‘இறைவன்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்… பிரபுக்களை நம்புவதைப் பார்க்கிலும் தேவன் மேல் பற்றுதலாயிருப்பதே நலம்’ என்ற பைபிள் வசனத்தை மகனுக்குப் பகிர்ந்த எட்மண்ட் சமீபத்தில்தான் தனது களவுத்தனங்களிலிருந்து மாறி தீவிர பக்தனாக மாறியிருந்தார். எட்மண்டின் சகோதரர்களும் பெற்றோரும் டெவனிலுள்ள தங்களது கிராமமான டேவிஸ்டோக்கிலிருந்து தப்பியோடும் எண்ணம் இல்லாதிருந்தனர்.
சிறுவன் டிரேக் குறிப்பிட்ட ‘பிரபு’ வேறு யாருமில்லை. அப்போதைய தென் இங்கிலாந்தின் மிகப்பெரிய செல்வந்தரும் அரச குடும்பத்தினருடன் நெருங்கியிருந்து உயர் பதவிகள் வகித்த ரசல் பிரபுதான் அவர். அவருடைய மூத்தமகன் பிரான்சிஸ் ரசலின் பெயரைத்தான் எட்மண்ட் தனது மூத்த மகனுக்குச் சூட்டியிருந்தார்.
எட்டாம் ஹென்றி கத்தோலிக்கத்திற்கு விவாகரத்து கொடுக்கையில் அதிகம் பாதிக்கப்பட்டவை சர்வ அதிகாரம் பெற்றிருந்த மடங்களாகும். ஆங்காங்கே கோட்டைக் கொத்தளத்துடன் பிரமாண்டமாயிருந்த மடங்களைக் கத்தோலிக்கத் துறவிகள் நிர்வகித்து வந்தனர். ஏராளமான நிலங்களை உள்ளடக்கிய மடங்களின் பாதிரியார்கள் குறுநில மன்னர்கள் போல் மக்களுக்கு நிலங்களில் விவசாயத்திற்கு அனுமதியளித்து, வரிவசூலித்து ஏகபோகமாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.
மடங்களைக் கையகப்படுத்தி பாதிரியார்களைத் துரத்திய ஹென்றியின் செயலுக்கு பெருவாரியான மக்களின் ஆதரவு இருந்தது. டெவன் பகுதியிலிருந்த மடங்களை அரசிடமிருந்து ரசல்பிரபு வாங்கினார். தனிப்படை வைத்திருந்த அவரைத் தெய்வமாக கருதினர் டெவனின் பிராட்டஸ்டண்டுகள். கார்ன்வெல்லிருந்து வெறிகொண்டு வரும் ஹம்பிரி அருண்டேலின் படையின் நாசகார கனவுகளையும் அதன் பாதையையும் கணித்த பிரான்சிஸ் டிரேக்கின் தந்தை எட்மண்ட், ரசல்பிரபுவின் தடுப்பாட்டத்தில் நம்பிக்கையிழந்திருந்தார் என்பதைவிட, தனது முன்கால வரலாறுகளால் குறிவைக்கப்படலாம் என்று நினைத்தார்.
டெவனின் துறைமுக நகரமான பிளைமவுத்தில் கப்பல்களைச் சொந்தமாக வைத்திருந்து தொழில் செய்து வந்த ஹாக்கின்ஸ் என்பவரது குடும்பம் தங்களுக்கு நெருங்கிய உறவினர்களாயிற்றே என்ற டிரேக்கின் கேள்விக்கும் தந்தை எட்மண்டின் கரங்கள் ஆகாயத்தைக் காட்டி, இறைவனை நம்பு எனச் சொல்லவைத்தது. டிரேக் தனக்குக் கீழே பிறந்த ஆறு தம்பிகளையும் அணைத்துக்கொண்டு பெற்றோரின் பின்னால் வாத்துக்கூட்டத்தை விழிநடத்துபவன் போல கிழக்கு நோக்கி நடந்தான். நகரங்களிலும் சாலைகளிலும் புரட்சிப்படைகளின் தடம் இருக்கலாம் என்பதால் தனது பிஞ்சு பாலகன்களைக் காடு, மலை என சுற்றிக்கொண்டு கென்ட் சென்றந்தார் எட்மண்ட்.
கார்ன்வெல்லிருந்து புறப்பட்ட ஹம்பரி அருண்டேலின் கோர ஆட்டத்தின் கதைகள் கென்ட்டையும் வந்தடைந்தன. பல ஆயிரங்களை உள்ளடக்கிய அந்தக் கத்தோலிக்கப் படை, கண்ணில்பட்ட எதிரிகளையெல்லாம் சித்திரவதை செய்த பிறகே நகர்ந்தது. தீயிலிட்டுக் கொல்லுதல், விரல்களை வெட்டுதல் என பலவகையான தண்டனைகள் அளிக்கப்பட்டன. எட்மண்ட்டைத் தேடி அவர்கள் டேவிஸ்டோக்குக்கும் வந்திருக்கலாம். அதற்கு அடையாளமாக அங்கும் அவர்களின் ரத்தவேட்டை அரங்கேற்றப்பட்டது.
ரசல் பிரபுவிற்கு இரு காரணங்களுக்காகப் புரட்சியை அடக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒன்று, ஆதர்சனமான கத்தோலிக்க வெறுப்பு. இரண்டு தான் விலைகொடுத்து வாங்கிய முன்னாள் மடங்களை மீட்போம் என்ற வாக்குறுதியுடன் புரட்சியாளர்கள் வந்துகொண்டிருந்தனர். தனது படையினாலோ அல்லது வலுவிழந்த இங்கிலாந்தின் படையினாலோ ஹம்பிரியின் கருப்புக் கொடியில் வெள்ளைச் சிலுவை அணிந்த கார்ன்வெல்லின் காடையர்களை அடக்க இயலாது என்பதை ரசல்பிரபு அறிந்திருந்தார். அவரிடம் கொட்டிக் கிடந்த பணத்தால் யாரைத் தான் வாங்கமுடியாது!
இத்தாலியிலிருந்து கூலிக்குப் படைகளை இறக்கினார். நம் ஊர் கூலிப்படை மாதிரிதான். ஹம்பிரியின் புரட்சிப் படையை இத்தாலியக் கூலிப்படைகள் இங்கிலாந்து மண்ணில் குதறிப்போட்டனர். கொல்லப்பட்ட ஹம்பிரியுடன் கத்தோலிக்கப் புரட்சித் தீ தாற்காலிகமாக அணைக்கப்பட்டது.
கப்பல்கள் வைத்திருந்த வில்லியம் ஹாக்கின்ஸ் குடும்பத்தின் பங்கு என்னவென்று நீங்கள் கேட்கலாம். வியாபார நோக்கம் கொண்ட ஹாக்கின்சின் இளைய மகன் ஜான் ஹாக்கின்ஸ் வெகுவிரைவில் நமது கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் வருவார்.
0
சரி, கென்ட் சென்ற சிறுவன் பிரான்சிஸ் டிரேக்கைப் பார்ப்போம்.
தனது வாண்டுகளான ஏழு மகன்களுடனும் மனைவியுடனும் படுத்துறங்க எட்மண்டுக்கு கென்டில் சரியான இடம் அமையவில்லை. உடலைக் குத்தி நாசம் செய்யும் குளிரில் ஓர் இரவு ஆகாயம் பார்த்துக் கிடப்பது தற்கொலைக்குச் சமமானது அல்லவா?
இந்நிலையில் இறைவன் அனுப்பியது போல் ஒரு பழுதடைந்த படகை மெட்வே நதிக்கரையின் முகத்துவாரத்தில் கண்டார் எட்மண்ட். பரந்த தேம்ஸ் நதியுடன் ஒட்டியது போல் பாயும் குறும் நதியான மெட்வே எளிதாக ஒருவரின் கண்ணில் படுவதில்லை. தனது குடும்பத்தை இழுத்துக்கொண்டு அந்த ஓட்டை உடைசல் படகின் கீழ்த்தளத்தில் தாற்காலிகமாகக் குடியேறியவருக்கு, அது நிரந்தர தளமாக மாறும் என்ற எண்ணம் இருந்திருக்காது.
கடலை நோக்கியபடி இருக்கும் அந்த மெட்வேயின் முகத்துவாரத்தில் ஓட்டைப்படகில் வசிக்க வந்திருக்கும் ஒரு சிறுவன் பின்னாளில் தன்னையே ஆளப்போகிறான் என்பதை அறியாத கடல் வழக்கமான அலைகளுடன் டிரேக்கை வரவேற்றது.
தம்பிகளும் பெற்றோர்களும் தூங்கிய பிறகு, படகின் மேல்தளத்திற்கு வந்தான் டிரேக். நகரும் மஞ்சள் நட்சத்திரக் கூட்டங்கள் போல் கப்பல்கள் கடலில் நகர்வதை மூடாத கண்களுடன் பரவசத்துடன் பார்த்துக்கொண்டு நின்றான். அவை போர்ச்சுகீசிய, ஸ்பானிய, டச்சு, பிரெஞ்சு வணிகக் கப்பல்கள் என பின்னாட்களில் தெரிந்துகொண்டான்.
கிராமங்களிலிருந்து மீனாம்பாக்கம் அருகில் உறவினர் வீட்டுக்கு வரும் சிறுவர்கள், விமானங்களைக் கண்டு இன்புறுவது போல் அவன் ஆங்கிலக் கடலில் செல்லும் கப்பல்களைப் பூரிப்போடு கண்டுகொண்டிருந்தான். அந்தச் சிறு இதயத்தில் உதித்த கனவுகள் எல்லாமே கப்பலில் மையம் கொண்டிருந்தன. தனது ஓட்டைப் படகு வீட்டைத் தேவலோக அரண்மனையாக எண்ணினான்.
அருகில் ஓடும் தேம்ஸ் நதியில் மையம் கொண்டுள்ள இங்கிலாந்து கடற்படையின் கப்பல்களிலுள்ள மாலுமிகளுக்கு பைபிள் வாசித்தல் ஜெபம் செய்தல் என சீர்திருத்தசபை போதகராக புது அவதாரம் எடுத்திருந்தார் தந்தை எட்மண்ட். புது வேலையில் கிடைத்த ஊதியத்தை விட தனக்கு கிடைத்த மதச் சுதந்திரத்தில் மகிழ்ந்திருந்தார்.
கில்லிங்கம் கடற்கரையானது சிறு படகுகள் கரை ஒதுங்குவதற்கு வசதியான மணல் அமைப்பையும் படகுகளைத் தள்ளி கரையிலேற்றும் வலுவான அலைகளையும் கொண்டிருந்தது. மெட்வே நதியின் முகத்துவாரத்திருந்து கில்லிங்கம் கடற்கரை தெற்கு நோக்கி விரிந்து கிடக்கும். வணிகக் கப்பல்கள் மற்றும் பெரிய போர்க்கப்பல்களின் மாலுமிகள் தரையை அடைய சிறிய தோணிகளைப் பயன்படுத்தி கில்லிங்கம் கரையில் ஒதுங்குவார்கள். மதப்போர்களிலும் வறுமையிலும் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் டிரேக், கடலையே தனது நண்பனாக ஏற்றுக்கொண்டான். அதன் கரையோரமாக நடந்தபடியே கடலிடம் புலம்பித் தள்ளினான். கடலும் அலைகளால் அவன் கால்களை நனைத்து அனைத்தையும் கேட்டுக்கொள்ளும்.
பிறந்தது முதல் கடலும் கப்பல்களும் டிரேக்கின் வாழ்வை நிறைக்க ஆரம்பித்தன. டெவன் பிராந்தியத்தின் துறைமுக நகரான பிளைமவுத்தைக் கட்டியாண்டதே அவனது உறவினர் வில்லியம் ஹாக்கின்ஸ்தான். இங்கிலாந்து கடற்படை உருவாக்கத்தின் முன்னோடியாகவும் அப்போதைய இங்கிலாந்து மன்னர் எட்டாம் ஹென்றிக்குக் கடல் கடந்து இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற ஆசையைக் கொடுத்தவர் இவர். கொலம்பஸ், மெகல்லன் என பலர் ஐரோப்பாவிலிருந்து நாலாதிசையிலும் கடலில் பயணித்து அமெரிக்க, ஆப்பிரிக்கக் கண்டங்களைத் திருடி தங்கள் நாடுகளை வளப்படுத்துவதை மன்னருக்குச் சொல்லி, பிளைமவுத் துறைமுகத்திலிருந்து ஐரோப்பியா நாடுகளுக்குள் லோக்கல் வியாபாரம் செய்யும் தனது கப்பல்களின் சோம்பலை முறிக்க அவர் திட்டமிட்டார்.
பிரேசில் நாட்டிற்குச் சென்று வாணிகம் செய்த முதல் இங்கிலாந்துக்காரர் என்ற பெருமை வில்லியம் ஹாக்கின்சுக்குக் கிட்டியது. பிரேசிலிருந்து அவர் கற்றுக்கொண்ட அடிமை வியாபாரம் பின்னர் அவர் மகன் ஜான் ஹாக்கின்ஸை உலகப்புகழ் பெறச் செய்ததையும் அது எவ்வாறு பிரான்சிஸ் டிரேக்கின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்பதையும் பின்னால் பார்க்கலாம்.
0
டிரேக் பிறந்த டேவிஸ்டோக் கிராமத்திலிருந்து பிளைமவுத் துறைமுகத்திற்கு சில மைல் தொலைவே இருந்தாலும், அது டிரேக்குக்கு அந்நியப்பட்டே கிடந்தது. தனது உறவினர் வில்லியம் ஹாக்கின்சின் பிரேசில் பயணமும், திரும்பி வருகையில் பிளைமவுத் நகரமும் இங்கிலாந்தும் அவரை ஹீரோவாக சுமந்து கொண்டாடியதையம் அவன் தந்தை வழியாகக் கதை போல் சொல்லிக் கேட்டிருந்தான்.
ஒரு கப்பல் முதலாளி, கடல் வணிகன் மற்றும் கறுப்பின அடிமைகளை விற்கும் வியாபாரி ஆகிய பட்டங்கள் வில்லியம் ஹாக்கின்சை பிரபலமானவராக மாற்றியமைத்தது. இவை எல்லாம் டிரேக்கிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. பிளைமவுத் நகர மேயர், பாராளுமன்ற உறுப்பினர், மன்னரின் அரண்மனை நற்மதிப்பு என அவர் பெற்ற ஏற்றங்கள் டிரேக்கைக் கடலைக் குதிரையாக்கி அதிலேறி நாடு சுற்றும் ஆசையை மனதில் தூவியது.
டேவிஸ்டோக்கில் பத்து வயது வரை தொட்டு உணரா நண்பனாக இருந்த கடலை, கென்ட்டில் அவன் அகமகிழ கண்டு களித்தான். மீன்பிடி படகிலிருந்து அரசருக்குச் சொந்தமான சொகுசுக் கப்பல்கள்வரை வேறுபாடின்றி, கடலில் மிதந்த அனைத்தையும் வியந்தான்.
கல்லிங்கமில் வந்திறங்கும் மாலுமிகளின் உரையாடல்களில் பட்டுத் தெறிக்கும் கடல் குறித்த செய்திகளைப் பருகி மெய்மறக்க, அவர்கள் அமர்ந்திருக்கும் பகுதிகளில் விளையாட்டுச் சிறுவன் போல் மணலில் படகு செய்தபடியே கூர்ந்து கதைகள் கேட்டுக்கொண்டிருப்பான். இருபது டன் முதல் நூறு டன் எடையுடைய அரசுக் கப்பல்கள் கடலில் யானைப் பவனி போல் செல்கையில், கரையில் அவற்றைத் துரத்தியபடி ஓடி மணலில் களைத்து விழுவான். கடல் மணலில் காது பதித்து எல்லா அரவங்களையும் கவனிக்கும் அவனுடன் கடல் பேசியது.
கடல் அவனுக்கு எல்லாமுமாக இருந்தது. எல்லாவற்றையும்விட மேலானதாக இருந்தது. இருளைத் தனது பக்கங்களாக கொண்டிருக்கும் கடல் புத்தகத்தைப் படிக்கும் ஆர்வம் அவனுள் பிறந்தது. ‘கடல் என் ஆசிரியர்’ என கால் மடக்கி அமர்ந்து கடலிடமிருந்து கற்க ஆரம்பித்தான்.
வறுமையில் வாடிய எட்மண்ட் தனது மகன்களுக்கு உணவைவிட இறை பக்தியை அதிகம் ஊட்டி வளர்த்தார். பசியுடன் கடற்கரையில் அலைந்து திரிந்த டிரேக்குக்குக் கதை சொல்வதில் நாட்டம் கொண்ட சில வணிக மாலுமிகள் நண்பர்களாயினர். அவர்களில் ஒருவருடன் தனது பத்தாவது வயதிலேயே கடலில் கையாளாகப் புறப்பட்டுவிட்டான் டிரேக்.
நெதர்லாந்தின் கடற்கரை நோக்கிய முதல் பயணத்தில், கடலின் ஒவ்வொரு அசைவும் அவனுக்கு அற்புதமாகத் தெரிந்தது. பலூன்கள் மத்தியில் நிறுத்தப்பட்ட சிறுவனைப் போல் கடலை ரசித்து, ரசித்துப் பயணம் செய்தான். ஒன்று செய்யச் சொன்னால் ஒன்பதும் செய்து முடித்த அவனது சுறுசுறுப்பைக் கண்ட குழந்தைகளற்ற வயதான கப்பல் முதலாளி, பேசாமல் டிரேக்கைத் தனது வாரிசாக ஏற்றுக்கொண்டால் என்னவென்று யோசிக்கத் தூண்டியது. இங்கிலாந்து தீவிற்கும் ஐரோப்பா கண்டத்திற்கும் இடைப்பட்ட ஆங்கில கால்வாயின் தினசரி குழந்தை நட்சத்திரமாக அவன் மாறினான்.
அந்த அதிர்ச்சி செய்தி எட்மண்ட் குடும்பத்திற்கு மட்டுமல்ல, புதிதாகப் பிறந்த புரோட்டஸ்டண்டுகளின் வயிற்றிலும் புளியைக் கரைத்தது. ஆறு வருடங்களே ஆட்சி செய்த பதின்ம வயது மன்னர் ஆறாம் எட்வர்ட் இறந்துவிட்டார். அதுதான் புரோட்டஸ்டண்ட் அமைப்பை மன்னர் அதிகாரபூர்வமாக்கிவிட்டாரே என நீங்கள் நினைக்கலாம். இறந்த மன்னருக்கு இரு அக்காள்கள். மேரி, எலிசபெத். இங்கிலாந்து அரச வாரிசு சட்டத்தின்படி எட்டாம் ஹென்றிக்கு வேறு ஆண்வாரிசு இல்லாததால், கேத்தரினின் மகள் மேரிதான் அடுத்து அரியணைக்கு வரப்போகிறார் என்ற செய்தி உறுதியானது.
தந்தையைப் போல் கத்தோலிக்க வெறுப்பாளரான ஆறாம் எட்வர்ட் சாகும் தருவாயில் எழுதிய உயில் பெரிய திருப்புமுனையாக மாறியது. தனது ஒன்றுவிட்ட அக்காவும் கத்தோலிக்கருமான மேரி பட்டத்துக்கு வருவதைத் தடுக்க அவரது மரணப்படுக்கையில் காய்கள் நகர்த்தப்பட்டன.
தனது தாத்தா எழாம் ஹென்றியின் மகள் வழி பேத்தியான லேடி ஜேன் கிரே என்பவளை வாரிசாக எழுதிவிட்டு போய்ச் சேர்ந்துவிட்டார் மன்னர். அவர் யோசிக்காமல் கொள்ளாமல் எழுதியதை இங்கிலாந்தின் உயர்ந்த நீதி அமைப்பான பிரிவியூ கவுன்சிலைச் சேர்ந்தவர்களும் ஆதரிக்கலாமா? எதுவானாலும் முறைப்படி செய்யுங்கள் என்று மேரியின் ரசிகப்பட்ளம் கோஷமிட்டது. அந்த மேரி பின்னாளில் பிளட்டி மேரியாக மாறப்போவதை பாவம் அவர்கள் அறிந்திருக்கவில்லை.
புரோட்டஸ்டண்ட் லாபிகள் அனைத்தும் சேர்ந்து லேடி ஜேன் கிரேவைக் கொத்தாகக் கொண்டு வந்து அரியணையில் அமர்த்தினர். அவளை ராணியாக்க முன்னால் நின்றவர்களில் கென்ட் நகரத்து செல்வந்தர் தாமஸ் வயாட்டும் ஒருவர். தனது கனவை மக்களைத் தூண்டிவிட்டு நிறைவேற்றிக்கொண்டாள் மேரி. பிரிவியூ கவுன்சில் மண்டியிட்டது. அரசவை இரு அணிகளாக மாறியது.
லேடி ஜேன் கிரேவை ராணியாக்க ஆறாம் எட்வர்டின் முதலமைச்சர் தந்திரமாகச் செயல்பட்டு தனது மகனை அவளை மணக்கச் செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. பொறாமை வயப்பட்ட அவரது சகபாடிகள் மேரியை ராணியாக்கினர். ஒன்பது நாள் அரியணையிலிருந்த லேடி ஜேன் கிரே குடும்பத்துடன் சிறையில் அடைக்கப்பட்டாள். மேரி, பிளட்டி மேரி என அழைக்கப்பட்டது அவர்களின் தலையைப் பறக்கவிட்டதிலிருந்துதான். கென்ட் மக்களின் கதாநாயகனாகத் திகழ்ந்த தாமஸ் வயாட்டைச் சிறைபடுத்த புதிதாக ராணியான மேரி அஞ்சினாள்.
பிளட்டி மேரி பட்டத்துடன் அவள் இங்கிலாந்தில் புரோட்டஸ்டண்ட் ரத்த ஆறு ஓடச் செய்தாள். தனது சகோதரன் திருத்திய கத்தோலிக்க சட்டங்களைக் கிழித்துக் குப்பையிலிட்டாள். கழுவேற்றங்களும் தீயிடல்களும் இயல்பாயின. பிணந்தின்னி கழுகுகளும் புகைமூட்டங்களும் புரோட்டஸ்டண்டுகளின் அழுகுரல்களோடு வானில் அலைந்தன.
வாத்தியாருடன் பள்ளியறைக்குச் சென்ற டிரேக்குக்கும் கென்ட்டில் போதகர் ஆகியிருந்த எட்மண்டுக்கும் இங்கிலாந்தின் அரசியல் மாற்றம் பெரிய பாதிப்பைக் கொடுக்கவில்லை. காரணம், கென்ட் புரோட்டஸ்டண்ட் பிரிவினரைப் பெரும்பாண்மையாகக் கொண்டிருந்தது.
மேரி அரியணையைப் பிடித்த செய்தி வாடிகனையும் ஐரோப்பாவின் கத்தோலிக்க அரசுகளையும் குதூகலிக்கச் செய்தது. ஸ்பெயின் இளவரசர் பிலிப் மீது கண் வைத்தாள் மேரி. தன்னைவிடப் பத்து வயது சிறிய பிலிப்புடனான அவளது ரத்த உறவின் கதையைக் கேட்டால் நம் தலை சுற்ற ஆரம்பித்துவிடும். எடுத்துக்காட்டுக்கு, மேரியின் தாயும் பிலிப்பின் பாட்டியும் சகோதரிகள். இதை எதிர்பார்த்திருந்த வாடிகன் உடனடியாகப் பச்சைக்கொடி காட்டியது.
‘ஐயோ..நமது பரம்பரை எதிரி கத்தோலிக்க ஸ்பெயின் இளவரசன் இங்கிலாந்து ராணியைத் திருமணம் செய்வதா?’ ராணியின் முடிவுக்கு எதிராக இங்கிலாந்தின் புரோட்டஸ்டண்டுகள் கொதித்தனர். நாடு முழுவதும் புரோட்டஸ்டண்ட் புரட்சிப் படைகள் ஆயுதம் தரித்தன. அவற்றில் கென்ட் முன்னணியில் நின்றது.
கத்தோலிக்க ஸ்பானியர்கள் இங்கிலாந்து மண்ணில் கால் பதிப்பதையே வெறுத்த தாமஸ் வயாட்டால் ஸ்பெயின் இளவரசர் தனது ராணியை மணப்பதை ஜீரணிக்க முடியவில்லை. பெரும் படையைத் திரட்டினார். கடல் பயணத்தில் இருந்தாலும் தாமஸ் வயாட்டின் போர் முழக்கம் டிரேக்கின் காதை எட்டியிருந்தது. தாமஸ் வயாட்டே இறுதி நம்பிக்கை என இங்கிலாந்து மக்களும் ஆனி போலினின் மகள் எலிசபெத்தும் நினைத்திருந்தனர். வீட்டுக்காவலில் சிறைவைக்கப்பட்ட தனது சகோதரி எலிசபெத்தைக் கொல்லும் தருணத்துக்காக எந்நேரமும் காத்திருந்தாள் மேரி.
தாமஸ் வயாட்டின் புரட்சிப்படை ராணுவத்தால் ஒடுக்கப்பட்டது. கென்ட் நகரத்தில் எங்கும் புரட்சிப்படையின் பிணங்கள் கிடந்தன. தனது கதாநாயகனின் வெற்றிமுழக்கத்தைக் காண கரை வந்தடைந்த சிறுவன் டிரேக்குக்கு உடல் மரத்துப் போனது. தரையில் ஈரம் மாறாமல் கிடந்த ரத்தங்களைத் தனது பிஞ்சு கால்களால் கடக்கவேண்டியிருந்தது.
கென்ட் மக்கள் எங்கோ அலறி அடித்துக்கொண்டு ஓடுவதைக் கண்டு டிரேக்கும் பின் ஓடினான். பெண்கள் ஒப்பாரி வைத்து தலையிலடித்துக்கொண்டு ஓடினர். அந்தப் பெரும் அழுகை ஒரு பகுதியை எட்டியதும் மௌனமானது. வடிந்து கொண்டிருக்கும் ரத்தத்தைப் பார்த்து பெரும் திரளான கூட்டம் பதைபதைத்து நின்றது. இங்கிலாந்தைப் பிடித்த பேயை விரட்ட வாளேந்திய வீரன் தாமஸ் வயாட்டின் துண்டிக்கப்பட்ட தலை ஒரு கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது.
(தொடரும்)