1929ஆம் வருடம் பில்லி ஹாலிடே (Billie Holiday) என்ற 14 வயது இளம் பெண், அவளது தாயாருடன் ஹார்லெமுக்கு வந்திருந்தாள். அதுவரை விபச்சார விடுதி ஒன்றில் சுத்தம் செய்யும் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவள், புதிதாக ஜாஸ் இசையைக் கண்டறிந்திருந்தாள். எனவே ஹார்லெமில் இருந்த பல இரவு உணவு விடுதிகளிலும் பாடுவதற்கு வாய்ப்புக் கேட்டு அலைந்தாள். ஒரு சிறு உணவு விடுதியில் அவளுக்குப் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. மகிழ்ச்சியுடன் அவள் பாட ஆரம்பித்தாள். அவளது பாடல்கள் தொடர்ச்சியாக ரெகார்டுகளாக ஆயிரக்கணக்கில் விற்றன. 1939ஆம் வருடம் அவளது மிகப் பிரபலமான ‘வினோதப் பழம்’ (Strange Fruit) என்ற பாடல் வெளியானது.
‘தெற்கில் மரங்களில் வினோதப் பழம் காய்க்கிறது.
இலைகளிலும் வேர்களிலும் ரத்தத்தோடு.
தெற்கில் வீசும் காற்றில் கறுப்பு உடல் ஆடிக் கொண்டிருக்கிறது.
பாப்லர் மரங்களில் வினோதப் பழம் தொங்குகிறது’
அந்தப் பாடல், தெற்கில் தொடர்கதையாக இருந்த கும்பல் கொலைகளைப் பதிவு செய்தது. தன்னுடைய 24ம் வயதில் முதலில் பில்லி ஹாலிடே இந்தப் பாடலைப் பாடினார். அப்போது தன் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று அஞ்சியதாகப் பின்னாட்களில் அவர் தெரிவித்தார். மாறாக, இந்தப் பாடல் மாறிக் கொண்டிருந்த உலகின் புதிய தலைமுறை ஒன்றை மெதுவாகத் தட்டி எழுப்பியது.
0
ஜாஸ் இசை எப்போதுமே கலகத்தின் இசையாகவே இருந்திருக்கிறது. முழுக்க, முழுக்க கறுப்பினத்தவரின் இசையான ஜாஸின் வரலாறு, கறுப்பினத்தவரின் வரலாற்றைப் போலவே மிகவும் வேகமானது.
கறுப்பினத்தவர்கள் அடிமைகளாக மேற்கு ஆப்ரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்டபோது, அவர்கள் தங்களது இசையையும் சேர்த்தே கொண்டு வந்தார்கள். மேற்காப்பிரிக்க இசை வேகமானது. அது, டிரம்ஸ் போன்ற கருவிகளோடு, வேகமாகக் கேள்வி-பதில்களைக் கொண்ட வரிகளோடு திரும்பப் திரும்ப பாடப்படும் இசை. அவர்கள் அடிமைகளாக மேற்கிந்திய, அமெரிக்கக் கரைகளுக்குக் கொண்டு வரப்பட்டபொழுது, புதிதாகப் பல இசை வடிவங்களைக் கண்டனர். அவற்றுடன் தங்களது இசையையும் சேர்த்துப் புதிய இசை வடிவங்களை உருவாக்கினர்.
அடிமைகள் இசை வாசிப்பதையோ, பாடுவதையோ முதலாளிகள் விரும்பவில்லை. ஆனாலும் தோட்டங்களில் அடிமைகள் வசித்த இடங்களில் ரகசியமாக இசை வாசிக்கப்பட்டது. தென் மாநிலங்களில் மிகவும் பரந்த நோக்குள்ள நகரமான நியூ ஆர்லியன்சில் வசித்தக் கறுப்பினத்தவர்கள் இடையே, அவர்களது மேற்காப்பிரிக்க இசையுடன், வெள்ளையர்களின் இசைவடிவங்களும் சேர்ந்து புதிதாக ‘ப்ளூஸ்’ (Blues) என்ற வடிவமாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோன்றியது.
அடிமைகளாக இருந்தபோது அவர்கள் வெள்ளையர்களின் இசையைத் தேவாலயங்களிலேயே கேட்டிருந்தார்கள். எனவே ‘ப்ளூஸ்’ இசை தேவாலய வழிபாட்டு இசையுடன், மேற்காப்பிரிக்க இசையும் கலந்த வடிவாகவே இருந்தது. இதுவே முதலில் அமெரிக்காவில் தோன்றிய கறுப்பினத்தவர்களின் இசை வடிவம். கறுப்பினத்தவர்கள் தங்களது தேவாலயங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் நிர்மாணிக்க ஆரம்பித்தபோது, அவர்கள் ப்ளூஸ் இசையை ‘காஸ்பல்’ இசை (Gospel) என்ற வடிவமாக மாற்றினார்கள். இன்றும் கறுப்பினத்தவர்களின் தேவாலய இசை, மற்ற அனைத்துக் கிறிஸ்துவ இசை வடிவங்களில் இருந்து மிகவும் வேறுபட்டது.
மறுகட்டமைப்பின் நாட்களில் ‘ப்ளூஸ்’ இசை இன்னமும் பல இசைக்கருவிகளோடு ‘ஜாஸ்’ இசையாகப் பரிணமித்தது. வெள்ளையர்களின் இசையோடு ஒப்பு நோக்கும்போது, ஜாசின் மிகப்பெரிய வித்தியாசம் அதன் தன்னிச்சையான வடிவம்தான். ஜாஸ், வெள்ளையர்களின் பாரம்பரிய இசையைப்போல இசைக்குறிப்புகளாக எழுதப்பட்டு அப்படியே வாசிக்கப்படுவதல்ல. மாறாக, சிறு குழுவான இசைக்கலைஞர்கள் – பொதுவாக ட்ரம்பெட், சாக்ஸ், ட்ரொம்போன், பியானோ, பாஸ், டிரம்ஸ், கிட்டார் வாசிப்பவர்கள் – தங்களது வாத்தியங்களைப் பொதுவான ஒரு பாடலின் தொனியில் இசைக்க ஆரம்பிப்பார்கள். அவர்களில் எவரும் தன்னிச்சையாக வாசிக்க ஆரம்பிக்கலாம். மற்றவர்கள் தங்களது வாத்தியங்களோடு அவரைத் தொடர்வார்கள். எனவே ஜாஸ் இசையை எளிதாக விவரித்துவிட முடியாது.
ஜாஸ் இசை மிகவும் வேகமானது. எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடியது. பாடல்களோடு சேர்ந்து கேட்கும்போது, ஒன்று நம் கண்களில் நீரைக் கொண்டுவரும் அல்லது எழுந்து நடனமாடச் செய்யும்.
ஆனால் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் இசையைப்போல ஜாஸும் கலகத்தின் இசையாகவே இருந்தது. தங்களை அனுமதிக்காத இடங்களுக்குத் தங்களது இசையின் மூலமாக அவர்கள் நுழைய உதவியது. அதன் பெரும் கலைஞர்கள் தங்களது பாடல்களை நிறபேதத்தை உடைக்கும் கருவியாகவும் பயன்படுத்தினார்கள்.
1920களின் ஆரம்பத்தில் ஜாஸ் இசை அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகத் தொடங்கியது. இரண்டு பெரும் இசைக்கலைஞர்கள் தங்களது இசையின் மூலமாக நிற, இன வேறுபாடின்றி அனைவரையும் கட்டிப்போட்டார்கள்.
நியூ ஆர்லியன்ஸ் நகரின் தெருக்களில் வளர்ந்த லூயிஸ் ஆர்ம்ஸ்ட்ராங் (Louis Armstrong), அந்தத் தெருக்களிலேயே இசையைக் கற்றுக்கொண்டு, சிகாகோ நகரின் இரவு விடுதிகளில் பாடி, பிரபலம் அடைந்தார். அதே நேரத்தில் ஹார்லெமின் விடுதிகளில் டூக் எல்லிங்டன்(Duke Ellington) தன்னுடைய இசையின் மூலமாக அனைவரையும் கட்டிப்போட ஆரம்பித்தார். டூக் எல்லிங்டன் கறுப்பினத்தவர்களின் வாழ்வை இசை வடிவமாக ‘ப்ளாக், வைட் & பெய்ஜ்’ என்ற பெயரில், சிம்பொனி போன்ற வடிவில் ஆனால் ஜாஸ் இசையில் வடிவமைத்தார். கறுப்பினத்தவர்களின் வரலாற்றைப் பேசும் இசையாக கருதப்பட்ட இது, டூக் எல்லிங்டனின் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்தக் காலகட்டத்தின் இன்னுமொரு இசை ஆளுமை, பெஸ்சி ஸ்மித் (Bessie Smith). டென்னிஸி மாநிலத்தில் பிறந்த இவர், ‘ப்ளூஸ் இசையின் அரசி’ என்று அழைக்கப்பட்டார். அவர் உருவாக்கிய பல ப்ளூஸ் இசை வடிவங்கள் இன்றும் இசைக் கலைஞர்களால் பல விதங்களில் எடுத்தாளப்படுகிறது.
ஹார்லெமில் ஆரம்பித்த இந்த இசை வெள்ளம், சீக்கிரமே அமெரிக்காவை ஆக்கிரமித்தது. ஜாஸ் இசையின் வேகமான வடிவம், அதுவரை இருந்த எந்த இசையையும் விட வேகமாக நடனமாடுவதற்கு ஏற்றதாக இருந்தது. 1920கள் அமெரிக்காவில் ‘கர்ஜிக்கும் இருபதுகள்’ (Roaring Twenties) என்றே அழைக்கப்படுகிறது. வேகமான நடனம், வேகமான இசை என்று ஒரு தலைமுறை தங்கள் வாழ்வை வேகமாக நவீனமாக்கிக் கொண்டது.
நியூ யார்க் நகரின் சவாய் ஹோட்டலின் நடன அறை, வெள்ளையர்களும் கறுப்பினத்தவரும் சேர்ந்து நடனமாடக்கூடிய இடங்களில் ஒன்று. 1920களில் ஜாஸ் இசையுடன், ‘ஸ்விங்’ என்னும் நடனமும் சேர்ந்து ஒவ்வொரு இரவும் அனைத்து இனத்தவரும் கூடும் இடமாக இருந்தது. அதுபோலவே, வெள்ளையர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட காட்டன் கிளப்பிலும், அதன் உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கறுப்பு ஜாஸ் குழுவினர் அனுமதிக்கப்பட்டார்கள். இசை நிறபேதங்களை ஓரளவிற்கேனும் தாண்டி வரச் செய்தது.
ஆனால் வெள்ளையர்கள், கறுப்பினத்தவர்களின் இசையை, கலாச்சாரத்தை ஒரு ‘புதுமையாகவே’ பார்த்தார்கள். அதனால் இசையைத் தாண்டி, உரிமைகளைப் பெற முடியவில்லை என்றே கூறலாம்.
0
‘காதல் கடலைப் போன்றது. அது அசைந்து கொண்டே இருந்தாலும், நிச்சலனமாகவும் இருக்கும். அதன் கரையைப் பொறுத்து அதன் வடிவம் மாறும். ஒவ்வொரு கரையும் வேறாக இருக்கும்’ – ஸோரா ஹர்ஸ்டன்.
ஹார்லெமின் இலக்கிய ஜாம்பவான்களில் சிலரை நாம் ஏற்கெனவே பார்த்துவிட்டோம். கிளாட் மக்கே, ஜேம்ஸ் வெல்டன், அலன் லாக் போன்றோரின் படைப்பாற்றல் உச்சத்தில் இருந்த காலகட்டம் இது. இப்போது இந்தக் காலகட்டத்தின் இரண்டு பெரும் படைப்பாளிகளைப் பற்றிப் பார்த்து விடுவோம்.
லாங்ஸ்டன் ஹயூஸ்(Langston Hughes) மிகவும் சிறுவயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டார். ஓரளவுக்கு வசதியான அவரது குடும்பம், அவரைப் பொறியியல் படிக்க நியூ யார்க் நகரின் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியது. ஆனால் லாங்ஸ்டன் அங்கு நிலவிய நிறப்பாகுபாடு பிடிக்காமல், ஒரே வருடத்தில் அங்கிருந்து வெளியேறினார். அங்கிருக்கும்போதே அவர் ஹார்லெம் பகுதியின் கலாச்சார மறுமலர்ச்சியைக் கண்டார். அதன் பின்னர் பல வேலைகள் செய்தாலும், பல நாடுகளுக்குச் சென்றாலும், ஹார்லெமைத் தன்னுடைய சொந்த இடமாக வரித்துக் கொண்டார்.
ஸோரா ஹர்ஸ்டன் (Zora Hurston) ஃபுளோரிடா மாநிலத்தில் வளர்ந்தவர். சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறினாலும், அவரது கல்வி ஆர்வம் அவரைக் கறுப்பினத்தவர்கள் பல்கலைக்கழகங்களை நோக்கிச் செலுத்தியது. மானுடவியலில் தன்னுடைய இணைப் பட்டபடிப்பை முடித்த அவரும் தன்னுடைய இளங்கலைப் பட்டபடிப்புக்காக 1925இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில், முழு உதவித்தொகையுடன், வகுப்பின் முதல் கறுப்பின மாணவியாக சேர்ந்தார். அங்கேயே அவருக்கு ஹயூசுடன் நட்பு ஏற்பட்டது.
1926ஆம் வருடம் ஹயூசுடன் சேர்ந்து அவர் ஹார்லெமில் ‘பையர்!!’ (Fire!!). என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். ஒரே ஒரு இதழ் மட்டுமே வெளிவந்த அந்தப் பத்திரிகை ஹார்லெமின் இலக்கிய நாட்களின் உச்சம் என்று கருதப்படுகிறது. அன்றைய பெரும் கறுப்பின இலக்கியக் கர்த்தாக்கள் அனைவரும் அதில் எழுதியிருந்தார்கள். ஆரோன் டக்ளஸ், ஹயூஸ், கவுண்டி கலென், ஸோரா என அனைவரின் படைப்புகளும் அதில் பதிப்பிக்கப்பட்டிருந்தது. அன்றைய காலகட்டத்துக்கு அந்தப் பத்திரிக்கை மிகவும் புரட்சிகரமானதாக இருந்தது. அதில் விபச்சாரம், ஓரினச் சேர்க்கை பற்றியெல்லாம் எழுதியிருந்த கதைகளும் கவிதைகளும் கறுப்பினத்தவர்கள் தங்களைப் பற்றி உலகுக்குக் காட்ட விரும்பிய பிம்பத்தில் இருந்து மிகவும் மாறுபட்டு இருந்ததால், கறுப்பினத்தவர்களிடையே பலவிதமான எதிர்ப்புகளை உண்டாக்கியது.
ஸோரா, அந்த இதழில் எழுதியிருந்த ‘வியர்வை’ என்ற சிறுகதை உழைக்கும் கறுப்பினப் பெண் ஒருத்தியின் கணவன், அவளை அடித்துத் துன்புறுத்துவதோடு, அவளது சம்பளத்தையும் பிடுங்கிக் கொள்வதைப் பேசியது. கறுப்பினப் பெண் ஒருத்தியை முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்ட அந்தக் கதை, கறுப்பினப் பெண்ணியத்தின் முதல் அடியாக பார்க்கப்படுகிறது. ஸோரா, கறுப்பினப் பெண்களின் குரலாகவே ஒலித்தார். அவரது மிகவும் புகழ் பெற்ற நாவலான ‘அவர்களது கண்கள் கடவுளைப் பார்த்துக் கொண்டிருந்தன’ (Their Eyes Were Watching God), கறுப்பின இலக்கியத்தில் ஒரு மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.
நிறப்பாகுபாடு, குடும்ப வன்முறை, அன்று நிலவிய பாலியல் அறங்கள் என அனைத்தையும் ஒரு கறுப்பின பெண்ணின் மூலமாக மறு ஆய்வு செய்யும் அந்த நாவல், கறுப்பின மக்களிடையேயும் எதிர்ப்பைப் பெற்றது. அவரது நாவல் போதுமான அளவுக்கு அரசியல் பேசவில்லை என்றும் எதிர்ப்பு நிலவியது. என்னுடைய கதாபாத்திரங்கள் அவர்களது வாழ்வை மட்டுமே பேசுவார்கள், என்னுடைய அரசியலை அல்ல என்று ஸோரா பதிலளித்தார். அவர்களின் வாழ்வை மட்டுமே தான் பதிவு செய்வதாகத் தெளிவாகக் கூறினார். நாவலில் மட்டுமல்லாது தொடர்ந்து கள ஆய்வுகள் மூலமும் அவர்களது வாழ்வைப் பதிவு செய்தார்.
அவருக்குப் பின்னால் எழுதிய பல கறுப்பினப் பெண் எழுத்தாளர்களும் – டோனி மோரிசன், அலிஸ் வாக்கர் போன்றோர் – ஸோராவைத் தங்களது முன்னோடியாகக் கருதுகிறார்கள். அவரது பெண்ணியமும் களஆய்வும் கறுப்பினப் பெண்களின் வாழ்வை மட்டுமல்லாது, அவர்களது போராட்டங்களையும் பதிவு செய்தது.
நாவல், கவிதை, ஆய்விலக்கியம் மட்டுமல்லாது, மற்ற துறைகளிலும் பெரும் முன்னெடுப்பு நிகழ்ந்தது. ஆர்தர் ஸ்கொம்பர்க் கறுப்பினத்தவர் பற்றிய பல பொருட்களையும்,அவர்களது இலக்கியம், கலை, சிற்பங்கள், ஓவியங்கள் எனப் பலவற்றையும் சேகரித்தார். அரிதான புத்தகங்கள், அடிமைகளின் கதைகள், அடிமைகளாக இருந்த காலத்தின் எழுத்துக்கள் என அவரது சேகரிப்பு நீண்டது. அவர் தொடங்கிய வரலாற்றாய்வுக்கான கறுப்பினத்தவரின் சங்கம், கறுப்பினத்தவரின் வரலாற்று ஆய்வுகளுக்கு உதவி புரியும் நோக்கத்துடன் செயல்பட்டது. கறுப்பினத்தவரின் வரலாறு சம்பந்தமாக அவர் சேகரித்திருந்த பொருட்களும் புத்தகங்களும் இன்றும் வரலாற்றாய்வாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. ஸ்கொம்பர்க், ஹார்லெம் மறுமலர்ச்சியின் எழுத்தராக நன்றியுடன் பார்க்கப்படுகிறார்.
1926இல் ஹார்லெமில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘ஆப்பர்டுனிட்டி’ இலக்கிய இதழின் துணை ஆசிரியராக இருந்த குவெண்டொலின் பென்னெட் (Gwendolyn B. Bennett) இன்னுமொரு முக்கியமான கவிஞர். ‘கறுப்புப் புல்லாங்குழல்’ என்ற பெயரில் அவர் அந்த இதழில் எழுதி வந்த பத்திகள் ஹார்லெமின் கலாசாரத்தையும் சமூக வாழ்வையும் பதிவு செய்தது. அவரது அரசியல் பலருக்கும் ஒவ்வாததாக இருந்தது. இருப்பினும், அவர் அதைப் பற்றி பெரிதாகக் கவலைப்படவில்லை. ஓரின உறவுகள் பற்றிய அவரது பார்வையும், கறுப்பினப் பெண்ணியம் பற்றிய அவரது பத்திகளும் அவருக்கு ஒரே நேரத்தில் புகழையும் வெறுப்பையும் சம்பாதித்துக் கொடுத்தன.
வெகு சில கவிதைகளே எழுதிய அவரின் மிகவும் பிரபலமான கவிதை – இன்றும் நவீன அமெரிக்கக் கவிஞர்களின் பட்டியலில் அவர் இருப்பதற்குக் காரணமான கவிதை – ‘கறுப்புப் பெண்ணுக்கு’, அவர் ஹார்லெமில் இருந்த நாட்களில் எழுதப்பட்டது.
‘உன்னுடைய கறுப்பு நிறத்துக்காக உன்னை விரும்புகிறேன்.
உன் கருத்த முலைகளின் வட்ட வடிவம்,
உன்னுடைய குரலின் உடைந்த துயரத்துக்காகவும்,
அலையும் உன் இமைகள் அசையாமல் இருக்கும்போது விழும் நிழலுக்காகவும்
உன்னை விரும்புகிறேன்.
உன்னுடைய கவலையுறாத நடையில் நாம் மறந்து விட்ட
பழங்கால அரசிகளின் ஏதோ ஒரு சாயல் இருக்கிறது.
உன் குரலின் துயரமான விம்மலிலோ
கட்டுண்ட அடிமையின் தாளம் இருக்கிறது.
கறுப்புச் சிறுமியே! துயரத்தின் துணையாகப் பிறந்தவளே
உன்னுடைய அரசித்தன்மை அனைத்தையும் வைத்துக்கொள்.
என்றோ அடிமையாக இருந்ததை மறந்துவிட்டு
விதியை நோக்கி உன் தடித்த உதடுகளால் சிரித்துவிடு!’
0
இவை மட்டுமல்லாது அப்போது குழந்தைப் பருவத்தில் இருந்த திரைத்துறையிலும் ஹார்லெம் மறுமலர்ச்சி தன்னுடைய தடத்தைப் பதித்தது.
லிங்கன் திரைப்படக் கம்பெனி என்ற பெயரில் மௌனத் திரைப்படங்களும், பின்னாளில் பேசும் திரைப்படங்களும் தயாரித்து இயக்கிய ஆஸ்கர் மைசோ (Oscar Micheaux) இந்தக் காலகட்டத்தின் மிக முக்கியமான கறுப்பின இயக்குனராவார். ஹாலிவுட் நிறுவனங்களுடன் எந்தத் தொடர்புமின்றி, சுதந்திரமாகத் திரைப்படம் எடுத்த ஆஸ்கர், மொத்தமாக 44 திரைப்படங்களைத் தயாரித்து இயக்கினார்.
வெள்ளை இயக்குனர்கள் இயக்கிய பல திரைப்படங்களில், கறுப்பின நடிகர்களை நடிக்க வைப்பது அப்போது நடைமுறையில் இல்லை. மாறாக வெள்ளையின நடிகர்கள் முகத்தில் கறுப்பு மை பூசி நடிக்க வைப்பதே வழக்கமாக இருந்தது. ஆஸ்கர் இதை மாற்றினார். அவரது திரைப்படங்களிலேயே கறுப்பின நடிகர்கள் நேரடியாக நடித்தார்கள். ஆனால் இது மட்டுமல்ல வித்தியாசம். அவர் தன்னுடைய படங்களில் பேசிய பிரச்சினைகளே உண்மையான வித்தியாசங்களைக் காட்டின. அவரது படங்கள் நிறவெறி, கும்பல் கொலைகள், கறுப்பினத்தவர்களின் பொருளாதார ஏழ்மை, கற்பழிப்பு, வெறுப்பு, கறுப்பினத்தவர்களைப் பொருளாதார ரீதியாகச் சுரண்டுவது என அதுவரை வெள்ளையர்களின் திரைப்படங்கள் பேசாப் பொருட்களைப் பேசின.
அவரது ‘மர்டர் இன் ஹார்லெம்’ படத்தில் ஒரு வெள்ளைப் பெண்ணைக் கொலை செய்ததாகப் பொய் குற்றஞ்சாட்டப்படும் கறுப்பின இளைஞனின் கதையைச் சொல்கிறார். ஒரு உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதையை அப்போது ஒரு கறுப்பின இயக்குனர் மட்டுமே எடுத்திருக்க முடியும். இது ஒரு உதாரணம் மட்டுமே. அவர் எடுத்த ஒவ்வொரு திரைப்படமும் இப்படியான கதைகளைக் கொண்டவையே.
0
1929ஆம் வருடம் அமெரிக்கா பெரும் பொருளாதார மந்தநிலையைச் சந்தித்தது. அந்த வருடம் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவும், பல வங்கிகள் மூடப்பட்டதும் அதுவரை இல்லாத ஒரு பொருளாதாரச் சரிவை அமெரிக்காவில் ஏற்படுத்தியது. கறுப்பினக் கலைஞர்களை ஆதரிக்கும் புரவலர்களும் இதற்கு விலக்கல்ல. எனவே பல கலைஞர்களும் தங்களது வாழ்வைத் தொடர வேலைகளுக்குச் செல்ல வேண்டி வந்தது. 1930களில் ஹார்லெம் மறுமலர்ச்சியின் வேகம் குறைந்து. இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்தபொழுது, முற்றிலுமாக நின்றுவிட்டது.
ஆனால், அமெரிக்கக் கலாச்சார வரலாற்றில் ஹார்லெம் மறுமலர்ச்சியின் காலம் அதுவரை இல்லாத கலை, இலக்கிய வேகத்தைக் கொண்டு வந்ததாக இன்று வரை கருதப்படுகிறது. இந்தக் காலகட்டத்தின் கலைஞர்களும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் பின்னாட்களில் பெரும் புகழை அடைந்தார்கள். அல்லது, எந்தச் சுவடும் இன்றி, வறுமையில் மறைந்தார்கள். ஆனால் அவர்கள் முன்னெடுத்த இயக்கம் தொடர்ந்தது. பின்னாளில் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற டோனி மோரிசன் தன்னுடைய முன்னோடிகளாக ஹார்லெம் மறுமலர்ச்சியை முன்னெடுத்த பலரையும் குறிப்பிடுகிறார்.
கறுப்பினத்தவரின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த விதத்தில் ஹார்லெம் மறுமலர்ச்சி வெற்றி பெற்றதா என்ற கேள்வி சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. இருவேறுவிதமான கருத்துக்கள் நிலவினாலும், இன்றும் நம் மனதுக்கு அருகில் இருக்கும் கவிதைகளைக் கொடுத்த விதத்திலும், கறுப்பினத்தவரின் வாழ்வியலை ஒரு முக்கிய காலகட்டத்தில் பதிவு செய்ததற்காகவும், இந்த இயக்கத்தை வெற்றி பெற்றதாகவே கருத வேண்டி இருக்கிறது.
(தொடரும்)
படம் – டுக் வெல்லிங்டன், தனது இசைக் குழுவினருடன்.