‘எங்களுக்கு விடுதலை கொடுத்துவிட்டீர்கள். வாக்குரிமையும் கொடுத்து விட்டீர்கள். அதற்காக எங்களது நன்றி. ஆனால் நீங்கள் எப்போது விடுதலை அடையப்போகிறீர்கள்? கறுப்பினத்தவர்கள் தங்களது சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை என்றால் உங்களது உரிமை என்ன? எங்களை வானம், புயல், சுழல்காற்றுக்குள்; எல்லாவற்றையும் விட மோசமாக எங்களது கோபமான முதலாளிகளுக்கு நடுவே விட்டுவிட்டீர்கள். எனவே எங்களது கேள்வி எல்லாம், உங்களது அரசியல் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் உறுதிகளை எப்போது நிறைவேற்றுவீர்கள்?’
பிரடெரிக் டக்ளஸ், 1876
1876ஆம் வருடத்திய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலைப்போல அதற்கு முன்னும் நடந்ததில்லை. அதற்குப் பின்னும் நடந்ததில்லை. ஏன் இன்று வரைக்கூட அதுபோன்ற ஒன்று நடக்கவில்லை. இதில் வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்த மாதிரியான ஒரு தேர்தல், இப்படியான முக்கியமான வருடத்தில் நிகழ்ந்தது என்பதுதான் வரலாற்றுத் துயரம். ஏனென்றால் இந்தத் தேர்தல் அமெரிக்க வரலாற்றை மாற்றியது என்று மட்டும் சொல்வது சரியல்ல. இந்தத் தேர்தலின் முடிவு, கறுப்பினத்தவர்களின் வாழ்வை மீண்டும் மீளமுடியாப் பள்ளத்தில் தள்ளியது, அமெரிக்கச் சமூகம் அவர்களை வெளிப்படையாகக் கைவிட காரணமாக இருந்தது என்றும் சொல்ல வேண்டும்.
கிராண்ட் மூன்றாவது முறை குடியரசுத் தலைவராகப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாவது முறை குடியரசுத் தலைவராக ஆனபின்னர் அவரது அரசின் கீழ் நடந்த ஊழல்களும், பொது நிர்வாகச் சீர்கேடுகளும் அவருக்கு அடுத்த தேர்தலில் என்ன நடக்கப்போகிறது என்பதைத் முன்னரே தெரிவித்திருக்க வேண்டும். எனவே, அவர் முதலிலேயே தான் வேட்பாளர் இல்லை என்பதைச் சொல்லிவிட்டார்.
எனவே, குடியரசுக் கட்சியின் சார்பில் ஓஹியோ மாநிலத்தின் ஆளுநர் ருதர்ஃபோர்ட் ஹேய்சும், ஜனநாயகக் கட்சியின் சார்பில் நியூயார்க் மாநில ஆளுநரான சாமுவேல் டில்டனும் போட்டியிட்டார்கள்.
ஆரம்பத்தில் இருந்தே சாமுவேல் டில்டனின் பிரசாரம், குடியரசுக் கட்சி அரசாங்கத்தின் ஊழல் பற்றியதாகவே இருந்தது. குடியரசுக் கட்சியோ, உள்நாட்டுப் போரில் ஜனநாயகக் கட்சியினர் பிரிவினைக்காகப் போரிட்டதைச் சொல்லிப் பிரசாரம் செய்தது. ஆனால் எல்லாவற்றையும் விடப் பேசப்படாத பிரச்னையாகத் தென்மாநிலங்களில் இருந்த கறுப்பினத்தவர்களின் நிலை இருந்தது.
தென் மாநிலங்களை வென்றெடுக்க ஜனநாயகக் கட்சி, அந்த மாநிலங்களில் இருக்கும் ‘சிவப்பு சட்டைகள்’, ‘வைட் லீக்’ போன்ற பயங்கரவாத இயக்கங்களை நம்பியே இருந்தது. அவர்களைக் கொண்டு கறுப்பினத்தவர்களை வாக்குச் செலுத்த விடாமல் செய்வதிலேயே தங்களது வெற்றி இருப்பதாகக் கருதியது. அதுவே உண்மையாகவும் கூட இருந்தது.
தென் மாநிலங்கள் முழுவதும் கடுமையான வன்முறையோடு தேர்தல் நடந்து முடிந்தது. எதிர்பார்த்ததைப்போலவே எல்லாத் தென் மாநிலங்களிலும் நூற்றுக்கணக்கான கறுப்பினத்தவர்கள் வாக்குச் செலுத்துவதில் இருந்து தடுக்கப்பட்டு, கொல்லப்பட்டனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் வாக்குச் சாவடிகளில் இருந்து விரட்டப்பட்டார்கள். ஆனாலும், ஜனநாயகக் கட்சியின் வெற்றித் தெளிவானதாக இல்லை.
அதேசமயம், குடியரசுக் கட்சியின் ஆட்சியில் பெருகியிருந்த ஊழல்கள் வடமாநிலங்களில் அக்கட்சிக்கு இருந்த மக்களின் ஆதரவையும் வெகுவாகக் குறைத்தன. எனவே தேர்தல் மிகவும் இருக்கமானதாகவும் குழப்பமானதாகவும் நடந்து முடிந்தது.
அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதன் மக்கள் தொகையைப் பொறுத்துக் குறிப்பிட்ட வாக்குகள் இருந்தன. எனவே மொத்தமாக அதிக வாக்குகள் பெற்றாலும், போதுமான மாநிலங்களை வெல்ல முடியவில்லை என்றால் குடியரசுத் தலைவராக ஆக முடியாது.
0
1876ஆம் ஆண்டுத் தேர்தலில் தென் மாநிலங்களில் யார் வெற்றிப் பெற்றது என்ற குழப்பம் நிலவியது. புளோரிடா, லூசியானா, தெற்குக் கரோலினா ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஜனநாயகக் கட்சியின் டில்டன் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆனால் இந்த மாநிலங்களில் மிக அதிகமான வன்முறை நிகழ்ந்திருந்தது.
தெற்குக் கரோலினாவில் மட்டும் 150க்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர்கள் தேர்தல் சம்பந்தமான வன்முறையில் கொல்லப்பட்டிருந்தனர். இதை விட இன்னொரு குழப்பம், தெற்குக் கரோலினாவில் 101 சதவிகித வாக்குப்பதிவு நடந்திருந்தது. இதையும் யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, அந்த மாநிலத் தேர்தல் ஆணையங்கள் குடியரசுக் கட்சி வெற்றிப் பெற்றதாக அறிவித்தன. மேலும் இரண்டு தென் மாநிலங்களிலும் மாநிலத் தேர்தல் ஆணையங்கள் குடியரசுக் கட்சியே வெற்றிப் பெற்றதாக அறிவித்தன.
இதற்கு எதிராக ஜனநாயகக் கட்சியினர் குரல் எழுப்பினர். மாநிலத் தேர்தல் ஆணையங்கள் அனைத்தும் குடியரசுக் கட்சியால் நியமிக்கப்பட்ட ஆணையர்களைக் கொண்டிருந்ததால், தேர்தலில் தங்களது வெற்றியைத் திருட முயற்சிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இந்தப் பிரச்னை பிரதிநிதிகள் சபைக்குச் சென்றது. பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மைக் கொண்டிருந்தது. எனவே, குடியரசுக் கட்சியினர் இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, தங்களுக்கு பெரும்பான்மை இருந்த செனட் சபையே முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கிடையே, குடியரசுக் கட்சியின் வேட்பாளரை அவரது வீட்டிலேயே வைத்து கொலை செய்யவும் முயற்சி நடந்தது.
தேர்தல் முடிவில்லாமல் சிக்கலில் இருப்பது, தங்களது நாட்டின் ஜனநாயகத்திற்கே ஆபத்தாக முடியும் என்று அனைவருக்கும் புரிந்திருந்தாலும், இதை எப்படித் தீர்ப்பது என்று யாருக்கும் தெரியவில்லை. இறுதியில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஐந்து பேர், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஐந்து பேர், ஜனநாயகக் கட்சியால் நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேர், குடியரசுக் கட்சியால் நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேர், எந்தக் கட்சியையும் சாராத நீதிபதி ஒருவர் என பதினைந்து நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவர்கள் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டது.
‘1876 சமரசம்’ அல்லது ‘1876இன் பேரம்’ என்றழைக்கப்பட்ட இவர்களின் முடிவு, மறுகட்டமைப்புத் திட்டங்களுக்கு முடிவுரை எழுதுவதாக இருந்தது. கறுப்பினத்தவர்களின் பிரதிநிதித்துவம் இல்லாத இந்தக் குழு, அவர்களின் சுதந்திர வாழ்வுக்குச் சாவுமணி அடித்தது.
இந்தப் பேரத்தின் முக்கியப் புள்ளிகள் என்னவென்றால்,
1. தென் மாநிலங்களில் மிச்சமிருக்கும் அனைத்து ராணுவ வீரர்களும் அகற்றப்பட வேண்டும்.
2. குடியரசுக் கட்சியின் அமைச்சரவையில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் இருக்க வேண்டும்.
3. தென் மாநிலங்களின் வழியே செல்லும் ரயில் பாதை வேண்டும்.
4. போருக்கு பின்னான தெற்கின் பொருளாதாரத்தை முன்னேற்ற உதவிடும் திட்டங்கள் அதிகமாக வேண்டும்.
5. தென் மாநிலங்களுக்கு யாருடைய தொந்தரவும் இல்லாமல் கறுப்பினத்தவர்களைத் தங்கள் விருப்பப்படி நடத்த உரிமை வழங்கப்பட வேண்டும்.
இதற்குப் பதிலாகக் குடியரசுக் கட்சியின் ருதர்போர்ட் ஹேய்ஸ் குடியரசுத் தலைவராவதற்கு ஜனநாயகக் கட்சி தன் ஆதரவைத் தெரிவித்தது. லிங்கனின் குடியரசுக் கட்சி, அரசியல் அதிகாரத்துக்கு ஆசைப்பட்டு, கறுப்பினத்தவர்களைக் கைவிட்டது.
0
மறுகட்டமைப்புத் திட்டங்கள் சில காலமே அமலில் இருந்தாலும், கறுப்பினத்தவர்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தன. இந்த மாற்றங்கள் அந்தக் காலகட்டத்தோடு நின்றுவிடவில்லை. மாறாக, ஏதோ ஒரு விதத்தில் இன்னமும் அவர்களுக்கு உதவியாகவே இருக்கிறது. இதுவே அந்தத் திட்டங்களின் மாபெரும் வெற்றி எனலாம்.
மறுகட்டமைப்பு நாட்கள் குறித்து 30 வருடங்களுக்குப் பிறகு எழுதப்பட்ட கட்டுரை ஒன்றில், சமூகவியலாளரும், வரலாற்று ஆய்வாளரும், கறுப்பினத்தவர்களின் சமஉரிமைக்காகப் போராடியவருமான டபிள்யூ.இ.பி. டு பாய்ஸ் (W.E.B. Du Bois), ‘மறுகட்டமைப்புக் கொடுத்த கொடைகள்’ என மூன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறார்.
முதலாவது, ஜனநாயக அரசு. அதுவரை அரசியல் அதிகாரம் எதுவுமே இல்லாமல் இருந்த கறுப்பினத்தவர்களை முதல் முறையாக வாக்குரிமையோடு அரசியலில் பங்குபெற வைத்தது. இந்தப் பத்து வருடங்களிலும் தென் மாநிலங்கள் அனைத்திலுமாக சுமார் 1500 கறுப்பினத்தவர்கள், மாநில, ஒன்றிய பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களாக இருந்தனர். செனட்டர்களாகவும் இருவர் இருந்தனர். இதுபோக, நகர, கிராம மன்றங்களில் எண்ணற்ற கறுப்பினத்தவர்கள் முதல் முறையாகப் பங்குபெற்றனர். இது அவர்களிடையே பெரும் மறுமலர்ச்சியைக் கொண்டு வந்தது. தங்களது உரிமைகள் பற்றிய புரிதலையும், தங்களது மக்களைக் கைதூக்கி விட வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுத்தது.
இந்த மாநிலங்கள் இதே காலகட்டத்தில் புதிய அரசியல் சாசனங்களையும் எழுதின. அவை புரட்சிகரமாக இல்லை என்றாலும், முந்தைய சாசனங்களை விட அதிகமான உரிமைகளைக் கொடுப்பதாகவும், அதற்குத் தேவையான விதிகளைக் கொண்டதாகவும் இருந்தன. உதாரணமாக, தெற்குக் கரோலினா மாநிலத்தில் போருக்கு முந்தைய நாட்களில், சொத்து வைத்திருப்போர் மட்டுமே வாக்குரிமைக்குத் தகுதியானவர்களாக இருந்தனர். இந்த விதி போருக்குப் பின்னர் நீக்கப்பட்டது. எனவே கறுப்பினத்தவர்கள் மட்டுமின்றி, எளிய வெள்ளையர்களும் இதனால் பயனடைந்தனர்.
சவுக்கால் அடிப்பது, இரும்பு முத்திரை இடுவது போன்ற மனிதத்தன்மையற்ற தண்டனைகள் ஒழிக்கப்பட்டன. சட்டத்தின் மூலமாக எவரும் பழிவாங்கப் படவில்லை. சாலை அமைப்பது, குளம் வெட்டுவது போன்ற பொது வேலைகளுக்குப் பெருமளவில் பணம் ஒதுக்கப்பட்டது. தென் மாநிலங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே முக்கிய நோக்கமாக இருந்தது.
இரண்டாவதாக, இந்தச் சட்டசாசனங்கள் மூலமாக இயற்றப்பட்ட சமூகநீதி சட்டங்கள். பெரும்பாலான சட்டங்கள், எல்லாவிதமான நிறப்பாகுபாடுகளையும் ஒழித்தன. பொது இடங்களை இரண்டு இனத்தவருக்கும் பொதுவாக்கின. எல்லா விதங்களிலும் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டுபவையாக இருந்தன. தேர்தலில் அனைவரும் நிற்பதற்கு ஏற்றவாறு தகுதிகள் மாற்றி அமைக்கப்பட்டன.
இவை மட்டுமில்லாது, அந்தச் சட்டங்கள் அரசாங்கம் தனியார் நிறுவனங்களுக்குக் கடன் கொடுப்பதைத் தடை செய்தன. இந்த முறையில் பெரும் ஊழல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆளுநரின் அதிகாரத்தை அதிகரித்து, அரசு அதிகாரிகள் எண்ணிக்கையை உயர்த்தி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், ஏழைகளுக்கும் அரசாங்கத்தின் உதவி கிடைக்குமாறு நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டன. பொதுவாக, மக்களின் வாழ்வை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் பங்கு அதிகரிக்கப்பட்டது. இந்தச் சட்டங்கள் எல்லாம் கறுப்பினத்தவர்கள் வாழ்வில் மட்டுமல்லாது, ஏழை வெள்ளையர்களுக்கும் பெரும் உதவியாக இருந்தன.
மூன்றாவதாக, கறுப்பினத்தவர்களின் அறிவுத்தேடலை நிவர்த்தி செய்யும் வகையில் இயற்றப்பட்ட அரசுப் பள்ளிகள் திட்டம். போருக்குமுன் தென் மாநிலங்களில் சில பள்ளிகள் இருந்தாலும், அவை வெள்ளையர்களுக்கு மட்டுமே உரியதாகவும், கறுப்பினத்தவர்களைக் கல்வி பயில அனுமதிக்காதவையாகவும் இருந்தன.
போருக்குப் பின்னர் சுதந்திரமடைந்தவர்களின் துறையும், பல தேவாலய சபைகளும் பள்ளிகளைத் திறப்பதில் முனைப்புடன் இருந்தன. ஆனாலும்கூட எல்லாக் குழந்தைகளும் படிக்கும்படியாக அரசாங்க பள்ளிகள் கறுப்பினத்தவர்கள் கைகளில் அரசியல் அதிகாரம் வந்த பின்னரே சாத்தியமானது. 1868இல் இருந்து இரண்டே வருடங்களில் அனைத்துத் தென் மாநிலங்களிலும் அனைத்து இனத்தவருக்கும் பொதுவான அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு, 5 வயது முதல் 21 வயதான அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்பட்டது. 1870களின் நடுவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட கறுப்பின குழந்தைகள் பள்ளிகளில் இருந்தார்கள். மறுகட்டமைப்பின் பின்னரான காலகட்டத்திலும் இந்தப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கி வந்தன.
இவ்வாறு கறுப்பிதவர்களின் வாழ்க்கையில் பல திறப்புகளை மறுகட்டமைப்புத் திட்டங்கள் ஏற்படுத்தியிருந்தன. ஆனால் இந்தத் திட்டங்கள் தொடர முடியாமல் போனதற்கும், நீர்த்துப் போனதற்கும் காரணங்கள் என்னென்ன?
முதலாவதாக, போருக்குப் பின்னான நாட்களில் தென் மாநிலங்களின் ஜனநாயக நிறுவனங்கள் பலமிழந்து இருந்தன. பொருளாதார ரீதியாக ஏற்பட்ட மந்த நிலை இதை இன்னமும் பல மடங்காக அதிகரித்தது. இங்கே தேர்தல் மூலமாக அரசாங்கங்கள் அமைந்தாலும், அவை பெரும்பாலும் கறுப்பினத்தவர்களும், சில வெள்ளையர்களும் மட்டுமே சேர்ந்து அமைத்தவையாக இருந்தன. ஒரு கணக்கின் படி, 20 சதவிகித வெள்ளையர்கள் மட்டுமே கறுப்பினத்தவர்களை ஆதரித்தார்கள். ஆனால் இந்தச் சதவிகிதம் இன்னமும் குறைவாகவே இருக்கும்.
வெள்ளைத் தோட்ட முதலாளிகள் தங்களது நிலங்களைப் பெற்றதும், சீர்திருத்தங்களை தொடர்ந்து எதிர்த்து வந்ததும் இன்னுமொரு காரணம். 1865இல் சாத்தியமாகி இருக்கக்கூடிய நிலச்சீர்திருத்தங்களை அரசாங்கம் செய்யாமல் விட்டது, இவர்களின் செல்வச்செழிப்பை அப்படியே வைத்திருக்க உதவியது. 1870களில் தோட்ட பொருளாதாரம் சிறிது நல்ல நிலைக்கு வந்தது, இவர்களின் கைகளை வலுப்படுத்தி, மாநில அரசாங்கங்களின் பலத்தை மேலும் குறைத்தது.
வடமாநில வெள்ளையர்கள் ஆதரவுடன் கறுப்பினத்தவர்கள் அமைத்த அரசுகள் பெரும் ஊழல் புரிபவைகளாக இருந்தன என்ற பொதுக்கருத்தும் தென் மாநிலங்களில் நிலவி வந்தது. இதையே வடமாநில பத்திரிகைகளும் எழுதின. கறுப்பினத்தவர்கள் வாக்குரிமைக்கும், அரசியல் அதிகாரத்திற்கும் தகுதியானவர்கள் அல்ல என்ற கருத்தைக் கட்டமைக்கும் பிரசாரங்கள் அமெரிக்கா முழுவதும் திட்டமிட்டுப் பரபப்பட்டன. ஆனால், வரலாற்று ஆய்வாளர்கள், தென் மாநிலங்களின் போருக்கு முந்தைய நிலையையும், கறுப்பினத்தவர்களின் அரசையும் ஒப்பிட்டு நோக்கி, உண்மையில், கறுப்பினத்தவர்களின் அரசாங்கங்களில் ஊழல் என்பது மிகவும் குறைவாக இருந்தது என்றே கூறுகிறார்கள்.
போருக்குப் பின்னான நாட்களில், தென் மாநிலங்களில் இருந்த வெள்ளையர்கள் பலரும் போர் அனுபவம் பெற்றவர்களாக இருந்தார்கள். இது அவர்கள் விரைவாக ஒன்று சேர்ந்து, தங்களது வன்முறையை ஆரம்பிக்க வசதியாக இருந்தது. இவர்களைத் தடுத்து நிறுத்தும் அதிகாரமும் சக்தியும் ஒன்றிய அரசிடம் இருந்தாலும் கூட, ஆண்ட்ரு ஜான்சனின் வெளிப்படையான ஆதரவும் பாராமுகமும் வன்முறையாளர்களுக்குத் தைரியத்தையும் வேகத்தையும் கொடுத்தது. கிராண்ட் உறுதியான எதிர்ப்பைக் காட்டினாலும், வன்முறை வெவ்வேறு விதங்களில் திரும்பவும் எழுந்துகொண்டே இருந்தது.
மறுகட்டமைப்பின் தோல்விக்கு வெள்ளையர்களின் வன்முறையைக் கட்டுப்படுத்தாமல் விட்டதே முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது. பொருளாதார மந்தநிலையும், குடியரசுக் கட்சியின் ஊழல்களால் வடமாநில மக்கள் தங்களது ஆதரவை விலக்கிக்கொள்ள ஆரம்பித்ததும், தோல்வியை வேகப்படுத்தியது எனலாம்.
அரசியல் அதிகாரப் போதையில் குடியரசுக் கட்சியினர் தங்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாமல் இருந்ததும் ஒன்றிய அரசைப் பலவீனமாக்கியது. ஆனால், தென் மாநில ஜனநாயகக் கட்சியினர் ஒற்றுமையாக ராணுவத்தை வெளியேற்றவும், திரும்பவும் வெள்ளையர்கள் கையில் அதிகாரம் வரவும் தொடர்ந்து வேலை செய்தனர். அதிகார வெறியின் காரணமாகக் குடியரசுக் கட்சியின் ஒன்றிய அரசாங்கம், ராணுவத்தை விலக்கிக் கொள்ள நிபந்தனைகள்கூட விதிக்கவில்லை.
0
1877ஆம் வருடம் மறுகட்டமைப்பு நாட்களின் முடிவாகக் கருதப்பட்டாலும், அதைத் தாண்டிச் சில பத்து வருடங்களுக்குத் தென் மாநில சட்ட சாசனங்கள் அப்படியே நீடித்தன. ஆனாலும், மெதுவாக உளியால் உடைப்பதைப்போல வெள்ளையர்களும் நீதிமன்றங்களும் இந்தச் சட்டங்களை மாற்றின. இதனால் அடுத்த 85 வருடங்களுக்கு, ஏன் அதற்கு மேலும் கூட, கறுப்பினத்தவர்களின் வாழ்வில் இருள் சூழ்ந்தே காணப்பட்டது.
(தொடரும்)
படம்: 1876 தேர்தல் – கேலிப்படம்