Skip to content
Home » கறுப்பு அமெரிக்கா #18 – பெண்கள் இயக்கம்

கறுப்பு அமெரிக்கா #18 – பெண்கள் இயக்கம்

கறுப்பு அமெரிக்கா

‘ஒழுக்கத்துக்கு நிறம் இல்லை.’ – ஐடா வெல்ஸ்

Intersectionality என்ற வார்த்தை இன்றைய ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையைச் சரியாகப் புரிந்து கொள்ள உபயோகப்படுகிறது. அதாவது கறுப்பின ஆண் ஒருவர் ஒடுக்கப்படும்போது, அவரது நிறம் மட்டுமே அவருக்கு எதிராக இருக்கிறது. அதுவே கறுப்பினப் பெண் ஒருவர் ஒடுக்கப்படும்போது, நிறம் மட்டுமல்லாமல், அவர் ஒரு பெண் என்பதும்கூட காரணமாக இருக்கிறது. எனவே பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறையும் அநீதியும் ஆண்களைவிட ஒரு மடங்கு அதிகம். ‘ஜிம் கிரோ’ சட்டங்களால் இருள் சூழ்ந்திருந்த கறுப்பினத்தவர்களின் வரலாற்றில் பெண்களும் இத்தகைய வன்முறையை எதிர்கொண்டார்கள்.

அமெரிக்காவின் வரலாற்றில் கறுப்புப் பெண்கள் அடிமைமுறை வழக்கத்தில் இருந்த காலத்தில் இருந்தே நிழலாகவே வாழ்ந்து வந்தார்கள். அடிமைகளாக இருந்த கறுப்பு ஆண்களின் உழைப்பும், உரிமைகளும் சுரண்டப்பட்டன என்றால், பெண்களுக்கு அவர்களது உடலும் சுரண்டப்பட்டது. இதற்கு யாரும் விதிவிலக்காக இல்லை.

அமெரிக்காவின் மூன்றாவது குடியரசுத் தலைவராக இருந்த தாமஸ் ஜெபர்சன், அவரது விர்ஜினியாத் தோட்டத்தில் வேலை செய்த சாலி ஹெம்மிங்ஸ் என்னும் அடிமைப் பெண்ணுடன் சேர்ந்து ஆறு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார். அந்தக் குழந்தைகள் வன்புணர்வின் காரணமாகப் பிறந்தவர்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. என்றாலும், அதிகாரத்தில் இருக்கும் ஆண், தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்ணைப் பாலியல் ரீதியாகத் துன்பப்படுத்துவது காலகாலமாக நடந்து வருவதுதான். அப்படியே இது காதல் என்று வகைப்படுத்தப்பட்டாலும், இந்தக் குழந்தைகளை அவர் எப்போதும் அங்கீகரிக்கவில்லை.

குடியரசுத் தலைவர் வீட்டிலேயே இப்படி என்றால், மற்றத் தோட்டங்களில் என்ன நடந்திருக்கும் என்று சொல்லவே தேவையில்லை. கறுப்பினப் பெண் அடிமைகள், தோட்ட முதலாளிகள், மேற்பார்வையாளர்கள் எனப் பலராலும் பாலியல் ரீதியாக ஒடுக்கப்பட்டார்கள்.

இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், கறுப்பினப் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதே இல்லை என்று வெள்ளையர்களின் உலகம் நம்ப விரும்பியது. அதாவது, அவர்கள் மிகவும் கவர்ச்சிகரமாகவும், ஆண்களை மயக்கும் விதத்திலும் இருப்பதால், தவறு அவர்கள் மீதே என்று கட்டமைக்கப்பட்டது. பைபிளில் வரும் ஒழுக்கம் தவறிய ஜெசபெல் (Jezabel) என்ற ராணியைப் போலவே கறுப்புப் பெண்கள் கட்டமைக்கப்பட்டார்கள். எனவே அவர்கள் வன்புணரப்படுவதில்லை. அவர்களே அதைத்தான் விரும்பினார்கள் என்ற வெள்ளையர்களின் குற்றங்களுக்கு வண்ணம் பூசப்பட்டன.

இதற்கு நேரெதிராக, வெள்ளையினப் பெண்கள் ஒழுக்கத்தின் வடிவம் என்றும், மிகவும் தூய்மையானவர்கள் என்றும், எதுவும் அறியாதவர்கள் என்றும் கட்டமைக்கப்பட்டது. எனவே கறுப்பின ஆண்கள் எப்போதும் அவர்களை அந்தத் தூய்மையான நிலையில் இருந்து கீழே தள்ள, பாலியல் ரீதியாகவே அவர்களை அணுகுகிறார்கள் என்றும் கட்டமைக்கப்பட்டது. அதனாலேயே கறுப்பின ஆண்கள், வெள்ளையினப் பெண்களை ஏறெடுத்துப் பார்ப்பதும் வன்புணர்வுக் குற்றமாகக் கருதப்பட்டது. இத்தகைய சிந்தனையின் கீழ்மை குறித்து நாம் இங்கே விவாதிக்கப் போவதில்லை. ஆனால் இத்தகைய மனநிலை கறுப்பினப் பெண்களின் மீது அவிழ்த்து விடப்பட்ட வன்முறையையும், அதற்கு எதிரான அவர்களின் எதிர்வினையையும் நாம் பார்க்க போகிறோம்.

0

ஜோசஃபின் செயின்ட் பியர், மாசாச்சூசெட்ஸ் மாநிலத்தில் சுதந்திரமாகப் பிறந்த கறுப்பினப் பெண். அடிமைகள் இல்லாத மாநிலமான அங்கே பிறந்திருந்தாலும் அவர் ஆரம்பத்தில் இருந்தே கறுப்பினத்தவர்களுக்கு, குறிப்பாகக் கறுப்பினப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டு கோபம் கொண்டார்.

உள்நாட்டுப்போர் முடிந்தவுடன், கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது என்று பார்த்தோம். ஆனால், வெள்ளையினப் பெண்களைப் போலவே, கறுப்பினத்தவர்களிலும் பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது. கறுப்பினப் பெண்களின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்றால், அவர்களுக்கு வாக்குரிமை அவசியம் என்று கருதிய ஜோசஃபின் அதையே தன்னுடைய முக்கியமான இலக்காகக் கருதினார்.

1886இல் அவர் கறுப்பினப் பெண்களுக்கான முதல் பத்திரிகையைத் துவக்கினார். அத்தோடு கறுப்பினப் பெண்களை ஒன்று திரட்டி, புது யுகச் சங்கம் (New era club) என்ற ஒன்றையும் ஆரம்பித்தார். 1880களில் இது போன்ற சங்கங்கள் வடமாநிலங்கள் முழுவதும் ஆரம்பிக்கப்பட்டன. கறுப்பினப் பெண்களின் உரிமை, வாக்குரிமை எனப் பல்வேறு நோக்கங்களோடு இந்தச் சங்கங்கள் தோன்றின.

முதலில் இருந்தே ஜோசஃபின் இந்தச் சங்கங்களை ஒன்றாக இணைக்க முயன்றார். இதை முன்னிட்டு பல மாநாடுகளையும் நடத்தினர். 1896ஆம் வருடம் 40க்கும் மேற்பட்ட சங்கங்களை இணைத்துக் கறுப்பினப் பெண்கள் சங்கங்களின் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒன்றை ஆரம்பித்தார். அதன் மூலமே கறுப்பினப் பெண்களுக்கான முதல் பத்திரிகையையும் பதிப்பிக்க ஆரம்பித்தார். அதில் கறுப்பினப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை விரிவாக எழுதி நாடெங்கும் கொண்டு சேர்த்தார்.

0

ஐடா வெல்ஸ் பற்றி ஏற்கெனவே நாம் பார்த்திருக்கிறோம். அவர் மெம்பிசில் இருந்து வெளியேறியவுடன் நியூ யார்க் நகரில் பத்திரிகை ஒன்றில் கட்டுரையாளராகச் சேர்ந்தார். வெள்ளையர்கள் தென் மாநிலங்களில் எந்தப் பயமுமின்றி நடத்தும் கொலைகளை நாடெங்கும் எடுத்துச் செல்வதே அவரது வாழ்வின் குறிக்கோளானது. அதை முன்னிட்டு தனியார் துப்பறிவாளர்களை வைத்துத் தென் மாநிலங்களில் நடக்கும் ஒவ்வொரு கும்பல் கொலையையும் துப்பறிந்து, அதன் பின்னால் இருக்கும் நிற, இன வெறிக் காரணங்களை வெளிக்கொணர்ந்து தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். அவற்றைப் புத்தகமாகப் பதிப்பிக்கவும் செய்தார்.

இதன் மூலம் வடமாநில மக்களின் மனசாட்சியை எழுப்பவும், அரசியல்வாதிகளைச் செயல்பட வைக்கவும் முடியும் என்றும் கூட நம்பினார். அவரது முயற்சிகளுக்கு ஓரளவு வெள்ளையர்களிடையே ஆதரவு கிடைத்தாலும், அதை மீறிய மாற்றங்களைக் கொண்டு வர முடியவில்லை என்றே சொல்ல வேண்டும்.

0

ஜோசஃபின் இணைத்த சங்கங்களின் கூட்டமைப்பின் முதல் தலைவியான மேரி சர்ச் டெர்ரெல், வெள்ளையர்களின் கும்பல் கொலைகளைத் தீவிரமாக எதிர்த்தவர். இது குறித்து விரிவாக ஆராய்ந்து எழுதவும் செய்தார். வடமாநில வெள்ளையர்கள் இந்தக் கொலைகளைப் போதுமான அளவிற்கு எதிர்க்கவில்லை என்று நினைத்த அவர், இந்தக் கொலைகளின் அநீதியைச் சான்றுகளுடன் எழுதினார்.

கறுப்பினப் பெண்கள் இந்தக் கொலைகளை எதிர்த்ததற்கான காரணங்கள் நிறையவே இருந்தன. கறுப்பினப் பெண்களையும், ஆண்களையும் தொடர்ந்து குற்றவாளிகளாகக் கட்டமைப்பதை மாற்றினால் மட்டுமே அவர்களது உரிமைப் போராட்டத்திற்குத் தேவையான ஆதரவைப் பெற முடியும் என்பது ஒன்று. இன்னொறு விஷயம், கும்பல் கொலைகளில் ஆண்கள் மட்டுமே கொல்லப்படுவதில்லை. பெண்களும் அதிகளவில் கொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

1918ஆம் வருடம் ஒரு வெள்ளையர் கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் நடந்த 13 தொடர் கொலைகளில் மேரி டர்னர் என்ற பெண்ணும் ஒருவர். தன்னுடைய கணவனைக் கொன்றவர்கள் மீது வழக்குத் தொடுப்பேன் என்று சொன்னதற்காக, எட்டு மாதக் கர்ப்பிணியான அவரை வெள்ளையர் கும்பல் ஒன்று தூக்கிச் சென்று, பாலம் ஒன்றில் தலைகீழாகத் தொங்கவிட்டு, அவரது வயிற்றைக் கிழித்து எடுத்து, குழந்தையை மிதித்துக் கொன்றது. நூற்றுக்கணக்கான தோட்டாக்களால் அவரது உடலைச் சின்னா பின்னமாக்கிவிட்டு, நெருப்பிலிட்டு எரித்துக் கொன்றது. இது போன்ற கொடூரமான சம்பவங்கள் தொடர்கதையாக இருந்ததனால், அவற்றைத் தொடர்ந்து எதிர்ப்பதும் அவசியமாகவே இருந்தது.

1909ஆம் வருடம் கறுப்பினத்தவரின் முன்னேற்றத்திற்கான தேசிய சங்கம் (NAACP) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதை முதலில் உருவாக்கிய உறுப்பினர்களில் இரண்டு பெண்களும் அடக்கம் – ஐடா வெல்ஸ், மேரி சர்ச் ஆகியோரே அவர்கள்.

0

கறுப்பினத்தவர்களின் முன்னேற்றத்திற்குக் கல்வியின் இன்றியாமையை அவர்களது தலைவர்கள் அறிந்தே இருந்தார்கள். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தென் மாநிலங்களில் கறுப்பினத்தவர்களுக்குக் கல்வியைக் கொடுப்பதைத் தடுப்பதற்குப் பல விதங்களிலும் சட்டங்கள் இருந்தன. கறுப்பினத்தவர்களின் பள்ளிகளுக்கு அரசாங்கத்தின் ஆதரவு இல்லாமல் இருந்தது. அங்கே கல்வி கற்பிக்கவும் ஆசிரியர்கள் வெகு சிலரே முன்வந்தனர். எனவே அந்தச் சூழலை மாற்ற வேண்டிய அவசியம் இருந்தது.

சார்லெட் ஹாக்கின்ஸ் பிரவுன் வடக்குக் கரோலினா மாநிலத்தில் பிறந்தவர். மிகுந்தச் சிரமத்துடன் கல்வி கற்ற அவர், அதே மாநிலத்தில் ஆசிரியையாக 1901ஆம் வருடம் வந்து சேர்ந்தார். அமெரிக்கன் மிஷன் நடத்திக் கொண்டிருந்த கறுப்பினக் குழந்தைகளுக்கான அந்தப் பள்ளி மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

அவர் ஆசிரியையாகச் சேர்ந்த ஒரே வருடத்தில் அந்தப் பள்ளியை மூடிவிட அமெரிக்கன் மிஷன் முடிவு செய்தது. ஆனால், சார்லெட் அப்படியே விட்டுவிடத் தயாராக இல்லை. அருகிலேயே இருந்த ஒரு கருமான் பட்டறையைப் பள்ளியாக மாற்றி நடத்த ஆரம்பித்தார்.

இப்படி எளிமையாக ஆரம்பிக்கப்பட்ட பள்ளிக்காகத் தொடர்ந்து நிதி சேகரித்து, அங்கேயே 200 ஏக்கர் நிலத்தை வாங்கி, இரண்டு கட்டடங்களையும் கட்டி 1902ஆம் வருடம் தன்னுடைய பால்மர் பள்ளியை ஆரம்பித்தார். கறுப்பினக் குழந்தைகளுக்கு மட்டுமே நடத்தப்பட்ட அந்தப் பள்ளியில், அந்தக் குழந்தைகள் அங்கேயே தங்கிப் படிக்கவும் வசதி செய்யப்பட்டிருந்தது. அந்தப் பள்ளி 1920க்குள் மிகப்பெரிய பள்ளியாகப் பரிணமித்திருந்தது. கறுப்பினக் குழந்தைகளைக் கல்லூரிக்கு அனுப்புவதே பள்ளியின் முக்கிய நோக்கமாக இருந்தது.

அந்த நேரத்தில் கறுப்பினத்தவர்களுக்குத் தொழிற்கல்வி கற்றுக் கொடுப்பதே சிறந்தது என்று வெள்ளையர்களிடையே பொதுவாக ஒரு கருத்து இருந்தது. ஆனால் சார்லெட் இதை வெகுவாக எதிர்த்தார். தொழிற்கல்வியின் மூலமாகத் தலைவர்களை உருவாக்க முடியாது என்பதே அவரது கருத்தாக இருந்தது. கறுப்பினத்தவர்களைத் தொடர்ந்து சமூகத்தின் வேலையாட்களாக வைத்திருக்க மட்டுமே தொழிற்கல்வி உதவும் என்பது அவரது நம்பிக்கையாக இருந்தது. கலை, அறிவியல் துறைகளைக் கற்றுத் தேறுவதன் மூலமே அவர்கள் சமூகத்தின் படிநிலையில் மேலே செல்ல முடியும் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். இதையே தொடர்ந்து தன்னுடைய எழுத்துக்களில் வலியுறுத்தி வந்தார். அத்தோடு நின்றுவிடாமல் தன்னுடைய பள்ளி மாணவர்களையும் அந்தத் துறைகளிலேயே படிப்பதற்குத் தயார் செய்தார்.

மேரி பெத்துனும் அது போலவே கறுப்பினச் சிறுமிகளுக்குக் கல்வி கொடுப்பதைத் தன்னுடைய வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்தாலும், அவரது வாழ்வின் பாதை வேறாக இருந்தது. 1904ஆம் வருடம் ஃபுளோரிடா மாநிலத்தின் டேடோனா நகரில் அவர் தனது சிறிய பள்ளியை ஆரம்பித்தார். கறுப்பினப் பெண் குழந்தைகளுக்குக் கல்வியும், ஏதேனும் ஒரு தொழிற்பயிற்சியும் கொடுப்பதை அங்கே முதன்மை குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.

ஆனால், இப்படியாகக் கறுப்பினத்தவர்கள் தங்களுடைய வழியில் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வது மட்டுமே போதுமானதல்ல என்பது அவரது கருத்தாக இருந்தது. அவர்கள் தங்களது போராட்டத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. அதற்காகவே புதிதாகத் தேசிய கறுப்பினத்தவர்கள் குழு ஒன்றை 1935ஆம் வருடம் உருவாக்கினார். பிராங்கிளின் ரூசுவெல்ட்டின் அரசாங்கத்தில் கறுப்பினத்தவர்களுக்கான புதிய துறை தொடங்கப்பட்டபொழுது, அதன் தலைவராக மேரி நியமிக்கப்பட்டார். அந்தத் துறையின் மூலம் ஒன்றிய அரசில் கறுப்பினத்தவர்களின் பங்கை அதிகரிப்பதற்குத் தேவையான அனைத்தையும் செய்தார். ஜோசஃபினின் உதாரணத்தைப் பின்பற்றி இவரும் கறுப்பினப் பெண்களுக்கென ஒரு பத்திரிகையும் நடத்தி வந்தார்.

0

வன்புணர்வுச் சட்டங்கள் இந்த நேரத்தில் இனத்தைக் குறிப்பிட்டே இருந்தன. அதாவது வெள்ளையினப் பெண்கள் வன்புணரப்பட்டால் மட்டுமே சட்டப்படி அது வன்புணர்வாகக் கருதப்பட்டது. கறுப்பினப் பெண்களுக்கு அவர்கள் இன ஆண்களிடமிருந்தோ, வெள்ளையின ஆண்களிடமிருந்தோ எந்தப் பாதுகாப்பும் இல்லை. உதாரணத்துக்குப் பத்து வயது கறுப்பினச் சிறுமி ஒருத்தியை வன்புணர்ந்து விட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கறுப்பின ஆண் ஒருவர், கறுப்பினத்தவர்களிடையே உடலுறவில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று காரணம் காட்டப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

1890களில் தோன்றிய பெண்கள் இயக்கங்கள் இத்தகைய சட்டங்களை மாற்ற வேண்டியே போராடிக் கொண்டிருந்தன. 1866ஆம் வருடம் மெம்பிஸ் இனக்கலவரம் பற்றி விசாரித்த குழுவிடம் முதல் முறையாகக் கறுப்பினப் பெண்கள் தங்களுக்குப் பாலியில் ரீதியாக இழைக்கப்படும் கொடுமைகளைத் விவரித்தனர். இது குறித்துக் காங்கிரஸ் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இவையும் இடம்பெற்றிருந்தன.

ஆனால் போராட்டங்கள் தொடர்ந்தனவே தவிர, பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனால் தங்களது சமூகத்துக்குள் அவர்கள் மாற்றங்களைக் கொண்டு வர எடுத்த முயற்சிகள் ஓரளவிற்கு வெற்றி பெற்றன என்றே சொல்லலாம். NAACP போன்ற இயக்கங்களில் பெண்களும் உறுப்பினர்களாக இருந்ததால், அவர்கள் அங்கும் தங்களது பிரச்சினைகளை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அவற்றின் மூலமாக ஓரளவுக்குக் கறுப்பின ஆண்களின் நடத்தையில் மாற்றம் கொண்டு வர முடிந்தது எனலாம். ஆனால் இவை எல்லாம் எந்தவிதச் சட்டப் பாதுகாப்பும் இன்றியே அவர்கள் செய்ய வேண்டியிருந்தது.

பதிமூன்றாம், பதினான்காம் சட்டத் திருத்தங்கள் ஓரளவுக்குத் தங்களது உடலுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதாகவும் சில வழக்குகளில் வாதிடப்பட்டது. ஆனால் அவர்கள் சமமான நீதி வழங்கப்பட இன்னமும் அரை நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

0

சில பெண்கள் தங்களைப் பொருளாதாரத்தில் மேம்படுத்திக் கொள்வதன் மூலமாகத் தங்களது இனத்திற்கு நன்மை செய்ய முடியும் என்று நம்பினார்கள்.

சாரா பிரீட்லவ் அது போன்ற ஒரு பெண்மணி. மிகவும் ஏழ்மையில் லூசியானா மாநிலத்தில் பிறந்த அவர், பல்வேறு இடங்களில் சிறிய வேலைகளைச் செய்து தன்னுடைய வாழ்வை நடத்தி வந்தார். 1905ஆம் வருடம் லூசியானா மாநிலத்தில் அவர் நகரில் நடந்த பொருட்காட்சி ஒன்றில் தலைமுடியை வளர்க்கும் தைலம் ஒன்றை விற்கும் விற்பனைப் பிரதிநிதியாக இருந்தார். கறுப்பினப் பெண்கள் சத்தான உணவு இல்லாமை, அசுத்தமான சூழல் போன்றவற்றால் பலவித நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். தலை முடி உதிர்தல், பேன் போன்றவை அவர்களிடம் சாதாரணமாக இருந்தன. இதற்கு அவர்களுக்கு என்று சரியான மருந்துகளோ, தைலங்களோ இல்லை. சாரா இதைத் தனக்குக் கிடைத்த வாய்ப்பாகப் பார்த்தார்.

பல்வேறு சிரமங்களுக்கிடையே 1910இல் இந்தியானா மாநிலத்தில் தன்னுடைய தொழிற்சாலையைத் தொடங்கிக் கறுப்பினப் பெண்களுக்கு என்று பிரத்தியேகமான தைலங்கள், குளியல் சோப், பலவித அழகுச் சாதனப் பொருட்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். கறுப்பினப் பெண்களிடையே பெரும் புகழைப் பெற்ற இவரது பொருட்கள், சாராவைப் பெரும் பணக்காரராகவும் மாற்றியது. சி.ஜே.வாக்கர் என்ற பெயரில் அவர் தன்னுடைய பொருட்களை விற்றார். அதுவே அவரது பெயராகவும் மாறியது.

மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட அவர், கறுப்பினத்தவர்களுக்கான வணிகர் சங்க மாநாட்டில் ‘நான் தெற்கில் பருத்தித் தோட்டங்களில் என் வாழ்வை ஆரம்பித்தேன். அங்கிருந்து குளியல் தொட்டியைக் கழுவும் வேலைக்கு முன்னேறினேன். அங்கிருந்து அடுப்படியில் உதவியாளாக இருந்தேன். அங்கிருந்து என்னுடைய சுய முயற்சியால் தலைமுடி பராமரிக்கும் பொருட்களை விற்கும் தொழிலை ஆரம்பித்தேன். இப்போது என்னுடைய சொந்த நிலத்தில், என்னுடைய சொந்தத் தொழிற்சாலை இருக்கிறது’ என்று உரையாற்றினார்.

ஆனால் வெறும் முதலாளியாக மாறுவது மட்டுமே அவரது எண்ணமாக இல்லை. நியூ யார்க்கில் இருந்த அவரது வீடு கறுப்பினப் போராளிகளின் மையமாக இருந்தது. ‘கறுப்பினத்தவர்களின் முன்னேற்றத்திற்கான தேசிய இயக்கத்திற்கு’ (NAACP) பெருமளவில் தன்னுடைய செல்வத்தைக் கொடுத்து வந்தார். அந்த இயக்கத்தின் பொறுப்பிலும் இருந்த அவர், தெற்கில் நடந்து கொண்டிருந்த கொலைகளை எதிர்த்து நடத்தப்பட்ட பல போராட்டங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். கறுப்பினத்தவர்களுக்காகத் தென் மாநிலங்களில் நடத்தப்பட்ட பள்ளிகளுக்கும், கறுப்பின கலைஞர்களுக்கும் அவரது உதவி எப்போதும் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

0

இவ்வாறாகப் பலவிதங்களிலும் பெண்கள் தங்களது பங்கைக் கொடுத்துக் கொண்டிருந்தாலும், பெரும்பாலான பெண்கள் தென்மாநிலங்களில் பலவிதமான கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது உழைப்பும் வாழ்வும் அந்தக் கொடுமைகளுக்கிடையே தங்களது குடும்பத்தை ஒன்றாகவும், உயிருடனும் வைத்திருப்பதிலேயே இருந்தது. ஆனால், காலம் மாறிக் கொண்டிருந்தது. 1930களின் இறுதியில் கறுப்பினப் பெண்கள் பெருமளவில் தொழிலாளர்களாக உழைக்க ஆரம்பித்திருந்தார்கள். அவர்களே கறுப்பினத்தவர்களின் உரிமைப் போராட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் முன்னணியில் இருந்தார்கள்.

(தொடரும்)

படம்: கறுப்பினப் பெண்கள் சங்க நிர்வாகிகள். 1899

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *