Skip to content
Home » அயோத்திதாசர் #2 – காத்தவராயன் அயோத்திதாசர் ஆகுதல்

அயோத்திதாசர் #2 – காத்தவராயன் அயோத்திதாசர் ஆகுதல்

குழந்தைகள் கள்ளம் கபடமற்ற உள்ளம் கொண்டவர்கள். அவர்களின் இளகிய மனம், ஈரம் நிறைந்த பசுமண் போன்றதாகும். மண்ணில் விதைக்கப்படும் வித்துக்களே பின்னாளில் சமுதாயத்திற்குப் பலன் தரும் அகண்ட மரமாகின்றன. சிறு வயதில் குழந்தைகள் சந்திக்கும் நிகழ்வுகளும் மனதில் பதியும் எண்ணங்களும் அவர்களது எதிர்கால வாழ்வைக் கட்டமைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

அப்படித்தான் காத்தவராயனின் சிறுவயதில் நடைபெற்ற பல சம்பவங்கள் அவரது எதிர்கால இலக்குகளை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைத்தன. 1862ஆம் ஆண்டில் காத்தவராயனின் குருவான அயோத்திதாச பண்டிதர் இயற்றிய ஒரு வெண்பாவில் குற்றமிருப்பதாக உயர் வகுப்பைச் சேர்ந்த ஒரு அஷ்டாவதானி குற்றம்சாட்டினார். 27 வயதே நிரம்பியிருந்த அயோத்திதாச பண்டிதர் பொதுவெளியில் வாதத்திற்கு வருமாறு அந்த நபருக்கு அழைப்பு விடுத்தார். பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்த அந்த நபரோ பண்டிதரை எதிர்க்க துணிவின்றி தலைமறைவானார்.

இது போன்ற பல நிகழ்வுகள் சிறுவன் காத்தவராயன் மனதில் ஆழப் பதிந்ததோடு, குருவைப் பற்றிய உயரிய எண்ணங்கள் ஏற்படத் தூண்டுகோலாக இருந்தன. ஒரு கட்டத்தில் மதிப்பிற்குரிய குருவின் பெயரையே காத்தவராயன் தன் பெயராக்கிக்கொண்டார்.

1869ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான குரலாக ’சூர்யோதயம்’ என்கிற முதல் தலித் இதழை சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த வேங்கடசாமி பண்டிதர் தொடங்கினார். இது அன்றைய நாளில் பரவலாக எழுந்த சமத்துவத்திற்கான குரலாகக் கருதப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் 1932ஆம் ஆண்டில் ’ஹரிஜன சேவா சங்கத்தை’ காந்தியடிகள் தொடங்கினார். ஆனால் காந்தியடிகள் பிறந்த 1869ஆம் ஆண்டிலேயே பறையர் சமூகத்தைச் சேர்ந்த வேங்கடசாமி பண்டிதரால் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக சூர்யோதயம் இதழ் தொடங்கப்பட்டது.

அன்றைய சூழலில் இந்த இதழ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் தாழ்த்தப்பட்ட இனங்களைச் சேர்ந்த மக்களுக்குக் கல்வி அறிவு இருந்தபோதும் சமுதாயத்தில் நிலவிய பிற்போக்குத் தன்மை காரணமாக அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது நமக்குப் புலனாகிறது.

’வைத்திய காவியம்’, ’சிவ வாக்கியம்’, ’இரத்தின காண்டம்’ போன்றவற்றைப் பழமையான சுவடிகளில் இருந்து நூல் வடிவத்தில் வெங்கடசாமி பண்டிதர் பதிப்பித்தார். அவருடைய கல்விப் புலமையையும் அறிவுத் திறனையும் வெளிபடுத்துவதாக இருந்த இத்தகைய செயல்கள் அனைத்தும், எழுச்சிக் குரல் கொடுக்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவின. சமூகப் புரட்சிக்கு வித்திட்ட இந்நிகழ்வுகள் சமூகத்தின் கடைநிலையில் உழன்று தவிக்கும் மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க அயோத்திதாசரை தூண்டின.

புதுப்பேட்டை என்பது புனித ஜார்ஜ் கோட்டைக்கு மேற்கே அமைந்திருந்த வியாபார பகுதியாக மட்டுமல்லாமல், தாழ்த்தப்பட்ட மக்கள் பெருமளவில் வசிக்கும் இடமாகவும் இருந்தது. இந்த மக்களின் குரலாக இருக்கவேண்டும் என்ற காரணத்தினாலேயே சூர்யோதயம் இதழ் இப்பகுதியில் இருந்து வெளியிடப்பட்டது. திருக்குறளைப் பதிப்பிக்க காத்தவராயன் பாட்டனார் கந்தப்பனார் உதவிய வரலாறு இந்த இதழில் வெளியிடப்பட்டது.

மேலும் அயோத்திதாச பண்டிதருக்கு வேங்கடசாமி பண்டிதர் நன்கு அறிமுகமானவராக இருந்த காரணத்தால் காத்தவராயன் அறிவுப் பசிக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது. சூர்யோதயம் இதழைத் தொடர்ந்து பஞ்சமர் என்கிற தலித் இதழும் வெளிவரத் தொடங்கியது. இந்த இரண்டும் கடல் தாண்டிப் புலம் பெயர்ந்திருந்த தலித் மக்களிடமும் வரவேற்பைப் பெற்றன.

1882இல் அன்றைய பிரிட்டிஷ் இந்திய கவர்னர் ஜெனரல் ரிப்பனின் முயற்சியால் உள்ளூர் சுயராஜ்ஜிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் ஆர்வத்தைக் கொண்டிருந்த உயர்சாதி வகுப்பினரிடையே இச்சட்டம் ஆர்வத்தைத் தூண்டியத. இதன்படி மாவட்டம், வட்டம் மற்றும் உள்ளூர் (கிராம) அளவில் உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கபட்டு அவை வருவாய் துறையின் கீழ் இயங்க ஆணையிடப்பட்டது. பிரிட்டிஷ் அரசின் முந்தைய நடவடிக்கைகளால் புறக்கணிக்கப்பட்ட தலித் மக்களிடையே இந்த முன்னெடுப்பு பெறும் வரவேற்பைப் பெற்றது.

கல்வியை நிறைவு செய்ததும் அயோத்திதாசர் (காத்தவராயன்) குன்னூருக்குத் திரும்பினார். நீலகிரி மலையில் வசித்த தோடர் இனத்தைச் சேர்ந்த ஒரு பழங்குடியினப் பெண்ணை அவர் மணந்துகொண்டார். அந்த வகையில் தந்தை பெரியாருக்கு வெகு காலத்திற்கு முன்பே கலப்புத் திருமண முறையை தொடங்கி வைத்தவர் அயோத்திதாசர். திருமணம் முடிந்த கையோடு மனைவியுடன் அவர் பர்மாவுக்குப் பயணப்பட்டார். சுமார் பத்தாண்டு காலம் வரை அவர் அங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது.

விவசாயக் கூலிகளாகவும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகவும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பர்மா தலைநகர் ரங்கூனில் வாழ்ந்து வந்தனர். அம்மக்களின் வாழ்க்கை முறையை அறிந்துகொள்ள அந்த இடப்பெயர்ச்சி அயோத்திதாசருக்குப் பொன்னான வாய்ப்பை வழங்கியது. இந்தியாவில் சில சமூகத்து மக்களிடம் கல்வியும் செல்வமும் இருந்தபோதிலும், பிற்போக்குத்தனமான எண்ணங்களால் உயர் சாதியினரால் அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ரங்கூனில் பெரிதும் மதிக்கப்பட்டனர். இந்த வேறுபாடு அயோத்திதாசரைச் சிந்திக்க வைத்தது.

இப்படிப்பட்ட சூழலில் ரங்கூனில் அயோத்திதாசருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிறவியிலேயே அந்தக் குழந்தைக்குப் பார்வை குறைபாடு இருந்தது. அதற்கு தசரதராமன் என்ற பெயரை அயோத்திதாசர் சூட்டினார். ஆனால் மகன் பிறந்த மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. ஒரு சில மாதங்களிலேயே அக்குழந்தை இறந்துபோனது. குழந்தை இறந்த சோகம் நீங்கும் முன்பே அவரது மனைவியும் உயிரிழந்தார். இதனால் துயரின் விளிம்பிற்குச் சென்ற அயோத்திதாசர் பர்மாவில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பினார்.

பர்மா பயணமும் ரங்கூன் அனுபவங்களும் அயோத்திதாசரின் வாழ்வில் பலவிதமான மாற்றங்களையும், புதிய சிந்தனைகளையும், ஆழ்ந்த புரிதல்களையும் ஏற்படுத்தியது. அயோத்திதாசருக்கு இருந்த கடவுள் பற்று அவரது எண்ணத்தில் புதிய கண்ணோட்டத்தைப் புகுத்தியது. ஆதிசங்கரரின் அத்வைத்துவ தத்துவத்தில் அவர் தீவிரமான ஈடுபாட்டைக்கொண்டார்.

அறிஞர்களும் ஞானிகளும் ஆழ்ந்த பற்றுதலைக் கொண்டிருந்த அத்வைத தத்துவம், அயோத்திதாசரின் சிந்தனையிலும் செயல்பாட்டிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது. அத்வைத தத்துவத்தின் கருப்பொருளான ’அனைத்தும் ஒன்றே’ என்கிற சித்தாந்தம் அவரை வெகுவாகப் பாதித்தது. ’அதுவல்ல, அதுவல்ல’ என ஒன்றைப் பிரித்துப் பார்த்துக்கொண்டே முடிவை நோக்கிச் செல்லும் இந்தத் தத்துவம் பண்டைய இந்தியாவின் மாபெரும் கொடையாகும். இதன் மூலம் நமது வியத்தகு பாரத சமுதாயம் ஒப்புயர்வற்ற உன்னதமான நிலையை அடைந்துள்ளது.

அறிவுத் தேடலில் ஈடுபட்டிருந்த அயோத்திதாசரின் கவனத்தை அன்றைய சமூகத்தில் நிலவிய சிக்கல்கள் ஈர்த்தன. குறிப்பாக ரங்கூனிலிருந்து குன்னூர் திரும்பியதும், அங்கு வாழும் பழங்குடியின மக்கள் எதிர்கொண்ட பொதுவான வாழ்வியல் பிரச்னைகளை அவர் கண்கூடாகப் பார்த்தார். சாதிய அடக்குமுறை, மிஷனரிகளின் மதமாற்றம், மருத்துவம் கிடைப்பத்தில் சிக்கல் எனப் பல்வேறு பிரச்னைகள் அம்மக்கள் எதிர்கொண்டனர். தன்னுணர்வு சிந்தனையில் ஆழ்ந்திருந்த அயோத்திதாசர் இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண முனைப்புடன் செயல்பட்டார். 

அன்றைய காலகட்டத்தில் மலைவாழ் மக்களின் இயலாமையைக் கருத்தில் கொண்டு, சில கிறிஸ்துவ மிஷனரிகள் அவர்களுக்கு உதவி செய்யும் போர்வையில் மதமாற்றத்தில் ஈடுபட்டு வந்தன. தங்கள் அறியாமையால் கல்வியறிவற்ற மக்கள் சிக்குவதைக் கண்ட அயோத்திதாசர் அவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை முதலில் உணர்ந்தார்.

மதமாற்றம் என்பது பழங்குடியின மக்களைப் பிரிவினைவாதத்தில் சேர்ப்பதில் முடியும், அதனால் அம்மக்கள் தங்களுடைய பூர்வக்குடி அடையாளத்தை இழக்க நேரிடும், நம்மை அடிமைப்படுத்தியுள்ள அந்நிய சக்திகளுக்கு மேலும் வாய்ப்பு வழங்குவதாக அமைந்துவிடும் என்று அயோத்திதாசர் அஞ்சினார். ’துளசி மாடம்’ என்கிற ஒரு அமைப்பைத் தொடங்கி பழங்குடியின மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

தொடர் முயற்சியின் விளைவாக குன்னூர் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்களை ஒன்றிணைத்து 1870ஆம் ஆண்டில் ’அத்வைதானந்த சபை’ என்கிற அமைப்பை அயோத்திதாசர் தோற்றுவித்தார். அதன் வழியாக அவர் மக்கள் சேவையில் ஈடுபட்டார். அத்வைதானந்த சபையைத் தோற்றுவித்தபோது அயோத்திதாசரின் வயது 25 மட்டுமே.

இச்சபையின் வழியாகப் பழங்குடியின மக்களிடையே அத்வைத தத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு, அவர்களுக்குப் பல்வேறு உதவிகளும் வழங்கப்பட்டன. இதற்கிடையே மருத்துவச் சேவைகளையும் அயோத்திதாசர் வழங்கத் தொடங்கினார். அத்துடன் அடிப்படையான மருத்துவம் பார்க்கும் முறைகளையும் மக்களுக்கு அவர் கற்றுக்கொடுத்து வந்தார்.

சித்த மருத்துவ முறைகள் அம்மக்களுக்குக் கற்பிக்கப்பட்டதோடு, நோய் முறிவு மருந்துகளை அவர்களே தயார் செய்துகொள்வதற்கான துண்டு பிரசுரங்கள் குன்னூர் முழுவதும் விநியோகிக்கப்பட்டன. மூலிகைகளைப் பெறும் முறை, அதைப் பக்குவப்படுத்தும் வழிமுறைகள், மருந்துகளைத் தயாரிக்கும் செய்முறைகள் போன்ற விவரங்கள் அந்தப் பிரசுரங்களில் இடம்பெற்றிருந்தன.

இந்தத் துண்டு பிரசுரங்கள் அன்றைய சென்னை மாநகர் மற்றும் அதன் மேற்குப் பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கபட்டு மக்களிடையே சித்த மருத்துவம் குறித்துப் பரப்புரை செய்யப்பட்டது. தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அயோத்திதாசர் இப்பணியை மேற்கொண்டார்.

(தொடரும்)

பகிர:

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *