Skip to content
Home » கறுப்பு அமெரிக்கா #14 – தொழிலாளர் போராட்டம்

கறுப்பு அமெரிக்கா #14 – தொழிலாளர் போராட்டம்

தொழிலாளர் போராட்டம்

1860களில் பிறந்த கறுப்பினக் குழந்தைகள், 1880களிலும், 1890களிலும் வேலை செய்யும் வயதை எட்டியிருந்தனர். இவர்கள் பெரும்பாலும் முன்னாள் அடிமைகளின் குழந்தைகளாக இருந்தாலும், இவர்களுக்கு அடிமைமுறை பற்றிய அனுபவம் இல்லை. மறுகட்டமைப்பு நாட்களில் தங்களது இளம்பருவத்தைக் கழித்த இவர்கள், தங்களது பெற்றோரைவிட நல்ல கல்வியைப் பெரும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர்.

1870களில் சற்றுத் தொய்வடைந்திருந்த அமெரிக்கப் பொருளாதாரம், 1880களில் மீண்டு எழுந்தது. அமெரிக்காவில் பெரும் தொழிற்புரட்சி நடந்து கொண்டிருந்தது. ஏற்கெனவே வடமாநிலங்கள் ஓரளவுக்குத் தொழிற்சாலைகளைக் கொண்டிருந்தாலும், முதல் முறையாகத் தென் மாநிலங்கள் பல விதமான தொழிற்சாலைகளைப் பெற ஆரம்பித்தன. அதற்குத் தேவைப்படும் எரிபொருள்களான நிலக்கரியையும், நீரையும் பெருமளவில் கொண்டிருந்த தெற்கு, பருத்தியுடன் இந்தப் புதிய தொழில்களையும் ஊக்குவிக்க ஆரம்பித்திருந்தது. இருபதாம் நூற்றாண்டின் அமெரிக்கப் பொருளாதாரப் பலத்துக்கான அடித்தளமும் இந்தக் காலக்கட்டத்திலேயே போடப்பட்டது.

பெருகிய தொழில் வளம், பலவித திறமைகளைக் கொண்டிருந்த தொழிலாளர்களை வேண்டியது. புதிதாகச் சந்தைக்கு வந்திருந்த கறுப்பினத்தவர்களும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்கள். ஆனால், இனவெறி, நிறவெறிக் கூட்டம் அவர்களை அங்கேயும் துரத்தியது. ஆனாலும் அவர்கள் முதல்முறையாகப் பல்வேறு தொழில்களில் தங்களது முத்திரையைப் பதிக்கத் தொடங்கினார்கள்.

முதலாளி வர்க்கம், கிடைத்த தொழிலாளர்களை முடிந்த அளவுக்கு நசுக்கி வேலை வாங்கியது. எல்லா வினைகளுக்கும் இருப்பதுபோலவே, அதற்கான எதிர்வினையும் நிகழ்ந்தது.

0

கிரான்வில் வுட்ஸ் என்பவர் எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர், பெரிதாகப் படிப்பறிவு இல்லாதவர். இரண்டு வருடங்கள் இயந்திரவியல் பயிற்சி எடுத்துக் கொண்டார். பல்வேறு விதமான வேலைகளை நிலத்திலும் கப்பல்களிலும் செய்து வந்தார். அவருக்கு, அப்போதுதான் புதிதாக அறிமுகமாகியிருந்த மின்சாரப் பொருட்கள் ஆச்சரியத்தைக் கொடுத்தன. மின்சாரத்தைப் பற்றிப் படிக்க ஆரம்பித்தார்.

பலவித ஆராய்ச்சிகளைச் செய்து புது விதமாகத் தந்தி அனுப்பும் முறையைக் கண்டறிந்தார். அதற்குக் காப்புரிமை பெறவும் செய்தார். ஓஹியோ மாநிலத்துக்குச் சென்று தன்னுடைய கண்டுபிடிப்புகளைப் பரவலாக்க புதிய நிறுவனம் ஒன்றையும் நிறுவினார். கிட்டத்தட்ட 50 கண்டுபிடிப்புகளுக்கு மேல் காப்புரிமை பெற்ற அவர், அவற்றைப் பல்வேறு பொருள்களுக்காகத் தயாரித்து அப்போதைய பெரிய மின்சார நிறுவனங்களான ஜிஇ, பெல், வெஸ்டிங்ஹவுஸ் போன்றவற்றுக்கு விற்றுப் பணம் ஈட்டினார்.

தன்னுடைய கண்டுபிடிப்பைத் திருடிவிட்டதாக வுட்ஸ் மீது தாமஸ் ஆல்வா எடிசன் வழக்குத் தொடுத்தார். வழக்கை வெற்றிகரமாகச் சந்தித்து, எடிசனின் புரிதல் தவறு என்று நிரூபித்தார். அவரது புத்திசாலித்தனத்தை வியந்த எடிசன், தன்னுடைய நிறுவனத்தில் சேரும்படி வற்புறுத்தியும் மறுத்து விட்டார்.

கிரான்வில் வுட்ஸின் கதை ஒரு விதிவிலக்காகும். பெரும்பாலான கறுப்பினத்தவர்களுக்கு அவர்களைப் பொருளாதார அளவில் வளர விடாத சாதாரண வேலைகளே கொடுக்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரயிலில் பெட்டிகளைத் தூக்குவதும், பெரிய விடுதிகளில் வாசற்கதவைத் திறந்து விடுவதும் கறுப்பினத்தவர்களிடையே பெரும் மதிப்பிற்குரிய வேலைகளாக இருந்தன. அப்படிப் பார்த்தால் அவர்கள் பொருளாதாரத்தில் எந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அவ்வாறு இல்லாமல் சுயமுயற்சியால் மேலே வருபவர்கள் எப்போதும் வன்முறையை எதிர்பார்க்க வேண்டிய சூழலும் நிலவியது.

0

வில்மிங்டன், வடக்குக் கரோலினாவின் பெரிய நகரம். நகரின் மக்கள் தொகையில் 55 சதவிகிதம் கறுப்பினத்தவர்கள் இருந்தார்கள். உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய நாட்களில், நகரம் வேகமாக வளர்ந்து வந்தது. அதுவே புதிதாக விடுதலை அடைந்திருந்த அடிமைகளுக்கும், அங்கேயே இருந்த கறுப்பினத்தவர்களுக்கும் பல வாய்ப்புகளைக் கொடுத்தது. அடிமைகளாக இருந்தவர்கள் பல்வேறு தொழில்களைக் கற்றிருந்ததால், இப்போது அவர்கள் தங்களது திறமைக்கு வாய்ப்பிருப்பதைப் பார்த்தார்கள். நகரின் தச்சர்கள், நகை செய்பவர்கள், கருமான், கொத்தனார், அடுப்புச் சுத்தம் செய்பவர்கள், வண்ணம் பூசுபவர்கள் என அனைத்து விதமான வேலைகளிலும் கறுப்பினத்தவர்கள் இருந்தார்கள். இப்படியான வேலைகள் செய்வது அவர்களது பொருளாதார நிலையையும் உயர்த்திக் கொண்டிருந்தது. முதல் முறையாக, இன்று நாம் நடுத்தர மக்கள் வாழ்வு என்று சொல்லும் வாழ்வை வாழ ஆரம்பித்திருந்தார்கள்.

அலெக்ஸ் மான்லி அங்கு ஒரு பத்திரிகை நடத்தி வந்தார். அலெக்ஸ் மான்லி 1866இல் பிறந்தவர். அவரது பெற்றோர் அடிமைகள் இல்லை என்றாலும், அதற்கு முந்தைய தலைமுறையிலேயே சுதந்திரமாக வாழ ஆரம்பித்திருந்தனர். புதிதாகத் திறக்கப்பட்ட விர்ஜினியா ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் படித்த அவர், தன்னுடைய சகோதரனுடன் இணைந்து வில்மிங்டனில் ‘தி டெய்லி ரெகார்ட்’ என்ற தினசரியைத் தொடங்கினார்.

வடக்குக் கரோலினா மாநிலத்தில் கறுப்பினத்தவர்கள் அதிகமாக இருந்ததால், குடியரசுக் கட்சி இன்னமும் உயிருடன் இருந்தது. வில்மிங்டன் நகரில் நடந்திருந்த தேர்தலிலும் குடியரசுக் கட்சியின் கூட்டணி வெற்றிப் பெற்றிருந்தது. வெள்ளையர்கள் இதை எப்படியாவது மாற்றி விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

ரெபேக்கா பில்டன் என்ற பெண்மணி, ‘வெள்ளைப் பெண்களைக் கறுப்பினத்தவர்கள் வன்புணரும் ஆபத்து இருப்பதால் அவர்களை அடித்துக் கொல்வதில் எந்தத் தவறும் இல்லை’ என்று ஒரு பொதுக்கூட்டத்தில் அட்லாண்டா நகரில் பேசியிருந்தார். அலெக்ஸ் மான்லி இதை எதிர்த்து ஒரு தலையங்கத்தைத் தன்னுடைய பத்திரிகையில் எழுதினார். கறுப்பின பெண்கள் அடிமைகளாக இருந்தபோது, வெள்ளை முதலாளிகள் அவர்களை வன்புணர்வு செய்ததை நினைவுப்படுத்தினார். வெள்ளைப் பெண்கள் கறுப்பினத்தவர்களுடன் பேசினாலே அதை வன்புணர்வாக வெள்ளையர்கள் பார்ப்பதைக் கேள்விக்கு உட்படுத்தினர். வெள்ளை பெண்களும், கறுப்பின ஆண்களும் பேசி, அந்தப் பெண்ணுக்கு அந்தக் கறுப்பு ஆணை பிடித்திருந்தால் என்ன தவறு என்று கேட்டார்.

‘கறுப்பு ஆண், வெள்ளைப் பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது, வெள்ளை ஆண் கறுப்புப் பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்றதுதான் என்று உங்கள் ஆண்களிடம் சொல்லுங்கள்’ என்ற அவரது வார்த்தைகள் வெடிகுண்டுபோல வெள்ளையர்கள் மத்தியில் விழுந்தது. வெள்ளைப் பெண் ஒருத்தி கறுப்பு ஆண் ஒருவனை விரும்ப முடியும் என்பதே பெரும் கலவரத்துக்குக் காரணமாக அமைந்தது.

image.png

 

Figure 12: தீக்கிரையாக்கப்பட்ட பத்திரிகை அலுவலகம் முன் வெற்றி பெருமிதத்தில் வெள்ளையர் கூட்டம்.

அலெக்ஸ் மான்லியைத் தூக்கிலிட பெரும் வெள்ளையர் கூட்டம் ஒன்று அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டது. அலெக்ஸ் மான்லி வில்மிங்டனில் இருந்து அவரது சகோதரனுடன் தப்பிச் சென்றுவிட்டார். அதனால் உயிர் தப்பினர். ஆனால், அவரது பத்திரிக்கை அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது. நகரம் முழுவதும் கறுப்பினத்தவர்களின் கடைகளும் அலுவலகங்களும் சூறையாடப்பட்டன. எத்தனை கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு எந்தத் தரவுகளும் இல்லை. இருபதில் இருந்து, முன்னூறு பேர் வரைக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பலரும் அருகில் இருந்த காடுகளுக்குச் சென்று ஒளிந்து கொண்டார்கள்.

கலவரம் நடந்த அடுத்தச் சில நாட்களில் 2500 கறுப்பினத்தவர்கள் நகரை விட்டு வெளியேறினார்கள். வில்மிங்டன் வெள்ளையர்கள் பெரும்பான்மை நகரமானது. மீண்டும் ஜனநாயகக் கட்சி ஆட்சியைப் பிடித்தது.

0

வில்மிங்டனில் நிகழ்ந்தது ஒன்றும் விதிவிலக்கான கலவரம் அல்ல. கறுப்பினத்தவர்கள் தலையெடுக்க முயலும் போதெல்லாம் திரும்பத் திரும்ப நிகழ்ந்த நிகழ்வுதான் இது. ஆனாலும் கறுப்புத் தொழிலாளர்கள் சில வெற்றிகளையும் ருசிக்கவே செய்தார்கள்.

அட்லாண்டா நகரில் துணி துவைக்கும் சங்கம் ஒன்று இயங்கி வந்தது. ‘டோபி’ என்று அழைக்கப்பட்ட, துணி துவைத்துக் கொடுக்கும் பெண்கள் தொடங்கிய அந்தச் சங்கத்தில் இருந்தவர்களில் பெரும்பான்மையினர் கறுப்பினப் பெண்கள். மாதத்துக்கு 4-8 டாலர் சம்பாதித்துக் கொண்டிருந்த அவர்கள் வறுமையின் விளிம்பில் தங்களது வாழ்வை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

எனவே, தங்களது சம்பளத்தைக் கூட்டித் தரவேண்டும் என்று முதலில் கோரிக்கை வைத்துப் பார்த்தார்கள். பின் 1881ஆம் வருடம் ஜூலை மாதம் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தார்கள். நகரத்தில் இருந்த வெள்ளையர்கள் சம்பள உயர்வை வெகுவாக எதிர்த்தார்கள். நகரச் சபையும் வெள்ளையர்கள் கையில் இருந்ததால், அதன் மூலமாகத் துணி துவைப்பவர்களுக்குப் புதிதாக வரி விதிக்கப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

வேலைநிறுத்தம் செய்த பெண்கள், கறுப்பினத்தவர்களின் தேவாலயங்களில் கூடி, தங்களது வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்தார்கள். அவர்கள் மீது பொய் வழக்குப் போடப்பட்டது. ஒரு பெண்மணி சிறைக்கும் அனுப்பப்பட்டார். ஆனாலும் அவர்களின் உறுதி மாறவில்லை.

இரண்டு மாதங்கள் தொடர்ந்த வேலைநிறுத்தத்தின் இறுதியில் நகரச் சபை சம்பளத்தை உயர்த்த ஒப்புக் கொண்டது. ஆனாலும் அனைத்துப் பெண்களும் சம்பள உயர்வு பெறவில்லை. இருந்தாலும், இதுவே தென் மாநிலங்களில் (அப்போது) நடந்த பெரிய வேலைநிறுத்தமாகும்.

இந்தக் காலகட்டம் அமெரிக்க வரலாற்றில் தொழிலாளர்கள் முதல் முறையாக ஒன்றாக இணைய ஆரம்பித்த காலகட்டமாகும். சோஷலிச கொள்கைகள் ஐரோப்பாவில் இருந்து பரவ ஆரம்பித்த நாட்கள். நிகழ்ந்து கொண்டிருந்த தொழிற்புரட்சியின் காரணமாக வேலைக்குச் செல்வதற்காகப் புதிதாக நகரங்களுக்குக் குடிபெயர்ந்திருந்த தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள்.

எட்டு மணி நேர வேலை நேரம் வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தியது 1886ஆம் வருடத்தில்தான். சிகாகோ நகரில் ஹேமார்க்கெட் என்ற இடத்தில் நடத்த போராட்டத்தின்போது, காவலர்களுடன் நடந்த மோதலில் போராட்டக்காரர்களும் காவலர்களும் உயிரிழந்தார்கள். அதன் நினைவாகவே மே 1 இன்றும் தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. எனவே அது தொழிற்சங்கங்கள் வேகமாக வளர்ந்து வந்த காலக்கட்டம் என்பதில் சந்தேகமில்லை.

ஆனாலும் இந்தத் தொழிற்சங்கங்களும் கறுப்பினத்தவர்களை உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ள மறுத்தன. வர்க்கம் மட்டுமல்ல, மனிதர்களை நிறமும் கூடப் பிரிக்கும் என்று அமெரிக்கத் தொழிற்சங்கங்கள் நினைத்தன. எனவே 1886ஆம் ஆண்டுக் கறுப்பு விவசாயிகளின் நலனைக் காக்க, கறுப்பு விவசாயிகள் கூட்டுறவுச் சங்கம், தேசிய கூட்டணி என்ற இரு அமைப்புகள் வெள்ளைப் பாதிரி ஒருவரால் தோற்றுவிக்கப்பட்டது.

தொழிற்சாலைகள் பெருகி வந்தாலும், பெரும்பாலான தென் மாநில மக்கள் நிலங்களை நம்பியே வாழ்ந்து வந்தார்கள். தோட்டங்களில் அடிமைகளாக இருந்து விடுதலை அடைந்தவர்கள், அதே தோட்டங்களில் நிலத்தை விளைச்சல் பங்கீட்டுக் குத்தகைக்கு எடுத்து வேலை செய்து வந்தார்கள். இந்த முறை கறுப்பினத்தவர்களை அடிமைகள் என்ற நிலையில் இருந்து சற்று உயரத்தில் மட்டுமே வைத்திருந்ததால், இதை வெள்ளை முதலாளிகளும் விரும்பினார்கள்.

பெரும்பாலான கறுப்பு விவசாயிகளுக்குப் படிப்பறிவு இல்லாததால், அவர்களைப் பெரும் கடன் சுமையில் வைத்திருப்பதன் மூலம் அவர்கள் வேறெங்கும் சென்றுவிடாமல் வெள்ளை முதலாளிகள் பார்த்துக் கொண்டனர். பயிருக்கான விலையை மாநிலமெங்கும் ஒன்றாகத் தீர்மானித்ததன் மூலமாக, கறுப்பு விவசாயிகள் எந்த விதத்திலும் மேம்பட்டுவிடாமலும் பார்த்துக் கொண்டிருந்தனர். விளைச்சலை எடை போடுவதில் இருந்து, எழுதி வைக்கப்படும் கணக்குகள் வரை அனைத்திலும் ஊழல் செய்து கறுப்பினத்தவர்களைக் கடனாளிகளாகவே வைத்திருந்தார்கள்.

இதைச் சமாளிக்கவே மேற்கூறிய விவசாயிகள் கூட்டுறவுச் சங்கம் உருவாக்கப்பட்டது. பயிர் விலையைக் கூட்டிக் கொடுக்க வேண்டும் என்று 1891ஆம் ஆண்டு வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இன்னமும் தங்களது முதலாளிகளுக்கு அஞ்சிக் கொண்டிருந்த விவசாயிகள், பெரிதாக ஆதரவு தரவில்லை என்றாலும், ஆதரவு கொடுத்த இடங்களில் வெள்ளையர்களின் வன்முறை மிதமிஞ்சியதாக இருந்தது. அர்கன்சாஸ் மாநிலத்தில் வேலை நிறுத்தம் செய்த பத்து விவசாயிகள் மரங்களில் தூக்கிலடப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.

அது போலவே 1887இல் லூசியானாவில் கரும்பு விவசாயிகளின் போராட்டமும் வன்முறையில் முடிந்தது. கரும்புத் தோட்ட முதலாளிகள் கூட்டமைப்பு லூசியானா மாநில கருப்பு உற்பத்தியையும் விலையையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. கரும்பு விலை சந்தையில் குறைந்தால், வேலையாட்களின் சம்பளமும் குறைக்கப்பட்டது. (கரும்பு விலை அதிகரித்தால், சம்பளம் அதிகரிக்கப்படவில்லை) . தொழிலாளர்களுக்குச் சம்பளமாகப் பணத்துக்குப் பதிலாகச் சிட்டைகள் கொடுக்கப்பட்டன. அவை அந்தத் தோட்டக் கடைகளில் மட்டுமே செல்லுபடியாகும். இதன் மூலமும் முதலாளிகள் லாபம் பார்த்தனர்.

இவற்றை எதிர்த்து தோட்ட தொழிலாளர்கள் – கறுப்பினத்தவர்களும், சில வெள்ளையர்களும் – புதிதாகச் சங்கம் அமைத்து வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். மூன்று வாரங்கள் நடந்த வேலை நிறுத்தத்தை வெள்ளை முதலாளிகள் அரசியல்வாதிகளின் உதவியுடன் துப்பாக்கி முனையில் உடைத்தனர். 50 தொழிலாளிகளுக்கும் மேல் பலியானார்கள்.

0

சில நேரங்களில் கறுப்பினத்தவர்களும் வெள்ளையர்களும் ஒன்றாக இணைந்து போராடியதும் நிகழ்ந்தது. ஆனால் இது மிகவும் அரிதாகவே நடந்தது.

1892ஆம் வருடம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் பத்து மணி நேர வேலையை வலியுறுத்தியும், கூடுதல் நேரத்துக்கு அதிகச் சம்பளம் வேண்டியும் வேலைநிறுத்தம் நடைபெற்றது. பல்வேறு வேலைகள் பார்த்து வந்த தொழிலாளர்களும் தங்களது சங்கங்களை இணைத்து ஒன்றாகப் போராட முன்வந்தார்கள்.

நியூ ஆர்லியன்ஸ் துறைமுகங்களில் வேலை செய்து வந்த பாரம் சுமப்பவர்கள், சிப்பங்கட்டுபவர்கள் போன்றவர்களின் சங்கங்கள் ஏற்கெனவே கறுப்பினத்தவர்களைத் தங்களது சங்கங்களின் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டிருந்தன. எனவே நகரின் 50க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஒன்றாகப் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்தன.

1892ஆம் வருடம் அக்டோபர் மாதம் ஆரம்பித்த வேலை நிறுத்தத்தை உடைக்க வெள்ளை முதலாளிகளும், பத்திரிக்கைகளும், அரசாங்கமும் போட்டிப் போட்டுக் கொண்டு வேலை செய்தன. எப்படியாவது வன்முறையைத் தூண்டி தொழிலாளர்களைப் பிரித்துவிட முயன்றன. இரண்டு மாதங்கள் நடந்த வேலை நிறுத்தத்தில் எந்த வன்முறையும் நிகழவில்லை. தொழிலாளர்கள் பத்திரிக்கைகளின் வதந்திகளை நம்பவில்லை. இறுதியில் வர்த்தகர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தித் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது.

இரண்டு இனத்தவர்களும் ஒன்றாக இணைந்த இந்தப் போராட்டம் பெரும் வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. ஆனால், மீண்டும் அது போன்ற நிகழ்வு நடக்கவில்லை என்பதே உண்மை.

0

கறுப்பினத்தவர்கள் தொழிலாளர்களாகவும் மனிதர்களாகவும் ஒன்றிணைந்து போராடுவதன் பயனை மெதுவாக உணர ஆரம்பித்திருந்தார்கள். அவர்களிடையே ஏற்பட்ட பல உயிர்பலிகளுக்கு மத்தியில் மெதுவாக எழுந்து கொண்டிருந்த நடுத்தர வர்க்க மக்கள், தங்களது உரிமைகளைக் கேட்க வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தார்கள். தாங்கள் இருந்த நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டே அவற்றை மாற்ற வேண்டும் என்றும் நினைத்தார்கள்.

ஆனால் இன்னும் பலர், தென் மாநிலங்களின் வன்முறையையும், அங்கு நிலவிய பாகுபாடுகளையும் தினமும் அனுபவிக்க விரும்பாமல் அங்கிருந்து சென்றுவிட நினைத்தார்கள். அவர்களில் சிலர் அப்படியே செய்யவும் செய்தார்கள். அவர்களின் கதை அடுத்து.

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *