நமது வரலாறு கறுப்பினத்தவர்களின் உரிமைப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்து கொண்டிருந்தாலும், நாம் பர்மிங்காம் நகரப் போராட்டங்களைப் பற்றி எழுதும்பொழுது, அதே நேரத்தில் தென் மாநிலங்கள் அனைத்திலும் சிறிதாகவோ, பெரிதாகவோ போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன என்பதும், அவற்றில் பெரும்பாலானோர் வன்முறையைச் சந்தித்துக்கொண்டிருந்தனர் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
அலபாமா, மிஸ்ஸிஸிப்பி ஆகிய மாநிலங்களில் மட்டும் நமது கவனம் இருப்பதற்குக் காரணம், இங்குதான் போராட்டத்தின் கவனமும் குவிந்திருந்தது. இந்த மாநிலங்களில் உரிமைகளைப் பெற்றுவிட முடிந்துவிட்டால், மற்ற தென்மாநிலங்களில் தங்களது போராட்டம் எளிதாக வெற்றி அடையும் என்று கறுப்பினத் தலைவர்கள் எண்ணினார்கள் என்பதே காரணம்.
மெட்கர் எவெர்ஸின் மரணத்திற்கு முந்தைய நாட்களில் மிஸ்ஸிஸிப்பி நகரின் ஜாக்சன் நகரில் தொடர்ச்சியாகச் சமஉரிமைப் போராட்ட இயக்கத்தினர் பல விதங்களில் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தனர். அவரது மரணத்திற்கு முந்தைய வருடங்களில் இங்கும் CORE, ஸ்னிக் முதலிய இயக்கங்கள், NAACPயுடன் இணைந்து உணவு விடுதிகள் மற்றும் பொது இடங்களில் பிரிவினையை அகற்ற வேண்டிப் பல விதங்களில் போராடி வந்தனர். அதன் ஒரு பகுதியாக ஜாக்சன் நகர வெள்ளையர்களின் வணிகங்களைக் கறுப்பினத்தவர்கள் முற்றிலுமாகப் புறக்கணித்துக் கொண்டிருந்தனர். இவற்றில் நூற்றுக்கணக்கானவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டும் கொண்டிருந்தனர்.
இத்தகைய நிலையிலேயே எவெர்ஸ் கொலை செய்யப்பட்டார். அவரது கொலை நாடெங்கும் அனலை ஏற்படுத்தி இருந்தது. அவரது இறுதி சடங்குகளை நடத்துவதற்கான தேவாலயமும் கல்லறைத் தோட்டமும் முடிவு செய்யப்பட்டவுடன் ஜாக்சன் நகர வெள்ளையர்களின் நிர்வாகம், இறுதிச் சடங்குகளை எந்தச் சத்தமும் இன்றி நடத்த வேண்டும் என்று பல நிபந்தனைகளை விதித்தது. இங்கும் குடியரசுத்தலைவர் கென்னடி நேரடியாக நகரத் தலைவருடன் பேசி சில விதிவிலக்குகளைப் பெற்றுக்கொடுத்தார். ஜூன் 14, 1963ஆம் வருடம் எவெர்ஸின் இறுதிச் சடங்கும், ஊர்வலமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மார்ட்டின் லூதர் கிங், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பினத்தவரான ரால் பன்ச், ஸ்னிக் இயக்கத் தலைவர்கள், CORE தலைவரான டேவ் டென்னிஸ் முதலியோருடன் 5000 கறுப்பினத்தவர்களும் ஊர்வலமாகச் சென்றார்கள். அவர்களைச் சுற்றி மாநிலம் முழுவதும் இருந்து குவிக்கப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகள், நூற்றுக்கணக்கான காவலர்கள், அங்கே கலவரம் மூண்டால் அதைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றக் கூடியிருந்த வெள்ளை நிறவேறியர்கள் என அந்த இடமே நெருப்புக்கு நடுவில் வெடிமருந்துபோல இருந்தது.
ஊர்வலம் முடியும் இடத்தில், விதிகளை மீறிப் போராட்டக்காரர்கள் பாடல்களைப் பாட ஆரம்பித்தார்கள். கூட்டத்தின் ஒரு பகுதி அப்படியே ஊர்வலத்தைத் தொடர முயன்றது. அவர்களைத் தடுக்கக் காவலர்கள் தடியடியை ஆரம்பித்தார்கள். கூட்டம் பதிலுக்குக் கற்களை வீச ஆரம்பித்தது. சட்டென்று மாறிய சூழலில், காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தத் தயாராகிக்கொண்டிருந்தனர்.
ஒன்றிய நீதித்துறை வக்கீல் ஜான் டோர் காவல் துறையினருக்கும், கறுப்பினப் போராட்டக்காரர்களுக்கும் நடுவே தன்னை நிறுத்திக்கொண்டு, நிலைமை இன்னமும் மோசமாக ஆகிவிடாமல் தடுத்துவிட்டார். அவர் காயமடைந்தாலும், நிலைமை சிறிது கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
எவெர்ஸின் இறுதி ஊர்வலத்தில் நிகழ்ந்த வன்முறை நாட்டை மீண்டும் மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தது. எவெர்ஸின் மரணத்திற்குப் பின்னர், ஜாக்சன் நகரில் நடந்துகொண்டிருந்த போராட்டம் மெதுவாக விலக்கிக்கொள்ளப்பட்டது. சில கோரிக்கைகளை அவர்கள் அடைந்திருந்தாலும், இன்னமும் வெகுதூரம் செல்ல வேண்டியிருந்தது.
ஆனால் எவெர்ஸின் போராட்டங்களும், அவரது மரணமும், அதற்குப் பின்னான நிகழ்வுகளும் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவந்திருந்தன. மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தில் கறுப்பினத்தவர்களை முழுவதுமாகப் பயத்தில் வைத்திருந்ததன் மூலமே வெள்ளையர்கள் தங்களது அதிகாரத்தைத் தக்க வைத்திருந்தனர். ஆனால் எவெர்ஸின் மரணத்திற்குப் பின்னர் நிகழ்ந்த ஊர்வலங்களில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோர் மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பல தலைமுறைகளாகத் தங்களைப் பீடித்திருந்த பயத்தை, மெதுவாக அந்த மாநிலக் கறுப்பினத்தவர்கள் இழந்து, அடுத்த போராட்டத்திற்குத் தயாராகிக்கொண்டிருந்தார்கள்.
0
சிந்தியா வெஸ்லி பதினான்கு வயதுப் பெண். எல்லாப் பதினான்கு வயது பெண்களைப்போல வேடிக்கையும், விளையாட்டுமாக இருப்பவள். அவளது வளர்ப்புத் தாயும் தந்தையும் பர்மிங்காம் நகரில் ஆசிரியர்களாக இருந்தார்கள். எல்லாக் கறுப்பின குடும்பங்களைப்போல இவர்களும் அங்கிருந்த திருச்சபையில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தார்கள். பல வருடங்களாகப் பர்மிங்காம் நகரில் தொடர்ந்து நடந்துகொண்டிருந்த சம உரிமைப் போராட்டங்களிலும் ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் வழக்கமாகச் செல்லும் தேவாலயம் 16ஆம் ஸ்ட்ரீட் பாப்டிஸ்ட் தேவாலயம். பர்மிங்காம் நகரின் முதல் கறுப்பினத்தவர்களுக்கான தேவாலயமான அதில்தான் போதகர் பிரெடெரிக் ஷட்டில்ஸ்ஒர்த் ஊழியம் செய்து வந்தார். ஷட்டில்ஸ்ஒர்த் அப்போது நடந்து கொண்டிருந்த போராட்டங்களில் தன்னை முன்னிறுத்திக் கொண்டவர். மார்ட்டின் லூதர் கிங்குடன் கை கோர்த்துக்கொண்டு, பர்மிங்காம் நகரில் நடைபெற்ற பல போராட்டங்களிலும் பங்கு பெற்றவர். 16ஆம் ஸ்ட்ரீட் பாப்டிஸ்ட் தேவாலயமும் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்துக் கொண்டிருந்தது. தேவாலயத்தின் கீழ்ப்பகுதியில் இருந்த பெரிய அரங்கம், போராட்டக் குழுவினர் கூடும் இடமாக இருந்தது. அங்கு மார்ட்டின் லூதர் கிங் போன்ற பலரும் உரையாற்றி இருந்தார்கள்.
குழந்தைகளை முதலில் இருந்தே தேவாலயத்தில் ஈடுபடுத்துவது என்பது கறுப்பினக் குடும்பங்களில் வழக்கமான ஒன்று. அவர்கள் அங்கே பாடல் பாடுவார்கள். சேர்ந்து விழாக்களுக்கு வேலை செய்வார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் பைபிள் வகுப்புகளில் கலந்துகொள்வார்கள். தேவாலய உறுப்பினர்களின் எல்லாக் குழந்தைகளுக்கும் அங்கு ஏதேனும் ஒரு வேலை இருந்துவந்தது. இது அவர்களுக்குச் சமூகப் பொறுப்பையும், அவர்களது தனி மனித ஒழுக்கத்தையும் உருவாக்குவதாகப் பெற்றோர்கள் நம்பினார்கள். அவர்களின் வாழ்வில் தேவாலயமும் திருச்சபையும், அவர்களது பிரசங்கியும் மிகவும் நெருக்கமான பங்கு ஒன்றை வகித்து வந்தார்கள். மதம் என்பது அவர்களிடையே வெறும் சடங்காக இல்லாமல் சமூகத்தை ஒன்றிணைக்கும் காரணியாகவே இருந்து வந்தது.
செப்டம்பர் 15, 1963. ஞாயிற்றுக்கிழமை. எல்லா ஞாயிறுகளையும்போலத்தான் சிந்தியாவிற்கு ஆரம்பித்தது. ஆனால் அவள் இன்னமும் சற்றுக் கூடுதலான உற்சாகத்தில் இருந்தாள். அன்று அவள் முதல்முறையாகத் தேவாலயத்தில் அனைவரையும் உள்ளே அனுமதிக்கும் வேலையை ஆரம்பிக்கிறாள். அன்று காலை கிளம்பும்பொழுதே, அவளது உள்ளாடை வெளியே தெரியுமாறு அணிந்திருக்கிறாள் என்று அவளது தாயார் கோபத்துடன் கூறவே, அவள் சற்று வேகத்துடன் சரி செய்துவிட்டுத் தேவாலயத்திற்கு ஓடி வந்துவிட்டாள். அதுவே அவளது தாய் அவளைக் கடைசியாகப் பார்த்தது.
அன்றும் காலை 9.30 மணிக்குப் பிரசங்கம் இருந்தது. 11 மணிக்குப் பைபிள் வகுப்புகள் இருந்தன. எனவே குழந்தைகள் எல்லாம் பிரசங்கத்தின் இறுதிப் பகுதியில் எழுந்து, வகுப்புகள் நடக்கவிருக்கும் தேவாலயத்தின் கீழ்ப்பகுதிக்கு வந்து கொண்டிருந்தார்கள். சிந்தியாவும் அப்படியே வந்துகொண்டிருந்தாள். அவளுடன், அவள் வயதில்லை என்றாலும் தேவாலயத்தில் அவளுக்குப் பழக்கமான சில குழந்தைகளும் வந்துகொண்டிருந்தார்கள். வகுப்பு நடந்த அறையைச் சரி செய்துகொண்டிருந்தபொழுது, காலை சுமார் 10.19 மணிக்குப் பெரும் வெடிச்சத்தம் கேட்டது. அடுத்த சில நிமிடங்களில் தேவாலயத்தில் அவர்கள் இருந்த பகுதி வேகமாகச் சரிந்து விழுந்தது.
ரிச்சர்ட் சாம்பலிஸ் ஒரு சாதாரண வெள்ளை நிறவெறியன். பர்மிங்காம் நகரக் கு க்ளக்ஸ் கிளான் உறுப்பினரும்கூட. கறுப்பினத்தவர்கள் தங்களைச் சரிசமமாக நடத்தக்கோரி நடத்தி வரும் போராட்டங்கள் அவனுக்கு உவப்பானதாக இல்லை. அதற்கு முந்தைய சில பத்தாண்டுகளில் பர்மிங்காம் நகருக்கு ‘பாம்பிங்ஹாம்’ என்றே பெயர் இருந்தது. அங்குத் தங்களது இடம் எதுவென்று தெரியாத கறுப்பினத்தவர்களின் வீடுகளில் அடிக்கடி வெடிகுண்டுகள் வெடித்துக்கொண்டிருந்ததே அதற்குக் காரணம். ரிச்சர்ட்டும் அதற்கு ஒரு முக்கியக் காரணம். அவனது இன்னொரு பெயர் ‘டயனமைட் பாப்’. அதைப் பர்மிங்காம் வெள்ளைச் சமூகத்தில் மிகவும் பெருமையுடன் அவர் கூறி வந்தான்.
அதுவரை அவன் நிகழ்த்தியிருந்த எந்த வன்முறைச் செயலுக்காகவும் அவன் விசாரிக்கப்பட்டதுகூட இல்லை. இந்த முறை, அவன் பர்மிங்காம் நகரப் போராட்டங்களுக்கு முடிவு கட்ட எண்ணி, அதன் மையப் புள்ளியாக இருக்கும் 16வது ஸ்ட்ரீட் பாப்டிஸ்ட் தேவாலயத்தைத் தகர்த்துவிட முடிவு செய்தான். அப்படியே தன்னுடைய சகாக்களுடன் செப்டம்பர் 15க்கு முந்தைய தின இரவு தேவாலயத்தின் கீழ்ப்பகுதியில் டயனமைட் குச்சிகளை வைத்துவிட்டான். காலை 10மணிக்கு மேல் அங்கு பிரசங்கம் முடித்துப் பலரும் வருவார்கள். எனவே, உயிர்ப்பலி அதிகமாக இருக்கும் என்று தெரிந்தே இந்தத் தீவிரவாத செயலில் அவன் ஈடுபட்டான். செப்டம்பர் 15ஆம் தேதி தான் செய்யப்போகும் செயலால், கறுப்பினத்தவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டுவிடுவார்கள் என்று தன்னுடைய சகாக்களிடம் கூறவும் செய்திருந்தான்.
அன்றைய குண்டு வெடிப்பில் ஞாயிறு பைபிள் வகுப்புகளுக்கு வந்திருந்த நான்கு சிறு பெண் குழந்தைகள் பலியாகினர். பிரசங்கம் முடிய சற்று நேரம் அதிகமாகியிருந்ததால் உயிர்ச் சேதம் மட்டுப்பட்டிருந்தது. ஆனால் வகுப்புகளுக்கு வந்திருந்த குழந்தைகள் பலியாகியிருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
பர்மிங்காம் நகரக் கறுப்பினத்தவர்களுக்குக் குழந்தைகள் பலியாகியிருந்ததும், தங்களுடைய தேவாலயம் குறிவைக்கப்பட்டிருந்ததும் ஆத்திரத்தைக் கொடுத்தது. குண்டு வெடித்த சில மணி நேரங்களில், அங்கே பெரும் கும்பல் கூடி இருந்தது. நகரில் கலவரம் வெடித்தது. கறுப்பினத்தவர்கள் அங்கிருந்த வெள்ளையர்களின் கடைகளைத் தீக்கிரையாக்கினார்கள். பதிலுக்குக் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. மேலும் இரண்டு பதின்ம வயதுச் சிறுவர்கள் பலியானார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போவதுபோல இருந்தது.
மறுநாளே அங்கு SCLC தலைவர்கள், கிங், அபெர்னாத்தி உட்படப் பலரும் வந்து சேர்ந்தார்கள். உடனடியாகத் தங்களது மக்களை அமைதிப்படுத்தினார்கள். கிங் உடனடியாகக் கென்னடிக்கு மிகுந்த கோபத்துடன் தந்தி ஒன்றை அனுப்பினார். ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாடு முழுவதும் இனக்கலவரம் ஏற்படுவதைத் தடுக்க முடியாது என்று கூறியிருந்தார்.
அதே வாரம் இறந்துபோன குழந்தைகளின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. கிங் உரையாற்றினார். தங்களது இலக்கை நோக்கி நிற்காமல் செல்வதே அந்தக் குழந்தைகளின் உயிர்ப்பலியை அர்த்தமுள்ளதாக்கும் என்றார்.
குண்டுவெடிப்பில் குழந்தைகள் பலியானது கிங்கின் மனசாட்சியை அசைத்துப் பார்த்தது. தன்னுடைய அகிம்சா முறையின் மீதே சந்தேகம் ஏற்பட்டதாகவும், கடவுளின் துணையுடன் தன்னுடைய கடமையைத் தொடர்ந்ததாகவும் எழுதுகிறார். ஆனால், அந்தக் குழந்தைகளுக்கு ஏற்பட்ட முடிவு, கிங்கின் மனசாட்சியை மட்டுமல்ல, நாட்டின் மனசாட்சியையும் அசைத்துப் பார்த்தது.
அதுவரை இனப்பிரச்சினையை வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகவும், சமூக அவலமாகவும் பார்த்து வந்தவர்களுக்கு, முதன்முறையாகத் தெற்கில் நிலவும் வெறுப்பின் கோர முகம் வெளிப்படையாகத் தெரிந்தது. அந்த வெறுப்பு குழந்தை, பெரியவர் என்று பாராமல் உயிர்ப்பலி வேண்டுவதும் தெரிந்தது. இது பலரையும் நேரடியாக ஒன்றிய அரசிற்கு எழுத வைத்தது. பர்மிங்காம் நகரில் ஒன்றிய அரசு நேரடியாகத் தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டது.
கென்னடி குண்டுவெடிப்பைத் துப்பறிய உள்நாட்டு உளவுத்துறையான FBI அதிகாரிகள் 300 பேரை அனுப்பி வைத்தார். 3 வருடங்கள் நடந்த விசாரணையில், FBI, ரிச்சர்ட் சாம்பலிஸ் உட்பட நால்வருக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்டியிருந்தது. ஆனால் காரணம் எதுவும் சொல்லாமல், விசாரணை அப்படியே நிறுத்தப்பட்டது.
மீண்டும் 1971ஆம் வருடம் அலபாமாவின் புதிய மாநிலச் சட்டத்துறைத் தலைவர் விசாரணையைத் தொடங்கி, 1977ஆம் வருடம் ரிச்சர்ட் சாம்பலிசிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
0
ஜூன், 1963இல் கென்னடி புதிய சம உரிமைச் சட்டம் இயற்றப்படும் என்று அறிவித்த பின்னர், அதே மாதத்தில் பிரதிநிதிகள் சபையில் (காங்கிரஸ்) புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சட்டத்தில் கறுப்பினத்தவருக்கான வாக்குரிமை, பொது இடங்களில் நிறப்பிரிவினையை ஒழிப்பது, அரசாங்க நிதியை நிறப் பிரிவினைச் செய்யாமல் செலவழிப்பது, கல்வியில் நிறப் பிரிவினையைச் சட்டமீறலாக்குவது, வேலைவாய்ப்பில் சம உரிமை எனப் பல இருந்தன. இவற்றில் சில ஏற்கெனவே இயற்றப்பட்ட சட்டங்களில் இருந்தாலும், இப்போது இன்னமும் தெளிவுபடுத்தப்பட்டன.
பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சிக்குப் போதுமான பலம் இருந்தாலும், அதன் உறுப்பினர்கள் பலரும் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். குடியரசுத் தலைவரின் நேரடி விருப்பமாக இருந்தாலும், அவர்கள் புதிய சட்டத்தை இயற்ற விரும்பவில்லை. சட்டமும் பிரதிநிதிகள் சபையில் பல விதிகளின் நடுவே நகர முடியாமல் நின்றுவிட்டது.
ஆனால் 1963ஆம் வருடத்தின் பயங்கரங்கள் இன்னமும் முடிவிற்கு வரவில்லை. நவம்பர் மாதம் டெக்சாஸ் மாநிலத்திற்குப் பயணம் செய்த குடியரசுத் தலைவர் ஜான் கென்னடி அங்கு தன்னுடைய 46வது வயதில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடைய துணைக் குடியரசுத் தலைவரான லிண்டன் ஜான்சன் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
(தொடரும்)
Photo: Martin Luther King, Jr., speaks at the funeral for Carole Denise McNair, 14, Addie Mae Collins, 14, and Cynthia Dianne Wesley, 14, three of the four girls killed in the 16th Street Baptist Church bombing.