ஏப்ரல் 9, 1865. பிரிவினை கோரியும், கறுப்பினத்தவர்களை அடிமைகளாக நடத்துவதைச் சட்டபூர்வமானதாக மாற்ற வேண்டியும் போராடி வந்த தென் மாநிலக் கூட்டமைப்பின் படைகள் அமெரிக்க ஒன்றியப் படைகளின் தளபதி ஜெனரல் யூலிஸிஸ் கிராண்ட்டிடம் சரணடைந்தன. பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கி 5 வருடங்களாக நடந்து வந்த அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்தது.
அமெரிக்கக் குடியரசு தலைவர் ஆபிரகாம் லிங்கன், நாட்டில் அதுவரை இருந்து வந்த அடிமை முறையை முற்றிலுமாக ஒழித்த விடுதலை பிரகடனத்தை 1 ஜனவரி 1863 அன்று வெளியிட்டிருந்தார். ஆனால் அடிமை முறையைப் பின்பற்றிவந்த தென் மாநிலங்களுடன் போர் நடந்து கொண்டிருந்ததால், அந்தப் பிரகடனத்தை உடனடியாக அமல்படுத்த முடியவில்லை. மாறாக, அது ஒரு போர் உத்தியாக மட்டுமே அதுவரை இருந்தது.
தென் மாநிலப் படைகளின் சரணாகதியும், அமெரிக்கத் தென் மாநிலங்கள் முழுவதுமாக ஒன்றிய படைகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதும் அந்தப் பிரகடனத்தை உடனடியாக அந்தப் பகுதியில் அமலுக்குக் கொண்டு வந்தன.
போர் முடிவிற்கு வந்த செய்தியைக் கேட்ட லிங்கனின் சிந்தனை முழுவதும் எதிர்காலத்தைச் சுற்றியே இருந்தது. வடமாநிலங்களில் இருந்த கொண்டாட்ட மனநிலையில் அவர் இல்லை. மாறாக, போரினால் பெரும்பாலும் அழிந்திருந்த நாட்டைத் திரும்பவும் எப்படிக் கட்டியெழுப்புவது என்பது மட்டுமே அவரது சிந்தனையாக இருந்தது.
1865, ஏப்ரல் 9. அன்றைய அமெரிக்காவின் நிலையை ஒரு முறை பார்த்துவிடுவோம். அமெரிக்க ராணுவத் தளபதியான வில்லியம் ஷெர்மன் இன்னமும் வடக்குக் கரோலினாவில் தன்னுடைய அழிவு அணிவகுப்பை நடத்திக் கொண்டிருந்தார். அதற்கு முந்தைய 4 மாதங்களில் அவரது படைகள் அட்லாண்டாவில் இருந்து தென் மாநிலங்கள் ஒவ்வொன்றின் வழியாகவும் அணிவகுத்து, பிரிவினை பேசிய மக்களுக்குப் பாடம் கற்பிக்கும் விதமாக, வழியில் தென்பட்ட அனைத்தையும் அழித்துக் கொண்டும், எரித்துக் கொண்டும் வந்திருந்தது.
அதற்கு முந்தைய 5 வருடங்களில் போர், தென் மாநிலங்கள் அனைத்திலும் தன்னுடைய கோர தாண்டவத்தை ஆடியிருந்தது. ஒவ்வொரு மாநிலமும் உருக்குலைந்து போயிருந்தது. தாங்கள் ஆரம்பித்த போருக்கு, தென் மாநில வெள்ளையர்கள் மிகப் பெரிய விலையைக் கொடுத்திருந்தார்கள். 3 லட்சம் வெள்ளையர்கள் போரில் இறந்திருந்தார்கள். இன்னமும் 10 லட்சம் பொதுமக்களும் தங்களது உயிரை இழந்திருந்தார்கள். காயமடைந்தவர்கள் எண்ணிக்கையும் பல லட்சங்களைத் தாண்டியது. உண்மையில், எவருக்கும் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று சரியாகத் தெரியவில்லை என்பதே உண்மை.
இப்போது போர் முடிவுக்கு வந்திருந்தது. போரின் காரணமாகப் பெரும்பாலான மக்கள் தங்களது இடங்களில் இருந்து புலம் பெயர்ந்திருந்தார்கள். தங்களது நிலங்கள், தோட்டங்கள் அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டுச் சென்றிருந்தார்கள். பொருளாதாரம் முழுவதுமாகச் சீர்குலைந்திருந்தது. பொருட்களின் தட்டுப்பாடு அனைத்து இடங்களிலும், அனைத்து பொருட்களுக்கும் இருந்தது.
நில உடைமையாளர்களுக்கும் பொதுவாக அதிகார வர்க்கத்திற்கும் இத்தகைய சீர்குலைவை எதிர்கொண்டிருப்பது கடினமாகத் தெரிந்தால், திடீரென்று தங்களைச் சுதந்திர மனிதர்களாக உணர்ந்த தோட்ட தொழிலாளர்களாகவும் அடிமைகளாகவும் தங்களது நில உடமையாளர்களைச் சார்ந்து வாழ்ந்தே பழகியிருந்த கறுப்பினத்தவர்கள் நிலையை என்னவென்று சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.
போரில் வென்ற மகிழ்ச்சியில் கொண்டாட்ட மனநிலையில் இருந்த வட மாநிலங்களிலும் நிலைமை சீராக இல்லை. அங்கும் ஒவ்வொரு வீட்டிலும் மரணம் நிகழ்ந்திருந்தது. போரை நோக்கி முழுவதுமாகத் திரும்பியிருந்த தொழிற்சாலைகளும் போர்க்காலப் பொருளாதாரமும், மீண்டும் தங்களது சந்தைகளைக் கண்டறிய வேண்டும். பொருட்கள் விலையும், பணவீக்கமும் மிகவும் அதிகமாக இருந்தது. வரப்போகும் கடுமையான நாட்களை எண்ணி தொழிலாளர்களும், ஏழைகளும் அஞ்சிக் கொண்டிருந்தார்கள்.
எனவே, இரண்டு நாட்களாக வாஷிங்டனில் நடந்த போர் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்த ஆபிரகாம் லிங்கனைத் தேடி மக்கள் ஏப்ரல் 11 இரவு வெள்ளை மாளிகையின் வடக்கு வாசலில் கூடியிருந்தார்கள். மிகவும் சிந்தனை தோய்ந்த முகத்துடன் அவர்களிடையே மிகவும் உயரமான நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரது அருகே பத்திரிகையாளர் ஒருவர், லிங்கன் தன்னுடைய பேச்சை எழுதியிருந்த தாளை நன்றாகப் பார்த்து பேச ஏதுவாக விளக்கு ஒன்றைப் பிடித்துக் கொண்டிருந்தார். போரின் வெற்றியை பாராட்டி லிங்கன் பேசுவார் என்று எதிர்பார்த்து நின்று கொண்டிருந்த மக்களுக்கு லிங்கனின் பேச்சு ஆச்சரியத்தைக் கொடுத்தது. லிங்கன், நாட்டை மறுகட்டமைப்புச் செய்வது பற்றி முதல் முறையாகப் பேசினார்.
இந்தப் பேச்சின் முக்கியப் பகுதிகளை இங்கே கொடுப்பது பொருத்தமாக இருக்கும். போரில் வெற்றியை பெற்றுத் தந்த ஜெனரல் கிராண்ட் மற்றும் அவரது படைகளுக்குச் சுருக்கமாக நன்றி தெரிவித்துவிட்டு, லிங்கன் பேச ஆரம்பித்தார்.
‘இந்த வெற்றிகள், ஒன்றியத்தின் அதிகாரம் மீண்டும் இந்தப் பகுதிகளில் செல்லுபடியாகப் போவதை – முதலில் இருந்தே நமது கவனத்தில் இருக்கும் இந்தப் பகுதியின் மறுகட்டமைப்பை – நமது நெருக்கமான கவனத்திற்கு மீண்டும் கொண்டு வருகிறது. இது எளிதான செயலில்லை. சுதந்திர நாடுகளுக்கு இடையிலான போரைப் போல அல்லாது, இங்கே நம்முடன் ஒத்துழைக்க எந்த அதிகார மையமும் இல்லை. இன்னொருவனின் போரை நிறுத்தும் அதிகாரம் கொண்டவர்கள் யாரும் இங்கே இல்லை. எனவே நாம் நம்முடன் வேறுபாடு கொண்ட, எந்த விதத்திலும் ஒழுங்கற்ற சமூகத்துடன் வேலை செய்ய வேண்டும். இது மட்டுமல்ல, ஒன்றியத்திற்கு விசுவாசமான நம்முள்ளும் மறுகட்டமைப்பு பற்றி – என்ன செய்வது, எப்படிச் செய்வது எதைக் கொண்டு செய்வது – எல்லா விதங்களிலும் ஒன்று போன்ற சிந்தனை இல்லை என்பதையும் சிறிது சங்கடத்துடன் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.
பொதுவாக, என்னைத் தாக்கி எழுதப்படும் அறிக்கைகளை நான் வாசிப்பதில்லை. அவற்றினால் தூண்டப்பட்டுப் பதில் கொடுக்கவும் எனக்கு விருப்பமில்லை. ஆனால், எப்படி முன்னெச்சரிக்கை எடுத்தாலும், புதிய லூசியானா மாநில அரசைக் காப்பாற்ற புதிதாக நான் ஒரு துறையை உருவாக்கி, அதை எப்படியாவது நிலைநிறுத்த முயற்சி செய்வதாக ஒரு கதை பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.
டிசம்பர் 1863ல் என்னுடைய வருடாந்திர பேச்சில் நான் பொதுவில் என்ன சொன்னேனோ அதையே இன்னமும் சொல்கிறேன். அப்போது நமது நாட்டின் ஒன்றிய அரசின் ஒப்புதலோடு, மாநிலங்கள் செய்ய வேண்டிய மறுகட்டமைப்பு (அப்போதுதான் இந்த வார்த்தை சொல்லப்பட்டது) திட்டம் பற்றி என்னுடைய கருத்துகளைத் தெரிவித்தேன். அப்போதும் இது மட்டுமே சரியான திட்டம் என்று நான் சொல்லவில்லை; காங்கிரசில் இந்த மாநிலங்களின் பிரதிநிதிகள் மீண்டும் எப்போது சேரலாம் என்பதை, வெள்ளை மாளிகையின் ஒப்புதல் இன்றி, காங்கிரசே முடிவு செய்யலாம் என்றும் சொல்லி இருந்தேன்; இதை என்னுடைய அமைச்சரவையின் ஒப்புதலோடே நான் சமர்ப்பித்தேன்.
அவர்களும் ஏகோபித்து ஒப்புக் கொண்டாலும், ஒருவர் காங்கிரசிற்கு என்னுடைய அதிகாரங்களை விட்டு கொடுப்பதை மட்டுமே விமர்சித்தார்; மேலும் விடுதலைப் பிரகடனத்தை, விர்ஜினியாவிற்கும், லூசியானாவிற்கும் கூட நீட்டிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அவரும் லூசியானா மாநிலத்திற்கான என்னுடைய திட்டத்தை முழுவதுமாக ஆதரித்தார்.
லூசியானா மாநிலத்தின் புதிய அரசியல் சாசனம், மாநிலம் முழுவதும் அடிமைகளை விடுதலை செய்தது. முன்பே எதிர்பார்த்தது போல, விடுதலை பெற்ற மக்களைத் தொழில் பயிற்சி என்ற பெயரில் மீண்டும் கட்டிப் போடுவதை எதிர்த்தது; மேலும் காங்கிரசிற்குப் பிரதிநிதிகள் அனுப்புவதைக் குறித்தும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை (அதுவே சரியும் கூட!)
இந்தத் திட்டமே காங்கிரசிற்கு அனுப்பப்பட்டு, அங்கு அனைவராலும் எழுத்து மூலமாகவும், நேரிலும் பாராட்டப்பட்டது. லூசியானா மக்களும் அதை ஏற்றுக் கொள்ளத் தயாரானார்கள். ஜூலை 1862ல் இருந்து நான் லூசியானா மாநில நிர்வாகம் குறித்துப் பலருடனும் பேசி வந்தேன். அதன் பின்னர் எழுதப்பட்ட மேலே சொல்லப்பட்ட திட்டத்தை, 1863ல் நியூ ஆர்லியன்சில் இருந்த ஜெனரல் பாங்க்சிற்கு அனுப்பியவுடன், அவரும் ராணுவத்தின் உதவியுடன், லூசியானா மக்கள் புதிய திட்டத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று பதில் எழுதினார். அப்படியே முயற்சி செய்ய நான் கூறியதை ஏற்று, லூசியானா மக்களும் முயற்சி செய்தார்கள். இதுவே நான் லூசியானாவில் ஏற்படுத்திய புதிய திட்டம்; இதை அப்படியே தொடர்வது குறித்த என்னுடைய சத்தியத்தையும் தெரிவித்துவிட்டேன். பொதுமக்களின் நன்மைக்கு எதிராக இந்தத் திட்டம் இருப்பதாகத் தெரிந்தால், நானே இந்தச் சத்தியத்தை உடைக்கவும் தயங்க மாட்டேன். ஆனால், அதற்கான தரவுகள் இன்னமும் இல்லை.
ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்ற மாநிலங்கள் எல்லாம், ஒன்றியத்துடனான தங்களுடைய உறவை முறித்துக் கொண்டன என்பதில் யாருக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. எனவே நமது குடிமை மற்றும் ராணுவ அரசின் முழுமுதல் நோக்கம், இந்த மாநிலங்களை ஒன்றியத்துடன் சரியான முறையில் இணைப்பதுதான். இந்த மாநிலங்கள் ஒன்றியத்திடம் இருந்து எப்போதும் பிரிந்து சென்றனவா இல்லையா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்காமல், அவை எப்போதும் ஒன்றியத்தில் மட்டுமே இருந்தன என்று எடுத்துக் கொண்டால், இந்த நோக்கத்தை எளிதாக நிறைவேற்றி விடலாம்…
புதிய லூசியானா அரசிற்கு இப்போது இருக்கும் ஆதரவான பனிரெண்டாயிரம் மக்களுக்குப் பதிலாக, இன்னமும் அதிகமாக ஐம்பது, முப்பது அல்லது இருபது ஆயிரம் மக்கள் என்றால் அனைவருக்கும் இன்னமும் திருப்தியாகத்தான் இருக்கும். மேலும் கறுப்பினத்தவர்களுக்கு இன்னமும் வாக்குரிமை வழங்கப்படவில்லை என்பதும் இன்னமும் திருப்தி தருவதாக இல்லை. நானுமே, கறுப்பினத்தவர்களில் அறிவார்ந்தவர்களுக்கும், நம்முடைய படைகளில் வீரர்களாகப் பணி புரிந்தவர்களுக்கும் வாக்குரிமை அளிப்பதே சரி என்று எண்ணுகிறேன்.,,
லூசியானா மாநிலத்தில் பனிரெண்டாயிரம் மக்கள் ஒன்றியத்திற்குத் தங்களுடைய விசுவாசத்தைத் தெரிவித்து, மாநிலத்தின் அரசியல் அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அங்கே தேர்தல் நடத்தி, புதிதாக மாநில அரசை நிர்மாணித்து, புதிய அரசியல் சாசனத்தை எழுதி, அரசாங்க பள்ளிகளில் வெள்ளையர்களும், கறுப்பினத்தவர்களும் சேர்ந்து படிப்பதை உறுதி செய்து, கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை தருவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை அவர்களது சட்டசபைக்கு வழங்கியிருக்கின்றனர்.
சமீபத்தில் காங்கிரஸ் அங்கீகரித்த அடிமை முறை ஒழிப்பிற்கான புதிய அரசியல் சாசன திருத்தத்தையும் அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பனிரெண்டாயிரம் நபர்களும் ஒன்றியத்திற்கு விசுவாசமாக, தங்களது மாநிலத்தில் அனைவருக்கும் சுதந்திரத்தை உறுதி செய்யவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது முறையை நிராகரிப்பதன் மூலமாக நாம் அவர்களை முழுவதுமாகக் கலைத்து, அவர்கள் எடுத்து வைத்திருக்கும் அடிகளைப் பின்னோக்கிச் செல்ல வைக்கிறோம்… இதற்கு மாறாக நாம் லூசியானா அரசை நிலை நிறுத்த உதவினால், இதற்கு எதிரான அனைத்தும் உண்மை என்றாகும்.
நாம் இந்தப் பனிரெண்டாயிரம் மக்களை ஊக்குவித்தால், அது அவர்களது வேலையைத் தொடர்வதற்கும், அதற்கு ஆதரவாகப் பேசவும், அதை மற்ற இடங்களுக்குப் பரப்பவும் முயல்வதற்கு ஊக்கத்தைக் கொடுக்கும். தனக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றுபடுவதைக் காணும் கறுப்பினத்தவர்களும், தங்களுடைய உழைப்பையும், தங்களது முயற்சியையும் நல்ல முறையில் செலுத்துவார்கள். அவர்கள் தங்களுக்கு வாக்குரிமையை விரும்புகிறார்கள்தான். இப்படி முன்னோக்கிச் செல்வதன் மூலமாகப் பெறுவார்களா, அல்லது பின்னோக்கி செல்வதன் மூலமா? லூசியானாவில் இருக்கும் புதிய அரசு கோழி முட்டை போன்றது. நமக்குக் குஞ்சு வேண்டும் என்றால் அது பொரிப்பதற்குக் காத்திருப்போமா அல்லது முட்டையை உடைத்து விடுவோமா? …
எனவே என்னுடைய கேள்வி, ‘ஒன்றிய அரசுடன் சுமூகமான உறவிற்கு நாம் லூசியானாவின் புதிய அரசை ஆதரிக்க வேண்டுமா அல்லது எதிர்க்க வேண்டுமா?’ என்பதுதான்.
லூசியானாவிற்கு என்ன சரியோ, அதுவே மற்ற மாநிலங்களுக்கும் சரியாகும்; ஆனாலும் ஒவ்வொரு மாநிலத்தின் நிலையும் வேறுபடத்தான் செய்கிறது; பல மாற்றங்களும் வெவ்வேறு மாநிலங்களில் நிகழ்கிறது. மேலும், இந்த விஷயம் இதுவரை நடக்காததும், விநோதமானதாகவும் இருப்பதால், இதன் எல்லா முடிவுகளையும் எதிர்நோக்கி ஒரே திட்டத்தை முடிவு செய்வது முடியாத காரியம்…
இன்றைய ‘நிலையில்’, தென் மாநிலங்களின் மக்களுக்கு நான் புதிதாக ஓர் அறிவிப்பை வெளியிட வேண்டும். எப்போது அத்தகைய அறிவிப்பை வெளியிடுவது சரி என்று நினைக்கிறேனோ, அப்போது நான் கட்டாயம் அதை வெளியிடுவேன்.’
லிங்கனின் இந்தப் பேச்சு அங்கிருந்த மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக ஒருவன், கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை என்பது குறித்த பேச்சு வந்தவுடன், இதுவே இவரது கடைசிப் பேச்சு என்று முடிவு செய்தான். இதற்கு மூன்று நாட்களுக்குப் பின்னர், ஏப்ரல் 14ஆம் தேதி, ஜான் வில்கிஸ் பூத்தால் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தப் பேச்சை கிட்டத்தட்ட முழுவதுமாகக் கொடுத்ததன் காரணம், லிங்கனின் மரணத்திற்குப் பின்னர் நடந்ததைப் புரிந்துகொள்ள உதவும் என்பதால்தான். லிங்கன் தன்னுடைய மறுகட்டமைப்பை தென் மாநில மக்களின் மனமாற்றத்துடன் நிகழ்த்த வேண்டும் என்று விரும்பினார்.
1862ஆம் வருடம் ஒன்றியத்தால் மீண்டும் கைப்பற்றப்பட்ட லூசியானா மாநிலத்தில் புதிய அரசியல் சாசனம், புதிய அரசு போன்றவை ஒன்றியத்திற்கு விசுவாசமாக இருப்பவர்களின் துணையுடன் நிர்மாணிக்கப்பட்டது. லூசியானாவை ஓர் உதாரண மாநிலமாக நிர்மாணிப்பதன் மூலம், தென் மாநிலங்களுக்கு ஒரு செய்தியை அனுப்ப லிங்கன் விரும்பினார். கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை கொடுப்பதை அந்த மாநிலத்தின் சட்டசபையின் கைகளில் ஒப்புவித்ததன் மூலமாக, தான் மாநிலங்கள் உரிமையை மதிப்பதையும் தெரிவிக்க எண்ணினார். கறுப்பினத்தவர்களை, வெள்ளையர்களுடன் உரிமைகளில் சரிநிகர் சமானமாக வைக்க வேண்டும் என்பதே அவரது கடைசிப் பேச்சின் சாரம்.
லிங்கனின் மரணத்திற்குப் பின்னர், அவரது துணைக் குடியரசுத் தலைவரான ஆண்ட்ரு ஜான்சன் புதிய குடியரசுத் தலைவராக ஆனார். தென் மாநிலங்களில் ஒன்றான டென்னிசியைச் சேர்ந்த அவர், பிரிவினையை எதிர்த்தாலும், தென் மாநிலங்களையும், வெள்ளையர்களையும் அனுதாபமாகப் பார்ப்பவர். மறுகட்டமைப்பு பற்றி அவர் வேறு எண்ணம் கொண்டிருந்தார்.
(தொடரும்)