Skip to content
Home » கட்டடம் சொல்லும் கதை #6 – பட்டணம் பெருமாள் கோயில்

கட்டடம் சொல்லும் கதை #6 – பட்டணம் பெருமாள் கோயில்

பட்டணம் பெருமாள் கோயில்

இன்று மாநகரமாக விளங்கும் மெட்ராஸில் கோயில்களுக்குப் பஞ்சமில்லை. பழங்காலத்திலிருந்து சமீப காலம் வரை இங்கு ஆயிரக்கணக்கானக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் மிகவும் ஆன்மிகப் பெருமை கொண்ட கோயில்களும் உண்டு. இறந்த பெண்ணை சம்பந்தப் பெருமான் உயிர்ப்பித்த மயிலை உள்ளது. கடவுளின் நட்பையும் பெண்ணின் அன்பையும் தேடி சுந்தரர் வந்த திருவொற்றியூரும் உள்ளது. சோழர் பல்லவர் கட்டிய கோயில்களும் இருக்கின்றன.

ஆனால் மெட்ராஸுக்கு மற்றும் ஒரு கோயில் மிகவும் முக்கியமானது.

துபாஷான திம்மப்பா, பூந்தமல்லி நாயக்கருக்கும் கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் இடையே மெட்ராஸ் குத்தகைக்கான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆங்கிலேயருக்கும் இந்தியருக்கும் ஒரு பாலமாக விளங்கியவர்கள்தான் துபாஷ்கள். (இரண்டு மொழி தெரிந்தவரே துபாஷ் என்று அழைக்கப்பட்டனர்.) ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு, கோட்டையைச் சுற்றி இந்தியர்களைக் குடியேற்றுவதற்கான பணி அவரிடமே ஒப்படைக்கப்பட்டது. வெள்ளையர் கோட்டைக்குத் திட்டமிடும்போதே, கோட்டையைக் கட்ட வேண்டிய தொழிலாளர்களுக்கும் ஏற்றுமதிக்கு ஜவுளிகளைத் தயாரிக்கும் நெசவாளர்களுக்கும் தங்குமிடத்தை ஏற்பாடு செய்யும் பொறுப்பு திம்மப்பாவினுடையது.

கோட்டையின் தெற்கே ஓர் ஆறு இருந்ததால், கோட்டையின் வடக்கில் கருப்பர் நகரையும், அதன் மையத்தில் ஒரு பெருமாள் கோயிலையும் திம்மப்பா திட்டமிட்டார். அந்தக் கோயிலில்தான் சென்ன கேசவப்பெருமாள் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

பட்டணம் பெருமாள் கோயில் அல்லது ‘கிரேட் டவுன் பகோடா’ என்றும் அழைக்கப்படும் இந்தக் கோயில் பக்தியால் உருவானதா? அல்லது வர்த்தகக் காரணங்களுக்காகக் கட்டப்பட்டதா? கோயில் இல்லாத இடங்களில் குடியிருக்க வேண்டாம் என்று ஆரம்பக் காலத்திலிருந்தே சொல்லப்பட்டு வந்ததால், மக்கள் அப்படியொரு கோயில் இல்லாத இடத்திற்குக் குடிபெயர விரும்பமாட்டார்கள் என்று திம்மப்பா நினைத்திருப்பாரோ?

இன்று மெட்ராஸ் ஆயிரக்கணக்கான கோயில்களைக் கொண்டுள்ளது. எனினும் அது தொடங்கப்பட்ட பிறகு அங்குக் கட்டப்பட்ட முதல் கோயிலின் கடவுள் என்ற பெருமை சென்ன கேசவருக்கு உண்டு. மெட்ராஸ் நகரத்தின் முதல் குடிமக்கள் இங்குதான் பிரார்த்தனை செய்தனர். சாதிகளின் அடிப்படையில் இல்லாமல் எல்லோருக்கும் அனுமதி இருந்த முதல் கோயிலும் இதுவாகத்தான் இருந்திருக்கும். சொந்தக் கிராமங்களில் கோயிலுக்குள் செல்லாத பலர், மெட்ராஸில் சுதந்திரமாக உள்ளே சென்று பட்டணம் பெருமாளைச் சந்தித்தனர்.

சென்ன கேசவப்பெருமாள் கோயில் செழித்தோங்கியது. பத்தாண்டுகளில் டவுன் பகொடா என்ற பெயரில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடியேற்றத்தை ஈர்க்கும் விதமாகக் கோயில் கட்டும் முறை பிற்காலத்தில் சிந்தாதிரிப்பேட்டை மற்றும் காலடிப்பேட்டையிலும் பின்பற்றப்பட்டது.

ஒரு நூற்றாண்டுக் காலம் ஓடியது. மெட்ராஸின் செல்வத்தைக் கண்டு, பிரெஞ்சுக்காரர்கள் எப்போதும் அதன் மீது ஒரு கண் வைத்திருந்தனர். ஒரு குறுகிய போருக்குப் பிறகு அவர்கள் அதைக் கைப்பற்றுவதிலும் வெற்றி பெற்றனர். முக்கியக் காரணம், கோட்டைக்குள் இருந்த படையினரால் எதிரிகள் அதை நெருங்குவதைப் பார்க்க முடியவில்லை. அதற்குக் காரணம் கோட்டையைச் சுற்றி அடர்த்தியாக இருந்த கருப்பர் நகரம்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மெட்ராஸ் மீண்டும் கிழக்கிந்திய நிறுவனத்தின் கைகளுக்கு வந்தபோது, இனி ஒரு போதும் அதை இழக்க மாட்டோம் என்பதில் ஆங்கிலேயர்கள் உறுதியாக இருந்தனர். அதனால் தோல்விக்கு மூல காரணமாயிருந்து, ஜார்ஜ் கோட்டையை அரவணைத்துக் கொண்டு இருந்த கருப்பர் நகரம் தள்ளிச் செல்ல வேண்டும் என்று அவர்கள் ஆர்வமாக இருந்தனர்.

அனைத்து ஐரோப்பியக் கோட்டைகளையும் சுற்றி ‘எஸ்பிளனேட்’ என்று அழைக்கப்பட்ட ஒரு திறந்தவெளியிருக்கும். அதைப் போல மெட்ராஸுக்கும் கோட்டையைச் சுற்றித் திறந்தவெளி இருந்தால்தான் எதிரியை முன்கூட்டியே பார்க்கலாம் என்ற எண்ணத்துடன், கோட்டைக்குச் சற்று தூரத்தில் ஒரு கோடு வரைந்து, கோட்டுக்குள் வீடு கட்டினால் சிறைப்படுவீர்கள் என்று ஆங்கிலேயர் பொதுமக்களை எச்சரித்தனர்.

கருப்பர் நகரை இடித்துத் தள்ள ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தது. ஆனால் ஒரு தடங்கல். கோயில் மீது விரல் வைத்தால் மக்கள் கிளர்ச்சியில் எழுவார்களோ என்ற அச்சம்.

ஒரு காலகட்டத்தில் பாண்டிச்சேரியில், கோயிலை இடிக்கும் திட்டம் இருந்தபோது, ஐரோப்பியர்களை நிராதரவாய் விட்டுவிட்டு நகரின் ஒட்டுமொத்த இந்து மக்களும் அணிவகுத்து வெளியே சென்றனர். அது போல ஒரு சம்பவம் இங்கு நடந்துவிடக்கூடாது என்று நினைத்த கம்பெனி தயங்கியது.

பின் ஒரு சக்திவாய்ந்த துபாஷ் முத்துக்கிருஷ்ண முதலியாரின் உதவியை நாடினர். முத்துக்கிருஷ்ணா அதிபுத்திசாலி. அவர், நிறுவனம் சார்பாக இந்தியர்களுக்கு வழங்கும் ஒரு திட்டத்தை வடிவமைத்தார். நிறுவனம் வேறு இடத்தில் ஒரு பெரிய நிலத்தைக் கொடுக்கத் தயாராக இருந்தது என்றும், கோயிலை மறுபடியும் கட்ட பண உதவியும் கிடைக்கப் போகிறது என்றும் சொன்னார். அதன் மூலம் அவர்கள் இடிக்கப் போகும் ஒரு கோயிலுக்குப் பதிலாக இரண்டு கோயில்களைக் கட்டலாம் என்று மக்களிடம் ஆசைகாட்டினார். உள்ளூர்வாசிகள் ஒரு முணுமுணுப்பு இல்லாமல் திட்டத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

ஒரு மைல் தொலைவில் உள்ள தேவராஜ முதலி தெருவில் 24,000 சதுர அடி நிலம் வழங்கப்பட்டது. அங்கு ஏற்கெனவே வாழ்ந்த 38 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. நிலம் மற்றும் நிதியைப் பயன்படுத்தி சென்னகேசவப் பெருமாள் மற்றும் சென்ன மல்லிகேஸ்வரர் ஆலயங்களை இரட்டைக் கோயில்களாகக் கட்ட முடிவு செய்தனர்.

ஆனால் 15,000 பகோடா கட்டடச் செலவில் சுமார் 10 சதவிகிதத்தை மட்டுமே கம்பெனி வழங்கியது. மணலி முத்துக்கிருஷ்ண முதலி தனது தனிப்பட்ட கணக்கிலிருந்து 5,202 பகோடாக்களை வழங்கியுள்ளார். மீதமுள்ளவை சேகரிக்கப்பட்டு, நன்கொடையாளர்களின் சிலைகள் பல கோயில் தூண்களை அலங்கரிக்கின்றன. 1767 ஆம் ஆண்டு சென்ன கேசவப் பெருமாள் கோயிலின் பணி தொடங்கியது. இரண்டு கோயில்களும் 1780 இல் கட்டி முடிக்கப்பட்டது. நகரத்தின் நன்றியுள்ள குடிமக்கள் இரட்டைக் கோயில்களை பல ஆண்டுகளாக ‘கம்பெனி பகோடா’ என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த முதல் கோயிலைத் தொடர்ந்து கருப்பர் நகரில் பல நூறு கோயில்கள் கட்டப்பட்டன. அதனால் நன்கொடை மோசடிகளும் செழித்து வளர்ந்தன. கம்பெனி தானாக முன் வந்து, புதிய கோயில்கள் கட்டுவதைத் தடை செய்யும் நிலையும் வந்தது.

மெட்ராஸின் முதல் கோயிலான சென்ன கேசவர் ஆலயம் இருந்த இடத்தில் இப்போது என்ன இருக்கிறது? முதலில் அது ஆங்கிலேயர்கள் தங்கள் எதிரிகளைத் தூரத்திலிருந்து பார்க்கக்கூடிய ஒரு திறந்தவெளியாக செயல்பட்டது. போர் முறைகள் மாறியபோது கோட்டைகள் மற்றும் எஸ்பிளனேட்கள் தேவையற்றதாக மாறின. மெட்ராஸ் பிரசிடென்சியின் அரசாங்கம் கோட்டைக்குள் இருந்தபோது, அதிகார மையத்திற்கு அருகில் இவ்வளவு பெரிய இடம் பயன்படுத்தப்படாதது தவறு என்று அனைவரையும் நினைக்கத் தூண்டியது.

கோயில் இடிக்கப்பட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, விக்டோரியா மகாராணி மெட்ராஸுக்கு உயர் நீதிமன்றத்தை கட்ட அனுமதித்தார். ஆங்கிலேயர்கள் அந்த நீதிமன்றத்துக்காக அழகான சிவப்பு நிறக் கட்டடத்தைக் கட்ட முடிவு செய்தனர். சென்ன கேசவர் கொலு வீற்றிருந்த அதே இடத்தில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் ஏதோ ஒரு பகுதி இருக்கிறது.

நீதிமன்றத்தின் மேற்கே ஒரு மைல் தூரத்தில் பெரிய மண்டபங்கள், மற்றும் 4 மாட வீதிகள் கொண்ட கோயிலில் சென்ன கேசவனும் செங்கமலவல்லித் தாயாரும் வசிக்கின்றனர். அடுத்த மனையில் மல்லிகேஸ்வரரும் பிரம்மராம்பிகாவும் வசிக்கிறார்கள். ஓர் அரிய பழக்கத்தில் இரண்டு கோயில்களும் குளம் மற்றும் தேரைப் பகிர்ந்து கொள்கின்றன. திசை கொண்டு அழைக்கப்பட்ட மாட வீதிகள் நான்கும் பின்னர் பெயர் மாற்றப்பட்டன.

ஒருமுறை திப்பு சுல்தான் படையெடுப்பின்போது, உற்சவர் திருநீர்மலைக்கு அனுப்பப்பட்டதாகவும், திரும்பியபோது தவறுதலாக திருநீர்மலை சிலை இங்கு வந்துவிட்டதாகவும் ஒரு செவி வழிச் செய்தி இருக்கிறது.

அவ்வளவு பழமையானது இல்லையென்றாலும், சென்ன கேசவரின் கோயில், பிரிட்டிஷ் உருவாக்கிய நகரமான மெட்ராஸின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது.

சென்ன கேசவப் பெருமாளுக்கும் சென்னை நகருக்கும் உள்ள பெயர் ஒற்றுமை நம்மைச் சிந்திக்க வைக்கிறது. இல்லையா?

0

பகிர:
வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

சென்னையின் சரித்திரத்தின் மேல் ஆர்வம் கொண்டவர். கூவம் ஆறு, சென்னையில் உலக யுத்தம், சென்னையில் 1940-1950 நடந்த விசேஷ நிகழ்வுகள், சென்னையில் சுதந்திரப் போராட்டம் போன்றவற்றை ஆராய்ந்து வருபவர். அனுஷா வெங்கடேஷ் எனும் பெயரில் சரித்திரப் புதினங்கள் எழுதியிருக்கிறார். பொன்னியின் செல்வனின் தொடர்ச்சியை காவிரி மைந்தன் என்ற பெயரில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புக்கு : abhivencat1965@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *