1960ஆம் வருடம் ஹார்ப்பர் லீயின் நாவலான ‘டு கில் எ மாக்கிங்பர்ட்’ (To kill a Mockingbird) வெளியானது. 1930களில் நடக்கும் அந்தக் கதை அமெரிக்க இலக்கிய வரலாற்றில் திருப்புமுனையாக இருந்தது. இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் அதிகம் வாசிக்கப்பட்ட நாவல் இதுதான் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இன்றும் ஒவ்வொரு அமெரிக்கப் பள்ளி, கல்லூரிகளிலும் இந்த நாவல் திரும்ப, திரும்பப் படிக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது.
இந்த நாவலின் கதை 1930களின் அலபாமாவில் நடைபெறுகிறது. அங்கு அட்டிகஸ் பின்ச் என்ற வக்கீல் தன் மகள் மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். அந்த நகரில் ஒரு கறுப்பின ஆண், வெள்ளைப் பெண்ணைக் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக வரும் வழக்கில் அவர் அந்தக் கறுப்பினத்தவருக்காக வாதாட நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார். அந்தக் கறுப்பரைச் சிறையில் இருந்து வெளியே எடுத்து, கொலை செய்ய நடக்கும் முயற்சியைத் தடுக்கிறார். அந்தப் பெண் பொய்யாகக் குற்றஞ்சாட்டுகிறார் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கிறார். ஆனாலும் அந்தக் கறுப்பருக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. சிறையில் இருந்து தப்பிக்க முயன்று, அவர் கும்பலால் சுட்டுக் கொல்லப்படுகிறார். அட்டிகஸ் நீதி, நிறம், இனம் என்று தன்னுடைய நம்பிக்கைகள் பலவற்றையும் கேள்விக்குள்ளாக்குகிறார்.
இது மிகவும் தீவிரமான கதை என்றாலும், லீ நாவலை மெல்லிய நகைச்சுவையோடு நகர்த்துகிறார். நாவல் அட்டிகசின் இளைய மகள் ஸ்கவுட் பின்ச்சின் கண்களின் வழியே செல்லப்படுகிறது. வெள்ளைக் குழந்தைகள் தங்களது குழந்தைப் பருவத்தின் ஏதோ ஓர் இடத்தில் கறுப்பினத்தவரின் மீதான வெறுப்பை உணர்ந்து தங்களது குழந்தைத் தன்மையை இழக்கிறார்கள். கதையில் அதுவே ஸ்கவுட்டிற்கும் நிகழ்கிறது.
அவள் கறுப்பினத்தவர் ஒருவருக்கு நீதிமன்றத்தில் வாதிடுவதற்காக, தன் தந்தையின் மீதும், தங்கள் குடும்பத்தின் மீதும் காட்டப்படும் வன்முறையையும், வெறுப்பையும் புரிந்துகொள்ள முயல்கிறாள். நீதிமன்றத்தில் அவள் அமர இடமில்லாமல், கறுப்பினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் சென்று அமரும்போது, அவள் ஆறு வயதுக் குழந்தை என்பதையும் பாராது நகரம் அவள் மீது வெறுப்பைக் கக்குகிறது. ஸ்கவுட்டும் அந்த வெறுப்பிற்கான காரணத்தை உணர்ந்தாலும், அட்டிகஸ் அவளை அந்த வெறுப்பில் விழுந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார்.
லீயின் தந்தையும் வக்கீலாக இருந்தவர். லீ சிறுமியாக இருந்தபோது, அவரது தந்தை இரண்டு கறுப்பினத்தவர்களுக்காக ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் வாதிட்டார். சாட்சிகளையும் மீறி அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டது. அத்துடன் அவர் தன்னுடைய வக்கீல் தொழிலைவிட்டுவிட்டு, பத்திரிகை ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடர்ந்தார். இதுவே லீயை நீதியைப் பற்றியும், அது நிறத்தை வைத்து எப்படியாகத் தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ள வைத்தது. அதை அடிப்படையாகக் கொண்டே தன்னுடைய நாவலை எழுதியதாக லீ தெரிவிக்கிறார்.
இரண்டு இனங்களுக்கும் இடையிலான உறவையும், கறுப்பினத்தவர்களுக்கான நீதி போன்றவற்றைப் பேசியதற்காக இந்தப் புத்தகம் இன்றும் கொண்டாடப்படுகிறது. எல்லா இடங்களிலும், நிறங்களிலும் சரியான பார்வை கொண்ட சாமானியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதே லீயின் நாவலின் சாராம்சம்.
0
அமெரிக்க உச்சநீதி மன்றம் 1946ஆம் வருடம், மாநிலங்களுக்கு இடையில் செல்லும் பேருந்துகளில் நிறப்பிரிவினை இருக்கக்கூடாது என்று தீர்ப்பளித்திருந்தது. ஆனால், பல்வேறு தீர்ப்புகளைப்போல இதையும் எந்தத் தென் மாநிலமும் அமுல்படுத்த முயற்சிகூட எடுக்கவில்லை. அமெரிக்காவில் மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்தையும் போக்குவரத்தையும் ‘மாநிலங்களுக்கிடையேயான வர்த்தக ஆணையம்’ (Interstate commerce commission – ICC) தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால் இவர்களும் தென் மாநிலங்களில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமுல்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
‘இனச் சமத்துவத்திற்கான குழு’ (Congress of Racial Equality – CORE) இதையே தன்னுடைய அடுத்த இலக்காக எடுத்தது. அதன் வாஷிங்டன் நகர இயக்குநர் ஜேம்ஸ் பார்மர் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் நிலவும் பிரிவினையை எடுத்துக் காட்டும் வகையில் ஒரு போராட்டத்தைக் கையிலெடுக்க முடிவெடுத்தார். இதற்காக 13 மாணவர்களைத் தேர்ந்தெடுத்தது. இவர்களுக்கு அகிம்சா முறையில் பயிற்சி கொடுக்கப்பட்டது.
மே 4ஆம் தேதி வாஷிங்டன் நகரில் இருந்து கிளம்பி, விர்ஜினியா, இரண்டு கரோலினாக்கள், ஜார்ஜியா, அலபாமா, மிஸ்ஸிஸிப்பி வழியாக லூசியானா மாநிலத்தின் நியூ ஆர்லியன்ஸ் நகருக்குச் செல்வதுதான் திட்டம். செல்லும் வழியில் அமைந்திருக்கும் பேருந்து நிலையங்களில் இருக்கும் வெள்ளையர்கள், கறுப்பினத்தவர்களுக்கான தனித்தனி வசதிகளை ஒன்றாக இணைப்பதுதான் அவர்களது நோக்கம். ஆனால் இந்த முறை அவர்கள் அனைவரும் கறுப்பு மாணவர்கள் அல்ல. மாறாக, அவர்களில் ஏழு பேர் கறுப்பினத்தவர்கள். ஆறு பேர் வெள்ளையர்கள். இருவர் இருவராக அவர்கள் பேருந்தின் முன்பகுதியில், உச்சநீதி மன்றத் தீர்ப்பின் படியாக அமர வேண்டும் என்பதும் அவர்களது எண்ணம். இரண்டு வாரத்தில் அங்குச் சென்று விடலாம் என்று நினைத்தார்கள். அவர்கள் நினைத்தது நடக்கவில்லை.
0
1960ஆம் வருடக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜான் கென்னடி வெற்றி பெற்றிருந்தார். அவரது வெற்றிக்குக் கறுப்பினத்தவர்கள் உழைத்திருந்தார்கள். அவர்களுக்குத் தன்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு என்று அவரும் தன்னுடைய தேர்தல் பரப்புரையில் தெரிவித்திருந்தார். அதனால் அவர்கள் இளைஞரான கென்னடியின் ஆட்சியை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தார்கள்.
எதிர்பார்த்ததுபோலவே கென்னடியும் தன்னுடைய முதல் பேச்சில் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.
‘இனத்தின் காரணமாக நமது அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள உரிமைகளை – வாக்களிப்பது மற்றும் ஏனைய உரிமைகளை – அமெரிக்கர்களுக்கு மறுப்பது நமது மனசாட்சியைத் தொந்தரவு செய்கிறது. அது மட்டுமல்லாமல் நமது ஜனநாயகம், நமது பாரம்பரியம் கொடுத்துள்ள உறுதிகளுக்கு ஏற்றதாக இல்லை என்ற எண்ணத்தையும் உலகிற்கு ஏற்படுத்திவிடும்.’
ஆனால் 1961இல் கென்னடியின் கவனம் அமெரிக்காவில் இல்லை. அவரது கவனம் முழுவதும் சோவியத் ரஷ்யாவின் மீதும், கியூபாவின் மீதும் இருந்தது. அவரது அட்டர்னி ஜெனரலாக இருந்தது அவரது சகோதரர் ராபர்ட் கென்னடி (பாபி கென்னடி). சகோதரர்கள் இருவரும் உலக அரங்கில் தங்களது குடும்பப் பெயரை எழுதவே விரும்பினார்கள். அதனால் உள்நாட்டில் நடப்பது அவர்களது கவனத்தில் முதலில் இல்லை.
தங்களது பிரச்னைகள் முதலில் கவனிக்கப்படும் என்று நினைத்திருந்த கறுப்பினத்தவர்களுக்கு இது ஏமாற்றமாகவே இருந்தது. CORE தன்னுடைய போராட்டத்தை முன்னெடுத்ததற்கு இதுவும் ஒரு காரணம்.
0
‘சுதந்திரப் பயணம்’ (Freedom rides) என்றழைக்கப்பட்ட இந்தப் போராட்டம் அமைதியாகவே தொடங்கியது. எதிர்பார்த்ததுபோலவே வாஷிங்டனில் இருந்து ஆரம்பித்த பயணம் முதல் சில நாட்கள் எந்தப் பெரிய பிரச்னையும் இல்லாமல் சென்றது. அவர்கள் கிரேஹவுண்ட் மற்றும் ட்ரயல்வேய்ஸ் நிறுவனங்களைச் சேர்ந்த இரண்டு தனியார் பேருந்துகளில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். விர்ஜினியா, வடக்கு, தெற்குக் கரோலினா முதலியவற்றைச் சிறு சிறு வன்முறைகளை எதிர்கொண்டு கடந்து சென்ற அவர்கள், ஜார்ஜியா மாநிலத்தின் அட்லாண்டா நகருக்கு வந்து சேர்ந்தார்கள்.
அங்கிருந்து அவர்கள் அலபாமா மாநிலத்தின் பர்மிங்காம் நகருக்குச் செல்லத் தயாரானார்கள். மே 15, 1961ஆம் வருடம் இரண்டு பேருந்துகளும் கிளம்பின.
பர்மிங்காம் நகரக் காவல்துறை ஆணையர் ‘புல்’ கானர் வரப் போகும் போராட்டக்காரர்களை வரவேற்கத் தயாரானார். கு க்ளக்ஸ் கிளான் வெறியர்களை அழைத்துப் பேசிய அவர், பர்மிங்காம் பேருந்து நிலையத்தில் பதினைந்து நிமிடங்கள் அவர்கள் போராட்டக்காரர்களைத் தாக்கலாம் என்றும், பதினைந்து நிமிடங்களுக்கு எந்த விதத்திலும் காவல்துறை தலையிடாது என்றும் ஒப்பந்தமிட்டுக் கொண்டார்.
பர்மிங்காம் நகருக்கு வரும் வழியில் இருந்த அன்னிஸ்டன் நகரை முதல் பேருந்து வந்தடைந்தது. அங்குக் காத்துக் கொண்டிருந்த கு க்ளக்ஸ் கிளான் கும்பல், பேருந்தின் சக்கரங்களைக் கிழித்துப் பேருந்தைத் தாக்க முனைந்தது. பேருந்து ஓட்டுநர் விரைவாகப் பேருந்தை நகர்த்தினாலும், நகருக்குச் சற்று வெளியே நின்ற கும்பல் பேருந்தைத் தடுத்து நிறுத்தியது.
பேருந்தின் உள்ளே பெட்ரோல் வெடிகுண்டு ஒன்று வீசப்பட்டது. பேருந்து பற்றி எரிய ஆரம்பித்த நிலையில், போராட்டக்காரர்களும் மற்ற பயணிகளும் மிகுந்த காயங்களுடன் வெளியே ஓடி வந்தார்கள். அங்கே போராட்டக்காரர்களைத் தனிமைப்படுத்தித் தாக்குதல் நடந்தது. அதற்குள் அலபாமா நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் வந்ததால் அவர்கள் உயிர் தப்பினார்கள்.
மற்றொரு பேருந்தின் மீதும் அன்னிஸ்டன் நகரில் தாக்குதல் நடந்த முயன்றாலும், அவர்கள் அங்கிருந்து விரைந்து பர்மிங்காம் நகரப் பேருந்து நிலையத்தை அடைந்தனர். அங்கே அவர்களுக்காகக் கு க்ளக்ஸ் கிளான் வெறியர்களும், மற்ற வெள்ளையர்களும் காத்துக் கொண்டிருந்தார்கள். இங்கும் போராட்டக்காரர்கள் மீது பயங்கரத் தாக்குதல் நடத்தப்பட்டது. பதினைந்து நிமிடங்கள் அனைவரும் அடித்து நொறுக்கப்பட்டார்கள். குறிப்பாக வெள்ளையினப் போராட்டக்காரர்கள், இனத் துரோகிகள் என்று தனியே இரும்புக் குழாய்கள் மற்றும் சைக்கிள் செயின் முதலியவற்றால் தாக்கப்பட்டனர்.
வெடிகுண்டுத் தாக்குதலில் எரிந்து கொண்டிருக்கும் பேருந்து, மிகுந்த காயங்களுடன் சாலையில் கிடக்கும் போராட்டக்காரர்கள் போன்ற புகைப்படங்கள் நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாபி கென்னடி, இரண்டு பக்கங்களும் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் கொடுத்தார். இது அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்ட கறுப்பினத்தவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. ஆனால் உலகெங்கும், குறிப்பாகக் கம்யூனிச நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்க அரசிற்குக் கிடைத்த எதிர்மறை விமர்சனங்கள் கென்னடிச் சகோதரர்களை நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்தித்தன.
இரண்டு கென்னடிகளும் அலபாமா ஆளுநரிடம் பேச முயன்றார்கள். அவரோ தனக்கும் பர்மிங்காம் நகர நிகழ்வுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கைவிரித்தார். எனவே கென்னடி நிலையைச் சமாளிக்க, தன்னுடைய காரியதரிசியான ஜான் சீகன்தேலரை அனுப்பி வைத்தார்.
பேருந்து எரிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர், பேருந்து ஓட்டுநர்கள் சங்கம் தங்களால் போராட்டக்காரர்கள் இருக்கும் எந்தப் பேருந்தையும் எடுக்க முடியாது என்று அறிவித்துவிட்டது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
மேலும், பர்மிங்காம் நகரத்தில் கலவரச் சூழல் நிலவியதால் போராட்டக்காரர்களை விமானத்தின் மூலமாக நியூ ஆர்லியன்ஸ் நகருக்கு அனுப்பிப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அப்படியே சீகன்தேலர், அனைத்துப் போராட்டக்காரர்களையும் அழைத்துக் கொண்டு எந்தச் சம்பவமும் இல்லாமல் விமானம் மூலமாக நியூ ஆர்லியன்ஸ் நகரைச் சென்றடைந்தார்.
தன்னுடைய கடமையைச் சரிவர முடிந்துவிட்டதாக எண்ணி, நியூ ஆர்லியன்ஸ் நகர விடுதி ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்தவரின் அறை தொலைப்பேசி, இரவு 1 மணிக்கு அலறியது. மறுமுனையில் பாபி கென்னடி. ‘யார் இந்த டயான் நாஷ்?’ என்று கோபத்துடன் கேட்டார்.
0
பர்மிங்காம் நகரில் நடந்த வன்முறைகளையும், போராட்டக்காரர்கள் விமானம் மூலமாக நியூ ஆர்லியன்ஸ் நகருக்கு அழைத்துச் செல்லப்படப் போவதையும், நாஷ்வில் நகர CORE குழு கவனித்துக் கொண்டிருந்தது. இவர்களே முந்தைய வருட உணவு விடுதிகளில் பிரிவினையை அகற்ற வேண்டிப் போராடியவர்கள்.
அப்போதைய சூழலில், வன்முறைக்குப் பயந்து பின் வாங்குவது நிறவெறி கொண்ட வெள்ளையர்களால் வெற்றியாகவே பார்க்கப்படும் என்று அவர்கள் கருதினார்கள். எனவே குழுவில் வாக்கெடுப்பு நடத்தி, நாஷ்வில் நகரில் இருந்து பர்மிங்காம் சென்று, பயணத்தைப் பேருந்தின் மூலமாகத் தொடருவது என்று முடிவு செய்தனர். அவர்கள் போராட்டக் குழுவிற்குத் தலைவியாக டயான் நாஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுநாள் மே 17, 1961 அன்று மீண்டும் பயணத்தைப் பர்மிங்காமில் இருந்து தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதற்கு முந்தைய தின இரவே ஜான் சீகன்தேலருக்குப் பாபி கென்னடியின் தொலைப்பேசி வந்தது. சீகன்தேலர் உடனடியாக டயான் நாஷைத் தொடர்புகொண்டு, அவர்களது பயணத்தைக் கைவிடச் சொல்லி வலியுறுத்தினார். தாங்கள் கைவிட்டால், போராட்டத்தை வன்முறை கொண்டு தடுத்து விடலாம் என்று வெள்ளை நிறவெறியர்கள் முடிவு செய்துவிடுவார்கள் என்றும், தங்கள் உயிரைக் கொடுக்கவும் தயாராகவே வருவதாகவும் அவர் தெரிவித்துவிட்டார். சீகன்தேலர் மீண்டும் பர்மிங்காம் கிளம்பினார்.
ஆனால் அவர் வருவதற்குள், பொது அமைதியைக் குலைக்க முயன்றதாக மாணவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தார்கள். அன்றிரவு 1 மணிக்கு அவர்களைப் பர்மிங்காம் காவல்துறை ஆணையர் ‘புல்’ கானர் தன்னுடைய காரில் அழைத்துச் செல்வதாகச் சீகன்தேலருக்குச் செய்தி வந்தது. தாங்கள் கொலை செய்யப்படலாம் என்று எண்ணிய மாணவர்கள் பயத்துடன் இருந்தார்கள். ஆனால், கானர் அவர்களை டென்னிசி மாநில எல்லையில் கொண்டு விட்டுவிட்டார்.
அவர்களோ மறுநாள் மதியத்திற்குள் மீண்டும் பர்மிங்காம் பேருந்து நிலையத்திற்கு வந்துவிட்டார்கள். இப்போது பாபி கென்னடியின் அலுவலகத்தில் இருந்து ஆளுநருக்கு அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்தது. ஆளுநரால் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றால், ஒன்றிய அரசு தன்னுடைய பாதுகாப்பு மார்ஷல்களையோ அல்லது ராணுவத் துருப்புகளையோகூட அனுப்பத் தயங்காது என்ற செய்தியைச் சீகன்தேலர் ஆளுநரிடம் தெரிவித்தார். பர்மிங்காம் நகரில் இருந்து மான்ட்கமரி நகரம் வரை முழுப் பாதுகாப்புக் கொடுக்கப்படும் என்று உறுதி கொடுக்கப்பட்டது. அடுத்துத் தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு, மாணவர்களை அடுத்த நகருக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
அதுபோலவே முன்னும் பின்னும் அலபாமா நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசாரின் துணையுடன், ஹெலிகாப்டர்கள், வழியெங்கும் காவல்துறைப் பாதுகாப்பு என்று பேருந்து மான்ட்கமரி நகரை நெருங்கியது. ஆனால், அங்கே அதுவரை இருந்த பாதுகாப்பு திடீரென்று காணாமல் போனது. பேருந்து, மான்ட்கமரி நகரப் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தது. அங்குக் கிட்டத்தட்ட 1000 வெள்ளையர்கள் கொண்ட கும்பல் ஒன்று அவர்களுக்காகக் காத்திருந்தது.
பேருந்துக்குப் பின் ஒன்றியச் சட்ட அதிகாரியான ஜான் சீகன்தேலரும் தன்னுடைய காரில் வந்து கொண்டிருந்தார். அங்கு நடத்தப்பட்ட தாக்குதலில், போராட்டக்காரர்கள் 19 பேரும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இரும்புக் கம்பிகள் கொண்டு அடிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் ரத்தம் சொட்டச் சாலையில் விழுந்தார்கள். சீகன்தேலர் அவர்களில் இருந்த பெண்களைக் காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் மயங்கி கீழே விழுந்தார். பத்திரிகையாளர்கள் மீதும் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தப்பட்டது. அவர்களின் புகைப்படக் கருவிகள் அடித்து நொறுக்கப்பட்டன. காயமடைந்தவர்களை ஏற்றிக் கொண்டு செல்ல அவசர ஊர்திகள் மறுத்துவிட்டன. இருந்தாலும், மான்ட்கமரி நகரக் கறுப்பினத்தவர்கள் தங்களது வண்டிகளில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார்கள்.
மான்ட்கமரியில் நடந்த வன்முறை நாடு முழுவதும் மீண்டும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தச் சுதந்திரப் பயணங்கள் தொடங்கியபோது கறுப்பினத் தலைவர்கள் பலரும் அதை விரும்பவில்லை. சட்டப்பூர்வமாகப் பிரச்சினைகளைத் தீர்க்காமல், போராட்டங்கள் மூலம் முடிவை நிர்ப்பந்தப்படுத்துவது அவர்களுக்குச் சரியாகப் படவில்லை. ஆனால் மான்ட்கமரி வன்முறை அவர்கள் அனைவரின் மனதையும் மாற்றியது. இப்போது ஒற்றுமையாகப் போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று அனைவரும் COREன் போராட்டத்தை ஆதரித்தார்கள். மார்ட்டின் லூதர் கிங் மான்ட்கமரி நகருக்கு வந்தார்.
மே 21 அன்று மாலை கிங்கின் நண்பர்களில் ஒருவரான ரால்ப் அபர்னெதியின் முதலாம் பாப்டிஸ்ட் தேவாலயத்தில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. 1500க்கும் மேற்பட்டவர்கள் தேவாலயத்தில் கூடியிருந்தனர். மார்ட்டின் லூதர் கிங் போராட்டக்காரர்களை அறிமுகப்படுத்திப் பேசிக் கொண்டிருந்தார். நற்செய்திப் பாடல்கள் பாடிக் கொண்டும், உற்சாகமாகப் பேசிக் கொண்டும் தேவாலயத்தில் நல்ல சூழல் நிலவியது.
அப்போது தேவாலயத்தின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு கல் ஒன்று உள்ளே வந்து விழுந்தது. தேவாலயத்தை வெள்ளை நிறவெறியர்களும், கு க்ளக்ஸ் கிளான் வெறியர்களும் சுற்றி வளைத்திருந்தனர். தேவாலயத்தின் உள்ளே சற்றுமுன் வரை இருந்த உற்சாகச் சூழல் ஒரு நொடியில் மாறியது. தேவாலயத்தின் மீது எந்த நேரமும் தாக்குதல் தொடங்கப்படலாம் என்பதும் அல்லது நெருப்பு வைக்கப்படலாம் என்பதும் அனைவருக்கும் மிகுந்த அச்சத்தைக் கொடுத்தது. கிங் அங்குக் கூடியிருந்தவர்களை அச்சமில்லாமல் இருக்கும் படியாக வேண்டிக் கொண்டார்.
‘கடந்த சில வாரங்களில் தென் மாநிலங்களில் நடைபெற்று இருக்கும் சம்பவங்கள் நமக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கின்றன. அதில் முக்கியமானது தென் மாநிலங்கள் தாங்களாகக் கட்டுப்படப் போவதில்லை. கட்டுப்பாடுகள் வெளியிலிருந்து விதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு குடிமகனின் அரசியலமைப்புச் சட்ட உரிமைகளை ஒன்றிய அரசு பாதுகாக்கவில்லை என்றால், நாம் இருண்ட குழப்பத்திற்குள் அமிழ்ந்து விடுவோம்.’
கிங் நேரடியாகப் பாபி கென்னடியிடம் பேசினார். உடனடியாக ஒன்றிய அரசு உதவவில்லை என்றால், பெரும் கலவரம் நிகழலாம் என்று எச்சரித்தார். தேவாலயத்தின் வெளியே காத்துக் கொண்டிருந்த கறுப்பின டாக்ஸி ஓட்டுனர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, ஆயுதங்களுடன் வெளியே கூடியிருந்த 3000 வெள்ளையர்களைத் தாக்குவது என்று திட்டமிடுவதாகக் கிங்கிற்குத் தெரிய வந்தது. அவர், தேவாலயத்தில் இருந்த பத்து இளைஞர்களுடன் வெளியே வந்து, கூடியிருந்த வெள்ளையர்களின் இடையே நடந்து சென்று, அந்தக் கறுப்பின ஓட்டுநர்களை அங்கிருந்து அமைதியாகக் கலைந்து செல்லக் கேட்டுக் கொண்டார். அவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டார்கள். கிங் மீண்டும் தேவாலயத்திற்குத் திரும்பி விட்டார். அவரது இந்த நடவடிக்கை பெரும் கலவரத்தைத் தவிர்த்தது.
பாபி கென்னடி ஒன்றிய காவல் மார்ஷல்களை அனுப்பி வைக்க முடிவு செய்தார். இரவு நீண்டு கொண்டே சென்றது. குடியரசுத் தலைவர் ஜான் கென்னடி, அலபாமா ஆளுநரை அழைத்துத் தான் ராணுவத்தை அனுப்பப் போவதாகத் தெரிவித்தார். அவரது அழுத்தத்தின் பேரில், அலபாமா துணை ராணுவப்படை அதிகாலையில் தேவாலயத்திற்கு வந்து, வெள்ளையர்களின் முற்றுகையை உடைத்தது.
கென்னடி சகோதரர்கள் இன்னமும் இந்தப் போராட்டங்களைச் சட்ட ஒழுங்குப் பிரச்சினையாக மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்கள். போராட்டக்காரர்களை அங்கிருந்து நியூ ஆர்லியன்ஸ் நகருக்கு அனுப்பி விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பதே அவர்களது எண்ணமாக இருந்தது. எனவே அவர்களை அங்கிருந்து தனிப்பேருந்தில் அடுத்த மாநிலமான மிஸ்ஸிஸிபிக்கு அனுப்பிவிட முடிவு செய்யப்பட்டது. பாபி கென்னடி மிஸ்ஸிஸிப்பி ஆளுநரிடம் அவர்கள் மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தின் ஜாக்சன் நகரை அடைந்தவுடன், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று ரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்.
போராட்டக்காரர்கள் கிங்கையும் தங்களுடன் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைத்தனர். கிங் மறுத்துவிட்டார். இது மாணவர்களுக்கும் கிங்கிற்கும் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது. கிங் இல்லாமல் அங்கிருந்து கிளம்ப முடிவு செய்தார்கள்.
பேருந்து அங்கிருந்து மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தின் ஜாக்சன் நகரை நோக்கிச் சென்றது.
0
மிஸ்ஸிஸிப்பி மாநில ஆளுநர் ராஸ் பார்னெட், வரப் போகும் 23 போராட்டக்காரர்களும் மறக்க முடியாதபடி ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்தார்.
பேருந்து ஜாக்சன் நகரப் பேருந்து நிலையத்தை அடைந்து, அதில் இருந்து போராட்டக்காரர்கள் இறங்கியவுடன் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் அவர்களுக்கு உடனடியாகத் தீர்ப்பும் வழங்கப்பட்டது. அவர்கள் அனைவரும் மாநிலத்தின் மோசமான பார்ச்மன் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு அவர்கள் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டு அடிக்கப்பட்டார்கள். ஆனாலும் அவர்களது உறுதியை உடைக்க முடியவில்லை.
கைது விவகாரம் கென்னடி சகோதரர்களுக்கு மிகுந்த நெருக்கடியைக் கொடுத்தது. குடியரசுத் தலைவர் கென்னடி, உலக அளவில் அமெரிக்காவிற்குத் தலைகுனிவை ஏற்படுத்தியதற்காகப் போராட்டக்காரர்களை ‘தேசப்பற்று இல்லாதவர்கள்’ என்று கூட வர்ணித்தார். சோவியத் ரஷ்யா அமெரிக்காவின் நிறவெறிக்குக் கண்டனத்தைத் தெரிவித்தது.
ஆனால் போராட்டம் இத்துடன் நிற்கவில்லை. மான்ட்கமரி நகர நிகழ்வுகளும், ஜாக்சன் நகரச் சிறை வாசமும் நாட்டில் இருந்த மாணவர்களை ஆத்திரம் கொள்ள வைத்தது. அவர்கள் நாடெங்கும் இருந்து தெற்கின் பல்வேறு நகரங்களை நோக்கி வர ஆரம்பித்தார்கள். பேருந்துகளில் மட்டுமின்றி, உணவு விடுதிகள், பொது இடங்களில் இருக்கும் பிரிவினையை உடைக்கவும் போராட்டக்காரர்கள் உறுதி பூண்டனர்.
ஜாக்சன் நகரின் பேருந்து நிலையத்திற்குத் தினமும் மாணவர்கள் வர ஆரம்பித்தார்கள். தினமும் கைதும், சிறைத் தண்டனையும் கொடுக்கப்பட்டது. நகரச் சிறைச்சாலைகள் நிரம்ப ஆரம்பித்தன. இது மாநில அரசிற்கு இன்னொரு விதமான சிக்கலைக் கொடுத்தது. சிறையில் வைத்திருப்பது என்பது அரசிற்குச் செலவை அதிகரிப்பதாக இருந்தது.
பாபி கென்னடி இப்போது ‘மாநிலங்களுக்கிடையேயான வர்த்தக ஆணையத்தை’ (Interstate Commerce Commission – ICC) உச்சநீதி மன்ற தீர்ப்பையும், ஆணையத்தின் விதிகளையும் அமுல்படுத்தக் கேட்டார். ஆனால் ஆணையம் தென்மாநிலமான தெற்குக் கரோலினா செனட்டரின் தலைமையில் இருந்ததால், அவர்கள் அமுல்படுத்துவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தார்கள்.
இப்போது பேருந்துகளுடன், அருகாமை வட மாநிலங்களில் இருந்து கார்களில்கூட வெள்ளை, கறுப்பினப் பெண்களும், ஆண்களும் தென் மாநிலங்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். அவர்களது இலக்கு வட மாநிலங்களிலும் கிளைகள் வைத்திருந்த உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் முதலியவற்றின் மீதானதாக இருந்தது. தாங்கள் நாடெங்கும் புறக்கணிக்கப்படலாம் என்ற எண்ணத்தில் இவை தங்களது விடுதிகளை அனைவருக்குமானவையாக மாற்றின. புளோரிடா, தெற்குக் கரோலினா மாநிலங்களிலும் கலவரம் ஆங்காங்கே நிகழ ஆரம்பித்தது. வேறு எந்த வழியும் இல்லாமல்போகவே, நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டி ஆணையம் நீதிமன்றத்தின் உத்தரவை அமுல்படுத்த உடனே அமல்படுத்த வேண்டும் எனக் கென்னடி உத்தரவிட்டார்.
நவம்பர் 1, 1961ஆம் வருடம் பேருந்துகளிலும், பேருந்து நிலையங்களிலும் பல வருடங்களாகத் தொங்கிக் கொண்டிருந்த ‘வெள்ளையர்கள் மட்டும்’ பலகைகள் அகற்றப்பட்டன.
உரிமைப் போராட்டத்தின் முக்கியமான போராட்டமாகக் கருதப்பட்ட இந்தப் போராட்டம், எல்லா விதங்களிலும் நாடெங்கும் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியது. முக்கியமாக, வட மாநில வெள்ளையர்களையும், பயத்தில் இருந்த தென் மாநிலக் கறுப்பினத்தவர்களையும் இன்னமும் தைரியத்துடன் வெளியே வந்து போராடத் தூண்டியது.
(தொடரும்)