Skip to content
Home » கடல் நாய் #1 – எட்டாம் ஹென்றியின் காதல்கள்

கடல் நாய் #1 – எட்டாம் ஹென்றியின் காதல்கள்

எட்டாம் ஹென்றி - ராணி கேத்தரின்

ஒரு பிரமாண்டமான மாளிகையைக் கடக்க நேரும்போது, அதன் உருவாக்கத்திற்கான காரணகர்த்தாக்களையோ நாயகர்களையோ, அவர்கள் யாரென்று தெரியாவிட்டாலும் ஒரு கணம் நினைத்துப் பார்த்துக்கொள்வோம். அதுபோல் பல சாம்ராஜ்ஜியங்கள் நூற்றாண்டுகளைக் கடந்து கோலோச்ச தசையும் எலும்பும் கொண்ட மனித உருவம் தேவைப்படுகிறது. அந்த உருவம் ஒரு மன்னராகவோ தளபதியாகவோ, ஏன் ஒரு தனிநபராகவோகூட இருக்கலாம். அத்தகைய நபர்கள் வரலாறு முழுக்கப் பரவிக்கிடக்கிறார்கள்.

சமகாலத்தில் நாம் கண்ட மாபெரும் சாம்ராஜ்ஜியம் பிரிட்டிஷ் பேரரசு. சூரியன் மறையாத அந்தப் பெரும் நிலப்பரப்பு அமெரிக்கா முதல் ஆஸ்திரேலிய கண்டம்வரை கால் நீட்டிப் பரவியிருந்தது. அவர்களுடைய பிடியிலிருந்து நாம் விடுபட்ட கதையைப் பள்ளிக்கூட வரலாற்றில் படித்துக் களைத்திருப்போம். பிரிட்டன் திடீரென்று காளான் போல் முளைத்து உலகைத் தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவில்லை. அதன் எழுச்சியின் பின்னால் நூற்றாண்டுகளின் உழைப்பும், துணிச்சலான மனிதர்களின் சாகசங்களும் அடங்கியிருக்கின்றன.

பசிபிக் பெருங்கடலின் மூலையில் கிடக்கும் சாலமன் தீவுகளிலிருந்து அமெரிக்காவின் மேற்கு நகரமான சியாட்டில்வரை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்ததற்கு ஒருவர் காரணமாக இருந்தார். பதினாறாம் நூற்றாண்டு இங்கிலாந்தின் மகாராணி எலிசபெத்தின் செல்லக் கடல் நாய் என்று அறியப்பட்ட பிரான்சிஸ் டிரேக்தான் அவர். இது அவர் கதை.

0

டிரேக்கைப் பார்ப்பதற்குமுன்பு இங்கிலாந்து பற்றிய ஒரு சிறிய வரலாற்று அறிமுகம் தேவைப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டுடன் நூறு வருடத்திற்கும் மேலாக நீடித்த யுத்தம் 1453ஆம் ஆண்டு நிறைவடைந்தபோது கட்டெறும்பாகச் சிறுத்துக் கிடந்தது இங்கிலாந்து. பொருளாதாரம் பாதாளத்தில் கிடந்தது. படை வீரர்களின் எண்ணிக்கை குறைந்தது. இனி இங்கிலாந்தால் எழுந்து நிற்கவே முடியாது என ஐரோப்பியர்கள் ஆருடம் சொன்னார்கள். உடைந்த ஆயுதங்களைப் பொறுக்கிக்கொண்டு, பிணங்களைப் புதைத்துவிட்டு நாடு திரும்புவதற்குள் உள்நாட்டில் பெரும் சோதனை இங்கிலாந்துக்குக் காத்திருந்தது.

அரியணைக்கான சகோதரச் சண்டை (ரோஜா யுத்தம்) முப்பது வருடங்கள் தொடர்ந்தன. ஏற்கெனவே வலுவிழந்து கிடந்த இங்கிலாந்து இப்போது பட்ட மரமாக மாறியது. பெருமளவு வரி, குற்றங்களின் பெருக்கம், வகைவகையாக கொள்ளைநோய்கள் என இன்னல்கள் பல திசைகளிலும் பெருகின. அரசனே அரண்மனை ஜன்னலைத் திறந்துவைத்துக்கொண்டு, வரி வசூலித்து வரும் வீரர்களின் குதிரை குளம்படிச் சத்தத்திற்காக காத்திருக்கும் நிலை ஏற்ப்பட்டது.

1501ஆம் ஆண்டு, பதினாறாம் நூற்றாண்டின் முதல் வருடத்தில் லண்டன் மாநகரில் புனித பவுல் தேவாலயத்தில் நடைப்பெற்ற ஒரு திருமணத்திலிருந்து இந்தக் கதையைத் தொடங்கலாம். நவம்பர் 14 லண்டன் மாநகரும் இங்கிலாந்தும் விழாக்கோலம் பூண்டன. இங்கிலாந்து மன்னர் ஏழாம் ஹென்றியின் மகன் ஆர்தருக்கும் ஸ்பெயின் இளவரசி கேத்தரினுக்கும் அன்று திருமணம்.

நமது ஊர்களிலே பகைக் குடும்பங்களை ஒன்றிணைக்க சில நேரங்களில் எதிரி வீட்டில் பெண் கொடுத்து எடுத்தல் நடக்கும். அதுபோல் ஐரோப்பியக் கண்டத்தில் நூற்றாண்டுகளாக நீடித்த யுத்த வாடையை இனிமேலும் சுவாசிக்க வேண்டாம் என்ற நல்லெண்ணத்தின் துவக்கப்புள்ளியாக அந்தத் திருமணம் கருதப்பட்டது. ஆனால், ஐரோப்பாவின் பெரும் நரகத்துக்கான கதவை அது திறந்துவிடும் என ஒருவரும் அப்போது நினைத்திருக்க மாட்டார்கள்.

கடந்த வருடத்தின் துவக்கத்தில் பிரிட்டனின் இளவரசராக இருந்து தற்போது மன்னரான சார்லசின் அதே பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் பதவிதான் ஆர்தருக்கும். எழுபது வயதிலும் இளவரசராக இருந்த சார்லசின் துர்பாக்கிய நிலை ஆர்தருக்கு அப்போது இல்லை. பதினைந்து வயதான ஆர்தரின் திருமணம் முடிந்த கையோடு வேல்ஸ் பகுதியின் எல்லையிலுள்ள லட்லோ கோட்டைக்குத் தேனிலவுக்கு அனுப்பிவிட்டு மன்னரின் பெற்றோர்கள் நாடாளத் தொடங்கினர்.

காத்திரமான உடல்வாகு கொண்ட ஆர்தருக்கு இங்கிலாந்தை ஆளும் யோகம் கிட்டவில்லை. இங்கிலாந்தின் மேற்குப்பகுதியில் பரவிய கொள்ளை நோய் அவனைக் கொத்திச் சென்றது. இளவரசி கேத்தரின் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தாள். இளவரசியோடு அவளது தாய் இசபெல்லா கேசல் எனும் ராணியும் தந்தை பெர்டினண்ட் அரேகன் எனும் மன்னரும்கூட பிழைத்துக்கொண்டனர்.

கேத்தரினைத் தன் மகனுக்குக் கட்டி வைக்க வாங்கிய வரதட்சணையை (தற்போதைய மதிப்பில் பல ஆயிரம் கோடிகள்) ஸ்பெயின் மன்னருக்குத் திருப்பிக்கொடுக்க வேண்டுமே என உறக்கம் வராமல் தவித்தார் ஏழாம் ஹென்றி. விதவையான மருமகளைத் தானே மணந்துகொண்டால் என்னவென்றுகூட அவருக்குத் தோன்றியது. ஆனால் அந்த யோசனையை விரைவில் கைவிட்டார். இந்நிலையில், இரண்டாவது மகனும் பட்டத்து இளவரசருமான எட்டாம் ஹென்றிமீது அவர் பார்வை விழுந்தது. கேத்தரினை அவரைவிட ஐந்து வயது இளைய ஹென்றியின் தலையில் கட்டிவைத்து வரதட்சணையைப் பாதுகாப்பதுதான் அவரது திட்டம். ஆனால் அதிலொரு சிக்கல் வந்தது. இந்தத் திருமணம் நடைபெறவேண்டுமானால் ஐரோப்பாவின் மன்னர்களுக்கு மன்னரான போப்பாண்டவரின் அனுமதியை அவர் பெற்றாகவேண்டும்.

‘உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம்’ (லேவியராகமம் 18:16) என்கிறது பைபிள். எனவே மறுதிருமணத்திற்கு அனுமதி வேண்டி ரோம் நகரில் போப்பாண்டவரின் முன்பாக இங்கிலாந்து மன்னரும் ஸ்பெயின் மன்னரும் மண்டியிட்டனர்.

மேலே தொடர்வதற்கு முன்பு, கேத்தரனின் லண்டன் வாழ்வைப் பார்த்துவிடலாம். தந்தையின் வரதட்சணையில்லாமல் ஸ்பெயின் செல்வதில்லை எனப் பிடிவாதமாக லண்டனில் அரசுக் குடும்பத்திற்கு சொந்தமான டுர்ஹம் ஹவுசில் வசித்து வந்தாள் கேத்தரின். ஏறத்தாழ வீட்டுக்காவல். தனது பணியாட்களுக்குச் சம்பளம் கொடுக்கக்கூட இயலாமல் ஸ்பெயினுக்குக் கடிதங்களெழுதி கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். இவ்வாறு கடிதம் மூலம் தூது அனுப்பிய முதல் பொண்ணாக ஐரோப்பிய கண்டத்தில் அவள் இருந்தாள்.

அவதியுறும் தனது மகளுக்குக் கொஞ்சமாவது காசு கிடைக்கட்டும் என்று இங்கிலாந்துக்கான ஸ்பெயின் தூதுவராக அவளை நியமித்தார் கேத்தரனின் தந்தை. வழக்கமான தூதுவருக்கான சம்பளத்தைவிட அதிகம் கொடுத்தார். அப்போது எதிர்பாராத ஒரு திருப்பம் நடந்தது. கேத்தரினின் திறமையைக் கண்ட மன்னன் ஏழாம் ஹென்றிக்கு, இவளை இரண்டாவதாக மணமுடித்தால் என்ன என்ற யோசனை வந்தது.

0

இனி ஐரோப்பாவின் நாட்டாமை போப்பாண்டவர் சமாசாரத்திற்கு வரலாம்.

பைபிளின் லேவியராகமத்தைத் தூபமிட்டு மறுமணத்திற்கான ஆரவார ஊர்வலத்திற்கு தடை விதித்தார் போப். லண்டனில் தனிமையில் காலம் தள்ளுவதா என அழுது புலம்பிய கேத்தரினுக்கு அரிதாக வந்த வாய்ப்பும் பறிபடும் நிலைமை. கத்தோலிக்க சட்டத்திட்டங்களுக்குக் கட்டுப்படுவதில் மன்னர்களும் அவர்களது குடும்பங்களும்கூட விதிவிலக்கில்லை.

கேத்தரினின் கையில் மிகப்பெரிய பிரம்மாஸ்திரம் ஒன்றிருந்தது. ‘ஆறு மாதகாலம் ஆர்தருடனான இல்லற வாழ்க்கையில் உடலால் நாங்கள் இணையவில்லை’ என்றொரு குண்டைத் தூக்கிப் போட்டாள். அதிர்ந்தது ரோம் நகரம் மட்டுமல்ல, ஐரோப்பியா முழுவதும்தான். உடலுறவு கொள்ளாத திருமண பந்தத்தை முழுமையான திருமணமாக ஏற்றுக்கொள்ளப்படாது என்ற கத்தோலிக்க சட்ட விதிகள் அவளுக்குத் தெரிந்திருந்தது. போப்பின் நிலை திண்டாட்டமாகிப்போனது. தனது தீர்ப்பை அவர் மாற்றிக்கொள்ளவேண்டியிருந்தது. இவ்வாறாக போராடியே 1509ம் ஆண்டு இளவரசர் எட்டாம் ஹென்றியின் கரம் பிடித்தாள் கேத்தரின். அதே ஆண்டு ராணியும் ஆனாள்.

1509இல் 17 வயதில் இங்கிலாந்தின் மன்னரான எட்டாம் ஹென்றி ஓட்டப்பந்தய வீரருக்கான உடல்வாகு கொண்டவர். குதிரையேற்றம், குதிரையில் அமர்ந்து விளையாடும் சாகச விளையாட்டுகள் ஆகியவற்றில் திறன் பெற்றவர் (பிற்காலத்தில் உடல் பருத்து அவதியுற்றது தனிக்கதை). கேத்தரினுக்கு வரிசையாகக் குழந்தைகள் பிறந்தாலும் அனைத்தும் பெண்குழந்தைகள். மேரி என்கிற பெண் குழந்தையைத் தவிர அனைத்தும் பிறந்த சில நாட்களில் இறந்துவிட்டன. ஆண் வாரிசு பெற்றளிக்காத கேத்தரின்மீது வெறுப்பு கொண்டார் எட்டாம் ஹென்றி. அதே சமயத்தில், ஆனி போலின் என்ற பேரழகியை அவர் சந்திக்க நேர்ந்தது.

அதுவே அவருக்குப் போதாத காலமானது. ஆனி போலினின் அழகு ஹென்றியைப் பித்தனாக்கியது. காதலுக்காக எந்த முனைக்கும் செல்ல அவர் தயாராக இருந்தார். எல்லோருடைய காதலுக்கும் ஒரு நண்பன் வாய்ப்பது போல் மன்னரின் காதலுக்கு முதலமைச்சர் தாமஸ் கிராம்வெல் நண்பன் ஆனார்.

அண்ணனின் மனைவியைத் திருமணம் செய்து பைபிளின் சொற்களை மீறியதால் கடவுள் தனக்களித்த தண்டனையே ஆண் வாரிசில்லாமை என்று தனது நாட்டு மக்களிடமும் ஐரோப்பிய சக மன்னர்களிடமும் புலம்பினார் ஹென்றி. சர்வ வல்லமை படைத்த ஒரு மன்னரால் ஆயிரம் திருமணங்களும் செய்துகொள்ளமுடியும்தான். ஆனால் போப் ஒரு முட்டுக்கட்டையாக இருந்தார். எனவே முதலமைச்சர் தாமஸ் கிராம்வெல் இங்கிலாந்துக்கான கத்தோலிக்க ஆர்ச் பிஷப் தாமஸ் கிரானர் உதவியுடன் ரோமிலுள்ள போப்பாண்டவருக்கு எதிராகத் திட்டம் தீட்டினார் ஹென்றி. இரு தாமஸ்களும் மன்னரின் காதல் தேருக்கான இடம், வலம் குதிரைகளாக மாறினர்.

ஹென்றியின் தறிகெட்ட காதலால் ரோமிலுள்ள வாடிகனின் போப்பரசர் மாளிகை உஷ்ணம் கொண்டது. ‘அவனது காதல் பித்தை எப்படிச் சாமியாடி விரட்டுவது..’ என்ற கேள்வியைவிட, இதன்மூலமாக ஐரோப்பாவில் போரபாயம் தோன்றிவிடுமோ எனும் அச்சம் போப் ஏழாம் கிளெமண்டை வாட்டியது.

கழற்றிவிடப்பட்ட ராணி கேத்தரின் ஒன்றும் சாதாரண பெண் இல்லை. ஐரோப்பாவின் இரு பெரும் மன்னர்களின் ரத்த உறவு. ஸ்பெயினில் அவளது அக்கா, ராணி. ரோம சக்கரவர்த்தி ஐந்தாம் சார்லசின் நெருங்கிய உறவினர். இவர்களது திருமண பந்தங்களில் பார்வையைத் திருப்பினால் இடியாப்பச் சிக்கலில் இருக்கும். ஐரோப்பாவின் அனைத்து ராஜ குடும்பங்களுடனும் முறை பார்க்காமல் பெண் கொடுத்து, எடுத்து, அரியணைகளுக்கிடையே ரத்த நூலால் தைத்த வகையில் இவர்கள் கெட்டிக்காரர்கள்.

ஆனி போலின் அளவுக்கு அழகு இல்லைதான் என்றாலும் கேத்தரின் திறமைசாலி. கணவர் ஹென்றி பிரான்ஸ் சென்றபோது நாட்டில் ஏற்பட்ட தீடீர் குழப்பத்தை அடக்க ராணுவத்தை அனுப்ப முடிவெடுத்ததோடு வீரர்கள் முன்நின்று வீர உரை ஆற்றியவர். அந்த உரை அப்போதைய இங்கிலாந்து மக்களால் கொண்டாடப்பட்டது.

தனது கணவனின் புதிய காதலை ஐரோப்பியா முழுவதும் கொண்டு சென்று அனுதாபம் தேடிக்கொண்டாள் கேத்தரின். கத்தோலிக்க நாடுகள் ஒரணியில் அவள் பின்னால் திரண்டன. போப்பாண்டவர் வன்மையாகத் தாக்கீதுகளை அனுப்பினார். தங்களது பெண்ணைக் கைகழுவினால் எந்த எல்லைக்கும் செல்வோம் என்று ஸ்பெயினும் ரோம சாம்ராஜ்யமும் கோபம் கொண்டு படை திரட்டின.

ஆனி போலின் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்கமுடியாத மன்னருக்காக தாமஸ் குரோம்வெல் வில்லத்தனமான ஒரு யோசனையுடன் வந்தார். அதற்கு கிரானரின் பேராதரவும் இருந்தது. அந்த யோசனை இதுதான். பேசாமல் கத்தோலிக்கத்திலிருந்து வெளியேறினால் என்ன? தீவிர கத்தோலிக்கரான ஹென்றியை இந்த யோசனை முதலில் நிலைகுலையச் செய்திருக்கலாம். ஆனால் குரோம்வெல்லுடன் ஆனி போலின் இணைந்து மன்னருக்கு உறுதி கொடுத்தனர். ‘காதலுக்கு முன் கடவுளாவது கத்திரிக்காவது’ என்று மன்னரும் சம்மதித்தார்.

இந்த முடிவுக்குக் காதல் மட்டுமே ஒரே காரணம் என்றும் சொல்லிவிடமுடியாது. பதினைந்தாம் நூற்றாண்டில் கத்தோலிக்கத்திற்கு எதிரான ஒரு கருத்துருவாக்கம் கிறிஸ்தவர்கள் மத்தியில் மெல்ல மெல்ல, பரவி பதினாறாம் நூற்றாண்டில் விஸ்வரூபமெடுத்திருந்தது. ஊழல்களும் வழிபாட்டு குளறுபடிகளும் கத்தோலிக்கத்தைப் பீடித்திருந்த நிலையில் அதனைச் சீர்திருத்த கத்தோலிக்கத்திலிருந்தே மாற்று சிந்தனையாளர்கள் முளைத்தனர்.

ஜெர்மனி மற்றும் வட ஐரோப்பாவில் சுற்றித் திரிந்து ஒரு புரட்டஸ்டண்ட் சூறாவெளியை உருவாக்கினார் மார்ட்டின் லூதர். அவர் சொற்களை ஏற்றவர்கள் புரோட்டஸ்டண்டுகள் (சீர்திருத்தச் சபை) என்று அழைக்கப்பட்டனர்.

கத்தோலிக்கப் பாதிரியாராக இருந்த மார்டின் லூதருக்குக் கத்தோலிக்கத்தின் அனைத்து ரகசிய அறைகளுக்குமான சாவிகள் அத்துப்படியாக இருந்தன. ஒவ்வொன்றாக அவர் திறந்து காட்ட, அவர் செல்வாக்கு உயர்ந்தது. மார்ட்டின் லூதர் கட்டவிழ்த்து விட்ட புயலில் குதிரைப் பூட்டா ரதத்தில் இலவசமாக பயணிக்கலாமே என்ற நாசூக்கான யோசனையை குரோம்வெல் கொடுத்தார்.

விளைவு, கத்தோலிக்கம் நான்காம் நூற்றாண்டுக்குப் பிறகு மறுபடியும் ஒரு பெரும் பிளவைச் சந்தித்தது. சர்ச் ஆஃப் இங்கிலாந்தை உருவாக்கி மன்னர் எட்டாம் ஹென்றியை அதற்குத் தலைவராக நியமித்து வாடிகனை வீழ்த்திய குரோம்வெல் தனது விதியின் விந்தையைக் குறித்து கிஞ்சித்தும் நினைத்திருக்கமாட்டார். தீட்டிய மரத்தில் கூர்பார்ப்பது போல், பின்னாளில் குரோம்வெல்லைக் கொல்ல ஆணையிட்டார் ஹென்றி.

இவ்வளவும் ஆன பிறகு, ஆனி போலினுக்கு எலிசபெத் எனும் பெண் குழந்தை பிறந்தது. ஆனாலும் ஹென்றியின் காதல் குறையவில்லை. ஆண் குழந்தைக்காகத் தவம் இருந்தான். வாடிகனின் சாபமோ, ஐரோப்பிய மன்னர்களின் சாபமோ, ராணிப் பட்டம் பறிக்கப்பட்ட கேத்தரனின் சாபமோ தெரியவில்லை ஆனி போலினின் அரும்காதலும் முடிவுக்கு வந்தது. அதுவும், கோரமான முடிவுக்கு.

கேத்தரினைப் போல் ஒதுக்கி வைக்காமல், ஆனி போலினின் தலையை வெட்ட உத்தரவிட்டார் ஹென்றி. தனதருமைக் கத்தோலிக்கத்தைப் பிளக்க காரணமாயிருந்தவள் என்னும் காரணம் போதுமானதாக இருந்தது. சொந்த சகோதரனுடன் தகாத உறவு கொண்டிருந்தாள் என்ற குற்றச்சாட்டுடன் அக்கா, தம்பி தலைகள் உருண்டன.

இங்கிலாந்தில் புரோட்டஸ்டேண்ட் அரசு மதமானது. பல நூற்றாண்டுகளாக வேர் பரப்பியிருந்த கத்தோலிக்க மடங்களும் வானுயர்ந்த தேவலாயங்களும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஒரே இரவில் கத்தோலிக்கம் மங்கிப்போனது. ‘மதத்தில் கைவைத்துவிட்டானே’ என கத்தோலிக்கர்கள் நாடு முழுவதும் ஹென்றிக்கு எதிராகக் கொதித்தெழுந்தனர். ஆனால், உடல் மட்டுமல்ல அதிகாரத்திலும் வலுத்த ஹென்றியிடம் வாலாட்ட ஒருவராலும் இயலவில்லை. ஆங்காங்கே எழுந்த கத்தோலிக்கப் புரட்சிகளை ராணுவத்தை வைத்து அடக்தினான்.

இன்னொரு பக்கம் அவனுடைய மனைவிகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போனது. காதலிப்பது, மனைவிகளின் தலைகளை உருட்டுவது இரண்டுமே ஹென்றிக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகளாக மாறின. ஆனி போலினுக்குப் பிறகு நான்கு மனைவிகளைக் கொன்ற அவனது வாளிலிருந்து ஒருவர் மட்டும் தப்பித்தார். ஒரு பெண் மட்டுமே ஆண் வாரிசைப் பெற்றளித்தார். அந்த வாரிசின் பெயர் ஆறாம் எட்வர்ட்.

1547இல் உடல் பருத்து படுக்கையில் விழுந்த எட்டாம் ஹென்றி இறக்கையில், மேரி, எலிசபெத் ஆகிய இரு ஒன்றுவிட்ட அக்காள்கள்தான் உடனிருந்தனர். ஆண் வாரிசு என்ற தகுதியில் பதினாறு வயதுடைய மகன் அரியணைக்கு வந்தான். அப்படி வந்த சிறுவன் ஆறாம் எட்வர்டுக்குத் தந்தையின் சர்வாதிகார மிரட்டல் குணம் இல்லாதிருந்ததால் கட்டுண்டுக் கிடந்த கத்தோலிக்கத்தின் விலங்கு உடைந்தது. நாடு முழுவதும் முளைத்த கலவரங்களை அடக்க வழி தெரியாமல் தவித்த புரோட்டஸ்டண்ட் மன்னன் ஆறாம் எட்வர்ட் தனது தந்தையால் உண்டான மதப் பிளவைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.

கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியிலிருந்து புரோட்டஸ்டண்டுகள் சித்திரவதைக்கும் மரணத்திற்கும் அஞ்சி தங்களது மதப்பிரிவினர் வசிக்கும் இடங்களுக்கு நகர்ந்தனர். கத்தோலிக்கர்கள் சிறுபான்மையாக இருந்ததால் அவர்களும் பெட்டி படுக்கையுடன் ஓட்டம் பிடித்தனர். இங்கிலாந்து முழுக்க கிறிஸ்தவம் தமக்குள் முஷ்டி முறுக்கி நின்றது.

அப்போது, இங்கிலாந்து, ஐரோப்பா, ஏன் உலக வரலாற்றையே திருப்பிப்போடும் அளவுக்கு ஒரு குடும்பம் விரைந்து ஓடிக்கொண்டிருந்தது. முப்பது வயதைக் கடந்த எட்மண்ட் தீவிர புரோட்டஸ்டண்ட். இங்கிலாந்தின் தென் பகுதி பிராந்தியமான டேவனில் வசித்த அவரது குடும்பம் எந்நேரமும் கத்தோலிக்க பகையில் காலம் தள்ளிக்கொண்டிருந்தது. ‘கொடுங்கோல் அப்பன் படுக்கையானால், வீட்டிலுள்ள பல்லியும் சத்தமாக ‘உச்’கொட்டும்’ என்ற பழமொழிக்கேற்ப பலவீனமான எட்டாம் ஹென்றியின் மகனின் புரோட்டஸ்டண்ட் ஆட்சியில் கத்தோலிக்கர்களின் கையே ஓங்கியிருந்தது. குதிரைத் திருட்டு, இன்னும் பிற குற்றச்சாட்டுகளுடன் கத்தோலிக்க பெரும்பாண்மை டேவன் எட்மண்டைத் துரத்த நேரம் பார்த்து காத்திருந்தது.

அப்போது, இங்கிலாந்தின் தென் மேற்கு பகுதியான கார்ன்வெல்லிருந்து ஒரு கத்தோலிக்கப் படை லண்டன் நோக்கி ஆவேசமாகப் புறப்படவிருந்தது. காரணம் மதத்தோடு கலந்த மொழிப் பிரச்சினை. அதுவரை பிரார்த்தனை மொழியாக இருந்த லத்தீனுக்குப் பதிலாக ஆங்கிலத்தை நியமித்த அரசைப் பிடுங்கி எறிய புரட்சிப்படையினர் ஏழாயிரம் பேர் தயாராக இருந்தனர்.

அவர்கள் போகும் வழியிலுள்ள புரோட்டஸ்டண்டுகள் கதி அதோகதிதான். தீர்க்கதரிசனமாக, டேவனில் எட்மண்ட் தனது இளம் குடும்பத்தைத் தூக்கிக்கொண்டு கிழக்குக் கடற்கரை நகரமாகிய கென்ட் செல்வதற்கு அவசரமாக நிற்கையில், பத்து வயது நிரம்பாத மூத்த மகன் பிரான்சிஸ் டிரேக் கேட்டான்.

‘அப்பா… அரசு ஆதரவோடு இருக்கும் பிரபுக்களாலும் வலுவான நமது உறவினர்களாலுமே இங்கு நம்மைக் காப்பாற்ற முடியவில்லை…கென்ட்டில் யார் நம்மைக் காப்பாற்றுவார்கள்? இங்கேயாவது எதிரிகள் துரத்தி வந்தால் நிலம் வழியாகத் தப்பிக்கலாம். அங்கோ கடல்தான் எல்லை… கடலிடம் தப்பினால் நம் எதிரிகள் ஸ்பானியர்கள் இருப்பார்கள்! நாம் இனி என்னாவோம்?‘

(தொடரும்)

 

படம்: எட்டாம் ஹென்றி – ராணி கேத்தரின்

பகிர:
கு.கு. விக்டர் பிரின்ஸ்

கு.கு. விக்டர் பிரின்ஸ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்ட இளங்கலைப் பயின்று, இங்கிலாந்தில் உயர் கல்வி முடித்து, சென்னை, நாகர்கோவிலில் வழக்கறிஞாகப் பணிபுரிந்து, தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். 'செற்றை' என்ற சிறுகதைத் தொகுப்பையும், சிறாருக்கான சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *