Skip to content
Home » கறுப்பு அமெரிக்கா #32 – வாக்குறுதி

கறுப்பு அமெரிக்கா #32 – வாக்குறுதி

ஜான் கென்னடி

‘தனிமனிதனுக்கும், சமூகத்திற்கும் கல்வி மட்டுமே பெரும் நம்பிக்கையாக இருந்திருக்கிறது. அமெரிக்கக் கோட்பாட்டில், ‘அனைவருக்கும் சமமான வாய்ப்புகள்’ மற்றும் ‘திறமையை வெளிப்படுத்துதல்’ போன்றவற்றின் ஆதாரமே கல்வியாகத்தான் இருக்கிறது. கல்வி மட்டுமே சமூகத்தை உயர்த்துவதற்கான சிறந்த வழியாக – அமெரிக்கத் தனிமனித ஆதர்சங்களுடன் ஒத்துச் செல்லும் சிறந்த வழியாகவும் – இருக்கிறது’ என்கிறார் குன்னர் மிர்தால் (Gunnar Myrdal). ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சமூகவியலாளரான அவருடைய ‘An American Dilemma’ என்ற புத்தகம் 1944ஆம் ஆண்டு வெளிவந்தபோது, பெரும் கவனத்தைப் பெற்றது. அமெரிக்க உச்சநீதி மன்றம், 1954ல் கல்வி நிறுவனங்களில் நிறம், இனத்தைக் கொண்ட பிரிவினை கூடாது என்று தீர்ப்பு வழங்கியபோது, அவருடைய புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்டியது.

அதே புத்தகத்தில், ஏன் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி தேவையானதாக இருக்கிறது என்றும் மிர்தால் எழுதுகிறார். வெள்ளையர்கள் கறுப்பினத்தவர்களை அடிமைகளாக வைத்து ஒடுக்கினார்கள். அதுவே கறுப்பினத்தவர்களைப் பலவிதங்களில் கீழான நிலையில் வைத்திருந்தது. கல்வி, சுகாதாரம், ஒழுக்கம் என எல்லாமும் இதனால் பாதிக்கப்பட்டது. அவர்களை மேலும் ஒதுக்கி வைக்கவும் அவர்கள்மீது பாகுபாடு காட்டவும் இதுவே திரும்பவும் காரணமாக இருக்கிறது. இந்த விஷச்சுழலை எப்படி நிறுத்துவது என்ற கேள்விக்கு அவர் இரண்டு பதில்கள் தருகிறார். ஒன்று வெள்ளையர்களின் பாகுபாடு காட்டும் மனநிலையை மாற்றுவது. அல்லது கறுப்பினத்தவரின் நிலையை உயர்த்துவது. இவை இரண்டுமே இந்தச் சுழலைத் தடுத்து நிறுத்தும் என்கிறார். இவற்றை எப்படிச் செய்வது என்ற கேள்விக்கு அவர் அளிக்கும் விடை, கல்வியின் முக்கியத்துவம்.

கல்வியைக் கொடுப்பதுமூலம், அவர்களின் நிலையை உயர்த்துவதோடு, அதன் மூலமாக நிறப்பாகுபாட்டையும் அகற்றமுடியும் என்பதே அவரது கருத்து. மனிதர்களிடையே செயற்கையாக இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை அகற்ற கல்வியே வழி என்றும் அவர் தெரிவிக்கிறார். தன்னுடைய புத்தகத்தில் ஒரு முழு அத்தியாயத்தைக் கல்விக்கு ஒதுக்கும் அவர், ஒவ்வொரு அத்தியாயத்திலும் கல்வி எப்படிச் சமூகத்தில் அத்தியாவசியமானதாகிறது என்பதைக் வலியுறுத்திக்கொண்டே வருகிறார். மேலும் அவர் கல்வி என்பதையே போராட்டத்தின் வழிமுறையாகப் பார்க்கிறார். கல்வியின் வீச்சு அதிகமாகும்போது, மனிதர்களின் விடுதலை வேட்கையும் அதிகரிக்கும் என்பதும், அதனால் ஏற்படும் புரட்சி ரத்தமில்லாமல், பாகுபாடுகளை அகற்றும் என்றும் தெரிவிக்கிறார்.

வடமாநிலங்களில் உள்நாட்டுப் போருக்கு முன்னரே அரசுப் பள்ளிகள் வந்துவிட்டன. அங்கும் எந்தவிதப் பாகுபாடும் பார்க்கப்படவில்லை. போருக்குப் பிந்தைய கட்டத்திலேயே தெற்கில் அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. அதன்மூலமாகப் பெரிய அளவில் கறுப்பினத்தவர்கள் கல்வி கற்றனர். தெற்கில் கறுப்பினத்தவர்களின் பள்ளிகளில் பல வசதிக்குறைபாடுகள் இருந்தாலும், அவற்றில் கற்பிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை குறையவில்லை. டு பாய்ஸ் மறுகட்டமைப்பு பற்றிய தன்னுடைய புத்தகத்தில் இப்படித் தெரிவிக்கிறார்.

‘அவர்கள் பள்ளிகளை எதிர்பார்த்த ஆவலில் எரிந்தார்கள். கறுப்பின மனிதன் தலை நிமிர்ந்து எழுந்து, கல்விக்கான முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது நவீன உலகின் ஆச்சரியங்களில் ஒன்றாகும். புதிதாக விடுதலை பெற்ற இவர்கள் வெறித்தனமாகப் பள்ளிகளை வேண்டினார்கள்.’

எனவே அவர்களது கல்விக்கான போராட்டம் என்பது தற்செயலானதல்ல. டு பாய்ஸ் விவரிக்கும் மனநிலையின் வெளிப்பாடாகவே, அவர்கள் தொடர்ச்சியாகத் தங்களது கல்விக்காக, இன்னமும் மேம்பட்ட, சரிசமானமான கல்விக்காகத் தொடர்ச்சியாகப் போராடியதைப் பார்க்க வேண்டும். சம உரிமை போராட்டத்தின் பெரும் பகுதியை அவர்கள் கல்வி கற்கும் உரிமைக்காகவே செலவிட்டார்கள். அதுவே ஒவ்வொரு கட்டத்திலும் கறுப்பினப் பெற்றோரை, சரியான கல்விக்காகத் தங்களது குழந்தைகளை – ஆறு வயது ரூபி பிரிட்ஜெஸ் முதல் கல்லூரி செல்லும் ஜேம்ஸ் மெரிடித் வரை – தொடர்ச்சியாக, அவர்களது பாதுகாப்பு பற்றிய அச்சத்தையும்மீறி பள்ளிகளுக்கு அனுப்ப வைத்தது. வருடம் முழுவதும் தங்களது குழந்தைகளை ராணுவப் பாதுகாப்போடு லிட்டில் ராக் மேல்நிலைப்பள்ளிக்கு அனுப்பும் மனதைரியத்தையும் கொடுத்தது. அதுவே தொடர்ந்து போராடும் ஊக்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தது.

0

அப்படியான ஒரு குடும்பத்திலேயே விவியன் மாலோன் ஜோன்ஸ் (Vivian Malone Jones) பிறந்தார். அவரது தந்தை அருகில் இருந்த விமானப்படைத் தளத்தில் சிறு பழுதுகளைச் சரி செய்பவராக இருந்தார். அவரது தாயார் வீட்டு வேலை செய்து வந்தார். கல்லூரி படிப்பு இல்லாதவர்கள் என்றாலும், அவர்களுக்குப் படிப்பின் முக்கியத்துவம் தெரிந்திருந்தது. அவரது சகோதரர்கள் அனைவரும் கறுப்பினத்தவர்களுக்கான கல்லூரிகளில் தங்களது படிப்பை முடித்திருந்தனர்.

விவியன் ஜோன்சும் அப்படியே தன்னுடைய படிப்பை 1961ம் வருடம் அலபாமா விவசாயப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்தார். ஆனால் அவரது ஆர்வம் வணிகவியலில் இருந்தது. ஆனால் கறுப்பினத்தவருக்கான பல்கலைக்கழகங்களில் வணிகவியல் பட்டப்படிப்பு இல்லை.

விவியனின் பெற்றோரும் அப்போது தீவிரமாக நடந்து கொண்டிருந்த உரிமைப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டிருந்தார்கள். அதன்மூலமாக அவர்களது பகுதியில் இருந்த ஒரு போராட்டக் குழு அலபாமாவின் மொபைல் நகரில் இருந்த அலபாமா பல்கலைக்கழகத்தில் கறுப்பினத்தவரை அனுமதிக்க வேண்டி, 200 மாணவர்களை விண்ணப்பிக்கத் தேர்ந்தெடுக்கப் போவதாகத் தெரியவந்தது. விவியனும் அவர்கள் மூலமாக விண்ணப்பித்தார்.

பல்வேறு காரணங்களைத் தெரிவித்துப் பல்கலைக்கழகம் அவர்கள் அனைவரின் விண்ணப்பத்தையும் நிராகரித்தது. நிராகரித்தது மட்டுமல்லாமல், பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புத் துறையினர், விண்ணப்பித்த அனைத்துக் கறுப்பினத்தவர்களையும் பற்றிய விவரங்களைச் சேகரிக்க ஆரம்பித்தார்கள். விவியனின் பெற்றோரையும் இரண்டு வெள்ளையர்கள் சந்தித்து, அவர்களது பெண் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்ததைச் சொல்லி, அதனால் வெள்ளையர்கள் மிகுந்த கோபத்துடன் இருப்பதாகவும், அவர்களது பாதுகாப்புக்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்றும் தெரிவித்தனர். இத்தகைய பயமுறுத்தல்களுக்கு இடையிலும், விவியன் பின்வாங்க விரும்பவில்லை.

அதே நேரத்தில் டஸ்கலூசா நகரில் இருந்த அலபாமா பல்கலைக்கழகத்தின் கிளையில் மீண்டும் விண்ணப்பிக்கவும், அதற்குப் பிறகான சட்ட உதவிகளைச் செய்வதாகவும் NAACP சட்ட உதவிக் குழு அவரை அணுகியது. அவரும் ஒத்துக் கொள்ளவே, நீதிமன்றத்தில் போராட்டம் துவங்கியது. இரண்டு வருடங்கள் நடந்த வழக்கில் 1963ம் வருடம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அலபாமா பல்கலைக்கழகத்தை மிகவும் விமர்சித்த நீதிமன்றம், விவியனையும், ஜேம்ஸ் ஹூட் என்ற இன்னொரு மாணவரையும் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த விஷயத்தில் எந்தவிதத்திலும் தலையிடக்கூடாது என்று ஆளுநர் ஜார்ஜ் வாலசிற்கும் உத்தரவிட்டது.

0

1963ம் வருட மே மாதத்தில் அமெரிக்கக் குடியரசுத்தலைவரான ஜான் கென்னடி, தென் மாநிலங்களில் தங்களது நிறவெறியை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டு, வன்முறையைத் தங்களது சமரச முறையாக வைத்திருக்கும் வெறியர்களுடன் பேசி அலுப்படைந்து விட்டார். இந்த நிறவெறியர்கள் எந்த விதத்திலும் பேச்சுவார்த்தையையோ சமரசத்தையோ விரும்பவில்லை என்பதையும், கறுப்பினத்தவர்களுக்கு ஓர் அடி இடமும் கொடாமல் நிலைமையைக் கொதிநிலையில் வைத்திருப்பதே அவர்களது நோக்கம் என்பதையும் அவர் இதற்குள் புரிந்துகொண்டிருந்தார். எனவே அவர்களுடன் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டார்.

நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்தவுடன், அலபாமா ஆளுநர் ஜார்ஜ் வாலஸ், தான் ஆளுநராக இருக்கும்வரை எந்த விதத்திலும் கறுப்பினத்தவர்களும், வெள்ளையர்களும் ஒன்றாகப் படிப்பதை அனுமதிக்க முடியாது என்றும், அலபாமா பல்கலைக்கழகத்தில் தானே முன்னின்று, கறுப்பினத்தவர்களை வகுப்புகளுக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப் போவதில்லை என்றும் அறிவித்துவிட்டார்.

இந்த முறை கென்னடி ஆளுனருடன் பேசவும் விரும்பவில்லை. மாறாக, விவியன் ஜோன்ஸ் மற்றும் ஜேம்ஸ் ஹூட் இருவருக்கும் போதுமான பாதுகாப்பு கொடுத்து, ஒன்றிய நீதித்துறையின் உதவியுடன் வகுப்புகளுக்குப் பதிவு செய்ய வைக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

ஜூன் 11, 1963. காலை விவியனும் ஜேம்ஸ் ஹுடும் வகுப்புகளுக்குப் பதிவு செய்ய பல்கலைக்கழகத்திற்கு வந்தார்கள். அவர்களுடன் மூன்று கார்கள் நிறைய மார்ஷல்களும் நீதித்துறையின் துணை சட்டஅதிகாரியான நிக்கோலஸ் கட்சன்பாக்கும் வந்தார். பாபி கென்னடியின் நேரடி மேற்பார்வையில் அன்றைய நிகழ்வுகள் அரங்கேறின.

பல்கலைக்கழகக் கதவிற்கு முன் சிறிய வட்டம் ஒன்றை வரைந்து அதற்குள் ஆளுநர் ஜார்ஜ் வாலஸ் நின்றுகொண்டார். தன்னை யாரும் அங்கிருந்து அசைக்க முடியாது என்றும் சவால் விட்டார். தன்னுடைய அரசியல் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு, யாரும் அன்று வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று அவர் சொல்லியிருந்தாலும், பெரும் கும்பல் கூடியிருந்தது.

பல்கலைக்கழக வாசலுக்கு வந்த விவியனையும், அவரது சக மாணவரையும் ஆளுநர் தடுத்து நிறுத்தினார். துணை சட்ட அதிகாரி நிக்கோலஸ் நீதிமன்ற உத்தரவை எடுத்துச்சொல்ல முயன்றபோது, அவரைப் பேசவிடாமல், மாநில உரிமைகளை கென்னடி நிர்வாகம் காலில் போட்டு மிதிப்பதாக அரசியல் உரை ஆற்ற ஆரம்பித்தார்.

விவியனை மாணவர்கள் விடுதியில் பாதுகாப்பாகத் தங்க வைத்துவிட்டு, நிக்கோலஸ் குடியரசுத் தலைவருக்குச் செய்தி அனுப்பினார். இந்த முறை ஜான் கென்னடி தாமதிக்கவில்லை. மாறாக, ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருந்த அலபாமா துணை ராணுவப்படையை, தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர உடனடியாக உத்தரவிட்டார். அலபாமா துணை ராணுவப்படையின் ஜெனரலுக்கு அலபாமா ஆளுநரை பல்கலைக்கழக வாசலில் இருந்து அகற்றவும் உத்தரவிட்டார்.

அதன்படியே அலபாமா துணை ராணுவப் படையைச் சேர்ந்த 100 வீரர்களுடன் சென்ற ஜெனரல் ஹென்றி கிரகாம், ஆளுநர் ஜார்ஜ் வாலசை அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டார். தன்னுடைய நிலை எந்த விதத்திலும் அப்படியே தொடர முடியாததாக இருந்ததால், ஆளுநரும் வேறு வழியின்றி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். விவியனும், ஜேம்சும் உடனடியாகப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்தனர்.

0

அன்றிரவே குடியரசுத் தலைவர் ஜான் கென்னடி நாட்டு மக்களிடம் நேரடியாகத் தொலைக்காட்சியிலும் வானொலியிலும் பேசினார்.

‘என் சக குடிமக்களே, இன்று மதியம் தொடர்ச்சியான மிரட்டல்கள் மற்றும் சவால்களுக்கும் மத்தியில், அலபாமா வட மாவட்ட அமெரிக்க ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற அலபாமா துணை ராணுவப்படை தேவைப்பட்டது. அந்தத் தீர்ப்பு இரண்டு தகுதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான். அந்த மாணவர்கள் கறுப்பினத்தில் பிறந்தவர்கள்…

எங்கு இருந்தாலும், ஒவ்வோர் அமெரிக்கரும் ஒரு நொடி, இதையும், இது போன்ற சம்பவங்கள் பற்றியும் தனது மனசாட்சியைச் சோதித்துப் பார்க்க கேட்டுக் கொள்கிறேன். பல நாடுகள், பல்வேறு பின்னணிகளைக் கொண்டவர்களால் இந்த நாடு உருவானது; இந்த நாட்டில் அனைத்து மனிதர்களும் சமமாகவே பிறக்கிறார்கள். இந்த நாடே ஒரு மனிதனின் உரிமை பறிக்கப்பட்டாலும், அது அனைத்து மனிதர்களின் உரிமைகளையும் பாதிக்கிறது என்ற சித்தாந்தத்தில் எழுப்பப்பட்டது…

நம் முன் இருப்பது ஓர் அறம் சார்ந்த பிரச்சினை. அது விவிலியத்தைப் போலப் பழமையானதாகவும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தைப் போலத் தெளிவாகவும் இருக்கிறது.

நமக்கு முன்னிருக்கும் கேள்வி, அனைத்து அமெரிக்கர்களுக்கும் சமமான உரிமைகளும், சமமான வாய்ப்புகளும் இருக்கின்றதா, நாம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே நாமும் மற்றவர்களை நடத்துகிறோமா என்பதுதான். ஒரு மனிதர் அவரது தோலின் நிறத்தின் காரணமாக மட்டுமே தன் மதிய உணவை விடுதியில் எடுக்க முடியாது என்றால், தன்னுடைய பிள்ளைகளை நகரின் சிறந்த பள்ளிகளுக்கு அனுப்ப முடியாது என்றால், தனக்குப் பிடித்த நபருக்கு வாக்களிக்க முடியாது என்றால், சுருக்கமாக, நாம் அனைவரும் விரும்பும் முழுமையான, சுதந்திரமான வாழ்வை வாழ முடியாது என்றால், நம்மில் யார் அவரது நிறத்தோலை பெற்றுக் கொண்டு, அவரது இடத்தில் நிற்க விரும்புவோம்? அந்நிலையில் நம்மில் யார் தாமதத்தையும், பொறுத்திருக்கக் கோரும் அறிவுரைகளையும் கேட்டுக் கொண்டிருப்போம்?

குடியரசுத் தலைவர் லிங்கன் அடிமைகளுக்கு விடுதலை கொடுத்து 100 வருடங்கள் கடந்துவிட்டது. இன்னமும் அவர்களது சந்ததிகள், பேரன்கள் முழுவதுமாக விடுதலை அடையவில்லை. அவர்கள் இன்னமும் அநீதியின் பிடியில் இருந்து முழுமையாக வெளிவரவில்லை. இன்னமும் சமூக, பொருளாதார ஒடுக்குமுறையில் இருந்து விடுதலையடையவில்லை. இந்தத் தேசத்தின் குடிமக்கள் அனைவரும் விடுதலை அடையும் வரை, நாம், நமது நம்பிக்கைகளையும், பெருமைகளையும் தாண்டி, இந்தத் தேசம் முழுவதுமாக விடுதலை அடைந்து விட்டது என்று கூறமுடியாது…

ஒரு தேசமாகவும், அந்தத் தேசத்தின் மக்களாகவும் நாம் ஒரு அறம் சார்ந்த பிரச்சினையை எதிர்கொள்கிறோம். இதனைக் காவல்துறையின் அடக்குமுறையால் அடக்கமுடியாது. தெருக்களில் நடக்கும் போராட்டங்களை அதிகமாக்குவதற்கும் விட்டுவிட முடியாது. அடையாள பேச்சுகளாலும், நடவடிக்கைகளாலும் இதைக் கடக்க முடியாது. இது பிரதிநிதிகளின் காங்கிரசும், உங்கள் மாநில, நகரச் சட்டமியற்றும் சபைகளும் மட்டுமல்ல, உங்களது தினசரி வாழ்விலும் செயல்பட வேண்டிய நேரம்…

அடுத்த வாரம் நான் அமெரிக்கப் பிரதிநிதி சபையை அமெரிக்க வாழ்விலும், சட்டத்திலும் இனம், நிறம் முதலியவற்றிற்கு எந்த இடமும் இல்லை என்று சட்டமியற்ற கேட்டுக் கொள்வேன்… காங்கிரஸ் செயல்படும் வரை, தெருவில் மட்டுமே தீர்வு இருக்கிறது என்று நம்பப்படும்…

கல்வியில் பிரிவினையை முழுவதுமாக முடிவிற்குக் கொண்டு வர, வழக்குகளில் ஒன்றிய நீதித்துறை முழுவதுமாகப் பங்கு பெற ஒன்றிய அரசிற்கு உரிமை கொடுக்க வேண்டும் என்றும் காங்கிரசை சட்டமியற்ற கேட்டுக் கொள்வேன்…

உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை அமுல்படுத்துவதை, அதற்குத் தேவையான நிதி நிலைமையோ அல்லது அதனால் பாதிக்கப்படலாம் என்ற பயம் இருப்பவர்களிடம் மட்டுமே விட்டுவிட முடியாது…

நான் முன்பே கூறியது போல, எல்லாக் குழந்தைகளும் சமமான திறமையுடனோ, சமமான ஊக்கமும் கொண்டிருப்பதில்லை. ஆனால் அவர்களது திறமையை, ஊக்கத்தை, ஆற்றலை மேம்படுத்தவும் சமமான உரிமை இருக்க வேண்டும்…’

கென்னடி 13 நிமிடங்கள் ஆற்றிய உரையை அமெரிக்கா கவனமாகக் கேட்டது. லிங்கனுக்குப் பின்னர் கறுப்பினத்தவர்களின் பிரச்சினையை, சற்றுத் தாமதமாக என்றாலும், அறம் சார்ந்ததாகப் பார்த்த முதல் குடியரசுத்தலைவர் கென்னடி. அவரது நிர்வாகத்தின் ஆரம்பத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினையாகப் பார்க்கப்பட்ட கறுப்பினத்தவர்களின் உரிமைப் போராட்டத்தை, அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் கென்னடி சகோதரர்கள் சரியான முறையில் புரிந்து கொண்டார்கள். தென் மாநில வெள்ளை அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளும் அவர்களுக்குப் பிரச்சினையின் மையப்புள்ளி என்ன என்பதைத் தெளிவாகக் காட்டியது. இந்த இடத்தில் இருந்து ஜானும், பின்னர் பாபியும் தங்களைக் கிங்கின் பக்கமும், முக்கியமாக நியாயத்தின் பக்கமும் நிற்பவர்களாகத் தெளிவாகக் காட்டிக் கொண்டார்கள்.

மார்ட்டின் லூதர் கிங்கின் கனவு மெதுவாக உயிர் பெற்றுக் கொண்டிருந்தது.

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts