சமூகத்தின் மீதான அக்கறையில் தங்களது மகனால் மேற்கொள்ளப்பட்ட பணிகளால் ஒரு பக்கம் பெருமிதமாக இருந்தபோதிலும், தனிப்பட்ட வாழக்கையில் மகனுக்கு ஏற்பட்ட இழப்பை எண்ணி அயோத்திதாசரின் பெற்றோர் கவலைகொண்டனர். தூரத்து உறவினரான இரட்டைமலை சீனிவாசனுடன் அயோத்திதாசர் குடும்பத்திற்கு நல்லுறவு இருந்தது.
அன்றைய காலகட்டத்தில் முற்போக்கான மற்றும் மாறுபட்ட சிந்தனைகளைக் கொண்டிருந்த ஒரு நபராக பல்வேறு சமூக சீர்திருத்தப் பணிகளை இரட்டைமலை சீனிவாசன் மேற்கொண்டிருந்தார். இரட்டைமலை என்பது சீனிவாசனின் தந்தையின் பெயர். இன்றைய செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோழியாளம் கிராமம் அவரது பூர்வீகமாகும்.
வறிய நிலையில் இருந்த இரட்டைமலையின் குடும்பத்தினர் சாதிய ரீதியிலான கொடுமைகளை கோழியாளத்தில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் குடும்பத்துடன் அவர் தஞ்சாவூருக்கு இடம் மாறினார். ஆனால் அங்கேயும் சாதியக் கொடுமைகளை எதிர்கொண்டதால் குடும்பத்துடன் இரட்டைமலை கோயம்புத்தூருக்குச் சென்றார். கோவை அரசுக் கல்லூரியில் சீனிவாசன் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் முதலாவதாகப் பட்டம் பெற்ற நபர் என்று இரட்டைமலை சீனிவாசனை அடையாளப்படுத்துவது உண்டு.
சீனிவாசனின் தங்கை தனலட்சுமி அயோத்திதாசர் வீட்டில் இருந்தபடி கல்வி கற்றுக்கொண்டிருந்தார். அன்றைய காலகட்டத்தில் பல்வேறு சிரமங்களுக்கும் சிக்கல்களுக்கும் பட்டியலினப் பெண்கள் ஆளாகியிருந்த சூழலில், எட்டாம் வகுப்புப் படிப்பை தனலட்சுமி நிறைவு செய்தார். அந்நாளில் மிக உயர்ந்த பதவிகளில் அமருவதற்குத் தகுதியாக இந்தப் படிப்பு இருந்தது.
சீனிவாசனின் தங்கை தனலட்சுமியை அயோத்திதாசருக்கு திருமணம் செய்து வைத்து, தன் மகன் வாழ்வில் கந்தசாமி மீண்டும் ஒளியேற்றி வைத்தார். மலரும் மணமும்போல இணை பிரியாத வகையில் ஒருமித்த கருத்துடைய கணவன் மனைவியாக இருவரும் வாழ்ந்தனர். காதலுடன் புரிதலையும் கொண்டிருந்த தன் மனைவி தனலட்சுமியை, ’தாயி’ என்றே எப்போதும் அவர் அழைத்தார்.
இந்தத் தம்பதியினருக்கு அடுத்தடுத்து நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. அந்த சமயம் தனது குடும்ப மரபாக அயோத்திதாசர் வைணவத்தைப் பின்பற்றியதை, அவர் தன் மகன்களுக்கு வைத்த பெயர்களின் வாயிலாக அறிய முடிகிறது. பட்டாபிராமன் என்று மூத்த மகனுக்குப் பெயர் சூட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாம் மகனுக்கு மாதவரம், மூன்றாம் மகனுக்கு ஜானகி ராமன் மற்றும் நான்காம் மகனுக்கு இராஜாராமன் எனப் பெயரிடப்பட்டது. நான்கு மகன்களுக்குப் பிறகு அயோத்திதாசருக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தன.
அவர்கள் பிறந்தபோது அயோத்திதாசரின் கருத்தியலிலும் சமய சார்பிலும் முற்போக்கு எண்ணம் குடிகொண்டிருந்தது. மேலும் அப்போது அவர் பௌத்த மதம் சார்ந்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்டிருந்தார். ஆகையால், தன் முதல் மகளுக்கு அம்பிகாபதி என்ற பெயரையும் இரண்டாம் மகளுக்குப் புத்தரின் தாயாரான மாயாதேவியின் பெயரையும் அவர் சூட்டினார்.
அன்றைய காலகட்டத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகளில் அவசியமான ஒன்றாக மருத்துவம் இருந்தது. எந்தச் சூழலிலும் தடைபடாத வகையில் அவர்களுக்கு அதை வழங்கிப் பொதுசேவை ஆற்றிய புகழ்பெற்ற மருத்துவராக அயோத்திதாசர் விளங்கினார்.
அவரால் தொடங்கப்பட்ட அத்வைதானந்த சபையின் மூலமாக நீலகிரியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடி மக்களிடம் முற்போக்குச் சிந்தனைகள் புகுத்தப்பட்டு, அவர்களது வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. தனது எண்ணங்கள் ஒவ்வொன்றையும் அயோத்திதாசர் வெளிபடுத்திக்கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், ஆங்கிலேய அரசு பல்வேறு திட்டங்கள் வழியாக மாற்றங்களை நடைமுறைப்படுத்தியது.
ஆங்கிலேய அரசால் செயல்படுத்தப்பட்ட முக்கிய வளர்ச்சித் திட்டங்களில் அஞ்சல் துறையும் ஒன்றாகும். தலைவர்கள் நடத்திய இதழ்களை அனைத்து இடங்களுக்கும் சென்று சேர்க்கும் பணியில் அஞ்சல் துறை சிறப்பாக ஈடுபட்டது. அஞ்சல் துறையை மேம்படுத்துவதற்கான வரைவுத் திட்டங்களை 1850-க்குப் பிறகு இந்திய கவர்னர் ஜெனரல் டல்ஹவுசி முன்னெடுத்தார். இதன் விளைவாக அஞ்சல் சேவையின் பலனை இந்திய மக்கள் பெறத் தொடங்கினார்கள்.
சூர்யோதயம், பஞ்சமன் போன்ற இதழ்கள் வாயிலாக வெளிப்பட்ட அயோத்திதாசரின் கருத்துகளை மக்களிடையே பரவலாக்க அஞ்சல் துறையின் சேவை பெரிதும் உதவியது.
நாட்டை ஒருங்கிணைக்கும் வகையில் ஆங்கிலேய அரசால் முன்னெடுக்கப்பட்ட ரயில் சேவைக்கான இருப்புப்பாதை அமைக்கும் பணிகளில் தலித் மக்கள் தொடர்ச்சியாக ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் அவர்களது பொருளாதார நிலை கணிசமான அளவில் உயர்ந்தது. சென்னை தொடங்கி கோயம்புத்தூரின் மேட்டுப்பாளையம் வரையில் இருப்புப்பாதை அமைக்கும் பணி துரிதமாக நிறைவு செய்யப்பட்டது. இதனால் அயோத்திதாசர் சென்னையில் இருந்து கோவைக்குச் சென்று திரும்புவதற்கான கால நேர விரயம் குறைத்தது. பல்வேறு இடங்களுக்குப் பயணித்து அறிஞர்களுடன் தொடர்புகொள்ள ரயில்சேவை அவருக்குப் பெரிதும் உதவியது.
இவ்வாறாக சிறிது சிறிதாக தலித் மக்கள் முன்னேறிக்கொண்டிருந்த வேளையில் நமது இந்திய வரலாற்றுப் பக்கங்களில் குருதியால் பொறிக்கபட்ட தாது வருடப் பஞ்சம் ஏற்பட்டது. 1875ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாகாண ஆளுநராக பக்கிங்ஹாம் பொறுப்புக்கு வந்த அடுத்த வருடமே இந்தக் கொடிய பஞ்சம் தலைதூக்கத் தொடங்கியது. இதைப் போக்க வேண்டியது மட்டுமே பக்கிங்ஹாம் முன்னாலிருந்த மிகப்பெரிய சவாலாக இருந்தது.
சென்னை மற்றும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளில் அரிசி ஆறாக ஓடுவதாகப் பரவிய வதந்தி, தலித் மக்கள் குடும்பம் குடும்பமாக இடம்பெயரக் காரணமானது. பஞ்ச காலத்தின்போது செங்கல்பட்டு, வட ஆற்காடு முதலான இடங்களில் இருந்து சென்னைக்கு மக்கள் குடிபெயர்ந்தனர். இந்தச் சூழலில் பஞ்சத்தின் கோரப் பிடியிலிருந்து மக்களை மீட்பதற்கான ஒரு திட்டத்தை பக்கிங்ஹாம் செயல்படுத்தினார்.
கூலிக்குக் கால்வாயை வெட்டும் பணியை மக்களுக்கு வழங்கி, அவர்களது பட்டினியைப் போக்க பக்கிங்ஹாம் உதவிக்கரம் நீட்டினார். இந்த திட்டத்தின் கீழ் சென்னையின் கிழக்குக் கடற்கரையோரம் முதல் கால்வாய் வெட்டப்பட்டது. இதுவே பின்னாளில் 261 கி.மீ. நீளமுள்ள கால்வாயாக உருவெடுத்தது. வடக்கே பெத்தகஞ்சம் தொடங்கி தெற்கே மரக்காணம் வரையில் இது நீட்டிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் மக்களுக்குக் கூலியாக ரூ. 22 லட்சம் கொடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்ட தலித் மக்கள், கால்வாயின் கரைகளிலேயே குடியமர்ந்தனர். பஞ்சம் நீங்கிய பின்னர் கால்வாயில் படகு செலுத்துவது, சரக்குகளை இடமாற்றம் செய்வது போன்ற பணிகளில் இவர்கள் ஈடுபட்டனர். தலித் மக்களின் தொடர் வருகையால் சென்னையின் மக்கள்தொகை அதிகரிக்கத் தொடங்கியது. இவர்களிடையே அயோத்திதாசரின் கருத்துகள் வேகமாகப் பரவி, இம்மக்களுக்கு அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியது.