கறுப்பினத்தவர்களின் உரிமைப் போராட்டத்தின் சாட்சியாகத் தன்னை ஜேம்ஸ் பால்ட்வின் (James Baldwin) கருதினார். சாட்சிகள் நிகழ்வில் பங்கெடுக்கக் கூடாது என்றாலும், அது பால்ட்வினைத் தடுக்கவில்லை. பார்வையாளனாக இருப்பது என்பது எதையும் செய்யாமல் அமைதியாக இருப்பது அல்ல என்று அவர் எழுதுகிறார்.
இருபதாம் நூற்றாண்டு அமெரிக்காவின் முக்கிய எழுத்தாளரான அவர், நியூ யார்க் நகரின் ஹார்லெமில் பிறந்தவர். அவரது தந்தை, பால்ட்வின் மதபோதகராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் பால்ட்வினோ தான் எழுதுவதற்கே பிறந்ததாக உணர்ந்தார். அவரது முதல் நாவல் ‘Go Tell It on the Mountain’ அமெரிக்க இலக்கியத்தின் சிறந்த நாவல்கள் பட்டியலில் இப்போதும் இருக்கிறது. ஆனால் அவரது சிறந்த படைப்பாக இருப்பது அவருடைய பகுதிச் சுயசரிதையாகக் கருதப்படும் ‘Notes of a Native Son’ எனும் கட்டுரைத் தொகுப்புதான். ஆனால் இவை இரண்டும் அவர் வடமாநிலங்களில் வாழ்ந்த காலத்தில் எழுதியவை. பத்து வருடங்கள் பாரிஸ் மற்றும் ஐரோப்பிய நகரங்களில் வாழ்ந்துவிட்டுத் திரும்பிய அவரிடம், பத்திரிகை ஒன்று தென்மாநில நிலையைக் கண்டு எழுதும் படியாகக் கேட்டுக்கொண்டது.
இதனால் 1957ஆம் வருடம் தென் மாநிலங்களுக்குச் சென்ற அவர், அங்கு ஆறு வாரங்கள் தங்கியிருந்து பல இடங்களில் நிகழ்ந்து கொண்டிருந்த போராட்டங்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதினார். அந்தக் கட்டுரைகளில் தென் மாநிலக் கறுப்பினத்தவர்களின் மனநிலை, அவர்கள் வெறுப்பை எவ்வாறாக எதிர் கொள்கிறார்கள், எப்படியான அவமானங்களையும் தங்களுக்குள்ளேயே புதைத்துக் கொள்கிறார்கள். அதற்கு அவர்களது மௌனங்கள் எப்படி உதவுகின்றன என்பது போன்ற விஷயங்களை ஆழமாகவும், சிந்திக்கத் தூண்டும்படியும் எழுதினார். இந்தக் கட்டுரைகள் பத்திரிகைகளில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
அதன் பின்னரும் அவர் பல முறை தென் மாநிலங்களில் போராட்டங்களை நேரில் பார்த்து எழுதுவதிலும், பல்கலைக்கழகங்களில் பேசுவதிலும் தனது நேரங்களைச் செலவிட்டுக் கொண்டிருந்தார். இந்தக் காலகட்டத்தில்தான் அவர் மார்ட்டின் லூதர் கிங்கையும் பேட்டி எடுக்க நேர்ந்தது. லூதர் கிங்கிடுனான சந்திப்பு அந்தக் காலகட்டத்தைப் பற்றி அவருக்கு ஆழ்ந்த புரிதலை வழங்கியது.
இந்த அனுபவங்களை அவர் கட்டுரைகளாகவும் நாடகங்களாகவும் எழுதிக் கடக்க முயன்றார். அவரது கட்டுரைகளில் அகிம்சா முறைக்கும், வன்முறைக்கும் இருக்கும் வேறுபாடு ஆழமாக ஆராயப்பட்டது. குறிப்பாக, போராட்டக் காலங்களில் வெள்ளையர்கள் நிகழ்த்திய வன்முறை அவரை அகிம்சை முறைகளைக் கேள்விக்குள்ளாக்க வைத்தது. இந்த முரண்பாட்டை அவர் தொடர்ந்து பதிவு செய்தார். அப்படி அவரைக் கேள்வி கேட்க வைத்தவற்றில் முக்கியமானது மிஸ்ஸிஸிப்பி மாநிலம், ஜாக்சன் நகரில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு.
0
1963ஆம் வருடம், CORE இயக்கத்தின் சார்பாக ஜேம்ஸ் பால்ட்வின் தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தின் ஜாக்சன் நகரில் ஜேம்ஸ் மெரிடித்தைச் சந்திக்க நேர்ந்தது. அத்துடன் அவர் இன்னுமொரு மறக்க முடியாத நபரையும் சந்திக்க நேர்ந்தது. அந்த நபரின் பெயர் மெட்கர் எவெர்ஸ் (Medgar Evers).
மெட்கர் எவெர்ஸ் மிஸ்ஸிஸிப்பி மாநில NAACPயின் தலைவராக இருந்தவர். இரண்டாம் உலகப்போரில் நாட்டிற்காகச் சேவை செய்த அவர், ஐரோப்பாவில் இருந்து திரும்பியவுடன் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
1954ஆம் வருடம் உச்சநீதி மன்றம் கல்வி நிறுவனங்களில் நிறப்பாகுபாட்டைத் தடை செய்தவுடன், அவர் தன்னுடைய வாழ்வை மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தில் நிலவும் நிறப்பாகுபாடுகளை ஒழிப்பதற்காக அர்ப்பணித்துக் கொண்டார். அதன் காரணமாக மாநிலத்தில் NAACP கிளையை நிறுவி, அதன் தலைவராகவும் ஆனார்.எவெர்ஸ் பல வழிகளிலும் போராட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துக் கொண்டிருந்தார். அம்மாநிலத்தில் உள்ள பிலோக்சி (Biloxi) நகரக் கடற்கரைகளை அனைத்து இனத்தவருக்கும் பொதுவாக ஆக்க வேண்டும் என்பதற்காகத் தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டார்.ஆனால் அவரது முக்கிய பங்கு மாநிலப் பள்ளிகள், கல்லூரிகளில் நிறத்தையும் இனத்தையும் அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றுக் கொண்டிருந்த பிரிவினையைத் தடுக்க முன்னெடுத்த போராட்டங்களே ஆகும்.
ஜேம்ஸ் மெரிடித் மிஸ்ஸிஸிப்பிப் பல்கலைக்கழகத்தில் நடத்திய போராட்டத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் எவெர்ஸ் செய்துகொடுத்தார். கறுப்பினத்தவர்களை வாக்களிக்க விடாமல் செய்வதற்காக இருந்த பல சட்டங்களை எதிர்த்தும், அவர்களை வாக்குச்சாவடிகளில் பதிவு செய்ய வைத்தும் போராடிக் கொண்டிருந்தார். இவை எல்லாம் அவரை மாநிலத்தின் நிறவெறியர்களின் முதல் எதிரியாக ஆக்கியிருந்தது. இப்படியான நிலையிலேயே பால்ட்வின் அவரைச் சந்தித்தார்.
அப்போது எவெர்ஸ் ஒரு வெள்ளை வணிகரின் கொலையைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். அந்தக் கொலையைச் செய்ததாக ஒரு கறுப்பினத்தவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. எவெர்ஸ் நள்ளிரவில் பலரது வீடுகளுக்குச் சென்று விசாரிக்கும்போது அவருடன் பால்ட்வினும் சென்றார். அந்த இரவில்தான் தான் மிகுந்த அச்சமடைந்ததாகப் பால்ட்வின் எழுதுகிறார்.
எவெர்ஸ் எப்போது வேண்டுமென்றாலும் இறக்கப் போகிறவர்போலவே நடந்து கொண்டதாக பால்ட்வின் எழுதுகிறார். எவெர்ஸ் தன்னுடைய சிறுவயதில், தினமும் நடந்து செல்லும் பாதையில் இருக்கும் மரம் ஒன்றில், காற்றில் அசைந்து கொண்டிருக்கும் கிழிந்த துணிகளைப் பார்த்ததாக பால்ட்வினிடம் குறிப்பிட்டார். ‘என்றோ ஒருநாள் வெள்ளையர்களின் கும்பலால் மரத்தில் தூக்கிலடப்பட்டுக் கொல்லப்பட்ட யாரோ ஒரு கறுப்பினத்தவரின் துணிகள் அவை. எப்போதும் மிஸ்ஸிஸிப்பியில் தங்களின் நிலை என்ன என்பதை எடுத்துக்காட்டும் துணிகள் அவை. அந்தப் பயங்கரத்தை நான் தினமும் பார்த்து வளர்ந்தேன்’ என்று கூறியிருக்கிறார்.
ஜூன் 12, 1963 அதிகாலையில் இரவு ரோந்துகளை முடித்துவிட்டு எவெர்ஸ் வீட்டிற்குத் திரும்பினார். அவருடைய மனைவியும், குழந்தைகளும் வீட்டின் முன்பு எவெர்ஸ் காரை நிறுத்திவிட்டு இறங்குவதை ஜன்னலின் வழியே பார்த்துக் கொண்டிருந்தனர். அவரது உருவம் வீட்டை நோக்கித் திரும்பியபொழுது திடீரெனத் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. எங்கிருந்தோ வந்த ஒரு தோட்டா பாய்ந்ததில் எவெர்ஸ் அங்கேயே சரிந்து விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அவரது நிறத்தின் காரணமாக அங்கே அவருக்கு மருத்துவ உதவி மறுக்கப்பட்டது. மிகுந்த போராட்டத்திற்குப் பின்னர் அவரைச் சோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
அதற்கு முந்தைய தினம், ஜூன் 11, 1963 அன்றுதான் கென்னடி கறுப்பினத்தவர்களுக்கு மிகுந்த நம்பிக்கையைத் தந்திருந்த உரையை நிகழ்த்தியிருந்தார். அதற்குப் பதில் சொல்வதுபோல வெள்ளை நிறவெறியர்கள் மறுநாள் காலையே இப்படிப்பட்ட ஒரு கொலையை நிகழ்த்தியிருந்தார்கள்.
இதன் மூலம் வெறும் பேச்சுக்கள் மட்டும் எந்த விதத்திலும் தீர்வைத் தரப்போவதில்லை என்பதைக் கறுப்பினத்தவர்கள் மீண்டும் புரிந்துகொண்டனர்.
0
‘கறுப்பினத்தவர்களின் வெறுப்பின் ஆணிவேரான பெருங்கோபம், வெள்ளையர்கள் தங்கள் வழியில் இருந்து விலகி விட வேண்டும் என்ற எண்ணத்தினால் மட்டுமல்ல, அதையும் விடத் தங்களது குழந்தைகளின் வழியில் இருந்தும் விலக வேண்டும் என்பதால்தான்…. வெள்ளையர்களின் வெறுப்பின் ஆணிவேர் ஆழமும் பெயரும் இல்லாத பெரும் பயங்கரம். அது அவர்களது மனதில் மட்டுமே வாழும் ஒரு பயங்கரமான உருவத்தில் மையம் கொண்டுள்ளது’ என்று பால்ட்வின் எழுதுகிறார்.
‘வெள்ளையர்களால் எங்களது வாழ்வைப் புரிந்துகொள்ள இயலாது. அந்த அனுபவம் அவர்களுக்கு இல்லை. வெள்ளை முற்போக்குவாதிகளுக்கும் இந்த நேரடி அனுபவம் இல்லை என்பதாலேயே அவர்களது முற்போக்கும் வெள்ளையர்களை நோக்கியே இருக்கிறது’ என்கிறார். இதற்கு ஓர் உதாரணமும் கொடுக்கிறார்.
‘நமது முன்னாள் நீதித்துறைத் தலைவரான ராபர்ட் கென்னடி, இன்னமும் நாற்பது ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு ஒரு கறுப்பினத்தவர் குடியரசுத் தலைவராக வருவது சாத்தியமே என்று கூறியிருக்கிறார். இது வெள்ளையர்களுக்கு விடுதலையைத் தரக் கூடிய வார்த்தைகள்போலத் தோன்றலாம். இந்த வார்த்தைகள் பேசப்பட்டபொழுது அவர்கள் ஹார்லெமில் இல்லை. எனவே இந்த வார்த்தைகள் எத்தகைய சிரிப்போடும் கசப்புணர்வோடும் இகழ்ச்சியோடும் எதிர்கொள்ளப்பட்டன என்று அவர்களுக்கு எப்போதும் தெரியப் போவதில்லை.
ஹார்லெம் முடிதிருத்தும் கடையில் இருப்பவனைப் பொறுத்தவரை, பாபி கென்னடி இந்த இடத்திற்கு நேற்று வந்தவர். இப்போது அவர் அடுத்த குடியரசுத் தலைவர் ஆவதற்கான பாதையில் இருக்கிறார். நாங்கள் இங்கே நானூறு வருடங்களாக இருக்கிறோம். இப்போது அவர் எங்களிடம், நாங்கள் நல்ல முறையில் நடந்து கொண்டால், உங்களைக் குடியரசுத் தலைவராக அனுமதிப்போம் என்கிறார்’ என்று குறிப்பிட்டார்.
0
1963ஆம் வருடம் மே மாதம் ராபர்ட் கென்னடி, தன்னுடைய அலுவலகத்தில் ஜேம்ஸ் பால்ட்வின் தலைமையில் கறுப்பினக் கலைஞர்கள் பலரையும் சந்தித்தார். சமஉரிமைப் போராட்டம் குறித்த புரிதலை அதிகப்படுத்துவதற்காக இந்தச் சந்திப்பு நடைபெறுவதாகக் கூறப்பட்டது. ஆனால், இந்தக் கூட்டத்தில் பால்ட்வின், நாடகாசிரியர் லோர்ரைன், நடிகர் ஹென்றி பெலபோன்ட் போன்றோருடனான கென்னடியின் உரையாடல் முதலில் இருந்தே மிகவும் முரண்பாடுகளுடன் சென்று கொண்டிருந்தது.
அவர்களில் ஒருவரான ஸ்மித், கறுப்பினத்தவருக்கு எதிரான வன்முறை நிறுத்தப்படும் வரை தன்னால் அமெரிக்க ராணுவத்தில் சேர முடியாது என்று கூறவே, ராபர்ட் கென்னடி அதிர்ச்சி அடைந்தார். இதுவே வாக்குவாதத்தைத் தொடங்கி வைத்தது. நாடகாசிரியர் லோர்ரைன் பதிலுக்கு, ‘எங்களது கோரிக்கைகளைச் செவி கொடுத்துக் கேட்கும் நீங்களும் உங்களது சகோதரரும்தான் வெள்ளை அமெரிக்காவின் பிரதிநிதிகள். உங்களாலேயே இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை… தெருவில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை…’ என்றார். பேச்சுவார்த்தை பெரும் தோல்வியடைந்தது.
0
எவெர்சின் கொலை மார்ட்டின் லூதர் கிங்கிற்குத் தங்களது போராட்டத்தைத் தொடர வேண்டியதன் காரணத்தைத் தெளிவாகக் காட்டியது. கென்னடி கொடுத்திருப்பது ஒரு வாக்குறுதிதான். ஆனால் அதை நிறைவேற்றும் பொறுப்பு வாஷிங்டனில் இருந்த அரசியல்வாதிகளிடம்தான் இருக்கிறது. இன்னமும் தென் மாநில வெள்ளையர் வாக்குகள் அவர்களுக்கு முக்கியமாக இருக்கின்றன. எனவே கென்னடியின் வாக்குறுதி, சட்டமாக மாறும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. எனவே வாஷிங்டனில் தொடர்ச்சியாக அழுத்தத்தைக் கொடுப்பதன் மூலமே தங்களது உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்பது கிங்கிற்குப் புரிந்தது. சொல்லப்போனால் இந்த உண்மை கிங்கிற்கு மட்டுமல்ல அனைத்துக் கறுப்பினத் தலைவர்களுக்கும் தெளிவாகத் தெரிந்திருந்தது.
0
1940களிலேயே வாஷிங்டனில் இருக்கும் அரசியல்வாதிகளைச் செயல்பட வைக்க ஒரு பெரும் பேரணியை நடத்த வேண்டும் என்று பிலிப் ரண்டோல்ப் முயற்சி எடுத்திருந்தார். அப்போது அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனால், இப்போது 1963இல் ரண்டோல்ப் மீண்டும் அந்த முயற்சியைத் தொடங்கினார்.
பர்மிங்காம் நகரப் போராட்டங்களுக்குப் பின்னர், அவர் மார்ட்டின் லூதர் கிங்குடன் கை கோர்த்துக் கொண்டார். அவர்கள் இருவரும் சமஉரிமைச் சட்டம் ஒன்றை வலியுறுத்தி பேரணியை நடத்துவது என்று முடிவு செய்தனர்.
கென்னடியின் பேச்சிற்குப் பின்னர், உடனே இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. கென்னடி நிர்வாகம் அவர்களைப் பொறுமை காக்குமாறு கேட்டுக் கொண்டது. ஆனால் கிங்கும், ரண்டோல்ப்பும் அதை நிராகரித்தனர். மாறாக, இந்தப் பேரணியைக் கறுப்பினத்தவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருக்க வேண்டி, மற்ற இயக்கங்களையும் இதில் பங்கு பெற அழைத்தனர். நாம் முன்பே பார்த்திருக்கும் SCLC, SNCC (ஸ்னிக்), CORE, NAACP என்று அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் அழைப்பை ஏற்றுக் கொள்ளவும் செய்தனர்.
ஆகஸ்ட் 28, 1963ஆம் வருடம் பேரணிக்குத் தேதி குறிக்கப்பட்டது. NAACP எந்தவிதப் போராட்டமும் அன்று நடத்தப்படக்கூடாது என்று நிபந்தனை விதித்தது. மிகப் பெரிய இயக்கமான அதன் துணை வேண்டியிருந்ததால், அன்றைய தினம் பேரணியும், அனைத்து இயக்கங்களின் தலைவர்களின் பேச்சும் மட்டுமே நிகழும் என்று உறுதி கூறப்பட்டது.
நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பேரணிக்கு வருபவர்களுக்காக 2000 பேருந்துகள், 21 சிறப்பு ரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. இரண்டு லட்சம் ஆதரவாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பேரணியின் முக்கியக் கோரிக்கையே, புதிய பொது உரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவதுதான். அதில் பொது வசதிகளில் சம உரிமை, நல்ல வீடுகள், கல்விக்குச் சம உரிமை, வாக்களிக்கும் உரிமை முதலியவை முக்கியக் கோரிக்கைகளாக இருந்தன.
ஆகஸ்ட் 28ஆம் தேதி வந்தது. பேரணி வாஷிங்டன் நகரில் இருக்கும் வாஷிங்டன் நினைவுச் சின்னத்தில் இருந்து லிங்கன் நினைவிடத்திற்குச் செல்லும் ஒரு மைல் தூரம் மட்டுமே. லிங்கன் நினைவிடத்தின் படிகளில், அடிமை முறையைத் தகர்த்தெறிந்த அந்த மாமனிதரின் முன்னே அன்றைய நிகழ்வுகள் நடைபெற்றன. பேரணியில் பங்கு பெற்ற பத்து இயக்கத் தலைவர்களும் பேசினார்கள். அதுபோக, பாடல்களும் பாடப்பட்டன.
ஆனால் அந்தப் பேரணி இன்றும் பெரிதாக நினைவுகூரப்படுவதற்குக் காரணம், அன்று மார்ட்டின் லூதர் கிங் நிகழ்த்திய உரை. கிங் அன்று பேசிய 7 நிமிடங்கள் வரலாற்றில் நிலைத்து நிற்கின்றன.
‘அனைத்து மனிதர்களும் சமமாகவே பிறக்கிறார்கள் என்ற கோட்பாட்டின் உண்மை அர்த்தத்தை வாழ்ந்து காட்ட இந்தத் தேசம் உயிர்த்தெழும் என்று எனக்கொரு கனவிருக்கிறது’ என்ற அவரது மிகவும் புகழ்பெற்ற அந்தப் பேச்சு, மார்ட்டின் லூதர் கிங்கை உலக அரங்கில் ஒரு முக்கியத் தலைவராகச் சுட்டிக் காட்டியது.
எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் அன்றைய தினம் கழிந்தது.
0
பால்ட்வின் மான்ட்கமரி நகருக்கு வந்திருந்தபோது, மார்ட்டின் லூதர் கிங் அவரது தேவாலயத்தில் நிகழ்த்திய பிரசங்கத்தைக் கேட்டிருந்தார். அவர் என்ன காரணத்தால் கிங் சிறந்த பேச்சாளராக இருந்தார் என்று எழுதுகிறார்.
‘கிங் மிகச் சிறந்த பேச்சாளர். ஆனால் அது அவரது குரலிலோ அல்லது இருப்பிலோ அல்லது அவரது நடத்தையிலோ மட்டும் அல்ல- இவை எல்லாமும் ஓரளவிற்குக் காரணங்கள்தாம். அவரது மொழிப்புலமையோ அல்லது அவரது உற்சாகமோகூட இல்லை. அவரிடம் பிரமிக்க வைக்கும் கற்பனைகளின் மூலமாக, கேட்பவர்களை எழுந்து நின்று ஆரவாரம் செய்ய வைக்கும் திறனும் இல்லை.
பிறகு அவரிடம் என்ன இருக்கிறது? கறுப்பினத்தவர்களாக இருந்தாலும், வெள்ளையர்களாக இருந்தாலும், அவர்களைப் பற்றி நன்கு அறிந்திருப்பதும், அவர்களைப் புண்படுத்தினாலும், குழப்பத்தில் ஆழ்த்தினாலும், அவரது நேரடியான, நேர்மையான பேச்சிலுமே அவரது வெற்றியின் ரகசியம் இருக்கிறது.
அவர் கேட்பவர்களுக்கு எளிதான ஆறுதலை வழங்குவதில்லை. அவரது பேச்சு கேட்பவர்களைப் பதற்றத்தில் வைத்திருக்கிறது. அதாவது, அவர் அவர்களின் சுயமரியாதையை அனுமதிக்கிறார் – உண்மையில் அவர் அதை வலியுறுத்துகிறார்’ என எழுதினார் பால்ட்வின்.
பால்ட்வின் கிங்கை வெறுமனே ஆராதிக்கவில்லை. எவெர்சின் கொலைக்குப் பின்னான நாட்களில் பால்ட்வின், அகிம்சா முறைப் போராட்டத்தையே சந்தேகத்திற்கு உள்ளாக்கினார். சகிக்க முடியாத வன்முறையை எதிர்கொள்ளும்போது, அகிம்சையினால் என்ன பயன் என்றும் அவர் சிந்தித்தார். எவெர்சின் மரணத்திற்குப் பின் அவர் எழுதிய ‘Blues for Mister Charlie’ நாடகத்தின் முன்னுரையில் இப்படி எழுதுகிறார்.
‘நம்முடைய இனப்பிரச்சினையின் இன்றைய நிலையில் நம்பிக்கையிழக்க வைப்பதும், கொடுமையானதும் எது என்றால், நாம் இதுவரை செய்திருக்கும் குற்றங்கள் எல்லாம் வெளியே சொல்ல முடியாதவை என்பதால், அவற்றை ஒப்புக்கொள்வதும் நம்மைப் பைத்தியமாக ஆக்கிவிடும் என்பதால், அதைச் செய்த மனிதர்கள் அதே குற்றங்களைத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்பொருட்டு கண்களை மூடிக் கொண்டு நிர்ப்பந்தத்தின் பேரில் செய்வதைப் போலச் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த இடத்தில் இருந்து அவன் நுழையும் ஆன்மீக இருளை யாராலும் விவரிக்கவும் முடியாது.’
நாடகத்தின் இறுதிக்காட்சியில், அதில் வரும் பாத்திரமான மதபோதகர், பிரசங்க மேடையில் அகிம்சையின் மீதான தன்னுடைய நம்பிக்கையைச் சந்தேகித்து, ஒரு துப்பாக்கியை மறைத்து வைப்பதாகவும் எழுதுகிறார்.
அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் வரலாறு நிகழ்ந்த நானூறு வருடங்களும் அவர்களுக்கு மிகவும் வன்முறையான நாட்களாகவே வாழ்வு கழிந்தது. எனவே வன்முறைக்கு வன்முறையைப் பதிலாகவும், வெறுப்பிற்கு வெறுப்பைப் பதிலாகவும் கொடுக்க வேண்டும் என்பதும் பலரின் கொள்கையாக இருந்தது. அவர்களுக்கு நெருப்பைப் போன்ற தலைவர் ஒருவரும் இருந்தார்.
(தொடரும்)