பொன்னிற மானைப் போன்றவள், பொன்னாலும் வெள்ளியாலும் ஆன மாலையை அணிந்தவள், சந்திரனின் மென்மையான ஒளியை உடையவளான லக்ஷ்மியை, ஓ அக்னியே, எனக்குள்ளே நிரப்புவாயாக!
இந்த வரிகளுடன் தொடங்குகிறது ஶ்ரீ சூக்தம் எனப்படும் தோத்திரம். ரிக்வேதத்தின் பின்னிணைப்பாக வருகிறது. செல்வத்தை அள்ளித்தருபவள் ஶ்ரீ. அவளே லக்ஷ்மி. இந்தப் பழைய துதிப் பாடலிலேயே லக்ஷ்மியின் வடிவம், அவள் நிறம், அவள் குணங்கள், அவள் வீற்றிருக்கும் தாமரை, அவளைப் போற்றி நீராட்டும் யானைகள் ஆகிய அனைத்தும் வந்துவிடுகின்றன. அவள் விஷ்ணுபத்னீ, விஷ்ணுவின் மனைவி என்பதும் குறிப்பிடப்படுகிறது. கூடவே மற்றொருத்தியும் குறிப்பிடப்படுகிறாள்.
‘ஜ்யேஷ்டாம் அலக்ஷ்மீம் நாஶயாம்யஹம்’ என்கிறது ஶ்ரீ சூக்தம். ‘லக்ஷ்மியாகிய நீ, உன் இருப்பின்மூலம், பசி, தாகம், தோல்வி, துரதிர்ஷ்டம் போன்றவற்றைக் கொண்டுவரும் ஜ்யேஷ்டை என்கிற அலக்ஷ்மி என்பவளை என் வீட்டிலிருந்து வெளியேற்று’ என்கிறது.
ஶ்ரீ சூக்தம் நேரடியாக லக்ஷ்மியை, ஶ்ரீயைப் புகழ ஆரம்பித்துவிடுகிறது. ஶ்ரீதேவிதான் பூதேவியும்கூட என்கிறது. பூமிதானே செல்வத்தை விளைச்சலாக அள்ளித் தருபவள்? லக்ஷ்மி நம்மைவிட்டுப் போய்விடக்கூடாது; கூடவே இருக்கவேண்டும்; அவளது அருளின்மூலம் செல்வம், மாடுகள், குதிரைகள், ஆள், படை என்று அனைத்தும் கொழிக்கும் என்பது நம்பிக்கை.
விஷ்ணு புராணம் லக்ஷ்மிக்கும் விஷ்ணுவுக்குமான உறவை விரிக்கிறது. லக்ஷ்மியே அண்ட சராசரத்தின் தாய். விஷ்ணுவின் ஆற்றல். விஷ்ணு எவ்வாறு எங்கும் வியாபித்திருக்கிறாரோ, இவளும் அப்படியே. விஷ்ணு பொருள் என்றால் லக்ஷ்மி சொல். விஷ்ணு நீதி என்றால், லக்ஷ்மி அறம். விஷ்ணு படைப்பவர் என்றால் லக்ஷ்மி படைப்பு. ஶ்ரீதான் பூமி. விஷ்ணு அதைத் தாங்குபவர். விஷ்ணு சூரியன் என்றால் லக்ஷ்மி அதன் ஒளி. விஷ்ணு கடல் என்றால் ஶ்ரீ அதன் கரை. இறுதியாக, இவ்வுலகில் உள்ள கடவுள்களில், மனிதர்களில், விலங்குகளில், மற்ற அனைத்திலும் ஆண்கள் எல்லாம் ஹரி என்றால், பெண்கள் எல்லாம் லக்ஷ்மி; இவர்கள் இருவரைத் தாண்டி வேறு எதுவும் இல்லை, என்கிறது விஷ்ணு புராணம்.
விஷ்ணு மஹா பிரளயத்திலிருந்து கண் விழிக்கையில் முதலில் தோன்றியவள் லக்ஷ்மி என்று பாஞ்சராத்ரம் சொல்வதைப் பார்த்தோம். ஆனால் லக்ஷ்மிக்கென்று ஒரு தோற்றக் கதை விஷ்ணு புராணத்தில் உண்டு. அதைப் பார்ப்போம்.
ஒரு நாள் சிவனின் அம்சமான துர்வாச முனிவர், கோபமே உருவானவர், பூமியில் சென்றுகொண்டிருந்தார். அந்தப் பக்கமாக வந்துகொண்டிருந்த வித்யாதரி ஒருத்தி, மிக அழகான, மணம் பொருந்திய மாலை ஒன்றை அணிந்திருந்தாள். துர்வாசர் அதைக் கேட்டு வாங்கி அணிந்துகொண்டு சந்தோஷமாக நடந்துகொண்டிருந்தார். அப்போது இந்திரனானவன் தன் ஐராவத யானை மீதேறி அந்தப் பக்கமாக வந்தான். துர்வாசர் தான் அணிந்துகொண்டிருந்த மிகச் சிறப்பான மாலையை அவனிடம் கொடுத்தார். அவனோ அதைச் சிறிதும் மதிக்காமல், வாங்கி தன் யானையிடம் கொடுத்தான். ஐராவதத்துக்கு என்ன மதம் பிடித்திருந்ததோ தெரியவில்லை, அந்த மாலையை வாங்கிக் கசக்கித் தூர எறிந்துவிட்டது.
அவ்வளவுதான்! கொதித்துப்போனார் துர்வாசர். ‘என்னை அவமதித்த நீயும், நீ ஆட்சி செய்யும் உலகங்களும் அமங்கலங்களால் நிரம்பட்டும்! உன் ஆற்றலெல்லாம் அழியட்டும்’ என்று சாபம் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.
இந்திரன் சோகத்துடன் தன் நகரான அமராவதிக்குத் திரும்பினான். அவனுடைய நகரங்கள் பொலிவிழக்கத் தொடங்கின. யாகங்கள் நின்றுபோயின. தவ வலிமை குன்றிப்போனது. யாருமே நல்ல செயல்களில் இறங்கவில்லை. செல்வம் அழியத் தொடங்கியது. மக்களின் பெருமை குன்றியது. இப்போது தைத்யர்களும் தானவர்களும் (அசுரர்கள்) தேவர்களை எளிதில் தோற்கடித்துவிட்டனர்.
பயந்துபோன இந்திரனும் தேவர்களும் பிரமனைக் காணச் சென்றனர். அவர், அனைவரையும் அழைத்துக்கொண்டு விஷ்ணுவைக் காணத் திருப்பாற்கடலுக்குச் சென்றார். அனைவரும் ஹரியைப் போற்றிப் புகழ்ந்து, மீண்டும் பழைய நிலையை அடைய என்ன செய்யவேண்டும் என்று வினவினர்.
விஷ்ணு அவர்களை நோக்கி, ‘ஓ தேவர்களே, உலகில் உள்ள மருத்துவச் செடிகளையெல்லாம் எடுத்துக்கொண்டு தைத்யர்களையும் அழைத்துக்கொண்டு பாற்கடலின் கரைக்கு வாருங்கள். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகிப் பாம்பை நாணாக்கி பாற்கடலைக் கடையுங்கள். அமிர்தம் கிடைக்கும். இதைச் செய்ய தைத்யர்களின் துணை உங்களுக்கு வேண்டும். அவர்களுக்கும் அமிர்தத்தில் பங்கு உண்டு என்று சொல்லுங்கள். ஆனால் அது அவர்களுக்குக் கிடைக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றார்.
இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில், ஆய்ச்சியர் குரவை என்னும் பகுதியில் ஆய்ச்சியர்கள் இவ்வாறு பாடுவதாக எழுதுகிறார்:
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
மேலே நீங்கள் காண்பது ஹொசஹொளலு எனுமிடத்தில் ஹொய்சளர்களின் லக்ஷ்மிநாராயணர் கோவிலின் சுற்றுச் சுவரின் அடிப்பாகத்தில் உள்ள பட்டிகைகளில் ஒன்றில் வரும் கடல்வயிறு கலக்கும் சிற்பம். வாசுகிப் பாம்புதான் நாண். மந்தார மலை மத்து. அந்த மத்து சாய்ந்துவிடாமல் தாங்கும் ஓர் ஆமை. வாசுகியின் வால்பக்கம் தேவர்கள். தலைப்பக்கம் தைத்யர்கள்.
மீண்டும் விஷ்ணு புராணம் செல்வோம்.
தேவர்கள், அசுரர்களை அழைத்துக்கொண்டு பாற்கடலைக் கடைய வந்தனர். மருந்துச் செடிகளைப் பாற்கடலில் சேர்த்தனர். விஷ்ணுவின் சொல்படி, அசுரர்களைத் தலைப்பக்கம் அனுப்பிவிட்டு, தாங்கள் வால்பக்கம் இருந்தபடி கடைய முற்படலாயினர். கடையக் கடைய வாசுகியிடமிருந்து விஷப்புகை வெளியேறியது. அசுரர்கள் தொய்ந்துபோயினர். தேவர்களோ மிகுந்த ஆற்றலுடன் கடையலாயினர். மத்து சாய்ந்துவிடாமல் இருக்க, விஷ்ணுவே கூர்மமாக அவதரித்து மந்தார மலையைத் தாங்கிக்கொண்டார். அதோடுகூட, அவரே ஒரு தேவ வடிவம் எடுத்துக்கொண்டு தேவர்களோடு தேவராக வாசுகியைக் கைப்பிடித்து இழுத்துக் கடையலானார்.
அப்போது பாற்கடலிலிருந்து முதலில் சுரபி எனும் பசு வெளியானது. அனைவரும் மகிழ்ந்தனர். அடுத்து வாருணி எனும் பெண் தோன்றினாள். அடுத்து பாரிஜாதம் எனும் வாடா மலர்கள் பூக்கும் மரம் தோன்றிற்று. அபசரஸ்கள் தோன்றினர். பிறை நிலவு தோன்றிற்று. அதை சிவன் எடுத்துத் தன் தலையில் சூடிக்கொண்டார். விஷமும் வெளியானது. அதனைப் பாம்புகள் தமதாக்கிக்கொண்டன. அடுத்து தன்வந்தரி எனும் கடவுள், கமண்டலத்தில் அமிர்தத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். தேவர்களும் அசுரர்களும் மகிழ்ந்தனர். ஆனாலும் கடைவது தொடர்ந்தது.
அப்போதுதான் ஶ்ரீ தோன்றினாள். முழுதாக மலர்ந்த தாமரையில் அமர்ந்தபடி, கையில் தாமரைகளை ஏந்தியபடி, அவள் இருந்தாள். அப்போது ரிஷிகள் ரிக்வேதத்தில் ஶ்ரீயைப் புகழும் ஶ்ரீ சூக்தத்தை ஓதினர்.
ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் ஸுவர்ணரஜதஸ்ரஜாம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ
தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீம் அநபகாமிநீம்
யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமஶ்வம் புருஷாநஹம்
கந்தர்வர்கள் பாடினார்கள். அப்சரஸ்கள் ஆடினார்கள். கங்கையும் பிறரும் நீர் எடுத்துவந்து அவளை நீராட்டினார்கள். யானைகள் ஒவ்வொரு திசையிலிருந்தும் வந்து தங்கக் குடங்களில் நீரை எடுத்து அவளுக்கு அபிஷேகம் செய்தன. பாற்கடலே ஓர் உருவம் எடுத்து, தாமரை மலர்களால் ஆன ஒரு மாலையைக் கொண்டுவந்து அவளுக்குச் சூட்டி மகிழ்ந்தது. விஸ்வகர்மா அவளுக்குப் பல்வேறு அணிகலன்களைச் செய்துகொடுத்தார்.
அவள் மலர்களால் ஆன மாலைகளை அணிந்துகொண்டாள். புத்தாடைகளை அணிந்துகொண்டாள். அணிகலன்களைப் பூட்டிக்கொண்டாள். அங்கே குழுமியிருந்த அனைவரும் பார்க்கும்வண்ணம் விஷ்ணுவைச் சென்று சேர்ந்து மார்புறத் தழுவிக்கொண்டாள்.
லக்ஷ்மி தங்களை விடுத்து, விஷ்ணுவிடம் சென்றுவிட்டாள் என்பதைக் கண்ட தைத்யர்கள், விஷ்ணுவைக் கண்டுகொள்ளாமல் விப்ரசித்தியின் தலைமையில் சென்று தன்வந்தரியின் கையில் இருந்த அமிர்தத்தைப் பிடுங்கிக்கொண்டனர்.
விஷ்ணு உடனே மோஹினி என்ற அழகான பெண் வடிவத்தை எடுத்துக்கொண்டார். அசுரர்கள் மோஹினியைப் பார்த்து மயங்கினர். கையில் இருந்த அமிர்தத்தை அவளிடம் கொடுத்துவிட்டனர். விஷ்ணு-மோஹினி அந்த அமிர்தத்தை எடுத்துவந்து தேவர்களுக்குக் கொடுக்கலானார். அமிர்தத்தைப் பருகியதால் மீண்டும் தெம்பைப் பெற்ற தேவர்கள் அசுரர்களை நான்குபுறமும் அடித்து விரட்டினர். அசுரர்கள் தோற்று ஓடினர். இந்திரன் மீண்டும் தன் பழைய நிலையை அடைந்தான். துர்வாசர் அளித்த சாபத்துக்கு விமோசனம் கிடைத்தது.
சூரியன் மீண்டும் உலகைச் சுற்றிவரலானான். கோள்கள் தங்கள் பாதையில் சுற்றத் தொடங்கின. இழந்த சக்தியை மீண்டும் பெற்ற இந்திரன், உடனே ஶ்ரீயாகிய லக்ஷ்மியை போற்றத் தொடங்கினான். ‘ஹரியே இந்த உலகத்துக்கெல்லாம் தந்தை, நீயே தாய். விஷ்ணுவின் மார்பில் அமர்ந்திருக்கும் தாயே, நீ எங்களை விட்டு நீங்காமல் இருப்பாயாக! மாசு மருவற்றவளே, நீ யாரைவிட்டு நீங்குகிறாயோ, அவர்களிடம் நன்மை, உண்மை, தூய்மை, நற்குணம், புண்ணியம் என அனைத்தும் விலகிவிடும். நீ யாரைக் கடைக்கண்ணால் காண்கிறாயோ, அவர்களுக்குப் பெயர், புகழ், செல்வம், நற்குணம் என அனைத்தும் வந்துசேரும். உன் அருங்குணங்களைப் பற்றிப் பாடுவதற்கு எங்களுக்கு நாத்திறம் இல்லை. எங்களைவிட்டு என்றும் நீங்காமல் இருப்பாயாக!’ என்றான்.
பாற்கடலிலிருந்து வெளியே வரும் லக்ஷ்மியை யானைகள் நீரால் அபிஷேகம் செய்வதைப் பல்லவர்கள் இரு பெரும் சிற்பங்களாக மாமல்லையில் வடித்திருக்கிறார்கள். ஒன்று வராஹ மண்டபத்தில் உள்ளது. அதனை மேலே காணலாம். அழகான தாமரை மலர்மீது சமபங்கமாகத் திரு அமர்ந்திருக்கிறாள். இரு புறமும் ஈரிருவராகக் கையில் குடத்தை ஏந்தியபடி தேவமகளிர் நின்றுகொண்டிருக்கின்றனர். வேறு எங்கும் இல்லாத வகையில் யானைகள் ஒன்று மாற்றி இன்னொன்றாகக் குடங்களை வாங்கி நீரைச் சொறிகின்றன. ஒன்று நீரைச் சொறியும்போது இன்னொன்று கீழேயிருந்து குடத்தை எடுக்கும் செயலில் உள்ளது!
நிகழ்வு நடந்துகொண்டிருப்பது பாற்கடல் என்பதைக் குறிக்க, சுற்றிலும் அலைகள் புரள்வதைக் காணலாம்.
இதேபோன்ற ஒரு சிற்பம் ஆதிவராக மண்டபத்திலும் காணப்படுகிறது. அதனைக் கீழே காணலாம். அப்படியே அச்சு அசலாக இரண்டும் ஒரே படமோ என்று எண்ணத் தோன்றும். ஆனால் கூர்ந்து பார்த்தால் வித்தியாசங்களைக் காணலாம். ஆதிவராக மண்டபம் மூடிய இடமாக இருப்பதாலும் அதிகம் பேர் அங்கே செல்லாமையாலும் சிற்பம் மழுங்காமல் கூர்மையாக இருப்பதாகத் தெரிகிறது.
லக்ஷ்மிக்கு விஷ்ணுவோடும் வைஷ்ணவத்தோடும் நெருங்கிய சம்பந்தம் இருந்தாலும், இந்து மதம் மட்டுமல்ல, பௌத்தம், ஜைனம் இரண்டுமே லக்ஷ்மியைக் கொண்டாடுகின்றன. பௌத்த, ஜைன, சைவ, வைணவ, சாக்தக் கோவில்கள் அனைத்திலுமே லலாடபட்டம் எனப்படும் வாயில் கதவு மேல்பகுதியில் பெரும்பாலும் கஜலக்ஷ்மியாக, யானைகளால் நீராட்டப்படும் திருமகளைக் காணலாம். இதற்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளது.
ஒடிஷாவின் உதயகிரி, கண்டகிரி குகைகள் ஜைனர்களுடையது. பொயுமு ஒன்றாம் நூற்றாண்டு தொடங்கி பொயு ஒன்றாம் நூற்றாண்டு காலத்தவை. காரவேலன் என்ற அரசனின் ஹாதிகும்ஃபா என்னும் குகையில் இருக்கும் கல்வெட்டு மிகப் பிரசித்தமானது. அதில் அவன் ஆண்டுக் கணக்கு கொடுத்து யார் யாரையெல்லாம் வென்றேன் என்று குறிப்பிடுகிறான். அங்கே ஒரு குகையில் வாயில் மேலாக இந்த கஜலக்ஷ்மி சிற்பம் உள்ளது.
இங்கே லக்ஷ்மி இடுப்பின்மீது இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருக்கிறாள். அவளுடைய வளைந்த கைகளினூடாக நீண்ட தண்டுகளையுடைய இரண்டு தாமரை மலர்கள் செல்கின்றன. சுற்றிலும் மலர்ந்த, மலராத தாமரை மலர்கள் விரவிக்கிடக்கின்றன. இரண்டு யானைகள், ஆளுக்கொரு பக்கம் நின்றுகொண்டு குடங்களிலிருந்து நீரை அவள்மீது சேர்க்கின்றன. காலத்தால் மிகவும் முற்பட்ட ‘ஜைன’ கஜலக்ஷ்மி இது. பிற்காலங்களில் ஜைன லக்ஷ்மிச் சிற்பங்கள் இந்துச் சிற்பங்கள் போன்றே தரப்படுத்தலுக்கு வந்துவிடுகின்றன.
கீழே நீங்கள் காண்பது சிரவணபெலகோலாவில் இருப்பதாகும். அங்கே உள்ள சில கஜலக்ஷ்மிச் சிற்பங்களில் ஒன்றை மட்டுமே இங்கே தருகிறேன். மிக அழகான மகரதோரணத்தின்கீழ் தாமரைப்பீடத்தின்மீது அமர்ந்து இரு கைகளிலும் தாமரையைத் தாங்கி நிற்கிறாள் லக்ஷ்மி. இருபுறமும் யானைகள், குடங்களிலிருந்து நீரைச் சொறிகின்றன. இங்கும் இது வாயிலுக்குமேலாக உள்ளது. இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பமாகும்.
நான் மேலே கொடுத்திருக்கும் முதல் படம் இதேபோன்றதே. திருவையாறு ஐயாறப்பர் சிவன் கோவிலில் காணக்கிடைப்பது. ஒரு வித்தியாசம், இங்கே லக்ஷ்மிக்கு நான்கு கரங்கள், இரண்டில் தாமரைகள், மற்ற இரண்டும், அபய, வரத ஹஸ்தம்.
பௌத்தர்களின் சாஞ்சி ஸ்தூபி மிகப் பிரசித்தமானது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் விதிஷா நகருக்கு அருகில் இருப்பது. இங்கே உள்ள ஒரு ஸ்தூபியில் புத்தரின் நேரடிச் சீடர்களான மொகல்லனா (மௌத்கல்யாயனா), சாரிபுத்தா (சாரிபுத்ரா) ஆகியோரின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பெட்டியில் எலும்புகள் கிடைத்துள்ளன. புத்தர் காலத்திலேயே (பொயுமு 5-ம் நூற்றாண்டு) இது நிகழ்ந்திருக்கவேண்டும். பின்னர் அசோகர், தன் காலத்தில் (பொயுமு 3-ம் நூற்றாண்டு) இந்த ஸ்தூபியைப் பெரிதாக்கிக் கட்டினார். அவருக்கு சுமார் நானூறு ஆண்டுகள் கழித்து சாதவாகனர் காலத்தில் (பொயு 2-ம் நூற்றாண்டு) இந்த ஸ்தூபியைச் சுற்றி நாலாபுறமும் தோரண வாயில்கள் எழுப்பப்பட்டன. மிக மிக அழகான தோரண வாயில்கள் இவை. இவற்றில் இரண்டு அற்புதமான கஜலக்ஷ்மி சிற்பங்கள் நமக்குக் கிடைக்கின்றன. இரண்டும் அதிக பட்சம் ஓரடிக்கு ஓரடி சதுரத்துக்குள் செதுக்கப்பட்டிருக்கும்.
இரண்டிலும் அவள் பெரிய தாமரை மலர்மீது சுகாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். சுற்றிலும் தாமரை மலர்கள். அவள் ஒரு கையில் மட்டுமே தாமரை மலரை ஏந்தியுள்ளாள். இன்னொரு கை தொடையின்மீது வைக்கப்பட்டுள்ளது. இரு யானைகள் அருகில் குடங்களை ஏந்தி அவள்மீது நீரைச் சொறிகின்றன. இந்த யானைகளே பெரிய தாமரைமீது நின்றுகொண்டிருக்கின்றன! இந்தச் சிற்பங்களின் தனித்தன்மை, சொறியும் நீர்த்தாரைகளைக்கூட அழகாகச் சிற்பத்தில் காண்பித்திருப்பதுதான். மென்மையான கல்லாக இருப்பதனால் இது சாத்தியமாகிறது. கிரானைட் கருங்கல்லில் இதனைச் செதுக்குவது கடினம்.
இதேபோல் பௌத்த விகாரங்களிலும் சைத்தியங்களிலும் வாயில் முகப்பில் கஜலக்ஷ்மி சிற்பங்களைச் செதுக்குவது தொடர்ந்தது. கீழே நீங்கள் காண்பது ஒடிஷாவில் ரத்னகிரி எனும் இடத்தில் இருந்த மாபெரும் விகாரம் ஒன்றின் வாயில் முகப்பு.
ஆக, பௌத்த, ஜைன, சைவ, வைணவக் கோவில்கள் என்று மதங்கள் (வைதீக மதங்கள், அவைதீக மதங்கள்) அனைத்திலுமே காணப்படுபவளாக லக்ஷ்மி விளங்குகிறாள்.
இதன் நீட்சியாக கோவில்கள் தாண்டி, மக்கள் வீடுகளின் கதவு நிலைகளிலும் கஜலக்ஷ்மி சிற்பங்களைச் செதுக்கிவைப்பது மரபாகியது. சங்க இலக்கியத்திலும் இதற்கான சான்றுகள் வருகின்றன. பத்துப்பாட்டு என்று தொகுக்கப்பட்டுள்ளவற்றில் வருவன நக்கீரர் இயற்றிய நெடுநல்வாடையும் மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சியும். நெடுநல்வாடையில் ‘ஓங்கு நிலைவாயில் திரு நிலைபெற்ற தீதுசீர் சிறப்பு’ என்கிறார் நக்கீரர். மதுரைக்காஞ்சியில் ‘தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை’ என்கிறார் மாங்குடி மருதனார். ‘அணங்குடை நெடுநிலை’ என்றால் நீண்ட நெடிய வாயில்நிலையில் பெண் தெய்வம் பொறிக்கப்பட்டுள்ளது என்று பொருள். எந்தத் தெய்வம் என்று தெளிவாக்கப்படவில்லை. ஆனால் நிலைவாயிலில் திரு நிலைபெற்றுள்ளாள் என்கிறார் நக்கீரர். லக்ஷ்மிதான் திரு(மகள்). ஶ்ரீ என்பதன் தமிழாக்கமே திரு. ஶ்ரீதேவிதான் திருமகள். எனவே மாங்குடி மருதனார் குறிப்பிடும் அணங்கும் நக்கீரர் குறிப்பிடும் திருவும் ஒன்றுதான் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறு லக்ஷ்மி வீடுகளின் நிலைகளில் அமர்ந்து மக்களுக்குச் செல்வத்தையும் நன்மைகளையும் கொண்டுவருகிறாள். கோவில்களின், மடங்களின், விகாரங்களின் நிலைகளில் அமர்ந்து மங்கலத்தைக் கொண்டுவருகிறாள். லக்ஷ்மியை வழிபட்டால் செல்வம் கொட்டும் என்பது இந்தியப் பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு கருத்து.
ஆதிசங்கரர் பிட்சை எடுக்கச் செல்லும்போது ஓர் ஏழைத் தாய்க்கு, அவருக்குக் கொடுக்க வீட்டில் ஒன்றும் இல்லை. ஒரேயொரு நெல்லிக்கனி வீட்டில் உள்ளது. அதை உடனே அவள் சங்கரருக்கு அளித்துவிடுகிறாள். உருகிப்போன சங்கரர் கனகதாரா தோத்திரம் என்று லக்ஷ்மிமீது பாடுகிறார். லக்ஷ்மி உடனே அங்கே வந்து தங்கக் காசுகளை மழையாகப் பொழிந்தாள் என்பது ஐதீகம்.
அங்கம் ஹரே புலகபூஷணம் ஆஶ்ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ருதாகில விபூதிர் அபாங்கலீலா
மாங்கல்யதாஸ்து மம மங்கல தேவதாயா
‘ஶ்ரீஹரியின் உடலில் வசிப்பவளே! எவ்வாறு தேனீக்கள் பூக்களில் அடைக்கலம் ஆகின்றனவோ அதேபோல அனைத்துவித மங்கலங்களும் அடைக்கலம் ஆகியுள்ள லக்ஷ்மியாகி நீ, எனக்கு மங்கலத்தை அருள்வாயாக’ என்று தொடங்கி மிக அழகான செய்யுள்களாகச் செல்கிறது இந்தத் தோத்திரம்.
கிட்டத்தட்ட இதேபோன்ற கதை வேதாந்த தேசிகர் என்ற வைணவ ஆசார்யர் தொடர்பாக வருகிறது. தனக்குத் திருமணம் செய்துகொள்ளப் பணம் வேண்டும் என்று ஓர் இளைஞன் தேசிகரை அணுகுகிறான். தேசிகரிடமோ கொடுக்கப் பணம் இல்லை. அவர் லக்ஷ்மிமீது ஶ்ரீ ஸ்துதி என்ற துதிப்பாடலை இயற்றிப் பாடுகிறார். இங்கும் காசுகள் மழையாகப் பொழிகின்றன.
மானாதீத பிரதிதவிபவாம் மங்கலம் மங்கலானாம்
வக்ஷபீடீம் மதுவிஜயினோ பூஷயந்தீம் ஸ்வகாந்த்யா
ப்ரத்யக்ஷானு ஶ்ரவிகமஹிமா ப்ரார்தினீனாம் ப்ரஜானாம்
ஶ்ரேயோமூர்திம் ஶ்ரியமஶரண த்வாம்ஶரண்யாம் ப்ரபத்யே
‘மது (கைடபர்களை) ஜெயித்த விஷ்ணுவின் மார்பை ஆசனமாகக் கொண்டு அமர்ந்துள்ளவள், தான் அமர்ந்த இருக்கைக்கே அழகு செய்பவள், மங்கலங்களுக்கெல்லாம் மங்கலமாக விளங்குபவள், தன்னை வணங்கும் பக்தர்களுக்குச் சிறப்பை அருளுபவள், செல்வமே வடிவானவள், ஆதரவற்றோருக்கு அடைக்கலம் அளிப்பவள் – அந்தத் திருவை அடைக்கலம் அடைகிறேன்’ என்று தொடங்குகிறது இந்தத் துதி.
ராமானுஜ வைணவப் பாதைக்கே ஶ்ரீவைணவம் என்று பெயர். இங்கே ஶ்ரீ என்பது திருமகளைக் குறிக்கும். ராமானுஜ வைணவத்தில் ஶ்ரீ எனும் லக்ஷ்மிக்கு உயர்ந்த இடம் உள்ளது. ஒவ்வொரு பாதைக்கும் ஒரு குரு பரம்பரை உண்டு. இந்த குரு பரம்பரையை சுவாமி தேசிகர், அதிகாரசங்கிரகம் என்னும் தன் அருளிச்செயலில் அழகான தமிழ்ப்பாக்களாகத் தருகிறார். முதல் பாடலில் ஆழ்வார்கள் அனைவரையும் பற்றிப் பாடுகிறார். அடுத்த பாடலில் முழுமையாக நம்மாழ்வாருக்குத் தொண்டுசெய்து அவரைப்பற்றி மட்டுமே பாடல்கள் இயற்றிய மதுரகவி ஆழ்வாரைப் பற்றிப் பாடுகிறார். மூன்றாம் பாடலில் குரு பரம்பரையைச் சொல்லித் தருகிறார். அதில் கீழ்க்கண்டவர்கள், இதே வரிசையில் வருகிறார்கள்.
பெரும்பூதூர் வந்த வள்ளல் (இராமானுசர்), பெரியநம்பி, ஆளவந்தார், மணக்கால்நம்பி, உய்யக்கொண்டார், நாதமுனி, சடகோபன் (நம்மாழ்வார்), சேனைநாதன், இன்னமுதத் திருமகள், எம்பெருமான் (விஷ்ணு).
விஷ்ணு திருமகளுக்குச் சொல்லிக்கொடுத்ததாகவும், அவள் வழியாக சேனைநாதன் (விஷ்வக்சேனர்), அவரிடமிருந்து நம்மாழ்வார், அவரிடமிருந்து நாதமுனிகள், பின்னர் ஆளவந்தார் வழியாக இராமானுசர் வரை வந்து, அங்கிருந்து பல சீடர்கள் வாயிலாக விசிஷ்டாத்வைதம் பரவியது என்பது ஶ்ரீவைணவர்கள் நம்பிக்கை.
கீழே நீங்கள் காண்பது ராஜேந்திரன் கட்டுவித்த கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு கோஷ்டத்தில் இருக்கும் அழகிய கஜலக்ஷ்மி சிற்பம்.
பாஞ்சராத்ரம், எட்டு விதமான லக்ஷ்மிகளைக் குறிப்பிடுகிறது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சென்னையில் அஷ்டலக்ஷ்மி கோவில் ஒன்று இருக்கிறது. நாட்காட்டியில் படங்களாக இந்த எட்டு லக்ஷ்மிகளும் இருப்பதையும் நீங்கள் காணலாம். அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம் என்று வடமொழியில் எட்டு பாடல்களும் உள்ளன. இந்த எட்டு லக்ஷ்மிகள் இவையே:
(1) ஆதிலக்ஷ்மி: இவளே மஹாலக்ஷ்மி. நான்கு கரங்களைக் கொண்டவள். ஒரு கையில் தாமரை, ஒரு கையில் வெள்ளைக்கொடி, மற்ற இரு கைகள் அபய வரத முத்திரை கொண்டவை.
(2) தனலக்ஷ்மி: சிவப்பு ஆடை அணிந்தவள். ஆறு கரங்கள் கொண்டவள். சக்கரம், சங்கு, அமிர்தகலசம், வில்-அம்பு, தாமரை ஆகியவை ஐந்து கரங்களில் இருக்கும். ஆறாவது கரத்தில் அபயமுத்திரையும், அதிலிருந்து தங்கக் காசுகள் சொறிவதையும் நீங்கள் காண்பீர்கள்.
(3) தான்யலக்ஷ்மி: பச்சை ஆடை அணிந்தவள். எட்டு கரங்கள் கொண்டவள். இரண்டு கரங்களில் தாமரைகள், நான்கு கரங்களில் கதை, நெற்கதிர், கரும்பு, வாழை ஆகியவை கொண்டவள். பிற இரு கரங்களில் அபய, வரத முத்திரை கொண்டவள். விளைச்சலுக்கான கடவுள் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.
(4) கஜலக்ஷ்மி: நாம் பல சிற்பங்களை ஏற்கெனவே பார்த்துவிட்டோம். சிவப்பு ஆடை அணிந்தவள். நான்கு கரங்கள் கொண்டவள். இரண்டு கரங்களில் தாமரைகள். இரண்டில் அபய, வரத முத்திரைகள். அருகில் இரு யானைகள் குடங்களிலிருந்து நீரை அவள்மீது சொறிந்துகொண்டிருக்கும். இந்திரனின் இழந்த ஆற்றலையும் நாடு நகரங்களையும் அவனுக்கு மீண்டும் அளித்தவள் என்பதனால் அரசர்கள் கொண்டாடும் சிற்ப வடிவமாக இது உள்ளது.
(5) சந்தானலக்ஷ்மி: மடியில் குழந்தையைக் கிடத்திய சிற்பம். ஆறு கரங்கள். இரு கரங்களில் நீர்க் கலசங்கள். இந்தக் கலசங்களில் மாவிலைகள் வைத்து அவற்றின்மீது தேங்காய் வைக்கப்பட்டிருக்கும். இன்றும்கூட வீடுகளில் மங்கல நிகழ்வுகளின்போது மாவிலை, தேங்காய்கூடிய நீர்க்கலசங்கள் வைக்கப்படுவதைக் காண்பீர்கள். இரு கரங்களில் வாளும் கேடயமும். ஒரு கரம் குழந்தையைப் பிடித்தபடி. ஆறாவது கரம் அபய முத்திரையுடன். குழந்தை கையில் ஒரு தாமரை இருக்கும். குழந்தை வரம் வேண்டுவோர் வணங்கும் சிற்பம் இது.
(6) வீரலக்ஷ்மி: இவளுக்கு தைர்யலக்ஷ்மி என்றும் பெயர். சிவப்பு ஆடை. எட்டு கரங்கள். சக்கரம், சங்கு, வில், அம்பு, திரிசூலம், தங்கக்கட்டி ஆகியவற்றை ஆறு கரங்களிலும், அபய, வரத முத்திரையை இரு கரங்களிலும் கொண்டவள். போருக்குச் செல்வதற்குமுன் வணங்கப்படுபவள். வணங்குவோருக்கு தைரியத்தையும் வீரத்தையும் தருபவள்.
(7) விஜயலக்ஷ்மி: சிவப்பு ஆடை. எட்டு கரங்கள். கைகளில் சங்கு, சக்கரம், வாள், கேடயம், தாமரை, பாசக்கயிறு, அபய, வரத முத்திரைகள் இருக்கும். போரில் வெற்றி, எடுத்த காரியத்தில் வெற்றி ஆகியவற்றுக்காக வணங்கப்படுபவள்.
(8) வித்யாலக்ஷ்மி: அறிவைத் தருபவள். வெள்ளை ஆடை அணிந்தவள். நான்கு கரங்கள் கொண்டவள். இரண்டில் தாமரை, இரண்டில் அபய வரத முத்திரைகள்.
பொதுவாக இந்த எட்டையும் பெரும்பாலான கோவில்களில் காணமுடியாது. இருந்தால் நவீன ஓவியங்களாக இருக்கலாம். அல்லது நாம் மேலே சொன்னதுபோல் அஷ்டலக்ஷ்மி கோவில் என்று தனியாக யாரேனும் எழுப்பினால் உண்டு. சில இடங்களில் ஐஸ்வர்யலக்ஷ்மி, சௌபாக்யலக்ஷ்மி, ராஜ்யலக்ஷ்மி, வரலக்ஷ்மி போன்ற பெயருடைய லக்ஷ்மி வடிவங்களும் கொடுக்கப்பட்டிருக்கும்.
வைகானசமும் எட்டு லக்ஷ்மிகளைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் மேலே சொன்னவை போல அன்று. அவை: (1) யோகலக்ஷ்மி (2) ஶ்ரீதேவி (3) பூதேவி (4) நீளாதேவி (5) பீடலக்ஷ்மி (வீரலக்ஷ்மி) (6) கோதாதேவி (7) பாகலக்ஷ்மி (8) த்வாரலக்ஷ்மி ஆகிய வடிவங்கள்.
கஜலக்ஷ்மி வடிவம்தான் ‘த்வாரலக்ஷ்மி’. இதன் இலக்கணத்தை விரிவாகவே பார்த்துவிட்டோம். கோவில்களில் உணவு சமைக்கும் அறைக்கு மடப்பள்ளி என்று பெயர். இங்கே நிர்மாணிக்கப்படும் லக்ஷ்மியே பாகலக்ஷ்மி. நான்கு கரங்கள், இரண்டில் தாமரை, மற்ற இரண்டும் அபய வரத முத்திரை கொண்டவை. இவளுக்கு மடப்பள்ளி நாச்சியார் என்ற பெயரும் உண்டு. விஷ்ணு கோவில்களில் விஷ்ணு சன்னிதிக்கு வலப்புறம் தனி ஆலயத்தில் நிர்மாணிக்கப்படும் லக்ஷ்மியே பீடலக்ஷ்மி எனப்படுகிறாள். இவளுக்கு வீரலக்ஷ்மி என்றும் பெயர்.
லக்ஷ்மிக்கு தாமரை நிறம், தாமரைபோன்ற கண்கள், தாமரை மாலை, தாமரை ஆசனம், அவள் கரங்களில் தாமரை. அவளுடைய முகம், பற்கள், உதடுகள், புருவம், தலைமுடி என அனைத்தும் அழகாக அமைக்கப்படவேண்டும். அவள் வெள்ளை ஆடை அணிந்திருப்பாள். அணிகலன்கள் அணிந்திருப்பாள். அவளுடைய மார்பகங்கள் தங்கக் கோப்பைகள்போல் இருக்கவேண்டும். அவள் தலையைச் சுற்றி தங்கநிற ஒளிவட்டம் இருக்கவேண்டும் என்கிறது வைகானசீய காஷ்யப ஞாநகாண்டம் என்னும் வைகானச நூல் என்று குறிப்பிடுகிறார் லக்ஷ்மிநரசிம்மன்.
ஶ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகியோர் விஷ்ணுவின் தேவிகளாக வருவதை ஏற்கெனவே பார்த்துள்ளோம். கோதாதேவி என்பது ஆண்டாளைக் குறிக்கிறது.
வட இந்தியாவில் லக்ஷ்மி சிற்பங்கள் எவ்வாறு இருக்கும் என்பதற்கு விஷ்ணுதர்மோத்தரம் சொல்லும் இலக்கணத்தைக் காணவேண்டும். நாம் சாஞ்சி, கண்டகிரி ஆகிய இடங்களில் பார்த்த லக்ஷ்மி சிற்பங்களை இந்த விவரணைகளுடன் இணைத்துப் பார்க்கலாம். விஷ்ணுவுடன் சேர்ந்து இருக்கும்போது லக்ஷ்மிக்கு இரு கரங்கள், வெள்ளை ஆடை, அனைத்துவித ஆபரணங்கள், உலகிலேயே யாருடனும் ஒப்பிடமுடியாத அழகு, கையில் தாமரை மலர்களுடன் இருக்கவேண்டும் என்கிறது விஷ்ணுதர்மோத்தரம்.
லக்ஷ்மி தனியாக இருக்கும்போது, நான்கு கரங்களுடன் எட்டு இதழ்கள் கொண்ட தாமரைமீது அவள் அமர்ந்திருக்கவேண்டும். அவளுடைய வலதுகையில் நீண்ட தண்டுடனான தாமரை மலர் இருக்கவேண்டும். இடதுகையில் அமிர்தகலசம். மற்ற இரு கரங்களில் சங்கும் வில்வப் பழமும் இருக்கவேண்டும். அவளுக்குப் பின்புறம் இரண்டு யானைகள் குடங்களிலிருந்து அவள்மீது நீரை அபிஷேகம் செய்யவேண்டும். அவளுடைய தலைக்குமேல் ஒரு தாமரை இருக்கவேண்டும்.
சங்கு வளத்தைக் குறிக்கிறது, வில்வம் இந்தப் பிரபஞ்சத்தைக் குறிக்கிறது, தாமரை, நீரின் அமிர்தத் தன்மையைக் குறிக்கிறது, சங்கும், தாமரையும், யானைகளும் கடலைக் குறிக்கின்றன என்கிறது விஷ்ணுதர்மோத்தரம்.
லக்ஷ்மியைத் தாமரைமீது நின்ற வடிவமாகவும் அமைக்கலாம் என்கிறது விஷ்ணுதர்மோத்தரம். அவளுடைய தலைக்குமேல் இரண்டு வித்யாதரர்கள் கையில் உருவிய வாளுடன் இருக்கவேண்டும். லக்ஷ்மியைச் சுற்றி ராஜஶ்ரீ, ஸ்வர்கலக்ஷ்மி, ப்ராஹ்மிலக்ஷ்மி, ஜயலக்ஷ்மி ஆகியோர் மிக அழகான வடிவங்களுடன் அமைக்கப்படவேண்டும் என்கிறது இந்த நூல்.
0
லக்ஷ்மியைப் பற்றிப் பேசும்போது அலக்ஷ்மி எனும் ஜ்யேஷ்டா என்பவளைப் பற்றி ஶ்ரீ சூக்தம் பேசியதைப் பார்த்தோம். ஶ்ரீ சூக்தம் ஜேஷ்டையை மோசமான விதத்திலேயேதான் குறிப்பிட்டது. பெருமையாக அல்ல. ஆயினும் வைகானச சம்ஹிதை ஜேஷ்டைக்கான படிம இலக்கணத்தைக் கொடுப்பதோடு அவளுக்குரிய வழிபாட்டைப் பற்றியும் பேசுகிறது.
தேவர்களும் அசுரர்களும் வாசுகியை நாணாக்கி, வடவரையை மத்தாக்கி, சமுத்திரத்தைக் கடைந்தபோது லக்ஷ்மிக்கும் முன்னால் தோன்றியவள் ஜ்யேஷ்டை. அவள் கொடூரமான உருவத்தில், கையில் காகக் கொடியுடன், கழுதைகள் பூட்டிய தேரில் வந்தாள். அவளைக் கண்டவுடன் தேவர்களும் அசுரர்களும் பயந்து ஓடினர். உடனே அவள் தன் உருவத்தை மிக அழகாக ஆக்கிக்கொண்டாள். ஓடிப்போன அனைவரும் மீண்டும் வந்தனர். ஜேஷ்டை கேட்டுக்கொண்டதன்பேரில் விஷ்ணு அவளுக்கு ஒரு வரம் கொடுத்தார். அதன்படி, யாரை அவளுக்குப் பிடிக்கவில்லையோ அவர்களை நாசமாக்கும் சக்தி அவளுக்கு உண்டு. அவள் கலி என்ற அரசனை மணந்துகொண்டு சுகன்யா என்ற அழகான மகளையும் வ்ரிஷபாங்கா என்ற மாட்டு முகத்தைக் கொண்ட மகனையும் பெற்றாள். ஜேஷ்டையின் சிற்பங்களில் இந்த இருவரையும் அருகருகே காணலாம்.
வைகானசக் கோவில்களில் திருவிழாக் காலத்தில் த்வஜாரோஹணம் எனும் கொடியேற்றல் நடைபெறும். அக்காலங்களில் பல தேவதைகளுக்குரிய வழிபாடுகளில் ஜேஷ்டைக்கும் வழிபாடு உண்டு. பஞ்சம், இயற்கை இடர்பாடுகள் ஆகியவை இல்லாமல் இருக்கவேண்டும் என்று ஜேஷ்டை வழிபடப்படுகிறாள்.
பாஞ்சராத்ரம் ஜேஷ்டையை மிக மோசமானவளாகவே சித்திரிக்கிறது. அவள் ஆடைகள் இன்றி, கையில் விளக்குமாறு ஒன்றை வைத்திருக்கிறாள். கழுதைதான் அவளது வாகனம். லக்ஷ்மி வெற்றி என்றால் ஜேஷ்டை தோல்வி. லக்ஷ்மி மழை என்றால் ஜேஷ்டை வெள்ளமும் பஞ்சமும். லக்ஷ்மி தானியம் என்றால் ஜேஷ்டை தவிடு. லக்ஷ்மி செல்வம் என்றால் ஜேஷ்டை ஏழ்மையும் குற்றங்களும்.
இன்று விஷ்ணு கோவில்களில் எங்குமே ஜேஷ்டை காணக்கிடைப்பதில்லை. ஒரு காலத்தில் வைகானசக் கோவில்களில் ஜேஷ்டை பிரதிமைகள் இருந்திருக்கலாம். இன்று அவள் மந்திர ரூபத்தில்தான் கொடியேற்றலின்போது அழைக்கப்படுகிறாள்.
ஆனால் சிவன் கோவில்களில் அவளுக்குத் தனி இடம் இருந்தது. தமிழகத்தில் பல்லவர் காலத்தில் வல்லத்தில் உள்ள குகைக்கோவிலில் மட்டும் ஜேஷ்டையின் சிற்பம் உள்ளது. பிற மகேந்திரன் குகைகளில் காணப்படுவதில்லை. மாமல்லபுரத்தில் எங்குமே ஜேஷ்டை கிடையாது. ஆனால் ராஜசிம்மன் காஞ்சியில் எடுப்பித்த மிகப் பிரம்மாண்டமான கைலாசநாதர் கோவிலில் ஜேஷ்டை நான்கைந்து இடங்களில் இருக்கிறாள். அவற்றில் மூன்றைக் கீழே காணலாம்.
சைவ ஆகமங்களான பூர்வகாரணாகமம், சுப்ரபேதாகமம், அம்சுமத்பேதாகமம் போன்றவற்றின் அடிப்படையில் ஜேஷ்டையின் உருவம் எப்படி இருக்கவேண்டும் என்று கோபிநாத ராவ் விளக்குகிறார். இரண்டு கைகள், இரண்டு கண்கள், முகம் அகலமாகப் பருத்து இருக்கவேண்டும். பெரிய மார்பகங்கள், தொப்புள் வரை கீழே இறங்கியிருக்கவேண்டும். தொப்பை பெரிதாகவும் தொடைகள் பருத்தும் மூக்கு மேலெழுந்தும் கீழுதடு தொங்கியவாறும் இருக்கவேண்டும். நெற்றியில் திலகம் இருக்கவேண்டும். தலைமுடி சுருட்டிக் கட்டப்பட்டு கரண்ட மகுடம் அணிந்திருக்கவேண்டும். ஒரு கையில் அல்லிமலர் (நீலோத்பலம்), மறு கை அபய முத்திரை அல்லது தன் தொடையில் அல்லது மகளுடைய தொடைமீது இருக்கவேண்டும். அவளுடைய கொடி காகம், வாகனம் கழுதை.
தமிழில் அவளுக்கு முகடி, கலடி, தௌவை (தவ்வை), மூதேவி, காகக்கொடியோள், கழுதையூர்வோள், கேட்டை, ஏகவேணி, கெட்டவள் ஆகிய பெயர்கள் உள்ளன என்கிறார் கோபிநாத ராவ். சமுத்ர மந்தனத்தில் அவள் தோன்றியபின் யாருமே அவளை மணக்க விரும்பவில்லை என்றும், ரிஷி கபிலர் அவளை மணந்துகொண்டதாகவும் அதனால் அவளுக்கு கபிலபத்னீ என்ற பெயர் உண்டு என்றும் கோபிநாத ராவ் குறிப்பிடுகிறார்.
பாண்டியர்கள் தங்கள் குகைகளில் ஆரம்பகட்டம் முதலேயே ஜேஷ்டையை வடிக்கத்தொடங்கினர். ஆனால் அனைத்துக் குகைக்கோவில்களிலும் ஜேஷ்டை கட்டாயம் இருப்பாள் என்று சொல்லமுடியாது.
கீழே நீங்கள் காண்பது திருப்பரங்குன்றம் பாண்டியர் குகைக்கோவிலில் உள்ள ஜேஷ்டை என்னும் மிக அழகிய தவ்வையை. ஜேஷ்டையின் இருபுறமும் அவளுடைய மகள் சுகன்யாவும் மகன் வ்ரிஷபாங்காவும் உள்ளனர். அவர்களுக்குச் சமமான இருக்கையும் இடமும் அளிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் அவர்கள் நெருக்கமாக, மிகக் குறுகிய இடம் மட்டுமே தரப்பட்டு இருப்பார்கள்.
பல்லவ, பாண்டியர்களைத் தொடர்ந்து சோழர்காலக் கோவில்கள் உருவாகின. இந்தக் கோவில்கள் ஒரு கட்டத்தில் விரிவாகி, பரிவாரக் கோவில்கள் என்பவை பிரதான சன்னிதியைச் சுற்றி, வரத் தொடங்கின. அவற்றை விசலூர், திருக்கட்டளை போன்ற இடங்களில் காணலாம்.
மேலே நீங்கள் காண்பது, விசலூர் எனும் இடத்தில் உள்ள சோழர் காலச் சிவன்கோவிலில் காணப்படும் சன்னிதியில் உள்ள ஜேஷ்டையின் சிற்பமாகும். வ்ரிஷபாங்காவுக்கு மேல் காக்கைக் கொடியை நீங்கள் காணலாம். இங்கே ஜேஷ்டை மிக அழகான, மெலிந்த தோற்றத்தில் உள்ளாள். ஆனால் இவளுடைய வடிவம் எப்போதும் இப்படி இருக்காது. பல இடங்களில் இவள் பருத்த உடலுடனும் அழகு குறைந்தாற்போன்றும்தான் இருப்பாள்.
கோபிநாத ராவ், லிங்க புராணத்தில் ஜேஷ்டை பற்றி வரும் ஒரு கதையை மிக விரிவாகக் கொடுத்துள்ளார். இந்தக் கதை, பிற ஜேஷ்டை கதைகளிலிருந்து வேறுபடுகிறது.
பாற்கடலைக் கடையும்போது, அமிர்தத்துக்குமுன் காலகூட விஷம் வெளிப்பட்டது. அதனையடுத்து ஜேஷ்டை தோன்றினாள். துஸ்ஸஹர் என்ற ரிஷி அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். எப்போதெல்லாம் சிவனையோ விஷ்ணுவையோ மக்கள் துதிக்கிறார்களோ, எப்போதெல்லாம் நல்ல விஷயங்களைப் பற்றி யாரெல்லாம் பேசுகிறார்களோ, அப்போது ஜேஷ்டை தன் காதுகளை மூடிக்கொள்வதை துஸ்ஸஹர் கவனித்தார். அவர் காட்டுக்கு ஜேஷ்டையுடன் சென்று தவத்தில் ஈடுபட்டார். அதனைக் கண்ட ஜேஷ்டை அவர் நற்செயலில் ஈடுபட்டதால், அவரைக் காட்டிலேயே விட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாள். பிறகு அவர் அவளிடம் சென்று, தான் எந்த நல்ல செயலிலும் ஈடுபடமாட்டேன் என்று உறுதிகூறினார்.
ஒரு நாள், மார்க்கண்டேய ரிஷி அவர்கள் இருக்கும் இடத்துக்கு வர, துஸ்ஸஹர் அவரிடம் ஜேஷ்டையை எங்குதான் அழைத்துச் செல்வது என்று ஆலோசனை கேட்டார். மார்க்கண்டேயர் அவரிடம், கெட்ட செயல்கள் நடக்கும் இடத்துக்கு மட்டும் ஜேஷ்டையை அழைத்துச் செல்லுமாறு அறிவுரை கூறினார். வைதீக முறையில் வழிபாடு நடக்காத, பௌத்த வழிபாடு நடக்கக்கூடிய இடங்களுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.
துஸ்ஸஹர், இதற்குபதில் ஜேஷ்டையை விட்டுவிட்டுச் செல்ல முடிவு செய்தார். தான் ஒரு நல்ல இடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதாகவும் அதுவரை காத்திருக்குமாறும் சொல்லிவிட்டு அருகில் இருந்த குளத்தில் பாய்ந்து காணாமல் போய்விட்டார். இவ்வாறு கைவிடப்பட்ட ஜேஷ்டை ஊர் ஊராக, காடு மேடாக அலைந்துகொண்டிருந்தாள். ஒருநாள் அவள் விஷ்ணுவைப் பார்த்தாள். தனக்கு வழி சொல்லுமாறு கேட்டாள். அவர், ஜேஷ்டையிடம், சிவன் முதலான வேறு எந்தத் தேவர்களையும் வணங்காது விஷ்ணுவை மட்டுமே வணங்குவோர் இருக்கும் இடத்தில் இருக்கலாம் என்று சொல்லிவிட்டுச் சென்றார். எனவே விஷ்ணுவை வணங்குவோர் ஜேஷ்டைக்கும் வணக்கம் செலுத்தவேண்டும் என்கிறது லிங்க புராணம்.
ஆனால் தொண்டரடிப்பொழி ஆழ்வார்,
நாட்டினான் தெய்வ மெங்கும் நல்லதோ ரருள் தன் னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க் குய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பி மீர்காள் கெருடவா கனனும் நிற்க
சேட்டை தன் மடிய கத்துச் செல்வம் பார்த் திருக்கின் றீரே
என்று பாடுகிறார். கருட வாகனான விஷ்ணு இருக்கையில் சேட்டை என்னும் ஜேஷ்டை செல்வம் தரப்போகிறாள் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறீர்களே, இது நியாயமா என்று கேட்கிறார்.
சிவன் கோவில்களில் வடமேற்கு மூலையில் சன்னிதியில் இருந்துவந்த ஜேஷ்டை, நாளடைவில் இந்தக் கோவில்களிலிருந்து வெளியேற்றப்படுகிறாள். இதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. இது 13-ம் நூற்றாண்டுக்குப் பின்னாகத்தான் நடந்திருக்கவேண்டும். அவ்வாறு வெளியேற்றப்பட்ட ஜேஷ்டையின் சிற்பங்கள் ஊருக்கு வெளியே, வயல்வெளிகளில், காட்டுப் பகுதிகளில் என்று தூக்கி எறியப்பட்டன. இன்றும்கூட வயல்களின் இடையில் பல இடங்களில் இந்தச் சிற்பங்களைக் காணலாம். சிலர் நினைப்பதுபோல் ஜேஷ்டை வயல்வெளிகளின் சிற்பமல்ல. கோவில்களிலிருந்து வெளியேற்றப்பட்டவள்.
சென்னைக்கு அருகில் மணிமங்கலம் என்ற ஊரில் வயல்களுக்கு நடுவே இந்த ஜேஷ்டை காணக்கிடைத்தாள். இவ்வாறு தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கில் ஜேஷ்டை சிற்பங்கள் தூக்கி எறியப்பட்டிருக்கவேண்டும். பல கிராமங்களில் நீங்கள் ஊரின் ஒதுக்குப்புறத்தில் இவற்றைக் காணலாம்.
துரத்தப்பட்ட தவ்வைகளைப் பற்றிச் சொல்லும்போது மைலாப்பூர் தவ்வையைப் பற்றிக் கட்டாயம் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
கோபிநாத ராவின் புத்தகத்தில் ஜேஷ்டை சிற்பங்கள் குறித்துச் சொல்லும்போது அவர் மைலாப்பூரில் கிடைத்த சிற்பம் என்று ஒரு படத்தைக் கொடுத்துள்ளார். கீழே காணலாம்.
இந்தப் படங்களில் முதலில் நீங்கள் காண்பது கோபிநாத ராவ் புத்தகத்தில் உள்ள படம். இது 1914-ல் பதிப்பிக்கப்பட்ட புத்தகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தவ்வையின் பின் ஒரு கட்டடம் தெரிகிறது. மைலாப்பூரில் எந்த இடமாக இருக்கும் என்று சரியாகச் சொல்லமுடியவில்லை.
ஆனால், எனக்குப் படங்களைத் தந்து உதவும் நண்பர் விகே ஶ்ரீனிவாசன், 2016-ல் மைலாப்பூர் குளக்கரையில் பேருந்து நிறுத்தங்கள் உள்ள இடத்தில் ஒரு மரத்தடியில், பாதி புதைந்த நிலையில் ஒரு ஜேஷ்டை சிற்பத்தைக் கண்டுபிடித்தார். இது கோபிநாத ராவ் நூறாண்டுகளுக்குமுன் தன் புத்தகத்தில் கொடுத்துள்ள அதே சிற்பமாகும். அதன் படம் இரண்டாவதாக உள்ளது. இந்தச் சிற்பம் குறித்து ஶ்ரீனிவாசன் முகநூலில் எழுத, பின்னர் சென்னை உள்ளூர் வரலாறு என்ற குழுமத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்தச் சிற்பம் அகழ்ந்தெடுக்கப்பட்டு, 2017-ல் அதே மரத்தடியில் வைக்கப்பட்டு ஆடை, பூ அலங்காரங்களுடன் இருப்பதை நீங்கள் மூன்றாவது படத்தில் காணலாம். இது குறித்த மைலாப்பூர் டைம்ஸ் செய்தி இங்கே.
கோவிலிலிருந்து விரட்டப்பட்டாலும் ஊரிலிருந்தே அவள் துரத்தப்படவேண்டியதில்லை. இனி மீண்டும் சிவன் கோவில்களுக்குள் ஜேஷ்டை பிரதிஷ்டை செய்யப்படுவாளா என்பது சந்தேகமே. ஆனால் பாரம்பரியம் தொடர அவள் ஊரில் இருக்கும் இடங்களிலாவது கண்ணியமாக வைத்திருக்கப்படவேண்டும்.
(தொடரும்)