்னை மாகாண கல்வித்துறையில் மிகப்பெரிய அளவிலான சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தன.
1854இல் மெக்காலே தலைமையிலான குழு வழங்கிய அறிக்கையின் அடிப்படையில், நாடு முழுவதும் ஆங்கில வழிக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்காக மாகாண அரசாங்க நிர்வாகத்தின் தரப்பில் திட்டங்கள் தீட்டப்பட்டபோதும் அவற்றை நடைமுறைபடுத்துவதில் ஆர்வம் காட்டப்படவில்லை. இதனால் அனைவருக்கும் ஆங்கில வழிக் கல்வி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
சென்னை மாகாண ஆளுநர் பொறுப்பை ஜான் எல்ஃபின்ஸ்டோன் ஏற்ற பிறகு இந்த சுணக்கம் களையப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில் தாய்மொழி வழிக் கல்விமுறைக்கும் அவர் ஆதரவளித்தார்.
1837 முதல் 1842 வரை ஆளுநர் பொறுப்பில் இருந்தபோது, மலை வஸ்தலமான நீலகிரிக்குக் கோடைக்காலங்களில் சென்று தங்குவதை எல்ஃபின்ஸ்டோன் வழக்கமாக்கிக்கொண்டார். இவரைப் பின்பற்றி மாகாணத்தின் உயர் பொறுப்புகளில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகளும் நீலகிரிக்குச் செல்லத் தொடங்கினார்கள். அந்த சமயங்களில் தங்களது பட்லர்களையும் அவர்கள் உடன் அழைத்துச் சென்றனர்.
அந்த வகையில் அதிகாரி ஹாரிங்டன் கோடையில் நீலகிரிக்குச் செல்லத் தொடங்கியதும், கந்தப்பனாரும் அவருடன் செல்வது தவிர்க்க முடியாததானது. குன்னூரில் சில விளைநிலங்களை அவர் வாங்கினார்.
இதற்கிடையே கந்தப்பனாரின் மகன் கந்தசாமிக்கு தனலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு தந்தையின் ஆலோசனைப்படி மயிலாப்பூரில் தங்கிப் பரம்பரைத் தொழிலான சித்த மருத்துவத்தில் கந்தசாமி ஈடுபடத் தொடங்கினார். பொதுமக்களுக்குத் தேவைப்பட்ட பச்சை கற்பூரம், நீலம், சோப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களைச் சொந்தமாகத் தயாரித்து விற்பனையும் செய்துகொண்டிருந்தார்.
எனினும் ஹாரிங்டனுக்குப் பணி மாறுதல் கிடைத்தபோதெல்லாம், அவருடன் சேர்ந்து கந்தப்பனாரின் குடும்பமும் இடம்பெயர்வது வழக்கமாகிப்போனது.
காத்தவராயன் பிறப்பு
1845ஆம் ஆண்டு மே 20 அன்று கந்தசாமி தனலட்சுமி தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தங்களது குல வழக்கப்படி காத்தவராயன் என்ற பெயரை அவர்கள் குழந்தைக்குச் சூட்டினார்கள். அன்றைய சென்னையின் தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு பகுதிகளில் காத்தவராயனின் குழந்தைப் பருவம் கழிந்தது.
உயர் சாதிகளாக அறியப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்கள் மீது காட்டிய பாகுபாடுகளை சிறுவனாக இருந்தபோதே காத்தவராயனால் உணர முடிந்தது. அவற்றால் அவர் வெகுவாகப் பாதிக்கப்பட்டார். பல்வேறு வகையிலும் தீண்டாமைக் கொடுமைகள் நிகழ்ந்த அந்தக் காலகட்டத்தில், ஆங்கிலேயருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பட்லர்களும் அவற்றை எதிர்கொள்ள நேர்ந்தது.
பிரிட்டிஷ் இந்திய அரசால் 1843ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட அடிமை ஒழிப்புச் சட்டம், 1861இல் அமல்படுத்தப்பட்ட இந்திய தண்டனை சட்டம் போன்றவை தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்குச் சட்ட ரீதியான நிவாரணத்தை அளித்திருந்தாலும், நடைமுறையில் அவை முறையாகப் பின்பற்றப்படவில்லை.
இத்தகைய நிலையில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்வேறு கடினமான சூழல்களை நாட்டு மக்கள் எதிர்கொண்டனர். குறிப்பாக, கொத்துக்கொத்தாக மக்கள் செத்துமடிவதற்குக் காரணமாக இருந்த கொடிய பஞ்சங்கள் அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்டன. அப்படிப்பட்ட ஒரு பஞ்ச காலத்தின்போது சென்னை மாகாணத்தில் ஆங்கிலேயரிடம் பணியாற்றியவர்களுக்கு மட்டும் 450 கிராம் பருப்பும், ஒரு அணாவும் வழங்கப்பட்டன. ஆனால் அவர்களிடம் கடுமையாக வேலை வாங்கப்பட்ட பிறகே அவை கொடுக்கப்பட்டன.
பஞ்சத்தால் பெருவாரியான மக்கள் உணவுக்கே தவிக்கும் நிலை இருந்தபோதும் மகனுக்கான கல்வியில் கவனத்தைச் செலுத்த கந்தசாமி தவறவில்லை. முதலில் பாட்டனாரிடமும், பிறகு தந்தையிடமும் ஆங்கிலத்தையும் சித்த மருத்துவத்தையும் காத்தவராயன் கற்றுத்தேர்ந்தார். அதைத் தொடர்ந்து மகனின் கல்வித்திறனை மேம்படுத்தும் நோக்கில் அவரைப் புதிய ஆசிரியர்களிடம் கந்தசாமி சேர்ப்பித்தார்.
கூலியாட்களாகவும், விவசாயிகளாகவும், வேலையாட்களாகவும் தாழ்த்தப்பட்ட மக்கள் மேல்தட்டு வர்க்கத்தினரிடம் பணி செய்து வந்தனர். இருப்பினும் அவர்களுள் சிலரிடம் ஒப்பற்ற கல்விப் புலமை காணப்பட்டது. தங்களது மக்களின் நலன் கருதி அவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் பணியினை அத்தகைய நபர்கள் மேற்கொண்டு வந்தனர்.
அவர்களில் காசிமேடு சதாவதாணி வைரக்கண் வேலாயுதம் புலவரும் (1830-1892), வல்லக்காளத்தி வீ. அயோத்திதாச பண்டிதரும் (1835-1900) குறிப்பிடத்தக்கவர்கள்.
நன்கு கற்றறிந்தவர் என்பதுடன் சிறந்த சித்த வைத்தியராகவும், பன்மொழிப் புலவராகவும் அயோத்திதாச பண்டிதர் விளங்கினார். போகர் எழுநூறு, அகத்தியர் இருநூறு, சிமிட்டு ரத்தின சுருக்கம், பாலவாகடன் முதலான நூல்களை அச்சில் பதிப்பித்து அவர் வெளியிட்டார். அதுவரை வெளிவராத சுவடிகளைப் பதிப்பிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார்.
சமூகத்தில் பரவலான நன்மதிப்பை பெற்றிருந்த அயோத்திதாச பண்டிதரிடம் கல்வி கற்கும் பொருட்டுத் தன் மகனை கந்தசாமி அனுப்பி வைத்தார். காத்தவராயன் அவரிடம் நன்முறையில் கல்வி கற்கத் தொடங்கினார்.
(தொடரும்)